சனி, 9 நவம்பர், 2024

ஏழுகடல் அழைத்த படலம்!

ஏழுகடல் அழைத்த படலம்!

கவுதமர் என்னும் மகரிஷி, அரசி காஞ்சனமாலையைச் சந்தித்தார். ஸ்ரீராமபிரானால் கல்லாய் இருந்து சுயரூபம் பெற்றாளே அகலிகை, அவளது கணவரே இந்த கவுதமர். தேவேந்திரன் தப்பு செய்தாலும் அவனையே சபிக்கும் ஆற்றலுள்ளவர், மிகப் பெரிய தபஸ்வி. மீனாட்சி திருமணத்திற்கு வந்திருந்த அவர், சிவபெருமானிடம் விடை பெற்ற பிறகு, மரியாதை நிமித்தமாக காஞ்சனமாலை அம்மையாரையும் சந்தித்து விடை பெற்றுக் கொள்ள வந்தார். அவரை அரண்மனைக்குள் அழைத்து வந்த காஞ்சனமாலை தகுந்த மரியாதை செய்தாள். உயர்ந்த ஆசனத்தில் அவரை அமர செய்து, சிறிய ஆசனம் ஒன்றில் தான் அமர்ந்து கொண்டாள். பெரியவர்கள் ஒரு இடத்தில் அமர்ந்திருக்கும் போது, சிறியவர்கள் தரையில் அமர்ந்து கொள்ள வேண்டும். பெரியவர்களுக்கு தரப்படும் மரியாதை மிகப்பெரிய புண்ணியத்தையும், அவர்களின் ஆசியையும் நமக்குத் தரும். அவரிடம் காஞ்சனமாலை, மாமுனிவரே! என் மகள் மீனாட்சியின் திருமணம் நல்லபடியாக முடிந்து விட்டது. என் மருமகனாக அந்த ஈசனே வந்துவிட்டார். இனி மதுரையின் காலம் பொற்காலமாகவே திகழும். எனவே, நான் பிறவாப் பெருநிலை அடைய விரும்புகிறேன். அதற்கு என்ன வழி என்று தாங்கள் தான் உபதேசிக்க வேண்டும், என்றாள். குழந்தைகளுக்கு திருமணம் முடிந்தபிறகும், அவர்கள் விஷயத்தில் தலையிடாமல், அதன் பிறகு முக்திக்குரிய நிலையாகிய தெய்வ வழிபாட்டை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்பது இதன்மூலம் தெளிவாகிறது. பிள்ளைகளுக்கு திருமணமான பிறகும், வீட்டுக்கு வந்த மருமகள், மருமகனின் செயல்பாடுகளில் தலையிட்டால் நிம்மதியின்மையே ஏற்படும் என்பது இதன்மூலம் கிடைக்கும் அறிவுரையாக இருக்கிறது.காஞ்சனமாலையின் மன ஓட்டத்தை கவுதமரும் புரிந்து கொண்டார்.

அரசியாரே! உமையவளை மகளாகவும், ஈசனையே மருமகனாகவும் அடைந்த பெறற்கரிய புண்ணியத்தைப் பெற்ற மகராசியான உங்களுக்கு உபதேசிக்கும் தகுதி எனக்கில்லை. இருப்பினும், ஞானத்தை யாசிக்கும் போது அதை அருள்வதே ஒருவரின் கடமை. இதோ! பிறப்பற்ற நிலையடைய மூன்று வழிகளைச் சொல்கிறேன். தர்மம் செய்தல், உண்மையை மட்டுமே பேசுதல், இறைவனைத் தியானம் செய்தல், நம் மனத்தைக் கட்டுப்படுத்தி ஆசைகளைக் குறைத்தல் ஆகியவை ஒரு ரகம். சிவாயநம என்னும் மந்திரத்தை தினமும் ஓதுவது, வேதநூல்களை  படிப்பது, யாகங்கள் செய்வது ஆகியவை இரண்டாவது ரகம். சிவபெருமானை வில்வத்தால் அர்ச்சனை செய்வது, கோயிலை வலம் வருவது, தல யாத்திரை செல்வது, தீர்த்தங்களில் நீராடுவது ஆகியவை மூன்றாவது ரகம். இதில், கடல் உள்ள இடத்தில் நீராடுவது மேலும் நலம் பயக்கும், என்றார். அவர் சென்றபிறகு, காஞ்சனமாலை தன் மகளிடம் வந்தாள். மீனாட்சி! எனக்குள் ஒரு ஆசை, பிறப்பற்ற நிலையடைய விரும்புகிறேன். கவுதம மகரிஷியின் அறிவுரைப்படி பார்த்தால் தீர்த்தமாடுவதே முக்திநிலைக்கு முதல் பாதையாக இருக்குமென கருதுகிறேன். அதிலும் ஆறும் கடலும் இருக்குமிடத்தில் நீராடுவது மிகப்புண்ணியமானதென்று அவர் கூறினார். நம் மதுரை நகரில் உன் கணவரின் அருளால் வைகை என்னும் மலர்க்கொடியாள் மலர்ந்து பரந்து ஓடுகிறாள். ஆனால், இங்கே கடல் இல்லையே! கடல் இங்கிருந்தால் நான் அதில் நீராடி பிறப்பற்ற நிலைக்கு பாதை காண்பேன், என்றாள். தாயின் விருப்பத்தை ஆண் பிள்ளைகள் இருந்தால் நிறைவேற்றி வைப்பார்கள். மீனாட்சியோ ஆணுக்கு ஆணாகவும், பெண்ணுக்கு பெண்ணாகவும் இருக்கிறாள்.

திருமணத்துக்குப் பிறகும் கூட கணவர் வீடான இமயத்துக்குச் செல்லாமல், கணவரையும் இங்கேயே தங்க வைத்து விட்டாள். மணாளனோ மகாதேவன். அவர் உத்தரவிட்டால் கடல்களே விழுந்தடித்துக் கொண்டு இங்கே வராதா என்ன! தன் அன்னையின் விருப்பத்தை அவள் தன் நாதனிடம் சொன்னாள். மாமியின் விருப்பத்தை நிறைவேற்ற அந்த சாமியும் முடிவு செய்து விட்டார். கடல்களே! மதுரைக்கு வாருங்கள், என்றார். ஒன்றல்ல, இரண்டல்ல...ஏழு கடல்களும் மதுரைக்கு வந்து சேர்ந்தன. எங்கும் பேரிரைச்சல்... அலைகள் நர்த்தனமாடின. அவற்றில் கிடந்த சங்குகளும், முத்துச் சிப்பிகளும் ஒன்றோடொன்று உரசி எழுப்பிய ஓசை எல்லையே இல்லாமல் விரிந்து சென்றது. மக்களின் கண்களுக்கு கடல்கள் தெரியவில்லையே ஒழிய கடல் ஓசை தெளிவாகக் கேட்டது. அவர்கள் குலை நடுங்கிப் போனார்கள். அவர்கள் ஓடோடி வந்து மன்னர் சுந்தரேசரை வணங்கி, எம்பெருமானே! எங்கள் மன்னனே! இதென்ன ஓசை... கடல் அலைகளின் பேரிரைச்சல் கேட்கிறதே! என்ன இது! ஊழிக்காலமாகிய உலகம் அழியும் காலம் வந்துவிட்டதா! என பலவாறாகக் கேட்டனர். சுந்தரேசர் அந்தக் கடல்களை அடக்கினார். அமைதியாயிருங்கள்! நீங்கள் மீனாட்சி ஆலயத்தின் வெளிப்புறமுள்ள கிணற்றில் சென்று அடக்கமாய் இருங்கள், என்று கர்ஜித்தார். அவ்வளவுதான்! சத்தமே வரவில்லை. மக்கள் மகிழ்ந்தனர். சுந்தரேசர் குறிப்பிட்ட இடத்தில் சென்று பார்த்தனர். கிணற்றில் நீர் நிரம்பிக் கிடந்தது. கருணை வடிவான ஈசனை மனதார துதித்த காஞ்சன மாலை பரிவாரங்களுடன் கிணற்றுக்குச் சென்றாள். மதுரை மீனாட்சி கோயில் கிழக்கு கோபுரம் எதிரேயுள்ள புதுமண்டபத்தைக் கடந்தால் வரும் தெருவுக்கு எழுகடல் தெரு என்று இப்போதும் பெயர் இருக்கிறது.

கருத்துகள் இல்லை: