ஞாயிறு, 10 மே, 2020

சதாசிவ பிரம்மேந்திரர் குறித்த வரலாற்றுப் புதிர்கள்

மானஸ சஞ்சர ரே என்ற இனிய எளிய கர்நாடக இசைப் பாடலை நம்மில் பலர் கேட்டிருப்போம். இதனை இயற்றியவர் சதாசிவ பிரம்மேந்திரர் என்ற மகான். காயதி வனமாலி, பிபரே ராமரஸம், ப்ரூஹி முகுந்தேதி, சர்வம் பிரம்மமயம் ரேரே... என்று பக்தியையும், ஞானத்தையும் எளிய சொற்களில், மெட்டுகளில் எடுத்துச் சொல்லும் பல கீர்த்தனைகளை அவர் புனைந்துள்ளார். அவற்றில் ‘பரமஹம்ஸ’அல்லது ‘ஹம்ஸ’ என்ற அவரது முத்திரையும் இருக்கும். 17-ம் நூற்றாண்டில் அவர் வாழ்ந்ததாகக் கருதப் படுகிறது. பல்வேறு ஐதிகங்கள், அற்புதக் கதைகள் அவரைக் குறித்துக் கூறப் படுகின்றன. கரூரை அடுத்த நெரூரில் அவரது சமாதி உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் அவரது மஹா சமாதி தினத்தன்று ஆராதனை விழா பக்தர்களால் சிறப்பாக அனுஷ்டிக்கப் படுகிறது.

 17ம் நூற்றாண்டு என்பது மிகப் பழங்காலம் அல்ல. ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட நீண்ட நெடிய வரலாறு கொண்ட தமிழ் மண்ணில், மூன்று நூற்றாண்டுகள் முன்பு வாழ்ந்த ஒரு மகான் பற்றிய ஆதாரபூர்வமான், நம்பகத்திற்குரிய வரலாற்றை எழுதுவது என்பது கூட அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. ஏறக்குறைய இதே காலகட்டத்தில் வாழ்ந்த தாயுமானவர், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ ஸ்வாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், சிவப்பிரகாச சுவாமிகள் ஆகியோரைக் குறித்தும் புராண சாயலில் ஆவணப் படுத்தப் பட்ட சரிதங்களே நம்மிடம் உள்ளன. அவற்றிலிருந்து தான் இவர்களது வாழ்க்கை வரலாறுகளைக் கட்டமைக்க வேண்டியுள்ளது.

சதாசிவ பிரம்மேந்திரரைப் பொறுத்த வரையில் சில அடிப்படைத் தகவல்கள்   சரியாகவே கிடைத்துள்ளன. அவரது  தாய் தந்தையர் சோமசுந்தர அவதானி மற்றும் பார்வதி. அவரது பதினைந்து வயதில் மீனாட்சி என்ற ஏழு வயது பெண்ணை பாலிய விவாகத்தில் மணக்கிறார். அந்தப் பெண் பருவமடைந்ததும்,  குடும்ப வாழ்க்கை தொடங்கும் நேரத்தில் அதனை வெறுத்து துறவு பூண்டு  வீட்டை விட்டு வெளியேறி ஞானத் தேடலுடன் அலைகிறார். ஆனால் இதன் பிறகு  நடந்ததாகக் கூறப்படும் வாழ்க்கை சம்பவங்களின் அடிப்படையில் அவர் ஒருவரா பலரா? அவர் வாழ்ந்த கால கட்டம் என்ன? அவர் இயற்றியதாகக் கூறப்படும் நூல்களின் தன்மை அவரது ஆன்மிக சாதனைகள், நிகழ்த்திய அற்புதங்கள் ஆகியவை பற்றி பல புகைமூட்டமான, பல முரண்பாடுகள் கொண்ட கருத்துக்கள் உள்ளன. இந்தப் புகைமூட்டத்தை விலக்கி அந்த மகானின் வரலாற்றைத் துலக்கும் முகமாக அண்மையில் ஒரு புத்தகம் வெளிவந்திருக்கிறது.
இந்தப் புத்தகத்தின் முக்கிய அம்சம் சதாசிவர் பற்றி வழங்கும் அனைத்து செய்திகளையும் ஐதிகங்களையும் ஓரிடத்தில் தொகுத்திருப்பது. பிறகு அவற்றை தர்க்கபூர்வமாக ஆய்வுக்கு உட்படுத்த முயல்வது. உதாரணமாக சதாசிவரை சந்தித்தவர்கள் என்பதாக தாயுமானவர், பஜனை சம்பிரதாயத்தை உருவாக்கியவரும் கும்பகோணம் மடாதிபதியுமாக இருந்த ஸ்ரீ போதேந்திர சரஸ்வதி, சிவபக்தரான திருவிசைநல்லூர் ஸ்ரீதர வேங்கடேச அய்யாவாள், அரசர்கள் விஜயரகுநாத தொண்டைமான், ஷாஜி, சரபோஜி என்று பலபேர் பல சம்பிரதாய செவிவழிச் செய்திகளில் குறிப்பிடப் படுகின்றனர். தாயுமானர் தனது குருவாகக் குறிப்பிடும் மௌனகுரு என்பவர் சதாசிவ பிரம்மேந்திரராக இருக்கக் கூடுமோ என்று ஒரு கருத்தும் உள்ளது. திருவிசைநல்லூரில் ஸ்ரீதர வேங்கடேசர் வீட்டில் கங்கை பொங்கிய அற்புதம் நிகழ்ந்த போது சதாசிவர் உடனிருந்ததாகவும் “ஜய துங்க தரங்கே கங்கே” என்ற கீர்த்தனை அப்போது தான் இயற்றப்பட்டது என்றும் ஒரு ஐதிகம் உள்ளது. சித்தராகத் திரிந்து வந்த அவர் ஒரு முஸ்லிம் மன்னன் (அல்லது படைத்தளபதி) வீட்டுக்குள் நுழைய, அவன் அவரது கையை வெட்ட அதிலிருந்து ரத்தம் கொட்டியது. இருப்பினும் சரீர போதம் இன்றி அவர் நடந்து சென்றார் என்றும் ஒரு செய்தி பின்னாளில் அவரைக் குறித்து எழுதப்பட்ட சதாசிவ அஷ்டகம் என்ற துதிப்பாடலில் இடம் பெறுகிறது.

சம்பிரதாய செய்திகள் தவிர்த்து கறாரான வரலாற்று ஆவணங்கள் என்று கொண்டால் சரபோஜி மன்னரின் ஆட்சிக் காலத்தில் (1712-18) அவரது அமைச்சரான மல்லாரி பண்டிட் என்பவர் எழுதிய ஒரு கடிதம் முக்கிய இடம் வகிக்கிறது. இந்தக் கடிதத்தில் தான் சதாசிவ பிரம்மேந்திரரை சந்தித்தகாகவும், மன்னருக்கு மகன் பிறக்க அருள வேண்டும் என்று தான் வேண்டிக் கொண்டதாகவும் சதாசிவ பிரம்மேந்திரர் ஆசிர்வதித்து “ஆத்மவித்யா விலாசம்” என்ற நூலை அளித்ததாகவும் அமைச்சர் மல்லாரி பண்டிட் குறிப்பிடுகிறார். இந்தக் கடிதத்தின் மூல வடிவம் தஞ்சை சரஸ்வதி மகாலில் இப்போதும் பாதுகாக்கப் படுகிறதாம். வேறு சில ஓலைச் சுவடிகளும், ஆவணங்களும் சதாசிவ பிரம்மேந்திரரின் வாழ்க்கை வரலாற்றைக் கட்டமைக்க உதவி புரிகின்றன.

சில ஐதிகச் செய்திகளை மற்ற வலுவான ஆதாரங்களின் அடிப்படையில் நூலாசிரியர் நிராகரிக்கிறார். உதாரணமாக தாயுமானவரின் குருவாக சதாசிவ பிரம்மேந்திரர் இருந்திருக்க வாய்ப்பே இல்லை என்பதற்கு இரண்டு சான்றுகளை நூல் அளிக்கிறது.

1. மவுனகுரு நந்தி, திருமூலர் மரபில் வந்தவர்; நவநாத சித்தர்களுடன் தொடர்புடையவர் என்று குறிப்பிடும் தாயுமானவர் பாடல் அகச்சான்றுகள். இவை சதாசிவர் பற்றிய மற்ற எந்த செய்தியுடனும் பொருந்தவில்லை.

 2. 1685ல் மௌன குரு தேசிகர் என்ற தருமபுர ஆதினத்தார் திருச்சி சாரமாமுனிவர் மடத்தில் தங்கியது தாயுமானவரை சந்தித்தது. அவரே தாயுமானவரின் குருவாக இருக்கலாம் என்ற தமிழறிஞர் கருத்துக்கள். இவற்றை வைத்து. தாயுமானவர் காலத்தில் சதாசிவர் பிறந்திருக்கவில்லை அல்லது மிகச் சிறுவனாக இருந்திருப்பார் என்று நூலாசிரியர் முடிவு செய்கிறார். இது போன்று ஒவ்வொரு ஐதிகச் செய்தியும் நூலில் அலசப் படுகிறது.

அனைத்து ஐதிகச் செய்திகளையும் திருப்திப் படுத்த வேண்டும் என்றால் சதாசிவர் வாழ்ந்த காலம் 200 ஆண்டுகளைத் தாண்டுகிறது என்று நூலாசிரியர் கணக்கிடுகிறார். ஒரு வரலாற்று மனிதர் இவ்வளவு நீண்டகாலம் வாழ்ந்திருப்பது சாத்தியமே அல்ல என்றும் குறிப்பிடுகிறார்.

சதாசிவர் குறித்த பல செய்திகளையும் நான்கு சட்டகங்களுக்குள் வகைப்படுத்துகிறார்.

1. அத்வைத பண்டிதராக இருந்தவர், பரமசிவேந்திர சரஸ்வதி என்ற கும்பகோணம் மடாதிபதியின் சீடர். சில அத்வைத நூல்களை எழுதியவர்.

2. ஸ்ரீதர வேங்கடேசர் காலத்தவர் பல சமய, தத்துவ வாதவிவாதங்களில் ஈடுபட்டவர். கர்நாடக இசைக் கீர்த்தனைகளை இயற்றியவர்.

3. விஜரகுநாத தொண்டைமானின் சமகாலத்தவர் வேறு சில அத்வைத நூல்களை எழுதியவர்.

4. அவதூதராகவும் சித்தராகவும் வாழ்ந்தவர். திருச்சி, தஞ்சை, கும்பகோணம், புதுக்கோட்டை பகுதிகளில் தன்னிச்சைப் படி உலவிக் கொண்டு சாதாரண மக்களுடன் பழகியவர். அற்புதங்கள் நிகழ்த்தியவர்.

இந்த அத்தனை செய்திகளையும் சமன்வயப் படுத்தி நூலின் இறுதியில் சதாசிவ பிரம்மேந்திரர் வாழ்க்கைக் கால அட்டவணை ஒன்றை நூல் அளிக்கிறது. பிறந்த ஆண்டு 1680 என்று நிர்ணயிக்கப்பட்டு, அவரது ஒவ்வொரு வயதிலும் நடைபெற்ற அவரது வாழ்க்கை சம்பவங்கள் மற்றும் அந்த ஆண்டின் மற்ற முக்கிய அரசியல் வரலாற்று சம்பவங்கள் பட்டியலிடப் பட்டுள்ளன. 1755ம் ஆண்டு 75 வயதில் மஹாசமாதி அடைந்திருக்கலாம் என்றும், அல்லது 1781ல் 101 வயதில் மஹாசமாதி அடைந்திருக்கலாம் என்றும் இரு சாத்தியங்களை நூலாசிரியர் அளிக்கிறார்.

”அதிசயக் கதைகளில் பொதிந்துள்ள சரித்திர உண்மைகள்” என்று தலைப்பிட்ட அத்தியாயத்தில் அற்புதங்கள் பற்றிய கதைகளுக்கு சமூக வரலாற்று அடிப்படையில் விளக்கங்கள் தர நூலாசிரியர் முயன்றிருக்கிறார்.

உதாரணமாக:-
•    அறுவடை நேரத்தில் வயல்களில் நெற்கட்டுகளின் மீது அவர் படுத்திருந்தது – இது நவாபின் படைவீரர்கள் அடாவடியாக பயிர்களை கொள்ளையடிப்பதிலிருந்து பாதுகாப்பதற்காக இருக்கலாம்.

•    உடலை மணல் மூடி தியானத்தில் லயித்திருந்த போது அவரது தலை மண்வெட்டியால் வெட்டப் பட்டு ரத்தம் வந்தது – நவாப் படைகளிடருந்து தப்பிக்கவும், நதிக்கரைகளைப் பாதுகாக்கவும் முயன்ற போது படைகளால் தாக்கப் பட்டிருக்கலாம்.

•    ஆற்றங்கரைகளில் மண்ணைத் தலையணையாக வைத்துப் படுத்திருந்தது பார்த்து ஊர் மக்கள் கேலி பேசியது – நவாப் படைவீரர்கள் இரவில் வந்து கரைகளை உடைத்து நீரைத் திருப்பிவிடுவதைத் தடுப்பதற்காக இருக்கலாம்.

•    குழந்தைகளை திருச்சியிலிருந்து மதுரைக்கு திருவிழா காண அழைத்துச் சென்று அவர்களுக்கு மிட்டாய் வரவழைத்துத் தந்தது – பஞ்சகாலத்தில் தஞ்சைப் பகுதிகளில் நவாபின் அதிகாரிகள் மற்றும் ஐரோப்பியர் குழந்தைகளை அடிமைகளாகப் பிடித்தோ சல்லிக்காசுகு வாங்கியோ கப்பலில் ஏற்றி கடத்தியதற்கு ஆதாரம் உள்ளது. குழந்தைகளைத் தப்பிக்க வைத்துக் காப்பாற்றுவதற்காக இந்த மகான் இவ்விதம் செய்திருக்கலாம்.

இதற்கு வலுசேர்க்கும் முகமாக, சோழமண்டலத்தில் 17ம் நூற்றாண்டில் அடிமைகளாக ஏற்றுமதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை பற்றிய குறிப்பும் நூலில் உள்ளது (பக். 41). 1659 முதல் 1661 வரையிலான வருடங்களில் 8000 முதல் 10000 பேரும், 1694 – 1696 காலகட்டத்தில் 3800 பேரும் இவ்வாறு ஏற்றுமதி செய்யப் பட்டார்களாம்! 17ம் நூற்றாண்டு பஞ்சம், சந்தாசாகிப், ஷாஜி, சரபோஜி காலத்திய போர்கள், ஐரோப்பியர்கள் தஞ்சை மண்ணில் வேரூன்றுவது பற்றிய சில தொடர்புடைய விவரணங்களும் நூலில் ஆங்காங்கே தரப்படுகின்றன.
ஆத்மவித்யா விலாசம் என்ற நூலில், முற்றும் துறந்த அவதூதரான தனது இயல்பைப் பற்றி தானே விவரிக்கும் சதாசிவ பிரம்மேந்திரர் “வர்ணாஸ்ரமங்களின் கட்டுப்பாடுகளைக் கடந்தவன் நான். சாஸ்திரங்களில் விலக்கப்படுபவை பற்றிய விதிகளையும் உதறித் தள்ளியவன்” (சுலோகம் 57) என்றும் குறிப்பிடுவதிலிருந்து அவர் ஏழை, எளிய மக்களுடன் கலந்து உறவாடியவர். அனைத்தும் கடந்த ஞானியாக இருந்தும் மக்களின் துயரம் கண்டு உருகியவர் என்னும் கருத்து மேலும் உறுதிப் படுகிறது.
சதாசிவ பிரம்மேந்திரரின் உருவம் சித்தரிக்கப்படும் பல விதங்கள், நெரூர் சமாதிக் கோயிலில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் சம்பந்தப்பட்ட இடங்களின் புகைப்படங்கள் என்று மேலும் சில பயனுள்ள தகவல்களும் நூலில் கோர்க்கப் பட்டுள்ளன.

நூலாசிரியர்களில் ஒருவரான மறைந்த கரூர் நாகராஜன் பிரம்மேந்திரரின் பரம பக்தர் என்றும் மற்றொருவரான வேதபிரகாஷ் ஒரு தனிப்பட்ட ஆராய்ச்சியாளர் என்றும் நூலின் பின்னட்டை தெரிவிக்கிறது. எந்தவித கல்விப் புலமும், வரலாற்று ஆய்வு பட்டயங்களும், சான்றிதழ்களும் இல்லாத இவர்கள் தங்கள் சொந்த முயற்சியால் இத்தகைய ஆய்வில் ஈடுபட்டு இதனை நூலாக வெளிக் கொணர்ந்திருக்கிறார்கள். கரூர் நாகராஜன் மகானின் மீது கொண்ட ஆத்மார்த்தமான பக்தியாலும், வேதபிரகாஷ் இந்துப் பெரியோர்களின் வாழ்க்கை வரலாறுகள் ஆன்மிக நோக்கில் பல செய்திகளையும் கலந்து கட்டி எந்தவித வரலாற்றுப் பிரக்ஞையும் இன்றி எழுதப் படுவதைக் கண்டு மனம் நொந்து இவற்றில் ஒரு முறைமையைக் கொண்டுவரவேண்டும் என்ற உந்துதலுடனும் ஆய்வுகளில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. நூல் வெளிவரும் முன்பே கரூர் நாகராஜன் மறைந்து விட்டார். அவரது உள்ளக் கிடக்கையை பூர்த்தி செய்து அவர் விருப்பப் படியே நூலைத் தமிழில் கொணர்ந்திருப்பதாக வேதபிரகாஷ் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த நட்புணர்வும், அர்ப்பணிப்பும் பெரிதும் போற்றத் தக்கவை.

சில விதங்களில் நூலை இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாம் என்ற எண்ணமும் எழுகிறது. திரட்டப் பட்ட தகவல்களைத் தொகுத்தளித்திருக்கும் விதம் இன்னும் நேர்த்தியாக இருந்திருக்கலாம். அத்தியாயங்கள் பகுக்கப் பட்ட விதம் கோர்வையாக இல்லை. நூலின் இறுதியில் ஆசிரியர் கூற வரும் முடிபுகள் என்ன என்பது தெளிவாக விளக்கப் படாததால் வாசகர்கள் அதனை ஊகித்து உணர வேண்டியிருக்கிறது. பக்தர்களும் ஆன்மிக எழுத்தாளர்களும் செய்யும் கணிப்புகள் அதி ஊகங்கள் குறித்து சலிப்புடன் ஆரம்பத்தில் குறிப்பிடும் ஆசிரியர் தானே சில இடங்களில் அதைச் செய்து விடுகிறார் – உதாரணமாக, சித்தராகத் திரிந்த சதாசிவர் கட்டாயம் மற்ற சித்தர்கள் போன்று தமிழில் பாடல்கள் புனைந்திருக்க வேண்டும் என்றும், அவை கிறிஸ்தவ மதப்பிரசாரகர்களால் அழிக்கப் பட்டிருக்கலாம் என்றும் கூறுகிறார்.

சிவப்பிரகாசரின் ’ஏசுமத நிராகரணம்’ நூலுக்கு அந்த கதி ஏற்பட்டிருக்கிறதே என்பது சற்றே பொருந்துகிற சரியான வாதமாக இருந்தாலும், ஆதாரங்கள் இன்றி இத்தகைய ஊகங்கள் முன்வைக்கப் படுவது மிகவும் தவறான முன்னுதாரணம். இதே போல சதாசிவரின் இரட்டை இஸ்லாமிய சீடர்களாகக் கருதப்படும் தஞ்சை “மஸ்தான் சகோதரர்கள்” பற்றிய ஐதிகம் இஸ்லாமிய மதமாற்றத்தைக் கருத்தில் கொண்டு வேண்டுமென்றே புனையப் பட்டது என்ற நிலைப்பாட்டுக்கும் ஆதாரம் தரப்படவில்லை. சமூகக் கட்டுப்பாடுகளை உதறிவிட்ட அத்வைதியான சதாசிவ பிரம்மேந்திரர் உண்மையிலேயே முஸ்லிம்களை சீடர்களாக ஏற்றுக் கொண்டிருந்திருக்கவும் சாத்தியம் உள்ளது. அதை முற்றிலும் ஒதுக்கிவிட முடியாது. மேலும் சூஃபிகளையும் தர்கா வழிபாடுகளையும் பற்றி அடிப்படைவாதிகளான வகாபி இஸ்லாமியர்களின் நிலைப்பாட்டையே தானும் எதிரொலித்து நூலாசிரியர் எழுதியிருக்கிறார். இது இந்து சமூக நலப் பார்வையில் சரியானதல்ல என்பதோடு, ஒரு ஆய்வு நூலில் இத்தகைய அரசியல் ரீதியான கருத்துக்களையே முற்றிலுமாகத் தவிர்த்திருக்கலாம்.

நூலின் மொழி பல இடங்களில் இயந்திரத்தனமான மொழிபெயர்ப்புச் சாயலில் உள்ளது; அதனைச் செம்மைப் படுத்தியிருக்கலாம். கடைசி அத்தியாமாக உள்ள ”சம்பந்தப் பட்ட இடங்களின் புகைப்படங்கள்” அனைத்தும் தபால் தலை அளவிலேயே உள்ளன. வாசகர்கள் பார்த்துப் புரிந்து கொள்ளும் வகையில் வழக்கமான புகைப்படங்களின் அளவில் அவற்றைக் கொடுத்திருக்கலாம்.
ஒட்டுமொத்தமாக, இது மிகவும் பாராட்டத்தக்க முயற்சி. ஏனைய இந்துப் பெரியோர்களது ஆதாரபூர்வ வாழ்க்கை வரலாறுகளையும் இத்தகைய ஆய்வு நோக்கில் ஆவணப் படுத்தும் முயற்சிகள் ஊக்குவிக்கப் படவேண்டும். நமது வரலாற்றுக் கல்வி அமைப்புகள் செய்யவேண்டிய இத்தகு பணிகளை, தாங்களாகவே முன்வந்து முனைப்புடன் செய்யும் தனிப்பட்ட ஆய்வாளர்களுக்கும், ஆய்வு மையங்களுக்கும் இந்து சமுதாயம் உண்மையிலேயே கடமைப் பட்டுள்ளது

சித்தருக்குக் கிட்டிய சித்தி
July 3, 2013
- தஞ்சை வெ.கோபாலன்

நெரூரில் சமாதி கொண்ட சித்தர் சதாசிவ பிரம்மேந்திரர். இவரைப் பற்றி பல வரலாற்றுச் செய்திகள் சொல்லப்படுகின்றன. தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் பிரதிஷ்டை செய்தவர் இந்த சதாசிவ பிரம்மேந்திரர் என்கிறார்கள். இவர் நிகழ்த்திய அற்புதங்கள் இன்றும் பேசப்படுகின்றன. இவருடைய சமாதியின் மேல் வளர்ந்திருக்கும் விருக்ஷம் பட்டுப் போனது, இப்போது மீண்டும் துளிர்த்து வளர்வதைக் காண மக்கள் வந்து போகிறார்கள். நெரூர் காவிரிக் கரையில் அமைதியான சூழலில், வயல்களும், தோட்டங்களும் சூழ்ந்த இயற்கை அழகு கொஞ்சுகின்ற இடத்தில் அமைந்திருக்கிறது இவரது சமாதி. இவரது சித்துக்களில் ஒன்றை பார்க்கலாம்.

காவிரியாறு ஈரோட்டைத் தாண்டி கொடுமுடி எனும் தலத்துக்கு வருகின்ற இடத்தில், ஆற்றின் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது அகத்தியம்பாறை எனும் இடம். ஆற்றின் நடுவே அமைந்துள்ள இந்தப் பாறையின் மீது மோதி காவிரி வெள்ளம் கிழித்துக் கொண்டு இருபுறமாக விரைந்து செல்லும் அழகைப் பார்த்து ரசிக்கலாம். அந்த பாறையின் மீதுதான் சதாசிவ பிரம்மேந்திரர் வந்து அமர்ந்து தியானத்தில் இருப்பாராம். பிறரால் தொல்லை ஏற்படாத ஏகாந்தமான இடமாக இந்த இடத்தை பிரம்மேந்திரர் தேர்ந்தெடுத்ததில் வியப்பில்லை. அப்படி அவர் தியானத்தில் தன்னை மறந்து, இவ்வுலக புறவாழ்வை, தன் உடலை மறந்த நிலையில் பிரம்மத்தில் ஈடுபட்டிருக்கும்போது சுற்றுப் புறத்திலோ, தன் உடலுக்கோ எது நேரினும் அதனை உணரமுடியாத ஆழ்ந்த தியான நிலை. அப்போது அவர் உடல் வெறும் கட்டை, அதற்கு ஏற்படும் துன்பம் அவரை எட்ட முடியாத நிலை.

அப்படியொரு நாள் ஆழ்ந்த தியானத்தில் இருந்த சதாசிவ பிரம்மேந்திரரை ஆற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஒவ்வொரு நாழிகைக்கும் அதிகரித்து இறுதியில் பாறையின் மீது ஆழ்நிலை தியானத்தில் இருந்த யோகியாரை அடித்துக் கொண்டு போய்விட்டது. அவர் உடல் என்னாயிற்று. அவர் உயிர் என்னவாயிற்று என்பது ஒருவருக்கும் தெரியவில்லை. சில நாட்களில் ஆற்று வெள்ளம் வற்றியதும், பாறையில் அமர்ந்து தியானத்திலிருந்த அந்த யோகி எங்கே, என்னவானார் என்று சிலர் தேடத் தொடங்கினார்கள். ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அவர் எங்கு சென்றாரோ, கரை ஏறினாரோ, தன்னை மறந்து இருந்த நிலையில் நீரில் மூழ்கி இறந்து போய் உடல் எங்காவது கரை ஒதுங்கியதோ. அல்லது ஆற்று நீரோடு போய்விட்டதோ? தேடிப் பார்த்தும் அவர் கிடைக்கவில்லை என்றதும், மக்களும் சோர்ந்து போய் தேடுதலை விட்டுவிட்டார்கள். மறந்தும் விட்டார்கள்.

சில காலம் ஆனபின்பு ஆற்றில் மணல் அள்ள மாட்டு வண்டிகள் வந்த வண்ணம் இருந்தன. மணல் கொள்ளை என்பது இப்போதுதான், ஆனால் அந்த நாளில் வீடு கட்ட, மற்ற கட்டடங்கள் கட்ட மணலை ஆற்றிலிருந்து வண்டிகளில் எடுத்துப் போனார்கள். அப்படி மணல் எடுத்துப் போக வந்த ஆட்கள் ஆற்றில் நல்ல மணல் மேடிட்டுக் கிடந்த இடம் நோக்கிப் போய் அங்கு மண்வெட்டியால் மணலைத் தோண்டி எடுத்து வண்டிகளில் கொட்டிக் கொண்டிருந்தார்கள். மேடு கரைந்தது. வண்டிகளில் மணல் நிறைந்தது. சற்று ஆழத் தோண்டிய ஒரு இடத்தில் மணல் எடுத்தவன் ஓங்கி மண்வெட்டியால் வெட்டியபோது, மணல் அல்லாத ஏதோவொரு பொருளின் மீது மண்வெட்டி பட்டதை உணர்ந்தான். உடனே அந்த இடத்தை ஜாக்கிரதையாக தோண்டி மணலை விலக்கிப் பார்த்தான். அங்கு ஒரு மனிதரின் தலை. அதில் மண்வெட்டியின் வெட்டுப் பட்டு குருதி கசிந்தது.
சுற்றிலும் இருந்த மணலை விலக்கி அந்த மனிதரை வெளியே எடுத்தனர். ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாறையின் மீது யோகத்தில் ஆழ்ந்திருந்த சதாசிவ பிரம்மேந்திரர்தான் அவர். இத்தனை நாள் மணலுக்கடியில் தன்னுணர்வு இன்றி சதா சிவ தியானத்தில் ஆழ்நிலையில் உறைந்திருந்திருக்கிறார். பரப்பிரம்மமான ஞானி ஒருவர் மணலுக்கடியில் யோக நிலையில் இருந்தவர் தலையில் மண்வெட்டி பட்டு இரத்தம் கசிகிறது, அந்த ஞானி உயிருடன் தான் இருக்கிறார் எனும் செய்தி ஊருக்குள் கசிந்தது.
கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து பார்த்தனர். செய்தி சுற்றுப்புறங்களுக்கும் பரவியது. கொடுமுடிக்கருகில் ஆற்றுக்கிடையே இருந்த பாறையில் ஒரு ஞானி தவத்தில் இருந்தார். அவரை வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டது என்றார்கள். இவர் அவராகத்தான் இருக்க வேண்டும். இவர்தான் சதாசிவ பிரம்மேந்திரர். ஞானி அல்லவா, உணவு, நீர் இன்றி உயிர்வாழும் சக்தி வேறு யாருக்கு உண்டு. அவரை மணலுக்குள்ளிருந்து வெளியே கொணர்ந்து, உடலுக்கு சூடேற்றி, உண்ண ஆகாரம் கொடுத்து அவரை மக்கள் சுயநிலைக்குக் கொண்டு வந்தார்கள்.

சுய நினைவு திரும்பி சுற்றிலும் நிற்கும் மக்களை ஒருமுறை சுற்றுமுற்றும் பார்த்து தான் எங்கிருக்கிறோம், தனக்கு என்னவாயிற்று என்பதை உணராமல், உடனே புறப்பட்டு யாரிடமும் எதையும் கேட்காமல் மெளனியாக கால்போன போக்கில் வேகமாகச் சென்று மறைந்து விட்டார் இந்த ஞானி சதாசிவ பிரம்மேந்திரர். இப்படியொரு வரலாறு இந்த யோகியைப் பற்றி இன்றும் பேசப்படுகிறது.

புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில். தஞ்சாவூர் மாரியம்மன் என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்படும் இந்த மாரியம்மன் கோயில் இருக்குமிடம் புன்னைநல்லூர். தஞ்சையிலிருந்து கிழக்கே சுமார் 3 கி.மீ. தூரத்தில் இருக்கும் இவ்வூர் வழியாகத்தான் திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் செல்லும். இந்த மாரியம்மன் மிகவும் பிரசித்தி பெற்ற மாரியம்மன். இவ்வாலயம் எழுந்த வரலாற்றையும், இவளை வழிபட்டு பலனடைந்த பலருடைய வரலாற்றுச் செய்திகளும் ஏராளம். ஒரு ஆங்கிலேய அதிகாரிகூட இவளை வழிபட்டு தன் கண்பார்வை பெற்றதாக செவிவழிச் செய்திகள் உண்டு. இன்னொரு சிறப்பும் இந்த கோயிலுக்கு உண்டு. நாகூர் தர்காவுக்கு இந்துக்களும் சென்று வழிபடுவது போல, இந்த மாரியம்மனை இதர மதத்தாரும் வந்து வழிபடுவதை நாம் பார்க்க முடிகிறது.
ஒரு முறை மராத்திய மன்னன் தன் குதிரையிலேறி தன் சிறு பெண் குழந்தையுடன் இராமேஸ்வரம் சென்று திரும்பினார். ஊர் திரும்பிய பின் அந்தப் பெண் குழந்தையின் கண்களிலிருந்து இரத்தம் கசியத் தொடங்கியது. அரச குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்தனர். அரண்மனையில் சித்த வைத்தியம், யுனானி வைத்தியம், ஆயுர்வேதம் ஆகியவைகள் இருந்தும் எந்த வைத்தியராலும் எதுவும் செய்ய முடியவில்லை. அப்போது சமயபுரம் மாரியம்மனின் நினைவு மன்னனுக்கு வந்தது. சமயபுரத்தாள் பக்தன் மன்னன். உடனே அந்த மாரியம்மனிடம் வேண்டிக் கொண்டான், தன் மகளின் கண் உபாதையை அம்மா சரிசெய்ய வேண்டுமென்றும், தங்கத்தால் ஒரு கண் செய்து அம்மனுக்குக் காணிக்கை அளிப்பதாகவும் அம்மனிடம் வேண்டிக் கொண்டான். அப்போது அவன் கனவில் சமயபுரம் மாரியம்மன் தோன்றி, நீ சமயபுரம் தேடி அத்தனை தூரம் வருவானேன், உன் அருகிலேயே புன்னைமரக் காட்டில் நான் இருக்க வெறு இடம் தேடி போவானேன், என்றாள். கண் விழித்துப் பார்த்த மன்னனுக்கு மர்மம் புரியவில்லை. தன் ராஜ்யத்திலேயே புன்னைமரக் காட்டில் இருப்பதாகச் சொன்னாளே, அது எங்கிருக்கிறது. அங்கு அன்னை மாரியம்மா எங்கிருக்கிறாள் என்பதை அறியாமல் போனேனே என்று வருந்தி, அந்த இடத்தைக் கண்டுபிடிக்கத் தன் புரவியில் ஏறி புன்னைமரக் காடு இருக்கும் திசை நோக்கிச் சென்றான்.

தஞ்சை நகரத்திலிருந்து சில கல் தொலைவிலேயே இருந்த ஒரு பகுதி புன்னை மரக்காடாக இருந்து வந்தது. அந்த காட்டிற்குள் அன்னை சொன்ன இடம் எது என்றறிய மன்னன் தேடிப் போனான். அப்போது வழியில் ஒரு சிறு பெண் நின்று கொண்டிருக்க, அந்தப் பெண் அந்தக் காட்டிற்குள் எப்படி வந்தாள் என்று வியந்து மன்னன் அந்தப் பெண்ணை விசாரிக்க, அவள் தன்னுடைய இருப்பிடம் இங்குதான் என்று ஓரிடத்தைக் காண்பித்து ஓடிவிட்டாள். அந்த இடத்தில் ஒரு புற்று வளர்ந்திருந்தது. அதனருகில் ஒரு மரத்தினடியில் அவதூதராக ஒரு சித்தர் ஆழ்ந்த தியானத்தில் இருப்பதைக் கண்டான். அவரைக் கண்டதுமே அவர் ஒரு மகான் என்பதை உணர்ந்த மன்னன் அவரை வணங்கி தொழுது நின்றான். கண்விழித்துப் பார்த்த அவரை மீண்டும் மன்னன் வணங்கி அவர் ஆசி வேண்டி நின்றான். தன்னுடைய கனவில் சமயபுரம் மாரியம்மன் தோன்றி சொன்ன செய்தியையும் சொல்லி, பின்னர் தன்னை அங்கு ஒரு சிறு பெண் அழைத்து வந்து தன் இருப்பிடம் இதுதான் என்று அந்த புற்றைக் காட்டிவிட்டு மறைந்து போனாள் எனும் செய்தியைச் சொல்ல, அந்த மகான் எழுந்து அந்த புற்றை மாரியம்மனாக உருவாக்கினார். மன்னனுடைய எண்ணத்தை உணர்ந்த அந்த மகான் அஷ்ட கந்தங்கள் எனும் எட்டு வாசனை திரவியங்களான சாம்பிராணி, புனுகு, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோஜனை, அகில், சந்தனம், குங்குமப்பூ, பச்சை கற்பூரம் ஆகியவைகளைக் கொண்டு அந்த புற்று மண்ணோடு கலந்து புற்றை மாரியம்மன் உருவம் சமைத்தார். உடனே சர்வ சக்தி படைத்த ஜன ஆகர்ஷண சக்கரம் ஒன்றை தயார் செய்து அம்மன் முன்பாக வைத்து அதனைத் தொடர்ந்து பூஜை செய்து வருவோர்க்கு மனக்குறை தீரும் என்று சொன்னார். சமயபுரம் மாரியம்மனே இங்கும் வந்து கொலுவீற்றிருப்பதையும், மருந்துகளாலும், ஆகர்ஷண சக்கரத்தாலும் சக்தி படைத்த அந்த புற்று மாரியம்மன் வேண்டிய வரம் தருவாள் என்பதை மன்னன் உணர்ந்தான். அப்படி புற்றை அம்மனாக மாற்றியவர்தான் சதாசிவ பிரம்மேந்திரர். சித்தர் பெருமான் சொன்னபடி அந்த மாரியம்மனைப் பணிந்து வேண்டி வந்த மன்னனுக்கு அவன் மன சஞ்சலம் விலகும்படி அவன் பெண் குழந்தையின் கண் பார்வை சரியானது. மாரியம்மனின் சக்தியையும், சித்தரின் திருவிளையாடலையும் எண்ணி மன்னன் மனம் மகிழ்ந்தான்.

அந்தப் புற்றின் மேல் ஒரு ஆலயத்தை எழுப்பச் செய்தான் மன்னன். அங்கு முறையாக பூஜைகள் நடைபெற கட்டளை பிறப்பித்தான். மன்னன் குடும்பத்தாருக்குக் குல தெய்வமாக இருந்து புன்னைநல்லூர் மாரியம்மன் காத்து வந்தாள். இந்த அம்மனுக்கு ஐந்தாண்டுகளுக்கொரு முறை தைலாபிஷேகம் எனும் புனுகுச் சட்டம் அணிவிப்பது நடைபெறுகிறது.
இங்கு வந்து வேண்டிக் கொண்டவர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறுவதைக் கேள்விப்பட்டு மக்கள் வெள்ளம் போல இங்கு வந்து தரிசித்துச் செல்கிறார்கள். சதாசிவ பிரம்மேந்திரரின் அருள் விளையாட்டுக்களில் இந்த புன்னைநல்லூர் மாரியம்மன் உருவமும் ஒன்று என்பதை இன்றும் மக்கள் வியந்து போற்றி வணங்கி வருகிறார்கள்.

எங்கெல்லாமோ அவதூதராகச் சுற்றி அலைந்த சதாசிவ பிரம்மேந்திரர் நெரூர் வந்தடைகிறார். அவருக்கு பலர் சீடர்களாக விளங்கினர். அப்படி இருந்த சில சீடர்களில் புதுக்கோட்டை சமஸ்தான மன்னர், மைசூர் மகாராஜா, தஞ்சாவூர் ராஜா ஆகியோர் மனங்களில் தங்களது குருநாதர் தங்களை அழைப்பதாக உணர்ந்து அவர்கள் அனைவரும் நெரூர் வந்து சேர்ந்தனர். வந்து சேர்ந்தவர்களிடம் தான் ஜீவசமாதி அடையப் போவதாகவும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யச் சொல்லி சுவாமி சொன்னார். இதனைக் கேட்ட மன்னர்கள் மனம் கலங்கினர். குருநாதரிடம் வேண்டினர். அவர் சொன்னார், இவ்வுடல் ஜீவசமாதி அடைந்தால் என்ன, நீங்கள் மனத்தால் நினைத்தாலே நான் உங்களோடு இருப்பேன் அல்லவா என்று சமாதானம் செய்தார். இவ் வுடல் பூமிக்கடியில் புதைந்து கிடப்பது இது முதல் தடவை அல்லவே. முன்பொரு முறை நான் காவிரி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மணலுக்கடியில் பல காலம் இருந்தது உங்களுக்குத் தெரியாதோ என்றார். குருநாதரின் விருப்பப்படி அவர் ஜீவசமாதி அடைவதற்கான இடத்தைத் தயார் செய்தார்கள். ஜீவசமாதி அடைவது என்பதற்கு சில விதிமுறைகள் உண்டு. அவை “திருமந்திரம்” நூலில் விரிவாகப் பேசப்படுகிறது. திருமந்திரம் 7ஆம் தந்திரத்தில் ‘சமாதி கிரியை’ எனும் தலைப்பில் பல பாடல்கள் உண்டு.

அந்தமில் ஞானிதன் ஆகம் தீயினில்
வெந்திடின் நாடெலாம் வெப்புத் தீயினில்
நொந்தது நாய்நரி நுகரின் நுண்செரு
வந்து நாய் நரிக்குண வாகும் வையகமே.

மகா ஞானி ஒருவனின் உடல் மற்றவர்களைப் போல மாண்டுபோன பின் தீயிலிட்டு எரித்தோமானால், நாட்டு மக்கள் எல்லாம் வெப்பு நோயினால் பீடிக்கப்பட்டு வருந்துவர். அவ்வுடல் கவனிக்க ஆளில்லாமல் அழுகிக் கிடந்து நாய்களும், நரிகளும் அவர் உடலைக் கடித்து உண்ணுமானால் உலகில் பகை மூண்டு நாட்டு மக்கள் நாய் நரிகளுக்கு உணவாகிவிடுவர்.

எண்ணிலா ஞானி உடல் எரி தாவிடின்
அண்ணல் தன் கோயில் அழலிட்டதாம் ஒக்கும்
மண்ணில் மழை விழா, வையகம் பஞ்சமாம்
எண்ணரு மன்னர் இழப்பார் அரசே.

ஞானி ஒருவரின் உடலைத் தீயிலிட்டு எரித்தால், சிவபெருமான் கோயில் கொண்டருளும் ஆலயத்தைத் தீயிட்டழித்தற்கு ஒக்கும். அப்படிப்பட்ட நாட்டில் மழை பெய்யாது. பஞ்சம் தோன்றும், எண்ணற்கரி மன்னர்கள் முடி துறப்பர்.

புண்ணியமாம் அவர் தம்மைப் புதைப்பது
நண்ணி அனல் கோக்கில் நாட்டில் அழிவாகும்
மண்ணில் அழியில் அலங்கார பங்கமாம்
மண்ணுல கெல்லாம் மயங்கும் அனல் மண்டியே.

ஞானியின் உடலைப் புதைப்பது புண்ணிய காரியம். மாறாக அவரது உடலை தீயில் சுட்டு எரித்தால் நாட்டில் அழிவுகள் நேரும். அப்படி உடலைப் புதைக்காமல் மண்ணில் சிதைந்து போகுமாறு விட்டுவிட்டால் உலகத்தின் அழகு கெடும். உலகம் எங்கும் தீப்பிடித்து கெடும்.

அந்தமில் ஞானி அருளை அடைந்தக்கால்
அந்த உடல்தான் குகை செய் திருத்திடில்
சுந்தர மன்னரும் தொல் புவி உள்ளோரும்
அந்தமில் இன்ப அருள் பெறுவாரே.

ஞானி ஒருவர் இறையருள் பெற்று பின்னர் உடலைவிட நினைத்தால், அந்த உடம்பை குகை ஒன்றை நிறுவி, அதில் அவரை இருத்திடல் வேண்டும். அப்படி செய்தோமானால் அரசர்களும் குடிமக்களும் அளவற்ற இன்பத்தை அடைவார்கள். இறைவன் அருள் அவர்களுக்குக் கிட்டும்.

நவமிகு சாணாலே நல்லாழஞ் செய்து
குவைமிகு சூழ வைஞ் சாணாகக் கோட்டித்து
அவமிகு குகை முக்கோணமுச் சாணாக்கிப்
பவமறு நற்குகை பத்மாசனமே.

குகை என்பது தரையில் தோண்டப்படும் குழி. அது எப்படி இருக்க வேண்டும்? ஒன்பது சாண் அளவுக்குக் குறையாமல் ஆழம் இருக்க வேண்டும். அப்படி தோண்டும் மண்ணைக் குழியைச் சுற்றி ஐந்து சாணுக்கு அப்பால் வளைத்துக் கொட்டி, அந்தக் குழியை முக்கோண வடிவத்தில் பக்கம் ஒன்றுக்கு மூன்று சாண் அளவுள்ளதாய்ச் செய்து அந்த குகைபோன்ற குழியில் அவரது உடலை பத்மாசனமாக உட்கார வைத்திட வேண்டும். அந்த குகைபோன்ற குழி எங்கு அமைக்கப்பட வேண்டும்?

தன்மனை சாலை குளங்கரை ஆற்றிடை
நன்மலர்ச் சோலை நகரினற் பூமி
உன்னரும் கானம் உயர்ந்த மலைச்சாரல்
இந்நிலந் தான் குகைக்கு எய்து மிடங்களே.

ஞானியின் உடலை அடக்கம் செய்யும் இடங்கள் எங்கெல்லாம் அமைக்கலாம் தெரியுமா? சமாதி ஆனவன் வீட்டின் பக்கத்தில், நடமாடும் சாலையோரத்தில், குளக்கரையில், ஆற்றின் நடுவில், பூஞ்சோலையில், நகரத்தில் நல்ல சுத்தமான பூமியில், அழகான கானகம், உயர்ந்த மலைச் சாரல் ஆகிய இடங்களே உகந்த இடங்களாம். சமாதிக்கான குகை எனும் குழி அப்படி அமைக்கப்பட வேண்டும்?

நற்குகை நால்வட்டம் பஞ்சாங்க பாதமாய்
நிற்கின்ற பாத நவபாத நேர்விழப்
பொற்பம ரோசமு மூன்றுக்கு மூன்றணி
நிற்பவர் தாம் செய்யும் நேர்மைய தாமே.

அமைக்கப்படுகின்ற குழி நான்கு புறமும் காலடியால் ஐந்து அடி அகலம், ஒன்பது அடி உயரம் இருத்தல் வேண்டும். ஞானியின் உடலை அந்தக் குழியில் சமாதி வைக்கும்போது அதில் இடப்பட வேண்டிய பொருட்கள் எவை?

பஞ்ச லோகங்கள் நவமணி பாரித்து
விஞ்சப் படுத்த தன் மேலாசனம் இட்டு
முஞ்சிப் படுத்து வெண்ணீரிட்டு அதன் மேலே
பொன்செய் நற் சுண்ணம் பொதியலுமாமே.

பொன், வெள்ளி, செம்பு, ஈயம், இரும்பு ஆகிய ஐந்து வகை உலோகங்களையும், வைரம், வைடூரியம், மாணிக்கம், மரகதம், பவழம், கோமேதகம், புஷ்பராகம், குருவிந்தம், முத்து ஆகிய நவமணிகளையும் பரப்பி வைத்து, அதன் மீது இருக்கை அமைத்து, தர்ப்பைப் புல் பரப்பி, விபூதியை நிறைய இட்டுவைக்க வேண்டும். அதன் மூது சுண்ணப் பொடியை இட்டு வைக்க வேண்டும். பிறகு?

நள்குகை நால்வட்டம் படுத்ததன் மேற்சாரக்
கள்ளவிழ் தாமம் களபம் கத்தூரியும்
தெள்ளிய சாந்து புழுகு பன்னீர் சேர்த்து
ஒள்ளிய தூபம் உவந்திடுவீரே.

குழியின் அடியில் நடுவாக சதுரமாகச் செய்து அதன் மீது தேனொழுகும் மலர்கள், சந்தனம், கஸ்தூரி ஆகியவற்றுடன் தெளிவான சாந்து, புனுகு, பன்னீர் போன்றவற்றைச் சேர்த்துத் தெளிக்க வேண்டும். நல்ல பிரகாசமான தீப ஒளியைக் குழிக்குள் காட்ட வேண்டும்.

ஓதிடும் வெண்ணீற்றால் உத்தூளம் குப்பாய
மீதினில் இட்டு ஆசனத்தின் மேல் வைத்துப்
போதறு சுண்ணமும் நீறும் பொலிவித்து
மீதில் இருத்தி விரித்திடுவீரே.

உடலெங்கும் திருநீற்றால் பூசி மேலாடை போர்த்தியதுபோல செய்து, உடலை இருக்கையில் அமர்த்தி, மலர், அருகம்புல், நறுமணப் பொடி, வெண்ணீறு ஆகியவற்றை அணிவித்துக் குழியில் வைத்து நான்கு பக்கமும் மண்ணைச் சரித்து மூடிட வேண்டும். குப்பாயம் எனும் சொல்லுக்கு மேல்சட்டை என்று பொருள். எனக்கு ஒரு குப்பாயம் வாங்கினேன் என்று சொல்லிப் பழகலாமே.
ஆக ஒரு மகா ஞானியை சமாதி இடுதல் என்பது ஏதோ ஒரு குழியை வெட்டி அதில் வைத்து மூடிவிடுவது அல்ல. அந்த குழி எப்படி வெட்டப்பட வேண்டும், எங்கெங்கு அமைக்கலாம், அதில் என்னவெல்லாம் இட்டு வைக்க வேண்டும், உடலை என்னவெல்லாம் செய்து உள்ளே வைக்க வேண்டும், எப்படி மூட வேண்டும் என்பதற்கெல்லாம் விதிமுறைகள் இருப்பது திருமந்திரம் மூலம் நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது.

அந்த வழியில் தன் உடலை ஜீவசமாதி வைத்திட வேண்டுமென்று சதாசிவ பிரம்மேந்திரர் உத்தரவு இட்டார். அவர் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் விதிமுறைகளின் அமைக்கப்பட்ட குகை போன்ற குழியில் இறங்கி குருநாதர் அமர்ந்து விட்டார். திருமந்திரம் கூறியுள்ளபடி அனைத்தையும் சரிவர செய்தபின் அவர் இறங்கிய குழியை இட்டு மூடினார்கள். அவர் சமாதியடைந்த ஒன்பதாம் நாள் அவர் சமாதியின் மீது ஒரு வில்வ மரம் துளிர்விட்டு எழுந்தது. அவர் முன்பே தெரிவித்திருந்தபடி 12ஆம் நாள் காசியிலிருந்து ஒரு பிரம்மச்சாரி வந்தார். அவர் அங்கிருந்து ஒரு சிவலிங்கம் கொண்டு வந்திருந்தார். அந்த சிவலிங்கத்தை சதாசிவ பிரம்மேந்திரர் சமாதிக்குக் கிழக்காக வைத்து லிங்கம் பிரதிஷ்ட செய்யப்பட்டது. அவர் சமாதியில் எழுந்த வில்வ மரம் முதலில் பத்தடிக்கு நேராக வளர்ந்து பின்னர் மூன்றாகக் கிளை விட்டது. அதனை பிரம்ம, விஷ்ணு, சிவன் என்று மக்கள் வழிபடலாயினர். இப்படியாக அந்த மகான் சமாதியான இடம் இன்று அவருடைய அதிஷ்டானமாகக் கட்டி சிறப்பாக வழிபட்டு வருகின்றனர். வேண்டியவருக்கு வேண்டியதை அருளும் அற்புத சக்தியாக அங்கு அவர் அருள்பாலித்து வருகிறார். அங்கு ஒரு முறை சென்று அந்த ஜீவசமாதியில் அவரை வணங்கி வந்தால் அதன் பலனை நிச்சயம் ஒவ்வொருவரும் உணர்வர்.

கருத்துகள் இல்லை: