திங்கள், 22 ஏப்ரல், 2019


#யாக_பூஜையும்_யாக_மண்டபமும்

யாகசாலை அல்லது யாகமண்டபம் என்பது ஒரு திருவோலக்கம் போன்றது. அதாவது, ஒரு பெரும் சக்கரவர்த்தி தனது பரிவாரங்களோடு, அத்தாணி மண்டபத்தில் எழுந்தருளியிருப்பது போல நாமும் நமது இறைவனை ஆவரண தேவ தேவியர்களோடு, சகல பரிவாரங்கள் சகிதம் யாகமண்டபத்தில் வீற்றிருக்கச் செய்கின்றோம்.

இவ்வாறு திருவோலக்கத்தில் எழுந்தருளியிருக்கிற பேரரசனுக்கு சகல வித உபசாரங்கள் வழங்குவது போல, இவ்வாறு மஹா யாக மண்டபத்தில் வீற்றருளும் இறைவனுக்கு, நாம் சகல உபசாரங்கள் வாழ்த்தி வழங்கிப் போற்றுகின்றோம்.

இவ்வாறு இந்த யாக உருவாக்கத்திலும், யாக பூஜையிலும், மந்திர பூர்வமாகவும், பாவனை மூலமும், கைலாசம், வைகுண்டம், ஸ்ரீபுரம் போன்ற தோற்றம் நம் பூமியில் உருவாகின்றது. இந்த வழிபாடுகள் நிறைவு பெற்றதும், தேவ தேவியர்களை அவரவர் இருப்பிடத்திற்கு (யதாஸ்தானம்) அனுப்பி வைப்பார்கள். பிரதான மூர்த்தியும், அஷ்ட வித்யேஸ்வரர், பீடசக்தி என்கின்ற ஸ்நபன திருமஞ்சன கும்பங்கள் அபிஷேகம் மூலம் திருவுருவத்துடன் சேர்க்கப்பெறும்.

ஆலயங்களில் நடக்கிற யாக பூஜையினில், இரண்டு மிகச்சிறப்பானது. ஓன்று வருடம் தோறும் குறிப்பிட்ட காலத்தில் நடக்கிற மஹோத்ஸவ யாகம், மற்றையது மஹா கும்பாபிஷேக யாகம்.

இதனை விட சங்காபிஷேகம், பவித்திரோத்ஸவம், பிராயச்சித்தம், விசேஷ அபிஷேகம், போன்றவற்றிலும் யாகபூஜைகள் நடைபெறுகின்றன.

இவற்றுள் மஹோத்ஸவம் என்கிற வருடாந்த பெருந்திருவிழாவுக்கான யாகசாலை நமது தென்னகத் திருக்கோயில்களில் தனியே ஆகம விதிப்படி அமைக்கப்பெற்றிருக்கக் காணலாம். (அநேகமாக திரு கோயில்களில் ஈசான பாகத்தில் மேற்கு நோக்கியதாக இந்த யாகசாலை அமைந்திருக்கும்) மற்றைய விசேட யாகங்களுக்காக யாகசாலை தற்காலிகமாக, அழகாக அமைக்கப்பெறக் காணலாம்.

மஹோத்ஸவம், கும்பாபிஷேகம் இந்த நிகழ்வுகளில் எல்லாம் தினமும் இரண்டு வேளையாக பூஜை நடக்கக் காணலாம். சாதாரணமாக யாகசாலை நாற்புறமும் வாயில்களை உடையதாகவும், 16 தூண்களுடையதாகவும், நடுவில் சதுர வேதிகை (மேடை) உடையதாகவும், இருக்கும்.

கருத்துகள் இல்லை: