திங்கள், 26 ஜூன், 2017

ருத்ர வீணை இது பெரும்பாலும் ஹிந்துஸ்தானி சங்கீததின் ஒரு வகையான துருபத் எனும் இசையை இசைக்க உபயோகப்படுத்தப்படுகிறது. இதற்கும் சரஸ்வதி வீணைக்கும் உள்ள வித்தியாசங்களை பார்தோமென்றால்,சரஸ்வதி வீணையில் குடங்கள் வெவ்வேறு அளவுகளில் இருக்கும் ஆனால் ருத்ர வீணையில் இரண்டு பக்கமும் சம அளவுள்ள காய்ந்து போன பூசனிக்காய்கள் பொருத்தப்பட்டிருக்கும். சரஸ்வதி வீணையில் உள்ளது போலவே இந்த வீணையிலும மெட்டுகள் பொருத்தப்பட்டிருக்கும் (அதாங்க!!அந்த தாயக்கட்டைகள்!! :-) இந்த வீணையை வாசிக்கும் விதமே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். தண்டியின் ஒரு பகுதியில் உள்ள குடத்தை தோளின் மேல் இருத்திக்கொண்டு இந்த வகையான வீணையை வாசிப்பார்கள். இந்த இந்த வகை வீணைகள் இப்பொழுதெல்லாம் அவ்வளவாக பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் இந்தியாவின் மிக பழமையான இசை கருவிகளில் ருத்ர வீணையும் ஒன்று. நாதத்திலிருந்தே எல்லாம் வந்தது. ஸப்த ஸவரங்களும் ஸப்த மண்டலங்கள்,ஸப்த ரிஷிகள், ஸப்த தாதுக்களாய் வந்ததாகச் சொல்வார்கள். இந்த பிரபஞ்சத்தில் அசையும், அசையாத எல்லாப் பொருள்களிலும் ஏதோ ஒரு ரீங்காரம் இசையாய் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.இசை நாடி நரம்புகளிலெல்லாம் ஊடுருவிச் சென்று மூளையை அடைந்து உணர்வுகளை மாற்றி விடும் வல்லமை உடையது. மலையாளத்தில் தெருவ கீதங்கள் என்ற படத்தில் உள்ள இரண்டு ஜேசுதாஸ் பாடல்களை மொட்டை மாடியிலோ, தோட்டத்திலோ அமர்ந்து கொண்டு ஒலிக்கச் செய்தால் காற்றே இல்லாத நேரத்தில் கூட மெல்லிய தென்றல் காற்று வந்து உங்களைத் தழுவுவதை உணர முடியும். அமிர்த வர்ஷினி பாடினால் மழை வரும் என்கிறார்கள். வந்தது, அது ஒரு காலம். இப்போது காற்று மண்டலம் எங்கும் ஒலி, ஒளி அதிர்வுகளும், அலைகளும் குறுக்கிடுவதால் அதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவே. செல் போன் டவரில் இருந்து வரும் கதீர் வீச்சுகளால் குருவி முட்டை குஞ்சு பொரிப்பதற்கு முன்பே உடைந்து போய் குருவிகளின் எண்ணிக்கை கனிசமாகக் குறைந்து விட்டதல்லவா ? அதுபோல எத்தனையோ குறுக்கீடுகள் இசை அலைகளை வெகு தூரம் சென்று இலக்கை அடையவிடாமல் தடுத்து விடுவதாகச் சொல்லப்படுகிறது. இயற்கையின் வடிவான இறைவனை ஆராதிக்கவும், அந்த ஆராதனையின் மூலம் உயிர்களை மகிழ்விக்கவும், அவற்றின் மனதை அமைதிப்படுத்தவும் இசைக் கருவிகள் தோன்றின. ஆதியிலிருந்தே எண்ணற்ற இசைக் கருவிகள் உருவாகியும், இடையில் அழிந்தும் மீண்டும் உயிர் பெற்றும் சிறப்புச் செய்திருக்கின்றன. தோல் வாத்தியங்கள், தந்தி வாத்தியங்கள், காற்று வாத்தியங்கள், உராய்வு வாத்தியங்கள் போன்ற எண்ணற்ற வாத்தியங்கள் இசை உலகில் ஆதிக்கம் செலுத்தி வந்திருந்தாலும், தந்தி வாத்தியங்கள் இவற்றில் தனி ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளன. தந்தி வாத்தியங்கள் அனைத்தும் யாழ் வகையைச் சேர்ந்தவைகளே. 200 தந்திகள் கொண்ட யாழ் கூட இருந்ததாகச் சொல்வார்கள். அப்படிப்பட்ட அதிசயமான யாழ் வகைகள் ஏதும் இப்போது இல்லை என்பது வேதனையான விஷயம். இதில் வீணை என்பது மிகவும் அற்புதமான வாத்தியம். மனித உடலையும் வீணையையும் ஒப்பிட்டு பேசுவார்கள். வீணையின் நடுவே நீளமாக காணப்படும் பகுதி மனிதனின் முதுகுத்தண்டாகவும், குடத்தை தலையாகவும், சிம்ம முகத்தை மூலாதாரமாகவும், தந்திகளை நரம்புகளாகவும், தந்திகளை இழுத்து சரி செய்வதை யோகப் பயிற்சியாகவும் கூறுவார்கள். நன்கு சுருதி சேர்தந்து வைக்கப்பட்டுள்ள வீணை அருகில் ஒலிக்கும் ஒலியை அதிர்வுகளாய் வெளிப்படுத்தும். அது போல யோகப் பயிற்சியில் சிறந்தவர் அருகில் உள்ளவர்களின் உணர்வுகளை உணர்ந்து விடுவார் என்று சொல்வார்கள். வீணையை இசைப்பவரின் பிராண சக்தி அந்த வீணையில் ஓடிக் கொண்டே இருப்பதாகச் சொல்வார்கள். வீணைகளில் எண்ணற்ற வீணைகள் இருந்தாலும், மூன்றுவிதமான வீணைகள் அங்கங்கே வாசிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் இந்திய தேசத்தை பாரம்பரியமாகக் கொண்டவை. ருத்ர வீணை, விசித்திர வீணை, சரஸ்வதி வீணை போன்றவைகளில் தென் இந்தியாவில் சரஸ்வதி வீணையே பெரும்பாலும் வாசிக்கப்படுகிறது. மந்திர உபாசணைகளால் எத்தனைவிதமான சித்திகளைச் செய்ய முடியுமோ, அத்தனையையும் வீணையை இசைத்து ராக ஆலாபணைகளால் செய்ய முடியும். இதற்கு இராவணனை உதாரணமாகச் சொல்வார்கள்.குதிரை முக தேவர்கள் மூலம் யாழ், நாரதர்கள் வழியாக தும்புறுஎன்கிற தம்புரா, கலைவாணி இசைக்கும் ஸாரஸ்வத வீணா போன்ற இசைக் கருவிகள் எல்லாம் தேவர்களால் மனிதர்களுக்கு அருளப்பட்டது என்ற நம்பிக்கை உண்டு. இறைவனால் வழங்கப்பட்ட 64 தந்திரக்கலைகளில் கந்தர்வ தந்திரம், ருத்ரயாமளம், யக்ஷிணிதந்திரம், வீணா என்ற தந்திரங்கள் யாவும் இசையைப் பற்றியதே. இந்தத் தந்திரங்களை உபாசிப்பவர்களுக்கு இசை ஞானமும், இசைக் கருவியும் இறைவனால் வழங்கப்படும் என்று தந்திர சாஸ்திரம் சொல்கிறது. துருபதம் என்ற பண்டைய இசைப் பாரம்பரியம் 19 ஆம் நூற்றாண்டு வரை காணப்பட்டது. அவர்கள் இசைக்கும் வீணை ருத்ர வீணையாகும். அது இறைவன் தந்தது என்றும் இறைவனின் வடிவமாகும் என்றும் எண்ணற்ற அதிசயங்களை ராக ஆலாபணைகளால் செய்யக் கூடியது என்றும் சொல்வார்கள். இதன் அமைப்பும், வடிவமும் வித்தியாசமாக இருப்பதோடு இதன் மீட்டல் லயம் நீண்ட நேரத்திற்கு இன்பம் தருபவையாக இருக்கும் எனச் சொல்லப்பட்டுள்ளது. தேக்கு மரத்தாலானது. இரண்டு குடங்களும் பதப்படுத்தப்பட்ட பூசணிக் காயால் ஆனது. இது 22 உலோகக் கட்டைகளும், ஏழு தந்திகளையும் உடையது. விசித்திர வீணையும் ருத்ர வீணையைப் போன்ற தோற்றத்தையே பெற்றிருக்கிறது. ஆனால் 16 தந்திகளையே கொண்டுள்ளது. அதில் 6 முக்கியமான தந்திகள். இதில் உலோகக் கட்டைகள்(frets) கிடையாது. மனிதன் பேசுவது போலக் கூட இதில் இசைக்க முடியும். தென்னிந்தியாவில் பிரபலமானது ஸரஸ்வத வீணை. இது பலா மரத்தின் ஒரே கட்டையால் செய்யப்படுகிறது. இதில் 24 உலோகக் கட்டைகள் உண்டு. 7 தந்திகளும் உண்டு. இதில் 4 மீட்டுவதற்கும், 3 தாளத்திற்கும் பயன்படும். இதில் இடது பக்கம் காணப்படும் சிறு பானை போன்ற அமைப்பு வடிவத்திற்காகவும், லாவகமாகக் கையாள்வதற்காக மட்டுமே. எண்ணற்ற தேவ வாத்தியங்களும், இசைக் கருவிகளும் காலத்தால் அழிந்து விட்டாலும், இருக்கும் சிலவற்றையாவது காப்பாற்றும் கடமை நமக்கும் உள்ளது. ஏனெனில் தேவ வாத்தியங்களில் இறை சக்தி உள்ளது. அது எல்லா நிலைகளிலும் மக்களைக் காத்திருக்கின்றன என்பதை புராணங்கள் வாயிலாக அறிகிறோம். இதை அறிவுறுத்தவே எல்லா தெய்வவடிவங்கள் கைகளிலும் ஏதாவது ஒரு வாத்தியக் கருவி காணப்படுகிறது.


கருத்துகள் இல்லை: