திங்கள், 8 ஜூலை, 2019

பசுவந்தனை சங்கு ஸ்வாமிகள் (பகுதி-2)

விடிந்தது தங்களுடைய வயலுக்கு நீர் பாய்ச்சப்பட்டிருக்கும் என்ற எண்ணத்துடன் வயலுக்கு வந்த அண்ணன் பக்கத்து வயலில் நீர் பாய்ந்து இருந்ததைக் கண்டு அர்ச்சியுற்றார். ஸ்வாமிகள் மீது ஆத்திரம் கொண்டார். ஏண்டா நம் வயலில் தண்ணீர் இறைக்கச் சொன்னால் அடுத்தவன் வயலுக்கு வேலை செய்திருக்கிறாயே. நம் வயலில் பொட்டுத் தண்ணீரைக் காணோம். உனக்கு மூளை பிசகி விட்டதா? என்று கத்தினார். ஸ்வாமிகள் தண்ணீர் இறைப்பதை நிறுத்தாமல் அண்ணா எங்கே பாய்ந்தால் என்ன. அதுவும் நம் வயல் தானே. அந்த வயலிலும் தண்ணீர் இல்லையே என்றார். ஆத்திரமுற்ற அண்ணன் வரப்பில் கிடந்த கழியை எடுத்து ஸ்வாமிகளின் மேல் மாறி மாறி அடித்தார். அப்படியே களைப்புற்றார். சங்கு ஸ்வாமிகள் தன் மேல் விழுந்த அடிகளைப் பொருட்படுத்தாமல் புன்னகைத்தார். அண்ணா இப்படி ஓங்கி ஓங்கி அடித்தாயே உன் கைகள் என்னமாய் வலிக்கும்? நான் கொஞ்சம் தடவி விடவா? என்று பரிவுடன் கேட்டார். அவ்வளவு தான் அடுத்த வினாடி. அனல் மேல் பட்ட புழுபோல் அண்ணன் விழுந்து துடித்தார். இதைக் கண்டு சகிக்க முடியாத ஸ்வாமிகள். கவலை வேண்டாம் அண்ணா உமது வலி இந்தக் கணமே நீங்கும் என்று சொல்ல. அதுவரை சகோதரனை துவள வைத்த வலி சட்டென்று அகன்றது. அதிர்ந்து போனார் அண்ணன்.

முன்பு ஸ்வாமிகளின் தந்தை இப்போது அண்ணன். அடிப்பட்டவருக்கு வலிக்கும் என்பது சரி. அடித்தவருக்கும் வலிக்குமா என்று யோசித்த சகோதரர் ஏதோ ஒரு சக்தி ஸ்வாமிகளிடம் இருப்பதை உணர்ந்தார். இந்தச் சேதி மெள்ள மெள்ள அக்கம் பக்கத்துக்கு ஊர்களுக்குப் பரவியது. பிறகு உள்ளூர்க்காரர்கள் எவரும் ஸ்வாமிகளிடம் எந்த வேலையையும் தருவதில்லை. வேலைக்காரனைப் போல் ஸ்வாமிகளைப் பயன்படுத்தி வந்தவர்கள். அவரைப் பார்த்ததும் மரியாதையுடன் கையெடுத்துக் கும்பிட்டனர். ஸ்வாமிகள் வழக்கம் போல் இஷ்டப்படித் திரிந்தார். கிடைத்ததை உண்டார். அந்க ஊரில் உள்ள பாழடைந்த மண்டபம் ஒன்றில் படுத்து உறங்கினார். பல முறை நிஷ்டையில் ஆழ்ந்து விடும் ஸ்வாமிகள் சமாதி நிலைக்குச் சென்று விடுவார். இந்த நிலையில் அவரைப் பார்ப்பவர்கள் ரொம்ப களைப்புல தூங்கிறார் போல என்றே கருதுவர். ஒரு நாள் தந்தை மற்றும் சகோதரருடன் தரையில் உட்கார்ந்து சாப்பிட்டார் ஸ்வாமிகள். மூவருக்கும் உணவு பரிமாறிக் கொண்டிருந்தார் ஸ்வாமிகளின் தாயார். இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க ஸ்வாமிகள் மட்டும் கண் மூடித் தவத்தில் மூழ்கிக் கிடந்தார். இந்தத் தருணத்தைப் பயன் படுத்தி அவருடைய அண்ணன் நைஸாக ஸ்வாமிகளின் தட்டில் இருந்த உணவை எடுத்துச் சாப்பிட்டார். சிறிது நேரத்தில் கண் விழித்த ஸ்வாமிகள் தட்டைப் பார்ததார். அண்ணனோ ஸ்வாமிகளை ஏளனத்துடன் பார்த்தார்.

அவ்வளவு தான் சட்டென்று ஸ்வாமிகள் தட்டு முழுவதும் உணவுப் பதார்த்தங்கள் நிரம்பி வழிந்தன. அதிர்ந்து போன அண்ணன் குழப்பத்துடன் ஸ்வாமிகளை ஏறிட்டார். அண்ணா வேண்டுமானால் இந்த உணவையும் எடுத்துக் கொள்ளுங்கள். இறை சிந்னையில் இருக்கும் என்னை பசி ஒன்றும் செய்யாது என்றார். ஒரு முறை சிங்கம்பட்டி ஜமீன்தாரான நல்லக்குத்தி பெரியசாமித் தேவர் ராஜா பூர்வ ஜன்ம வினைப்பயனால் மகோதரம் என்னும் கல்லீரல் சம்பந்தப்பட்ட நோயால் பெரிதும் அவதிப்பட்டார். (சங்கு ஸ்வாமிகள் காலத்தில் ஜமீனை ஆண்டு வந்தவர் இவர்) பசுவந்தனையில் இருந்து சுமார் 70 கி.மீ தொலைவில் இருக்கிறது சிங்கம்பட்டி. பசி எடுக்கும் சாப்பிட முடியாது. இரவில் நிம்மதியாகத் தூங்க முடியாது. வாந்தி குமட்டல் என்று நரக வேதனையை அனுபவித்து வந்தார் ஜமீன்தார். இதைக் கண்ட அவருடைய குடும்பமே சோகத்தில் தவித்தது. அரண்மனை வைத்தியர்கள் வெளியூர் வைத்தியர்கள் என்று பலர் முயன்றும் ஜாமீன்தாரின் நோயை குணப்படுத்தவே முடியவில்லை. தெய்வ பக்தியில் சிறந்தவரான ஜமீன்தார். குடும்பத்தினரது வேண்டுகோளின் படி சிதம்பரம் சென்று நடராஜ பெருமானை தரிசித்து முறையிடுவது என முடிவு செய்தார். அதன் படி அமைச்சர் மற்றும் வீரர்கள் சூழ பல்லக்கில் பயணித்தார். நெடு நாள் பயணத்துக்குப் பின் சிதம்பரத்தை அடைந்து நடராஜப் பெருமானின் ஆலயத்தினுள் நுழைந்தனர்.

புனித தீர்த்தமான சிவகங்கை திருக்குளத்தில் நீராடிவிட்டு கனக சபையைக் கண்ணராக் கண்டார்.  மலர்களால் சிவானரைத் தொழுதார். அவரது கண்களில் இருந்து நீர் பெருகியது. பிறவி நோய் தீர்க்கும் பெருந்தகையே அடியவர்களது இன்னல்களைக்களையும் அம்பலவாணா அடியேனைப் படுத்தும் மகோதரத்தை நீக்கி அருள் மாட்டாயா?என்று வேண்டினார். ஆட்சியை மறந்தார் ஆயிரங்கால் மண்டபத்திலேயே தங்கினார். ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்தபடி ஆறு கால பூஜையை  அனுதினமும் தரிசித்தார். பாலும் பழமும் உண்டு விரதம் அனுஷ்டித்தார். ஆலயத்துக்கு வந்த பக்தர்களும் ஜமீன்தார் குணமாக வேண்டி இறைவனிடம் பிரார்த்தித்தனர். இப்படியாக ஒரு மண்டல காலம் அங்கு தங்கி இருந்தார் ஜமீன்தார். 48ம் நாள் விரதம் பூர்த்தியானது. ஆனால் மகோதர நோய் மறையவில்லை. மனம் கலங்கினார் ஜமீன்தார். அன்றிரவு ஆலயக்கதவு மூடப்பட்டது. உடன் வந்தோர் அனைவரும் உறக்கத்தில் ஆழ்ந்தனர். ஆறாத துயரத்தில் தவித்த ஜமீன்தார் நடராஜ பெருமானுக்கு அருகே சென்றார்.

தில்லையம்பலவாசா உன்னையே நம்பி வந்தேனே. உன்னை மட்டுமே நம்பி இருந்தேனே. என்னைக் கைவிடாலமா?ஒரு மண்டல காலம் உன் சந்நிதியில் தவமாகத் தவம் இருந்து உடல் நலம் குணமாகாமல் நான் ஊர் திரும்பினால் ஊரே என்னை மட்டுமின்றி உன்னையும் பழிக்காதா? எனவே விடிவதற்குள் என் நோய் தீர வழி பிறக்க வேண்டும். இல்லையெனில் சிவகங்கை குளத்தில் வீழ்ந்து என்னை நானே மாய்த்து கொள்வேன். இது சத்தியம் என்றார் ஜமீன்தார். பிறகு அயர்ச்சியில் சந்நிதியிலேயே தூங்கிப் போனார். அவர் கனவில் தோன்றிய நடராஜ பெருமான். அன்பனே வருந்தாதே உனக்கு ஏற்பட்ட நோயைத் திர்க்கவல்ல சங்கு ஸ்வாமிகள் பாண்டிய தேசத்திலே பசுவந்தனை எனும் தலத்தில் உள்ளான். எனக்கு மிகவும் வேண்டிய அடியவன். பரமஞானி விடிந்ததும் அவனைத் தேடிப் புறப்படு. நலம் பெறுவாய் என்று அருளினார். இறைவன் அருளியதில் குளிர்ந்து போன ஜமீன்தார். விடிந்ததும் சிவகங்கை தீர்த்தத்தில் நீராடிப் சிவனாரை வணங்கி விட்டு பசுவந்தனை நோக்கிப் புறப்பட்டார். பல நாட்கள் பயணித்து பசுவந்தனை திருத்தலத்தை அடைந்தார்.

பல்லக்கில் ஜமீன்தார் வருவதைக் கண்டு ஆச்சரியத்துடன் பார்த்த ஊர்மக்கள் பல்லக்கைத் தொடர்ந்தனர். அவர்களிடம் இந்த ஊரில் சங்கு ஸ்வாமிகள் என்பவர் எங்கே வசித்து வருகிறார்? என்று பவ்யமாகக் கேட்டார். சங்கு ஸ்வாமிகளா?அப்படி ஒரு ஆசாமி இந்த ஊரிலேயே இல்லை என்றனர் மக்கள். இந்த ஊரில் தான் இருக்கிறார். ஒரு வேளை அந்தத் தவசீலரைப் நீங்கள் தரிசித்தது இல்லையோ? அப்போது கும்பலில் இருந்த ஒருவன். மகாராஜா இந்த ஊரில் சங்கு ஸ்வாமிகள் என்று எவரும் இல்லை. ஆனால் சங்கு என்று ஒரு சோம்பேறி இருக்கிறான். ஊருக்கு ஒதுக்கு புறமா இருக்கிற பாழடைந்த மண்டபத்தில் அந்தச் சோம்பேறி படுத்து கிடைப்பான் என்றான். ஜமீன்தாரின் முகம் பிரகாசம் ஆனது. ஆமாம் அவர் தான் நான் அவரைத்தான் தரிசிக்க வேண்டும். எனக்கு வழி காட்டுங்களேன் என்றார் கெஞ்சலாக ஊர்ஜனங்கள் முன்னே நடக்க பாழடைந்த மண்டபம் நோக்கிப் பல்லக்கு புறப்பட்டது. அங்கே மண்டபத்தின் சிதிலமடைந்த திண்ணையில் கால் மேல் கால் போட்டு ஏதோ சிந்தித்த பாவனையில் இருந்தார் சங்கு ஸ்வாமிகள்.

பல்லக்கில் இருந்து இறங்கிய ஜமீன்தார் ஸ்வாமிகளை நோக்கி மெள்ள நடந்தார். கண்ணில் நீர் மல்க அவரை வணங்கினார். தட்டுகளில் பழங்களும் பலகாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டன. ஜமீன் தாரை ஏறெடுத்துப் பார்த்த சங்கு ஸ்வாமிகள் என்ன அப்பனே அந்த நடராஜ் பெருமான் உன் நோயைத் தீர்க்க முடியவில்லை என்று என்னிடம் அனுப்பி இருக்கிறாரோ? எல்லாமே ஒரு நாடகம் தான். இந்தா இந்தப் பழத்தைச் சாப்பிடு என்று தட்டில் இருந்த பழம் ஒன்றை எடுத்து அவருக்குக் கொடுத்தார். இறை அருளால் கிடைத்த தெய்வப் பிரசாதம் எனக்கருதி அதை உண்டார் ஜமீன்தார். என்னே ஆச்சிரியம். அந்தப் பழத்துண்டுகள் வயிற்றுக்குள் சென்றதும் ஒரவித புத்துணர்வு ஜமீன்தாரை ஆட் கொண்டது. அமிர்தத்தை உண்டவர் போல் மகிழ்ந்தார். ஆடினார் பாடினார் சங்கு ஸ்வாமிகளுக்கு நன்றி தெரிவித்து விழுந்து வணங்கினார். அவரது மகிமையை ஊர் மக்களுக்கும் புரிய வைத்தார். சங்கு ஸ்வாமிகள் சம்பந்தப்பட்ட எந்த ஒரு வைபவத்துக்கும் சிங்கம்பட்டி ஜமீனில் இருந்து உரிய மரியாதை இப்போதும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. பசுவந்தனை மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் பாசனம் மற்றும் குடி நீருக்கு எப்போதுமே தட்டுப்பாடு உண்டு. காரணம் இங்கு ஆறு குளங்கள் எதுவும் கிடையாது. எனவே மழை நீரை சேகரித்து வைத்து அதைத் தட்டுப்பாடான காலங்களில் பயன் படுத்துவது வழக்கம். ஒரு வருடம் மழை பொய்த்துப் போனாலும் அதோகதிதான்.

இது போன்ற தருணத்தில் சங்கு ஸ்வாமிகளே பல ஊருணிகளை (குளம்) ஏற்படுத்தி இருக்கிறார். அதாவது அவர் எங்காவது பயணிக்கும் போது எதிர்ப்படும் எவராவது சாமி ரொம்ப தாகமாக இருக்கு. தண்ணி வேணும் என்று கேட்டு விட்டால் போதும். ஓரிடத்தில் உட்கார்ந்து கைகளால் மணலைத் தோண்டுவார். உடனே அவர்களும் சேர்ந்து தோண்டுவார்கள். சிறிது ஆழ்த்திலேயே தண்ணீர் ஊற்று போல பிய்ச்சிக்கொண்டு வரும். ஸ்வாமிகளின் அருள் திறத்தால் உண்டான பல ஊருணிகள் இன்றும் பசுவந்தனை மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களில் உள்ளன. இவை சங்கு ஸ்வாமிகள் ஊருணி என்றே அழைக்கப்படுகின்றன. எல்லா மஹான்களையும் போலவே தான் சமாதி ஆகப்போகும் காலம் இது தான் என்று துல்லியமாகத் தன் சீடர்களிடம் சொல்லி அதற்கான ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னார் சங்கு ஸ்வாமிகள். அந்த நாளும் வந்தது. அன்று பசுவந்தனை கயிலாயநாதர் ஆலயம் சென்று இறைவனைத் தொழுதார். பிறகு அவர் சொன்ன அதே நேரத்தில் ஜப மாலையுடனும் சின் முத்திரையுடனும் சமாதி ஆனார். ஸ்வாமிகள் அவர் கூறியிருந்தபடி சமாதி அமைத்து. அவரது பூத உடலை நல்லடக்கம் செய்தனர் சீடர்கள். இன்றும் தன் சமாதி கோயிலை நாடி வரும் பக்தர்களது பிரார்த்தனைகளை நிறைவேற்றி நல்லருள் புரிந்து வருகிறார் சங்கு ஸ்வாமிகள். நாமும் அவரின் திருவடி பணிவோம். திருவருள் பெறுவோம்.

தலம்: பசுவந்தனை சிறப்பு: சங்கு ஸ்வாமிகள் சமாதி கோயில்

இருப்பிடம்: கோவில்பட்டியில் இருந்து தெற்கே சுமார் 24 கி.மீ தொலைவில்  இருக்கிறது. பசுவந்தனை மதுரை நெல்லை ரயில் மார்க்கத்தில் கடம்பூர் ரயில் நிலையத்தில் இருந்து கிழக்கே சுமார் 20 கி.மீ தொலைவு. மதுரை நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் கயத்தாறில் இருந்து கிழக்கே சுமார் 21 கி.மீ தொலைவு. தூத்துக்குடி மதுரை நெடுஞ்சாலையில் எப்போதும் வென்றானில் இருந்து மேற்கே சுமார் 11 கி.மீ தொலைவு.

செல்லும் வழி: பகவந்தனைக்கு அருகில் உள்ள நகரம் கோவில்பட்டி தமிழகத்தின் அனைத்து பகுதியில் இருந்தும் கோவில்பட்டியை அடைவது எளிது. கோவில்பட்டி நெல்லை தூத்துக்குடி முதலான ஊர்களில் இருந்து பகவந்தனைக்குப் பேருந்து வசதி உண்டு. என்றாலும் பேருந்து சர்வீஸ் குறைவாகவே உள்ளது.

தொடர்புக்கு: அருள்மிகு கயிலாதநாத ஸ்வாமி திருக்கோயில்.
பகவந்தனை : 625 718, ஒட்டப்பிடாரம் வட்டம். தூத்துக்குடி மாவட்டம். போன்:0461-2282308.


கருத்துகள் இல்லை: