உபநிடதங்கள் என்பதன் பொருள் தெரியுமா?
உபநிஷத் என்றால் அருகில் அமர் என்பது பொருள். குருவின் அருகில் அமர்ந்து
சீடனால் கேட்கப்பட்ட அரிய பெரிய தத்துவங்கள் அடங்கியதே உபநிடதம்
எனப்பட்டது. உபநிடதங்கள் மொத்தம் 108 என்று சொல்லப்படுகிறது. அவற்றுள் மிக
முக்கியமானவை பத்து. அவை ஈசாவாஸ்யம், கேனம், கடம், பிரச்சினம், முண்டகம்,
மாண்டுக்யம், தைத்தரீயம், ஐதரேயம், சாந்தோக்யம், பிரகதாரணியகம் எனப்படும்.
உபநிடதங்கள் இறைவனின் உண்மை வடிவைக் காண, அதாவது பிரம்மத்துடன் ஒன்றி
ஐக்கியம் அடைதலாகிய வீடு பேற்றைப் பெறவேண்டும் என்னும் கருத்தைக் கொண்டவை.
அஹம் பிரம்மாஸ்மி (நான் பிரம்மமாயிருக்கிறேன்) தத்வம் அசி (நீயும் அதுவாகவே
இருக்கிறாய்) என்ற இந்தப் பேருண்மையை உபநிடதங்கள் சொல்லி நிற்கின்றன.
வேதங்களின் சாரமே உபநிடதங்கள் என்பர்.
ஈசாவஸ்யம் : இதை ஈசோபநிடதம் என்பர். இது இரண்டு வழிகளைக் கற்பிக்கிறது.
ஒன்று ஞானத்தின் வழி; மற்றது ஞானத்தின் வழி நின்று பற்றுகளை விட்டொழிக்கும்
வழி. முதல் சுலோகம் ஈசா வாஸ்யம் எனத் தொடங்குவதால் காரணப் பெயராயிற்று.
கேன வாஸ்யம் : உளநூற் பாகுபாடுகளைத் தெளிவாகச் சொல்லி அனைவருக்கும்
பரம்பொருளின் நிலைமை அறியச் செய்கிறது. உருவத்தில் சிறியது, கருத்தில்
பெரியது என்ற தத்துவத்தின் படியும் அவனன்றி ஓரணுவும் அசையாது என்ற
உண்மையையும் விளக்குகிறது. சங்கராச்சாரியார் இதற்கு பதபாஷ்யமும்
வாக்யபாஷ்யமும் செய்திருக்கிறார். முதல் ஸ்லோகம் கேன் என்று தொடங்குவதால்
காரணப் பெயராயிற்று.
கடோப நிடதம் : வேதாந்தத்தின் மிக உயர்ந்த கோட்பாடுகளை எடுத்து
உரைக்கின்றது. மறைத் தத்துவத்தை விளக்கும் பூரணமான நூல். வாழ்க்கையின் இன்ப
துன்பங்களையும் வேதத்தின் விழுமிய கருத்துகளையும் நன்குணர்ந்த ஆத்ம
ஞானியான யமனை ஆசிரியனாகவும் நசிகேதனை மாணவனாகவும் கொண்டு வேதாந்தத்தின்
அதீத பயனை உலகுக்கு எடுத்துக் காட்டுகிறது.
பிரசின உபநிடதம் : ஆறு இளஞ்சீடர்கள் பிப்பிலாதன் என்னும் நல்லாசிரியனை
குருவாகக் கொண்டு தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை கேட்டு ஐயங்களைத்
தீர்த்துக் கொண்டனர். அதுவே பிரசின உபநிடதம்.
முண்டக உபநிடதம் : துறவிகளின் ஞான வாழ்க்கையைப் பற்றியும் கடைப்பிடிக்க வேண்டிய முறைகளையும் போதிப்பது.
மாண்டுக்ய உபநிடதம் : உருவில் சிறியது. பன்னிரண்டு மந்திரங்கள் மட்டுமே கொண்டது.
தைத்திரிய உபநிடதம் : சிறந்த வாழ்க்கை முறைக்கு வழிகாட்டும் நூல். குரு சீடனுக்கு உபதேசிக்கும் அறிவுரைகள் கொண்ட முறையில் அமைந்தது.
ஐதரேய உபநிடதம் : நாம் உண்ணும் உணவே பிரம்மம் என்பதையும், உயிரைக்
காப்பாற்றக்கூடிய உணவுப் பொருள் பிரத்தியட்சமான தெய்வம் என்பதையும்
விரிவாகச் சொல்வது. இதை வருண பகவான் தனது மகன் பிருகுவுக்கு உபதேசித்ததாம்.
சாந்தோக்கிய உபநிடதம் : மூச்சுக் கலை எனப்படும் பிராண வித்தையைப்
பற்றிக் கூறுவது. ஜாபாலசத்திய சாமர் என்பவர் வியாக்கிர பாதருடைய குமாரன்
கோசுருத்திக்கு உபதேசம் செய்தது.
பிரக தாரணியகம் உபநிடதம் : ஆறு அத்தியாயங்களைக் கொண்டது. முதல் இரண்டு
அத்தியாயங்கள் மதுகாண்டம் எனவும் மத்திய இரண்டு அத்தியாயங்கள் யாக்ஞவல்கிய
காண்டம் எனவும் கூறப்படும். உபதேசம், விளக்கம், உபாசனை இம்மூன்றும் ஒவ்வொரு
காண்டத்திலும் இடம் பெறுகிறது.