திங்கள், 13 ஜனவரி, 2014

சூரியன் பிறந்த கதை!

சாம்ப புராணம் என்ற நூலில் சூரியன் அவதரித்த கதை விரிவாகச் சொல்லப்பட்டு இருக்கிறது. பிரம்ம தேவன் படைப்புத் தொழிலை செய்வதற்குத் துணையாக ஏழு ரிஷிகளைப் படைத்தார். அவர்களை சப்த ரிஷிகள் என்று அழைப்பார்கள். அவர்கள், மரீஷி, சுத்ரி, அங்கிரஸர், புலத்தியர், புலகர், கிருது, வசிஷ்டர் என்பவர் ஆவர். இவர்களுள் மரீஷி முதல்வர். மரீஷி சம்பூதி என்பவளை மணந்தார். அவர்களுக்கு ஒரு பிள்ளை பிறந்தான். அவன்தான் கச்யபர் எனப்பட்டார்.

மகா பண்டிதரான கச்யபர் எல்லாச் சாஸ்திரங்களையும், வேதங்களையும் நன்கு ஆழ்ந்து கற்று, தேர்ச்சி பெற்று, ஞான பண்டிதராகத் திகழ்ந்தார். தட்சனின் பெண்களில் 13 பேரை இவர் மணந்தார். இவருடைய மூத்த மனைவியின் பெயர் அதிதி. இவள் கற்புச் செல்வி. கணவனே கண்கண்ட தெய்வம் என்பதை என்பதை உலகுக்கு உணர்த்திய உத்தமி. தர்மதேவதை, இவள் பெருமையை உலகுக்குக் காட்ட நினைத்தார். ஒரு நாடகம் ஆடினார். அதிதி கருவுற்றிருந்த நேரம். அந்த நிலையி<லும் அவள் கணவனுக்குப் பணிவிடை செய்வதில் ஆர்வம் காட்டினாள். ஒரு நாள் அதிதி தன் கணவன் கச்யபருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள். அந்த நேரம் வாசல் பக்கத்தில் இருந்து தாயே, பிச்சை போடு என்ற குரல் கேட்டது. தர்ம தேவதை மாறு வேடத்தில் வந்திருந்தான். குரல் கேட்டது என்றாலும், கணவனுக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்த காரணத்தால், அதிதியால் உடனே சென்று உபசரிக்க இயலவில்லை. கணவன் உணவு உண்டு எழுந்தபின், அன்னமும் கையுமாக விரைந்தாள் அதிதி. அவள் வந்திருந்த நபரிடம், ஐயா பொறுத்தருள்க என்று மன்னிப்புக் கேட்டு, அன்னமிட முயன்றாள்.

வந்தவன் அதிதியைக் கோபத்துடன் நோக்கினான். உபசரிப்பு மிக நன்றாக இருக்கிறது. பெயர் மட்டும் அதிதி என்று வைத்துக் கொண்டால் போதுமா? அதிதியை (அறிவிக்காமல் வந்தவன்) எப்படிக் கவுரவிக்க வேண்டும் என்பது உனக்குத் தெரியாதா? சுவாமி கணவனுக்குப் பணிவிடை செய்ததால், வர காலதாமதமாகி விட்டது. நானோ கருவுற்றிருக்கிறேன். என்னால் இந்த நிலையில் வேகமாக நடக்கவும் முடியவில்லை நீங்கள் மன்னிக்க வேண்டும். நிலை என்ன பொல்லாத நிலை? உனக்குக் கணவன்தான் முக்கியம், அதைவிட உன் வயிற்றிலிருக்கும் கருவும் முக்கியம். உன் வீடு தேடி வந்த நான், மொத்தத்தில் அலட்சியப்படுத்தப்பட்டேன். எனவே சாபமளிக்கிறேன், உனது கரு மிருதம் ஆகக் கடவது. கடுமையான சாபம் தந்தான். மாறுவேடத்தில் இருந்த தர்ம தேவதை. மயக்கமுற்றாள் அதிதி. விரைந்து வந்த கச்யபர் நடந்ததைப் பார்த்து, ஞான திருஷ்டியால் உண்மையை அறிந்து கொண்டார். மனைவியின் மயக்கத்தை தெளிவித்தார். உண்மையை விவரித்தார். கரு அழியட்டும் என்று அவன் இட்ட சாபமானது அற்புதம் தான். புதல்வன் அற்புதமாகப் பிறப்பான் என்பதை அறிவிக்கக் கூடியது என்ற தெளிவினை மனைவிக்குத் தந்தார்.

மிருது பிண்டமாகாது. அண்டமாக மாறும் அந்த அண்டம் பிளக்கும். அதிலிருந்து ஒரு மகன் பிறப்பான். அவன் மார்த்தாண்டன் எனப்படுவான். விஷ்ணுவைப் போல வல்லமையுடன் இருப்பான். நவக்கிரகங்களுக்குத் தலைமை ஏற்பான் என்றார் கணவர், கச்யபர். மனம் தெளிந்தாள் மனைவி அதிதி. ஒரு பிரபவ ஆண்டு மகா சுக்ல சப்தமியில் விசாக நட்சத்திரத்தில் அதிதியிடமிருந்து தோன்றிய அண்டத்திலிருந்து ஒளி தோன்றியது. பன்னிரண்டு புதல்வர்கள் அவதரித்தார்கள். சரவணப் பொய்கையில் தோன்றிய ஆறு குழந்தைகள் ஒன்று சேர்க்கப்பட்டு ஸ்கந்தனானது போல் பன்னிரண்டு பிள்ளைகள் ஒன்று சேர்க்கப்பட்டு சூரியன் என்ற பெயரில் ஆயிரம் கிரணங்களோடு உலா வந்தான். இவர்கள் தனித்தனியே 12 மாதங்களுக்கு ஆதித்யர்கள் ஆனார்கள். இவ்வாறு சூரியனின் அவதாரப் பெருமையை விளக்குகிறது. சாம்ப புராணம்.

கருத்துகள் இல்லை: