திங்கள், 16 நவம்பர், 2020

ஆழ்வார்களும் அவதாரமும் 8.திருமங்கையாழ்வார்

ஆழ்வார்களும் அவதாரமும்
8.திருமங்கையாழ்வார்

பிறந்த இடம் : திருக்குறையலூர் ( நாகப்பட்டினம் மாவட்டமசீர்காழி அருகில்)
தந்தை : ஆலிநாடுடையார்
தாய் : வல்லித்திரு அம்மையார்
பிறந்த காலம் : எட்டாம் நூற்றாண்டு நளஆண்டு கார்த்திகை மாதம்
நட்சத்திரம் : கார்த்திகை க்ருத்திகை (பவுர்ணமி திதி)
கிழமை : வியாழன்
எழுதிய நூல் : பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருஎழுகூற்றிருக்கை,  பெரிய திருமடல், சிறிய   திருமடல்.
பாடிய பாடல் : 1253
சிறப்பு : திருமாலின் சார்ங்கம் என்ற வில்லின் அம்சமாக பிறந்தவர், மன்னனாகப் பிறந்து பக்தி மார்க்கத்தில் திளைத்தவர்.
பிற பெயர்கள் : ஆலிநாடன், கலியன், நாலுகவிப்பெருமாள், அருள்மாரி, மங்கையர்கோன், பரகாலன்

பெற்றோர்கள் இவருக்கு நீலன் என்று பெயரிட்டனர். இவரது வீரத்தில் மகிழ்ந்த மன்னன் நீலனை தன் படைத்தளபதி ஆக்கியதுடன் திருவாலி நாட்டின் மன்னனாகவும் ஆக்கினான். அமங்கலை என்ற தேலோக கன்னி கபில முனிவரின் சாபத்தால் பூமியில் குமுதவல்லி நாச்சியார் என்ற பெயரில் வளர்ந்து வந்தாள். இவளது புகழையும் அறிவையும் கேள்விப்பட்ட திருமங்கை ஆழ்வார் இவளை திருமணம் செய்ய விரும்பினார். விஷ்ணுவின் பக்தையான குமுதவல்லியோ தன்னை திருமணம் செய்ய வேண்டுமானால் தினமும் ஆயிரத்தெட்டு வைணவர்களுக்கு அமுது படைக்க வேண்டும் என்ற நிபந்தனை விதித்தாள். நிபந்தனையின் பேரில் அமுது படைத்து படைத்து அரண்மனையின் நிதி நிலை சரிந்தது. வழக்கமாக சோழமன்னனுக்கு கப்பம் கேட்டு வந்த ஏவலர்களிடம் தன் நிலையை கூறி அனுப்பி விட்டார். கோபமடைந்த மன்னன் அமைச்சர்களுடன் தன் படையை அனுப்பி ஆழ்வாரை பிடித்து வரும்படி கூறினான். ஆனால் அனைவரும் விரட்டியடிக்கப்பட்டனர். எனவே மன்னனே பெரும் படையுடன் சென்றான். ஆனாலும் ஆழ்வார் அவர்களை புறமுதுகிட்டு ஓடச்செய்தார். ஆழ்வாரின் வீரத்தில் மகிழ்ந்த மன்னன் அவரிடம் நேரில் சென்று பேச்சுப்படி கப்பம் கட்டுவதே சிறந்தது. அதுவரை என் கைதியாக கோயிலில் தங்கியிரு என்றார். மன்னன் கூறியபடி ஆழ்வாரும் மூன்று நாட்கள் எதுவும் சாப்பிடாமல் கோயிலில் தங்கியிருந்தார். பசி மயக்கத்தில் தூங்கிய ஆழ்வாரின் கனவில் தோன்றிய காஞ்சிபுரத்து பெருமாள். தன் சேவைக்கு வந்தால் அவரது கடன் தீர்க்கும் வகையில் பொருளுதவி செய்வதாக கூறினார். மன்னனின் அனுமதி பெற்று படையினருடன் காஞ்சிபுரம் சென்ற ஆழ்வார். பெருமாள் கூறிய இடத்தில் தோண்டவும் பெரும் புதையல் இருந்தது. அதை எடுத்து மன்னனுக்குரிய கடனை அடைத்து விட்டு மீதியை அமுது படைக்க வைத்துக்கொண்டார். இதையறிந்த மன்னன் ஆழ்வாரைப் பணிந்து பணத்தை திருப்பிக்கொடுத்து அமுது படைக்கவைத்துக் கொள்ள கூறினார். இந்தப்பணமும் தீர்ந்து போகவே ஆழ்வார் தன் அமைச்சர்களுடன் பணக்காரர்களிடம் கொள்ளையடித்து அமுதுபடைத்து வந்தார். ஒரு முறை நாராயணன் லட்சுமி தேவியுடன் மணக்கோலத்தில் வந்தார். ஆழ்வார் தன் படையினருடன் அவர்களை மிரட்டி அவர்களது நகைகளை பெற்றுக்கொண்டார். ஆனால் தன் கால் விரல் மோதிரத்தை மட்டும் நாராயணன் கழட்டவில்லை. ஆழ்வாரும் மோதிரத்தை கழட்டும் படி கூறியதற்கு என்னால் முடியவில்லை முடிந்தால் நீயே கழட்டிக்கொள் என்றார் நாராயணன். அதேபோல் ஆழ்வாரும் குனிந்து தன் பற்களால் விரலைக்கடித்து மோதிரத்தை இழுத்தார். அப்போது நாராயணன் ஆழ்வாரின் காதுகளில் நாராயண மந்திரத்தை உபதேசித்தார். வந்திருப்பது நாராயணன் என்பதை அறிந்த ஆழ்வார் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டார். ஆழ்வார் திருடனாக இருந்தாலும் தன் உணவுக்கு கூட அதை எடுக்காமல் யாசித்து சாப்பிட்டார். பெருமாளின் 108 திருப்பதிகளில் திருமங்கை ஆழ்வார் தனியாக சென்று 46 கோயில்களையும் மற்ற ஆழ்வார்களுடன் சேர்ந்து 36 கோயில்களையும் என மொத்தம் 82 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.  12 ஆழ்வார்களில் இவர் தான் அதிக பெருமாள் திருத்தலங்களை மங்களாசாசனம் செய்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது வரலாற்றில் ஒரு சிறப்பு என்னவென்றால் இவர் மொத்தம் 82 பெருமாள் கோயில்களை மங்களாசாசனம் செய்திருந்தாலும் தான் பிறந்த சொந்த ஊரான திருக்குறையலூரில் உள்ள பெருமாள் கோயிலை மங்களாசாசனம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை: