அருள் மிகு மகர நெடுங்குழைக்காதர் திருக்கோவில், தென் திருப்பேரை
தமிழகத்தில் நவ திருப்பதிகளில் ஒன்றான ஒப்பற்ற திருத்தலம். தமிழகத்தில் வேறு எந்த திருமால் திருத்தலத்திலும் காண முடியாத ஒன்றாக கருடாழ்வார் மூலவர் சன்னதிக்கு எதிரில் அல்லாமல் ஒதுங்கிய நிலையில் அமைந்துள்ள தலம். சுமார் 1000 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த திருத்தலம். 108 வைணவ திவ்ய தேசங்களில் 86 வது திவ்ய தேசமாகும். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் பாசுரங்கள் பாடி மங்களாசாசனம் செய்த திருத்தலம். இவ்வாறு ஏராளமான சிறப்புகளை உள்ளடக்கிய அற்புதம் வாய்ந்த திருத்தலம்.
நவ திருப்பதிகள்: 108 வைணவ திவ்ய தேசங்களில் 9 திவ்ய தேசங்கள் மட்டும் நவ திருப்பதிகள் என்றும் இத்தல திருமால் நவகிரகங்களுடன் தொடர்புடையதாக கருதியும் வழிபாடு செய்யப்பட்டு வருகின்றனர். அதில் திருப்பேரை திருத்தலம் சுக்கிரனுக்குரிய தலமாக வழிபடப் படுகிறது.
சூரியன்: ஸ்ரீவைகுண்டம்
சந்திரன்: திருவரகுணமங்கை (நத்தம்)
அங்காரகன்: திருக்கோளூர்
புதன்: திருப்புள்ளிங்குடி
குரு: திருக்குருகூர்
(ஆழ்வார் திருநகரி)
சுக்கிரன்: தென் திருப்பேரை
சனி: திருக்குளந்தை
(பெருங்குளம்)
ராகு: திருத்தலைவில்லிமங்கலம்
(இரட்டை திருப்பதி) கேது: திருத்தலை வில்லி மங்கலம்
(இரட்டை திருப்பதி)
திருப்பேரை: பேரை என்பதற்கு "உடல்" என்பது பொருள். பூமிப் பிராட்டி இத்தல திருமாலின் திருவருளால் சாபம் நீங்கி அழகிய உடல் அமைப்பை பெற்றதனால் இத்தலத்திற்கு "திருப்பேரை" என்று பெயர். சோழ நாட்டில்“திருப்பேர் நகர்”என்ற திவ்ய தேசம் ஒன்று இருப்பதால் இத்தலமானது “தென் திருப்பேரை” என்று அழைக்கப்பட்டு வருகிறது.
தல வரலாறு: ஒரு முறை பூமி பிராட்டி துர்வாச முனிவரின் சாபத்திற்கு ஆளாகி அழகை இழந்து கரிய அலங்கோலமான உருவை அடைந்தாள். அதனால் தன் பிழையை மன்னித்து, சாப விமோசனம் அளிக்கும்படி வேண்டினாள். அதற்கு துர்வாசர் தாமிரபரணியின் தென் கரையில் உள்ள ஹரிபதம் என்ற தலத்தின் நதியில் நீராடி, அங்குள்ள பெருமாளை நினைத்து தவம் செய்து வந்தால் பாவம் தொலைந்து பழைய உருவம் கிடைக்கும் என்று விமோசனம் கூறினார். பூமிபிராட்டியும் அவ்வண்ணமே பங்குனி மாதம் பௌர்ணமியில் ஹரிபதம்தலத்தின் நதியில் நீராடி அட்டாட்சர மந்திரத்தை உச்சரித்தவாறு தண்ணீரை எடுத்தாள்.அப்போது தண்ணீரில் விலை மதிக்க முடியாத அழகு வாய்ந்த "மகர குண்டலங்கள்" இரண்டு அவள் கையில் சிக்கியது. திருக்குளத்தில் தோன்றியதால் சற்றும் தாமதிக்காது இத்தல பெருமாளுக்கே அந்த மகர குண்டலங்களை சமர்பித்தாள்.அந்த இரு குண்டலங்களையும் காதில் அணிந்து கொள்ளும்படி மனமுருகி பிரார்த்தனை செய்தாள். அவள் பக்திக்கு மனமிறங்கிய பெருமாள் மகர குண்டலங்களை தமது திருக்காதில் அணிந்து கொண்டதனால் மகர நெடுங்குழைக்காதர் பெருமாள் என்ற திருநாமம் பெற்றார். குண்டலங்களோடு காட்சி தந்ததோடு பூமி தேவிக்கும் சாப விமோசனம் அளித்தார். இத்தல உற்சவருக்கு நிகரில் முகில் வண்ணன் என்பது திருநாமம். இத்தலத்தின் வரலாற்றை பிரம்மாண்ட புராணம் தெளிவாக எடுத்துரைக்கிறது.
தாயார்: திருப்பேரை திருத்தல திருமகள் தேவிக்கு திருப்பேரைவல்லி தாயார் என்பது திருநாமம். தாயார் தனி சன்னதி கொண்டு அருள்கின்றார். மேலும் தல தீர்த்தமான சுக்கிர தீர்த்தக் கரையில் பூமி தேவி குழைக்காதுவல்லி தாயார் என்ற திருநாமத்தில் தனி சன்னதி கொண்டு அருள்கின்றார்.
மங்களாசாசனம்: பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான"வேதம் தமிழ் செய்த மாறன்"என்று போற்றப்படும் நம்மாழ்வார் இத்தல இறைவன் மீது 11 பாசுரங்கள் பாடி மங்களாசாசனம் செய்துள்ளார்.
வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தித் தாமரைக் கண்ணனென் நெஞ்சினூடே, புள்ளைக் கடாகின்றவாற்றைக் காணீர்
என் சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்கால் வெள்ளச் சுகமவன் வீற்றிருந்த வேத ஒலியும் விழா ஒலியும், பிள்ளைக் குழா விளையாட்டொலியும் அறத் திருப்பேரையில் சேர்வன் நானே!
நம்மாழ்வார்
ஒதுங்கிய கருடன்: திருமால் அவதரித்துள்ள எல்லா திருக்கோயில்களிலும் வாகனமான கருடாழ்வார் மூலவர் சன்னதிக்கு நேர் எதிரில் தான் எழுந்தருளியிருப்பார். ஆனால் தென் திருப்பேரை திருத்தலத்தில் மட்டும் முற்றிலும் புதுமையாய் இடது பக்கமாக அதாவது ஆழ்வார்களின் பக்கம் ஒதுங்கி நின்று சேவை சாதிக்கிறார்.இது தமிழகத்தில் வேறு எந்த திருத்தலத்திலும் காண முடியாத ஒன்றாகும்
கோவில் அமைப்பு:தென் திருப்பேரை திருத்தலம் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் மிக பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது.அனால் இத்தளம் எக்காலத்தில் எந்த மன்னரின் ஆட்சிக் காலத்தில் நிர்மானிக்கப்பட்டது என்று முழுமையான வரலாறு அறிய முடியவில்லை.நுட்பமான சிற்ப வேலைப்பாடுகள் அழகுக்கே அழகு சேர்க்கிறது.
முக்கிய வைபவம்: இத்திருக் கோவிலில் மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் முக்கியமான நாளாகும்.ஒவ்வொரு மாதமும் உத்திரத்தன்று மூலவருக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது.
ஆணி உத்திரம் – தைலக்காப்பு
ஆடி உத்திரம்-பவித்ரோற்சவம்
பங்குனி உத்திரம்–பத்து நாள் பிரம்மோற்சவம்,தீர்த்தம் சங்க தீர்த்தம்
அருள்மிகு மகர நெடுங்குழைக்காதர்
திருவடிகளே சரணம்
அருள்மிகு திருப்பேரைவல்லி தாயார்
திருவடிகளே சரணம்
அருள்மிகு குழைக்காதுவல்லி தாயார் திருவடிகளே சரணம்
தரிசனம் நேரம்:காலை 06.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை.மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 வரை.
போக்குவரத்து வசதி: திருநெல்வேலியிலிருந்து 39 கி.மீ. தொலைவில் திருப்பேரை உள்ளது. திருசெந்தூரிலிருந்து ஏராளமான பேருந்துகள் செல்கின்றன.
திருக்கோவில் முகவரி:அருள்மிகு மகர நெடுங்குழைக்காதர் திருக்கோயில்,தென் திருப்பேரை
திருச்செந்தூர் வட்டம்
தூத்துக்குடி – 628 623
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக