புதன், 18 மே, 2022

தீபத்தின் மகிமை



நெய் விளக்கில் ஏன் தீபம் ஏற்ற வேண்டும்? கலைமகள், திருமகள், மலைமகள்... தீபத்தின் மகிமை!

🔥 நாம் இறைவனை வழிபடும் வேளைகளில் தீப வழிபாடு என்பது ஒரு முக்கிய பங்காக உள்ளது. வீட்டு பூஜை அறைகள் மற்றும் கோவில்களில் தீபம் ஏற்றி வழிபடும் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

🔥 நோய் தொற்றுகளை பரவ விடாமல் தடுக்கும் சக்தி, சில எண்ணெய் வகைகளுக்கும், தீபத்திற்கும் உண்டு. அதனால்தான் வீடுகளில் விளக்கேற்றி வழிபடுங்கள் என நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்.

🔥 அதுமட்டுமல்லாமல் தீப ஒளியில் கலைமகள் சரஸ்வதிதேவி வந்து அமர்கிறாள். தீபத்தின் சுடரில் திருமகளான லட்சுமியும், தீபத்தின் வெப்பத்தில் மலைமகளான பார்வதிதேவியும் வந்து குடியிருப்பதாக ஐதீகம்.

🔥 ஆகவே வீட்டில் காலையும், மாலையும் ஏற்றி வைக்கும் தீபத்தில், முப்பெருந்தேவியரும் எழுந்தருளி கடாட்சம் தருவதாக நம்பிக்கை.

🔥 இல்லங்களில், தினமும் பிரம்மமுகூர்த்தம் என்று சொல்லப்படும் அதிகாலை 4.30 முதல் 6 மணிக்குள் விளக்கேற்றுவது விசேஷம்.

🔥 அதேபோல், மாலையில் 4.30 முதல் 6 மணிக்குள் விளக்கேற்ற வேண்டும். இந்த நேரமே பிரதோஷ வேளை ஆகும்.

🔥 நெய் அல்லது எண்ணெயை விளக்கில் பயன்படுத்தும்போது பூரணமாக, அதாவது வழிய வழிய ஊற்றி, பிறகு திரியை வைத்து ஏற்ற வேண்டும்.

🔥 குறிப்பாக, இரண்டு திரிகளை ஒன்றாக்கி விளக்கேற்றுவது மிகவும் விசேஷம். கணவன் ஒரு திரி, மனைவி மற்றொரு திரி. இப்படி இரண்டு திரிகளை இணைத்து விளக்கேற்றினால், தம்பதி ஒற்றுமை மேலோங்கும் என்பது உறுதி.

நெய்விளக்கு ஏற்றுதலும்... அதன் பலன்களும்...

🔥 நாம் கோவிலுக்கு சென்று இறைவனிடம் நம் வேண்டுதல்களை வைப்பதோடு விளக்கேற்றியும் வழிபடுகிறோம்.

🔥 அம்மன் சன்னதியில் நெய்தீபம் ஏற்றுவதால் பலவிதமான நன்மைகள் கிடைக்கும். இதனால் நாம் வைக்கும் கோரிக்கைகள் நிறைவேறும்.

*எண்ணிக்கையின் பலன்கள் :*

🔥 5 நெய் விளக்கு ஏற்றினால் சிறந்த கல்வியும், ஞானமும் பெறலாம்.

🔥 9 நெய் விளக்கு ஏற்றினால் நவகிரக தோஷம் நீங்கும்.

🔥 12 நெய் விளக்கு ஏற்றினால் வேலையில் ஏற்பட்ட தடைகள் நீங்கும், வேலைவாய்ப்பு கிடைக்கும்.

🔥 18 நெய் விளக்கு ஏற்றினால் காலசர்ப்ப தோஷம் மற்றும் செவ்வாய் தோஷம் நீங்கும்.

🔥 27 நெய் விளக்கு ஏற்றினால் திருமணத்தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

🔥 36 நெய் விளக்கு ஏற்றினால் சகல தோஷமும் நீங்கும்.

🔥 48 நெய் விளக்கு ஏற்றினால் தொழில் அபிவிருத்தி மற்றும் சகல ஐஸ்வர்யமும் பெறலாம்.

🔥 108 நெய் விளக்கு ஏற்றினால் அம்மன் அருள் கடாட்சத்தை முழுமையாக பெறலாம்.


பஞ்சநத கல்லில் செய்த நடராஜர்

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியை அடுத்து பாடாலூரில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ள திருஊற்றத்தூர் (ஊட்டத்தூர்) என்ற ஸ்லத்தில் ஆசியாவிலேயே மிகவும் அரிதான, பஞ்சநத கல்லில் செய்யப்பட்ட அபூர்வ நடராஜ பெருமான் திருமேனி உள்ளது.
 


பஞ்சநத கற்கள் சூரியனில் இருந்து வெளிவரும் ஆரோக்கிய கதிர்வீச்சினை சேமித்து வைத்துக் கொள்ளும் ஆற்றல் உடையன. இந்த வகை கற்சிலை தற்போது எங்குமே கிடையாது என்கிற தகவல் கோயில் குருக்கள் மூலம் தெரியவந்தது. ஆலிங்க நதனம், பஞ்சநதனம், சிங்க நதனம், யானை நதனம், யாழி நதனம் என்று 5 வகையான சிலாக்கற்கள் உள்ளன. இதில் பஞ்சநதனம் என்ற பாறை தெய்வீக ஒளி வீசும் என்பது சிற்பக்கலை வல்லுநரால் கூறப்பட்டுள்ளது. சூரிய பிரகாசத்தை தருகின்ற இந்த பஞ்சநதன பாறைகளால் இவ்வூர் நடராஜர் சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது. இறைவி சிவகாம சுந்தரியின் உருவ அமைப்பு வணங்குவதற்கு மட்டுமில்லாமல் ரசனைக்குரியதாகவும் இருப்பது தனிச்சிறப்பாகும். அன்னை தன் முகத்தை சாய்த்து பஞ்சநதன நடராஜரை பார்ப்பதுபோல் காட்சியளிப்பது அழகு! சிறுநீரகம், மற்றும் சிறுநீரக கல் தொடர்பான நோய்களுக்கு இந்த நடராஜர் மருந்தாக திகழ்கிறார். சுமார் ஒரு கிலோ வெட்டி வேரினை 48 துண்டுகளாக எடுத்துக் கொண்டு அவற்றை ஒரு மாலையாக கட்டி இந்த நடராஜருக்கு சாற்றி அர்ச்சித்து பின்னர் அந்த 48 துண்டுகளை நாளொன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் ஒரு கோப்பை நீரில்... இரவு ஊற வைத்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள நோய் தீர்வது இன்றும் நடைபெறும் அதிசயமாக உள்ளது!

அவ்வை பாடிய விநாயகர் அகவல்

 


சமயக்குரவர்கள் எனப்படும் நால்வரின் முக்கியமானவர், சுந்தரமூர்த்தி சுவாமிகள். இவர் சிவபெருமானின் உற்ற தோழனாகவும் இருந்தவர். இவருக்காக சிவபெருமானே வீதியில் இறங்கி நடந்து தூது சென்ற சம்பவங்கள் எல்லாம் நடந்திருக்கின்றன. சுந்தரமூர்த்தி சுவாமிகள், தான் இந்த பூவுலகிற்கு வந்த நோக்கம் நிறைவேறியதை அடுத்து, கயிலாயம் செல்ல இறைவனால் பணிக்கப்பட்டார். அவரை ஏற்றிச் செல்வதற்காக, கயிலாயத்தில் இருந்து வெள்ளை யானை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதில் ஏறிய சுந்தரமூர்த்தி சுவாமிகள், கயிலாயம் புறப்பட்டார்.


அப்போது அங்கு இருந்த நாயன்மார்களில் ஒருவரான சேரமான் பெருமான், தானும் கயிலாயம் செல்ல வேண்டும் என்று மனம் உந்தினார். இதனால் தன்னுடைய குதிரை மீது ஏறி, அதன் காதில் பஞ்சாட்சர (நமசிவாய) மந்திரத்தை உச்சரித்தார். உடனே, அந்தக் குதிரை விண்ணில் பறக்கத் தொடங்கியது. இதையடுத்து தனது நண்பரான சுந்தரமூர்த்தி சுவாமிகளுடன் இணைந்து சேரமான் பெருமானும், திருக்கயிலாயம் நோக்கிச் சென்றார்.

அதனை அறிந்துகொண்ட அவ்வையார், தானும் சுந்தரமூர்த்தி சுவாமிகளோடு சேர்ந்து கயிலாயம் செல்ல நினைத்தார். இதற்காக அவர் அப்போது செய்து கொண்டிருந்த விநாயர் பூஜையை அவசரம் அவசரமாக செய்தார். அப்போது அங்கு தோன்றிய விநாயகர், “அவ்வையே.. நீ என்னுடைய பூஜையை எந்த அவசரமும் இன்றி செய். சுந்தரருக்கு முன்பாகவே உன்னைக் கொண்டு போய் கயிலாயத்தில் சேர்ப்பது என் பொறுப்பு” என்றார்.

இதையடுத்து அவ்வையார், ‘சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலவிசை பாடப்..’ என்று தொடங்கும் விநாயகர் அகவலைப் பாடினார். 72 அடிகள் கொண்ட இந்தப் பாடலை பாடி முடித்து, விநாயகருக்கு உண்டான அனைத்து பூஜைகளையும் அவ்வையார் செய்து முடித்தார்.

அதன்பின்பு, தான் கொடுத்த வாக்குப்படி, விநாயகர் அவ்வையாரை தன்னுடைய துதிக்கையால் தூக்கி, கயிலாயத்தில் சேர்ப்பித்தார். அவர் சென்றடைந்த பிறகே, சுந்தரரும், சேரமான் பெருமானும் கயிலாயம் வந்து சேர்ந்தனர்.

அவ்வையார் பாடிய விநாயகர் அகவல், விநாயகரை வழிபடும் துதிப்பாடல்களில் முக்கியமானதாக விளங்குகிறது. இந்தப் பாடலில் விநாயகரின் பெருமையும், அழகும் அற்புதமாக விளக்கப்பட்டுள்ளது. இந்த அகவலைப் பாடி, விநாயகரை வழிபாடு செய்பவர்களுக்கு, வாழ்வில் சலக வளங்களும் கிடைக்கப்பெறும்.

பலன்களை அள்ளித்தரும் சுதர்சன கவசம்

கனக ரஹித சக்கரம் பாசூரா ரம்ய சக்கரம்


கிரிவர குரு சக்கரம் கேசவ ஸ்வாமி சக்கரம்

அசுர நிதன சக்கரம் கால தண்டாகினி சக்கரம்

பவது பவது சக்கரம் பந்தாவோ விஷ்ணு சக்கரம்

இப்படி பெருமாள் கையில் இருக்கக் கூடிய சக்கரத்திற்கு பல விதமான மந்திரங்கள் உள்ளன.

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கையில் உள்ள சக்கரமே ‘சுதர்சன சக்கரம்’ என்று அழைக்கப்படுகிறது. இதற்கான மந்திரத்தை ஒருவர் ஜெபித்தால் எண்ணற்ற பலன்களை பெறுவதோடு எத்தகைய தீய சக்தியாக இருந்தாலும் அதில் இருந்து தன்னை காத்துக்கொள்ளும் ஆற்றல் பெறுவார். இப்படி பல அற்புதங்கள் நிறைந்த சுதர்சன கவசம் ஆன்மீக பலன் வாசகர்களுக்காக கீழே கொடுத்துள்ளோம்.மிகவும் சக்திவாய்ந்ததாக கருதப்படும் இந்த மந்திரத்தை சூரிய கிரகணத்தன்றோ அல்லது சந்திர கிரகணத்தன்றோ விளக்கேற்றிவைத்து 1008 முறை ஜபித்தால் சித்தியாகும்.

நாள் தோறும் இந்த கவசத்தை படித்து வந்தால் நமக்கு எத்தகைய இடையூறுகள் வந்தாலும் தீங்கை விளைவிக்காது. அதோடு எந்த வித தீய சக்தியும் நெருங்க விடாமல் இது கவசம் நம்மை காக்கும் என்று நம்பப்படுகிறது இந்த கவசத்தை சொல்பவர்கள் அன்றைய தினம் கட்டாயம் அசைவ உணவை உண்ணக்கூடாது. அதோடு இல்லத்தையும், மனத்தையும் சுத்தமாக வைத்து இந்த கவசத்தை படிக்க வேண்டும். இதை எல்லாம் மீறி, இது ஒரு சாதாரண கவசம் தானே என்று நினைத்து சுத்தமில்லாமல் இந்த மந்திரத்தை ஜெபித்தால் நமக்கு தீய செயல்கள் ஏற்படும்.

ஸ்ரீசுதர்சன கவசம்

ப்ரஸீத பகவந் ப்ரஹ்மந் ஸர்வமந்த்ரஜ்ஞ நாரத |

ஸௌதர்ஸநம் து கவசம் பவித்ரம் ப்ரூஹி தத்வத்: ||

நாரத:-

ஸ்ருணுஷ்வேஹ த்விஜஸ்ரேஷ்ட பவித்ரம் பரமாத்புதம் |

ஸௌதர்ஸநம் து கவசம் த்ருஷ்டாத்ருஷ்டார்த்த ஸாதகம் ||

கவசஸ்யாஸ்ய ருஷிர் ப்ரஹ்மா சந்தோநுஷ்டுப் ததா ஸ்ம்ருதம் |

ஸுதர்ஸந மஹாவிஷ்ணுர் தேவதா ஸம்ப்ரசஷதே ||

ஹ்ராம் பீஜம் ஸக்தி ரத்ரோக்தா ஹ்ரீம் க்ரோம் கீலகமிஷ்யதே |

ஸிர: ஸுதர்ஸந: பாது லலாடம் சக்ரநாயக: ||

க்ராணம் பாது மஹாதைத்ய ரிபுரவ்யாத் த்ருஸௌ மம |

ஸஹஸ்ரார: ஸ்ருதிம் பாது கபோலம் தேவவல்லப: ||

விஸ்வாத்மா பாது மே வக்த்ரம் ஜிஹ்வாம் வித்யாமயோ ஹரி: |

கண்ட்டம் பாது மஹாஜ்வால: ஸ்கந்தௌ திவ்யாயுதேஸ்வர: ||

புஜௌ மே பாது விஜயீ கரௌ கைடபநாஸந: |

ஷட்கோண ஸம்ஸ்த்தித: பாது ஹ்ருதயம் தாம மாமகம் ||

மத்யம் பாது மஹாவீர்ய: த்ரிணேத்ரோ நாபிமண்டலம் |

ஸர்வாயுதமய: பாது கடிம் ஸ்ரோணிம் மஹாத்யுதி: ||

ஸோமஸூர்யாக்நி நயந: ஊரு பாது ச மாமகௌ |

குஹ்யம் பாது மஹாமாய: ஜாநுநீ து ஜகத்பதி: ||

ஜங்கே பாது மமாஜஸ்ரம் அஹிர்புத்ந்ய: ஸுபூஜித: |

குல்பௌ பாது விஸுத்தாத்மா பாதௌ பரபுரஞ்ஜய: ||

ஸகலாயுத ஸம்பூர்ம: நிகிலாங்கம் ஸுதர்ஸந |

ய இதம் கவசம் திவ்யம் பரமாநந்த தாயிநம் ||

ஸௌதர்ஸந மிதம் யோ வை ஸதா ஸுத்த: படேந் நர: |

தஸ்ர்த்த ஸித்திர் விபுலா கரஸ்தா பவதி த்ருவம் ||

கூஸ்மாண்ட சண்ட பூதாத்யா: யேச துஷ்டா: க்ரஹா ஸ்ம்ருதா: |

பலாயந்தேsநிஸம் பீதா: வர்மணோஸ்ய ப்ரபாவத: ||

குஷ்டாபஸ்மார குல்மாத்யா: வ்யாதய: கர்மஹேதுகா: |

நஸ்யந்த்யேதந் மந்த்ரிதாம்பு பாநாத் ஸப்த திநாவதி ||

அநே ந மந்த்ரிதாம் ம்ருத்ஸ்நாம் துலஸீமூல ஸம்ஸ்த்திதாம் |

லலாடே திலகம் க்ருத்வா மோஹயேத் த்ரிஜகந் நர: ||

இதி ஸ்ரீப்ருகுஸம்ஹிதோக்த ஸ்ரீஸுதர்ஸந

கவசம் ஸம்பூர்ணம் ||

அனுஷா🙏🌹


விலங்குகள் வழிபட்ட சிவ தலங்கள்

மனிதர்களைப் போலவே, விலங்குகளும் தங்கள் பிறவியின் பலனை அடைவதற்காக இறைவனை வழிபட்டு வந்ததாக புராணங்களும், பல கோவில் வரலாறுகள் நமக்கு எடுத்துரைக்கின்றன.


சிவபெருமானை, புலி வழிபட்ட தலம், திருப்புலிவனம். காஞ்சிபுரம், உத்திரமேரூர் சாலையில் உள்ள இந்த திருத்தலத்தில் திருப்புலிவன முடையார் என்ற பெயரில் இறைவன் அருள்கிறார். சாபத்தால் புலியாக மாறிய முனிவர் இங்கு இறைவனை வழிபட்டிருக்கிறார்.

சிவபெருமானை, பசு வழிபட்ட தலங்கள் ஏராளம் உள்ளன. அவற்றில் ஒன்று சங்கரன்கோவில். திருநெல்வேலி அருகில் உள்ள இந்த திருத்தலத்தில் தேவர்கள் சூழ, இறைவனை அம்பாள் வழிபாடு செய்திருக்கிறாள். ‘கோ’ என்பதற்கு ‘பசு’ என்று பொருள். எனவே பசு வழிபட்ட இந்த ஆலயத்தில் உள்ள இறைவி ‘கோமதி’ என்று பெயர் பெற்றிருக்கிறாள்.

சிலந்தி மற்றும் யானை சிவபெருமானை வழிபட்ட தலம், திருவானைக்காவல். திருச்சியில் காவிரி ஆற்றுக்கும் - கொள்ளிடத்திற்கும் இடையில் அமைந்துள்ள தலம் இது. இங்கு சிவலிங்கம் கூரையில்லாமல் வெயில், மழையில் இருந்தது. சிவலிங்கத்தின் மேல் வலை பின்னிய சிலந்தி, அதன் மூலம் வெயில், மழை, மரத்தின் சருகுகள் சிவலிங்கத்தில் விழாமல் தடுத்தது. யானை தன் துதிக்கை மூலம் காவிரி ஆற்றில் நீரும், பூவும் கொண்டுவந்து வழிபட்டது. யானை, சிலந்தி பின்னிய வலையை அழித்துவிட்டு செல்லும். சிலந்தி மீண்டும் வலை பின்னி வழிபாட்டை தொடரும். யானையை தண்டிக்க எண்ணிய சிலந்தி, அதன் துதிக்கையில் நுழைய இரண்டும் மடிந்தன. இவைகளின் பக்திக்கு மெச்சிய சிவன், யானையை சிவகணங்களுக்கு தலைவனாக ஆக்கினார். சிலந்தி மறுபிறவியில் கோட்செங்கட் சோழன் என்ற அரசனாக பிறந்தார்.

எறும்புகள் சிவபெருமானை வழிபட்ட தலம், திருவெறும்பூர். அசுரனிடம் இருந்து தங்களை காப்பாற்ற தேவர்கள் எறும்பு வடிவம் எடுத்து சிவபெருமானை வழிபட்ட தலம். திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் உள்ள எறும்பீஸ்வரர் கோவிலில் உள்ள பிரசாதத்தை எறும்புகள் எடுத்துக்கொள்வதை இன்றும் காணலாம்.

ஈ - வடிவில் அகத்திய முனிவர், சிவனை வழிபட்ட தலம் , திருஈங்கோய்மலை. திருச்சி மாவட்டம், தொட்டியம்- முசிறி செல்லும் வழியில் இந்த திருத்தலம் இருக்கிறது.

பாம்புகள், சிவபெருமானை வழிபட்ட தலம் திருப்பாம்புரம். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இத்தலத்து சிவனை ஆதிசேஷன் என்ற பாம்பு வழிபட்டுள்ளது.

அணில், குரங்கு, காகம் ஆகிய மூன்று ஈசனை வழிபட்ட தலம் ‘குரங்கணில்மூட்டம்.’ சாபத்தால் காகமாக மாறிய எமனும், அணிலாக மாறிய இந்திரனும், குரங்காக மாறிய வாலியும், இங்குள்ள சிவனை வழிபட்டிருக்கிறார்கள். இத்தலம் காஞ்சிபுரம் அடுத்த மாமண்டூர் என்னும் இடத்தில் உள்ளது.

மயில், சிவபெருமானை வழிபட்ட தலம் மயிலாடுதுறை. சாபத்தால் மயிலாக மாறிய அம்பிகை, சிவனை வழிபட்டதாக தல வரலாறு சொல்கிறது.

கழுகு, சிவபெருமானை வழிபட்ட தலம் திருக்கழுக்குன்றம். நான்கு யுகங்களிலும் நான்கு பெயர்களில் கழுகுகள் சிவபெருமானை பூஜித்து வருவதாக சொல்லப்படுகிறது.

வண்டு, சிவபெருமானை பூஜித்த தலம் திருவண்டுதுறை. திருவாரூர் மாவட்டம், திருவண்டுதுறையில் பிருங்கி முனிவர் வண்டு வடிவில் சிவனை பூஜித்தார். இன்றும் இந்த கோவிலின் கருவறையில் வண்டுகளின் ரீங்கார ஒலியை கேட்க முடியும்.

நண்டு, சிவபெருமானை வழிபட்ட தலம், திருந்துதேவன்குடி. சாபத்தால் நண்டாக மாறிய இந்திரன், இத்தல சிவனை பூஜித்து பேறு பெற்றான். இத்தலம் கும்பகோணம் அருகே உள்ளது.

சக்கரவாகப் பறவை, சிவபெருமானை பூஜித்த தலம் திருச்சக்கராப்பள்ளி. தஞ்சாவூர் மாவட்டம், திருச்சக்கராப்பள்ளி எனும் ஊரில் அமைந்துள்ள கோவில் இது.

யானை, சிவனை பூஜித்த தலம், திருக்கொட்டாரம். துர்வாச முனிவரால் சாபம் பெற்ற ஐராவதம் இங்குள்ள சிவபெருமானை வழிபட்டு பேறு பெற்றது.

ஆமை, சிவபெருமானை பூஜித்த தலம் திருக்கச்சூர். இங்குள்ள சிவனை வழிபட்டுதான், மந்தார மலையை தாங்கும் சக்தியை திருமால் பெற்றதாக தல வரலாறு சொல்கிறது.

கிளி வழிபட்ட தலம், சேலத்தில் உள்ள சுகவனேஸ்வரர் கோவில். கிளியாக மாறிய சுக முனிவர் வழிபட்ட சிவ பெருமான் இங்கு வீற்றிருந்து அருள்கிறார்.

சிட்டுக்குருவி சிவனை பூஜித்த தலம், வட குரங்காடுதுறை. தன்னை வழிபட்ட சிட்டுக்குருவிக்கு மோட்சம் அளித்துள்ளார் இத்தல ஈசன். அதனால் சிட்டிலிங்கேஸ்வரர் என்றும் இறைவன் அழைக்கப்படுகிறார்.

நவபாஷண பைரவர்

சித்தர்கள் வணங்கும் நவபாஷாண பைரவர் !

சுகந்தவனேஸ்வரர் திருக்கோயில்.
பெரிச்சிகோயில், கண்டரமாணிக்கம் வழி, சிவகங்கை மாவட்டம்.

இந்த சிலையின் சக்தியை தாங்கும் ஆற்றல் கலியுக மனிதர்களுக்கு இல்லை 🕊️

சுமார் 12000 வருடங்களுக்கு முன் மகா சித்தர் போகர் பெருமானால் உருவாக்கப்பட்ட நவபாஷாண பைரவர்.

இவர் காசி ஷேத்திரத்தில் இருந்து இங்கு வந்தவர் என்று கூறுகின்றனர்.

இவரின் சக்தி தற்போதும் மிக மிக அதிகமாக உள்ளதால் இவருக்கு அபிஷேகம் செய்யும் தீர்த்தம் மற்றும் சாற்றப்படும் வடை மாலை பிரசாதமாக தருவதில்லை..

அந்த வடை மாலை கோவில் மேல் போட்டு விடுவார்கள் பறவைகளும் அதை தொடுவதில்லை இவரின் அதிர்வுகள் மிகவும் அதிகமாக உள்ளது ..

பழனி முருகர் சிலா ரூபம் செய்வதற்கு முன்பே இதை செய்ததாக செவி வழி செய்தி உண்டு.. வரலாறு சரியாக தெரியவில்லை..

இவருக்கு இரண்டு முகங்கள் உண்டு.. பின்புற முகத்தை காண முடியாது அந்த முகத்தால் வன்னி மரத்தின் அடியில் வீற்றிருக்கும் சனீஸ்வரருக்கு மட்டும் காட்சி தருவதாக ஐதீகம்..

இவருக்கு வன்னி இலைகளில் பூஜைகள் நடை பெறுகிறது என்பது சிறப்பு.

மிகவும் அபூர்வ சக்தி படைத்த இந்த பைரவர் கண்டராமாணிக்கம் ஸ்ரீ சுகந்தவனேஸ்வரர் என்ற கோவிலில் ஆண்டபிள்ளை நாயனார் என்ற பெயரில் வீற்றிருக்கிறார்.

இவரை வழிபட வேண்டும் எனில் பூர்வ புண்ணியம் மிகவும் அவசியம்.

சனி தோஷ நிவர்த்தி, பித்ரு சாபம், ஸ்திரி தோஷம், சகல பாப நிவர்த்தி, நீண்டகால நோய்கள் நிவர்த்தி, அஷ்டமா சித்தி அளிக்க கூடியவர் அதற்கு சாட்சியாக அருகில் பட்டமங்கலம் என்ற இடத்தில் அஷ்டமா சித்தி பொய்கை உள்ளது மிகவும் அதிசயம்.

அனைவரும் இவரை வழிபட்டு சகல பாப விமோசனம் பெற்று ஆனந்தமாக வாழ வேண்டும்.

அருள்மிகு சுகந்தவனேஸ்வரர் திருக்கோயில்.
பெரிச்சிகோயில், கண்டரமாணிக்கம் வழி, சிவகங்கை மாவட்டம்.


செவ்வாய், 17 மே, 2022

ஸ்ரீதேவியார்

ஸ்ரீதேதியூர் பெரியவா அவர்களின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவம் ஸ்ரீகாயத்ரீ மகிமை

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தேதியூர் பிரம்மஸ்ரீ சுப்ரமண்ய சாஸ்திரிகள் அவர்கள் மனைவியுடன் ரயிலில் பயணிக்கும் போது ஸந்த்யாகாலத்தில் ரயில் மாயவரம் ஸ்டேஷன் அடைந்தது.
சாஸ்திரிகளும் ஸந்த்யாவந்தனம் செய்ய ரயிலை விட்டு இறங்கி ஸ்தலசுத்தி செய்து விபூதி இட்டுக்கொண்டு அனுஷ்டானத்தை தொடங்கி காயத்ரி ஜபம் செய்ய தொடங்கினார். ஜபத்தில் லயித்த சாஸ்திரிகள் சூழ்நிலையை மறந்தார்!  
ரயில் கிளம்பும் நேரம் ஆனதும்  கார்டு பச்சைக்கொடி காட்ட  டிரைவர் ரயிலை ஓட்ட  தயாரானார். விசிலும் அடித்தார்.
இதற்குள் ரயில் புறப்படும் நேரம் இது நீங்கள் உங்கள் கணவரின் ஜபத்தை சீக்ரம் முடிக்கச்சொல்லி ரயிலில் ஏறச்சொல்லுங்கள்! இல்லையெனில் ரயிலில் அவர் ஏறமுடியாது  என்று சக பயணிகள் பதற்றபடுத்த மாமியும் ஜபத்தை நடுவில் நிறுத்தமாட்டார் சாஸ்திரிகள் என்று கூறி தானும் பெட்டி சாமான்களுடன் இறங்கி ஜபம் பண்ணும் தன் கணவர் அருகில் போய் நின்று கொண்டார்!


இதற்குள் பலமுறை ப்ரயத்தனம் செய்தும் நின்ற இரயில் கிளம்ப மாட்டேன் என மக்கர் செய்ய டிரைவரும் ஏதோ ரிப்பேர் என்றுஸ்டேஷன் மாஸ்டர் கார்டு  ஆகியோரை கலந்து ஆலோசிக்க தொடங்கினார்.
இதற்கிடையில் நித்யம் செய்யும் ஆவர்த்தி பூர்த்தியாகி கண் திறந்த சாஸ்திரிகள் தன்னருகில் பெட்டியுடன் நிற்கும் மனைவியை பார்த்து நீ ஏன் இறங்கினாய்? என்று கேட்டு, வா ஏறிக்கொள்வோம்! என்று மாமியுடன் மீண்டும் ரயிலில் ஏறி அமர்ந்த சில நிமிடங்களில் கிளம்ப மறுத்த ரயிலை கிளப்ப மீண்டும் ஒருமுறை டிரைவர் முயற்சிக்க ரயில் திடுக்கென்று கிளம்பியது! ரயில் கிளம்பி விட்டதே என்று சாஸ்திரிகள் ஜபத்தை நிறுத்தவில்லை!

காயத்ரி மஹிமை ரயிலை மீண்டும் ஓடச்செய்தது அதே இடத்தில் நாம் இருந்தோமேயானால் ஐயோ ரெயில் கிளம்பிவிட்டதே என்று அலறி அடித்துக்கெண்டு காயத்ரீயை விட்டுவிட்டு ரெயிலைபிடித்துக் கொள்வோம் ஆனால் அவர் மகான் ரெயிலை விட்டு விட்டு காயத்ரீயைப்பிடித்தால் காயத்ரீ அவரை
விடாமல் காப்பாற்றினாள்.இதிலிருந்து
அவர் நமக்கு சொல்லும் பாடம்
நீ எதை விட்டாலும் காயத்ரீயை விடாதே
உன்னை யார் விட்டாலும் காயத்ரீ உன்னை விடாது.
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

பாம்புக்கு பால் வார்த்த கதை

பாம்புக்கு பால் வார்த்த கதை


ஸ்ரீகிருஷ்ணின் தந்திரம் இதுவரை கேட்டிராதது...

பாண்டவர்களும் திரௌபதியும் எல்லோரையும் பந்தியில் உபசரித்து உணவு பரிமாறினார்கள்.

துரியோதனன், துச்சாதனன், கர்ணன், சகுனி முதலானோர் வரிசையாக அமர்ந்திருந்தனர்.

திரௌபதி பரிமாறிக் கொண்டே துரியோதனன் இலைக்கு அருகில் வந்தாள். அவளை அவமானப்படுத்த எண்ணிய துரியோதனன், *ஐவரின் பத்தினியே... இன்று யாருடைய முறை?'*' என்று கேட்டான்.

*திரௌபதிக்குத் தூக்கி வாரிப் போட்டது. நாடி நரம்புகளெல்லாம் தளர்ந்தன. அவளால் அந்தக் கேள்வியை ஏற்க முடியவில்லை. செய்வதறியாது, பரிமாறுவதை நிறுத்திவிட்டு உள்ளே ஓடினாள்.*
*கண் கலங்கினாள்.*

அதேநேரம் அங்கு தோன்றினார் ஸ்ரீகிருஷ்ணர்.

*கலங்காதே திரௌபதி! நடந்ததை நானும் கவனித்தேன். எல்லோர் முன்னிலையிலும் உன்னை அவமானப்படுத்தி அழவைக்க நினைத்திருக்கிறான் துரியோதனன். அவனுக்கு பாடம் கற்பிக்கலாம். நான் சொல்வது போல் செய்.*

நீ மீண்டும் உணவு பரிமாறப் போ! துரியோதனன் மீண்டும் உன்னிடம் அதே கேள்வியைக் கேட்டு, *'ஏன் பதில் கூறவில்லை?’* என்பான்.

உடனே நீ, *'தக்ஷகன் முறை’* என்று சொல். *அதன் பிறகு துரியோதனன் அந்த இடத்திலேயே இருக்க மாட்டான்'*' என்றார் பகவான்.

கிருஷ்ணனின் வார்த்தையைத் தட்டமுடியாமல் விருந்து மண்டபத்துக்குச் சென்றாள் திரௌபதி. துரியோதனன் இலை அருகில் அவள் வந்ததும், விஷமத்துடன் அதே கேள்வியை மீண்டும் கேட்டான். *'எனக்குப் பதில் கூறவில்லையே... இன்று யாருடைய முறை?'*

ஸ்ரீகிருஷ்ணன் சொல்லியனுப்பியது போலவே, இன்று தக்ஷகன் முறை' என்று பளிச்சென பதில் தந்தாள் திரௌபதி.

*அதைக் கேட்டு விஷ நாகம் தீண்டியது போன்று அதிர்ந்தான் துரியோதனன். சட்டென எழுந்து அங்கிருந்து வெளியேறினான்.*

திரௌபதிக்கு ஆச்சரியம். கண்ணனிடம் ஓடோடி வந்தாள். *''கண்ணா! இதென்ன மாயம்? யாரந்த தக்ஷகன்? அவன் பெயரைக் கேட்டதும் துரியோதனன் ஏன் இப்படிப் பேயறைந்தாற்போல் பதறி, பயந்து ஓடுகிறான்?''* என்று கேட்டாள்.

கண்ணன் அதற்கான காரணத்தையும் கதையையும் சொன்னான்.

*துரியோதனனின் மனைவி பானுமதி மகா பதிவிரதை. கணவனையே தெய்வமாகக் கருதும் உத்தமி. ஆனால், துரியோதனனோ பாண்டவர்களின் ராஜ்ஜியத்தை அடைவதில் குறியாக இருந்தான். மனைவியிடம் அன்புடன் பேசக்கூட அவனுக்கு நேரம் இல்லை.*

திருமணமாகி மாதங்கள் பல கடந்தும், மண வாழ்க்கையின் பயனை அடையும் பாக்கியம் பானுமதிக்குக் கிட்டவில்லை. அவனது அன்புக்காக ஏங்கினாள். தெய்வங்களை வேண்டினாள். அவள் தவம் பலிக்கும் வேளை வந்தது.

*ஒருமுறை, முனிவர் ஒருவர் பானுமதியின் துயர் நீக்கும் வழி ஒன்றைக் கூறினார். மகிமை மிக்க மூலிகை வேர் ஒன்றை மந்திரித்து அவளிடம் கொடுத்து, அதைப் பாலில் இட்டு கணவனுக்குக் கொடுக்கும்படி கூறினார் முனிவர்.*

பானுமதியும் அதன்படியே பால் காய்ச்சி, அதில் இனிப்பும் இன்சுவையும் சேர்த்து, முனிவர் தந்த வேரையும் அதில் இட்டு, கணவனின் வருகைக்காகக் காத்திருந்தாள்.
அன்று பௌர்ணமி.

*இரவின் இரண்டாம் யாமத்தில் அந்தப்புரம் வந்தான் துரியோதனன். அப்போது அவன் மது அருந்தியிருந்தான். பால் அருந்தும் மனோநிலையில் அவன் இல்லை. ஆசையுடன் மனைவி நீட்டிய பால் கிண்ணத்தைப் புறங்கையால் ஒதுக்கினான்.*

கை தவறிய கிண்ணத்தில் இருந்த பால் தரையில் சிந்தியது. அப்போது அங்கே சென்றுகொண்டிருந்த 'தக்ஷகன்’ எனும் நாகம் அந்தப் பாலைச் சுவைத்தது.

*தக்ஷகன் சர்ப்பங்களின் ராஜன். பாலைப் பருகியதும் அதிலிருந்த வேரின் வசிய சக்தியால், அவனுக்குப் பானுமதி மீது ஆசையும் நேசமும் பிறந்தது.*

உடனே அவன் அவள் முன் தோன்றித் தன் ஆவலை வெளியிட்டான். தன்னை வருந்தி அழைத்தது அவள்தான் என்றும் வாதாடினான். பதிவிரதையான பானுமதி பதறினாள்; துடிதுடித்தாள்.

*துரியோதனனுக்குத் தன் மனைவியின் உயர்ந்த கற்பு நெறி பற்றி நன்கு தெரியும். தான் அவளது அன்பையும் பிரேமையையும் புரிந்து நடக்காததால் விளைந்த விபரீதத்தை எண்ணித் தவித்தான்.*

தக்ஷகன் கால்களில் விழுந்து தன் மனைவியின் கற்பைக் காக்க வேண்டினான். *தக்ஷகன் பாம்பு எனினும் பண்பு மிக்கவன். பாலில் கலந்திருந்த வேரின் சக்தியால் உந்தப் பெற்றதால்தான், அவன் உள்ளம் பானுமதியை விரும்பியது. எனினும், அவளுக்குக் களங்கம் விளைவிக்க அவன் விரும்பவில்லை.*

அதே நேரம், அவளின் அன்பை இழக்கவும் தயாராக இல்லை. எனவே ஒரு நிபந்தனை விதித்தான். *'அந்தப்புரத்தில் அமைந்துள்ள அரச விருட்சத்தின் அடியில் உள்ள புற்றுக்கு, பௌர்ணமிதோறும் பானுமதியைக் காண வருவேன்.*
*பானுமதி புற்றில் பால் ஊற்றி என்னை உபசரித்து, வணங்கி அனுப்ப வேண்டும். அப்போது அவள் கற்புக்குக் களங்கம் இல்லை என்பதற்குச் சாட்சியாக அவளின் கணவனான துரியோதனனும் என்னை வணங்க வேண்டும்’* என்று கூறிவிட்டு மறைந்தான் தக்ஷகன்.

அன்று முதல் இன்றுவரை பௌர்ணமி தோறும் பாம்புக்குப் பாலூற்றி வருகிறாள் பானுமதி. துரியோதனனும் பயபக்தியோடு பங்குகொள்கிறான்.

*இந்தச் சம்பவம் துரியோதனனுக்கும் பானுமதிக்கும் தக்ஷகனுக்கும் மட்டுமே தெரியும். 'இதனை வெளியே யாரிடமும் சொல்வதில்லை’ என்பது அவர்களுக்குள் செய்து கொண்ட ஒப்பந்தம். இதை நீ கூறியதுதான் துரியோதனனின் அதிர்ச்சிக்குக் காரணம்''* என்றார் ஸ்ரீகிருஷ்ணர்.

துரியோதனனால் தனக்கு நேர்ந்த அவமானத்தைத் துடைத்து ஆறுதல் கூறிய கண்ணனுக்கு நன்றி கூறினாள் திரௌபதி.

*இதை தான் நம் பெரியோர்கள் பாம்புக்கு பால் வார்த்த கதை என்று சொல்வது வழக்கத்தில் வந்தது* என்று எத்தனை பேர்களுக்கு தெரியும் ?

*"ஸ்ரீ கிருஷ்ணா உன் திருவடிகளே சரணம்"*

🌸|| *ௐ சிவம் சைவம்*|| 🌸
🌸|| *சர்வம் சிவமயம்*||🌸
🌸| *சகலம் சிவனருள்*|🌸
🌸 *திருச்சிற்றம்பலம்* 🌸

சொல்லும் செயலும்

 சொல்லும் சொல் !! செய்யும் செயலில் !! தெளிவாக, நேர்த்தியாக செய்ய என்ன செய்ய வேண்டும் ??

சொல்லவும் !! செய்யவும் !! காரணம் "நான்" என்ற மாயை கடந்து !!

யாரின் இயக்கமான ஒத்துழைப்பு வழியே இவையெல்லாம் நிகழ்கின்றது என்பதை உணர்ந்து !!

உங்கள் இருப்பின் காரணமும்,
சொல் செயல் வழியே உங்களின் விருப்பத்தை விரும்பியபடியே வெளிப்பட வைக்கும்
இறைவனை நினைத்து முன்னிறுத்தி சொல்லி !! செய்து !! பாருங்களேன் ..

முன்னிறுத்துவது நான் என்று இருக்கும்போது ஒருவித தடுமாற்றம் நம்முள் நிகழ்வது எதார்த்தம் தான் !!
காரணம் நாம் எப்போதும் ஓர் நிலை இல்லாது அல்லாடியபடி இருக்கும்போது ?? நான் சொல்கின்றேன் !! செய்கின்றேன் !! என்னும்போது தடுமாற்றமும் சகஜம்தானே ..

அதே என்றும் எங்கும் நிலையாய் நிறைந்து இருந்து எதையும் தன்னுள்ளே கொண்டு இயங்கி இயக்கி அருளும் இறைவனை முன்னிறுத்த உங்கள் செயல் !! சொல் !! போன்றவற்றில் ஓர் தெளிவும் திடமும் இருக்க தானே செய்யும் !!

அவனால் பேசுகிறேன் !! அவன் பேசவிடுவதை பேசுகிறேன் !!
அவன் எதை நினைவில் கொண்டுவந்து எப்படி சொல்லெடுத்து கொடுத்து அதையும் எந்த விதத்தில் ஒலியை வெளிப்படுத்த விடுகிறானோ அங்கனமே பேசுகிறேன் என்று உணர்வில் அவனோடு உறவாடியவண்ணம் நம் வெளிப்படுத்தும் சொல் எத்தகைய தாக்கமும் நமக்கு நேரவிடாது !!
தெளிவாக யாருக்கு என்ன புரியவேண்டுமோ அதை புரிவிக்கும் படி வெளிப்படும் தானே ..

அதே போலவே செயலும் !!
அவனால் செய்யாக்கூடிய சாத்தியக்கூறுகளை பெற்று !!
அவன் செய்யவிட்டதை !!
அவன் என்னை கையாளும் விதமே செய்கிறேன் என்று செய்ய !!
செயலில் நேர்த்தி சிறப்பு தனித்துவம் எல்லாம் வெளிப்படும் தானே !!

எல்லாம் படிக்க !! கேட்க !! நல்லாத்தான் இருக்கு ??
இதுவெல்லாம் நடைமுறைக்கு சாத்தியம் தானே ..

கண்டிப்பாக சாத்தியமே ..

யாரோ உங்களை திட்டிவிட்டாலோ !! புகழ்ந்து விட்டாலோ !!

நாம் என்ன செய்தலும் !! பேசினாலும் !! அவரின் நினைப்பு நாம் செய்வதில் எல்லாம் அதுவும் நம் சிந்தனையில் இருக்கின்றது தானே !!
அதனோடு தானே நம் அன்றாட நிகழ்வு எல்லாம் நடக்கிறது !!

சொன்னார் இறந்து பலவருடம் ஆனால் கூட
நினைவில் அவர்கள்  செய்தது வழியே உங்களோடு எதிர்த்தோ ?? வருந்தியோ ?? வாழ்வது சாத்தியம் என்றால் !! இதுவும் சாத்தியம் தானே ..

இறந்தவர் கூட வாழும் தகுதிபெற்ற நம்  சிந்தையில் ..

எப்போதும் இருந்து !!
நம்மையும் நாமாக இருக்கவைத்து !!
நம்மோடு என்றும் இருக்கும் நிதர்சனமான இறைவனை உணர்வில் இருத்தி செய்யமுடியும் தானே ..

அப்படி செய்வதால் ??

அந்த சொல் செயல் வழியே விளைவது எது என்றாலும் அது உங்களுடையது இல்லை என்ற மெய் புலப்படும் !!
அதை குறித்து யாரும் புகழ்ந்தாலும் !! இகழ்ந்தாலும் !! அதைப்பற்றி
உங்களுக்கு அக்கறையோ ?? கவலையோ ?? கொள்ள தேவையில்லை தானே ..

நீங்கள் இதுபோல உங்களை ஏமாற்றுக்கொள்வதில் இருந்து விடுவிக்கப்பட்டு !! சுதந்திரமாக !! ஆனந்தமாக !! அமைதியாக !! வாழமுடியும் தானே ...

இதை தான் தவவாழ்வு என்று கூறப்படுகிறது !!

குடும்பத்தை விட்டு காட்டுக்கு சென்று தவம் செய்கிறேன் என்று இறைநினைப்போடு இருப்பது தானே ..
அதையே
நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் சொல் செயல் எல்லாம் இறைசிந்தையோடு செய்யும் போது அதுவும் தவவாழ்க்கை தானே ..

திருச்சிற்றம்பலம்

நடராஜா நடராஜா

திங்கள், 16 மே, 2022

வேதங்கள்


வேதம் என்ற சொல் ' வித்' என்ற தாதுவில் இருந்து உண்டானது. இதற்கு அறிதல் என்று பொருள். இதை அறிந்து கொள்ளும் வழி வித்தை எனப்படும். வித்தையினை அறிவினால் தான் பெற முடியும் எனவேதான் வித் என்ற தாதுவிலிருந்து வேதம் ,வித்யா என்ற இரண்டு சொற்களும் உண்டாயின. இந்த
வேதங்கள் என்பது உலகை படைத்து காத்து ரட்சிக்கும் ஈசனின் மூச்சுக் காற்றாக புராணங்கள் கூறுகின்றன.
பரம்பொருளை  அறியும் பேறறிவாக வேதங்கள் திகழ்கின்றது

பரம்பொருளில் இருந்து இடைவெளி வெளிப்பட்டது; ஆகாசம் தோன்றியது; அதிலிருந்து காற்று வந்தது . அந்தக் காற்றானது பொருள் படைத்த ஒலி வடிவைப் பெற்று, உலகின் காதுகளில் வந்து விழுந்தது. காதில் விழுந்த முதல் ஒலி வேதம் என்கிறது ஸனாதனம்.

வேத மந்திரங்கள் காலத்தால் அழிந்து போகாமல் இருக்க ரிஷிகள் இதனை மனனம் செய்து வழிவழியாக தங்கள் சீடர்களுக்கு கற்பித்தனர்.
சுவடிகளில் எழுதிப் படிக்காமல், குரு சொல்ல, சிஷ்யர்கள் காதால் கேட்டு மனனம் செய்து வந்ததால் வேதத்தை "ஸ்ருதி" என்றனர். வேதத்தை காது வழி கேட்டு பாடம் செய்யும் முறைக்கு அத்யயனம் என்று பெயர்.

ஆச்சாரியார் ஒரு முறை ஒரு மந்திரத்தை சொல்ல, மாணவர்கள் பத்து முறை திரும்பத்திரும்ப சொல்லி பாடம் செய்வதை திருவை சொல்லுதல் என்பார்கள்.

"ச்ரோத்ரம்" என்ற சொல்லுக்கு காது என்று பொருள்.  இப்படி வேதத்தை குருவிடமிருந்து காது வழியாக கேட்டு அத்யயனம் செய்தவர்களுக்கு "ச்ரெளதிகள்" என்று பெயர்.

வேதத்தை கற்பிக்கும் குருவானவர் நல்ல ஆச்சாரம் உள்ளவராகவும் வேத லக்ஷணம் ,அர்த்தம், ஆகியவற்றினை நன்கு தெரிந்தவராகவும், நன்கு புரியும்படி கற்பிப்பவராகவும், வேதத்தில் பக்தியும் ,சிரத்தையும் உள்ளவராகவும் இருக்க வேண்டும். கற்றுக்கொள்ளும் மாணவன் ஆசாரம் உள்ளவனாகவும் சோம்பல் இன்றி இருப்பவனாகவும் வேதம் மற்றும் குருவிடம் மிகுந்த பக்தி உள்ளவனாகவும் இருக்க வேண்டும் என்பவை வேதம் கற்பதற்குண்டான நியமங்கள்.

தொடர்வோம்..........

அறுபத்து மூன்று நாயன்மார்கள் 5 - ஆனாயநாயனார்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் தொடர் பதிவு..

5 - ஆனாயநாயனார்
 



பெயர் : ஆனாயர்
குலம்: இடையர்
பூசை நாள் :கார்த்திகை ஹஸ்தம்
அவதாரத் தலம் :திருமங்கலம்
முக்தித் தலம் :திருமங்கலம்

வரலாறு சுருக்கம்:

“அலைமலிந்த புனல் ஆனாயற் கடியேன்”
–திருத்தொண்டத் தொகை

சோழவளநாட்டு மேன்மழநாடு மண்ணுலகிற்கு அருங்கலம் போன்றது.அது மங்கலமாகியது திருமங்கலம் என்ற மூதூர். அம்மூதூரில் வாழும் பெருங்குடிகளுள் ஒன்றாகிய ஆயர் குலத்தின் குலவிளக்குப்போல ஆனாயர் என்ற பெரியார் அவதரித்தார்.
அவர் தூய திருநீற்றினை விரும்பும் திருத்தொண்டில் நின்றவர்; மனம், மொழி, மெய் என்ற முக்கரணங்களாலும்
சிவபெருமான் திருவடிகளை அல்லாது வேறு ஒன்றினையும் பேசாதவர்....

தமது குலத்தொழிலாகிய பசுக்காத்தலைச் செய்பவர். பசுக்களைச் சேர்த்து, அகன்ற புல்வெளியிற் கொண்டு சென்று, அச்சமும், நோயும் அணுகாமற்காத்து, அவை விரும்பிய நல்ல புல்லும், நன்னீரும் ஊட்டிப் பெருகுமாறு காத்துவருவார். இளங்கன்றுகள், பால்மறை தாயிளம்பசு, கறவைப்பசு, சினைப்பசு, புனிற்றுப்பசு, விடைக்குலம் என்பனவாக அவற்றை வெவ்வேறாக பகுத்துக் காவல் புரிவார். ஏவலாளர்கள் அவர் எண்ணிய வண்ணம் பணிவிடை செய்பவர்.

தாம் பசுக்களை மேயவிட்டு, புல்லாங்குழலிலே பெருமானரது அஞ்செழுத்தைப் பொருளாகக் கொண்ட கீதமிசைத்து இன்புற்றிருபபர்.இப்படி நியதியாக ஒழுகுபவர் ஒரு நாள் தமது குடுமியிற் கண்ணி செருகி, நறுவிலி புனைந்து, கருஞ்சுருளின் புறங்காட்டி வெண்காந்தப்பசிய இலைச்சுருளிற் செங்காந்தட் பூவினை வைத்துக் காதில் அணிந்து கண்டோர் மனம் கவரத் திருநெற்றியில் திருநீற்றினை ஒளிபெறச்சாத்தி கண்டோர் மனம் கவரத் திருநெற்றியில்
திருநீற்றினை ஒளிபெறச் சாத்தி அதனைத் திருமேனியிலும் மார்பிலும் பூசி, முல்லை மாலை அணிந்து, இடையில் மரவுரி உடுத்து அதன் மேல் தழைப்பூம்பட்டு மேலாடையினை அசையக் கட்டி, திருவடியில் செருப்புப் பூண்டு, கையினில் மென்கோலும் வேய்ங்குழலும் விளங்கக் கொண்டு, கோவலரும், ஆவினமும் சூழ சென்றார்.

அவர் தம்முடைய ஏவலாளராகிய மற்றையிடையர்களோடும் பசுநிரைகளைக் காட்டுக்குக் கொண்டு போய் மேய்த்துக் கொண்டும், காந்தருவ வேதத்திலே சொல்லியபடி செய்யப்பட்ட வேய்ங்குழலினாலே ஸ்ரீபஞ்சாக்ஷரத்தைச் சத்தசுரம் பொருந்த வாசித்து ஆன்மாக்களுக்குத் தம்முடைய இசையமுதத்தைச் செவித் துவாரத்தினாலே புகட்டிகொண்டும் வருவார்.

கார்காலத்திலே ஒருநாள், இடையர்கள் பசுநிரைகளைச் சூழ்ந்து கொண்டு செல்ல, அவ்வானாயநாயனார் கையிலே கோலும் வேய்ங்குழலுங் கொண்டு நிரைகாக்கும் படி காட்டுக்குச் சென்ற பொழுது; அவ்விடத்திலே மாலையைப்போல நீண்ட பூங்கொத்துக்களைத் தாங்கிக் கொண்டு புறத்திலே தாழ்கின்ற சடையினையுடைய பரமசிவனை போல நிற்கின்ற ஒரு கொன்றைமரத்துக்குச் சமீபத்திலே போய் அதைப் பார்த்துக்கொண்டு நின்று, அன்பினாலே உருகி இளகிய மனசையுடையவராகி, வேய்ங்குழலினாலே இசை நூலிலே விதித்தபடி ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை வாசித்தார்.

அவர் பஞ்சாக்ஷரத்தை அமைத்து வாசிக்கின்ற அதிமதுரமாகிய இசை வெள்ளமானது எவ்வகைப்பட்ட உயிர்களின் செவியிலும் தேவ கருவின் பூந்தேனைத் தேவாமிர்தத்தோடு கலந்து வார்த்தாற்போலப் புகுந்தது. இடையர்கள் சூழப்பட்ட
பசுக்கூட்டங்கள் அசைவிடாமல் ஆனாயர் அடைந்து உருக்கத்தினாலே மெய்ம்மறந்து நின்றன; பால் குடித்துக் கொண்டு நின்ற கன்றுகளெல்லாம் குடித்தலை மறந்துவிட்டு, இசை கேட்டுக் கொண்டு நின்றன.

எருதுகளும் மான் முதலாகிய காட்டுமிருகங்களும் மயிர் சிலிர்த்துக்கொண்டு அவர் சமீபத்தில் வந்தன; ஆடுகின்ற மயிற்கூட்டங்கள் ஆடுதலொழிந்து அவர் பக்கத்தை அடைந்தன; மற்றைப் பலவகைப் பட்சிகளும் தங்கள் செவித்துவாரத்தினாலே புகுந்த கீதம் நிறைந்த அகத்தோடும் அவரருகிலே வந்து நின்றன; மாடு, மேய்த்துக் கொண்டு நின்ற இடையர்களெல்லாரும் தங்கள் தொழிலை மறந்து கானத்தைக் கேட்டுக்கொண்டு நின்றார்கள்.

விஞ்சையர்களும் சாரணர்களும் கின்னரர்களும் தேவர்களும் மெய்ம்மறந்து விமானங்களிலேறிக் கொண்டு வந்தார்கள்; வருத்துகின்ற உயிர்களும் வருத்தப்படுகின்ற உயிர்களும் அவ்விசையைக் கேட்டு அதன்வசமான படியால், பாம்புகள் மயங்கிப் பயமின்றி மயில்களின் மேலே விழும்; சிங்கமும் யானையும் ஒருங்கே கூடிவரும்; மான்கள் புலிகளின் பக்கத்திலே செல்லும்; மரக்கொம்புகள் தாமும் சலியாதிருந்தன. இப்படியே சரம் அசரம் என்னும் ஆன்மவர்க்கங்களெல்லாம் ஆனாயநாயனாருடைய வேய்ங்குழல் வாசனையைக் கேட்டு, இசைமயமாயின, அவ்விசையைப் பொய்யன்புக்கு அகப்படாத பரமசிவன் கேட்டு, பார்வதிதேவியாரோடும் இடபாரூடராய் ஆகாயமார்க்கத்தில் எழுந்தருளி வந்து நின்று,
அவ்வானாயநாயனார் மீது திருவருணோக்கஞ்செய்து,

"மெய்யன்பனே; நம்முடைய உன்னுடைய வேய்ங்குழலிசையைக் கேட்கும்பொருட்டு, நீ இப்பொழுது இவ்விடத்தில் நின்றபடியே நம்மிடத்துக்கு வருவாய்"
-என்று திருவாய்மலர்ந்தருளி, ஈசன் அவ்வானாயநாயனார் வேய்ங்குழல் வாசித்துக் கொண்டு பக்கத்திலே செல்லத் திருக்கைலாசத்தை அடைந்தருளினார்.

தொடரும்.....