வெள்ளி, 27 செப்டம்பர், 2019

ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 45 ॐ

சிதம்பரம் கோவிலின் பூஜை முறைகள் தீட்சிதர்களால் வைதீக முறைப்படி செய்யப்படுகிறது. மற்றச் சிவன் கோயில்களில் சைவ ஆகம முறைப் படியான வழிபாடுகள் நடந்து வருகின்றன என்றாலும் இன்றளவும் சிதம்பரம் கோயிலின் வழிபாட்டு முறைகள் மற்றச் சிவன் கோயில்களில் இருந்து வேறுபட்டதாயும் சொல்லப் படுகிறது. கோயில்களுக்கெல்லாம் கோயில் என்று சொல்லப்படும் இந்தச் சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்கள் "போதாயனர்" என்னும் ரிஷியின் சூத்திரங்களின் வழி முறைகளைப் பின் பற்றுவதாய்ச் சொல்லப்படுகிறது. மேலும் பூஜாவிதிகள்"பதஞ்சலி" முனிவரால் நடராஜரின் ஆக்ஞைப் படி எழுதப்பட்டதாயும் சொல்லப்படுகிறது. பூஜா பதஞ்சலம் என்னும் இந்தப் பூஜாவிதிகளே இன்றளவும் பின்பற்றப்படுவதாயும் சொல்கின்றனர். ஸ்ரீ சிதம்பரேஸ்வர நித்ய பூஜா சூத்திரம் என்னும் இந்த பதஞ்சலி பத்ததியே இன்றளவும் அனுசரிக்கப் படுகிறது. நடராஜரும் தங்களில் ஒருவர் என்னும் இவர்கள் எண்ணமும் இன்றளவும் மாற்ற முடியாமல் யாராலும் அதை உடைக்க முடியாமலும் உள்ளது. சரித்திர பூர்வமாய்ப் பார்த்தால் இந்தச் சிதம்பரம் கோயிலுக்குப் பல அரசர்கள் சக்கரவர்த்திகள் திருப்பணிகள் செய்து வந்திருக்கிறார்கள் என்றாலும் அந்நிய தேசப் படை எடுப்புக்கும் இது ஆளாகி இருக்கின்றது. முஸ்லிம்களின் படை எடுப்பின்போது மாலிக்காஃபூர் வந்து சிதம்பரம் கோயிலை ஆக்கிரமித்த போது நடந்த ஒரு விஷயம்.

இதோ: ஹிந்து சமுதாயத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் தில்லை வாழ் அந்தணர்கள் ஆற்றியுள்ள சேவை அளப்பரிய ஒன்றாகும். மாலிக் காஃபூரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலின் போது தமது உயிரினை தியாகம் செய்து தமிழகத்தின் ஆன்மிக கலைப் பொக்கிஷங்களான தெய்வத் திருவுருவச்சிலைகளை காத்தவர்கள் தில்லை வாழ் அந்தணர்கள். அமீர் குஸ்ரு தாரிக்-இ-அலை எனும் நூலில் பின்வருமாறு தில்லை வாழ் அந்தணர் அனுபவித்த கொடுமைகளை கூறுகிறான். மாலிக் மிகுந்த கவனத்துடன் அஸ்திவாரங்களை பெயர்த்தெடுத்தான். பிராம்மணர்கள் விக்கிர ஆராதனையாளர்கள் தலைகள் அவர்கள் கழுத்துக்களிலிருந்து நடனமாடியபடி தரையில் அவர்கள் கால்களில் விழுந்தது. இரத்தம் ஆறாக ஓடிற்று. என்ற போதிலும் அந்தணப்பெருமக்கள் தம் தலைகளை கொடுத்த போதிலும் தர்மத்தை விடவில்லை. தெய்வத் திருவுருவச்சிலைகளை காப்பாற்றினர். இன்று உலகெங்கிலும் நடராஜ தாண்டவ சிற்பம் அடைந்துள்ள மேன்மையான வணக்கத்திற்கு தெய்வத்திருவருளும் உங்கள் முன்னோர்களின் தியாகங்களுமே காரணம். அரவிந்தன் நீலகண்டன் எழுதிய இந்தக் கட்டுரை தீட்சிதர்களின் நடராஜ பக்தியை வெளிக்காட்டுகிறது. இது தவிரத் திப்பு சுல்தான் வந்த போது நடராஜத் திருமேனியை தீட்சிதர்கள் எடுத்துக் கொண்டு போய்த் திருச்சூரில் மறைத்து வைத்திருந்ததாயும் ஆலப்புழையில் மறைத்து வைத்திருந்ததாயும் செவிவழிச் செய்திகளும் கூறுகின்றன. 1781-ல் நடைபெற்ற இரண்டாவது மைசூர் யுத்தத்தில் "கூட்" என்னும் தளபதி சிதம்பரம் கோயிலைத் தாக்கியதாகவும் பின்னர் துரத்தி அடிக்கப் பட்டதாயும் கர்நாடக நவாபுகளைப் பற்றிய சரித்திரக் குறிப்புக்களில் காணக் கிடைக்கிறது. இந்தத் தாக்குதல் நடைபெற்ற இடம் மேலக் கோபுரம் என்றும் அதன் அடையாளங்கள் இன்னும் அந்தக் கோபுரத்தின் மாடங்களில் காண முடிகிறது எனவும் சொல்கின்றனர். இந்தச் சமயத்தில் தீட்சிதர்கள் நடராஜத் திருமேனியை எடுத்துக் கொண்டு திருவாரூர் போய் அங்கே சபாபதி மண்டபத்தில் மறைத்து வைத்திருந்ததாயும் தஞ்சையை அப்போது ஆண்டு வந்த மராட்டிய அரச வம்சத்தினர் இதற்கு உதவியதாயும் கூறப் படுகிறது. இதற்குச் சான்றாக ஆயிரக்கால் மண்டபத்தில் க்ரந்த எழுத்துக்களால் அமைந்த ஒரு ஸ்லோகத்தில் இந்த விஷயம் சொல்லப் பட்டு நடராஜர் சக வருஷம் 1695 கலியுகாதி 4874 அதாவது கி.பி. 1773-ம் வருஷம் திருவாரூரில் இருந்து "சித்சபை" வந்தடைந்ததாய்ச் சொல்லப் பட்டிருக்கிறது.

இதைப் பற்றி வரும் நாட்களில் விரிவாய்க் காண்போம்.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ

கருத்துகள் இல்லை: