வெள்ளி, 16 ஆகஸ்ட், 2019

சிதம்பர ரகசியம் பகுதி : 6

சிதம்பரம் முதலில் தில்லை வனங்கள் சூழ்ந்த காடாய் இருந்தது. பல காலத்துக்கு முன்னர் வேத காலத்திலேயே அதற்கும் முன்னே எப்போது என்று சொல்ல முடியாத தொன்மையான காலத்திலே அது தில்லைக்காடாக இருந்தது. தில்லை என்ற இந்தப் பெயர் மிகப் பழமையான ஒன்று எனப் புராணங்களின் வாயிலாகத் தெரிய வருகிறது. சரித்திர ஆராய்ச்சியாளர்களின் முடிவின் படியும் இது தில்லை வனங்கள் சூழ்ந்து இருப்பதால் தில்லை எனப் பெயர் பெற்றதாய்ச் சொல்கிறார்கள். இதற்கு நான் இன்னும் ஆதாரங்களைப் பார்க்கவில்லை. நேரம் இல்லை. ஆனால் சரித்திர ஆராய்ச்சியாளர்கள் சொல்வதன் படி முற்காலத்தில் உருவ வழிபாடு இல்லை எனவும் பின்னால் சாதாரண மக்களுக்கு இறை நம்பிக்கை ஊட்டும் பொருட்டு உருவ வழிபாடு ஏற்பட்ட காலத்தில் மரங்கள் சூழ்ந்த வனங்களில் ஏதாவது ஒரு மரத்தின் கீழ் தங்கள் தங்கள் இஷ்ட தெய்வத்தின் உருவத்தை அமைத்து வழிபட்டனர் என்றும் பின்னால் அந்தக்குறிப்பிட்ட மரமே அந்த ஊரின் ஸ்தல விரு்ஷமாக மாறியது என்றும் சொல்கிறார்கள். அப்படி ஏற்பட்டது தான் காஞ்சியில் மாமரம், நாகப்பழ மரம் திருவானைக்காவல், கடம்ப மரம் மதுரை, தில்லை மரம் சிதம்பரம் என்று ஏற்பட்டதாய்ச் சொல்கிறார்கள்.

மக்களின் நம்பிக்கையின் படியும் புராணங்களின் வாயிலாகவும் தில்லையில் உள்ள நடராஜர் கோயில் கடவுள் தனக்காக ஏற்படுத்திக் கொண்டது என்கிறார்கள். தேவலோகச் சிற்பியான விஸ்வகர்மா வால் ஏற்படுத்தப் பட்ட இந்தக் கோயிலில் உள்ள சிதம்பர ரகசியம் என்பதன் உள் அர்த்தததைத் தெரிந்து கொண்டதும் கட்டப் பட்டது என்பார்கள். இதை விஸ்வகர்மா பதஞ்சலி முனிவரிடம் இருந்து தெரிந்து கொண்டு அதற்கு ஏற்பக் கட்டியதாய்ச் சொல்லப் படுகிறது. இந்தக் கோயிலில் நடராஜர் வருமுன்னேயே வியாக்ரம பாதர் ஆசிரமமும் பதஞ்சலி முனிவரின் ஆசிரமமும் இருந்து வந்ததாயும் அவர்கள் சிவனைக் குறித்துத் தவம் செய்து வந்தார்கள் என்றும் தெரிய வருகிறது. இதில் வியாக்ரமபாதரைப் பற்றி அதிகம் அறிய முடியவில்லை. சிவனுக்குப் பூஜை செய்யப் பூக்கள் பறிக்கவும் மற்ற வேலைகளுக்கு உதவியாக இருக்கவும் அவர் புலிக்கையும் காலும் வேண்டிப் பெற்றுக் கொண்டதாய்ச் சொல்வார்கள். பதஞ்சலியோ என்றால் ஆதிசேஷனின் அவதாரம் ஆவார். முன் பதிவில் பார்த்தோம்.

பதஞ்சலி முனிவரும் வ்யாக்ரமபாதரும் இங்கே தவம் செய்யும் காலத்தில் சிவனின் ஆனந்த தாண்டவத்தின் காட்சியைக் காண விரும்பினார்கள். எல்லாம் வல்ல அந்தப் பரம்பொருளும் அவர்களுக்குத் தன் ஆனந்த தாண்டவத்தைக் காட்டி அருளினார். அப்போது அவர் தன்னுடன் காசி நகரில் இருந்து 3,000/- வேத விற்பன்னர்களை வரவழைத்தார். இந்த வேத விற்பன்னர்கள் தான் சிதம்பரம் தீட்சிதர்கள். இதைப் பின்னால் பார்ப்போம். முதன் முதல் இந்தக் கோவில் இருந்த இடத்தில் தில்லை வனங்கள் சூழ்ந்திருந்த இடத்தில் காளி தான் கோயில் கொண்டு இருந்திருக்கிறாள். பதஞ்சலி முனிவரும் வ்யாக்ரமபாதரும் மற்ற ரி்ஷி முனிவர்களும் முதலில் தானாக உருவான ஒரு சிவலிங்கத்தைத் தான் வணங்கி வழிபட்டு இருக்கிறார்கள். இவர்கள் ஆனந்தத் தாண்டவத்தைக் காணுவதற்கு முன்னால் நடந்தது இது. இவர்கள் ஆனந்தத் தாண்டவத்தைக் காண வேண்டித் தவம் செய்து இறைவன் காட்சி கொடுத்து தாண்டவம் ஆடத் தயாராக இருக்கும் வேளையில் அன்னையவள் அங்கே வந்து வழி மறித்தாள். வியாக்ரபாதர் என்பது தவறு எனவும் வ்யாக்ரமபாதர் தான் சரி எனவும் திரு ஆகிரா கூறியதன் பேரில் வ்யாக்ரமபாதர் என்றே குறிப்பிட்டு உள்ளேன். நாளை போட்டி நடனம். காண வாருங்கள். யார் ஜெயிக்கப் போறாங்க என்பது எல்லாருக்கும் தெரியும் என்றாலும் அனைவரையும் வருக வருக என அழைக்கிறேன்.

மீண்டும் நாளை சந்திக்கலாம்

கருத்துகள் இல்லை: