திங்கள், 8 ஜூலை, 2019

திருமணத்தின் போது சொல்லப்படும் சப்தபதி மந்திரங்கள்...
பாக்கியம் உள்ளவர்கள் மட்டுமே இதை முழுவதும் படிப்பார்கள்....

ஸகா! சப்தபதா! பவ ஸாக்யோவ்! சப்தபதா! பாபூவா!
என்னுடன் ஏழு அடிகள் எடுத்து வைத்து நீ என் சிறந்த தோழி ஆவாய்.

ஸக்யம் தே கமே யம் ஸக்யாத் தே மாயோஷம் ஸகயன் மே!
நாம் இணைவது தெய்வத்தின் ஆணையாகக் கருதுவதால், இந்த பந்தத்தில் இருந்து நான் என்றும் விடுபடமாட்டேன்.

மாயோஷ்ட சமயாவ சமயாவ சங்கல்பாவஹை சம்ப்ரியோவ்
அன்போடும் பாசத்தோடும் இணைந்து நாம் எல்லாச் செயல்களையும் இணைந்தே செய்வோம்
ரோசிஷ்ணு சுமனஸ்யமநோவ் இஷாமூர்ஜம் அபி ஸ்வசாநோவ்
நாம் எண்ணத்தாலும் செயலாலும் நண்பர்களாக இருப்போம். நம் கடமைகளையும் கர்மாக்களையும் இணைந்தே செய்வோம்

மனக்ஹும்சி சம்வ்ரதாஸ் ஸ்மு சித்தானி ஆகாரம் சத்வமாசி
நீ பாடல் எனில் நான் இசையாக இருக்கிறேன், நீ இசை எனில் நான் பாடலாக இருக்கிறேன்.

அமூஹம் அமூஹமாஸ்மி ஸா த்வம் த்யோவ்றஹம்
நான் ஆகாசமாக இருக்கிறேன் நீ பூமியாக இருக்கிறாய்

பருத்திவீ தவம் ரேதோ அஹம் ரேதோ பிருத்வம் மனோஹமஸ்மி
நான் செயலின் ஆதாரமாக இருக்கிறேன் நீ செலுத்தும் ஆற்றலாக இருக்கிறாய்

வாக் தவம் ஸாமா ஹம் அஸ்மி ருக்த்வம் சாமாம்
நான் எண்ணங்களாக இருக்கிறேன் நீ அதைச் சொல்லும் வாக்காக இருக்கிறாய்

அனுவ்ரதா பாவ பும்சே பும்சே புத்ராய வேத்தவை
நீ வார்த்தைகளாக இருக்கிறாய் நான் அதன் பொருளாக (அர்த்தம்) இருக்கிறேன்

ஸ்ரீயை புத்ராய வேத்தவை ஏஹி ஸூந்ரூரூதே||
நீ உன் அன்பான வார்த்தைகளால் என் வாழ்நாட்களை நிரப்பு, என் ஆற்றலாய் இருந்து நம் வாழ்வை மகிழ்ச்சியால் செழிக்கச் செய்வாயாக, நம் குடும்பம் குழந்தைகளால் செழித்து வளர உதவுவாயாக.
============================================
முதலடி: ஏகமிஷே விஷ்ணுத்வ அன்வேது
தெய்வ சாட்சியாக எடுத்து வைக்கும் முதல் அடி

இரண்டாவதடி: த்வே ஊர்ஜ்வே விஷ்ணுத்வ அன்வேது
உனக்கும் நம் சந்ததிகளுக்கும் அளவில்லாத உணவுகளைக் கொடுக்க கடமைப்படுகிறேன். உனக்கு அளவில்லாத ஆற்றலும் ஆரோக்கியமும் அளிக்க உறுதிகொள்கிறேன்

மூன்றாமடி: த்ரீணீ வ்ருத்தவ விஷ்ணுத்வ அன்வேது
வேதங்களில் சொன்னபடி உன் வாழ்நாள் முழுதும் உன் கடமைகளை பூர்த்தி செய்ய நான் துணையிருக்க கடமைப்படுகிறேன். உன் விரதங்களை(கடமை) அனுஷ்டிக்க துணையிருப்பேனென உறுதிகொள்கிறேன்

நாலாமடி: சத்வாரி மாயோ விஷ்ணுத்வ அன்வேது
நீ வாழ்நாள் முழுதும் மகிழ்ந்திருக்கச் செய்ய கடமைப்படுகிறேன்.உனக்கு மகிழ்ச்சியைத் தருவேனென உறுதிகொள்கிறேன்

ஐந்தாமடி: பஞ்ச பசுப்ய: விஷ்ணுத்வ அன்வேது
நீ உன் வீட்டில் வளர்க்கும் செல்லபிராணிகளுக்கும், பசுக்களுக்கும், பயிர்களுக்கும் பாதுகாப்பாயிருந்து அவை பெருகி வளம் கொழிக்கச் செய்யவும் துணையிருக்க கடமைப்படுகிறேன். நீ பராமரிக்கும் செல்லப்பிராணிகள், பசுக்கள் போன்றவை பெருகத் துணையிருப்பேனென உறுதிகொள்கிறேன்.

ஆறாமடி: சத்ரு துப்யா: விஷ்ணுத்வ அன்வேது
மழை வெயில் பனி போன்ற எல்லா காலங்களிலும் நீயும் நம் சந்ததியினரும் பாதுகாப்பாக இருக்கத் துணையிருக்க கடமைப்படுகிறேன்.உனக்கு துன்பம் வராமல், எல்லா காலங்களிலும் காப்பேன் என உறுதிகொள்கிறேன்.

ஏழாமடி: சப்த சப்தப்யா: விஷ்ணுத்வ அன்வேது
அக்னி வளர்த்து நீ செய்யும் செயல்கள் வெற்றிபெற துணையிருக்கவும், உனக்கு இடைஞ்சல்கள், தீங்கு நேராமல் காக்கும்படி கடமைப்படுகிறேன்.நீ அக்னி வளர்த்து செய்யும் செயல்கள் எல்லாவற்றிற்கும் இடைஞ்சலில்லாமல் பார்த்துக் கொள்வேன் என உறுதிகொள்கிறேன்.
========================================
இருவரும் சொல்வது
========================================

ஓம் ஏகோ விஷ்ணுஜர்கத்ஸ்வரம், வ்யாஸம் யேன சராசரம்! ஹ்ருதயே யஸ்ததோ யஸ்ய! தஸ்ய ஸாக்ஷி ப்ரதீயதாம்!

மணமகன் சொல்வது: என் இணையே! நம் ஹ்ருதயபூர்வ அன்பினால் இணைந்து இந்த முதல் காலடி எடுத்து வைக்கிறோம். நீ நம் ஆரோக்கியத்திற்கு உகந்த உணவுகளைச் சமைப்பாயாக. என் செயல்பாடுகள் ஒவ்வொன்றிற்கும் உன் துணையையும் வேண்டுகிறேன். நீ நம் குடும்ப மேன்மைக்கு உதவியாய் இருப்பாயாக. நீயும் நம் சந்ததிகளும் மகிழ்வுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டிய செல்வ-நலன்களுக்காக உழைத்து உங்களைப் பேணுவேன் என்று உறுதி கூறுகிறேன். நீ என்னைப் பேணுவாயாக.

ஓம் இஷ ஏகபதி பவ ஸா மாமனுவ்ரதா பவ! விஷ்ணுஸ்த்வானயுது புத்ரான் வின்தாவஹை! பஹூம்ஸ்தே ஸந்து ஜரதஷ்டய:

மணமகள் சொல்வது: உன்னிடம் நானும் அன்பினால் பணிந்து இணைகிறேன். நீ உன் வீட்டின் பொறுப்புக்கள் அனைத்தையும் என்னிடம் அளித்துவிடு. உனக்கான உணவை நானே தருகிறேன். நீ நம் குடும்பத்திற்காக ஈட்டிவரும் செல்வங்களை பேணி வளர்த்து செழிக்கச் செய்கிறேன் என்று உறுதி கூறுகிறேன். நம் குழந்தைகளும் நாமும் ஆரோக்கியத்துடனும் மகிழ்வுடனும் இருக்க பார்த்துக்கொள்ளும்படி நீ என்னைப் பேணுவாயாக.

ஓம் ஜீவாத்மா பரமாத்மா ச, ப்ருத்வி ஆகாஷமேவ ச! சூர்யசந்த்ரத்வயேமர்த்தயே, தஸ்ய சாக்ஷி ப்ரதீயதாம்!!

அன்பே! ஜீவனும் ஆத்மாவும் போல என்னில் இரண்டரக் கலந்த நீ, என்னோடு இரண்டாமடி எடுத்து வைத்து விட்டாய். பூமி ஆகாசத்தை நிரப்பி, ஆகாசத்தின் இருப்பைக் குறிப்பது போல, என் இதயத்தை உன் அன்பின் ஆற்றலால் நிரப்பி உறுதியாக்கு. உன் மகிழ்ச்சியாலேயே என் இதயம் உறுதியாகும்.அப்போதுதான் நானும் மகிழ்ந்திருப்பேன். நாம் இணைந்து நம் குடும்பத்தையும் குழந்தைகளையும் காப்பாற்றுவாயாக.

ஓம் ஊர்ஜே த்விபதீ பவ ஸா மாமனுவ்ரதா பவ! விஷ்ணுஸ்த்வானயு புத்ரான் வின்தாவஹை, பஹூம்ஸ்தே ஸந்து ஜரதஷ்ட்ய:!!

என் அன்பே! நீ துக்கமடைந்திருக்கும்போது, உன் இதயத்தை என் அன்பின் ஆற்றலால் நிரப்புவேன். நீ சந்தோஷமாயிருக்கும்போது நானும் மகிழ்ந்திருப்பேன். உன்னை என் அன்பான வார்த்தைகளால் மகிழ்வுறச் செய்வேன் என்று உறுதிகொள்கிறேன். நம் குடும்பத்தையும் குழந்தைகளையும் உன் மனைவியாக உன்னோடு இணைந்து காப்பேன் என்று உறுதிகூறுகிறேன்.

ஒம் த்ரிகுணாஷ்ச த்ரிதேவாஷ்ச, த்ரிசக்தி: சத்பராயண:!! லோகத்ரயே த்ரிஸந்த்யாயா: தஸ்ய ஸாக்ஷீ ப்ரதீயதாம்!

அன்பே! இப்போது என்னோடு மூன்றடிகள் நடந்துவிட்டாய். மங்களங்கள் நிறைந்த உன் கரங்களைப் பற்றிய எனக்கு இந்தப் புண்ணியத்தால் செல்வச் செழிப்பு நிறைந்து வளம் பெருகப்போகிறது. இன்றிலிருந்து உன்னைத் தவிர மற்ற பெண்கள் அனைவருமே என் தாய்கும் சகோதரிக்கும் ஒப்பாகக் கருதுவேன். நம் குழந்தைகளுக்கு கல்விச்செல்வத்தை நாம் இணைந்து அளிக்கலாம் கல்வி செல்வம் பெருகி அவர்கள் நீடூழி வாழட்டும்.

ஓம் ராயஸ்போஷாய த்ரிபதீ பவ ஸா மாமனுவ்ரதா பவ! விஷ்ணுஸ்த்வானயு புத்ரான் வின்தாவஹை, பஹூம்ஸ்தே ஸந்து ஜரதஷ்ட்ய:!!

அன்பே! என் ஹ்ருதயபூர்வமாய் உன்னை விரும்புகிறேன், என் கணவனாக வரித்து உன் நலனையே குறித்திருப்பேன். மற்ற ஆண்கள் அனைவருமே என் தந்தைக்கும் சகோதரனுக்கும் ஒப்பாகக் கருதுவேன். நீயே என் மகிழ்ச்சியாக இருக்கிறாய்.

ஓம் சதுர்முகஸ்த்தோ ப்ரம்மா, சத்வாரோ வேதஸம்பவா: சதுர்யுகா: ப்ரவதந்த்ரே தேஷாம் சாக்ஷீ ப்ரதீயதாம்!!

அன்பே! என் பூர்வபுண்ணியங்களின் பலனாகவே உன்னோடு இந்த நான்காம் அடி எடுத்து வைக்கிறேன். என் வாழ்வில் சர்வமங்களங்கள் உன்னோடு வருகின்றது. நீ எனக்கு கர்மாக்கள் செய்யும் தகுதியுடைய புண்ணியத்தை தருகிறாய். நமக்கு செரிந்த அறிவும், பணிவும், மேன்மையும் கூடிய மக்கட்செல்வம் உண்டாகட்டும். அவர்கள் நீடூழி வாழ வாழ்த்துவோம்.

மாயோ பவாய சதுஷ்பதி பவ ஸா மாமனுவ்ரதா பவ! விஷ்ணுஸ்த்வாநயது புத்ரான் வின்தாவஹை பஹூம்ஸதே ஸந்து ஜரதஷ்டய:!!

உன் வாழ்க்கை புஷ்பங்களிலிருந்து வீசும் நறுமணம் போல மணம் வீசட்டும். மணமாலையில் கோர்க்கப்பட்ட பூக்கள் போல உன்னோடு இணைந்தும், குழைத்து வைத்த சந்தனத்தினைப் போல உன் அன்பால் நெகிழ்ந்தும் இருக்கிறேன்.

ஓம் பஞ்ச்சமே பஞ்ச்சபூதானாம், பஞ்ச்சப்ராணை: பராயணா:! தத்ர தர்ஷணிபுண்யானாம் சாக்ஷிண: ப்ராணபஞ்சதா:

அன்பே, இப்போது என்னோடு ஐந்தாம் அடியையும் எடுத்து வைத்து என் வாழ்வை சிறப்பானதாக்கினாய், அர்த்தமுள்ளதாக்கினாய். உனக்கு தெய்வத்தின் அருள் என்றும் இருக்கட்டும். நம் சந்ததிகள் நீடூழி வாழட்டும்.

ஓம் ப்ரஜாப்யாம் பஞ்சபதி பவ ஸா மாமனுவ்ரதா பவ! விஷ்ணுஸ்த்வாநயது புத்ரான் வின்தாவஹை பஹூம்ஸதே ஸந்து ஜரதஷ்டய:!!

அன்பே நான் உனது துக்கங்களிலும் சந்தோஷங்களிலும் பங்கு கொள்கிறேன். உன் அளவில்லாத அன்பு கண்டு உன் மீது மதிப்பும் நம்பிக்கையும் கூடுகிறது. இந்த அன்பைப் பெற நான் எதுவும் செய்வேன்.

ஓம் ஷஷ்டே து ஷட்க்ருதூணாம் ச, ஷண்முக: ஸ்வாமிகார்த்திக: ! ஷட்ரஸா யத்ர ஜாயந்தே, கார்த்திகேயாஷ்ச சாக்ஷிண:!!

அன்பே! ஆறாம் அடியெடுத்து என்னோடு நடந்து என் இதயத்தை மகிழ்ச்சியால் நிரப்பினாய். நம் பந்தத்தால் நமக்கு மகிழ்ச்சியும் அமைதியும் என்றென்றும் விளையட்டும்.

க்ருதுப்ய: ஷட்ஷ்பதி பவ ஸா மாமனுவ்ரதா பவ! விஷ்ணுஸ்த்வாநயது புத்ரான் வின்தாவஹை பஹூம்ஸதே ஸந்து ஜரதஷ்டய:!!

அன்பே! நீ தர்மானுஷட்டான காரியங்கள் செய்யும் போதெல்லாம் நானும் அதில் பங்கேற்று உனக்கு துணையாயிருப்பேன். நம் குடும்பத்திற்கு தேவையான செல்வச் செழிப்புக்களை மிகுதியாக்க துணையிருப்பேன். தெய்வ காரியங்களிலும், நம் மகிழ்ச்சிக்காக நீ செய்யும் ஒவ்வொரு காரியங்களிலும் எப்போதும் துணையிருப்பேன்.

ஓம் சப்தமே ஸாகராஷ்சைவ ஸப்ததீபா: ஸபவர்த்தா:! ஏஷாம் ஸப்தஷிர்பதநீநாம் தேஷாமாதஷர்சாக்ஷிண:!!

அன்பே! இந்த ஏழாம் அடியோடு நம் பந்தம் பிரிக்கவியலாததாக பிணைந்தது. நம் அன்பும் நட்பும் தெய்வீகமானது. தெய்வமே ஏற்படுத்திய பந்தம்தான் இது. நீ முழுமையாக எனதானாய், நான் முழுமையாக உனதானேன். என் வாழ்க்கையை உன் கையில் ஒப்படைக்கிறேன். என் வாழ்க்கை போகும் திசையை நீயே தீர்மானிப்பாயாக.

ஸகே சப்தபதி பவ ஸா மாமனுவ்ரதா பவ! விஷ்ணுஸ்த்வாநயது புத்ரான் வின்தாவஹை பஹூம்ஸதே ஸந்து ஜரதஷ்டய:!!

அன்பே! தெய்வத்தின் ஆணையாலும், புண்ணிய புத்தகங்களான வேதங்களில் குறித்த வண்ணமும் கர்மங்களைச் செய்து நாம் இணைந்தோம். நான் உனது மனைவியானேன். நாம் செய்த சத்தியப் பிரமாணங்கள் அனைத்துமே மனதால் செய்தவை. நாம் ஒருவருக்கொருவர் உண்மையாயிருப்போம். இந்தத் திருமணம் நம் வாழ்நாள் முடியும் வரை நீடித்திருக்கட்டும்.

கருத்துகள் இல்லை: