வெள்ளி, 25 அக்டோபர், 2019

ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 77 ॐ

{இது தான் சிதம்பர ரகசியம்}

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாம் ஆட
சீதப்புனலாடிச் சிற்றம்பலம் பாடி
வேதப் பொருள் பாடி அப்பொருளாமாபாடி
சோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடி
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை தன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.

இங்கு மாணிக்கவாசகர் ஆண்கள் தங்கள் காதுகளில் அணிந்திருக்கும் குழைகளும் பெண்களின் கூந்தலும் அந்தக் கூந்தலின் மணத்துக்காக நுகர வந்த வண்டினங்களும் அனைத்துமே இந்த மார்கழிச் சில்லென்ற மெல்லிய குளிரில் நீராடி திருச்சிற்றம்பல நாதனின் புகழை பாட வேண்டும் என்று சொல்லுகின்றார். அதுவும் எவ்வாறு சிற்றம்பல நாதனே வேதங்களுக்கெல்லாம் பொருளானவன் என்றும் அப்பொருளைப் பற்றிப் பாடவேண்டும் என்றும் அடிமுடி காணா சோதி வடிவாய் ஈசனின் பெருமைத் திறத்தைப் பாட வேண்டும் எனவும் அவன் சூடிக் கொள்ளும் கொன்றை மலரின் சிறப்பைப் பாடவேண்டும் எனவும் சொல்லுகின்றார். ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதியான இறைவனின் புகழைப் பாடுவதின் மூலம் நம்மைப் பந்த பாசங்களில் இருந்து பிரித்துத் தாய் போல் விளங்கும் ஈசனின் கங்கணங்கள் அணிந்த அந்த அபய ஹஸ்தங்களையும் எந்நேரமும் நடனமாடிக் கொண்டிருக்கும் நடனத் திறன் பற்றியுமே பேசவேண்டும் என்கின்றார் மாணிக்கவாசகர். ஈசனே முத்தமிழ் முத்தமிழே ஈசன் இன்று காலை பொதிகைத் தொலைக்காட்சியில் இந்த மேற்கண்ட பாடலுக்கு உரை கூறிய பெண்மணி ஒரு முக்கியமான அதே சமயம் அதிசயமான விஷயத்தைக் கூறினார். அமெரிக்க விஞ்ஞானி ஒருவர் இந்தப் பிரபஞ்சம் பற்றிய ஆய்வின் போது இதன் மையப் புள்ளி எங்கே இருக்கின்றது எனத் தேடிக் கொண்டே வந்தாராம். கடைசியில் இந்தியாவில் தான் அந்த மையப் புள்ளி இருக்கின்றது என்பதைக் கண்டறிந்து இந்தியாவுக்கு வந்தாராம். இந்தியாவிலும் தமிழ்நாட்டில் இருக்கின்றது என்பதையும் கண்டறிந்தவர் அது சிதம்பரத்தில் இருக்கின்றது என்பதையும் கண்டறிந்தாராம். சிதம்பரம் கோயிலுக்குள் ஈசன் நடனம் ஆடிக் கொண்டிருக்கும் கோலத்தில் நின்று கொண்டிருக்கின்றார் அல்லவா?? அந்த ஊன்றிய காலின் கீழே தான் அந்த மையப் புள்ளி இருக்கின்றது என்றும் அது தான் உண்மையான சிதம்பர ரகசியம் எனவும் கூறினார் அந்தப் பெண்மணி. சிதம்பரத்தில் மூலவரும் ஒருவரே உற்சவரும் ஒருவரே. மூலஸ்தானத்தில் சதா ஓயாமல் நடனம் ஆடிக் கொண்டிருக்கும் ஈசனே உற்சவ காலங்களில் வெளியே வருகின்றார். அதற்குக் காரணமாய் அவர் கூறியதும் இந்த மையப் புள்ளி விஷயமே. மையப் புள்ளியில் நடனம் ஆடிக் கொண்டு ஒரு ஈசனும் உற்சவத்துக்கு எனத் தனியாக ஒரு திருமேனியும் இருக்க முடியாது என்பதாலேயே ஈசன் தன் ஜீவசக்தியோடு அங்கே உறைந்திருப்பதாயும் கூறினார். மேலும் தற்காலத்தில் இயல், இசை, நடனம் என்று நாம் சொல்லுவது போல் முன்காலத்தில் அமையவில்லை என்றும் சொன்னார். நமக்கு இசையும் நாடகம் என்னும் நடனமும் கஷ்டமாய் இருப்பதால் பின்னுக்குத் தள்ளி விட்டதாயும் ஆதியில் முதல் முதல் மனிதன் சைகைகள் மூலமும் உடல் மொழி மூலமுமே பேசிக் கொண்டிருந்தான் பின்னரே ஒவ்வொரு வார்த்தைகளும் வந்தன. அதை நீட்டி முழக்கி இசை உருவில் கொண்டு வந்தான் பின்னரே பேச்சு வந்தது என்றும் கூறினார். ஆனால் இப்போது பெரும்பாலும் பேச்சு மட்டுமே முதன்மை நிலையில் இருப்பதால் பேச்சுத் தமிழான இயல் முதலிடத்தில் வந்துள்ளது எனவும் கஷ்டப்பட்டு கற்கவேண்டிய இசை இரண்டாமிடத்திலும் அதைவிடக் கஷ்டமான நாடகமும் நடனமும் கடைசியாகவும் போய் விட்டது என்றும் கூறினார். இதையே சுருக்கமாய் மாணிக்க வாசகர் இந்தப் பாடலில் “ஆதித் திறம்பாடி அந்தமா மாபாடி” என்று சொல்லி இருப்பதாயும் கூறினார்.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ

கருத்துகள் இல்லை: