நவராத்திரி பாடல் (மூன்று தேவியருக்கும் தனித்தனியாக)
மங்கள ரூபிணி மதியொளி சூலினி மன்மத பாணியளே
சங்கடம் நீங்கிட சடுதியில் வந்திடும் சங்கரி சவுந்தரியே
கங்கண பாணியன் கனிமுகம் கண்டநல் கற்பகக் காமினியே
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்கநிவாரணி காமாட்சி
கான் உறுமலர் எனக் கதிர் ஒளி காட்டிக் காத்திட வந்திடுவாள்
தான்உறு தவஒளி தார்ஒளிமதி ஒளி தாங்கியே வீசிடுவாள்
மான்உறு விழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
சங்கரி சவுந்தரி சதுர்முகன் போற்றிட சபையினில் வந்தவளே
பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே
எம்குலம் தழைத்திட எழில் வடிவுடனே எழுந்த நல் துர்க்கையளே
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
தணதண தந்தண நவில்ஒளி முழங்கிட தண்மதி நீ வருவாய்
கணகண கங்கண கதிர்ஒளி வீசிட கண்மணி நீ வருவாய்
பணபண பம்பண பறைஒலி கூவிட பண்மணி நீ வருவாய்
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சநல் பாணியளே
கொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேழனைக் கொடுத்த நல் குமரியளே
சங்கடம் தீர்த்திட சமர் அது செய்த நல் சக்தி எனும் மாயே
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
எண்ணியபடி நீ அருளிட வருவாய் எம் குலதேவியளே
பண்ணிய செயலின் பலனது நலமாய்ப் பல்கிட அருளிடுவாய்
கண்ணொளி அதனால் கருணையே காட்டி கவலைகள் தீர்ப்பவளே
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
இடர் தருதொல்லை இனிமேல் இல்லை என்று நீ சொல்லிடுவாய்
சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச் சுகமது தந்திடுவாய்
படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
ஜெய ஜெய பாலா சாமுண்டேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீதேவி
ஜெய ஜெய துர்க்கா ஸ்ரீபரமேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீதேவி
ஜெய ஜெய ஜெயந்தி மங்கள காளி ஜெய ஜெய ஸ்ரீதேவி
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி.
நவராத்திரி பாடல்
அம்பாள்
காஞ்சி காமாட்சி மதுரை மீனாட்சி
காசி விசாலாட்சி கருணாம்பிகையே!
தருணம் இதுவே தயை புரிவாயம்மா!
பொன் பொருள் எல்லாம்
வழங்கி எம்மை வாழ்த்திடுவாயம்மா!
ஏன் என்று கேட்டு என் பசி தீர்ப்பாய்
என் அன்னை நீயே அம்மா!
மங்களம் வழங்கிடும் மகாசக்தியே!
மங்கலத் தாயே நீ வருவாயே!
என்னுயிர் தேவியே! எங்கும் நிறைந்தவளே!
எங்கள் குலவிளக்கே! நீ வருவாயே!
பயிர்களில் உள்ள பசுமையில்
கண்டேன் பரமேஸ்வரி உனையே!
சரண் உனை அடைந்தேன்
சங்கரி தாயே, சக்தி தேவி நீயே!
அரண் எனக் காப்பாய்
அருகினில் வருவாய் அகிலாண்டேஸ்வரியே!
லட்சுமி
செல்வத் திருமகளே! மோகனவல்லியே!
எல்லாரும் கொண்டாடும் வேதவல்லியே!
எண் கரங்களில் சங்கு சக்கரம்
வில்லும் அம்பும் தாமரை
மின்னும் கரங்களில் நிறைகுடம்
தளிர்த் தாம்பூலம் அணி சியாமளையே!
வரத முத்திரை காட்டியே
பொருள் வழங்கும் அன்னையே!
சிரத்தினில் மணி மகுடம்
தாங்கிடும் சிந்தாமணியே!
பல வரம் வழங்கிடும் ரமாமணியே!
வரதராஜ சிகாமணியே!
தாயே! தனலட்சுமியே!
சகல வளமும் தந்திடுவாய்
சரஸ்வதி
கலைவாணி நின் கருணை தேன்மழையே
விளையாடும் என் நாவில் செந்தமிழே
அலங்கார தேவதையே வனிதாமணி
இசைக்கலை யாவும் தந்தருள்வாய் கலைமாமணி!
மரகத வளைக்கரங்கள் மாணிக்க வீணை தாங்கும்
அருள் ஞானக்கரம் ஒன்றில் ஜெபமாலை விளங்கும்
ஸ்ருதியோடு லயபாவ ஸ்வரராக ஞானம்
சரஸ்வதி மாதா உன் வீணையில் எழும் நாதம்!
வீணையில் எழும் நாதம் தேவி உன் சுப்ரபாதம்
வேணுவில் வரும் நாதம் வாணி உன் சக்ரபாதம்
வானகம் வையகம் உன் புகழ் பாடும்.
JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
திங்கள், 7 அக்டோபர், 2024
நவராத்திரி பாடல்...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக