வெள்ளி, 25 டிசம்பர், 2020

கந்தபுராணம் பகுதி ஒன்பது

கந்தபுராணம் பகுதி ஒன்பது

ஒம் சரவணபவ

குளத்தில் நீந்திய மீன்களில் பல முனிவர்களாக வடிவெடுத்தன. அவர்கள் பற்பல சாபங்களால் மீன்களாக மாறியிருந்தவர்கள். கந்தனுக்கு ஊட்டப்பட்ட பாலின் மகிமையால் அவர்கள் தங்கள் சுயரூபமடைந்து, கந்தக்குழந்தையை வாழ்த்தி விட்டுச் சென்றனர். இளமையில் மகான்களின் ஆசி கிடைப்பதென்பது சாதாரண விஷயமல்ல. இந்த ஆசி காலம் முழுமைக்கும் நன்மை தரும். பார்வதிதேவி தன் மகனை வளர்த்த கார்த்திகை தேவியரை அழைத்தாள். அன்னையரே ! தாங்கள் என் மகனை என்னிடமே ஒப்படைத்து விட வேண்டும். இனி அவனை நான் சிவலோகத்தில் வளர்ப்பேன். அவனுக்கு பாலூட்டி சீராட்டி வளர்த்த தங்களுக்கு நன்றி, என்றாள். கார்த்திகை பெண்களுக்கு கண்ணீர் முட்டியது. பெற்றவள் குழந்தையைக் கேட்கும் போது கொடுக்காமல் இருக்க முடியுமா ? ஆனாலும், தங்கள் ஸ்தனங்களில் இருந்து பாலூட்டியதால் வடிவேலனுடன் ஏற்பட்ட பாசப்பிணைப்பு அவர்களைக் கண்ணீர் சிந்த வைத்தது. சிவபெருமான் அப்பெண்களைத் தேற்றினார். மங்கையரே ! பற்றும் பாசமும் தற்காலிகமானவை. அவற்றை உதறி விட்டே வாழ்க்கை நடத்த வேண்டும். ஆயினும், உங்கள் பெருமையை இந்த உலகம் அறிய வேண்டும். கார்த்திகை பெண்களான உங்களால் இந்த குழந்தை உங்கள் பெயரால் கார்த்திகேயன் எனப்படுவான். நீங்கள் ஆறுபேரும் ஒருங்கிணைந்து ஒரு நட்சத்திரமாக வானில் ஜொலிப்பீர்கள். உங்கள் திருநட்சத்திர நாளில் கந்தனை வணங்குவோர் எண்ணியதெல்லாம் ஈடேறப் பெறுவர். பணம் வேண்டுபவன் அதைப் பெறுவான். பசு வேண்டுபவனுக்கு அவை ஏராளமாய் பெருகி தாரளமாய் பால் தரும். கல்வி வேண்டுபவன் அதில் பிரகாசிப்பான். இந்த ஆசாபாசங்களெல்லாம் வேண்டும் என்பவனுக்கு சிவலோகமே கிட்டும், என்றார். இவ்வார்த்தைகளால் அந்தப் பெண்கள் ஆறுதலடைந்தனர். அவர்கள் ஒன்றாய் இணைந்து நட்சத்திரமாய் மாறி, விண்ணில் ஜொலிக்கத் துவங்கினர். பின்னர் குழந்தையை எடுத்துக் கொண்டு கைலாயமலை வந்தார் சிவபெருமான். பார்வதிதேவி தன்மகனைக் கொஞ்சி மகிழ்ந்தாள். பாலமுருகன் செய்த சேஷ்டைகள் கொஞ்ச நஞ்சமல்ல, தன் அரைஞாணில் கட்டப்பட்ட தங்க மணிகள் கலகலவென ஒலிக்க அவன் அங்குமிங்குமாய் ஓடுவான். ஆறுதலைகளிலும் குட்டி குட்டியாய் அணிந்திருந்த கிரீடங்களின் ஒளி, எங்கும் பிரகாசிக்க அந்த ஒளியை தேவர்களின் கண்கள் கூசும்படி அங்குமிங்கும் திருப்பி விளையாட்டுக் காட்டுவான். தன் தந்தையின் வாகனமான நந்திதேவரின் மீது விழுந்து உருண்டு புரள்வான். பூலோகம் வந்து கடல்களில் குதித்து திமிங்கலங்களை பிடித்து விளையாடி மகிழ்வான். ஏழு கடல்களை கலக்கி அவற்றை ஒரே கடலாக மாற்றினான். மிகப்பெரிய ஆடு, சிங்கம், புலி முதலானவற்றின் மீது அமர்ந்து உலா வருவான். (முருகனுக்கு மயில் வாகனம் கிடைத்தது பிற்காலத்தில் தான்) இந்திரனின் வில்லான (இந்திர தனுசு) வானவில்லை எடுத்து வந்து அதன் நாண் மீது அமர்ந்து அந்தரத்தில் பறப்பான். மலைகளைப்பிடுங்கி எறிந்தான். இப்படியாக விளையாடும் அவனை யாராலும் தட்டிக் கேட்க முடியவில்லை. சிவமைந்தனின் இந்த சேஷ்டைகள் தேவர்களுக்கு பொறமையை ஏற்படுத்தியது. அந்த பொறாமையை ஏற்படுத்தியதும் சாட்சாத் முருகன் தான். வல்லவன் ஒருவன், தன்னை விட சக்தி மிகுந்த ஒருவனைப் பார்த்து விட்டால் பொறாமை கொள்வது இயற்கை தானே ! தங்களை விட உயர்வான சக்தி பெற்று வளரும் இச்சிறு குழந்தையின் வீரத்தைப் பார்த்து பொறாமைப்பட்டனர். அவர்கள் யார் தெரியுமா ? எமன், வருணன், சூரியன், அக்னி, குபேரன், வாயு ஆகிய பெரிய இடத்துக்காரர்கள். அவர்கள் ஒன்று சேர்ந்து, இந்திரனிடம் முருகன் செய்யும் சேஷ்டைகள் பற்றி கூறினர். இந்திரனே ! சூரனை அழிக்கப் பிறந்ததாக சொல்லப்படும் முருகன். அதற்குரிய பயிற்சியை எடுக்காமல், நம்மால் படைக்கப்பட்ட பொருட்களை அழித்துக் கொண்டிருக்கிறான். நான் ஏழு கடல்களுடன் விசாலமாக விளங்கினேன். என் பொருட்களை ஒன்றாக்கி விட்டான். கடலுக்குள் கிடக்கும் முதலைகளைப் பிடித்து பூஜை செய்கிறான். (முதலை பூஜை என்பது பிரம்மாண்டமானது. இதை கேரளாவிலுள்ள கோயில்களில் காணலாம். முதலை வடிவ பொம்மை செய்து, பூஜை நடத்துவார்கள். சபரிமலையில் மதிய பூஜையில் இது விசேஷம்) இப்படி வந்த வேலையை விட்டுவிட்டு, இருப்பவற்றை நாசமாக்கத்தான் இவன் பிறந்தானா ? என்றான் வருணன். எமன் ஓடி வந்தான்.இந்திராதி தேவரே ! தங்கள் அடிமையான என்னிடம் உயிர்களை அழிக்கும் சக்தி கொடுத்துள்ளீர்கள். இவனோ, உலக உயிர்களை தானே அழிக்கிறான். அப்படியானால் எனக்கென்ன மரியாதை இருக்கிறது? என் பெருமையைக் காப்பாற்றி கொள்ள வேண்டுமானால், நீங்கள் தான் அதற்குரிய ஏற்பாட்டைச் செய்ய வேண்டும், என்றான். குபேரன் தன் பங்கிற்கு, இந்திரரே ! அவன் தலைகளிலுள்ள கிரீடங்களில் ஜொலிக்கும் வைரங்கள், குபேரனான என்னிடம் கூட இல்லை. அவன் என்னை விட செல்வந்தனாக இருக்கிறான். அப்படியானால், எனக்கெதற்கு குபேர பட்டம் ? என்றான்.இப்படியாக ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைச் சொல்ல, இந்திரனின் மனதிலும் ஊறிக்கிடந்த பொறாமை உணர்வு வெளிப்பட்டது.எனது பலம் மிக்க தனுசை விளையாட்டு பொருளாக அவன் வைத்திருக்கிறானே ! அப்படியானால் தேவர்களின் தலைவனாய் இருந்து என்ன பயன் ? இந்த முருகனைத் தட்டி வைத்தால் தான், என் பதவி நிலைக்கும், என மனதிற்குள் கருதியவனாய், தனது ஆதரவாளர்களுடன் முருகனை அடக்கி வைக்க தன் ஐராவதம் யானை மீதேறி புறப்பட்டான். சூரியன் முதலான தேவர்கள் தங்களுடையே தேரேறி வந்தனர். அவர்கள் மேருமலையை அடைந்த போது, அதன் சிகரங்களை பாலமுருகன் லாவகமாக கிள்ளி எறிந்து பந்தாடிக் கொண்டிருந்தான்.

தொடரும்..🌺🙏


கருத்துகள் இல்லை: