செவ்வாய், 24 செப்டம்பர், 2024

நான் யார்? ஆதி சங்கரர் அருளிய ஸ்லோகங்கள்!


நான் யார்? ஆதி சங்கரர் அருளிய ஸ்லோகங்கள்!

உலகத்தில் மக்களிடையே பேதங்கள் நிலவிய சூழ்நிலையில் காலடி க்ஷேத்திரத்தில் சிவபெருமானின் அம்சமாக அவதரித்தவர் மகான் ஆதிசங்கரர். தாயின் அனுமதியுடன் சந்நியாசம் பெற்ற ஆதிசங்கரர் அனைத்து ஜீவன்களிலும் இருக்கும் பிரம்மம் ஒன்றே என்னும் அத்வைத சித்தாந்தத்தை போதித்தவர். அவர் போதித்த அத்வைத சித்தாந்தத்துக்கு அவர் பொருத்தமானவரா என்பதை சோதிக்க விரும்புவது போல் ஒரு சம்பவம் காசி க்ஷேத்திரத்தில் நடைபெற்றது. ஒருமுறை ஆதிசங்கரர் கங்கையில் நீராடிவிட்டு சீடர்களுடன் திரும்பும் போது எதிரில் தாழ்த்தப்பட்டவராகக் கருதப்படும் ஒருவர் நான்கு நாய்களுடன் வந்தார். அப்போதுதான் கங்கையில் நீராடிவிட்டு வந்த ஆதிசங்கரர் அவரை வழியை விட்டு விலகிப் போக சொல்கிறார். எதிரில் வந்தவர் 'நீர் விலகிப் போகச் சொல்வது யாரை? இந்த உடலையா அல்லது இந்த உடலுக்குள் இருக்கும் ஆத்மாவையா? எதை விலகிப் போகச் சொல்கிறீகள்? மண் பாத்திரத்தில் இருந்தாலும் தங்கக் குடத்தில் இருந்தாலும் தண்ணீர் தண்ணீர்தானே? அது தன் இயல் பில் இருந்து மாறுவது இல்லையே. அதுபோலவே மனிதர்களோ விலங்குகளோ தாவரங்களோ அனைத்திலும் இருப்பது ஒன்றேயான அந்தப் பிரம்மம் தானே? அப்படி இருக்கும்போது என்னுடைய உடலில் இருக்கும் அதே பிரம்மம் தானே தங்களுடைய உடலிலும் இருக்கிறது. நமக்குள் எந்த வேறுபாடும் இல்லையே. என்னை ஏன் விலகிப் போகச் சொல்கிறீர்கள்? எனக் கேட்டார். ஆதிசங்கரருக்கு அப்போது தான் புரிந்தது தன்னுடைய மனப்பக்குவத்தை சோதிப்பதற்காக இறைவன் நிகழ்த்திய லீலை அது என்பது. உடனே அவரை நமஸ்கரித்து அருமையான ஸ்தோத்திரம் ஒன்றைப்பாடினார். ஐந்து ஸ்லோகங்கள்கொண்ட அது தான் மனீஷா பஞ்சகம். அந்தப் பஞ்சகத்தில் இருந்து சில பகுதிகள் இங்கே...

விழிப்பிலும், கனவிலும், உறக்கத்திலும் எந்தத் தூய உணர்வு தெளிவாக வெளிப்படுகிறதோ எது பிரம்மா முதல் எறும்பு வரை அனைத்து உடல்களிலும் பிரபஞ்சத்தின் சாட்சியாக ஊடுருவியுள்ளதோ அதுதான் நான். நான் காணப்படும் பொருள் அல்ல என்று எவருக்கு உறுதியான ஞானம் இருக்கிறதோ அவர் சமுதாயத்தால் தாழ்த்தப்பட்டவரோ அல்லது உயர்த்தப்பட்டவரோ யாராக இருந்தாலும் அவரே என் குரு என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

“ஜாக்ரத்ஸ்வப்ன ஸுஷுப்திஷு ஸ்புடதரா யா ஸம்விதுஜ்ரும்பதே!
யா ப்ரஹ்மாதிபிபீலிகாந்ததனுஷு ப்ரோதா ஜகத்ஸாக்ஷிணீ !!
ஸைவாஹம் ந ச த்ருஶ்யவஸ்த்விதி த்ருடப்ரக்ஞாபி யஸ்யாஸ்தி சேத்!
சாண்டாலோஸ்து ஸ து த்விஜோஸ்து குருரித்யேஷா மனீஷா மம !!

எவன் ஒருவனுக்கு தானே ஆத்மஸ்வருபம்தான் என்பதில் திட நம்பிக்கை உள்ளதோ விழிப்பு, கனவு, உறக்கம் ஆகிய 3 ஸ்திதிகளிலும் பரமாணுவிலிருந்து பரப்ரம்மம் வரை எல்லாவற்றிலும் எக்காலத்திலும் கண்ணுக்குத் தெரியாத ஸாக்ஷியாக உயிர்ப்பு சக்தியாக செயல்படுவதும் அதே ஆத்மாதான் என்பதையும் அவன் அறிகிறானே அவன் எந்த ஜாதியில் பிறந்திருந்தாலும் அவனே உயர்ந்த ஆசானாகக்கருதப்படுவான்.

பரம்மைவாஹமிதம் ஜகச்ச ஸகலம் சின்மாத்ரவிஸ்தாரிதம்
ஸர்வம் சைததவித்யயா த்ரிகுணயாஶேஷம் மயாகல்பிதம்!
இத்தம் யஸ்ய த்ருடாமதி: ஸுகதரே நித்யே பரே நிர்மலே
சாண்டாலோஸ்து ஸ து த்விஜோஸ்து குருரித்யேஷா மனீஷா மம!!

சங்கரர் மேலும் உணர்கிறார். எனக்குத் தெரியும் யார் உயர்நத குரு என்று ப்ராம்மணனோ, சூத்ரனோ, யார் அந்த சுத்த ஸத்வமான ப்ரம்மத்திலேயே லயித்து தானே அதுவாக உணர்கிறார்களோ அவர்தான் எல்லாம் உணர்ந்த ஆசாரியராக முடியும். ஸத்வ, ரஜஸ், தமஸ், ஆகிற முக்குணங்களின் பாதிப்பினாலும் அறியாமையினாலும் உலகத்திலுள்ள பொருட்கள் எல்லாம் வெவ்வேறாகத் தெரிந்தாலும் ஒரே பரமாத்மா பரப்ரஹ்மத்திலிருந்து உண்டானவையே அனைத்தும் என்பதைப் புரிந்து கொண்டவனே ஸத்குரு என்கிறார் அவர்.

ஶஶ்வன்னஶ்வரமேவ விஶ்வமகிலம் நிஶ்சித்ய வாசா குரோ:
நித்யம் ப்ரஹ்ம நிரந்தரம் விம்ருஶதாம் நிர்வியாஜ ஶாந்தாத்மனாம்!
பூதம் பாவி ச துஷ்க்ருதம் ப்ரதஹதாம் ஸம்வின்மயே பாவகே
ப்ராரப்தாய ஸமர்ப்பிதம் ஸ்வவபுரித்யேஷா மனீஷா மம!!

குருவின் வார்த்தைகளில் எனக்குப் பரிபூரண நம்பிக்கை இருப்பதால் இந்தப்பிரபஞ்சம் முற்றும் நிலையற்ற உருவெளித்தோற்றம் என்பதும் பரமாத்மாவைக் குறித்து ஆழ்ந்த தியானத்தைச் செய்து நிஸ்சலனமான மனதுடன் பாவத்தீயையெல்லாம் அந்த ஸாதனையாகிற தீயில் எரிக்க வேண்டும் என்பதும் தெரிகிறது.

யா திர்யங்நரதேவதாபிரஹமித்யந்த: ஸ்புடா க்ருஹ்யதே
யத்பாஸா ஹ்ருதயாக்ஷதேஹவிஷயா பாந்தி ஸ்வதோ சேதனா:!
தாம் பாஸ்யை: பிஹிதார்க்கமண்டலநிபாம் ஸ்பூர்த்திம் ஸதா பாவயந்
யோகீ நிர்வ்ருதமானஸ: ஸ குருரித்யேஷா மனீஷா மம!!

சங்கரர் மேலும் கூறுவதாவது : என் அபிப்ராயப்படி உயர்ந்த யோகி யார் என்றால் பரமாத்மாவின் உண்மை ஸ்வரூபத்தையும் தன்மைகளையும் உணர்ந்தவர்தான். அதாவது அனைத்துச் செயல்களும் யாரால் நடத்தப்படுகிறது என்பதும் அப்பேர்ப்பட்ட கடவுளின் ஒளி அறியாமையினால் மறைக்கப்பட்டிருக்கிறது (மேகங்கள் எப்படி சூரியனின் ஒளியை மறைக்கிறதோ அப்படி) என்பதும் தான்!

யத்ஸௌக்யாம்புதிலேஶலேஶத இமே ஶக்ராதயோ நிர்வ்ருதா:
யச்சித்தே நிதராம் ப்ரஶாந்தகலனே லப்த்வா முனிர்நிர்வ்ருத:!
யஸ்மிந்நித்ய ஸுகாம்புதௌ கலிதர்தீ ப்ரஹ்மைவ ந ப்ரஹ்மவித்
ய: கஶ்சித் ஸ ஸுரேந்த்ரவந்திதபதோ நூநம் மனீஷா மம!!

இந்திரனாலும் மற்ற தேவர்களாலும் துதிக்கப்படும் அந்தப்பரமாத்மாவிடம் எப்போதும் மனதைச் செலுத்திப் பரிபூரண அமைதியுடன் எவர் இருக்கிறாரோ அவர் அந்த பரப்ரம்ஹ்மத்தை அறிந்து கொண்டவர் மட்டுமல்ல அந்த ப்ரஹ்மமாகிவிடுகிறார் என்பது எனக்கு நிச்சயமாகத் தெரிகிறது.

தாஸஸ்தேஹம் தேஹத்ருஷ்ட்யாஸ்மி சம்போ ஜாதஸ் தேம்சோ ஜீவத்ருஷ்ட்யா த்ரீத்ருஷ்டே!
ஸர்வஸ்யாஸ்மந்நாத்மத்ருஷ்ட்யா த்வமேவேத் யேவம் மே தீர்நிஸ்சிதா ஸர்வ சாஸ்த்ரை:!!

பகவானே! நான் இந்த உடலில் இருக்கும்போது உன் சேவகன் முக்கண்ணனே! இந்த உயிராக இருக்கையில் உன்னில் ஒரு பாகமாகிறேன். ஆத்மாவாக இருந்தால் நீ என்னுள்ளும் இன்னும் மற்றெல்லா ஆத்மாக்களுக்குள்ளேயும் இருக்கிறாய். என் புத்தி பூர்வமாகவும் பல நூல்களைப்படித்தும் நான் வந்த முடிவு இதுதான். 




சதாசிவ பிர்மேந்திராள்


கரூரிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் காவிரி கரையில்  நெரூர் என்கிற அழகிய சிறிய கிராமம். இங்கு ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராளின் அதிஷ்டானம் உள்ளது.

ஒரே சமயத்தில் ஐந்து இடங்களில் தோன்றி ஐந்து இடங்களிலும் சமாதியானவர் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் அவர்கள். அவர்களுடைய சக்தி இன்றும் அந்த அதிஷ்டானத்தில் உணரலாம்.

இச்சிறிய கிராமத்தின் அக்கிராஹத்தில் ஏசி வசதியுடன், விசாலமான, சுத்தமான ஒரு தங்குமிடம் மிகவும் நியாயமான வாடகையில் உள்ளது.

இங்கேயே மூன்று வேளைக்கும் சுவையான கிராமிய உணவு, இரண்டு வேளை காபியும் ஒரு பிராமண மாமி சமைத்து தருகிறார்கள்.

மேலும் இங்கு உபநயனம், சீமந்தம் முதலிய சுப காரியங்களுக்கும், ஸ்ரார்தம், மஹாளய பட்ச ஸ்ரார்தம் செய்வதற்கு சமையல், வாத்தியார் ஏற்பாடுகளும், இடமும் நியாயமான செலவில் செய்து தருகிறார்கள்.

காவிரி கரையில் அழகிய கிராமத்தில் சகல வசதியோடு விருப்பம் உள்ள நாட்கள் வரை தங்கி, மனமும் உடலும் புத்துணர்வு பெறலாம்.

மற்ற விபரங்களுக்கு...
பானு மாமி : +91 99445 32919
திரு.ரவி, டிரஸ்டி : +91 99400 45982

திங்கள், 23 செப்டம்பர், 2024

நாச்சிமுத்து....

நாச்சிமுத்து!

திருக்கழுக்குன்றத்தில் நெடுங்காலத்துக்கு முன்னர் நாச்சிமுத்து என்ற பெண்மணி வாழ்ந்து வந்தாள். அவள் உருத்திரக் கணிகையர் வகுப்பைச் சேர்ந்தவள். இறைவன் மீது எல்லையில்லா அன்பு கொண்டவள். திருக்கழுக்குன்றத்துக் கோயிலில் இறைவனின் முன்பு நாட்டியமாடுதல் இவள் பணியாக இருந்தது. இவளிடம் ஒரு வைணவர் பேரன்பு கொண்டவராக விளங்கினார். இவளுடைய அன்பினால் அவருக்கும் சிவபக்தி உண்டாயிற்று. தமிழ் புலவரான இவர் திருக்கழுக்குன்றத்து இறைவன் மீது திருக்கழுக்குன்ற பாமாலை என்னும் நூலைப் பாடினார். அப்பாடல் பொருட்சுவையும் சொற்சுவையும் நிரம்பியது. உருத்திரக் கணிகையான நாச்சிமுத்துவும் அம்மாலையின் பாடல் ஒன்றைத் தினமும் கோயிலில் இறைவன் முன்பு பாடி, அபிநயம் செய்வது வழக்கம்.ஒரு நாள் மாலையில் கடுங்காற்று வீசி, கனமழை பெய்தது. அதனால் அவளால் கோயிலுக்குச் சென்று இறைவன் முன்பு தனது நாட்டியச் சேவையைச் செய்ய முடியவில்லை. இதனால் அவள் மிகவும் வருத்தமடைந்தாள். இந்த வீட்டு முற்றத்தில் இறைவன் எழுந்தருளியிருந்தால் எனது நாட்டியச் சேவையை செய்திருப்பேனே என்று எண்ணினாள். பின்பு, அங்கு சிவபெருமான் எழுந்தருளி இருப்பதாக பாவனை செய்துகொண்டு, அன்று பாட வேண்டிய பாடலைப் பாடி, அபிநயம் செய்யத் தொடங்கினாள். அவள் அன்பில் மகிழ்ந்தார் இறைவன். ஆடல்வல்ல பெருமானான சிவன், அவளுடைய ஆடலையும் பாடலையும் கண்டு குளிர்ந்து போனார். அவளுக்குக் காட்சி அளித்து, முக்தியும் அருளினார்.நாச்சிமுத்து நாச்சியார், பெருமானின் திருவடிகளைப் பற்றிக்கொண்டு கயிலைக்குச் செல்லத் தொடங்கினாள். அவள் இறைவனுடன் செல்வதைக் கண்ட அவளுடைய அன்பான வைணவரும் ஓடி அவளுடைய திருப்பாதங்களைப் பற்றிக் கொண்டே விண்ணுலகம் சென்றார். இச்சம்பவத்தை  க்ஷேத்திரக்கோவை பிள்ளைத் தமிழ், கழுகாசல சதகம் ஆகிய நூல்கள் விரிவாகக் கூறுகின்றன. லிங்கப்பதிகம் என்னும் நூல் இந்த நிகழ்ச்சியை முற்றத்திலே வந்து தாதி தமிழைக் கேட்டு மோட்சம் கொடுத்த லிங்கம் என்று குறிக்கின்றது.

நவராத்திரி மூன்றாம் நாள்: எவ்வாறு வழிபட வேண்டும்?

நவராத்திரி மூன்றாம் நாள்: எவ்வாறு வழிபட வேண்டும்?

நவராத்திரி மூன்றாம் நாளில் அம்பிகையை வராஹியாக அலங்கரிக்க வேண்டும். பன்றிமுகத்துடன் கூடியவளாக விளங்கும் இவளை வழிபட்டால் பகைவர் பயம் நீங்கும். மதுரை மீனாட்சியம்மன் நாளை தட்சிணாமூர்த்தி கோலத்தில் காட்சியளிக்கிறாள். தென்முகக்கடவுளான தட்சிணாமூர்த்தி சிவன்கோயில்களில், கல்லால மரத்தின் கீழ் இருப்பார். இவர் முன்னால் சனகர்,சனந்தனர், சனதானர், சனத்குமாரர் என்னும் நான்கு சீடர்கள் இருப்பர். அவர்களுக்கு உபதேசம் செய்கிறார் தட்சிணாமூர்த்தி.

இவருடைய வலக்கை சின்முத்திரை காட்டியபடி இருக்கும். வலக்கைப் பெருவிரல் பரமாத்மாவாகிய கடவுளையும், ஆள்காட்டிவிரல் ஜீவாத்மாவாகிய உயிரையும் குறிக்கும். மற்ற விரல்களான நடுவிரல், மோதிரவிரல், சுண்டுவிரல் ஆகியவை ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றைக் குறிக்கும். ஆணவம் என்பது அகங்காரம். கன்மம் என்பது உயிர்கள் செய்யும் நல்வினை, தீவினைப்பயன்கள். மாயை என்பது இவ்வுலக வாழ்வு உண்மை என எண்ணும் நிலை. இம்மூன்றையும் விட்டு, ஒருவன் நீங்கினால் மட்டுமே கடவுளோடு ஐக்கியமாக முடியும் என்பதே சின்முத்திரை தத்துவம். அம்பாளைத் தட்சிணாமூர்த்தியாக உபதேசிக்கும் கோலத்தை காண்பவர்களுக்கு அஞ்ஞானம் அகலும். கடவுளின் திருவடியே நிலையானது என்ற மெய்ஞானம் உண்டாகும்.

நாளைய நைவேத்யம்: எலுமிச்சை சாதம்
தூவவேண்டிய மலர்கள்: மல்லிகை, செவ்வந்தி.

பாட வேண்டிய பாடல்:

என்குறை தீர நின்று ஏத்துகின்றேன், இனியான் பிறக்கின்
நின்குறை யேயன்றி யார்குறை காண்! இருநீள் விசும்பின்
மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியளாய்
தன்குறை தீரஎங் கோன்சடை மேல் வைத்த தாமரையே.

 


 

நவராத்திரி இரண்டாம் நாள்: வழிபடும் முறை!

நவராத்திரி இரண்டாம் நாள்: வழிபடும் முறை!

அம்பிகையை நாளை மயில் வாகனம், சேவல் கொடியுடன் அலங்கரிக்க வேண்டும். இவளை "கவுமாரி என்றும், "குமார கண நாதம்பா என்றும் அழைப்பர். பக்தர்களின் பாவங்களைப் போக்கி, தைரியத்தை அருள்பவள் இவள். நாளை மதுரை மீனாட்சி முருகனுக்கு வேல் வழங்குதல் கோலத்தில் காட்சி தருகிறாள். சூரபத்மன் தேவர்களுக்கு பல கொடுமைகளைச் செய்தான். அவர்கள், சிவபெருமானின் உதவியை நாடினர். அவருடைய நெற்றிக்கண்களில் ஆறுதீப்பொறிகள் தோன்றின. அவை சரவணப்பொய்கையில் ஆறுதாமரைப் பூக்களில், ஆறுகுழந்தைகளாக மாறியது. கார்த்திகைப்பெண்கள் அவர்களை வளர்த்தனர். பார்வதி அறுவரையும் ஒருவராக்கி "கந்தன் என்று பெயரிட்டாள். ஜகன்மாதாவான பராசக்தி தன் சக்தி அனைத்தையும் ஒன்று திரட்டி வேல் ஆக்கினாள். "வேல் என்றால் "வெற்றி . அந்த சக்திவேலாயுதத்தை முருகனுக்கு வழங்கினாள். முருகனுக்குரிய அடையாளமாகத் திகழும் வெற்றிவேலை, அன் னை மீனாட்சி வழங்குவதைக் கண்டால் வாழ்வில் வெற்றி வந்து சேரும்.

நாளைய நைவேத்யம்: தயிர்சாதம்
தூவவேண்டிய மலர்: முல்லை

பாட வேண்டிய பாடல்:

இல்லாமை சொல்லி ஒருவர் தம் பால்சென்று இழிவுபட்டு நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்தம் நீடுதவம் கல்லாமை கற்ற கயவர் தம் பால் ஒரு காலத்திலும் செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே. 




பராசரர்...

பராசரர்!

இருமாமுனிவர்கள் வசிஷ்டரும், கோசிகரும். இவர்கள் இருவருக்கிடையில் ஒற்றுமை இருந்ததே இல்லை. பகையுணர்வின் காரணமாக கோசிகன், வசிஷ்டரை பழி வாங்க முயன்று தவவலிமை இழந்து மீண்டும் தபோதனராகப் பலமுறை முயன்று தன் தவ வலிமை பெற்று வந்தார். உதிரன் என்ற அரக்கன் மூலம் தனது தவ வலிமைகளைத் தந்து வசிட்டரின் புதல்வர்களை அழிக்க ஏற்பாடு செய்தார் கோசிகன். வசிட்டரும் அருந்ததியும் இல்லாத சமயம் அவர்களது பிள்ளைகளை மாய்த்து விட்டான். வசிட்டரும், அருந்ததியும் மனமுடைந்து இருந்தனர். வசிட்டரின் மகன் சக்தி என்பவனின் மனைவி திரிசந்தி கருவுற்றிருந்த காரணத்தால் அவளது தாய் வீட்டிற்குச் சென்றிருந்தாள். தகவலறிந்து வந்து தானும் உயிர் துறக்க முற்பட்டாள். வசிட்டரும், அருந்ததியும் தங்களது வாரிசு அவளது வயிற்றில் வளர்வதனால் சாந்தப்படுத்தி கண்ணும் கருத்துமாக திரிசந்தியைப் பாதுகாத்தனர். தக்கதோர் நன்னாளில் திரிசந்தி ஆண் மகவொன்று ஈன்றெடுத்தாள்.

பேரனுக்கு பராசரன் என்று பெயரிட்டு கல்வியறிவூட்டினர். நற்குணம் நற்செயல்களோடு வேத நூல்யாவும் அறிந்தான். அவனது மனத்தில் இருந்த குறையை தாயிடம் கேட்டான். பாட்டி சுமங்கலியாக, தாய் அமங்கலியாக இருப்பதன் காரணம் பற்றி கேள்விகளாகக் கேட்டு துளைத்தெடுக்கும் நிலையில் உண்மையில் நடந்தவற்றை திரிசந்தி உரைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தாத்தா, பாட்டி, தாயின் மனமுவந்த ஆசிகள் பெற்று மனத்தை ஒருநிலைப்படுத்தி சிவபெருமானை நோக்கிக் கடுமையாக தவமேற் கொண்டான். நேரில் காட்சி தரும் நிலையும் ஏற்பட்டது. தன் தந்தையைக் காணவும், அரக்கர்களை அழிக்க ஆற்றலும் வேண்டிக் கோரினான். அவனது பக்தியின் வலிமையால் பராசரரின் தந்தையான சக்தி அங்கு தோன்றுமாறு ஈசன் கருணை புரிந்தான். தந்தையைக் கண்டு வணங்கி ஆசிகள் பெற்றான். அரக்கர்களை அழிப்பது எளிதல்ல என்பதால் வேள்வி செய்யுமாறு ஈசன் பணித்தார். ஈசன் உபதேசித்தப்படி சிறந்ததொரு யாகம் மேற்கொண்டான். யாகத்தில் ஏற்படும் புகை முழுவதும் அரக்கர்கள் இருக்குமிடத்தில் பரவி அரக்கர் கூட்டம் அழிந்து விட்டது.

யாரோ செய்த தவறுக்குப் பலர் அழிவதை உணர்ந்த வசிட்டர் தனது பேரன் பராசரரிடம் பலர் அழியக் காரணமாகி பலரைக் கொன்ற பாபம் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. நாம் இறைவனை வேண்டி வழிபடுவதே தக்க செயலாகும் என்று கூறி வேள்வியை நிறுத்துமாறு உபதேசித்தார். அச்சமயம் அங்கு வந்த புலஸ்திய முனிவரும் பராசரரிடம் பிற உயிர்கள் அழியாத நிலையில் தவமேற் கொண்டோர் வாழ்வதே சிறப்பு என விளக்கினார். பாட்டனாரும், புலஸ்தியரும் கூறிய வார்த்தைகட்கு இணங்கி பராசரர் இறைவழிபாட்டில் தன் வாழ்க்கைப் பணி ஏற்றார்.  மூத்தோர் சொல் அமுதமாகும் என்பதை உணர்ந்த காரணத்தால் பராசரர் தனது அறிவை ஞானத்தின் பால் மாற்றி மெய் ஞானம் உணர்ந்திட்ட மஹானாக விளங்கினார் என்றும், அழியாப்புகழுடன் சிறந்த நூல்களை எழுதி வரும் சந்ததிகட்கு வழிகாட்டிய மஹானாகத் திகழ்ந்தார்.

நவராத்திரி வழிபாடு தோன்றிய காரணம்!

நவராத்திரி வழிபாடு தோன்றிய காரணம்!

நவராத்திரியின் சிறப்புப் பற்றியும், இதை அனுஷ்டிக்க வேண்டிய முறை கிடைக்கக்கூடிய பலன்கள் பற்றியும் தேவி மஹாத்மியத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. முன்னொரு காலத்தில் சும்பன், நிசும்பன் என இரு அசுரர்கள் இருந்தார்கள். அவர்கள் தெய்வங்களிடம் வரம் பல பெற்று தங்களை அழிக்க யாருமில்லை என்று தலைக்கனம் பிடித்துத் திரிந்தார்கள். அவர்களது ஆட்சிக்காலத்தில் மக்கள் மிகவும் அல்லலுற்றனர். தவசீலர்களால் வேள்விகளைச் செய்ய முடியவில்லை. அனைவரும் இந்த இரு அரக்கர்களையும் கண்டு அஞ்சி நடுங்கினர். இனியும் இப்படியே போனால் மக்கள் தாங்கமாட்டார்கள் என்று எண்ணிய தேவர்கள் மஹா விஷ்ணுவிடமும், சிவனிடமும் முறையிட்டனர். அவர்கள் பிரம்மனையும் சேர்த்துக் கொண்டு என்ன செய்வது என ஆலோசித்தனர். ஆண்கள் யாராலும் அந்த இரு அசுரர்களையும் வெல்ல முடியாது என்பது வரம். அதனால் தேவர்களும் மூவர்களும் அன்னை ஆதி சக்தியை நோக்கிப் பிரார்த்தித்தனர்.

மக்களின் துன்பம் கண்டு சகியாத அவளும் மிக அழகான மங்கையின் வடிவம் கொண்டு பூமிக்கு வந்தாள். அவளுடைய அழகுக்கு யாரும் நிகர் இல்லை என விளங்கினாள். பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரும் தங்களுடைய சக்திகளை எல்லாவற்றையும் ஒன்று திரட்டி அன்னைக்கு அளித்து விட்டு சிலை என ஆனார்கள். அதே போல இந்திரனும் திக்குப் பாலர்களும் தங்களுடைய ஆயுதங்களை எல்லாம் அளித்து விட்டு சிலையாக நின்றார்கள். அப்படி அவர்கள் நின்றதால் தான் அதைக் குறிக்கும் வகையில் பொம்மைக் கொலு வைக்கும் பழக்கம் வந்தது. அன்னை அந்த ஆயுதங்களை பத்துக் கரங்களில் தாங்கி போர்க்கோலம் பூண்டு சும்ப நிசும்பர்களையும் அவர்களது படைத்தளபதிகளான மது கைடபன், ரக்தபீஜனையும் அழித்து தர்மத்தை நிலை நாட்டினாள்.

அவள் வெற்றி பெற்ற தினமே விஜயதசமி. ஒன்பது நாட்கள் போர் விடாமல் நடந்தது. அதனாலேயே நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம். 

 

ஏன் ராத்திரி? ஒன்பது பகலில் கொண்டாடலாம் என்று கேள்வி எழுவது சகஜம். அந்நாட்களில் போருக்கு என்று சில சட்ட திட்டங்கள் உண்டு. மாலை நேரம் சூரிய அஸ்தமனம் ஆன பிறகு போர் புரிய மாட்டார்கள். படைகள் தங்கள் கூடாரங்களில் ஓய்வெடுத்துக் கொள்ளும். அப்போது அன்னையின் படைக்கு ஊக்கம் கொடுக்கவும் மறுநாளைய போரில் உற்சாகமாகப் போரிடவும் வேண்டி அன்னையைக் குறித்த ஆடல், பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இது ஒன்பது இரவுகள் நடந்தது. அதனாலேயே நாம் நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம்.



நவராத்திரி முதல் நாள்

நவராத்திரி முதல் நாள் வழிபாடு

நவராத்திரியின் முதல் நாளில் (அக். 02 ல்) அம்பாளுக்கு “மகேஸ்வரி பாலா என்று திருநாமம் சூட்டி வணங்க வேண்டும். மது, கைடபர் ஆகிய அசுரர்களின் அழிவுக்கு காரணமானவள் இவள். சாமுண்டியாக அலங்காரம் செய்ய வேண்டும். மதுரை மீனாட்சி நாளை ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சி தருகிறாள். அண்டசராசரத்துக்கும் அவள் தலைவி. இதை அண்டம்+ சரம்+அசரம் என்று பிரிக்க வேண்டும். “அண்டம் என்றால் “உலகம். “சரம் என்றால் “அசைகின்ற பொருட்கள். “அசரம் என்றால் “அசையாத பொருட்கள். ஆம்…அன்னை ராஜ ராஜேஸ்வரி, இந்த உலகிலுள்ள அசைகின்ற, அசையாப் பொருட்களுக்கெல்லாம் அனைத்துக்கும் அதிபதியாக இருந்து அருளாட்சி நடத்துவதைக் குறிக்கும் வகையில் இந்த அலங்காரம் செய்யப்படுகிறது.

நைவேத்யம்: சர்க்கரைப் பொங்கல்
தூவ வேண்டிய மலர்கள்: மல்லிகை, வில்வம்

சொல்ல வேண்டிய ஸ்லோகம்:

அம்பா சாம்பவி சந்திரமவுலிரமலா அபர்ணா உமா பார்வதீ
காளீ ஹமவதீ சிவா த்ரிநயனீ காத்யாயினீ பைரவீ!
ஸாவித்ரீ நயௌவனா சுபகரீ ஸாம்ராஜ்ய லக்ஷ்மீப்ரதா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரி



ஞாயிறு, 22 செப்டம்பர், 2024

ஸ்ரீ மஹா பெரியவா தர்மமே தெரியல!}

பகவான் நாமா கைகுடுப்பது போல் எந்த டாக்டரோ, மருந்தோ உதவி பண்ணாது. பகவான் நாமா பிழைக்கவும் வைக்கும் அதே ஸமயம் ஆயுஸ் முடியப்போகும் தருணத்தில் பகவானின் திருவடிப் பேற்றையும் ஸுலபமாக அளித்து விடும்.  

{ஸ்ரீ மஹா பெரியவா தர்மமே தெரியல!}

ஸ்ரீ மஹா பெரியவாளை தர்ஸனம் பண்ண ஒரு பக்தர் வந்தார். கூட்டம் அதிகம் இல்லை. அப்பா எப்டியிருக்கார்? அப்பாக்கு ரொம்ப ஒடம்பு முடிலே பெரியவா...ப்ரக்ஞை இல்லே; அதுனால ஆஸ்பத்ரில சேத்திருக்கேன்... மேலே சொல்லு என்பது போல் ஸ்ரீ மஹா பெரியவா உன்னிப்பாக கேட்டார். பணம் பணம்ன்னு ஆஸ்பத்ரில பிடுங்கி எடுக்கறா...ட்ரிப்ஸ் ஏத்தறதுக்கு பணம், ஆக்ஸிஜன் வெக்கறதுக்கு பணம் அதுக்கு இதுக்குன்னு நின்னா ஒக்காந்தா பணம் ஒண்ணு தான் கேட்டுண்டே இருக்கா பெரியவா! ஏகப்பட்ட செலவாயிடுத்து. அப்பாவுக்கு என்ன வயஸ்?"ஸதாபிஷேகம் ஆய்டுத்து" அவரை டிஸ்சார்ஜ் பண்ணி அழைச்சிண்டு வந்துடு! ஆத்துல ஒரு கட்டில்ல அவருக்கு ஸ்ரமம் இல்லாதபடி ஸௌகர்யமா படுக்க வை ஜாஸ்தி சூடு இல்லாம வெதுவெதுன்னு கஞ்சி, பால் இதுமாதிரி நீர்க்க குடு அவரோட காதுல விழறா மாதிரி தெனோமும் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்லு ஆத்துல எல்லாருமா பகவன் நாமாவை சொல்லுங்கோ ஆத்மார்த்தமா ஸுஸ்ருஷை பண்ணு இப்படி பண்ணினியானா...ஒனக்கும் பணச்செலவு இல்லே! அவரும் கடைசி காலத்தை நிம்மதியா கழிப்பார்...மகன் மன த்ருப்தியோடு ப்ரஸாதம் பெற்றுக்கொண்டு சென்றார். அவர் போனதும் பக்கத்தில் இருந்தவர்களிடம் ஸ்ரீ மஹா பெரியவா சொன்னார்... இப்போல்லாம் யாருக்கும் தர்மமே தெரியறதில்லே! ஒடம்புக்கு கொஞ்சம் அஸௌகர்யம் வந்துடுத்துன்னா... ஒடனே ஆஸ்பத்ரில சேத்துடறா! வ்யாதிக்கு மருந்து வேணுந்தான்... வாஸ்தவம். ஆனா...அருமருந்து ஒண்ணு இருக்குங்கறதே யாருக்கும் தெரியறதில்லே!... பகவான் நாமா கைகுடுப்பது போல் எந்த டாக்டரோ மருந்தோ உதவி பண்ணாது. பகவான் நாமா பிழைக்கவும் வைக்கும் அதே ஸமயம் ஆயுஸ் முடியப்போகும் தருணத்தில் பகவானின் திருவடிப் பேற்றையும் ஸுலபமாக அளித்து விடும். எனவே உடல் நிலை ஸரியில்லாதவர்களை குறிப்பாக வயஸான நம் பெற்றோர், தாத்தா,பாட்டி போன்றோரை வயஸான காலத்தில் கஞ்சி குடுத்தாலும் அதை அன்போடு குடுத்து பகவானின் நாமத்தை ஸதா கேட்கவோ சொல்லவோ வைத்து அவர்களை நிம்மதியாக வைத்துக் கொள்வதே கடவுளுக்கு மிகவும் பிடித்த கைங்கர்யம். அவர்களுக்கு விலையுயர்ந்த பரிசுகள் வேண்டாம் விதவிதமான உணவு வகைகள் வேண்டாம். உண்மையான அன்போடு ஒரு பத்து நிமிஷமாவது அவர்களுக்காக ஒதுக்கி "ஸாப்பிட்டீர்களா? ஏதாவது வேண்டுமா?" என்று கேட்பதே அவர்களை மனஸார நம்மை வாழ்த்த வைக்கும். அவர்கள் வாழ்ந்த வீட்டை விட அது குச்சு வீடாக இருந்தாலும் ஸரிதான் தன் மக்களை விட்டு விட்டு வேறு எந்த பெரிய ஆஸ்பத்ரியிலும் அவர்களால் நிம்மதியாக இருக்க முடியாது. ஓம் நமோ பகவதே ஸ்ரீ காஞ்சி காமகோடி சந்த்ரசேகராய! ஓம் ஸ்ரீ காஞ்சி சங்கர! ஓம் ஸ்ரீ காமகோடி சங்கர !ஜெய ஜெய சங்கர! ஓம் ஸ்ரீ காஞ்சி சங்கர! ஓம் ஸ்ரீ காமகோடி சங்கர! ஜெய ஜெய சங்கர!ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர .. ஸ்ரீ சந்திர சேகர சரஸ்வதி சங்கர. ஸ்ரீ மஹா பெரியவா எனக்கு அபயம் கொடுத்து காத்து ரக்ஷிப்பாய் பரம கருணா சாகரா.

ஸ்ரீ மஹா பெரியவா சரணாரவிந்தங்களுக்கு அநேக கோடி நமஸ்காரங்கள்.
 
கீசு கீசென்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து
     பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
     வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ
     நாயகப் பெண் பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
     தேசமுடையாய்! திற ஏல் ஓர் எம்பாவாய்.

புரூரவஸ்...

புரூரவஸ்!

நவக்கிரஹங்களில் ஒருவரான புதனின் புதல்வன் புரூரவஸ், நீதிநெறி தவறாது அரசாண்டவன். தேவலோக நடன மங்கை ஊர்வசியின் அழகில் சித்திரா வருணர்கள் மையல் கொண்டனர். அவர்கள் ஆசையை ஊர்வசி நிராகரிக்கவே, அவர்கள் சினம் கொண்டு சிலகாலம் மானிடனின் மனைவியாகக் கடவது என சபித்தனர். சாபம் பெற்ற ஊர்வசி புரூரவஸின் அழகிலும், குணத்திலும் மனதைப் பறிகொடுத்தாள். புரூரவஸும் ஊர்வசியின் சவுந்தர்யத்தில் மயங்கினான். பெண்ணே! நீ யார்? என்னை மணந்து கொள்வாயா? என வினவினான். நான் தேவலோக அப்சரஸ் ஊர்வசி. உங்களை மணக்க ஒப்புக்கொள்கிறேன். அதற்கு இரு நிபந்தனைகள் உண்டு. முதலாவது, நான் வளர்க்கும் இரு ஆட்டுக் குட்டிகளும் என் படுக்கை அறையில்தான் இருக்கும். அதில் ஒன்று காணாமல் போனால் கூட நான் உங்களை விட்டுப் பிரிந்து விடுவேன். முகம் கோணாமல் பராமரிக்கும் ஆட்களை அவற்றுக்கு ஏற்பாடு செய்ய வேண்டியது உமது கடமை.

தவிர, நெய்யைத் தவிர வேறு ஆகாரம் எதையும் சாப்பிடும்படி என்னை வற்புறுத்தக் கூடாது. அதோடு திகம்பரனாக வெளிச்சத்தில் உங்களை நான் பார்க்கக் கூடாது என்றாள் அவள். அனைத்துக்கும் சம்மதித்து அவளை அரண்மனைக்கு அழைத்துச் சென்றான் புரூரவஸ். ஊர்வசி கருவுற்றாள். அமர லோகத்தில் ஊர்வசி இல்லாமல் குழு நடனங்கள் சிறக்கவில்லை. ஊர்வசியின் ஆடுகளை இரவில் தம்பதிகள் சுகித்திருக்கையில் கவர்ந்து வந்து விடுவோம். நிர்வாணமாயிருக்கும் புரூரவஸால் தடுக்க இயலாது. மீறி விரட்டினால் மின்னலை வீசுவோம் என்று திட்டம் தீட்டினான் விசுவாவசு. சரி, மின்னலை நீ பாய்ச்சத் தயாராயிரு. நான் ஒரு ஆட்டுக் குட்டியைத் திருடிக் கொண்டு வருகிறேன் என்றான் ஊர்ணாயு. நிபந்தனை எப்படியும் உடைய வேண்டும். ஊர்வசி பார்வை படும் தூரத்தில் மின்னலைப் பாய்ச்சினால்தான் பலன் என்று எச்சரித்தான் சித்திரசேனன்.

திட்டமிட்டபடியே அன்றிரவு எல்லாம் நடந்தது. ஆட்டின் கதறல் கேட்டு புரூரவஸைத் தள்ளி விட்டாள் ஊர்வசி. கலைந்து கிடந்த உடையைத் தேடுவதற்குள் மின்னலை வீசினான் விசுவாவசு. அதே நேரம் இரண்டாவது குட்டியையும் சித்திரசேனன் தூக்கிச் செல்ல ஊர்வசி துக்கித்தாள். ஆத்திரத்தோடு வாளை உருவிக் கொண்டு போனான் புரூரவஸ். இதற்கிடையே சாபம் நீங்கியதால் தேவலோகத்துக்கு பறந்து சென்று விட்டாள் ஊர்வசி. குட்டிகளோடு அந்தப்புரம் வந்த புரூவரஸ், ஊர்வசியைத் தேடித் திரிந்தான். குரு க்ஷேத்திரத்திலுள்ள ஒரு தாமரைப் பொய்கையில் தோழிகளுடன் நீராடுவது கண்டு அவளை அழைத்தான். மகனைப் பெற்றெடுத்து உங்களிடம் கொடுத்து விட்டு ஒருநாள் உங்களைத் திருப்திப்படுத்துவேன். அதோடு என்னை விட்டுவிட வேண்டும். பங்குனி கடைசியில் வாருங்கள் என்றாள் ஊர்வசி. அதன்படி, ஆயுசு வைப் பெற்று புரூரவஸுவிடம் ஒப்படைத்தாள். அப்போது கந்தர்வர்கள், அரசனிடம் தங்களை ஏமாற்றிய தோஷம் நீங்க வரமொன்று கொடுக்க விரும்புகிறோம் என்று கூற, ஊர்வசியோடு வாழ வரம் தாருங்கள் என்று கோரினான். அவர்கள் வன்னிமரக் குச்சியொன்றை அளித்து இந்தக் கொம்பை மூன்றாக்கி, வேத மந்திரங்களை உச்சரித்து இஷ்டகாமிய ஹோமம் செய்ய, உங்கள் விருப்பம் நிறைவேறும் எனக் கூறிச் சென்றனர். வேதவிதிப்படி ஹோமம் செய்து கந்தர்வ லோகம் சென்று ஊர்வசியோடு சுகித்திருந்தான் புரூரவஸ். 




ஆளவந்தார்....


 ஆளவந்தார்!

சோழ மன்னன் ஒருவரின் ஆஸ்தான வித்வானாக இருந்தார் ஆக்கியாழ்வான் என்ற வடமொழிப் புலவர் ஒருவர். சாஸ்திர ஞானமும் சகலகலா வல்லமையும் பெற்றிருந்தாலும், தான் என்னும் மமகாரகுணம் கொண்டிருந்த ஆக்கியாழ்வான் அனைத்துப் புலவர் பெருமக்களையும் தனக்குப் பணி விடை செய்யும் அளவுக்கு அடிமைப்படுத்தி வைத்திருந்தார். அவருடன் வாதிட்டு வெல்ல முடியாதோர் அவருக்கு கப்பமும் கட்டி வந்தனர். அவ்வாறாக கப்பம் கட்ட முடியாத ஏழ்மை நிலையில் இருந்த மாபாடியார் என்ற ஆசிரியப்பெருமான் ஒருவரைக் காப்பாற்ற எண்ணினான் சின்னஞ் சிறுவனாகிய யமுனைத்துறைவன் ஆக்கியாழ்வானிடம் சொற்போர் தொடுக்க சம்மதமும் தெரிவித்தான்.
தன்னுடன் வாதம் செய்ய வந்துள்ளது ஒரு சின்னஞ்சிறுவன் என்பதனைக் கண்ட ஆக்கியாழ்வான் எள்ளி நகையாடியதுடன் தான் கேட்கும் சாதாரண கேள்விக்கு முதலில் பதில் சொல்ல வேண்டும். அதே சமயம், தான் சரி என்று சொல்வதை தவறு என்றும், தவறு என்பதை சரி என்றும் நிரூபணம் செய்யும் அளவுக்கு பேச வேண்டும் என்று கூறினார். வாதத்திற்கு ஒப்புக்கொண்ட யமுனைத்துறைவன். அரசவையில் சோழ மன்னனும் அரசியும் பார்த்திருக்க வாதமேடையில் ஏறி கம்பீரமாக அமர்ந்தான்.

சின்னஞ் சிறுவனாகிய நீயே முதலில் கேட்கலாம்... என்றார் ஆக்கியாழ்வான். உன் அன்னை மலடியல்ல; சோழ அரசி கற்புடை மாது; சோழ மன்னன் தர்மவான் என்னும் மூன்று வாக்கியங்களை முன் வைத்தான் யமுனைத்துறைவன். போட்டியின் நிபந்தனையின் படி, அன்னை மலடி என்றும் அரசி கற்பில்லாதவள் என்றும், மன்னன் அதர்மவான் என்றும் ஆக்கியாழ்வான் வாதிட வேண்டும். இந்த மூன்றுக்குமே பதில் சொல்ல முடியாமல் முழித்தார் ஆக்கியாழ்வான். ஏனென்றால், மகனைப் பெற்ற அன்னையை மலடி என்று கூற முடியாது; அரசியை கற்பற்றவள் என்றோ, அரசன் அதர்மவான் என்றோ கூறினால் மரணதண்டனையே கிடைக்கும். பயந்து போன ஆக்கியாழ்வான் நீயே இவைகளுக்கான பதிலைக் கூறு என்றார். ஒரே பிள்ளையைப் பெற்றவள் மலடிக்குச் சமம் என்றும், பொதுவாக பெண்கள் முதலில் வெண்மதிக்கும், பின்பு கந்தர்வருக்கும் மானசீகத் தொடர்பில் இருந்த பின்பே மனிதனுக்கு மனையாளவதால் அரசியும் கற்பற்றவளே என்றும், தன்னுடைய குடிமக்கள் செய்யும் குற்றங்களுக்கான பலன்களில் நாடாளும் மன்னனுக்கும் பங்குண்டு என்பதனால் அரசனும் அதர்மவானே என்றும் கூறி தனது வாதத்தை முடித்து ஆக்கியாழ்வானை வெற்றி கண்டான் யமுனைத்துறைவன். அரசவையில் அமர்ந்திருந்த அரசி மிக்க மகிழ்வுடன் யமுனைத் துறைவனை அழைத்து, உச்சிமோந்து, எனை ஆளவந்தீரே... என்று புகழ்ந்தார். 

ஆக்கியாழ்வானின் ஆணவம் அன்றோடு அழிந்தது. நாலாயிர திவ்யப்ரபந்தங்களை சேகரித்தளித்து வைணவம் காக்க அவதரித்த முதல் ஆசார்யனான ஸ்ரீமந்நாதமுனிகள் அவர்களின் திருப்பேரனே இந்த ஆளவந்தான். சோழநாட்டில் சதுர் வேத மங்கலம் என்று அழைக்கப்பட்ட காட்டுமன்னார் கோவில் என்ற திவ்யத்தலமே அவரது அவதாரத்தலம்.

பிற்காலத்தில் ஆளவந்தாரின் சீடர்கள் வரிசையில் முன் நின்ற பெரிய திருமலை நம்பியும் அவர் சகோதரி மகனாகவும் இறையம் சத்துடன் (ஆதிசேஷனின் அவதாரம்) திருப்பெரும்பூதூரில் (ஸ்ரீபெரும் பூதூரில்) நல்லதோர் திருவாதிரை நாளில் அவதரித்த ஸ்ரீ ராமானுசர் என்ற எம்பெருமானார் அருளாலும் இன்று வரை வைணவம் தழைத்து நிற்கிறது என்பது முற்றிலும் உண்மை. ஆளவந்தாரின் அந்திமக் காலத்தில் உடனிருந்து திருவரங்களத்தில் (ஸ்ரீரங்கம்) காவிரிக் கரையில் அவரது உடலை திருப்பள்ளிப்படுத்தி உய்வு கண்டார் உடையவர் என்றும் யதிராசர் என்றும் புகழப்பட்ட ராமாநுசர்! ஆளவந்தார் திருவடிகளே சரணம்!