திங்கள், 16 நவம்பர், 2020

கந்தசஷ்டி விரதமும் அதன் சிறப்பும்

கந்தசஷ்டி விரதமும் அதன் சிறப்பும்
 
முருகன் துணை

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.
"அமரர் இடர் தீர அமரம் புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி"

சஷ்டி விரதம் ஐப்பசி மாத தீபாவளி அமாவாசையின் பின் அதாவது வளர்பிறை பிரதமை முதல் ஆரம்பித்து, ஆறாம்/ஐந்தாம் நாளான சஷ்டி திதி வரையான ஆறு தினங்களும் நோற்கப்படும் முருகப்பெருமானுடைய சிறப்பான நோன்பாகும்.

அறியாமை என்னும் அஞ்ஞான இருளை அகற்றி, மெய்ஞானமாகி மிளிர்கின்ற பரம்பொருளின் முக்திப் பேரருளை அடைவதற்காகச் சைவப் பெருமக்களால் அனுஷ்டிக்கப்படும் விரதங்களுள் தலையாயது கந்தசஷ்டி விரதம். முருகனுக்குரிய விரதங்கள் மூன்று. அவையாவன வெள்ளிக்கிழமை (வாரம்) விரதம், கார்த்திகை (நட்சத்திரம்) விரதம், கந்த சஷ்டி (திதி) விரதம் என்பனவாம். வல்வினை நீக்கி, வரும் வினை போக்கி, செல்வமும் செல்வாக்கும் தந்து; அழகும், அறிவும் தந்திடும் வள்ளி மணாளனை, வடிவேலனை வழிபடும் விரதங்களில் மிகவும் சிறந்தது இந்தக் கந்தசஷ்டி விரதமாகும்.

 

அனாதியாகவே "செம்பில் களிம்பு போன்று" ஆன்மாக்கள் ஆணவமலத்தால் பீடிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஆன்மாக்கள் இப்பூவுலகில் பிறந்ததன் நோக்கம் சகல இன்பங்களையும் அறவழியில் அனுபவித்து, இறுதியில் பிறப்பு, இறப்பு அற்ற மோட்ச நிலையில் இறைவனுடன் இரண்டறக் கலந்தற்கேயாகும். எனவே முருகப் பெருமானை வழிபடுவதன் மூலம் தமது கன்ம வினைகளை மிக விரைவில் அறுத்து ஆன்மாக்களின் இறுதி இலட்சியமாகிய மோட்சத்தினை இலகுவில் அடையலாம் என்பது ஐதீகம்.

ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும் மலங்களை மட்டுமன்றி ஆறுவகை எதிரிகளான காமம், கோபம், பேராசை, செருக்கு, மயக்கம், தற்பெருமை ஆகிய வகைகளை அழித்து முற்றுணர்வு, வரம்பிலாற்றல், தன் வயமுடைமை, வரம்பின்மை, இயற்கையுணர்வு, பேரருள் ஆகிய தேவ குணங்களை நிலை நாட்டுவதால் "ஒப்பரும் விரதம்" எனஸ்கந்தஷஷ்டி விரத மகிமை பற்றிக் கந்தபுராணம் சிறப்பாகப் புகழ்ந்து பேசுகின்றது.

கந்தசஷ்டி விரதம்; எல்லா முருகன் ஆலயங்களிலும் அதிவிஷேச அபிஷேக ஆராதனைகள், பூசைகள் நிறைந்த பக்தியான விரதமாக அனுஸ்டிக்கப் பெறுவதுடன் சூரன்போர் காட்சியும் வெகுசிறப்பாக நிகழ்தப்பெறுகின்றன.

முருகன் ஆலயத்தில் பக்தர்கள் உண்ணா நோன்பிருந்து; பக்திசிரத்தையுடன் முருகனை நினைந்துருகி வழிபட்டு, தியானத்திலும், பஜனை செய்வதிலும், கந்தரனுபூதி, கந்தசஷ்டிகவசம், கந்தரலங்காரம் ஓதுவதிலும், கந்தபுராணம்-பயன் கேட்பதிலும் தம்மை ஈடுபடுத்தி முருகனருள் வேண்டி நிற்பர்.

அத்துடன்; விரத முடிவு தினமான சஷ்டிதினம் (சூரன்போரில்) முருகன் வீசும் வேல் குறிதவறாது சூரனின் சகோதரர்களான; யானை முகம் கொண்ட தாரகன், சிங்க முகம் கொண்ட சிங்கன் கழுத்தில் வீழ்ந்து தலைகள் சாய்வதும்; பல மாயைகள் செய்து போர்புரிந்து கடைசியாக, நடுக்கடலில் மாமரமாய் நின்ற சூரன்-பதுமனை சங்காரம் "சங்கரன் மகன் சட்டியில் மாவறுப்பதை" (சங்கரன் புதல்வராகிய முருகப் பெருமான் சஷ்டித் திதியிலே மாமரமாகதோன்றிய சூரனை, இரண்டாக பிளந்து சாங்காரம் செய்யும் காட்சியை கண்டு) தரிசித்து தம் வினை போக்க பக்தர்கள் காதலாகி கசிந்துருகி நிற்கும் காட்சியும், கண்கொள்ளாக் காட்சிகளாகும்.

கொடுங்கோலாட்சி செலுத்திய ஆணவத்தின் வடிவமாகிய சூரனையும், கன்மத்தின் வடிவமாகிய சிங்கனையும், மாயா மலத்தின் வடிவமாகிய தாரகனையும், (ஆணவம், கன்மம், மாயை என்ற) அசுர சக்திகளையெல்லாம் அழித்து, நீங்காத சக்தியை கலியுக வரதனான முருகப் பெருமான் நிலை நாட்டிய உன்னத நாளே கந்த சஷ்டியாகும்.

கந்தசஷ்டி விரத நாட்களில், ஆன்மா மும்மலங்களையும் நீக்குவதற்குரிய பக்குவமான மனதுடன் தனித்து, விழித்து, பசித்துஇருக்க வேண்டும். உணவையும் உறக்கத்தையும் தவிர்த்து, தனித்திருந்து செய்யும் தவமே கந்தசஷ்டி விரதமாகும். உணர்வுகளை அடக்கி உள்ளத்தை ஒருநிலைப்படுத்தி கந்தப் பெருமானின் பெருமை பேசி இம்மைக்கும் மறுமைக்கும் சிறந்த வழியமைப்பதே இந்த விரதத்தின் பெறுபேறாக அமைகிறது.

கந்தசஷ்டி விரதத்தை முறையாக அனுஷ்டிப் போர்க்கு இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூன்று சக்திகளுக்கும் தலைவனான முருகப்பெருமானது பேரருள் கிட்டும். சஷ்டியன்று கந்தனுக்கு அபிஷேகம் செய்த பாலைப் பருகுவோர்க்கு புத்திர பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்!.

சகல செல்வங்களையும், சுகபோகங்களையும் தரவல்ல இந்த விரதம் புத்திரலாபத்துக்குரிய சிறப்பான விரதமுமாகும்."சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்பதற்கேற்ப; ஸ்கந்தஷஷ்டியில் விரதமிருந்தால் ”அகப் பையாகிய"கருப்பையில்" கரு உண்டாகும் என்பதும்; கந்தர் சஷ்டி விரதத்தை முறையாகக் கைக்கொள்வதால் அகப்"பை" எனும்"உள்ளத்தில்" நல்ல எண்ணங்களும் பக்தி எனும் பாதையால் எழுந்த அமைதியும் அமையும் என்பதும் மறை பொருள்களாகும்.

அறிவு வளர்ச்சிக்கு விஞ்ஞானம் உதவுவதைப் போன்று மன வளர்ச்சிக்கு சமயம் அடிகோலுகின்றது. இறைவன் ஒருவன், அவன் மக்களின் தந்தை என்றெல்லாம் போதிப்பதன் மூலம் அன்பு, சகோதரத்துவம் போன்ற ஜீவ ஊற்றுகளை அருளி மக்களின் வாழ்வு நலம் பெறச் சமயம் உதவுகின்றது. நல்லவர்களைப் பாதுகாக்கவும் தீயவர்களை அடக்கவும் தர்மத்தை நிலை நாட்டவும் யுகந்தோறும் இறைவன் அவதாரம் செய்தருளுகின்றான்.

தனு, கரண, புவன, போகங்கள் அனைத்தையும் படைத்தலும், காத்தலும், அழித்தலும் இறைவனது இடையறாத திருவிளையாடல்கள். இறைவனை உணர்ந்து அவனைச் சரணடைந்தால் அழிவில்லாத பேரின்பம் அடையலாம் என்பது சமயங்கள் காட்டும் பேருண்மை. இறைவனது திவ்ய அவதாரத்தையும் செயலையும் யாரொருவர் உள்ளபடி அறிகின்றார்களோ அவர்கள் மீண்டும் பிறவாமல் இறைவனையே அடைந்து விடுகிறார்கள் என்று கீதையில் கிருஷ்ணபகவான் கூறியுள்ளார்.

தெய்வ அவதாரங்களில் தீய சக்திகளை அடக்கி நல்லவர்களைக் காத்தார்கள் என்றால் இச்செயல்கள் தீமைகளை நீக்கி நன்மைகளையே செய்து மக்கள் உய்ய வேண்டும் என்று போதிப்பதற்கே நிகழ்ந்தன என உணர்ந்து பக்தியுடன் வாழ்ந்து இகபர நலன்களை அடைய முயலவேண்டும். இத்தகைய அவதார இரகசியத்தை விளக்கி மக்கள் உய்வதற்கு உகந்த பெருவழிகளை விளக்கிக் காட்டுவதே ஆறுமுகப்பெருமானின் அவதாரம்.

வசிட்ட மாமுனிவர் முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு சஷ்டி விரத மகிமையையும் வரலாற்றையும் விதிமுறைகளையும் உபதேசித்த பெருமையையுடையது. அரசர்கள், தேவர்கள், முனிவர்கள் பலரும் இந்த விரதம் அனுஷ்டித்து வேண்டிய வரங்களைப் பெற்றதோடு, இம்மை இன்பம், மறுமை இன்பம் ஆகியவற்றை பெற்றனர்.


கருத்துகள் இல்லை: