புதன், 3 ஜூன், 2020

📕📕📕📕📕📕📕📕📕📕📕

*என் தடைப்பட்ட இமயப் பயணம்*
*பகுதி - 6*
*~~~~~~~~~~~~~~~~~~~~~~~*

     "நேற்று என் சகோதர அதிகாரியும் நானும் மிகுந்த ஆவலுடன் குறிப்பிட்ட அம்மரத்தடிக்கு சென்றோம். அங்கே இருந்த அந்தச் சாது அவரது கையைச் சோதித்துப் பார்க்க எங்களை அனுமதித்தார். அங்கு வடுவோ காயம் பட்ட அடையாளமோ இல்லை!

    "நான் ரிஷிகேசம் வழியாக இமயத்தின் தனிமையை நாடிச் செல்கிறேன்.' அந்தச் சாது எங்களுக்கு ஆசி கூறி உடனே புறப்பட்டார். அவருடைய புனிதத் தன்மையினால் என் வாழ்வு உயர்ந்ததாக உணர்கிறேன்."

    அந்த அதிகாரி பக்தி கலந்த ஆச்சரியத்துடன் கதையை முடித்தார்; அவரது அனுபவம் அவரை வழக்கத்தைவிட அதிகமாக நெகிழ வைத்திருந்தது. ஒரு கம்பீரமான சைகையுடன் அவர் அச்செய்தி வெளியாகி இருந்த பத்திரிக்கைத் துண்டை என்னிடம் கொடுத்தார். பரபரப்பான செய்திகளைத் திரித்துக் கூறும் பத்திரிக்கைகளுக்குரிய பாணியில் (அந்தோ, இந்தியாவில் கூட இந்நிலை இல்லாமலில்லை!) அப்பத்திரிகையின் நிருபர் அச்செய்தியை சற்று மிகைப்படுத்தியே இருந்தார்.சாதுவின் தலையே துண்டிக்கப்பட்டது போல அந்தச் செய்தி வெளியாகி இருந்தது.

    அமரும் நானும் தன்னைத் துன்புறுத்தியவனை,
கிறிஸ்துவைப் போன்று, மன்னிக்கும் தன்மை படைத்த அப்பெரிய யோகியைப் பார்க்க முடியாமல் போய்விட்டதே என்று வருந்தினோம். இந்தியா, சென்ற இரண்டு நூற்றாண்டுகளாகப் பொருட் செல்வத்தில் ஏழையாக இருந்தாலும் அள்ள அள்ளக் குறையாத அருட் செல்வத்தை இன்றும் பெற்றுத்தான் உள்ளது; இந்தப் போலீஸ்காரரைப் போன்று சாதாரண உலக வாழ்க்கையில் ஈடுபட்ட மனிதர்கள் கூட எப்பொழுதாவது ஆன்மிகத்தின் சிகரங்களைச் சந்தித்து விட முடிகிறது.

     அவருடைய அதிசயமான கதையினால் எங்கள் அலுப்பைப் போக்கியதற்கு அந்த அதிகாரிக்கு நன்றி கூறினோம். அவர் எங்களை விட அதிர்ஷ்டசாலி என்பதை அவர் குறிப்பிட்டிருக்கலாம்; எவ்வித முயற்சியும் இன்றியே தெய்வீக ஒளி பெற்ற ஒரு மகானை அவரால் சந்திக்க முடிந்தது; எங்களுடைய தீவிரமான நாட்டம் ஒரு குருவின் திருவடிகளை அடையாமல் வன்மையான ஒரு போலீஸ் நிலையத்தில் முடிந்தது!

   இமயத்திற்கு மிக அருகில் இருந்தும், நாங்கள் பிடிபட்டு விட்டதால், எவ்வளவு தூரத்திலிருந்தோம்; சுதந்திரத்தை நாடும் எனது அவா இரு மடங்காகி விட்டது என்று அமரிடம் கூறினேன்.

    "சந்தர்ப்பம் கிடைத்ததும் நழுவிவிடலாம். நாம் புனிதமான ரிஷிகேசத்திற்கு நடந்தே செல்லலாம்." நான் ஊக்கமூட்டும் வகையில் புன்முறுவல் செய்தேன்.

    ஆனால் பலமான ஆதாரமாயிருந்த எங்கள் பணம் எங்களிடமிருந்து பறிக்கப்பட்டதால் என் தோழன் நம்பிக்கை இழந்தவனாகிவிட்டன்.

     "நாம் இந்த ஆபத்தான காட்டு பிரதேசங்களில் நடக்கத் தொடங்கினால் நாம் மகான்கள் வசிக்கும் இடத்திற்குப் பதிலாக புலிகளின் வயிற்றுக்குள் சென்று முடிவோம்."

     அனந்தாவும் அமரின் சகோதரனும் மூன்று நாட்கள் கழித்து வந்து சேர்ந்தனர். அமர் தன் சகோதரனை பாசம் கலந்த நிம்மதியுடன் வரவேற்றான். நான் சமாதானமடையவில்லை. அனந்தாவிற்கு என்னிடமிருந்து கடுமையான வசைச் சொற்களைத் தவிர வேறெதுவும் கிடைக்கவில்லை.

    "உன் உணர்ச்சியை நான் புரிந்து கொள்கிறேன்," என் அண்ணன் ஆறுதலாக  மொழிந்தான். "நான் உன்னிடம் கேட்பதெல்லாம், நீ என்னுடன் காசிக்கு வந்து ஒரு முனிவரைச் சந்திக்க வேண்டும். பிறகு கல்கத்தாவிற்கு வந்து மிகுந்த துக்கத்தோடு இருக்கும் நம் தந்தையுடன் சில நாட்கள் தங்க வேண்டும். பிறகு நீ இங்கே  உன் குருவைத் தேடுவதை மறுபடி தொடங்கலாம்.

-பரமஹம்ஸ யோகானந்தர்

📕📕📕📕📕📕📕📕📕📕📕

தொடர்ந்து படிப்போமாக🙏

கருத்துகள் இல்லை: