ஞாயிறு, 22 செப்டம்பர், 2024

புரூரவஸ்...

புரூரவஸ்!

நவக்கிரஹங்களில் ஒருவரான புதனின் புதல்வன் புரூரவஸ், நீதிநெறி தவறாது அரசாண்டவன். தேவலோக நடன மங்கை ஊர்வசியின் அழகில் சித்திரா வருணர்கள் மையல் கொண்டனர். அவர்கள் ஆசையை ஊர்வசி நிராகரிக்கவே, அவர்கள் சினம் கொண்டு சிலகாலம் மானிடனின் மனைவியாகக் கடவது என சபித்தனர். சாபம் பெற்ற ஊர்வசி புரூரவஸின் அழகிலும், குணத்திலும் மனதைப் பறிகொடுத்தாள். புரூரவஸும் ஊர்வசியின் சவுந்தர்யத்தில் மயங்கினான். பெண்ணே! நீ யார்? என்னை மணந்து கொள்வாயா? என வினவினான். நான் தேவலோக அப்சரஸ் ஊர்வசி. உங்களை மணக்க ஒப்புக்கொள்கிறேன். அதற்கு இரு நிபந்தனைகள் உண்டு. முதலாவது, நான் வளர்க்கும் இரு ஆட்டுக் குட்டிகளும் என் படுக்கை அறையில்தான் இருக்கும். அதில் ஒன்று காணாமல் போனால் கூட நான் உங்களை விட்டுப் பிரிந்து விடுவேன். முகம் கோணாமல் பராமரிக்கும் ஆட்களை அவற்றுக்கு ஏற்பாடு செய்ய வேண்டியது உமது கடமை.

தவிர, நெய்யைத் தவிர வேறு ஆகாரம் எதையும் சாப்பிடும்படி என்னை வற்புறுத்தக் கூடாது. அதோடு திகம்பரனாக வெளிச்சத்தில் உங்களை நான் பார்க்கக் கூடாது என்றாள் அவள். அனைத்துக்கும் சம்மதித்து அவளை அரண்மனைக்கு அழைத்துச் சென்றான் புரூரவஸ். ஊர்வசி கருவுற்றாள். அமர லோகத்தில் ஊர்வசி இல்லாமல் குழு நடனங்கள் சிறக்கவில்லை. ஊர்வசியின் ஆடுகளை இரவில் தம்பதிகள் சுகித்திருக்கையில் கவர்ந்து வந்து விடுவோம். நிர்வாணமாயிருக்கும் புரூரவஸால் தடுக்க இயலாது. மீறி விரட்டினால் மின்னலை வீசுவோம் என்று திட்டம் தீட்டினான் விசுவாவசு. சரி, மின்னலை நீ பாய்ச்சத் தயாராயிரு. நான் ஒரு ஆட்டுக் குட்டியைத் திருடிக் கொண்டு வருகிறேன் என்றான் ஊர்ணாயு. நிபந்தனை எப்படியும் உடைய வேண்டும். ஊர்வசி பார்வை படும் தூரத்தில் மின்னலைப் பாய்ச்சினால்தான் பலன் என்று எச்சரித்தான் சித்திரசேனன்.

திட்டமிட்டபடியே அன்றிரவு எல்லாம் நடந்தது. ஆட்டின் கதறல் கேட்டு புரூரவஸைத் தள்ளி விட்டாள் ஊர்வசி. கலைந்து கிடந்த உடையைத் தேடுவதற்குள் மின்னலை வீசினான் விசுவாவசு. அதே நேரம் இரண்டாவது குட்டியையும் சித்திரசேனன் தூக்கிச் செல்ல ஊர்வசி துக்கித்தாள். ஆத்திரத்தோடு வாளை உருவிக் கொண்டு போனான் புரூரவஸ். இதற்கிடையே சாபம் நீங்கியதால் தேவலோகத்துக்கு பறந்து சென்று விட்டாள் ஊர்வசி. குட்டிகளோடு அந்தப்புரம் வந்த புரூவரஸ், ஊர்வசியைத் தேடித் திரிந்தான். குரு க்ஷேத்திரத்திலுள்ள ஒரு தாமரைப் பொய்கையில் தோழிகளுடன் நீராடுவது கண்டு அவளை அழைத்தான். மகனைப் பெற்றெடுத்து உங்களிடம் கொடுத்து விட்டு ஒருநாள் உங்களைத் திருப்திப்படுத்துவேன். அதோடு என்னை விட்டுவிட வேண்டும். பங்குனி கடைசியில் வாருங்கள் என்றாள் ஊர்வசி. அதன்படி, ஆயுசு வைப் பெற்று புரூரவஸுவிடம் ஒப்படைத்தாள். அப்போது கந்தர்வர்கள், அரசனிடம் தங்களை ஏமாற்றிய தோஷம் நீங்க வரமொன்று கொடுக்க விரும்புகிறோம் என்று கூற, ஊர்வசியோடு வாழ வரம் தாருங்கள் என்று கோரினான். அவர்கள் வன்னிமரக் குச்சியொன்றை அளித்து இந்தக் கொம்பை மூன்றாக்கி, வேத மந்திரங்களை உச்சரித்து இஷ்டகாமிய ஹோமம் செய்ய, உங்கள் விருப்பம் நிறைவேறும் எனக் கூறிச் சென்றனர். வேதவிதிப்படி ஹோமம் செய்து கந்தர்வ லோகம் சென்று ஊர்வசியோடு சுகித்திருந்தான் புரூரவஸ். 




கருத்துகள் இல்லை: