ஹரி வியாசர்
வடமதுரை திருத்தலத்தில் ஹரிபக்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவரது நா எப்பொழுதும் ஹரிசரணம் என்று உச்சரித்துக் கொண்டே இருக்கும். இதனால் இவரை ஹரி வியாசர் என்று அழைத்தனர். ஒரு சமயம் இவர் பூரி ஜெகந்நாதப் பெருமான் தலத்திற்கு யாத்திரையாகப் புறப்பட்டார். வழியிலே ஓர் அழகிய வனத்தைக் கண்டார். அந்த வனத்தையடுத்து ஒரு சிற்றாறு ஓடியது. அதன் கரையிலிருந்த பிரமாண்டமான கோயிலில் புகுந்தார். புகுந்த உடனேயே அது காளிகோயில் என்பது புலனாயிற்று. அங்கே ஒரு குடியானவன் ஆடு ஒன்றை பலியிட்டுக் கொண்டிருந்தான். அதன் பரிதாபகரமான அலறல், அந்தக் கோயில் முழுமையும் எதிரொலித்தது. இதைப் பார்த்ததும், ஹரி வியாசர், சீ, சீ ! இதென்ன பேதமை ? என்று கோயிலை விட்டு வெளியே வந்தார். காளிதேவிக்கு இவர் வருத்தத்துடன் செல்வது தெரிந்தது. பரமபாகவதரான ஓர் அந்தணர் பசியோடு தனது இருப்பிடம் வந்து அருவருப்புடன் எழுந்து செல்வது பழிக்கிடமாயிற்றே, என்று நினைத்தவளாய், தன் உருவுடன் அவரை வழிமறித்து, பக்தரே ! நீர் இவ்விதம் பசியோடு செல்வது சரியன்று. உச்சிக்காலம் முடிந்ததும் அமுது உண்டு செல்லலாம் என்றாள். ஹரி வியாசர், அம்மணி ! தங்களது கோயிலில் ஜீவிப்பிராணிகள் வதை செய்யப்படுவதை தாங்கள் ஏற்று மகிழ்கிறீர்கள். ஆகவே, அந்தக் கொலைக்களத்திலே படைக்கும் நிவேதனம் தங்களுக்கு உகந்ததாக இருந்தாலும் என்மனம் ஒப்புக்கொள்ளாது என்றார். தேவி மிகவும் கனிவுடன் கூடிய குரலில், இவர்கள் பலியை ஏற்கிறேன் என்பது தவறு. நாம் விரும்பவே இல்லை. இவர்கள் தங்களது நாவின் ஆசையைத் தீர்த்துக் கொள்ளவே இவ்வாறு செய்கின்றனர் என்றாள்.
நீங்கள் விரும்பவில்லையானால், அவர்கள் செய்வதை ஏன் தடுக்கவில்லை ? தடுக்காமல் பார்த்திருப்பதும், ஏற்று மகிழ்வதும் ஒன்றுதானே ! நீங்கள் விரும்பியே தான் இந்த உயிர்ப்பலி நடக்கிறது. நான் இங்கே உண்ணமுடியாது என்றார் ஹரிவியாசர். தேவி மீண்டும் புன்முறுவலுடன், பக்தா ! மக்களுக்கு அறிவைக் கொடுத்து, நன்மை தீமைகளைத் தெரிந்து நடக்க வழியும் வகுத்துக் கொடுத்தோம். அவர்கள் அதைத் தவறான வழியிலே பயன்படுத்தி நரகிற்கு ஆளாகின்றனர். அறிவைக் கொடுப்பதும், அதை நல்ல முறையிலே பயன்படுத்துபவர்களுக்கு அருள் செய்வதும், தவறான வழியிலே செல்ல வேண்டாமென்று போதிப்பதும் உன் போன்ற அறிவாளர்களின் கடமை, பலியை நிறுத்த நீயே முயற்சி செய் என்றாள். உயிர்ப்பலி நாடு முழுவதும் உங்கள் பெயரால் இடப்படுகிறது. இதை நிறுத்துவது என்பது பெரிய செயல். என்றாலும், நீங்களே ஏன் இதை ஏற்காமல் மறுக்கக்கூடாது ? என்றார். அதற்கு தேவி, இனி இந்தக் கோயிலில் பலியிடாமல் செய்துவிடுகிறேன் என்று சொல்லி, அரசனது கனவில் தோன்றி, இனி இம்மாதிரி உயிர்ப்பலி இடுதல் வேண்டாம். நான் இதை ஏற்கவில்லை என்று கூற, அன்று முதல் கோயிலிலே உயிர்ப்பலி நின்றது. இதன்பின் அரசன், தானே கோயிலுக்கு சென்று பால் பொங்கலிட்டு நிவேதனம் செய்தான். அரசனே பலிநிறுத்தம் செய்ததும், தேவியே மனமுவந்து தன் விருப்பு வெறுப்புகளைத் தெரிவித்ததும் கண்டு ஹரிவியாசர் மேலும் சில நாட்கள் அந்த ஊரிலும், பக்கத்து ஊர்களுக்கும் சென்று கொல்லாமை பற்றியும், இறைவனுக்கு உகந்த பூசனை எது என்பதைப்பற்றி விளக்கியும் தன் யாத்திரையை தொடங்கினார். இப்படி ஹரிவியாசர் என்ற விஷ்ணு பக்தரின் வரவால் நாட்டில் உயிர்பலி குறைந்தது கண்டு அறிவாளிகள் பேரானந்தம் கொண்டனர். பாமர மக்கள் இது காலங்காலமாக இருந்து வரும் வழக்கம் நிறுத்தினால் தேவி கோபித்து எரித்து விடுவாள் என்றும் அங்கலாய்த்தனர். நாட்கள் செல்ல செல்ல அந்த பகுதியில் புலால் உண்பது குறைந்து விட்டது. ஹரி வியாசரின் திறமையை அனைவரும் பாராட்டினர்.
JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
திங்கள், 14 டிசம்பர், 2020
ஹரி வியாசர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக