ஞாயிறு, 22 செப்டம்பர், 2024

ஆளவந்தார்....


 ஆளவந்தார்!

சோழ மன்னன் ஒருவரின் ஆஸ்தான வித்வானாக இருந்தார் ஆக்கியாழ்வான் என்ற வடமொழிப் புலவர் ஒருவர். சாஸ்திர ஞானமும் சகலகலா வல்லமையும் பெற்றிருந்தாலும், தான் என்னும் மமகாரகுணம் கொண்டிருந்த ஆக்கியாழ்வான் அனைத்துப் புலவர் பெருமக்களையும் தனக்குப் பணி விடை செய்யும் அளவுக்கு அடிமைப்படுத்தி வைத்திருந்தார். அவருடன் வாதிட்டு வெல்ல முடியாதோர் அவருக்கு கப்பமும் கட்டி வந்தனர். அவ்வாறாக கப்பம் கட்ட முடியாத ஏழ்மை நிலையில் இருந்த மாபாடியார் என்ற ஆசிரியப்பெருமான் ஒருவரைக் காப்பாற்ற எண்ணினான் சின்னஞ் சிறுவனாகிய யமுனைத்துறைவன் ஆக்கியாழ்வானிடம் சொற்போர் தொடுக்க சம்மதமும் தெரிவித்தான்.
தன்னுடன் வாதம் செய்ய வந்துள்ளது ஒரு சின்னஞ்சிறுவன் என்பதனைக் கண்ட ஆக்கியாழ்வான் எள்ளி நகையாடியதுடன் தான் கேட்கும் சாதாரண கேள்விக்கு முதலில் பதில் சொல்ல வேண்டும். அதே சமயம், தான் சரி என்று சொல்வதை தவறு என்றும், தவறு என்பதை சரி என்றும் நிரூபணம் செய்யும் அளவுக்கு பேச வேண்டும் என்று கூறினார். வாதத்திற்கு ஒப்புக்கொண்ட யமுனைத்துறைவன். அரசவையில் சோழ மன்னனும் அரசியும் பார்த்திருக்க வாதமேடையில் ஏறி கம்பீரமாக அமர்ந்தான்.

சின்னஞ் சிறுவனாகிய நீயே முதலில் கேட்கலாம்... என்றார் ஆக்கியாழ்வான். உன் அன்னை மலடியல்ல; சோழ அரசி கற்புடை மாது; சோழ மன்னன் தர்மவான் என்னும் மூன்று வாக்கியங்களை முன் வைத்தான் யமுனைத்துறைவன். போட்டியின் நிபந்தனையின் படி, அன்னை மலடி என்றும் அரசி கற்பில்லாதவள் என்றும், மன்னன் அதர்மவான் என்றும் ஆக்கியாழ்வான் வாதிட வேண்டும். இந்த மூன்றுக்குமே பதில் சொல்ல முடியாமல் முழித்தார் ஆக்கியாழ்வான். ஏனென்றால், மகனைப் பெற்ற அன்னையை மலடி என்று கூற முடியாது; அரசியை கற்பற்றவள் என்றோ, அரசன் அதர்மவான் என்றோ கூறினால் மரணதண்டனையே கிடைக்கும். பயந்து போன ஆக்கியாழ்வான் நீயே இவைகளுக்கான பதிலைக் கூறு என்றார். ஒரே பிள்ளையைப் பெற்றவள் மலடிக்குச் சமம் என்றும், பொதுவாக பெண்கள் முதலில் வெண்மதிக்கும், பின்பு கந்தர்வருக்கும் மானசீகத் தொடர்பில் இருந்த பின்பே மனிதனுக்கு மனையாளவதால் அரசியும் கற்பற்றவளே என்றும், தன்னுடைய குடிமக்கள் செய்யும் குற்றங்களுக்கான பலன்களில் நாடாளும் மன்னனுக்கும் பங்குண்டு என்பதனால் அரசனும் அதர்மவானே என்றும் கூறி தனது வாதத்தை முடித்து ஆக்கியாழ்வானை வெற்றி கண்டான் யமுனைத்துறைவன். அரசவையில் அமர்ந்திருந்த அரசி மிக்க மகிழ்வுடன் யமுனைத் துறைவனை அழைத்து, உச்சிமோந்து, எனை ஆளவந்தீரே... என்று புகழ்ந்தார். 

ஆக்கியாழ்வானின் ஆணவம் அன்றோடு அழிந்தது. நாலாயிர திவ்யப்ரபந்தங்களை சேகரித்தளித்து வைணவம் காக்க அவதரித்த முதல் ஆசார்யனான ஸ்ரீமந்நாதமுனிகள் அவர்களின் திருப்பேரனே இந்த ஆளவந்தான். சோழநாட்டில் சதுர் வேத மங்கலம் என்று அழைக்கப்பட்ட காட்டுமன்னார் கோவில் என்ற திவ்யத்தலமே அவரது அவதாரத்தலம்.

பிற்காலத்தில் ஆளவந்தாரின் சீடர்கள் வரிசையில் முன் நின்ற பெரிய திருமலை நம்பியும் அவர் சகோதரி மகனாகவும் இறையம் சத்துடன் (ஆதிசேஷனின் அவதாரம்) திருப்பெரும்பூதூரில் (ஸ்ரீபெரும் பூதூரில்) நல்லதோர் திருவாதிரை நாளில் அவதரித்த ஸ்ரீ ராமானுசர் என்ற எம்பெருமானார் அருளாலும் இன்று வரை வைணவம் தழைத்து நிற்கிறது என்பது முற்றிலும் உண்மை. ஆளவந்தாரின் அந்திமக் காலத்தில் உடனிருந்து திருவரங்களத்தில் (ஸ்ரீரங்கம்) காவிரிக் கரையில் அவரது உடலை திருப்பள்ளிப்படுத்தி உய்வு கண்டார் உடையவர் என்றும் யதிராசர் என்றும் புகழப்பட்ட ராமாநுசர்! ஆளவந்தார் திருவடிகளே சரணம்!

 

 

கருத்துகள் இல்லை: