செவ்வாய், 9 ஜூலை, 2019

முத்ரைகளின் லக்ஷணம்

பரமேசுவரனைப் பூஜிக்கும்போது ஆவாஹன காலத்திலும் மற்றச் சமயங்களிலும் முத்திரைகளைக் காட்டுவார்கள். முத்திரை என்பது அடையாளம் என்ற பொருளுடையது.

முகம் கரோதி தேவாநாம் த்ராவயத்யஸீராம்ஸ்ததா |

மோதநாத் த்ராவணாச்சைவ முத்ரேயம் ஸம்ப்ரகீர்த்திதா ||

முத்திரையைக் காட்டுவதனால் தேவர்களுக்குச் சந்தோஷம் உண்டாகும். அசுரர்களை விரட்டுவதற்குரிய சக்தியை உண்டாக்குகிறது. ஆவாஹன கலத்தில் இன்ன முத்திரை கொடுக்க வேண்டும் என்றெல்லாம் ஆகமங்கள் சொல்லுகின்றன. காரணாகமம் 32 முத்திரைகளைப் பற்றிச் சொல்கிறது. அந்த 32 முத்திரைகளில் முதலில் சொல்லப்படுவது லிங்க முத்திரை. அந்த 32 முத்திரைகளின் பெயர் வருமாறு-

லிங்க முத்திரை, நமஸ்கார முத்திரை, தாளமுத்திரை, சங்க முத்திரை, ஸீரபி முத்திரை, முகுளீ முத்திரை, வாராஹீ முத்திரை, நிஷ்டுரா முத்திரை, பீஜ முத்திரை, ப‘ஜ்சவக்த்ரீ முத்திரை, திரவ்ய முத்திரை, சிவ முத்திரை, ஸம்ஹார முத்திரை, ஸாதாக்ய முத்திரை, ஆஸநீ முத்திரை, மஹேச முத்திரை, வஜ்ர முத்திரை, சக்தி முத்திரை, தண்ட முத்திரை, கட்க முத்திரை, பாச முத்திரை, அங்குச முத்திரை, கதா முத்திரை, சூல முத்திரை, பத்ம முத்திரை, சக்ர முத்திரை, டங்க முத்திரை, மகா முத்திரை, கண்டா முத்திரை, அஸ்திர முத்திரை, சர முத்திரை, தநுர் முத்திரை என்று 32 முத்திரைகள் சொல்லப்பட்டிருக்கின்றன.

லிங்கமுத்ரா நமஸ்காரா தாளாக்யா ஸங்கமுத்ரிகா |

ஸீரபீ முகுளீ சைவ வாராஹீ சைவ நிஷ்டுரா ||

பீஜாக்யா பஞ்சவக்த்ரீ ச த்ரவ்யமுத்ரா ஸிவாக்யகா |

ஸம்ஹாரமுத்ரிகா சைவ ஸாதாக்யா சைவ முத்ரிகா ||

ஆஸநீ ச மஹேஸாக்யா வஜ்ராக்யா ஸக்திமுத்ரிகா |

தண்டமுத்ரா ததா கட்கா பாஸமுத்ராங்குஸாக்யகா ||

கதாமுத்ரா ச ஸீலாக்யா பத்மமுத்ரா ததைவ ச |

சக்ரமுத்ரா ததா டங்கா மஹாமுத்ரா ததைவ ச ||

கண்டாமுத்ராஸ்த்ரமுத்ரா ச ஸரமுத்ரா தநுஸ்ததா|

முத்ராணாமுச்யதே சைவம் த்வாத்ரிம்ஸல்லக்ஷணம் பரம் ||

இந்த 32 முத்திரைகளிலே சூரிய பூஜையில் கொடுக்க வேண்டிய முத்திரை இன்னவை, ஆவாஹன காலத்தில் செய்யவேண்டிய முத்திரைகள் இன்னவை, முடிவுக்காலத்தில் செய்ய வேண்டிய முத்திரைகள் இன்னவை என்று தெரிந்துகொள்ள வேண்டும்.

பரமேசுவரன் நிலைத்து இருக்கும் படியான இடத்தில் கொடுக்க வேண்டிய்து லிங்க முத்திரை. ஸ்நானகாலத்தில் கொடுக்க வேண்டியது சங்க முத்திரை. ஸ்நானத்தின் முடிவில் செய்ய வேண்டிய முத்திரை பிஸிநீ முத்திரை. ஆவாஹன காலத்தில் செய்யவேண்டிய முத்திரை வாராஹீ முத்திரை. ஆவாஹன முடிவில் செய்யவேண்டிய முத்திரை சதாசிவ முத்திரை.

லிங்கமுத்ரா து விக்யாதா ப்ரச்சந்நேதி ப்ரதர்ஸயேத் |

ஏஷா ஹி ஸங்கமுத்ரா ஸ்யாத் ஸ்நாநகாலே ப்ரதர்ஸயேத் ||

பிஸிநீ முகுளாகாரா ஸ்நாநாந்தே து ப்ரதர்ஸயேத் |

க்ருதே ச வாராஹீ க்யாதா குர்யாதாவாஹநே ததா |

முத்ரா ஸதாஸிவாக்யாதாவாஹநாந்தே ப்ரதர்ஸயேத் ||

இதேபோல, ஒவ்வொரு முத்திரையையும் எந்த எந்தக் காலத்தில் கொடுக்க வேண்டுமென்று ஆகமங்கள் சொல்கின்றன.

ஸீர்யபூஜாயாம் விசேஷேண சோடிகாமுத்ராம், அம்ருத முத்ராம் விஸ்புரமுத்ராம் பிம்பமுத்ராம் ச தத்வா.

சூரிய பூஜைக் காலத்தில் சோடிகா முத்திரையும் அம்ருத முத்திரையும் விஸ்புர முத்திரையும் பிம்ப முத்திரையும் கொடுக்கப்படுகின்றன. இந்த முத்திரைகள் எப்படிச் செய்ய வேண்டும் என்பதைக் கிரியாம்சத்தில் காட்டினால் விளங்கும்.

ஆவாஹநஸ் தாபநஸந்நிதாந-

நிரோதநாவகுண்டநஸெளதமுத்ரா : |

பாத்யம் ததா சாசமநார்க்யபுஷ்ப-

தாநம் மதாஸ் ஸம்ஸ்க்ருதயோ தஸைவ ||

ஆவாஹன காலத்தில் செய்யவேண்டிய முத்திரைகள், ஆவாஹன, ஸ்தாபன, ஸந்நிதான, ஸந்நிரோதன, அவகுண்டன, தேனு முத்திரைகள் என்பன.

ஹோமம் செய்யும் போது, ஸுகரி முத்திரையும், திரவியங்களை ஹோமம் செய்யும்போது மிருகி முத்திரையும், நெய்யை ஹோமம் செய்யும்போது ஹம்ஸ முத்திரையும் உபயோகிக்க வேண்டும்.

ஸுகரீ ச ம்ருகீ ஹம்ஸீ ஹோமமுத்ராஸ் த்ரயஸ் ஸ்ம்ருதா: |

திலாஜ்யம் ச ம்ருகீமுத்ரா ஹம்ஸா ச ஸமிதோ ஹுநேத் ||

வாராஹீ சருஹோமம் ச குர்யாத் விசக்ஷண: |

முத்ராஹீநம் து யத் ஹோமம் தத்ஹோமம் நிஷ்பலம் பவேத் ||

விதிப்ரபூரணார்த்தம் து க்ருத்வா முத்ராம் து தேசிகா: |

எந்தக் காரியத்தைச் செய்தாலும், முத்திரையோடு செய்கிற காரியங்கள் தாம் முழுப் பலனையும் அளிக்கும்.

ஈஸாநாதீநாம் ப்ரஹ்மணாம் தேநு, பத்ம, த்ரிஸுல, மகர, ஸ்ருங்காக்யா முத்ரா : |

அங்காநாம் ச நமஸ்காரமுத்ராம் தர்ஸயேத் ||

பூஜை முடிகிற காலத்தில் ஈசான மந்திரத்தினாலே தேனு முத்திரையும், தத்புருஷ மந்திரத்தினாலே பத்ம முத்திரையும், அகோர மந்திரத்தினாலே சூல முத்திரையும், வாமதேவ மந்திரத்தினாலே மகர முத்திரையும், ஸத்யோஜாத மந்திரத்தினாலே நமஸ்கார முத்திரையும் கொடுத்து நிறைவேற்ற வேண்டுமென்று சிவாகமங்கள் சொல்லுகின்றன.

சில முத்திரைகளை உபயோகிக்கும் காலங்கள் வருமாறு :

பரம் பொருளான இறைவனைக் குறிப்பிட்ட இடத்தில் எழுந்தருளச் செய்வது, ஆவாஹினீ முத்திரை.
    கருணாகரனான இறைவனை அநுக்கிரகத்தின் பொருட்டு இருக்கச் செய்தல், ஸ்தாபினீ முத்திரை.
    அநுக்ராஹ்ய அநுக்ரஹலக்ஷண சம்பந்தத்தைத் தருவது, ஸந்நிதான முத்திரை.
    சிவபெருமான் எப்பொழுதும் என்னிடத்தில் அநுக்கிரகம் செய்யவேண்டும் என்று வேண்டுவது, ஸந்நிரோதன முத்திரை.
    கைகளின் சுத்தத்தின் பொருட்டுக் கொடுப்பது, சோதனீ முத்திரை.
    ஸ்நான காலத்தில் கொடுப்பது, சங்க முத்திரை.
    திரவ்ய சுத்தியின் பொருட்டுக் கொடுப்பது, தேனு முத்திரை.
    சக்தியின் பொருட்டுக் கொடுப்பது, சக்தி முத்திரை.
    பரமேச்வரனின் பொருட்டுக் கொடுப்பது, பஞ்சமுகீ முத்திரை.
    சிவஸாயுஜ்யத்தைத் தருவது, மனோரமா முத்திரை.
    எல்லாக் கிரியைகளிலும் கொடுப்பது, நமஸ்கார முத்திரை.

இவ்விதம் முப்பத்திரண்டுக்கும் பிரயோஜனத்தைக் கூறுகிறது காரணாகமம். மேலும், ஸுப்ரபேதாகமத்தில் சுருக்கமாக இருபத்து மூண்றின் பிரயோஜனம் கூறப்படுகிறது.

                                           சுபம்

கருத்துகள் இல்லை: