சனி, 22 செப்டம்பர், 2018

அர்த்தமுள்ள இந்துமணம்

காசியாத்திரை விஷயம் என்ன?

இன்று பலர் நினைப்பது போல் மாப்பிள்ளைக்கு பெண் வீட்டாரிடமிருந்து ஒரு குடையும் - செருப்பும் கிடைக்கிற வியாபார விஷயம் தானா அது?

இல்லை; ஆண் சஞ்சலபுத்தியுள்ளவன். எதற்கெடுத்தாலும் 'நான் சந்தியாசியாகப் போய்விடுவேன்....அப்படிப் போனால் தான் நிம்மதி' என்று நினைப்பவன். ஒரு எஸ்கேபிஸ்ட்... நழுவல் பேர்வழி... அவனுக்கு வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே 'சாமான்ய மக்களால் கடைப்பிடிக்கக் கூடிய உண்மையான அறம், துறவறமல்ல; இல்லறம் தான்!' என்று உணர்த்துவது தான் அந்த நிகழ்ச்சி.

'இல்லறமல்லது நல்லறமல்ல' என்ற தமிழ் மூதுரையை விளக்கும் சம்பவம் அது!

வேண்டாம் இந்த துறவறம் குணம். இல்லறத்தில் நீ ஈடுபட நான் ஒரு வாழ்க்கைத் துணையைத் தருகிறேன் என்று பெண்ணின் தந்தை அவனை இல்லறத்தில் ஈடுபடுத்துகிறார். வாழ்க்கையில் பிற்காலத்தில் எப்போதாவது இந்தத் துறவுற சஞ்சல குணம் தலை காட்டினால் இந்தக் காசியாத்திரை குடை அவனுக்கு இந்த நற்போதனையை நினைவூட்டாதோ!

அதன் பின் வரனும் - பெண்ணும் தமது மனஒப்புதலைக் காட்டும் விதமாக மாலை மாற்றிக் கொள்கிறார்கள். மலரின் வாசனையாக மட்டும் இன்றி, மனத்தின் வாசனையாகவும் பரிமாறிக் கொள்கிறார்கள். எதைச் செய்வதனாலும், சொல்வதானாலும் அதை உறுதிப்படுத்த மூன்று முறை செய்வதுண்டு. அதை ஒட்டி இந்தப் பரிமாறலிலும், மூன்று முறை மாலை மாற்றப்படுகிறது.

பின் இருவரும் ஊஞ்சலில் அமருகிறார்கள். இங்கே இறைவனையும் இவ்வுலக வாழ்க்கையையும் இணைக்கும் தொடர்பாக மேலிருந்து தொங்கும் சங்கிலிகள் விளங்குகின்றன. வாழ்க்கையில் இருவருமாகச் சேர்ந்தும் - இணைந்தும் அசைக்கும் மனஊஞ்சலாக அந்த ஊஞ்சல் விளங்குகிறது.

இன்னொரு சடங்கு பாலிகை தெளிப்பது. திருமணம் செய்து கொள்ளும் இருவரும் குழந்தைச் செல்வங்களைப் பெற்று ஆரோக்கியத்துடன் நன்கு வளர்க்க வேண்டும். இதைக் காட்டும் விதமாகத்தான் மண் பாத்திரத்தில் மண்ணை இட்டு - அடியில் அருகம்புல், வில்வ இலை ஆகியவற்றை வைத்து - மண்ணுக்கு மேற்பரப்பில் நெல், உளுந்து, கொள்ளு, பச்சைப்பயிறு ஆகிய தானியங்களை முதல் நாளே ஊற வைத்திருந்து, பின் தெளிக்கிறார்கள். இந்தச் சடங்கு நிகழ்ச்சிகளை வயதான சுமங்கலிகளும், குழந்தை உள்ளவர்களுமே செய்து ஆசி கூறுவார்கள்.

பெரியோரின் ஆசிகளை விட பலம் எது?

கருத்துகள் இல்லை: