வியாழன், 12 செப்டம்பர், 2013

96 வகை சிவலிங்கங்கள்!
ஓம் நம சிவாய! என்று நாம் நெக்குருகி பிரார்த்திக்கும்போது நம் கண் முன்னால் நிற்பது ஈசனின் லிங்க ரூபம்தான். ஏன் இப்படி சிவன் சிலா ரூபமாக இல்லாமல் லிங்க ரூபமாக வழிபடப்படுகிறார்? என்பதற்கு, லிங்க புராணம் ஒரு கதை சொல்கிறது. ஒருமுறை பிரம்மாவுக்கும் மகாவிஷ்ணுவுக்கும் இடையே தங்களில் யார் பெரியவர்? என்ற வாக்குவாதம் ஏற்பட்டபோது மிகப் பெரிய அக்னிகோளமாக அவர்கள் நடுவே தோன்றினார் சிவபெருமான். அதுவே முதன் முதலாக இறைவன் எடுத்த லிங்க வடிவம். அன்று முதல் லிங்கோத்பவம் உதயமாயிற்று. லிங்கோத்பவம் என்றால் லிங்கம் தோன்றுதல் என்று பொருள். அன்று முதல் இன்று வரை சிவபெருமான் லிங்க உருவத்திலேயேதான் வழிபடப்பட்டு வருகிறார். அவ்வாறு வழிபாட்டுக்குரிய லிங்கங்கள் பலவகையாகப் பகுக்கப்பட்டுள்ளன. அவை:
சுயம்பு லிங்கம் - தானாகவே இறைவனின் இச்சைப்படி தோன்றிய லிங்கம்.
தெய்வீக லிங்கம் - தேவர்களால் பூஜிக்கப்பட்டு ரிஷிகள் மூலமாக பூமிக்கு வந்த லிங்கம்.
அர்ஷ லிங்கம் - ரிஷிகளும் முனிவர்களும் தங்கள் வழிபாட்டுக்கென உருவாக்கிய லிங்கம்.
மனுஷ்ய லிங்கம் - சாதாரண மனிதர்களால் உருவாக்கப்பட்ட லிங்கம். இந்த லிங்கம் மேலும்பல வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. குறைந்தது 96 வகை மனுஷ்ய லிங்கங்கள் இருக்கலாம் என்று மகுடாகமம் என்னும் ஆகம நூல் கூறுகிறது.
இந்த 96 வகை லிங்கங்கள் அவற்றின் அமைப்பு அதாவது பீடத்தின் அளவு பாணத்தின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து மேலும் பிரிக்கப்படுகிறது. கீழே இருக்கும் சதுரப் பகுதி பிரம்ம பாகம் எனவும், நடுப்பகுதி விஷ்ணு பாகம் எனவும் மேற்பகுதி ருத்ர பாகம் எனவும் வழங்கப்படுகின்றன.
க்ஷணிக லிங்கம் : தற்காலிக வழிபாட்டுக்குப் பயன்படுவது. அந்தக் காலத்தில் நீண்ட தூரம் பயணம் செல்பவர்கள் தங்களுடன் லிங்கத்தை எடுத்துச் செல்லாமல் ஆங்காங்கே கிடைக்கும் தெய்வீகப் பொருட்களைக் கொண்டு அன்றைய பூஜைக்காக உருவாக்கும் லிங்கமே க்ஷணிக லிங்கம் எனப்படுகிறது. இத்தகைய லிங்கங்கள், மலர், அன்னம், சந்தனம், விபூதி ஆகிய பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படலாம். அவை உருவாக்கப்படும் பொருட்களுக்கேற்றவாறு பெயர் பெறுகின்றன. உதாரணம், பூக்களால் உருவாக்கப்பட்ட லிங்கம் க்ஷணிக புஷ்ப லிங்கம் எனப்படுகிறது.
வர்த்தமானக லிங்கம் : வழிபாட்டுப் பெருமைக்குரியது. பிரம்ம பாகமும், விஷ்ணு பாகமும் ஒரே அளவு இருந்து ருத்ர பாகம் மட்டும் அதைப்போல இரு மடங்கு இருப்பதே வர்த்தமானக லிங்கம் எனப்படும். இத்தகைய லிங்கம் வழிபடுவோருக்கு முக்தி அளிக்கவல்லது.
ஆத்ய லிங்கம் : இதில் மூன்று பாகங்களும் சமமான அளவு இருக்கும். இவை தவிர புண்டரீகம், விசாலா, வத்சா மற்றும் சத்ரு மர்த்தனா என்று நான்கு வகையாகப் பிரிக்கப்படுகிறது. புண்டரீக வகை லிங்கத்தை வழிபட்டால் பெரும் புகழும், விசாலா வகை லிங்கம் பெரும் பொருளும், வத்சா லிங்கம் எல்லா வளங்களும், சத்ரு மர்த்தனா எல்லாவற்றிலும் வெற்றியையும் தருவன என்கிறது ஆகம சாஸ்திரம். ஏக முக லிங்கம், சதுர்முக லிங்கம், பஞ்ச முக லிங்கம் என முகங்களின் அடிப்படையிலும் லிங்கங்கள் பகுக்கப்படுகின்றன. இதில் பஞ்ச முக லிங்கம் என்பது சிவனுடைய தத் புருஷ, அகோர, சத்யோஜாத, வாமதேவ, ஈசான முகங்களைக் குறிக்கும். சதுர்முக லிங்கம் என்பது ஈசான முகம் தவிர மற்ற நான்கும் கொண்டது. பஞ்சபூத லிங்கங்கள் என்றும் ஒரு வகை இருக்கிறது. அவை ப்ரித்வி லிங்கம் (பூமி), வாயு லிங்கம், ஜலலிங்கம், ஆகாச லிங்கம், தேஜோ லிங்கம் (அக்னி). இவை எல்லாமே மனுஷ்ய லிங்க வகைகள்தான்.
களிமண், உலோகம் அல்லது கற்களாலும் லிங்கங்கள் செய்து வழிபடலாம் என்று காமிக ஆகய நூல் கூறுகிறது. களி மண்ணிலேயே இரண்டு வகை லிங்கங்கள் செய்யப்படுகின்றன. சுட்ட களிமண் லிங்கம், சுடாத பச்சைக் களிமண் லிங்கம், சுட்ட களி மண் லிங்கம் பொதுவாக தாந்திரீகர்களாலும், அபிசார (பில்லி சூனிய) தோஷம் உடையவர்களாலும் வணங்கப்படுகிறது. இவை தவிர நவரத்தினங்களால் ஆன லிங்கங்களும் உண்டு. அவை பன லிங்கங்கள் எனப்படுகின்றன. சில முக்கியமான வகை லிங்கங்களையும் அவை தரும் பலன்களையும் பார்ப்போம்.
1. கந்த லிங்கம் : சந்தனம், குங்குமம், மற்றும் கஸ்தூரி ஆகியன கலந்து உருவாக்கப்படுவது. இது க்ஷணிக லிங்க வகையைச் சார்ந்தது. நம் தேவைக்கேற்ற அளவில் இதை உருவாக்கிக் கொள்ளலாம். வழிபடுவதால் சிவசாயுஜ்ய மோட்சம் எனப்படும் பிறப்பில்லாத நிலை சித்திக்கும்.
2. புஷ்ப லிங்கம் : பலவகையான வாசனையுள்ள மலர்களாலும், பல நிறம் கொண்ட அழகிய மலர்களாலும்,உருவாக்கப்படுவது. வழிபடுவதால் நில சம்பந்தமான பிரச்னைகள் தீரும், நல்ல சொத்தும் சேரும்.
3. கோசாக்ரு லிங்கம் : பழுப்பு நிறத்தில் உள்ள பசுவின் சாணத்திலிருந்து உருவாக்கப்படும் லிங்கம் இது. இதை வணங்கினால் வளம் பெருகும். இதுவும் க்ஷணிக லிங்க வகையே ஆகும்.
4. வாலுக லிங்கம் : சுத்தமான மணல் கொண்டு உருவாக்கப்படும் இதை வணங்கினால் கல்வியும் ஞானமும் உண்டாகும்.
5. யவாகோதுமாசாலிஜ்ஜ லிங்கம் : இந்த லிங்கம் யவை, சோளம், கோதுமை போன்ற தானியங்களின் மாவினால் உருவாக்கப்படுகிறது. இது குழந்தை பாக்கியத்தை அருளும்.
6. சீதாகண்ட லிங்கம் : இனிப்புகளால் உருவாக்கப்படும் இது, நல்ல உடல் ஆரோக்கியத்தை அளிக்க வல்லது.
7. லவண லிங்கம் : உப்போடு மஞ்சள் மற்றும் திரிகடுகம் எனப்படும் சித்த மருந்து கலந்து செய்யப்படுகிறது. இது மற்றவர்களை வசீகரிக்கும் சக்தியை அருள்கிறது.
8. திலாப்சிஷ்த லிங்கம் : எள்ளை அரைத்து செய்யப்படும் இது, எல்லா ஆசைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்யும்.
9. பாம்ச லிங்கம் : சாம்பல் கொண்டு செய்யப்படும் இது, எல்லா நற்குணங்களையும் வளர்க்கும்.
10. கூட லிங்கம் அல்லது சீதா லிங்கம் : வெல்லத்தால் செய்யப்படும் இது, மன நிம்மதியை அருளும்.
11. வன்சங்குர லிங்கம் : மென்மையான மூங்கில் இலைகளால் ஆனது இந்த வகை லிங்கம். வழிபடுவோருக்கு நோய் நொடியற்ற நீண்ட ஆயுளைத் தரும்.
12. பிஷ்டா லிங்கம் : அரிசிமாவினால் செய்யப்படும் இந்த லிங்கம், நல்ல கல்வியறிவைத் தரும்.
13. ததிதுக்த லிங்கம் : பாலிலிருந்தும் தயிரிலிருந்தும் முழுவதுமாக தண்ணீரை நீக்கிய பிறகு இந்த லிங்கம் உருவாக்கப்படுகிறது. வணங்கியோருக்கு மன மகிழ்ச்சியையும் வளங்களையும் அருளும் தன்மையது.
14. தான்ய லிங்கம் : நவ தானியங்களால் உருவாக்கப்படும் இந்த லிங்கம், விவசாயிகளுக்கு நல்ல விளைச்சலைத் தரும்.
15. பழ லிங்கம் : பல்வகையான பழங்களால் உருவான இது, பழத்தோட்டம் வைத்திருப்பவர்களுக்கு நல்ல பலனைத் தரும்.
16. தாத்ரி லிங்கம் : நெல்லிக்காயைக் கொண்டு உருவாக்கப்படும் இது, மிகவும் கஷ்டப்படுபவர்களுக்கு அந்த வாழ்விலிருந்து விடுதலையைத் தரும்.
17. நவநீத லிங்கம் : வெண்ணெயால் உருவான இது, பணமும் புகழும் தரும்.
18. கரிக லிங்கம் : விசேஷ வகைப் புல்லால் உருவாக்கப்படும் இது, துர்மரணத்தைத் தடுக்கும்.
19. கற்பூர லிங்கம் : கற்பூரத்தினால் இது உருவாக்கப்படுகிறது. சிறந்த ஞானத்தைத் தந்து மாயையை அழிக்கும்.
20. ஆயஸ்காந்த லிங்கம் : காந்தத்தால் உருவான இது, சித்தர்கள் வணங்கும் லிங்கம். அஷ்டமா சித்திகளையும் எளிதாக அளிக்க வல்லது.
21. மவுகித்க லிங்கம் : முத்துகளை எரித்த சாம்பலிலிருந்து உருவாக்கப்படும் லிங்கம். மங்களமும், செல்வ வளமும் அருளும் தன்மையது.
22. ஸ்வர்ண லிங்கம் : தங்கத்தால் உருவானது. முக்தி அளித்து பிறவா நிலைக்கு உயர்த்தும்.
23. ரஜத லிங்கம் : வெள்ளி லிங்கம். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
24. பித்தாலா லிங்கம் : பித்தளையால் உருவாக்கப்படும் இது, பழுத்த இலை மரத்திலிருந்து உதிர்வது போன்ற பயமில்லாத மரணத்தைத் தரும்.
25. திராபு லிங்கம் : தகரத்தால் செய்யப்படும் இந்த லிங்கம், வணங்குபவருக்கு எதிரிகளே இல்லாமல் செய்து விடும் தன்மை உடையது.
26. ஆயச லிங்கம் : கந்தக அமிலத்தால் செய்யப்படும் இந்த லிங்கம் எதிரிகளின் தொந்தரவை அழிக்கும்.
27. சீசா லிங்கம் : வெள்ளீயத்தால் செய்யப்படுகிறது இந்த லிங்கம். இதை வணங்குபவர்களை எதிரிகளால் நெருங்கவே முடியாதவாறு செய்யும் தன்மையது.
28. அஷ்டதாது லிங்கம் : எட்டு வகையான தாதுக்களால் உருவாக்கப்படும் இது, சித்தி அளிக்கவல்லது.
29. அஷ்ட லோக லிங்கம் : எட்டு வகையான உலோகங்களால் செய்யப்படும் இதை வணங்கினால் தொழுநோய் குணமாகும்.
30. வைடூர்ய லிங்கம் : நவ ரத்தினங்களுள் ஒன்றான வைடூரியத்தால் உருவான இது, எதிரிகளின் எதிர்பாராத தாக்குதலிலிருந்து காப்பாற்றும்.
31. ஸ்படிக லிங்கம் : ஸ்படிகத்தால் ஆன இது, எல்லா ஆசைகளையும் நிறைவேற்றும்.
32. பாதரச லிங்கம் : பாதரசத்தால் ஆனது இந்த லிங்கம். அளவிட முடியாத செல்வத்தைக் கொடுக்கும்.
மேற்கூறிய 32 வகைகளில் முதல் 19 க்ஷணிக லிங்க வகையைச் சேர்ந்தவை. மற்றவை மனுஷ்ய லிங்க வகையைச் சேர்ந்தவை. இந்திரன் மணி மாய லிங்கத்தையும், சூரியன் தாமரமய லிங்கத்தையும், சந்திரன் முக்தி லிங்கம் எனப்படும் முத்துகளால் ஆன லிங்கத்தையும், குபேரன் ஹேம லிங்கம் எனப்படும் தங்கத்தால் ஆன லிங்கத்தையும் அணிந்திருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. நாமும் ஆகம சாஸ்திரங்கள் கூறும் பலவிதமான லிங்கங்களையும் வழிபட்டு எல்லா வளங்களும் பெற்று இந்த உலகில் வாழ்வாங்கு வாழ்வோம்!

ராமாயணம் 108 வரிகளில்..!
வால்மீகி முனிவர் எழுதிய ஸ்ரீமத் ராமாயணம் ஆறு காண்டமும் எளிய தமிழில் 108 வரிகளில் கொடுக்கப்பட்டுள்ளது. ராமாயணம் முழுவதையும் படிக்க இயலாதவர்கள் இந்த 108 வரிகளைப் படித்துப் பயன் பெறலாம்.
1. அசல நிர்குண ஆத்ம ராமா
2. ஆனந்தப் பாற்கடல் அறிதுயில் ராமா
3. இந்திரன் முதல்தேவர் வேண்டிட ராமா
4. இகத்தில் அசுரரை அழித்திட ராமா
5. பரத லக்ஷ்மண சத்ருக்னர் ராமா
6. கூடவே பிறந்த தசரத ராமா
7. வில் அம்பு வித்தைகள் பல பயின்ற ராமா
8. யாகமும் தபசும் ரக்ஷிக்க ராமா
9. விசுவாமித்திரன் வேண்டிட ராமா
10. சென்று மந்திரம் கற்றனை ராமா
11. சுபாஹோடு அசுரர் தாடகை ராமா
12. லக்ஷ்மணனுதவியில் வெட்டிய ராமா13. முனிவர் துதிக்கத் தங்கிய ராமா
14. மூர்க்கர் அண்டாது காத்தயோ ராமா
15. பாலப் பருவம் கடந்திட்ட ராமா
16. பக்தன் ஞானி ஜனகன் ராமா
17. மகளா முலகத் தாயவள் ராமா
18. உறையும் நகர்க்கே நடந்தாய் ராமா
19. கல்லாய்ச் சமைத்த காரிகை ராமா
20. அடியின் தூளிபட் டெழுந்தனள் ராமா
21. மிதிலை ஸ்வயம்வர சபைசேர் ராமா
22. முறித்தே வில்லை ஜயங் கொண்ட ராமா
23. ஜானகி தேவியை மணந்தாய் ராமா
24. பரசுராமன் பலம்பறி ராமா
25. அயோத்தி யடைந்த சுந்தர ராமா
அயோத்யா காண்டம்
26. பண்டைப் பகைகூனி தூண்டிட ராமா
27. கைகேயி ஏவலால் தசரதன் ராமா
28. வாக்கைக் காத்திடக் கானகம் ராமா
29. சென்றாய் லக்ஷ்மணனுடன் சீதா ராமா
30. நட்பினால் குஹனைத் தழுவிய ராமா
31. முனிவர் ஆச்ரமம் உறைந்தனை ராமா
32. தசரதன் மாளப் பரதனும் ராமா
33. சித்திரக் கூடம் அடைந்தனன் ராமா34. சுந்தரப் பாதுகை தந்தனை ராமா
ஆரண்ய காண்டம்
35. தென்திசை ஆரண்யம் புகுந்தனை ராமா
36. முனிவர் பலர்முன் தோன்றினை ராமா
37. துஷ்ட விராதனைக் கொன்றனை ராமா
38. தமிழ்முனி அகஸ்தியர் அருள் பெறு ராமா
39. பஞ்சவடித் தலம் உறைந்தனை ராமா
40. சூர்ப்பநகை பங்கம் அடைந்தனள் ராமா
41. கரதூஷணர்கள் அழிந்தனர் ராமா
42. ராவணத் துறவி சீதையை ராமா
43. மாயமாய் அகற்றிட அலைந்தனை ராமா
44. கபந்தன்கை கண்டஞ் செய்தருளிய ராமா
45. அன்புறு சபரிகை விருந்துண்ட ராமா
கிஷ்கிந்தா காண்டம்
46. அநும சுக்ரீவர்க் கஞ்சலாம் ராமா
47. அகந்தை வாலியைக் கொன்றுமே ராமா
48. தம்பிக்கே பட்டம் கட்டினாய் ராமா
49. வானர வீரன் அநுமான் ராமா
50. தூதனாய்ச் செல்ல ஏவின ராமா
51. கணையாழி அடையாளம் தந்தனை ராமா
52. அங்கத ஜாம்பவர் தேடினர் ராமா
53. ஜடாயுமுன் சம்பாதி சொன்னான் ராமா54. மஹேந்திரப் பெயருடைமலை மேல் ராமா
55. அடியவன் அநுமான் நின்றான் ராமா
சுந்தர காண்டம்
56. அநுமான் கடலைத் தாண்டினான் ராமா
57. லங்கினி கிழித்து லங்கையுள் ராமா
58. நாமத்தின் மகிமையால் நுழைந்தனன் ராமா
59. அசோகவனத்தில் வணங்கினான் தேவியை ராமா
60. தேவிக்கு மோதிரம் தந்தனன் ராமா
61. ராவண அரக்கனைத் தூஷித்தே ராமா
62. லங்கை எரித்துத் திரும்பினான் ராமா
63. கண்டேன் சீதையை என்றனன் ராமா
64. தேவியின் முடிமணி தந்தனன் ராமா
யுத்த காண்டம்
65. தேவியின் பிரிவால் புலம்பிய ராமா
66. வானர சைன்யம் கடற்கரை வந்தது ராமா
67. விபீஷணன் சரணம் அடைந்தனன் ராமா
68. ஆழிக் கணையும் கட்டினை ராமா
69. அணிலும் ஆழிக்கணைக்கு மணலை அளித்து ராமா
70. அரக்கன் கோட்டையைத் தகர்த்தே ராமா
71. தந்திரன் மேல்போர் தொடுத்தாய் ராமா
72. அநுமான் சஞ்சீவி தந்தனன் ராமா
73. கும்பகர்ணன் தலை வெட்டினை ராமா74. இந்திரஜித்தன் மடிந்தான் ராமா
75. அஹிமஹி ராவணர் அழித்தபின் ராமா
76. விடுத்துநின் கூரிய அம்பினை ராமா
77. ராவணன் கவசம் பேதித்த ராமா
78. ராவணன் தலைகளை அறுத்தும் ராமா
79. அழியா முக்தி தந்தாய் ராமா
80. விபீஷணன் முடிசூட்டினை ராமா
81. கண்டே சீதையை அணைந்தாய் ராமா
82. புட்பக விமானத்தில் திரும்பினை ராமா
83. பரதன் உயிரைக் காத்தனை ராமா
84. அயோத்தி புகுந்து குடிகளை ராமா
85. ஆனந்த வெள்ளத் தாழ்த்தியே ராமா
86. பட்டாபிஷேகம் கொண்டனை ராமா
87. பாரைப் பரம்செய்து ஆண்டனை ராமா
88. மாயப் பழியது தீர்க்கும் ராமா
89. கருப்பிணி யிருந்து காக்கும் ராமா
90. கவிவரன் வால்மீகி பாடிய ராமா
91. லவகுசர் தந்தை யாகிய ராமா
92. அசுவ மேதம் நடத்திய ராமா93. கோமள ஜானகி நாயக ராமா
94. மறைகள் போற்றிடும் மன்மத ராமா
95. பண்புடன் எம்மைக் காக்கும் ராமா
96. ஞானம் தந்தே நிற்கும்ஓ ராமா
97. துஷ்டர் அழியத் தோன்றிய ராமா
98. நல்லோர் காப்பும் அமைத்தபின் ராமா
99. பன்னக சயனனாய்ச் சென்றாய் ராமா
100. முனிவர் கதையும் முடிந்ததே ராமா
101. பணிவோர் ஜபிக்கும் நாமத்தோன் ராமா
102. கதிரவ குலத்துத் திலகமே ராமா
103. பயமழி மங்கள புங்கவ ராமா
104. நரஹரி ராகவ நாரண ராமா
105. அற்புத மெய்ச்சுக கைவல்ய ராமா
106. அநுமானிதயத் துறையும் ராமா
107. ராம ராம ஜய ராஜா ராமா
108. ராம ராம ஜய சீதாராமா.

மனிதர்களில் யார் புத்திசாலி?
மனிதர்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்களா என்று கேட்டால் பெரும்பாலும் இல்லை என்றே பதில் வருகிறது. காரணம் மனம் முழுக்க கெட்ட எண்ணங்களின் ஆதிக்கமே மேலோங்கி யிருக்கிறது. மனதை சீர்படுத்த ஒரே வழி, ஆரோக்கியமான எண்ணங்களை மட்டும் நுழைய அனுமதிப்பது தான்.  மன இயக்கத்தை நிர்வகிக்கும் பொறுப்பு என் கைக்குள் இருக்கிறது, என்ற எண்ணம் எப்போதும் அடிமனதில் ஓடிக் கொண்டிருக்க வேண்டும் என்கிறார் மனோதத்துவ மேதை சிக்மன் பிராய்டு. உலகில் நிறைய விஷயங்களைத் தெரிந்திருப்பது தான் புத்திசாலித்தனம் என்று தவறாக நினைக்கிறோம். புத்திசாலித்தனம் என்பது வாழ்வை மகிழ்ச்சியாக அமைத்துக் கொள்வது தான், என்கிறார்கள் அவர்கள். நியாயம் தானே!
திட்டுறதிலேயும் ஒரு நியாயம் வேணும்!
என்ன தான் நம்ம வீட்டு குழந்தை, மனைவி என்று இருந்தாலும், திட்டுறதிலேயும் ஒரு நியாயம் வேணும். ஏன்னு கேட்கிறீங்களா? படிச்சுப் பாருங்க! சிலர் திட்டும்போது என் முன் நிக்காதே! எக்கேடோ கெட்டு நாசமாப் போ! என்றெல்லாம் கொதித்துப் பேசுவார்கள். இப்படி    திட்டக்கூடாது என்கிறது சாஸ்திரம். அந்தக்காலத்தில் பெற்றோர் கோபத்தில் குழந்தைகளைத் திட்டும்போது கூட, அமங்கலமான வார்த்தைகள் கலக்காமல், அதிலும் தர்மத்தைக் கடை பிடித்தனர். நாசமத்துப் போ என்பது அதில் ஒரு வார்த்தை. நாசம் அற்று நல்லா இருக்கணும் என்பது இதன் பொருள். வீடெங்கும் பொருட்களை இங்கும் அங்கும் இறைக்கும் குழந்தையைக் கூட உன் கல்யாண கையை வெச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டியா? என்று தான் கோபிப்பர். இதற்கு காரணமும் இருக்கிறது.  ஒவ்வொருவரின் வீட்டு வாசலிலும், வீட்டுத்தெய்வமான கிரகலட்சுமி கண்ணுக்குத் தெரியாமல் இருப்பதாக ஐதீகம்.  நாம் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அப்படியே ஆகட்டும் என்று ஆசியளிப்பவள் அவளே. அதனால்,கோபதாபத்தில் கூட தவறான வார்த்தைகளைச் சொல்லக்கூடாது.
மூன்றாம் பிறையை பார்க்கலாமா..ஏன்?

மூன்றாம் பிறையை தாராளமாக பார்க்கலாம். இதையே சந்திரதரிசனம் என்பர். இதனால், செல்வவளம் பெருகும் என்பர். சிவன் மூன்றாம்பிறையைத் தன் தலையில் சூடிக் கொண்டிருப்பதை சுந்தரர், பித்தா பிறைசூடி என்றே சுந்தரர் தேவாரத்தில் போற்றுகிறார். நான்காம் பிறையைத்தான்(சதுர்த்தி திதியன்று) பார்க்கக்கூடாது. ஒருவேளை அன்று கண்ணில் சந்திரன் பட்டு விட்டாலும், விநாயகரை வணங்கி விட்டால் தோஷம் நீங்கிவிடும்.
மலைக்கோயில் தரிசனத்திற்கு ஆன்மிகம் மற்றும் அறிவியல் கூறும் காரணம்!
நம் முன்னோர், மலைகளில் கோயில்களை அமைத்து, வழிபாடு செய்ததற்கு ஆன்மிகக்காரணம்  மட்டுமல்ல. அறிவியல் காரணமும் இருக்கிறது. நம் ஆரோக்கியம் கருதியே அவர்கள் இவ்வாறு செய்தனர்.  அடிவாரத்தில் இருந்து நடந்து மலையேற வேண்டும் என்பதற்காக, பாத விநாயகர் கோயிலை அடிவாரத்தில் கட்டினர். மலைப்பாதையின் இருபுறமும் வனம் போல திறந்தவெளியாக இருக்கும். அங்குள்ள மூலிகைகள் மீது பட்டு வரும் காற்று மருத்துவகுணம் கொண்டது. அது உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்ச்சி தரும். மேடு பள்ளங்களில் ஏறி இறங்கும்போது, தசைகள் வலுவடையும். தேவையற்ற கொழுப்பு, சதை கரைந்து போகும். காலுக்கு சிறந்த பயிற்சி ஏற்படும் வியர்வை வெளியேறும். நல்ல பசி உண்டாகும். மலைப்பாதையிலுள்ள ஊற்று, சுனைநீரில் மருத்துவகுணம் நிறைந்திருக்கும். 
திருவண்ணாமலை, திருப்பரங்குன்றம் போன்ற தலங்களில் மலையைச் சுற்றி வந்து வழிபடுவதும் இதற்காகத் தான். கிரிவலம் வரும்போது விளையாட்டாகப் பேசிக் கொண்டு சுற்றக் கூடாது. இறை நினைவுடன் மட்டும் சுற்ற வேண்டும். இதனால் தியானத்திற்கு ஈடாக மனம் ஒருநிலைப்படும். மனம் அடங்கினால் உடலுக்கு நல்லது. இதன் அடிப்படையில் தான் மலையில் கோயில்கள் கட்டப்பட்டன. இன்றோ, சில மலைக்கோயில்களில் வாசல் வரை வாகனங்களில் செல்லும் வழக்கம் வந்து விட்டது. முடியாதவர்களும், முதியவர்களும்  மட்டுமே இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மற்றவர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்தால்,  இறையருளுடன் உடல்நலமும் பெறலாம்.

திதிகள் தெரியும் அவற்றிற்குரிய தெய்வம் தெரியுமா?
ஸ்ரீசக்ர நாயகியான லலிதா பரமேஸ்வரியை வழிபடும் முறையே ஸ்ரீவித்யை அந்த ஸ்ரீவித்யையில் அம்பிகையை ஆராதிக்கும்போது, அவள் பிந்து மத்ய வாசினி என்பதற்கிணங்க, ஸ்ரீசக்ரத்தின் நடுவில் காமேஸ்வரனோடு இணைந்து காமேஸ்வரியாக அருள்பாலிக்கிறாள். பிந்துவைச் சுற்றி ஒரு முக்கோணம் இருக்கிறது. அந்த முக்கோணத்தில் வீற்றிருப்பவர்களே திதி நித்யா தேவிகள். நித்யா என்றால் என்றும் இருப்பவள் என்று அர்த்தம். இவர்கள் மொத்தம் பதினைந்து பேர். தேவியின் அம்ருத கலைகள் பதினைந்து பாகங்களாகப் பிரிந்து, ஒவ்வொரு கலையும் ஒவ்வொரு தேவியாக உருவம் பெற்று, பதினைந்து நித்யா தேவிகளாக த்ரிகோணத்தைச் சுற்றி, பக்கத்துக்கு ஐந்து நித்யா தேவிகள் வீற்றிருந்து அருள்கின்றனர்.
யார் இந்த தேவிகள்? அன்னையின் கால வடிவே இந்த நித்யா தேவிகள். ப்ரதமை முதல் பவுர்ணமி வரையிலான 15 நாட்களுக்கும், சந்திர கலை வளர்கிறது அல்லவா? அந்த ஒவ்வொரு சந்திர கலைக்கும் திதிகளுக்கும் அதிஷ்டான தேவதைகளாக பதினைந்து நித்யா தேவிகள் விளங்குகிறார்கள். காமேச்வரி முதல் சித்ரா வரையிலான பதினைந்து நித்யா தேவிகளும் அன்னையைச் சுற்றியே எப்போதும் காணப்படுபவர்கள். இவர்களே ப்ரதமை முதல் பவுர்ணமி வரையிலான சந்திரகலையின் வடிவம். மகா நித்யாவாக, பதினாறாவது நித்யையாக அம்பிகையே வீற்றிருக்கிறாள்.
மாதர் மஹேச தயிதே லலிதே ஹயாஸ்ய
கும்போத்பவாதி முனி ஸன்னுத திவ்ய கீர்த்தே
காமேச்வரி ப்ரப்ருதிஸ் திதி தேவதாபி
ஸம்ஸேவிதாங்க்ரீயுகலே
பரமசிவனுடன் பிரியாதிருக்கும் ச்ருங்கார வடிவினன். ஹயக்ரீவர், அகத்தியர் முதலியவர்களால் துதிக்கப்பட்டவள்; காமேச்வரி முதலான பதினைந்து நித்யா தேவிகளால் சேவிக்கப்படுபவள்; இவளுக்கு நமஸ்காரம் என்கிறது சவுந்தர்யலஹரி. ஒருமுறை பண்டாசுர யுத்தத்தில் தமனன், சந்த்ரகுப்தன் முதலான அசுர சேனாதிபதிகள் இரவு நேரத்தில் அம்பிகையைச் சூழ்ந்துகொண்டு தாக்க முற்பட்டார்கள். அன்னை இதனால் சற்று கோபம் கொண்டு புருவத்தை நெறித்தாள். அன்னையின் கோபம் கண்ட நித்யா தேவிகள் பதினைந்து பேரும் ஆவேசமுற்றார்கள். அவர்களில் ஜ்வாலா மாலினி தேவியும் வஹ்நி வாஸினி தேவியும் ஜகவலிக்கும் தன்மை கொண்டவர்கள். அவர்கள் அன்னையின் உத்தரவு பெற்று, எங்கும் பேரொளியைப் பரப்பினார்கள்.  இருளில் வந்த அரக்கர்கள் நன்றாகவே தெரியலானார்கள். சக்தி சேனை திருப்பித் தாக்கத் துவங்கிவிட்டது! பதினைந்து நித்யைகளும், விஷங்கனுக்குத் துணைவந்த பதினைந்து அக்ரோணி சேனைகளையும் அவற்றின் தலைவர்களையும் கணப்போதில் கபளீகரம் செய்து எமலோகம் சேர்ப்பித்தார்கள்.  காமேசி தமனையும், பகமாலினி தீர்க்கஜிஹ்வனையும், நித்யக்லின்னா ஹும்பேகனையும், பேருண்டா ஹுடுல்லகனையும், வஹ்நிவாஸினி கல்கஸனையும், மகாவ்ஜ்ரேச்வரி கல்கிவாஹனனையும், சிவதூதி புல்கஸனையும், த்வரிதா புண்ட்ரகேதுவையும், குலஸுத்ந்தரி சண்டபாகுவையும், நித்யா குக்குரனையும், நீலபதாகா ஜம்புகாட்சனையும், விஜயா ஜம்பனையும், ஸர்வமங்களா திக்ஷ்ணச்ருங்கனையும், ஜ்வாலாமாலினி த்ரிகண்டகளையும், சித்ரா சந்த்ரகுப்தனையும் கொன்றழித்தார்கள்.
அவர்களின் செயல் வீரத்தைக் கண்டு அன்னை அவர்களைப் பாராட்டினாள். உங்கள் பதினைந்து பேரையும் வணங்குபவர்கள், வாழ்வில் அவர்கள் என்னவெல்லாம் கோருகிறார்களோ அவை அனைத்தையும் நீங்கள் கொடுக்க வேண்டும். உங்களை வணங்குபவர்களுக்கே என் அருள்கிட்டும் என்றும் அம்பிகை அருளினாள்.
ஒரு மாதம் கிருஷ்ண பட்சம் (பவுர்ணமியுடன் 15 நாட்கள்), சுக்ல பட்சம்(அமாவாசையுடன் 15 நாட்கள்) என இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பட்சமும் பதினைந்து நாட்கள் உடையதாகக் கொள்ளப்படுகிறது. மகா நித்யாவின் கலைகளில் தோன்றி பதினைந்து திதி நித்யாக்களும் ஒவ்வொரு பட்சத்துக்கும் ஒருநாள் ஆக, மாதத்தில் இரு நாட்கள் இப்பிரபஞ்சத்தை நிர்வகிக்கும் பொறுப்பை மேற்கொள்கின்றனர்.
இவர்கள் மிகுந்த வல்லமை கொண்டவர்கள். தேவியின் கட்டளைகளை நிறைவேற்றுபவர்கள். வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் தரும் கருணை கொண்டவர்கள். கால ரூபிணியாய் விளங்கும் நித்யா தேவிகளை அந்தந்த குறிப்பிட்ட திதிகளிலே வணங்கி பூஜித்தால், மிகச்சிறந்த நலன்களைப் பெறமுடியும்.
15 திதிகளும் அவற்றிற்குரிய தெய்வம்:
சுக்லபட்ச ப்ரதமை திதிக்கும் கிருஷ்ணபட்ச அமாவாசை திதிக்கும் அதிதேவதை காமேச்வரி
சுக்லபட்ச த்விதியை திதிக்கும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதிக்கும் அதிதேவதை பசுமாலினிசுக்லபட்ச த்ருதியை திதிக்கும் கிருஷ்ணபட்ச த்ரயோதசி திதிக்கும் அதிதேவதை நித்யக்லின்னா
சுக்லபட்ச சதுர்த்தி திதிக்கும் கிருஷ்ணபட்ச த்வாதசி திதிக்கும் அதிதேவதை பேருண்டா
சுக்லபட்ச பஞ்சமி திதிக்கும் கிருஷ்ணபட்ச ஏகாதசி திதிக்கும் அதிதேவதை வஹ்நி வாஸினி
சுக்லபட்ச சஷ்டி திதிக்கும் கிருஷ்ணபட்ச தசமி திதிக்கும் அதிதேவதை மகா வஜ்ரேச்வரி
சுக்லபட்ச சப்தமி திதிக்கும் கிருஷ்ணபட்ச நவமி திதிக்கும் அதிதேவதை சிவதூதி
சுக்லபட்ச அஷ்டமி திதிக்கும் கிருஷ்ணபட்ச அஷ்டமி திதிக்கும் அதிதேவதை த்வரிதா
சுக்லபட்ச நவமி திதிக்கும் கிருஷ்ணபட்ச சப்தமி திதிக்கும் அதிதேவதை குலஸுந்தரி
சுக்லபட்ச தசமி திதிக்கும் கிருஷ்ணபட்ச சஷ்டி திதிக்கும் அதிதேவதை நித்யா
சுக்லபட்ச ஏகாதசி திதிக்கும் கிருஷ்ணபட்ச பஞ்சமி திதிக்கும் அதிதேவதை நீலபதாகா
சுக்லபட்ச த்வாதசி திதிக்கும் கிருஷ்ணபட்ச சதுர்த்தி திதிக்கும் அதிதேவதை விஜயா
சுக்லபட்ச த்ரயோதசி திதிக்கும் கிருஷ்ணபட்ச த்ருதியை திதிக்கும் அதிதேவதை ஸர்வமங்களா
சுக்லபட்ச சதுர்த்தசி திதிக்கும் கிருஷ்ணபட்ச த்விதியை திதிக்கும் அதிதேவதை ஜ்வாலாமாலினி
சுக்லபட்ச பவுர்ணமி திதிக்கும் கிருஷ்ணபட்ச ப்ரதமை திதிக்கும் அதிதேவதை சித்ரா

செவ்வாயின் பிறவி ரகசியம்!
நவக்கிரகங்களில் செவ்வாயை அங்காரகன் என்பர். இவரது அதிதேவதை முருகன். முருகனைப் போல செவ்வாயும், சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்தே அவதரித்தார். ஒருசமயம், பார்வதியை விட்டுப்பிரிந்த சிவன் யோகநிஷ்டையில் ஆழ்ந்தார். அவரின் நெற்றிக் கண்ணிலிருந்து வியர்வை அரும்பி பூமியில் விழுந்தது. அது ஒரு குழந்தையாக மாறியது. பூமாதேவி அக்குழந்தையை வளர்த்து ஆளாக்கினாள். சிவந்த அந்தக் குழந்தையை செவ்வாய் என்றனர். சிவனை நோக்கி தவம் செய்த செவ்வாய் கிரகபதவி பெற்றார். மச்சபுராணத்தில் செவ்வாயின் வரலாறு வேறுவிதமாகக் கூறப்பட்டுள்ளது. தட்சன் நடத்திய யாகத்தை அழிக்க சிவபெருமான், வீரபத்திரரை அனுப்பினார். யாகத்தை அழித்த வீரபத்திரர் ஆவேசம் தணியாமல் இங்கும் அங்கும் அலைந்தார். அவரைக் கண்டு அஞ்சிய தேவர்கள் சாந்தமாகும்படி வேண்டினர். வீரபத்திரரும் தன் வடிவை மாற்றிக் கொண்டு சாந்தமானார். அவரே செவ்வாய் என்று கூறப்பட்டுள்ளது. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வீரபத்திரரை வணங்கி அருள் பெறலாம்.
ராமகிருஷ்ண உபநிஷதம்!
மாடுகள் அசை போடுவதுபோல்: பசுவானது பால் தருகிறது. இந்தப் பால் பசுவின் உடலில் ஓடும் ரத்தத்தில் கலந்து, அதன் உடல் முழுவதுமே இருக்கிறது, ஆயினும் பசுவின் காதைப் பிழிந்தால் பால் வருமா? வராது. பசுவின் மடியில்தான் பால் சுரக்கும். உலகமெல்லாம் கடவுள் மயம் என்பது உண்மை. ஆயினும் பசுவின் உடலில் பால் சுரக்கும் மடியைப் போன்றது, புண்ணிய ÷க்ஷத்திரங்களில் மகிமை. அங்கே பக்தர்கள் சென்று, அந்த ஸ்தலங்களில் சுரக்கும் பக்தியைப் பெற்று, பகவானை அடைகிறார்கள். தலைமுறை தலைமுறையாகப் பல பக்தர்கள் தவமும் தியானமும் செய்த அந்த ஸ்தலங்களில் ஆண்டவன் தன் தரிசனத்தை எளிதில் தருகிறான். எண்ணற்ற பக்தர்களுடைய தவம், ஜபம், தியானம், பூஜை, பிரார்த்தனை இவற்றின் புகை அங்கே படிந்து நிற்கிறது. அது அவ்விடம் பக்தியுடன் செல்லும் மக்களின் உணர்ச்சியைத் தன் மயமாக்கும். பக்தர்களின் கால் தூசி பட்டாலுமே போதும் என்று சொல்வது இதுதான். கோடிக்கணக்கான பக்தர்கள்-படித்தவர்கள், படிப்பில்லாத பாமரர்கள்-விழுந்து புரண்டு வழிபட்ட இடங்களுக்குத் தனியொரு சக்தி உண்டு. உலக வாழ்க்கையையும், ஆசைகளையும் நீக்கி உள்ளம் உருகி ஆடியும் பாடியும் புனிதமாக்கிய ஸ்தலங்களுக்கு நாமும் சென்று நம் உள்ளத்தை ஆண்டவன் பாதங்களில் சமர்ப்பித்தால் நம்முடைய கல் மனமும் உருகும். ஆனபடியால் அத்தகைய  இடங்களில் எங்கும் பரவி நிற்கும் ஈசனை எளிதில் காணலாம்.
பூமியை எங்கேயும் தோண்டி ஜலம் எடுக்கலாம். ஆனால் சில இடங்களில் ஏற்கனவே கிணறும் குளமும் ஏரியும் தயாராக இருக்கிறது. அவற்றை நாம் அடைந்து சுலபமாகத் தாகம் தணித்துக் கொள்ளலாம் அல்லவா? அப்படியே கோயில்களும் ÷க்ஷத்திரங்களும், தீர்த்தங்களும், பக்தி தாகத்தை அவ்விடங்களில் சிரமமில்லாமல் தீர்த்துக் கொள்ளலாம்.
கருட பஞ்சமி விரதம் இருப்பது ஏன்?
 ஆடி அமாவாசை கழித்து வரும் பஞ்சமி கருட பஞ்சமி என அழைக்கப்படும். பிரம்ம தேவரின் மகனான கஷ்யபரின் நான்கு மனைவிகளுள் கத்ரு, வினதை என்ற இரு சகோதரிகளும் இருந்தார்கள். கத்ரு என்பவள் நாகர்களுக்குத் தாயாகவும், வினதை அருணைக்கும், கருடனுக்கும் தாயாகவும் விளங்கினார்கள். ஒருமுறை, கத்ருவுக்கும், வினதைக்கும் விவாதம் வளர்ந்து போட்டியில் வந்து நின்றது. அந்தப் போட்டியில் ஜெயிப்பவருக்குத் தோற்றவர் அடிமையாக வேண்டும் என்ற ஒப்பந்தத்தை வகுத்துக் கொண்டனர். போட்டியின் முடிவில் வினதை தோல்வியுற்று அடிமையானதால், அவள் பெற்ற அருணனும், கருடனும் அடிமைகளானார்கள். கருடன் கத்ருவுக்கும், அவளது பிள்ளைகளுக்கும் வாகனம்போல் ஆனான். இதனால் கருடன் மனம் வருந்தித் தனது தாயை எப்படியாவது அடிமை வாழ்க்கையிலிருந்து மீட்க வேண்டும் என்று சபதம் கொண்டான். அப்போது கத்ரு கருடனிடம், தேவேந்திரனிடமிருந்து அமிர்தக் கலசத்தைக் கொண்டுவந்து தந்தால், அடிமைத்தனத்திலிருந்து மூவருக்கும் நிரந்தரமான விடுதலை தருவதாகச் சொன்னாள். கருடன், அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற வழி பிறந்ததே என்று மகிழ்ச்சியடைந்து, தன் தாயை வணங்கித் தேவலோகம் சென்றான். தேவலோகத்தில், காவல் புரிந்துகொண்டிருந்த தேவர்களுக்கும், கருடனுக்கும் இடையில் கடும் போர் நடந்தது. இறுதியில், கருடன் வெற்றி பெற்று, தேவேந்திரனை வணங்கி, அவனிடமிருந்து அமிர்தக் கலசத்தைப் பெற்றுவந்து கத்ருவிடம் கொடுத்தான். மூவருக்கும் ஏற்பட்டிருந்த அடிமை வாழ்வை நீக்கி, ஆனந்தமாக வாழ வழி செய்தான், கருடன். அந்தக் கருடன் பிறந்த தினம் கருட பஞ்சமி என்று அழைக்கப்படுகின்றது. பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்கும் கருடனுக்கு உகந்த விரதம் ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமியன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. கருட பஞ்சமியன்று கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் கனிந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும். கருடனைப் போல பலசாலியும் புத்திமானாகவும், வீரனாகவும் மைந்தர்கள் அமைய அன்னையர்கள் கருட பஞ்சமியன்று விரதம் இருக்கின்றனர். அன்று ஆதிசேஷன் விக்கிரகம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்கின்றனர். இது என்ன கருட பஞ்சமியன்று ஆதிசேஷனுக்கு பூஜையா என்று வியக்கின்றீர்களா? வினதையின் மைந்தன் கருடனின் மாற்றாந்தாய் கத்ருவின் மைந்தர்கள்தானே நாகங்கள் அவர்கள் செய்த சூழ்ச்சியினால் தானே வினதை அடிமையாக நேர்ந்தது அன்னையின் அடிமைத்தளையை களைய கருடன் தேவ லோகம் சென்று அமிர்தம் கொண்டு வர நேர்ந்தது அப்போதுதான் பெருமாளுடன் கருடன் போரிடும் வாய்ப்பும் வந்தது பின் பெரிய திருவடியாக எப்போதும் பெருமாளை தாங்கும் பாக்கியமும் கிட்டியது எனவே கருட பஞ்சமியன்று ஆதி சேஷன் விக்கிரகம் வைத்து பூஜை செய்யப்படுவதாக ஐதீகம். மேலும் கருடனின் உடலில் எட்டு ஆபரணமாக விளங்குபவையும் அஷ்ட நாகங்களே. அன்றைய தினம் நோன்பிருந்து கவுரி அம்மனை நாகவடிவில் ஆராதிக்க வேண்டும். அன்று வடை, பாயசம், முக்கியமாக எண்ணெய் கொழுக்கட்டையோ அல்லது பால் கொழுக்கட்டையோ செய்து நாகருக்கு பூஜைசெய்து, தேங்காய் உடைத்து வைத்து, பழம், வெற்றிலை, பாக்குடன் நைவேத்யம் செய்ய வேண்டும். இந்த பூஜை முடிந்ததும் சரடு கட்டிக் கொள்ள வேண்டும். சரடுகளில் 10 முடி போட்டு, பூஜை செய்யும் இடத்தில் அம்மனுக்கு வலது பக்கம் வைக்க வேண்டும். பூஜை செய்யும் போது அம்மனுக்கு ஒரு சரடு மட்டும் சாற்ற வேண்டும். பூஜை முடிந்த பிறகு அனைவரும் வலது கையில்சரடு கட்டிக் கொள்ளலாம். அருகில் பாம்பு புற்று இருந்தால் சிறிது, பால், பழம், கொழுக்கட்டை எடுத்துக் கொண்டு போய், புற்றில் பால்விட்டு, பழம், கொழுக்கட்டை வைத்து விட்டு வரலாம். அருகில் புற்று ஏதும் இல்லா விடில் வீட்டில் பூஜையில் வைத்திருக்கும் நாகத்தின் மேலேயே சிறிது பால் அபிஷேகம் செய்ய வேண்டும். இந்த நோன்பு கூடப் பிறந்த சகோதரர்களின் நலத்தையும் வளத்தையும் கோரும் நோன்பாகும். ஆதலால் அவர்களை வீட்டிற்கு அழைத்து சாப்பாடு போட்டு பணமோ அல்லது துணிகளோ வைத்து, தாம்பூலம் கொடுத்து, பெரியவர்களாக இருந்தால் நமஸ்கரித்து ஆசி பெற வேண்டும். சிறியவர்களாக இருந்தால் ஆசீர்வாதம் செய்ய வேண்டும்.
இறைவனிடம் எதைக் கேட்க வேண்டும்?
புராணங்கள் மற்றும் இதிகாசங்களை படிப்பதால் பல தர்மங்களையும், புத்தி சக்திகளையும் அறிந்து கொள்ள முடிகிறது. மனிதர்கள் நல்வழி நடந்து, நற்கதி பெற வேண்டியே இவை புராணங்களில் சொல்லப்பட்டுள்ளன. பாலதி என்ற பிரசித்தி பெற்ற முனிவர் ஒருவர் இருந்தார். அவருடைய பிள்ளைகள் எல்லாரும் இறந்து விட்டனர். புத்திர சோகத்தால் மிகவும் வருந்திய அவர், கடுமையான தவம் செய்தார். இப்படி யாராவது கடுமையான தவம் செய்தால் தேவர்களோ, தேவேந்திரனோ நேரில் வந்து அவர்களுக்கு வேண்டிய வரம் அளிக்க வேண்டும் என்பது நியதி. அதன்படி தேவர்கள் வந்தனர்.
முனிவரே... உம் தவத்துக்கு மகிழ்ந்தோம். வேண்டிய வரத்தைக் கேளும்... என்றனர். புத்திர சோகத்தால் வருந்திக் கொண்டிருந்த முனிவர், தேவர்களைப் பார்த்து, எனக்கு சாவே இல்லாத ஒரு பிள்ளை வேண்டும்... என்றார். சிரித்து, சுவாமி... பூவுலகில் மனிதராகப் பிறப்போர் என்றாவது ஒருநாள் எந்த விதத்திலாவது மரணமடைய வேண்டியவர்களே... இதை மாற்ற முடியாது. ஆகையால், நீர் வேறு ஏதாவது ஒரு வரம் கேளும்... என்றனர் தேவர்கள். யோசித்த முனிவர், பக்கத்திலிருந்த பெரிய மலையை சுட்டிக் காட்டி, இந்த மலை எவ்வளவு காலம் இருக்குமோ அவ்வளவு காலம் என் மகன் ஜீவித்திருக்க வேண்டும்... என்று கேட்டார். அவர்களும், அப்படியே ஆகட்டும் என்று சொல்லி, வரம் அளித்து, சென்று விட்டனர்; முனிவருக்கு சந்தோஷம்.
சில நாட்களுக்கு பிறகு, அவருக்கு மேதாவி என்ற புத்திரன் பிறந்தான். வரபலம் மிகுந்த மேதாவி, நல்ல காரியத்தில் ஈடுபடாமல் ஊர் வம்புகளை வாங்கி வருவான். ரிஷிகளையும், தபஸ்விகளையும் துன்புறுத்துவான். யாருக்கும் அடங்க மாட்டான். இப்படியே ரொம்ப காலம் செய்து வந்தான். ஒரு சமயம், தனுஷாட்ச என்ற முனிவரிடம் போனான். அவர் மகாதபஸ்வி. நிம்மதியாக அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு எப்படியெல்லாம் தொந்தரவு கொடுக்க முடியுமோ, அப்படியெல்லாம் செய்து சந்தோஷப்பட்டான். அவனை பார்த்து, நீ சாம்பலாகக் கடவது... என்று சபித்தார் முனிவர். ஆனால், அவன் சாகவில்லை. குத்துக்கல் மாதிரி அவர் முன் நின்று, ஹஹ்... ஹஹ்... ஹஹ்ஹா... என்று சிரித்து, உன் சாபம் என்னை ஒன்றும் செய்யாது... என்று பரிகசித்தான். முனிவரும் இவன் சாம்பலாகாமல் இருப்பதற்கு காரணம், இந்த மலை இருக்கும் வரையில் இவனுக்கு மரணம் இல்லை என்று வரத்தை பெற்றிருப்பதால் தான் என்பதை தன் ஞான திருஷ்டியால் தெரிந்து கொண்டார்.
உடனே, அவர் ஒரு முரட்டு எருமைக்கடா உருவெடுத்து, தன் கொம்புகளால் அந்த மலைகளை முட்டி மோதி, அசைத்து, அதை தூள் தூளாக்கினார். மலை நாசமடைந்தது; துஷ்டனான மேதாவியும் நாசமடைந்தான். ரொம்பவும் வருத்தமடைந்த பாலதி முனிவர், ஒரே புத்திரன் இறந்ததற்காக அழுதார். இதைக் கண்ட மற்ற முனிவர்களும், வேதியர்களும், தெய்வம் ஏற்படுத்திய நியதியை மனிதன் எவ்விதத்திலும் மாற்ற முடியாது என்பதை நீங்கள் அறியாதவரா? தெய்வ பலத்தினால் தான் மலையை தூள் செய்தார் தனுஷாட்ச முனிவர். அதே தெய்வ பலத்தை உம் புத்திரன், நல்ல காரியத்துக்கு பயன்படுத்தி இருந்தால் அழிவு வந்திருக்காது! கெட்ட செய்கை அவனை கெடுத்து விட்டது. இனியும் நீங்கள் இது குறித்து வருத்தப்படாமல் தவத்தில் ஈடுபடுங்கள்... என்று ஆறுதல் கூறினர். முனிவரும் வைராக்கியம் பெற்று, தவத்தில் ஈடுபட் டார். தெய்வமே வந்து வரம் கொடுக்கிறேன் என்ற போது, நல்ல காரியத்தை செய்ய வரம் கேட்க வேண்டும்; பேராசையுடன் வரம் கேட்டால், விபரீதமாகவே முடியும்!