இறைவனோடு உறையாடிய உத்தமர்கள்!
அவ்வைப் பாட்டி: வைணவத்துக்கு ஒரே ஒரு ஆண்டாள். சைவத்துக்கோ காரைக்காலம்மையார், மங்கையர்க்கரசியார், குலச்சிறையாரும் தான். கௌமாரத் தெய்வமான முருகனையும், காணாபத்ய கணபதியையும் அவ்வைப் பாட்டி ஒருத்தியே அதிகம் நெருங்கியுள்ளாள். சௌரத்தின் வழிக்கு திரௌபதியை சொன்னாலும் அவளை தீயிலே பூத்த ஒரு தெய்வப்பெண், வைணவக் கண்ணனை அண்ணனாகவே பெற்று விட்டவள். எனவே திரௌபதியை இந்த தெய்வப்பிறவிகளின் கணக்கில் சேர்க்கவும் நீக்கவும் நெருடுகிறது. கூட்டிக் கழித்தால் நான்கு பேர்தான் தேறி நிற்கிறார்கள். இவர்களில் ஆண்டாளும் சரி, அவ்வையும் சரி, தங்கள் சிந்தனைகளை பாடல்களாக்கி, இந்த சமுதாயத்துக்குத் தந்து விட்டுச் சென்றுள்ளதுதான் சிறப்பு. இதில் ஆண்டாளின் வழி வேறானதாக, காதல்மிக்கதாய் உள்ளது. ஓர் எழிலார்ந்த பெண்மகளாய் அந்தத் திருமால் மேல் காதல் கொண்ட, அந்தக் காதலில் வெற்றியும் பெற்றவளாய்த் திகழ்கிறாள். அதனால் இல்வாழ்வில் ஈடுபட விரும்புவோர்க்கு இவள் பெரிய வழிகாட்டியாகவும் விளங்குகிறாள்.
இவளது திருப்பாவைப் பாடல்கள் நம்பாவையர்களை, அவர்களின் வினைப்பாடுகளிடம் இருந்து, மீட்டுக் கரை சேர்ப்பதாக உள்ளது. இவளுக்கு நேர் எதிர்த்திசையில் நிற்கிறாள் நம் அவ்வைப் பாட்டி! ஆண்டாள் தெய்வக் காதலினால் கவர்ந்தாள். அவ்வையிடம் சமுகப் பார்வையும் அறக்கோட்பாடுகளும் மிகுந்து காணப்படுகிறது. இவளும் இறைவனை அடைய விரும்புகிறாள்... அது காதல் வழி அல்ல. தவத்தின் வழி...! அவ்வைப் பாட்டியின் பூர்வீகம் சோழ நாட்டு உறையூர். அந்தண குலத்திலே ஒருதாய் தகப்பனுக்கு மூத்த பெண்ணாகப் பிறந்தவர். எப்படி குழந்தைப் பருவத்திலேயே ஞானசம் பந்தர் கோபுரத்து தெய்வசிலையைப் பார்த்து தோடுடைய செவியன் என்று தொடங்கும் பாடலைப் பாடி தன் ஞானத்தை உலகறியச் செய்தாரோ அதே போலவே அவ்வையும் பிள்ளையாக இருந்தபோதே தான் ஒரு தெய்வக்குழந்தை என்பதை உணர்ந்து விட்டாள்- இட்டமுடன் என் தலையில் இன்னபடியென்று எழுதிவிட்ட சிவனுஞ் செத்துவிட்டானோ? முட்டமுட்டப் பஞ்சமேயானாலும் பாரம் அவனுக்கன்னாய்! நெஞ்சமே அஞ்சாதே நீ என்று அவ்வை பாடியதைக் கேட்டு வியக்காதவர்கள் இல்லை. குறிப்பாக அவ்வையின் தாய் தந்தையர்கள் இவரைப் பற்றிய கவலையை விட்டொழித்தனர்.
குழந்தைப் பிராயத்திலேயே, அவ்வையின் மனம் கவர்ந்த கடவுள் பிள்ளையார்தான். யானை உம்மாச்சி என்று நம் பிள்ளைகளின் மனங்களையும் வேகமாகக் கவர்பவர் இந்த கணபதிதானே? இந்தப் பிள்ளையார் ஆகமத்துக்கு அடங்குவது போலவே வெறும் அன்புக்கும் அடங்குபவர். நல்ல நிலம் பார்த்துக் கோவில் கட்டிக் அங்கேதான் இவரை குடியமர்த்த வேண்டும் என்றில்லை. கட்டிக் களிமண்ணை எடுத்துக் கையாலே உருவம் அமைத்து ஒரு மரத்தடியில் உட்கார்த்தி வைத்து இரண்டு அருகம்புல்லைக் கிள்ளிப் போட்டாலே போதும். அகம் மகிழ்ந்து அருளை வாரி வழங்கிவிடுபவர் இவர். அவ்வை வாழ்ந்த உறையூரிலும் இவருக்குத் திரும்பிய பக்கமெல்லாம் வானம் பார்த்த கோவில்கள். ஆற்றுப்பக்கமாய் குடம் எடுத்துச் செல்லும்போதெல்லாம் அவ்வையின் பார்வையில் படும் இவர்தான் முதல் இஷ்ட தெய்வம். ஆற்று நீரை குடத்தில் கொண்டு வந்து அபிஷேகம் செய்து விட்டு அப்படியே பிரதட்சணமாய் வந்து மனமுருக வணங்கிடும்போது அவ்வைக்குள்ளே இனிய தமிழில் பல துதிப் பாடல்கள் தோன்றின. அதில் ஒன்றுதான்-
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்
துங்கக் கரிமுகத்து தூமணியே நீ
எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா...
என்னும் பாடல். அவ்வையின் காலம் மதுரையின் கடைச்சங்கம் இருந்த காலம். இந்த கால்த்தில்தான் சோழநாட்டில் கம்பரும், ஒட்டங்கூத்தரும், புகழேந்தியார் என்னும் புலவரும் வாழ்ந்து வந்தனர். இவர்களில் கம்பருக்கும், ஒட்டங்கூத்ருக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம். புகழேந்தியார் வழியோ தனிவழி. இப்படிப் பெரும் புலவர்கள் வாழ்ந்த நாளில்தான் காலம் அவர்களோடு அவ்வையையும் கொண்டு சேர்த்தது.
முன்னதாக அவ்வைத் தன் வாழ்வில் ஓர் அதிசயத்தையும் கேட்டு நிகழ்த்திக் கொண்டதை அனைவரும் அறிந்து கொண்டாக வேண்டும். அவ்வை ஒரு பெண்ணாக இருந்தும் பெண்களுக்கேயுரிய அழகுணர்ச்சிக்கும் அலங்காரத்திற்கும் முக்கியத்துவம் தரவேயில்லை. வாலிபப் பிராயத்தை எட்டும் நிலையில் தானொரு ஆணுக்கு வாழ்க்கைப்பட்டு இல்வாழ்வு எனும் இல்லறத்தில் செல்ல விரும்பவில்லை. இல்லறத்தில் செல்ல விரும்பாத நிலையில் நல்லறமாக அவ்வை கருதியது இறையறத்தைத்தான். அதாவது தவத்தை... குழந்தைப் பிராயத்திலேயே சிவபெருமான் மேல் பாரத்தைப் போட்டு விட்டேன் என்று பாடிய மனம், இல்லறம் எனும் பெரும்பாட்டை, பிள்ளைகள் உறவுகள் என்று வழிவழி யாய்த் தொடரும் ஒரு பந்தத்தை எப்படி விரும்பும்? அதையே விரும்பாதபோது இளமைதான் எதற்கு? இந்த இளமை, பெண்கள் வரையில் சற்று போகமும் மோகமும் சார்ந்தது. நாம் அதைக் கொண்டாடாவிட்டாலும் பிறர் கண்களுக்கு அது விருந்தாகி விடும் ஆபத்தும் அதிகம். தோற்றம் என்பது ஏற்றம் தருவதாக இருக்க வேண்டும். எனவே அவ்வை தனது மனதிற்கிசைந்த கணபதியிடம் தனக் கேற்ற விதமான உடம்பைக் கேட்கிறாள். கணபதியும் அந்த இளமையான தெய்வக்குழந்தைக்கு முதிர்ந்த வைரம் பாய்ந்த ஞானம் மிக்க தேகத்தை வழங்கி அருளுகிறான். உலகிலேயே இளமையைத் துறந்து முதுமையை வேண்டிப் பெற்றவர்கள் இருவர். ஒருவர் காரைக்காலம்மையார், அடுத்து, அவ்வைப் பாட்டி மட்டுமே. இங்கேயிருந்து தொடங்குகிறது அவ்வையின் பவித்ரமான பயணம்...
JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
செவ்வாய், 1 டிசம்பர், 2020
இறைவனோடு உறையாடிய உத்தமர்கள்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக