ஞாயிறு, 22 செப்டம்பர், 2024

அனந்தராம தீட்சிதர்!

அனந்தராம தீட்சிதர்!

சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர் உபன்யாசம், 1940-65ம் ஆண்டுகளில் மிகவும் புகழ் பெற்றது. ராமாயணம், மகாபாரதம், பாகவதம், ஸ்காந்தம், தேவிபாகவதத்தை சங்கீத உபன்யாசமாக நடத்தினார். இவருக்கே உரித்தான மகிஷாசுரமர்த்தினி இன்னிசை, காலத்தால் அழியாதது. குருவாயூரப்பன் பக்தரான இவர், நாராயணீயத்தை மக்களிடம் பரப்பினார். 1903ல், சுப்ரமண்ய தீட்சிதர்-சுப்புலட்சுமி அம்மையாருக்கு மகனாகப் பிறந்த இவர், கடலங்குடி நடேச சாஸ்திரிகளிடம் பாடம் படித்தார். (சாஸ்திரிகள், தீட்சிதருக்கு மாமனாரும் ஆவார்) அக்னிஹோத்ர யாகம் செய்யும் குடும்பத்தைச் சேர்ந்த தீட்சிதர், வேதவல்லுநராகத் திகழ்ந்தார். இவருடைய உபன்யாசத்தை மும்பை, கோல்கட்டா, சென்னை நகரங்களில் மாதக்கணக்கில் மக்கள் கேட்டு மகிழ்ந்தனர். பரந்தமனம் படைத்த இவர், செல்வந்தர்களிடம் ஏழை எளியவருக்கு அறத்தொண்டு செய்யும்படி வலியுறுத்தினார். சடங்கு சம்பிரதாயத்தை முறையாக செய்ய வேண்டுமென வழிகாட்டினார். அமிர்தவர்ஷினி உபன்யாச சக்கரவர்த்தி, வைதீக தரம் சம்ரட்சன ப்ரவசன தாத்ர உபன்யாசகா ஆகிய பட்டங்களைப் பெற்றிருந்தார். ருத்ர சமகம், ஸ்கந்த புராணத்திற்கு உரை எழுதியுள்ளார். காஞ்சிப்பெரியவர், சிருங்கேரி சுவாமிகள், நேருஜி, டாக்டர் ராஜேந்திர பிரசாத், டாக்டர் ராதாகிருஷ்ணன், ராஜாஜி, பிரகாசம், சி.சுப்ரமண்யம், கல்கி சதாசிவம், எம்.எஸ்.சுப்புலட்சுமி, காசா சுப்பாராவ் ஆகியோர் இவரது உபன்யாசத்தை ரசித்ததில் குறிப்பிடத்தக்கவர்கள். பக்திப்பயிர் செழிக்க பாடுபட்ட இவர் 1969, அக்.30ல் இறைவனுடன் கலந்தார். ஸ்ரீஜயமங்கள ஸ்தோத்திரம் என்னும் அரிய பொக்கிஷத்தை நம்மிடையே விட்டுச்சென்ற, அந்த ஆன்மிகச் செல்வத்தை, நன்றியோடு போற்றுவோம். 




கருத்துகள் இல்லை: