திங்கள், 12 ஆகஸ்ட், 2019

32. தட்சிணாமூர்த்தி

சிவபெருமானுடன் கையிலையில் உரையாடிக் கொண்டிருந்தார் பார்வதி தேவியார். அப்பொழுது சிவபெருமானிடம் ஐயனே தட்சனின் மகளானதால் தாட்சாயினி எனும் பெயர் எனக்கு ஏற்பட்டது. தங்களை அவமதித்த தட்சனின் இப்பெயரை வைத்திருப்பது எனக்குப் பிடிக்கவில்லை எனவே அப்பெயர் மாறும் வண்ணம் வரம் வேண்டுமெனக் கேட்க உடன் சிவபெருமானும் பார்வதி மலை மன்னன் குழந்தை வரம் வேண்டி தவமிருக்கிறான், அவனுக்கு நீ மகளாகச் செல். பின் நான் வந்து மணமுடிப்பேன் என்றுக் கூறி அனுப்பினார். அங்கே குழந்தை உருவில் வந்த பார்வதி தேவி வளரத் துவங்கினார். இதற்கிடையே நான்முகனின் நான்கு புதல்வர்களான சனகன், சனந்தனன், சனாதனன், சனத்குமாரன் என்ற நான்கு முனிவர்கள் வேதாகமத்தை ஆரம்பம் முதல் முடிவு வரை படித்திருந்தனர். இருப்பினும் அவர்களது மனம் அலைபாய்ந்துக் கொண்டிருந்தது. இதனை சிவபெருமானிடம் கூறி தங்களுக்கு வேதத்தின் உட்பொருளை உபதேசிக்குமாறு வேண்டினார். உடன் சம்மதித்த சிவபெருமான் நந்திதேவரிடம் சென்று மன்மதனைத் தவிர வேறு யார் வந்தாலும் உள்ளே விட வேண்டாம் என்றுக் கட்டளையிட்டு வந்து சனகாதியர்க்கு பதி, பசு, பாசம் இவற்றையெல்லாம் விளக்கி விரிவாகக் கூறினார். உடன் அவர்கள் மேலும் மனம் ஒடுங்கும்படி ஞான உபதேசம் செய்யச் சொன்னார்கள். உடனே சிவபெருமான் இதைக் கேட்டவுடன் மெல்லிய புன்னகைப் புரிந்து "அப்பொருள் இவ்வாறிருக்கும் என்றுக் கூறினார். பின்னர் மேலும் புரியவைக்க தன்னையே ஒரு  முனிவன் போலாக்கி தியானத்தில் ஒரு கணநேரம் இருந்தார். அதே நிலையிலேயே அந்த நால்வரும் இருந்தனர். அப்போது மன்மதன் உள்ளே வந்து சிவபெருமான் மேல் பாணம் விட, கோபமுற்ற சிவபெருமான் அவனை நெற்றிக் கண்ணாலே எரித்தார். சிவபெருமான் அந்நிலை நீங்கி முனிவர்களை வாழ்த்தி அனுப்பினார். இறைவன் தட்சிணாமூர்த்தியாக இருந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசித்தால் அவரது பெயர் "தட்சிணாமூர்த்தி ஆயிற்று. இவரை தரிசிக்க செல்லவேண்டிய தலம் "ஆலங்குடி யாகும், குடந்தை-நீடாமங்கலம் வழியாக இவ்வூர் உள்ளது. இறைவன் காசியாரணியர். இறைவி <உமையம்மையாவார். இங்கு நடைபெறும் குருபெயர்ச்சி விசேசமாகும். சித்ரா பௌர்ணமி, தைப்பூசம், பங்குனி <உத்திரம் போன்ற நாட்களில் இருபத்தி நான்கு நெய் விளக்கு ஏற்ற திருமணத்தடை நீங்கும், குழந்தை பேறு கிடைக்கும். வெண்தாமரை அர்ச்சனையுமும் தயிரன்ன நைவேத்தியமும் வியாழக்கிழமைகளில் கொடுக்க நினைவாற்றல் பெருகும்.

இந்த தட்சிணாமூர்த்தி முன் நீர் ஆரத்தி எடுத்து தீபம் ஏற்ற தடைபெற்ற திருமணம் நடைபெறும், புத்திரப் பேறு கிடைக்கும்.
----------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை: