வெள்ளி, 25 அக்டோபர், 2019

நாராயணபட்டத்ரி பகுதி-2

பட்டத்ரி அந்த மண்டபத்தில் உட்கார்ந்தவுடன் அவருக்கு குருவாயூரப்பனின் தரிசனம் கிடைக்கவில்லை.அந்த மண்டபமானது குருவாயூரப்பனுக்கு வலது பக்கத்தில் இருந்தது.பட்டத்ரிக்கோ வாத ரோகம் இருந்ததால் தன் கழுத்தைத் திருப்பி குருவாயூரப்பனை தரிசனம் செய்ய இயலவில்லை.அப்போது பட்டத்ரி அந்த குருவாயூரப்பனை மனதில் நினைத்துக் கொண்டு ஏ கண்ணா!கிருஷ்ணா!பரந்தாமா!என்று கதறுகிறார்.உன் திவ்ய தரிசனத்தைக் காணாமல் என்னால்  எப்படி நாராயணியம் எழுத முடியும்.அதனால் நீ எனக்கு உன் திவ்ய தரிசனத்தைத்  தா என்று அழுது கண்ணீர் மல்குகிறார்.அதற்கு குருவாயூரப்பன் ஒன்றும் பேசவில்லை.வாத ரோகம் உள்ள காரணத்தால் பட்டத்ரி மனம் வருந்தி கண்ணனிடம் நீ ஒன்றுமே செய்ய வேண்டாம்.என் வலது பக்க கழுத்தில் மட்டுமாவது லேசாக அசைவு வரும்படி செய்.உன்னைப் பார்க்க அனுகிரகம் செய்.நான் முதன் முதலில் குருவாயூர் வந்திருக்கிறேன்.இதற்கு முன் உன்னைப் பார்த்தது கூட கிடையாது.என் காதால் மட்டுமே உன் புகழைக் கேட்டிருக்கிறேன் உன் சௌந்தர்ய ரூபத்தைப் பார்க்காமல் உன் மேனி அழகைக் காணாமல் நீ சூடி இருக்கும் ஆடை,ஆபரணங்களைக் காணாமல் உன் தேஜோமய திவ்ய சொரூபத்தைக் காணாமல் கருணா கடாக்ஷத்தைக் காணாமல் நான் எப்படி உன் பெருமையைப் பாட முடியும்?உன் புராணமாகிய நாராயணியம் எழுத முடியும்?அதனால் நீ தரிசனத்தைத் தா என்று மனம் குழைய கெஞ்சிக் கேட்கிறார்.

அப்போதுதான் குருவாயூரப்பன் முதன் முதலில் பட்டத்ரியிடம் பேச ஆரம்பிக்கிறார்.எண்ணால் இப்பொழுது உன் கழுத்தை சரி செய்ய முடியாது.என்று நீ வந்த காரியம் முடிவடைகிறதோ அன்றுதான் உன் வியாதி நீங்கும் என்று கூறுகிறார்.அப்பொழுது பட்டத்ரி எனக்கு உன் தரிசனம் எப்போது கிடைக்கும்?இதைக் கேட்ட குருவாயூரப்பன் கருணையோடு சொல்லலானார்.பட்டத்ரி நீ உன் மண்டபத்தில் உட்கார்ந்து கொண்டு கழுத்தை சாய்த்துதான்  என்னைப் பார்க்க வேண்டும் என்று நினைக்க வேண்டாம்.எனக்குக் கழுத்தின் இரு பக்கமும் நன்றாகத்தான் இருக்கிறது.அதனால் என் கழுத்தைத் திருப்பி என்னால் உன்னைப் பார்க்க முடியும்.நான் என் தலையைச் சாய்த்து உன்னைப் பார்க்கிறேன்.என்று கூறி பாண்டுரங்கனாக மாறி இடுப்பில் கையை வைத்துக் கொண்டு தலையை சாய்த்து பட்டத்ரியைப் பார்த்து, நீ நாராயணியம் ஆரம்பித்துக் கொள் என்று கூறி அனுகிரகம் செய்கிறார். இப்பொழுதும் நாராயண பட்டத்ரி மண்டபத்தில் உட்கார்ந்து பார்த்தால் நமக்கு அந்த குருவாயூரப்பன் தெரிய மாட்டான்.ஆனால் குருவாயூரப்பன் நின்று கொண்டிருக்கும் இடத்தில் இருந்து நம்மைக் காணமுடியும்.

1970-களில் குருவாயூரில் அவ்வளவு கூட்டம் கிடையாது.நாராயணியம் ஸ்ரீமத் பாகவதம் படிக்கத் தெரிந்தவர்கள் அந்தத் திண்ணையில் அமர்ந்து படிக்க அனுமதிக்கப்பட்டார்கள்.இப்பொழுது கூட்டம் அதிகமாகிவிட்டதால் அங்கு யாரையும் அமர அனுமதிப்பதில்லை.அப்பேர்ப்பட்ட புனிதமான இடமானதால் இப்பொழுது அங்கு ஒரு செப்புப்  பட்டயம் வைத்து நாராயண பட்டத்ரி நாராயணியம் எழுதிய இடம் என்று எழுதி வைத்திருக்கின்றனர்.சாட்சாத் அந்த குருவாயூரப்பனே பட்டத்ரி நாராயணியம் எழுதி முடித்தவுடன் இந்த ஊரில் உள்ள எல்லா இடமும் எனக்குச் சொந்தம்.ஆனால் இன்று முதல் இந்த இடம் மட்டும் உனக்கு சொந்தம்.இது இனிமேல் பட்டத்ரி மண்டபம் என்று அழைக்கப்படும் என்று கூறினார்.

எந்த காவியத்துக்கும் இல்லாத பெருமை இந்த நாராயணியத்திற்கு உண்டு.என்ன வென்றால் இந்த நாராயணியம் என்கிற க்ரந்தம் முழுவதுமே நாராயண பட்டத்ரியும் குருவாயூரப்பனும் பேசும் பாவனையில் எழுதப்பட்டுள்ளது.இது முழுக்க முழுக்க அவர்களுக்குள் நடக்கும் சம்பாக்ஷணை போல் அமைந்திருக்கிறது.நான் நாராயணியம் எழுத ஆரம்பிக்கட்டுமா?என்று பட்டத்ரி கேட்க,ம்.எழுது.நான் கேட்க ஆவலாக  இருக்கிறேன் என்று குருவாயூரப்பன் கூறுகிறான்.அப்போது பட்டத்ரி நான் நாராயணியத்தைத் தொடங்க வேண்டும் என்றால் சில பல நிபந்தனைகள் உள்ளன.அவற்றை எல்லாம் நீ பூர்த்தி செய்தால் மட்டுமே என்னால் நாராயணியம் பாட முடியும்.இல்லையென்றால் நான் ஊருக்குச் செல்கிறேன் என்கிறார்.(இங்கே குறிப்பிடவேண்டிய விஷயம் என்னவென்றால் இதுபோல் பகவானும் பக்தனும் சம்பாக்ஷணை செய்த நிகழ்வுகள் நம் நாட்டில் நிறைய உள்ளன)

திருப்பதியில் குலசேகர ஆழ்வாரும் ஸ்ரீநிவாசப் பெருமாளும் பேசுவர். ஸ்ரீரங்கத்தில் இரவில் நடக்கும் அரையர் சேவையில் நாட்டியம் ஆடிக் கொண்டே  ரங்கநாதருடன் பேசுவர்.சிதம்பரத்தில் அப்பய்ய தீக்ஷிதரும் நடராஜரும் பேசுவர்.மதுரையில் முத்துஸ்வாமி தீக்ஷிதர் மீனாக்ஷியடன் பேசுவார் இன்னும் இப்படிப்பட்ட அற்புத மகோன்னத நிகழ்வுகளைச் சொல்ல வேண்டுமானால்,காஞ்சியில் வரதராஜ பெருமாளும், திருக்கச்சி நம்பிகளும்,கந்தவேள் முருகனும்,கச்சியப்ப சிவாச்சார்யாரும்,திருக்கடையூரில் அம்பாளும்,அபிராமி பட்டரும், பிள்ளையாரும்,முருகனும்,அவ்வையாரும்,காளியும்,கவி காளிதாசனும்,திருத்தணி முருகனும்,முத்துசுவாமி தீட்சிதரும், காளியும்,ஸ்ரீஇராம கிருஷ்ண பரமஹம்சரும்,மூல ராமரும், ஸ்ரீஇராகவேந்திரரும்

இன்னும்... இன்னும்...என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும். இப்படிபரம பக்தர்களும் பரமனும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்ட புண்ய பூமி இந்த பாரதம்.இந்த அற்புதத்திற்கெல்லாம் அற்புதமாக நிகழ்ந்ததுதான் நம் பட்டத்ரியும் குருவாயூரப்பனும் பேசிக் கொண்டது. ஏனென்றால் மற்றவர்கள் எல்லாம் தங்கள் வாழ்வில் சில சமயங்களில் தங்கள் இஷ்ட தெய்வத்தோடு பேசியிருக்கிறார்கள்.ஆனால் இங்கு குருவாயூரில் பட்டத்ரி நூறு நாளும் தொடர்ந்து குருவாயூரப்பனோடு பேசும் மகா பாக்யத்தைப் பெற்றார்.பேசியது மட்டுமல்ல ஒரு நண்பனாக,தந்தையாக,குழந்தையாக பணியாளாக என அத்தனை பாவங்களிலும் அவரோடு பேசுகிறார்.

கருத்துகள் இல்லை: