திங்கள், 12 ஆகஸ்ட், 2019

274 சிவாலயங்கள் : அருள் மிகு சக்கரவாகேஸ்வரர் திருக்கோயில்

மூலவர் : சக்கரவாகேஸ்வரர்
அம்மன் : தேவநாயகி
தல விருட்சம் : வில்வம்
தீர்த்தம் : காவிரியாறு, காக தீர்த்தம்
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருச்சக்கரப்பள்ளி, இராசகிரி ஐயம்பேட்டை
ஊர் : சக்கரப்பள்ளி
மாவட்டம் : தஞ்சாவூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்,தேவாரபதிகம்

மின்னினார் சடைமிசை விரிகதிர் மதியமும் பொன்னினார் கொன்றையும் பொற்கிளர் அரவமும் துன்னினார் உலகெலாம் தொழுதெழு நான்மறை தன்னினார் வளநகர் சக்கரப் பள்ளியே. திருஞானசம்பந்தர்.

தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 17வது தலம்.

விழா : பங்குனி உத்திரம், சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை.  
 
திறக்கும் நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். அரும் மிகு சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில், சக்கரப்பள்ளி,அய்யம்பேட்டை அஞ்சல் 614 201. தஞ்சாவூர் மாவட்டம். போன் : +91-4374-311 018 
     
பொது தகவல் : மக்கள் வழக்கில் இவ்வூர் ஐயம்பேட்டை என்று வழங்குகிறது. இப்பெயரில் பல ஊர்கள் இருப்பதால் வழக்கில் இவ்வூரைத் தஞ்சாவூர் ஐயம்பேட்டை என்று கூறுகின்றனர்.  கோயில் கிழக்கு நோக்கியுள்ளது. கொடிமரமில்லை. உள்ளே நுழைந்ததும் முதலில்  வலப்பால் அம்பாள் சன்னதி உள்ளது. தெற்கு நோக்கியது. நின்றநிலை. கருவறை கீழ்புறம் கருங்கல்லாலும் மேற்புரம், விமானம் சுதையாலும் ஆக்கப்பட்டவை. விமானத்தில் அதிக சிற்பங்களில்லை. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தெட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை அகியோர் உள்ளனர். பிரகார வலம்  வரும் போது  விநாயகர், சுப்பிரமணியர் சன்னதிகள் உள்ளன. மகாமண்டபத்தில் சூரியன், சந்திரன், அழகான பைரவர், நால்வர் ஆகியோர் காட்சி தருகின்றனர். கல்வெட்டுக்களில், இவ்வூர், குலோத்துங்க சோழவள நாட்டு, விளநாட்டு, இராசேந்திர சோழ சதுர்வேதிமங்கலம்' என்று குறிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் குலோத்துங்க சோழனின் 12 ஆவது ஆண்டுக் கல்வெட்டு, இவ்வூர்ச்சபைக்குரிய சில விதிகளைக் கூறுகின்றன. நாற்பது வயதுக்கு மேற்பட்டவரே ஊர்ச்சபை உறுப்பினராகலாம் என்றும், அவர்களும் பத்து ஆண்டுகளுக்குள் உறுப்பினர்க்கு நிற்காதவராக இருக்கவேண்டுமென்றும் ஊர்ச்சபை விதிகள் கூறப்பட்டுள்ளன.

பெருமை : இந்திரன் குமாரனான ஜயந்தனும் தேவர்களும் பூசித்த தலம். திருமால் இத்தல இறைவனை வழிபட்டு சக்கராயுதம் பெற்றதனால் இத்தல இறைவனுக்கு சக்கரவாகேஸ்வரர் என்றும், ஊர் சக்கரப்பள்ளி என்றும் பெயர். சப்த தலங்களில் இத்தலமும் ஒன்றாகும். பிராமி, மகேஸ்சுவரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, மாகேந்திரி, சாமுண்டி முதலிய சப்தமாதர்கள் வழிபட்ட தலம். சயந்தனும் தேவர்களும் வழிபட்ட தலம்.

ஸ்தல வரலாறு : திருமால் அம்மனை வழிபட்டுச் சக்கராயுதம் பெற்ற தலம். சக்கரவாளப் பறவை வழிபட்ட தலம் என்றும் கூறுவர். "" வண்சசக்கிரம் மால் உறைப்பால் அடிபோற்றுக் கொடுத்தபள்ளி' என்பது இத் தலபுராண வரலாற்றை உறுதிப்படுத்தும்.


கருத்துகள் இல்லை: