கடவுளைத் தேடி….
~~~~~~~~~~~~~
ஷவரில் தலை அலசி குளித்த உடம்பு, கங்கையில் இறங்கி கும்மாளம் போட்டது.
பத்து பாக்கெட்டுகள் பிஸ்கெட் வாங்கி அதை சாதுக்களுக்கு கொடுக்கலாம் என்ற எண்ணத்தோடு போனேன். சாதுக்கள் யாரும் பிஸ்கெட்டை லட்சியம் செய்யவில்லை.
சிறுவர்கள்தான் வாங்கிக்கொண்டு போனார்கள். அதில் ஒரு சிறுவன் பிஸ்கெட்டுகளைப் பிரித்து நாய்களுக்கு வினியோகித்தான். தானம் யாருக்கு செய்தால் என்ன. எல்லாமும் சாதுக்களே என்பதுபோல உணர்வு வந்தது.
கங்கைக் கரையிலேயே வாழ்ந்து, அங்கேயே இறந்துபோக ஆசைப்பட்டு, அவ்விதம் இறந்தவர்களை தகனம் செய்யும் இடம் பற்றி கேள்விப்பட்டிருந்தேன்.
அங்கு போகும் ஆசை வந்தது.....
கருப்பு வெள்ளைப் புகை. பிண நாற்றம். பல்வேறு சிதைகள். அங்கு இரண்டு தகதகத்துக் கொண்டிருந்தன. ஒன்று கனன்றுகொண்டிருந்தது. மற்ற மூன்றும் அமைதியாகி அடங்கிக் கிடந்தது. அதிலிருந்து அதிகம் புகை வந்தது.
தெருவின் விளிம்பிலிருந்து பிணங்கள் எரிவதைப் பார்க்கமுடிந்தது. விறகுக் கட்டைகள் மாட்டு வண்டியில் வந்து இறங்கின. கைமாற்றிக் கொண்டுபோய் அடுக்கி வைத்தார்கள்.
ஏதோ ஒரு புதிய பிணம் வர, இறக்கச் சொல்லி தூக்கி வந்தவரிடம் காசு வாங்கினார்கள். பிறகு சிதை தயாரித்தார்கள். வயதான ஆணின் பிணம் சிதைமீது வைக்கப்பட்டது. அதன்மீதும் விறகுகள் வைக்கப்பட்டது.
“ராம் நாம் சத்யஹ‘ என்பது இடையறாத வாக்கியமாக இருந்தது. எது விசாரிக்கப்பட முடியாத ஒரு விஷயமோ, எது விளங்காத ஒரு விஷயமோ, எது நம்மை ஆளுமை செய்கிறதோ, எந்த சக்தி நம்மீது படர்ந்து நம்மை இயங்க வைக்கிறதோ அதுவே சத்தியம்.
நானும் இறங்கி அந்த அடுக்கிய சிதைமீது வைத்திருந்த பிணத்தை உற்றுப் பார்த்து, அதன் காலைத் தடவி தலையில் வைத்துக் கொண்டு “போய் வாரும்’ என்று சொல்லி, “ராம் நாம் சத்யஹ, ராம் நாம் சத்யஹ, ராம் நாம் சத்யஹ‘ என்று அரற்றினேன்.
காலெல்லாம் சுடுகாட்டுப் புழுதி. எங்கோ உட்கார வேட்டியிலும் கருப்பு. பிணவாடை பழகிவிட்டது. முகத்திலும் புகை படிந்திருக்க வேண்டும். கங்கையில் குளித்த தலைமுடி சடையாகத்தான் இருந்தது. பரட்டையாகத்தான் கிடந்தது.
ஆண் நண்பரின் சிதைக்கு தீ வைக்கப்பட்டது. நான் கைகூப்பி வணங்கினேன்.
கண்கள் கலங்கின. எனக்கென்னவோ யாருக்காவது சமஸ்காரம் செய்யவேண் டும் என்ற எண்ணம் இருந்தது.
அரைமணியில் இன்னொரு சடலம் வந்தது. அது பெண். எண்பது வயதிற்குமேல் இருக்கும். மழித்த தலை. பொக்கை வாய். சுருங்கி கோணலான கால்கள். சுருக்கமான தோல் உடம்பு. வற்றிய முலை. மார்பெலும்பு. நெற்றியில் சந்தனக் கீற்று. வட இந்திய விதவையாக இருக்கக்கூடும்.
அந்த சிதை உரிமையாளருக்கு கொஞ்சம் ஆங்கிலம் புரிந்தது. “சமஸ்காரம் நான் செய்கிறேன்’ என்று கேட்டதற்கு அவன் நான்கு விரல்களை நீட்டினான்.
எனக்குப் புரியவில்லை. விரலை சுண்டிக் காட்டினான். அந்த சமஸ்காரம் செய்வதற்கு நான் காசு கொடுக்கவேண்டும் என்று சொல்ல, இடுப்பு பெல்ட்டிலிருந்து நாநூறு ரூபாய் காசு எடுத்து அவனுக்குக் கொடுத்தேன். பையை ஓரம் வைத்தேன்.
ஒரு அந்தணர் வந்தார். அவருக்கு அவன் இருநூறு ரூபாய் கொடுத்தான். அவர் என் கையில் கண்டங்கத்திரி நூலைக் கட்டினார். பிரேதத்தின் நோய் என்னைத் தாக்காமல் இருப்பதற்காக அப்படி செய்வது வழக்கம் என்பது எனக்குத் தெரியும்.
நான் தர்ப்பை வளையத்தை கையில் தரித்துக்கொண்டேன். தர்ப்பைப் புல்லை இடுக்கிக்கொண்டேன். உட்கார்ந்து காலின்கீழ் தர்ப்பையை போட்டுக்கொண்டேன்.
அவர் சொன்ன மந்திரங்கள் எனக்குப் புரிந்தன. அந்த மந்திரங்கள் ஒரு நாவலுக்காக நான் திரும்பத் திரும்ப படித்து மனதில் ஏற்றிக்கொண்டவை.
ஒவ்வொரு சொல்லுக்கும் என்ன அர்த்தம் என்று தெளிவாகத் தெரியும். இதுபற்றி பேசியும் நான் அறிந்திருக்கிறேன். என் தந்தை இறந்தபோது இந்த மந்திரங்களைச் சொல்லி, அர்த்தம் கேட்டு மனதில் பதியவைத்தேன். இதுபற்றி எழுதியும் இருக்கிறேன்.
எனவே இது அர்த்தமற்ற ஒரு விஷயமாக எனக்கில்லை. “ஏஷான்ன மாதா ந பிதா ந பந்துகு ந அன்னிய கோத்ரக'' என்ற மந்திரத்தின் அர்த்தம் எனக்குத் தெரியும்.....
“இந்த பிரேதமானது எனக்கு தாயாக, தந்தையாக, உறவினராக, என் வர்க்கத்தினராக இல்லாதுபோனாலும், இதன் மனக்கேதம் தீர்க்கும் பொருட்டு திருப்தியத திருப்தியத திருப்தியத’' என்று கட்டை விரல் வழியே மறித்து நீர் வார்த்தேன்.
நான் சொல்வதைக் கேட்டு அந்த அந்தணர் 'அட!' என்று வியந்தார். தமிழர்கள் கெட்டிக்காரர்கள் என்று தன் நெற்றியை சுட்டிக்காட்டினார். நான் நீர்க்குடத்தோடு அந்த அம்மையாரை வலம் வந்தேன். பானையை உடைத்து தரையில் வீசினேன்.
வாயில் அரிசி போட்டேன். முன் நெற்றியை அவர் பாதத்தில் வைத்துக்கொண்டேன்.
“அம்மா, நீ எந்த ஜென்மத்தில் என் தாயோ, எந்த ஜென்மத்தில் என் சகோதரியோ எனக்குத் தெரியவில்லை. என் தாயே, உன் உள்ளம் குளிர மந்திர ஜெபம் சொல்லி, சிவ நாமம் சொல்லி, விஷ்ணு நாமம் சொல்லி உன்னை கரையேற்றுகின்றேன்’ என்று மனதில் நினைத்துக்கொண்டேன்.
அந்த பிணம் வைக்கின்ற ஆள், “இறந்தவர்கள் இங்கு உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருப்பார்கள்’ என்று சொன்னான்.
எல்லாரும் என் முகத்தையே பார்த்தார்கள்.
“இடரினும் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உன் கழல் தொழுதெழுவேன் கடலினில் அமுதொடு கலந்த நஞ்சை மிடரினுள் அடக்கிய வேதியனே’' என்று பாட, என்னை அறியாமல் என் கண்களில் நீர் வழிந்தது.
“தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்களென்றும் நோயே பட்டொழிந்தேன் உன்னை காண்பதோர் ஆசையினால் வேயே பூம்பொழில் சூழ் கனமாமலை வேங்கடவா நாயேன் வந்தடைந்தேன் நல்கி ஆளென்னை கொண்டருளே’' என்று அந்த அம்மையாரின் சார்பாக நான் பாட, அங்குள்ளவர்கள் தலையை அசைத்து ரசித்தார்கள்.
அவர்களுக்கு அர்த்தம் புரியவில்லை. ஆனால் பாட்டின் இனிமை புரிந்தது. நெய்யில் தோய்த்து பற்றி எரியும் கொள்ளிக்கட்டையை அந்த சிதைக்கு அடியில் சொருகினேன். சுற்றிலும் நெய் வார்த்தேன்.
“பற்றே ஒன்றுமிலேன் பாவமே செய்து பாவியானேன் மற்றே ஒன்றறியேன் எங்கள் மாயனே மாதவனே’' என்று மனசு அலற பாடினேன்.
“ராம் நாம் சத்யஹ, ராம் நாம் சத்யஹ, ராம் நாம் சத்யஹ‘'.
சிதை பற்றிக்கொண்டது. பச்சென்று மேலே எழுந்தது. உலர்ந்த கட்டைகள், நிறைய நெய், கோடை காற்று. சிதை திகுதிகுத்து எழுந்தது.
''போ. போ போ.'' விரட்டினார்கள்.
நான் மேலேறி, வேறு பக்கம் படியிறங்கி முங்கி முங்கி கங்கை நீரில் குளித்தேன். இரண்டு கைகளிலும் நீர் எடுத்து அந்த அம்மாவின் வாயில் ஊற்றுவதுபோல நீர் வார்த்தேன்.
“சந்தோஷமா?" என்று மனதிற்குள் வினவினேன். “நிம்மதியாகப் போய் வா!" என்று கைகூப்பினேன். ஒரு பித்து நிலையில் கொஞ்சம் பேசினேன்.
“நான் இறக்கும்போது நீ வா. அடுத்த ஜென்மத்தில் ஒரே இடத்தில் பிறப்போம். ஒருவரை ஒருவர் தெரிந்துகொண்டவராய், அறிந்து கொண்டவராய், ஏதோ ஒரு உறவாய் வாழ்வோம். பேசுவோம். சிரிப்போம். இந்த தகனத்தோடு உன் வாழ்க்கை முடிந்துவிடவில்லை. என் இறப்போடு என் வாழ்க்கை முடிந்துவிடாது. இது தொடர்கதை. முன்னம் வினைப்பயன். மாறிமாறி வந்துகொண்டிருக்கும்........
உன் தகனத்தினால் என் வினையின் ஒரு பகுதி அறுந்தது. நான் உன்னை தகனம் செய்ததால் உன் வினையின் ஒரு பகுதி அறுந்தது. எனவே இப்படி வினைகளை அறுத்து அறுத்து எறிந்து, எந்த எதிர்பார்ப்புமின்றி வாழ்ந்து நாம் உன்னதமான இடத்திற்குப் போகலாம்.’'
மனம் செயல்களை செய்யக்கூடாது. மனம் சாட்சியாக இருக்கவேண்டும். எந்த யோசனையும், எந்த திட்டமிடலும், எந்த உந்துதலும் இருக்கக்கூடாது.
உணவு கிடைத்ததா சாப்பிடு. மழை பெய்ததா குளி. செத்தாரைப்போல திரி என்று ஏதேனும் ஒரு ஜென்மத்தில் வாழ்க்கை நடக்கவேண்டும். உந்துதல் அற அற இப்படிப்பட்ட ஒரு ஜென்மம் கிடைக்கும்.
“அய்யா, உமக்கு என்ன பெயர்?.’' “எனக்கா, என்ன பெயர் தெரியவில்லையே....'’ என்று விழிக்கவேண்டும். இந்த நிலை ஒரு கனவா, என் கற்பனையா, ஒரு வெற்று ஆசையா. இப்படி வாழமுடியுமா?.
பெயர் அறுத்துப் போகிறவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். கங்கைக்கரை சாதுக்களெல்லாம் பெயர் அறுத்தவர்கள் அல்ல. இது ஒரு ஸ்திதி. இதிலிருந்து இரண்டு மூன்று ஜென்மங்களுக்குப் பிறகு அவர்கள் பெயர் அறுத்த மனிதர்களாக வாழ்வார்கள்.
எவரும் இல்லாது கங்கைக் கரையில் கிடைத்ததை உண்டு வாழ்வதும் ஒரு அழகான இடம்தான்.
எங்கோ மயிலாப்பூரில் இரண்டு மனைவியரோடு வாழ்ந்து, இங்கே எவருக்கோ தகனம் செய்து கங்கைக் கரையில் உட்கார்ந்து கொண்டிருப்பதும் ஒரு அழகான இடம்தான். இது ஒரு ஜென்மம். இம்மாதிரி பல ஜென்மங்கள் தாண்டித்தான் நான் உன்னத நிலைக்குப் போக முடியும்.
அந்த தகனத்திற்குப் பிறகு நான் பல மணிநேரம் கங்கைக்கரை படியில் உட்கார்ந்திருந்தேன். வேறுவிதமாக நடிக்கிறேனோ என்ற எண்ணத்தை சோதித்துக் கொண்டேன்.
இல்லை என்று புரிந்துகொண்டேன். எங்கோ இருக்கின்ற வீட்டின்மீது பற்றும், இப்பொழுது இந்த இடத்தில் அமர்ந்திருக்கின்ற தனிமையும் வெவ்வேறானவை அல்ல. ஒன்றே. இது ஒரு வேலை. இது ஒரு பயிற்சி. இது ஒரு ஒர்க் ஷாப். இது ஒரு பள்ளிக்கூடம்!
JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
வியாழன், 10 செப்டம்பர், 2020
கடவுளை தேடி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக