வெள்ளி, 25 டிசம்பர், 2020

கந்தபுராணம் பகுதி இருபத்தி இரண்டு

கந்தபுராணம் பகுதி இருபத்தி இரண்டு


சிங்கமுகா ! அந்தச் சிறுவன் முருகனைக் கண்டா நடுங்குகிறாய் ? கேவலம். அசுர குலத்துக்கே கேவலம்... உன்னைத் தம்பியாக அடைந்ததற்காக வேதனைப்படுகிறேன், என்றான் சூரபத்மன். நல்லதை எடுத்துச் சொன்னால் புரிந்து கொள்ளாத அண்ணனிடம் வயதில் குறைந்த தம்பி என்ன செய்ய இயலும் ? இவனுக்கேற்ப பேசிவிட்டு போவதே நல்லது என எண்ணி, அப்படியே பேச்சைத் திருப்பினான். அண்ணா ! நீங்கள் சொல்வதும் சரிதான். உங்கள் பராக்கிரமம் பற்றி நான் அறிவேன். இருந்தாலும் ஒரு சிறுவனைக் கொன்ற பழி பாவம் உங்களை அடைந்து விடக்கூடாதே என்று தான் அப்படி சொன்னேன். நீங்கள் எங்கே... அந்த சிறுவன் எங்கே ? உங்கள் தகுதிக்கு நீங்கள் அவனுடன் போரிட செல்ல வேண்டாம். நானே போகிறேன். அவனை இழுத்து வருகிறேன் என்று சொல்லவும் சூரபத்மனுக்கு உள்ளம் குளிர்ந்து விட்டது. சிங்கமுகா ! என் உள்ளத்தின் உறுதியை அறிய நீ அப்படி பேசியிருப்பாய் என அறிந்தேன் நீ சுத்த வீரன். உன்னைப் போன்றவர்கள் அவனுடன் போருக்கு போகக்கூடாது. நம் குழந்தை பானுகோபனை அனுப்புவோம். அந்த சிறுவனுக்கு இந்த சிறுவன் தான் சரியான ஆள். சூரியனை வென்றதால் தானே இவனுக்கு பானுகோபன் என்று பெயர் வைத்தோம். அப்படிப்பட்ட திறமைசாலியின் முன் அந்த முருகனால் நிற்க முடியுமா ? நீ சென்று ஓய்வெடு, பிறகு பார்த்துக் கொள்ளலாம், என கொக்கரித்தான். அசுரகுலத்தின் அழிவு உறுதி என எண்ணி வருந்தியபடியே சிங்கமுகன் அங்கிருந்து போய்விட்டான். இதனிடையே முருகப்பெருமான் படைகளுடன் வீரமகேந்திரபட்டணத்திற்கு கிளம்பினார். சூரபத்மனை அழித்தே தீருவது என்ற முடிவில் இருந்த அவர், கடல் கடந்து அவ்வூருக்குள் செல்ல வேண்டியிருப்பதை அறிந்தார். முருகன் தண்ணீரில் கால வைத்தாரோ என்னவோ, கடலரசன் பணிந்தான். தண்ணீர் அங்கே வற்றிப் போய்விட்டது. அதன் வழியே படைகள் வீரமகேந்திரபட்டணத்தை ஒட்டிய இடத்துக்கு சென்று விட்டன.


விஸ்வகர்மாவை அழைத்த முருகன், அங்கே நானும் படைகளும் தங்குவதற்கு ஒரு பட்டணத்தை அமைக்க உத்தரவிட்டார். கணநேரத்தில் விஸ்வகர்மா ஒரு பட்டணத்தை அமைத்து விட்டார். அவ்வூருக்கு கந்தமாதனர் என பெயர் சூட்டப்பட்டது. முழுக்க முழுக்க தங்கத்தால் கட்டப்பட்ட அந்நகரம் ஜொலித்தது. படைகள் அங்கிருந்த வீடுகளில் சுகமாகத் தங்கினர். முருகப்பெருமான் கடல்கடந்து தன் பட்டணத்தருகே முகாமிட்டிருப்பதை தூதுவர்கள் மூலம் சூரபத்மன் அறிந்தான். கடலரசனான சமுத்திரராஜனை அழைத்தான். ஏய் சமுத்திரராஜா ! என்னைக் கேளாமல் எப்படி முருகனின் படைகளுக்கு வழிவிட்டாய். உன்னைத் தொலைத்து விடுகிறேன், என்றான். நடுநடுங்கிய சமுத்திரராஜன் மகாசூரரே ! நான் என்ன செய்வேன் ! முருகப்பெருமானும், அவரது பூதப்படைகளும் உள்ளே இறங்கியதுமே நான் சேறும் சகதியுமாகி விட்டேன். அவரது வேலாயுதம் சிந்திய ஒளியில் வற்றிப் போய் தூசியும் துகளுமாகி விட்டேன். மணல் மட்டுமே மிஞ்சியது. அதன்வழியே அவர்கள் நடந்து சென்று விட்டனர். நான் மீண்டும் குளிர்ந்த திரவநிலை அடைவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. என்னை மன்னித்து விடுங்கள் மகாபிரபு என்று சொன்னான். சூரன் அவனை விரட்டிவிட்டு, போருக்கான ஆயத்தத்தில் இறங்கினான். மகன் பானுகோபனை அழைத்து, அந்த முருகனை கட்டி இழுத்து வா. அசுரகுல பெருமையைக் காப்பாற்று, என உத்தரவிட்டான். பானுகோபன் ஆர்ப்பரித்து எழுந்தான். பலலட்சம் படை வீரர்களை திரட்டிக் கொண்டு முருகன் தங்கியிருக்கும் இடம் வந்தான். முருகப்பெருமான் வீரபாகுவை அழைத்து, அந்த பானுகோபனைக் கொல்வது உன் வேலை, என உத்தரவிட்டார். வீரபாகுவுக்கோ மகிழ்ச்சி தாங்கவில்லை. முருகன் இட்ட கட்டளையில் வெற்றிபெற பல்வேறு வீயூகங்களை வகுத்து பானுகோபனுடன் போராடினான்.


இருவருமே தீரர்கள் என்பதால் ஒருவர் மாறி ஒருவர் மயக்கநிலைக்குச் சென்று மீளுமளவு போராடினர். எத்தனை அஸ்திரங்களை மாறி மாறி எய்தாலும், அவர்களால் ஏதும் செய்ய முடிய வில்லை. கடைசியாக தன்னிடமிருந்த மோகாஸ்திரத்தை பானுகோபன் எய்தான். இது எப்பேர்ப்பட்டவரையும் கட்டி போட்டுவிடும். அவன் எதிர்பார்த்தபடியே வீரபாகுவும், பூதப்படைகளும் அந்த அஸ்திரத்துக்கு கட்டுப்பட்டனர். மயங்கிக் கிடந்த அவர்கள் மீது பாணங்களை எய்தான் பானுகோபன். ரத்த வெள்ளத்தில் பலர் மடிந்தனர். வீரபாகு போன்றவர்கள் எழ முடியாமல் மயங்கி விட்டனர். கருணைக்கடலான முருகப்பெருமான் இந்தக் காட்சியைக் கண்டார். தன்னிடமிருந்த அமோகாஸ்திரத்தை பானுகோபன் மீது எய்தார். அது மோகாஸ்திரத்தை அடித்து நொறுக்கியது. மோகாஸ்திரம் சக்தி இழந்ததும் மயங்கிக் கிடந்த பூதப்படைகள் எழுந்தன. இது முருகனின் கருணையால் நடந்தது என்பதையறிந்து அவரை போற்றிப் புகழ்ந்தனர். பின்னர் ஆக்ரோஷமாக சண்டையிட்டனர். வீரபாகு தன்னிடமிருந்த பாசுபதாஸ்திரத்தை எடுத்தான். பானுகோபன் மீது எய்யத் தயாரானான். இந்த அஸ்திரத்தை தடுக்கும் அஸ்திரத்தை பானுகோபன் கொண்டுவரவில்லை. அவனுக்கு என்ன செய்வதென தெரியவில்லை. பாசுபதாஸ்திரம் தன் மீது ஏவப்பட்டால், உயிர் போவது உறுதி என்பது தெரிந்து விட்டது. போரில் இருந்து பின் வாங்கினான் தேரை திருப்பினான். அரண்மனையை நோக்கி சென்றான். அவனை அவமானம் பிடுங்கித் தின்றது. மீண்டும் போர்க்களம் போவேன். அந்த வீரபாகுவை ஒரு நாழிகை (24 நிமிடம்) நேரத்தில் கொல்வேன் இல்லாவிட்டால், அக்னி வளர்த்து அதில் விழுந்து உயிரை விடுவேன், என்று சபதம் செய்தான். அந்த சபதம் அசுரகுலத்தை உலுக்கியது.

தொடரும்..🙏💐


கருத்துகள் இல்லை: