செவ்வாய், 1 டிசம்பர், 2020

தொண்டை நாட்டு திவ்யதலம் திருப்புட்குழி

தொண்டை நாட்டு திவ்யதலம் திருப்புட்குழி

108 வைணவ திருத்தலங்களில், தொண்டை நாடு திருத்தலங்களில் முக்கியமானதாக கருதப்படுவது இந்த திவ்ய தலம். பெருமாள் ஸ்ரீ விஜய ராகவப்பெருமாள். வீற்றிருந்த கோலம். இத்தலத்தில் ஸ்ரீதேவி பூதேவி தாயர்கள் இடம் மாறி காட்சி கொடுக்கின்றனர். வலதுபுறம் பூதேவி தாயார். இடதுபுறம் ஸ்ரீதேவி தாயார். தனிக்கோயில் கொண்டுள்ள ஸ்ரீ மரகதவல்லி தாயார் சன்னதி இடதுபுறமும் ஸ்ரீ ஆண்டாள் சந்நிதி வலதுபுறமும் அமைந்து உள்ளன.

தலபுராணம்

ஸ்ரீ ராமாவதாரத்தில், ராவணன் சீதா தேவியை கவர்ந்து செல்லும்போது பட்சி ராஜனான ஜடாயு ராவணனோடு யுத்தம் செய்து காயம் பட்டு வீழ்ந்தது. அந்த இடத்திற்கு வந்த ஸ்ரீ ராமர் சீதா  தேவி ராவணனால் கவரப்பட்ட விவரம் ஜடாயு மூலம் அறிந்தார். ஜடாயு வேண்டியபடி, ஸ்ரீதேவி பூதேவியுடன் ஸ்ரீ ராமபிரான் காட்சி கொடுத்து அருளினார். தன் வலது பக்கம் தீ மூட்டி ஜடாயுவை தகனம் செய்து, ராமபாணத்தினால் உண்டான தீர்த்தத்தில் ஜடாயுவுக்கு ஈமகிரியை செய்து முடித்தார். தீ ஜ்வாலை தாங்காமல் ஸ்ரீ ராமரின் வலதுபுறம் இருந்த ஸ்ரீதேவி தாயார் ஸ்ரீ ராமரின்  இடதுபக்கம் வந்து காட்சி அளிக்க பூதேவி தாயாரும் வலதுபுறம் வந்து காட்சி கொடுத்ததாக வாமன புராணத்தில் விவரமாக கூறப்பட்டு உள்ளது. ஸ்ரீ ராமரால் உருவாக்கப்பட்ட தீர்த்தம் இன்றும் ஜடாயு புஷ்கரணி  என்ற பெயரில் காணப்படுகிறது.

சுந்தர பாண்டிய மன்னன் இக்கோயிலை கட்டி மான்யங்கள் அளித்ததாக கல்வெட்டு செய்திகள் உள்ளன. உடையவர் ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீ யாதவ பிரகாசர் என்பவரிடம் இளமைக்காலத்தில் இத்தலத்தில் கல்விகற்றதாக கல்வெட்டு செய்தி கூறுகிறது. வேண்டியதை அள்ளிக்கொடுக்கும் தாயார் வறுத்த பயிரை முளைக்க வைக்கும் மரகதவல்லி தாயார் என போற்றப்படுகிறார். திருமங்கை ஆழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்ட தலம். ஸ்ரீ வேதாந்ததேசிகர் இப்பெருமானை பரமார்த்த ஸ்துதி என்ற பாசுரங்களால் மங்களா சாசனம் செய்துள்ளார்கள்.

பக்தர்கள் அதிகம் வரும் இத்திருக்கோயிலில் 2 கால பூஜைகள் நடைபெறுகின்றன. பேச்சு வராத குழந்தைகளுக்கு இங்கு தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்ய, குழந்தைகளை நன்கு பேச வைக்கும் தலமாக விளங்குகிறது. ஆலய அர்ச்சகர் திரு ஸ்ரீனிவாச பட்டாச்சாரியார் 9047489295. தொடர்புக்கு திரு நாராயணன்-9445214825. காஞ்சியிலிருந்து 15 கி.மி.


கருத்துகள் இல்லை: