புதன், 10 ஜனவரி, 2024

அடியேனின் தந்தையை பற்றிய ஒரு நினைவாற்றல்

என்றென்றும் நீங்கா நினைவில் இருக்கிறோம் அப்பா....

தந்தையர் தினத்தை முன்னி்ட்டு அடியேனின் தந்தையோடு வரலாறு....
வெகு நாட்களாகவே அடியேனின் தந்தையை பற்றிய ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்ற ஆவளோடு இருந்தேன். இன்று தந்தையர் தினம் என்பதால் அடியேனின் தந்தை பாலு சாஸ்திரிகள் அவர்களை பற்றி மிக எளிமையாக ஒரு சிறு கட்டுரை தங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

அடியேனின் தந்தை கும்பகோணம் பாலு சாஸ்திரிகள். இயர் பெயர் பால சுப்பிரமணியன்.1943 ஆம் ஆண்டு மன்னார்குடி மாவட்டம் சித்தமல்லியில் வெங்கடராமன் மீனாக்ஷி சுந்தராம்பாள் தம்பதிகளுக்கு ஆறு பிள்ளைகளில் இவர் கடைக்குட்டியாக பிறந்தார். உடன் பிறந்தவர்கள் நான்கு பேர் பெண்கள், இரண்டு ஆண் குழந்தைகள். அப்பாவுக்கு ஒரு அண்ணா உண்டு, சிறு வயதிலியே இறந்து விட்டார். கடைக்குட்டி சிங்க குட்டியாக பிறந்தார். அக்கால கட்டத்தில் மிகவும் சிறப்பாக வாழ்ந்த குடும்பம். அதுவும் எங்கள் தாத்தாவின் உழைப்பை சொல்லி மாளாது. தாத்தா பூரணமாக வேதாத்தியானம் படித்தவர். ஆச்சார, அனுஷ்டானத்தில் கடுமையாக இருந்தவர். ஆதனாலேயே மகனை வேத பாடசாலையில் சேர்த்து படிக்க வைத்தார். அவரும் சிறந்த முறையில் வேதாத்யானத்தை பெரும் புலமையோடு முடித்தார்.

படிப்பு முடிந்த உடன் திருமணம். திருமணத்தின் போது தந்தையின் வயது பத்தொண்பது. சிமிழி ஸ்ரீராமா & மீனாக்ஷி தம்பதிகளின் மூத்த பெண்ணை கைப்பிடித்தார். அப்போது அடியேனின் தாயாருக்கு வயது ஒன்பது. பெரிய மனுஷியாக கூட ஆகவில்லை. பதிமூன்று வயதில் அடியேனின் தாயார் முதல் குழந்தையை ஈன்றெடுத்தார். அடியோனோடு உடன் பிறந்தவர்கள் மொத்தம் நான்கு பேர். முதல் இரண்டும் பெண், மூன்றாவதாக அடியேன், நான்காவதாக ஒரு பெண் எனக்கு தங்கையாக பிறந்தாள். பின் தந்தை பிழைப்புக்காக கும்பகோணம் ராஜு சாஸ்திரிகள் அவர்களிடம் வைதீகத்திற்கு வந்தார் தந்தை. ராஜு சாஸ்திரிகள் அடியேனின் தந்தையின் மாமா ஆவார்.
கும்பகோணத்தில் பேரும், புகழோடும் குடும்பம் நடந்தது. குழந்தைகள் எல்லாம் வளரவே வருமானம் போததால் சென்னைக்கு குடி வந்தார்.

சென்னையில் குரோம்பேட்டையில் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் குடும்பத்தை தொடங்கி, படி படியாக உயரத்திற்கு வந்தார். குரோம்பேட்டையில் தனக்கென முத்திரை பதித்தார். கிரகஸ்தர்கள் அப்பாவின் மீது மிகுந்த மரியாதை வைத்தார்கள். மிகவும் எளிமையாகவும், அனைவரிடமும் அன்பாகவும் பழக்க கூடியவர். கிரகஸ்தர்கள் தங்கள் இல்லத்தில் நடைபெறும் காரியங்களுக்கு அவர்கள் என்ன கொடுக்கிறார்களோ அதை பெற்று குடும்பம் நடத்தி வந்தார். தனது கடின உழைப்பால் அவரின் பெயரிலேயே ஒரு தெரு அமைத்து, கிரகஸ்தர்களின் உதவியோடு தனக்கென ஒரு நிலம் வாங்கி அதில் ஒரு எளிமையான வீடு கட்டி பெருமையோடு வாழ்ந்து வந்தார். கிரகஸ்தர்கள் கும்பகோணம் பாலு சாஸ்திரிகள் என்ற பெயரோடு கூடவே குரோம்பேட்டை பாலு சாஸ்திரிகள் என்று அன்போடு அழைக்கப்பட்டார். இவரின் வெண்கல குரலுக்கு அனைவரும் அடிமை என்றால் அது மிகையாகாது. அப்படி ஒரு குரல் வளம் கொண்டவர். அதே நேரத்தில் வைதீக காரியங்களை எதற்காகவும் குறைக்க மாட்டார். சாஸ்திரத்தில் எப்படி சொல்லப்பட்டுள்ளதோ அப்படி செய்து தருவார். குரோம்பேட்டையில் என்னற்ற வைதீகர்களை கொண்டு வருவதற்கு பெரும் முயற்சி எடுத்து அதில் வெற்றியும் கண்டார். அப்பாவின் சிஷ்யராக இன்றும் குரோம்பேட்டையில் நிறைய வைதீகர்கள் உண்டு. அவர்கள் எல்லோரும் அப்பாவிடம் வைதீகம் பார்த்து இருக்கிறார்கள்.

வேதீகத்தையும் தாண்டி தனது சொந்த ஊரில் குலதெய்வ கோவிலான ஆகாச வீரனார் கோவிலையும் கட்டினார். வலம்புரி விநாயகர், ஆகாச வீரனார், முருகன் ஆகிய தெய்வங்களை பிரதிஷ்டை செய்து சிறப்பாக கும்பாபிஷேகம் செய்த பெருமையும் இவருக்கு உண்டு. ஆரம்ப கால கட்டத்தில் இந்த கோவிலில் உருவம் கிடையாது. தீபம், அரிவாள், கதை ஆகியவை மட்டுமே வெட்ட வெளியில் இருந்தது. வெட்ட வெளியில் எ‌வ்வளவு காற்று அடித்தாலும் தீபம் இனையவே அனையாது. அவ்வளவு சக்தி உண்டு எங்கள் ஆகாச வீரனாருக்கு. பின் அப்பாவுக்கு உத்தரவாகி தனது உருவத்தை காட்டி அப்பாவை கோவில் கட்ட ஆகாச வீரனார் கனவில் கேட்டுக் கொண்டதின் பேரில் கோவில் அப்பாவால் கட்டப்பட்டது. கோவிலுக்கும் முதல் செங்கல்லை ஜகத் குரு ஜயேந்திர பெரியவா தான் தந்தையின் கனவில் தோன்றி எடுத்து வைத்தார். அப்போது மழை கொட்டோ கொட்டு என்று கொட்டியது என்றும் மழையில் நனைந்த படி பெரியவா முதல் செங்கல்லை எடுத்து வைத்தது போல் கனவில் அனுக்கிரஹம் செய்தா ஜயேந்திர பெரியவா. தற்போது  பூஜைகளும் சிறப்பாக நடை பெற்று வருகிறது.

இவை எல்லாவற்றுக்கும் மேல் காஞ்சி ஸ்ரீ ஜயேந்திர பெரியவா மீது அளவு கடந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தார். அதனாலேயே பெரியவாளுக்கும் தந்தையை மிகவும் பிடிக்கும். பெரியவாளை இரண்டு முறை குரோம்பேட்டைக்கு அழைத்து வந்துள்ளார். முதல் முறையாக 2004 ஆம் ஆண்டு ஐந்து நாட்கள் காமாக்ஷி கல்யாண மண்டபத்தில் சந்திர மௌளீஸ்வர பூஜையோடும், இரண்டாவது முறையாக பெரியவாளின் எழுபத்தி ஐந்தாவது ஜயந்தி [2012 ஆண்டு] மஹோட்சவத்திற்காகவும் அழைத்து வந்து மிக பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்தார். காலங்கள் உருண்டு ஒடின. தந்தைக்கு எழுபது வயது பீமரதாஸாந்தி இல்லத்திலேயே வெகு விமரிசையாக நடந்தது. நாளாக நாளாக உடலில் தளர்வு ஏற்பட்டது. சர்க்கரையின் அளவு அதிகரித்து உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டது. இரண்டாயிரத்தி பதினைந்தாம் ஆண்டு பிப்ரவரி மாதம் இருபத்தி ஒன்றாம் தேதி காலை ஏழரை மணிக்கு பெரியவாளின் பாதார விந்தத்தில் சரணடைந்தார். இப்படி ஒரு தந்தை எங்களுக்கு கிடைத்த பெருமையோடும், மிகவும் பாக்கிய சாலிகளாக, தங்களின் நீங்கா நினைவோடு வாழ்ந்து வருகிறோம் அப்பா.

தந்தையை பற்றி இன்னும் எழுதுவதற்கு ஏராளமாக உள்ளது. இனினும் மிக சுருக்கமாக அடியேன் எழுதி உள்ளேன்.




கருத்துகள் இல்லை: