வெள்ளி, 29 மே, 2020

**லிங்க புராணம் ~ பகுதி  — 03*

*ஈசனின் ஐவகைத் தோற்றம்*
 ======================

1. சுவாத லோகித கற்பத்தில் பிரம்மன் ஈசனைத் தொழுது தியானிக்கும் போது., ஈசன் அவர் முன் அழகிய இளம்பாலகனாய்த் தோன்றினார். இது *சத்யோஜாதம்* என்னும் தோற்றம்.

2. படைப்புக் கடவுள் பிரம்மன்., ஈசன் திருவடிகளில் அர்ச்சித்து வேதங்களால் துதித்தார். அப்போது ஈசன் திருமேனியிலிருந்து நான்கு முனிவர்கள் தோன்ற இத்தோற்றத்தை மனதில் தியானித்து ஈசனை வழிபடுவோர் சிவலோகம் அடைவர். முப்பதாவது இரத்த கற்பத்தில் பிரம்மன் ஈசனைத் தியானித்த போது சடையில் பாம்பணிந்து., கரங்களில் மானும்., மழுவும் ஏந்தி ஈசன் தோன்றினார். இத்தோற்றம் *வாமதேவம்* எனப்படும்.

3. அப்போது பந்த பாசம் அறுத்த., தெளிந்த ஞானம் பெற்ற நால்வர் ஈசனிடம் தோன்றி உலகம் உய்ய தருமம் கடைப்பிடித்தும்., மற்றவர்களுக்கு உணர்த்தியும் பல்லாண்டுகள் வாழ்ந்து ஈசன் திருவடிகளை அடைந்தனர். இத்திருவுருவைத் தியானித்து வணங்கி வழிபடுவோர் பிறப்பிறப்பு நீங்கி செஞ்சடையோன் தாள் சேர்வர். பீதகற்பத்தில் நான்முகனுக்கு., எம்பெருமான் சடையில் இளம் மதி அணிந்து தோன்றினார். இத்தோற்றம் *தத்புருஷம்* எனப்படும். ஆனந்தம் கொண்டு பிரமன் பரமனைப் பூசித்து வேதங்களால் துதித்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த ஈசனார் அழகிய காயத்திரியை உண்டாக்கி அவருக்கு அளித்தார். உத்தமமான காயத்திரியைப் பக்தியுடன் ஆராதிப்பவர்களுக்கு நரகவாசம் இல்லை. கைலாச வாசம் தேடி வரும். ஈசன் திருமேனியிலிருந்து தோன்றிய நால்வர் நரகவாசமளிக்கும் கர்மாக்களை நீக்கி பஞ்சாக்ஷரத்தை உணர்ந்து ஜபித்து முதலில் ஈசன் திருவடியில் சேர்ந்தனர். இத்தத் புருஷனைத் தியானித்து அவரடித் தாமரையை வழிபடுவோர் பிறவிக்கடல் நீந்தி கயிலையை அடைவர்.

4. நீல கற்பத்தில் முக்கண்ணன் நெருப்பும், வாளும் கைகளில் ஏந்தி கரிய ரூபத்துடன் தோன்றினார். இது *அகோரரூபம்.* மிக்க ஆனந்தத்துடன் பிரமன் அகோர வடிவில் ஈசனைப் பூசிக்க ஐயன் மனமகிழ்ந்து வேண்டுவன கேள் என்றிட பிரமன் ஐயனிடம் என்றும் குன்றாத அன்பைத் தர பிரார்த்தித்தார். அப்போது சிவனார் யாராலும் யாகம் செய்யும் அந்தணரைத் தடுத்து நிறுத்த முடியாதென்று உரைத்தார். சிவமந்திரத்தை லட்சம் முறை உச்சரித்தோர் பாபங்கள் நீங்கி கைலாசத்தில் வீற்றிருப்பர் என்று அருள்பாலித்து மறைந்தார்.

5. விஸ்வரூப கற்பத்தில் மலரயன் சிவனாரைத் தியானித்த போது ஈசன் சடையில் பிறைச் சந்திரன்., நெற்றிக்கண்., கோரைப்பற்கள் கொண்டு இருபுறம் இரு மாதர்களுடன் தோன்றினார். இதை *ஈசானம்* என்று கூறுவார்கள் அப்போது பிரம்மன் சிவனாரின் இருபுறம் இருக்கும் மாதர்கள் யாவர் என்று வினவ., ஒருத்தி தேவர்களை ஈன்ற அன்னை., மற்றவள் வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கும் வாணி என்று கூறினார். இவ்வாறு  இப்பகுதியில் பரமனின் ஐவகைத் தோற்றம் விளக்கப்பட்டுள்ளன.

இவை தவிர சிவபெருமானுக்கு *அதோமுகம்* என்ற சூட்சும முகமும் உண்டு. அது தேவர்களுக்கு., ஞானிகளுக்கு., சித்தர்களுக்கு மட்டுமே அறியப்படும் முகமாகும்.

தொடரும்.....

🕉️ *ஓம் நமச்சிவாய* 🕉️

*ஸர்வ ஸுகம்த ஸுலேபித லிங்கம்*
*புத்தி விவர்தன காரண லிங்கம் |*
*ஸித்த ஸுராஸுர வம்தித லிங்கம்*
*தத் ப்ரணமாமி ஸதாஶிவ லிங்கம் ||*

கருத்துகள் இல்லை: