வெள்ளி, 13 மே, 2022

குரு பாடல்கள்

குரு பாடல்-1

மறைமிகு கலைநூல் வல்லோன்
வானவர்க்கு ஆசான் மந்திரி
நறைசொரி கற்பகப்பொன்
நாட்டினுக்கு அதிபதியாகி
நிறைதனம் சிவிகை மன்றல்
நீடு போகத்தை நல்கும்
இறையவன் குரு வியாழன்
இருமலர்ப்பாதம் போற்றி போற்றி!

குரு பாடல் 2

அன்றால நீழற்கீழ் அருமறைகள் தானருளி
நன்றாக வானவர் மாமுனிவர் நாடோறும்
நின்றார வேத்து நிறைகழலோன் புனைகொன்றைப்
பொன்றாது பாடிநம் பூவல்லி கொய்யாமோ

குரு பாடல் 3

ஆலின்கீழ் அறங்களெல்லாம் அன்றவர்க்கு அருள்செய்து
நூலின் கீழ் அவர்கட்கெல்லாம்
 நுண்பொருளாகி நின்று
காலின்கீழ் காலன்தன்னைக்
கடுகத்தான் பாய்ந்து பின்னும்
பாலின்கீழ் நெய்யு மானார்
பழனத்தெம் பரமனாரே.

குரு பாடல் 4

குணமிகு வியாழ குருபகவானே
மணமுடன் வாழ மகிழ்வுடன் அருள்வாய்
பிரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா
கிரக தோஷமின்றி காத்தருள்வாயே

குரு பாடல் 5

பெருநிறை செல்வம் மேன்மை
பெற்றிடும் சுகங்கள் யாவும்
வருநிறை மரபு நீடி வாய்க்கும் சந்ததி தழைக்க
குருநிறை ஆடை ரத்னம்தான் பெற அருளும் தேவ
குருநிறை வியாழன் பொற்றாள்
குரைகழல் தலைக் கொள்வோமே.

குரு பாடல் 6

ஆலநிழல் கீழ் இருப்பதுவும் ஆய்வதறம்
ஆலம் அமுது செய்வ தாடுவதீ- ஆலம்
துறையுடையான் ஆனை உரியுடையான் சோற்றுத்
துறையுடையான் சோராத சொல்லு

குரு பாடல் 7

வேத நூல் தர்ம சாஸ்திரம்
மேன்மையை அறிந்தோனாகி
சாதனையால் கற்பகத்
தனிநாட்டின் இறைவனாகி
சோதியாய் குருவுமாகி
சொர்க்கத்தை மண்ணில் நல்கும்
ஆதியாம் குருவே! நின்தாள்
அடைக்கலம் போற்றி! போற்றி!!

குரு பாடல் 8

கல்லாலின் புடையமர்ந்து நான்மறை
ஆறங்கமுதல் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த
பூரணமாய் மறைக்கு அப்பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை
இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல்
நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்.

துரத்தும் பலி, இனிக்கும் தேன்

துரத்தும் _ புலி _ இனிக்கும் _ தேன்

இதுதான் வாழ்க்கை! ஒரு காட்டில் ஒரு மனிதனை ஒரு புலி துரத்தியது வழியெங்கும் கற்களும், முற்களும் இருந்தாலும், சமாளித்து ஓடிக் கொண்டிருந்தான் தொடர்ந்து ஓடியவன் ஒரு மலைச் சரிவில் விழுந்தான்.
நல்லவேளையாக அந்தச் சரிவில் இருந்த ஒரு மரத்தின் வேர்களை கெட்டியாக பிடித்துக் கொண்டு தொங்கினான் தொங்கிக் கொண்டே கீழே குனிந்து பார்த்தால், சரிவின் கீழே ஒரு ஆறு ஓடியது அந்த ஆற்றில் ஒரு முதலை வாயைப் பிளந்து கொண்டு இவன் கீழே விழுவதற்காகக் காத்திருந்தது.

 
மேலே ஆற்றங்கரையில், புலி உறுமிக் கொண்டு காத்திருந்தது அதே நேரத்தில் அந்த வேர்களை ஒரு வெள்ளை எலியும், ஒரு கருப்பு எலியும் ஆளுக்கொரு பக்கமாக கொறித்துக் கொண்டிருந்தன அப்போது பார்த்து அவன் தலைக்கு மேலே இருந்த ஒரு தேன் கூட்டிலிருந்து தேன் சிந்தியது இவன் அந்த தேனை நாக்கில் ஏந்தி சப்பினான் நீங்கள் வாழும் வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது.

கீழே வாயைப் பிளந்து கொண்டு காத்திருக்கும் முதலைதான் மரணம் புலிதான் வாழ்க்கை  கருப்பு, வெள்ளை எலிகள்தான் இரவும், பகலும். எந்த நேரத்திலும் அந்த வேர்கள் அறுந்து நீங்கள் முதலைக்கு உணவாகலாம் அந்த நேரத்திலும் ஒரு சொட்டு தேன் உங்களை சந்தோஷப்படுத்துகிறது  அந்த சந்தோஷத்தில் நீங்கள் மரணத்தை மறந்துவிடுகிறீர்கள் அனைத்தும் நன்றாக இருப்பதாக எண்ணிக் கொள்கிறீர்கள்.  

   ஆனால் அது உண்மையல்ல இது முட்டாள்தனம் என்று எப்போது நீங்கள் அறிகிறீர்களோ, அப்போது ஆன்மீகம் உங்களுக்குள் இயல்பாகவே வரும்.

சிவ ஓம் நமசிவாய 🙏🌺🙏

திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

நரசிம்ம ஜெயந்தி

நலம் பல தந்து நல்வழிகாட்டும் நரசிம்ம ஜெயந்தி!

பெருமாளின் அவதாரங்களில் இது 4வது அவதாரமாகும்: அசுரன் இரண்யகசிபு, நாராயணனே பரம்பொருள் என்று வணங்கி வந்த தன் பிள்ளை பிரகலாதனைத் துன்புறுத்தி வந்தான். பிரகலாதனுக்காக தூணில் திருமால் சிங்கவடிவத்தில் வெளிப்பட்டு அரக்கனைக் கொன்றார். ஸ்ரீஹரி எடுத்த வராக அவதாரத்தில் தன்னுடைய உடன்பிறப்பாகிய ஹிரண்யாட்சனைக் கொன்று விட்டார் என்று கேட்டதும் இரண்யகசிபு துயரம் அடைந்தான். அதனால் அவனுக்குப் பரந்தாமன் மீது சொல்ல முடியாத கோபம் ஏற்பட்டது. உடனே சூலத்தைத் தன் கையில் எடுத்தான். தன் அரக்கர் குலக் கூட்டத்தைக் கூட்டி அவர்களிடம், அரக்கர் குலக் கொழுந்துகளே! நீங்கள் என் கட்டளைக்கு கீழ்ப்படிந்து உடனே செயலாற்றுங்கள். எனது தமையனின் இறப்பிற்கு காரணமான ஸ்ரீஹரியையும், தேவர்கள் அனைவரையும் அழிக்க வேண்டும். நீங்கள் உடனே புறப்பட்டுப்போய் அந்தணர்கள், தேவர்கள், பசுக்கள் முதலியவற்றை துன்புறுத்தி கொல்லுங்கள் என்றான். இரண்யகசிபுவின் கட்டளையை ஏற்ற அரக்கர்கள் நோன்பு, விரம் நோற்ற பெரியோர்களையும், அந்தணர்களையும் கொன்று குவித்தனர். யாராலும் வெல்வதற்கரிய வீரத்தைத் தான் பெற்றால் அன்றி ஸ்ரீஹரிஹரியை ஒழிக்க முடியாது என உணர்ந்தான். அழியாத ஆயுளையும் மூன்று உலகங்களையும் அடக்கி ஆளும் வல்லமையையும் வேண்டி பரமனை நோக்கித் தவம் செய்யப் புறப்பட்டான். மந்திரமலைச் சாரலுக்கு வந்தான். கால் கட்டை விரலைத் தரையிலே ஊன்றினான். கைகளை மேலே தூக்கினான். விண்ணுலகை நோக்கி நின்றான். ஊழிக்காலத்தில் காணும் சூரியனுடைய ஒளிக்கிரணங்களைப் போல செஞ்சடை விரியக் காட்சி அளித்தான்.

உக்கிரமான தவத்தில் பிரம்மதேவனை நோக்கி ஏகாக்ரசித்தத்துடன் ஆழ்ந்தான். நாட்கள் நகர்ந்தன. வருடங்கள் பல ஓடின. இவனுடைய தவத்தால் எழுந்த யோகாக்னியின் தகிப்பை தாங்கமுடியாமல் சகல ஜீவராசிகளும் வருந்தின. தலையிலிருந்து மேகக்கூட்டம் போன்ற புகைமண்டலம் எழுந்தது. மூன்று உலகத்தையும் அது சூழ்ந்தது. ஆறுகளும், சமுத்திரங்களும் கொந்தளித்தன. திசைகள் எங்கும் ஒரே தீப்பொறி கக்கி அனல் எரிந்தது. தேவர்கள் அவனுடைய தவபலத்தினால் தாங்கள் பஸ்பமாகி விடுவோமோ என பயந்தனர். தேவர்கள் உடனே பிரம்மாவிடம் முறையிடச் சென்றனர். பிரம்மாவிடம், தேவ தேவே! உங்கள் பதவிக்கே ஆபத்து தரும் வகையில் இரண்யகசிபு தவம் மேற்கொண்டு இருக்கிறான். அவனது தவத்தால் உண்டாகும் அக்னியை எங்களால் தாங்கமுடியவில்லை. உடனே அவனது தவத்தை நிறுத்த ஏதாவது செய்யுங்கள் என்றனர். தேவர்கள் சொன்னதைக் கேட்ட பிரம்மா மந்திரமலைச் சாரலுக்கு வந்தார். அங்கே இரண்யகசிபு இருந்த இடத்தில் புற்றும், புதர்களும் மூடிக்கிடந்தன. எறும்பு அரித்த தோலும் சதையும் மிஞ்சி எலும்புக் கூடாக இருந்தான். அவனை இந்நிலையில் பார்த்து, இரண்யா! உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள்! என்றார். அவன் மீது தன் கமண்டல தீர்த்தத்தை தெளித்தார். கட்டையில் மூண்ட தீயெனக் கசிபு வெளி வந்தான். உருக்கி வார்த்த பொன்மேனியுடன் பிரம்ம தேவனை வணங்கினான். லோக பிதாவே! உங்களுடைய சிருஷ்டி எதனாலும் எனக்கு மரணம் சம்பவிக்கக் கூடாது. அதுமட்டுமல்ல, எனக்கு உள்ளும் புறமும், பகலிலும் இரவிலும், விண்ணிலும் பூமியிலும், மரணம் ஏற்படக்கூடாது. எந்தவித ஆயுதங்களாலும் பிராணிகள், மனிதர், தேவர், அசுரர்களாலும் எனக்கு சாவு வரக்கூடாது. தேவர்களாலும் ஜெயிக்க முடியாதபடி நல்ல வல்லமையை, வீரத்தை எனக்குத் தாங்கள் தந்தருள வேண்டும். எனக்கு நிகர் நானாகத்தான் இருக்க வேண்டும். மூவுலகத்தையும் நானே கட்டி ஆள வேண்டும். லோக பாலகருள் தேவரீராகிய தாங்கள் அனுபவிக்கும் பெருமையை நான் அடைய வேண்டும்.

யோகம், சமாதி, தவம் முதலியவற்றால் ஏற்படும் சக்திகள் அனைத்தும் எனக்கு வரச்செய்ய வேண்டும் என்று வரம் கேட்டான். பிரம்மாவும் வேறு வழியின்றி அவன் கேட்ட வரத்தைக் கொடுத்து விட்டு மறைந்தார். இரண்யகசிபுவுக்கு இப்படி ஒரு வரத்தை பிரம்மா கொடுத்துவிட்டாரே என தேவர்கள் அனைவரும் வருந்தினர். வரத்தைப் பெற்றுத் திரும்பிய இரண்யகசிபு தன் எண்ணத்தை உடனே நிறைவேற்றிக் கொண்டான். தேவலோகம் சென்று தேவேந்திரனை விரட்டினான். சொர்க்க லோகத்தையும் தன் ஆட்சிக்குக் கீழ் கொண்டு வந்தான். தேவேந்திர சிம்மாசனம் ஏறி அமராவதி பட்டினத்து அரண்மனையில் வாசம் செய்தான். வேள்விகள் மூலம் வரும் அவிர்பாகம் முழுவதையும் அவனே கிரகித்துக் கொண்டான்.  மூவுலகையும் பல்லாண்டுகள் கொடுங்கோல் ஆட்சி செய்தான். அவனால் இழைக்கப்பட்ட தீமைகள், கொடுமைகளை பெருமாளிடம் சென்று தேவர்கள் முறையிட்டார்கள். காலம் காலமாக அனுபவித்த தேவர்களுடைய தியானத்தினால் ஸ்ரீமந் நாராயணன், அவர்களுக்கு அனுக்கிரஹம் செய்தார். விரைவிலேயே அவனை வதைப்பதாக அவர்களுக்கு அசரீரி மூலம் அறிவித்தார். இந்த அரக்கர்களின் அரக்கனாகிய இரண்யகசிபுவின் கொடுங்கோலாட்சியை நான் அறிவேன். அதற்கு ஆவன செய்கிறேன். கொஞ்சம் பொறுத்திருங்கள். எவனுக்கு தேவர்கள், பசுக்கள், வேதங்கள், வேதியர் ஆகியோர் மீதும் என்னிடமும் பகைமை தலைதூக்குமோ, அப்போதே அவன் அழிந்து போவான். இந்த அரக்க ராஜன் தன் மகன் பிரகலாதனைத் துன்புறுத்துவான். அப்போது நான் அவனைக் கொல்லச் சித்தமாவேன் என்றார். இரண்யகசிபுவிற்கு கிலாதன், பிரகலாதன், அனுகிலாதன், சமகிலாதன் என நான்கு புதல்வர்கள் பிறந்தனர். அவர்களில் பிரகலாதன் மட்டும் சிறந்த விஷ்ணு பக்தனாக எப்பொழுதும் ஸ்ரீமந் நாராயணனின் பெயரையே உச்சரித்துக் கொண்டிருந்தான்.

அசுரகுரு சுக்ராச்சாரியாருக்கு சண்டன், அமர்க்கன் என இரண்டு பிள்ளைகள். இரண்யகசிபு அவர்களைத் தன் புதல்வர்களுக்கும் மற்றும் அரசியல் அதிகாரிகளுடைய குமாரர்களுக்கும் ஆசிரியராக இருந்து பணியாற்றச் செய்தான். ஒரு நாள் கசிபு தன் செல்வகுமாரனை மடியில் அமர்த்தி கொஞ்சி மகிழ்ந்தான். அது சமயம் குமாரா! நீ இத்தனை நாளும் என்ன கற்றாய்? அவற்றை எனக்குச் சொல் என்றான். அப்பா நான் கற்ற அனைத்தையும் எப்படிக் கூறுவது, ஏதாவது ஒரு கேள்வி கேளுங்கள் நான் பதில் கூறுகிறேன் என்றான். கசிபும் அவ்வாறே மனிதனுக்கு நலம் தருவது எது? என்று வினவினான். எவர் ஆசை, பற்று முதலியவைகளை அறவே விட்டு விட்டு அவைகள் எல்லாம் வெறும் மாயை, மாறாக ஸ்ரீஹரியே மெய்யான பொருள், அவர் திருவடியை சரணடைபவர்கள் பாக்கியம் பெற்றவர்கள் என்றான் பிரகலாதன். பரமவிரோதியான ஸ்ரீஹரியின் பெயரை உச்சரிக்கிறானே என சிறுவனை கடிந்து கொண்டு, அவனுக்கு பாடம் கற்பித்த ஆசிரியரை வரச்சொல்லுங்கள் என்றான். நாங்கள் பலமுறை என்ன சொல்லிக் கொடுத்தாலும் காதில் போட்டுக் கொள்ளாமல், எல்லாம் ஸ்ரீஹரியின் செயல் என்று எங்கள் வார்த்தைகளை உதாசீனம் செய்தான். இதைத் தங்களிடம் எப்படிக் கூறுவது என்றே இத்தனை காலம் நாங்கள் தயங்கினோம் என்றார்கள். ஏதோ அந்தணர்கள் இவனுக்கு தவறாக கற்றுக் கொடுத்து இருக்கிறார்கள். மற்றபடி சின்னஞ்சிறு பிராயத்தினனாகிய இவனுக்கு இது தெரிய நியாயமில்லை. ஆகவே யாரும் அணுகாதபடி, இனித் தனிமையில் அமர்த்தி பாடம் கற்பியுங்கள் என்று அவன் ஆணையிட்டான். பின்பு பிரகலாதனின் அறிவுக்கூர்மையை பார்த்து அவனிடம் ஆசிரியர்கள்,  அப்பனே பிரகலாதா! மற்றவர் யாருக்கும் இல்லாத இந்த மாறான புத்தியை உனக்கு யார் கற்பித்தது? இல்லை உனக்கு தானாக வந்ததா? உண்மையைச் சொல் என்றனர். நான் என்றும், நீ என்றும் பிரித்துப் பார்க்கும் புத்தி வெறும் மாயை. அவன் அருளால் பேதம் என்பது வெறும் பொய், அவனே மெய் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். எனக்குக் கற்பித்தவன், கற்ற பொருள், கற்றதின் பயன் எல்லாம் அந்த ஸ்ரீஹரியே அவரைத் தவிர வேறில்லை! என்றான் பிரகலாதன். பிறகு அறம், பொருள், இன்பம் பற்றிப் பாடம் சொல்லிக் கொடுத்து விட்டு அவனது தந்தையிடம் அழைத்துச் சென்றனர். மீண்டும் கசிபு, பிரகலாதனிடம் பிரகலாதா! நீ படித்ததில் மிகவும் சிறப்பான ஒன்றைச் சொல் கேட்கிறேன்! என்றான். அதற்கு பிரகலாதன் ஹரியின் கதைகளைக் கேட்க வேண்டும், அவன் லீலைகளை வாயாரப் பேச வேண்டும், ஹரி உருவத்தை நினைக்க வேண்டும், ஹரியின் சேவையே உத்தமம்.

ஹரி பூஜையே சிறந்தது. காலம் முழுவதும் ஹரியைப் பின்பற்ற வேண்டும் என்று ஹரியைப் புகழ்ந்து பேசினான். அந்தணர்களே! நீங்களே ஆசிரியர்களாக இருந்து இதைத் தான் கற்றுக் கொடுத்தீர்களா? என்று கடுமையான குரலில் கசிபு கர்ஜித்தான். ஆசிரியர்கள் நடுநடுங்கி, அரசே! நாங்கள் இதைக் கற்றுக் கொடுக்கவில்லை என்றனர். உடனே குருமுகமாக அன்றி இதை எல்லாம் நீ யாரிடம் கற்றாய்? என்றான் கசிபு. அதற்கு பிரகலாதன், தந்தையே உலக இன்பங்களில் ஆசைப்பட்டு உழல்பவர்களுக்கு யார் சொல்லியும் பக்தி வராது. தானாகவும் பக்தி ஏற்படாது. ஆனால் முற்றிலும் துறந்த தொண்டர்களுக்கே இறைவனை அறியும் பாக்கியம் கிடைக்கும் என்றான். இப்படி ஹரியின் நாமத்தையே உச்சரிக்கும் இந்தப் பிள்ளை எனக்குத் தேவையில்லை, இவனைக் கொன்றுவிடுங்கள் என்று ஆணையிட்டான். அவனை எப்படி எல்லாமோ கொல்ல முயன்றும் இரண்யனின் ஆட்களால் பிரகலாதனை ஒன்றும் செய்யமுடியவில்லை. உடனே தன் குலகுரு சுக்ராச்சாரியாரிடம் இதைப் பற்றிக் கேட்டே ஆகவேண்டும் என்ற முடிவோடு சிறுவனை ஆசிரியர்களிடம் ஒப்படைத்து விட்டு சுக்கிராச்சாரியாரிடம் சென்றான் இரண்யன். ஆசிரியர்கள் மிகவும் கண்டிப்புடன் அவனுக்கு அசுர தர்மங்களை உபதேசிக்க முயற்சித்தனர். அவனோ தன் சக மாணவர்களுடன் விளையாடச் சென்றான். பிரகலாதன் தன் சகாக்களுக்கு ஸ்ரீஹரியின் பெருமையையும், புகழையும் எடுத்துரைத்துக் கொண்டிருந்தான்.  அப்போது அந்த மாணவர்கள் பிரகலாதா! குருவிடம் உபதேசம் பெறாமல் இப்படி ஞானம் பேசும் அறிவு உனக்கு எப்படி வந்தது? என்று வினவினர். தோழர்களே! என் தந்தை பிரம்மாவைக் குறித்து அதீத பராக்கிரமும் அழியா வாழ்வும் வளமும் தேடி மகேந்திரகிரிச்சாரலில் உக்ர தவம் இயற்றினார். அது சமயம் அவருக்குப் பயந்து இருந்த தேவர்கள் தைரியத்தோடு தத்தம் இருப்பிடம் வந்து அசுரர்களை தாக்கினர். அசுரத்தலைவராகிய என் தந்தை இல்லாத காரணத்தால் அசுரர்கள் தேவர்களிடம் தோற்று ஓடினார்கள். இந்திரனோ அசுரேந்திர பட்டினத்தை சூறையாடினான். அது சமயம் கர்ப்பவதியாகிய என் தாயாரைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனான். வழியில் நாரத மகரிஷி அவனை சந்திக்க நேர்ந்தது. இந்திரனே! நீ கர்ப்பவதியான பெண்ணை, அதிலும் நிராதரவான ஒரு பெண்ணை இப்படி வருத்துவது தகாது. மேலும் இவர் பிறர் ஒருவனுடைய மனைவி அல்லவா? என்று நாரதர் இந்திரனைக் கேட்டார். நாரதரை இந்திரன் வணங்கி, மகரிஷியே! அசுர மகிஷியான இவளுடைய கர்ப்பத்தில் தேவர்களை வதைக்கும் சிசு உருபெற்று வருகிறது. இவளுக்கு நான் தற்சமயம் எந்தக்கேடும் செய்யப் போவது இல்லை.

அவள் கருத்தரித்த உடன் எனது எதிரியை முளையிலேயே கிள்ளி விட்டு இவளைப் பாதுகாப்புடன் அனுப்பி வைப்பேன் என்றான்.  இந்திரனே! நீ நினைப்பது முற்றிலும் தவறு. இவள் கருவறையில் வளரும் சிசு அசுரகுலப் பிறப்பாக இருந்தாலும் அந்த சிசு சிறந்த பாகவத உத்தமனாக விளங்கப் போகிறான். ஸ்ரீஹரியிடம் அளவற்ற பக்தி கொண்டு அனைவராலும் போற்றப்படுவான். அவனால் உனக்கோ, தேவர்குலத்திற்கோ எந்தவிதத் தீங்கும் ஏற்படாது என்றார் நாரதர். இதைக் கேள்விப்பட்ட இந்திரன் மகிழ்ச்சி அடைந்தான். மேலும் நாரதரே! தங்கள் கருத்துப்படி இவளை பாதுகாப்புடன் அவளது இருப்பிடத்திற்கு அனுப்பி விடுகிறேன் என்று கூறி அவளது காலடியை தொட்டு வணங்கினான். அதன் பிறகு என் தாயாரை நாரதர் தன் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்று ரட்சித்தார். என் தாய் கர்ப்பவதியாக இருந்ததால் அவளுக்கு தர்மங்களை உபதேசம் செய்தார். என் தந்தை தவம் முடிந்து திரும்பியதும் அவளை அனுப்பி வைத்தார். அச்சமயம் கேட்ட உபதேசங்களை என் தாயார், தந்தையின் மீதுள்ள பற்றுதலால் மறந்துவிட்டாள். ஆனால் கருவிலிருந்த நான் அவ்வுபதேசங்களை கேட்டேன். அதை மறக்கவில்லை. எனவே தான் நான் பிறக்கும்போதே ஸ்ரீமந் நாராயணனிடம் அளவற்ற பக்தியுடன் பிறந்தேன். எனவே தோழர்களே பிறப்பு, உருவாதல், வளர்தல், இளைத்தல், நசித்தல், இறப்பு முதலிய ஆறும் இந்த உடம்புக்கு மட்டும் உரியவை. ஆத்மாவிற்கு அல்ல என்பதை நீங்கள் மட்டுமே உணர வேண்டும். நாம் நம் பக்தியினால் மட்டுமே நாராயணனை சந்தோஷம் அடையச் செய்ய முடியும். தீயகுணங்களை விட்டுவிட்டு நாள்தோறும் ஹரிபஜனை செய்ய வேண்டும் என்று கூறினான். இப்படி பாடம் கேட்க வந்த பிள்ளைகளிடம் பிரகலாதன் ஹரி பஜனை செய்வதை அறிந்த ஆசிரியர்கள் இரண்யனிடம் சென்று கூறிவிட்டனர். கடும்கோபமடைந்த இரணியன் பிரகலாதனை இழுத்துக் கொண்டு வரும்படி ஆணையிட்டான். பிரகலாதன் வந்ததும் இடி முழங்குவது போல் கர்ஜித்தான்: மூன்று உலகங்களும் என் பெயர் சொன்னாலே நடுநடுங்குகிறது. சகல லோகங்களும் எனக்குள் அடங்கி கிடக்கின்றன. தேவாதி தேவர்கள் எல்லாம் என்னிடம் மதிப்பு வைத்து என் பேச்சைக் கேட்டு நடக்கிறார்கள். அப்படி இருக்க பரமவிரோதியான ஸ்ரீஹரி என்னை விட எந்த விதத்தில் மேலானவன் ஆகிவிட்டான்? என்றான். அதற்கு பிரகலாதன் தந்தையை தலை தாழ்த்தி வணங்கியவாறு, தந்தையே! நீங்கள் லோகாதிபதி தான்.

தேவர்களும் உங்களுக்குள் அடக்கம்தான். ஆனால் ஸ்ரீஹரி ஒருவரே அனைத்து ஜீவராசிகளிக்கும் ஆதியானவர். அவரே சிருஷ்டி, திதி, சம்ஹாரம் ஆகிய மூன்று தொழிலுக்கும் அதிபதி. அப்படியிருக்க அவரை விட தாங்கள் எந்த விதத்தில் உயர்ந்தவர் என்று சொல்ல முடியும். இதைக் கேட்டு கோபமடைந்த இரண்யன், மடப்பதரே! எங்கும் நிறைந்திருக்கும் உன் ஹரி இப்பொழுது எங்கே இருக்கிறார்? என்று வினவினான். தந்தையே! அவர் சர்வவியாபி. அவர் இல்லாத இடமேயில்லை என்றான் பிரகலாதன். இதைக்கேட்டு கசிபு கடகடவென்று சிரித்தான். டேய் பிரகலாதா! உன்னால் பிரலாபிக்கப்படும் அந்த ஹரி எங்கும் இருக்கிறான் என்றாய் சரி. இப்பொழுது சொல் இதோ என் எதிரே இருக்கும் ஸ்தம்பத்தில் இருக்கிறானா? இல்லையா?  அதைப் பார்ப்போம். இப்போதே நான் உன்னை தலை வேறாகவும், உடல் வேறாகவும் போகும்படி என் உடைவாளால் வெட்டி எறியப் போகிறேன். நீ சரண்புகுந்த அந்த ஹரிநாராயணன் உன்னை வந்து காப்பாற்றட்டும், என்று பிரகலாதனை மிரட்டினான். தனது சிம்மாசனத்திலிருந்து இறங்கி வந்து எதிரே இருந்த அந்த தூணைக் குத்திவிட்டு தன் உடைவாளை ஓங்கியவாறு நின்றான். அப்போது அண்டமே பிளந்து விட்டது போன்ற ஓர் பேரரவம் அந்தத் தூணில் எழுந்தது. அவ்வோசை கேட்டு பிரம்ம தேவாதியர், அண்டங்களே அழிந்தது போல அஞ்சி நடுங்கினர். தன் மகனை வெட்டும் வெறியில் நின்ற அசுரேந்திரனுக்கு அப்பேரொலியின் காரணம் தெரியவில்லை. தன்னிடம் அளவிலா பக்திகொண்ட பாலகன் பிரகலாதனின் சொல்லை மெய்யாக்க பரந்தாமன் அந்தத் தூணைப் பிளந்து வெளிவந்தார். அவரது தோற்றத்தைக் கண்ட இரண்யகசிபு அதிர்ந்தான். இது என்ன தோற்றம்? இது மனித உருவிலுமில்லை, மிருக உருவிலுமில்லை. மனித சிங்கம் போல் தெரிகிறதே என நினைத்து திகைத்தான். நரசிம்ம மூர்த்தியாக அவதாரம் எடுத்த ஸ்ரீமந் நாராயணன் தோற்றத்தைக் கண்ட இரண்யன் அச்சமுற்றான். அந்த நரசிம்ம மூர்த்தியின் தோற்றத்தை உற்று கவனித்தான். விண்ணை தொடுவது போன்ற நீண்டு வளர்ந்த நெடுமேனி, பிடறித் தலை மயிர்களால் தடித்த முகம், வீங்கிய கழுத்து, முகத்தில் உருக்கி வார்த்த பொன் போன்ற கண்கள், பெருமலைக் குலை போல திறந்திருக்கும் வாய், அதில் கோரைப் பற்கள், கூர்ந்த வாள் போல் தொங்கும் நாக்கு, தூக்கி நின்ற காதுகள், விரிந்த மார்பு, குறுகிய இடை, கூரிய ஆயுதம் போன்ற நீண்ட நகங்களுடன் கூடிய கைகள். யாரும் அருகே போகப் பயப்படும்படியான தோற்றம்.

ஸ்ரீஹரியின் தோற்றத்தைக் கண்ட அசுரர்கள் நாலாபுறமும் ஓடினர். இதைக் கண்ட இரண்யன் தன்னைக் கொல்ல ஸ்ரீஹரி எடுத்த அவதாரமே இது என உணர்ந்தான். தன் கதையை கையில் ஏந்தி நரசிம்மரை எதிர்கொண்டு மோதினான். எனினும் கதையால் தன்னைப் புடைக்க வந்த கசிபுவை கைகளால் நரசிம்மர் பற்றினார். அவனைத் தன் தொடை மீது வைத்துக் கொண்டு கூர்ந்த தன் நீண்ட நகங்களால் இரண்யகசிபு உடலைக் கீறிக் கிழித்தார். ரத்தம் பீறிட்டுப் பாய்ந்தது. நரசிம்மருடைய முகம் அக்னி பிளம்பாக காணப்பட்டது. அவர் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தாலும் அவரது உக்கிரமான கோபம் தணியவில்லை. நரசிம்ம மூர்த்தியின் அகோரத் தோற்றம் கண்டு அவரிடம் நெருங்கவே அனைவரும் அஞ்சினர். ஒவ்வொருவரும் அவருக்கு வந்தனம் செய்தனர். ஸ்ரீஹரியின் சீற்றம் குறையாததால் தேவர்கள் ஸ்ரீதேவியை அங்கு வரும்படி கேட்டுக் கொண்டார்கள். அன்னையும் வந்து அடங்காத கோபத்தைக் கண்டு அஞ்சினாள். அந்நேரம் பிரகலாதனிடம் பிரம்மா சொன்னார். அப்பா! பிரகலாதா! ஸ்ரீஹரிக்கு உன் தந்தை மீது கொண்ட கோபம் இன்னும் தணிந்ததாகத் தெரியவில்லை. நீ அவரருகே சென்று சாந்தப்படுத்து! என்றார். அவனும் அவ்வாறே மெல்ல மெல்ல நடந்து நரசிம்ம மூர்த்தியிடம் சென்றான். கை கூப்பினான். அவர் திருவடி தொட்டு தரையில் விழுந்து வணங்கினான். தன் பாதங்களைப் பிடித்த பிரகலாதனை பார்த்து ஸ்ரீஹரி மனம் உருகினார். அவன் தலை மீது தன் தாமரைக்கரம் வைத்து வாழ்த்தினார். பெருமான் திருக்கரம் தீண்டியதும் அவனுக்கு மின்னல் என மெய்யறிவு பிறந்தது. மயிர் கூச்செரியத் தன் மனம் கசிந்து கண்ணீர் மல்கித் துதிபாடினான். அதுபோல பிரகலாதன் தான் அடைய விரும்பும் பதவியை அனைவருக்கும் அனுக்கிரகிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதை அனைவரும் பாராட்டினர். நரசிம்மரின் மனம் மகிழ்ந்தது. துதித்து நின்ற பாலகனிடம் உனக்கு வேண்டும் வரம் கேள் என்றார். அவனோ, என் மனதில் எந்தவித கோரிக்கையும் எழாமல் இருக்கும்படி தாங்கள் திருவருள் புரிய வேண்டும் என வேண்டினான். மனம் மகிழ்ந்து மாதவன், பிரகலாதனை அசுரேந்திரத்திற்கு அரசனாக இருக்கும்படி அனுக்கிரகித்தார். மேலும், நீ பிறந்த புண்ணியம் உன் தகப்பனோடு இருப்பத்தொரு மூதாதையரும் கடைத்தேறினர் என்று அருளிச் செய்தார். பிரகலாதன் தந்தைக்கு செய்ய வேண்டிய ஈமக்கிரியைகளைச் செய்தான். பிரம்மாதி தேவர்கள் முன்னிலையில் முனிவர்கள் ஆசியுடன் சுக்கிராச்சாரியார் பிரகலாதனை அசுரேந்திரனாக முடி சூட்டினார்.

நரசிம்ம ஜெயந்தி அன்று நரசிம்ம மூர்த்தியை வழிபாடு செய்பவர்கள் தம் பகைவர்களை எளிதில் வெல்ல முடியும்.


சனி தோஷம்

சனி தோஷத்தை நிவர்த்தி செய்யும் நவபாஷாண பைரவர் பற்றிய பதிவு...

சிவகங்கை மாவட்டம் பெரிச்சிகோவில் என்ற ஊரில் அமைந்துள்ளது, சுகந்தவனேஸ்வரர் திருக்கோவில். மூலவர் பெயர் சுகந்தவனேஸ்வரர், உற்சவரின் திருநாமம் சோமாஸ்கந்தர் என்பதாகும். அம்பாளின் திருநாமம் சமீபவல்லி.

இந்த ஆலயத்தில் வன்னி மரம் தல விருட்சமாக இருக்கிறது. இங்குள்ள பைரவர் தன்னுடைய எட்டு கரங்களிலும் ஆயுதங்கள் மற்றும் கபால மாலை ஏந்தி காட்சி தருகிறார். அவருக்கு அருகில் மூன்று பேர் வணங்கிய நிலையில் உள்ளனர். அதோடு பைரவரின் நாய் வாகனத்தைப் பிடித்தபடி, பாலதேவர் அருள்கிறார்.

பவுர்ணமி தோறும் மாலை வேளையில் இந்த பைரவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. காசி பைரவர் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார். இந்த சிலை நவபாஷாணத்தால் ஆனது என்றும், இதனை போகர் சித்தர் செய்ததாகவும் சொல்கிறார்கள்.

மேலும் பழனியில் உள்ள நவபாஷாண முருகன் சிலையை செய்வதற்கு முன்பாகவே, இந்த பைரவர் சிலையை போகர் செய்ததாகவும் செவிவழிச் செய்தி ஒன்று உள்ளது.‌ இந்த நவபாஷாண பைரவரின் மீது அதிர்வுகள் அதிகம் என்பதால், இவருக்கு அணிவிக்கப்படும் மலர் மாலைகள், படைக்கப்படும் வடைமாலை உள்ளிட்ட நைவேத்தியங்கள் எதுவும் பக்தர்களுக்கு வழங்கப்படுவதில்லை.

சன்னிதியின் கூரை மீது போடப்படும் வடைகளை, பறவைகள் கூட சாப்பிடுவதில்லை. பைரவருக்கு அபிஷேகிக்கப்படும் தீர்த்தம் கூட, பக்தர்கள் தொட முடியாதபடி கோவிலுக்கு வெளியே விழுமாறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பைரவருக்கு இரண்டு முகங்கள் உண்டு என்கிறார்கள். பின்புற முகத்தை மனிதர்களால் காண முடியாது. அந்த முகத்தால், வன்னி மரத்தின் அடியில் வீற்றிருக்கும் சனீஸ்வரருக்கு மட்டும் காட்சி தருவதாக ஐதீகம்.

இவரை ‘ஆண்டபிள்ளை நாயனார்’ என்றும் அழைக்கிறார்கள். இவரை வழிபாடு செய்தால் சனி தோஷ நிவர்த்தி, பித்ரு சாபம், ஸ்திரீ தோஷம், சகல பாபம், நீண்டகால நோய்கள் நீங்கும். அஷ்டமா சித்திகள் கிடைக்கும்.


படித்ததில் பிடித்தது

மும்பையில், இந்து ஒருவர் மிகப் பெரும் செல்வந்தர்.. அவருக்கு மனைவி குழந்தைகள் என்று யாரும் இல்லை. பரோபகாரி.

ஒரு தீபாவளி பண்டிகையையொட்டி , தன்னிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு மிக சிறந்த விருந்து ஏற்பாடு செய்து அவரே முன்னின்று அனைவரையும் உபசரிக்கிறார்..

விருந்து முடிந்தவுடன், ஒவ்வொருவருடைய இருக்கைக்கு முன் இரண்டு பெரிய வண்ண கவர்கள் வைக்கப் பட்டுள்ளன. ஒன்றில் பணம் என்றும் மற்றொன்றில் புனித ராமாயணம் புத்தகம் என்றும் எழுதி வைக்கபட்டுள்ளது..

நண்பர்களே, நீங்கள் எனக்காக உண்மையாக உழைக்கின்றீர்கள். உங்கள் வேலைக்கேற்ற அல்லது அதற்கும் அதிகமாகவே உங்களுக்கு சம்பளமும் கொடுத்து வந்துள்ளேன்.. என்னுடைய இந்த செல்வம் இறைவனால் அருளப்பட்டது.. என்னுடைய செல்வத்தை எவ்வாறு செலவழித்தேன் என்று இறைவனுக்கு பதில் சொல்ல கடமைபட்டுள்ளேன்...

உங்கள் முன் இரண்டு கவர்கள் உள்ளன. ஒன்றில் பணம், மற்றொன்றில் ராமாயணம் புத்தகம் இதில் ஏதாவது ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்...

முதலாமவர் தயங்கியவாறே சொன்னார்... முதலாளி, நான் ராமாயணத்தை மதிக்கிறேன். ஆனால் இப்போதைக்கு, நோய்வாய்பட்டிருக்கும் என் தாய்க்கு நல்ல சிகிச்சை அளிக்க வேண்டும். அதற்கு பணம் வேண்டும்.. பணம் என்று எழுதப்பட்ட கவரை எடுத்து கொண்டார்...

அடுத்தவர், என் ஓலை குடிசைக்கு பதில், சின்னதாக ஒரு கல் வீடு கட்ட வேண்டும்.. இந்த பணம் இருந்தால் என் கனவு வீடு கட்ட முடியும்... பணத்தை எடுத்து கொண்டு முதலாளிக்கு நன்றி சொல்லி நகன்றார்...

இப்படியே அடுத்தடுத்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணங்களோடு பணத்தை எடுத்து கொண்டனர்...

கடைசியாக, முதலாளியின் தோட்டத்தில் உள்ள கால்நடைகளை பராமரிக்கும் வாலிபனுடைய முறை...

அவன் பரம ஏழை. வயதான தாய். மனைவி மற்றும் பிள்ளைகள்...

அவன் பணத்தின் தேவை அறிந்தவன்.. அவனும் பணம் உள்ள கவர் அருகில் சென்று, அதை எடுத்து கையில் வைத்து கொண்டு முதலாளியிடம்......

என்னுடைய தேவைக்கு நான் எப்போது கேட்டாலும் நீங்கள் தரத்தான் போகிறீர்கள்.. மேலும் என் அம்மா அடிக்கடி சொல்வார்கள், ...... ஏழ்மை என்பதும் இறைவனால் அருளப்பட்டதே... நம் தேவைகளை நிறைவேற்றுபவனாக எல்லாம் வல்ல இறைவன் இருக்கின்றான்... மேலும், எங்கள் வீட்டில் ஒரு பழக்கம்...

தினசரி, அதிகாலை ராமாயணம் படித்தும் மாலையில் அந்தி சாயும் நேரத்தில் மகாபாரதம் படித்தும் என் அம்மா அதன் அர்த்தம் சொல்லுவார்கள். நாங்கள் சுற்றி அமர்ந்து அதை செவிமடுப்போம்...

....... என்று சொன்ன அந்த வாலிபன், எடுத்த பண கவரை எடுத்த இடத்திலேயே வைத்து விட்டு..... நான் இந்த புனிதமான ராமாயணம் புத்தகம் தேர்ந்தெடுக்கிறேன் என்று அதை எடுத்தான்....

சம்பவம் இதோடு முடியவில்லை நண்பர்களே,

புனித ராமாயணம் இருந்த பெரும் கவரை எடுத்தவன், முதலாளியிடம் நன்றி சொன்னவன்.. அதை திறந்து பார்க்கிறான்......ஆச்சர்யம்

ராமாயணம் இருந்த கவருக்குள் மேலும் இரண்டு கவர்கள்.... ஒன்றில், பணமும் மற்றொன்றில் செல்வந்தரின் சொத்துக்களின் ஒரு பகுதியை தானமாக எழுதி கையெழுத்திட்ட பத்திரம்...

யாருக்கு என்ற பெயர் மட்டும் எழுதப்படாமல் இருந்தது....

அந்த வாலிபன் மட்டும் இல்லை,, ஏனைய தொழிலாளர்களும் அதிர்ந்து போயினர்...

செல்வம் நிலையானது அல்ல... இன்றைய நிலை அப்படியே தலைகீழாக மாறும், இறைவன் நினைத்தால்...

மனிதர்களை செல்வத்தை கொண்டும் சோதிப்போம் என்ற இறைவனின் கூற்று எப்படி பொய்யாக முடியும்...வாலிபன் தாய் சொன்னதை நம்பினான்... ஆம், அவள் சொல்லி கொடுத்தார்.....

இறைவனையே நம்பு.. அவனிடமே உன் தேவைகளை கேள்.. அள்ள அள்ள குறையாத செல்வத்தை அவன் வழங்குவான்..... அசைக்க முடியாத இறை நம்பிக்கை என்ற செல்வம் மற்ற செல்வங்களிலெல்லாம் சிறந்த செல்வம் அல்லவா..
🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏

திருச்சூர் பூரம்

🌟திரிச்சூர் பூரம்🌟

⭐திரிச்சூர் பூரம் என்பது மே மாதத்தில் (ஏப்ரல் - மே) பூரம் தினத்தன்று, நகரத்தின் மையத்திலிருந்து வலது பக்கத்தில் இருக்கும் தெக்கின்காடு மைதானத்தில் அமைந்திருக்கின்ற வடக்குநாதன் கோவிலில் கொண்டாடப்படுகிறது.

⭐செல்வ வளத்தோடு அலங்கரிக்கப்பட்ட யானைகள் வடக்குநாதன் கோவிலில் கூடுகின்ற. பல்வேறு அருகாமையிலிருக்கும் கோவில்களைச் சேர்ந்த யானைகள் மேளதாளங்கள் சூழ ஊர்வலமாகச் செல்கின்றன.

⭐திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணா கோவிலில் இருந்து திருவம்பாடி பகவதி கோவிலுக்கும், பரமேக்காவு கோவிலில் இருந்து பரமேக்காவு பகவதி கோவிலுக்கும் செல்பவை ஆகும். 36 மணி நேரங்களுக்கும் மேலாக நீடிக்கும் இந்தக் கொண்டாட்டங்கள், சிறுகுடை காட்சிகள் மற்றும் வாணவேடிக்கை நிகழ்ச்சிகளை உள்ளிட்டிருக்கிறது.

⭐அநேகமாக வேறு எந்தத் திருவிழாவும் கேரளாவில் இது போன்ற நம்ப முடியாத கவனத்தை இவ்வளவு மக்களிடமிருந்து பெற்றிருக்கவில்லை. இருப்பினும் வடக்குநாதனே இந்தத் திருவிழாவின் முக்கிய அம்சம் என்பதோடு தன்னுடைய இடம் மற்றும் நிலங்களை இந்தப் பெரும் நிகழ்ச்சிக்காக வழங்குகிறார்.

⭐பூரம் திருவிழா வாண வேடிக்கைகளின் கண்கொள்ளாக் காட்சிகளுக்காகவும் பிரபலமானதாக இருக்கிறது. அதிகாலை நேரங்களில் தொடங்கும் வாணவேடிக்கைகள் மற்றும் கண்கொள்ளாக் காட்சிகள் மூன்றிலிருந்து நான்கு மணி நேரங்களுக்கு நீடிக்கின்றன. இந்த வாண வேடிக்கைகளை பிரம்மாண்டமானதாகவும் மிகுந்த வண்ணமயமாகவும் நடத்துவதற்கு போட்டி போட்டுக் கொண்டு செயல்படும் திரிச்சூர் பரமேக்காவு மற்றும் திருவம்பாடியைச் சேர்ந்த இரு போட்டிக் குழுக்காளாலும் கொண்டாடப்படுகிறது. இரு குழுவும் அதிகபட்சம் பதினைந்து யானைகள் வரை கொண்டு வருவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர் என்பதோடு தென்னிந்தியாவிலே சிறந்த யானையைத் தக்கவைத்துக் கொள்வதற்கு இந்த ஒவ்வொரு தரப்பினராலும் எல்லா முயற்சிகளும் செய்யப்படுகின்றன.

⭐அத்துடன் மிகவும் கலாப்பூர்வமான சிறுகுடைகளுள் சில வேடிக்கை நிகழ்ச்சியின் போது யானைகளுக்கு மேலாக உயர்த்தப்படுகின்றன. அதிகாலை நேரத்தில் தொடங்கும் இந்தக் கொண்டாட்டங்கள் அடுத்த நாள் காலை விடியும் வரை தொடர்ந்து நடக்கிறது. இந்த ஊர்வலமும் ஜீவனுள்ளதாக இருக்கிறது.

⭐பஞ்சவாத்தியத்தின் பிரம்மாதமான மாயாஜால வித்தைகளான ஐந்து மேளங்கள் மற்றும் ஒரு காற்று வாத்தியத்தின் கலவை உணரப்பட வேண்டியதும் அனுபவிக்க வேண்டியதும் ஆகும்.

⭐கேரளாவில் கொண்டாடப்படும் திருவிழாக்களிலேயே திரிச்சூர் பூரம் மிகவும் கண்கொள்ளாத வண்ணமயமான விழாவாகும். இந்தத் திருவிழாவில் பல கோவில்கள் பங்கேற்கின்றன.இது ஒலி மற்றும் வண்ணத்தின் கவர்ச்சியூட்டும் வெளிப்பாடு என்பதோடு, தன்னுடைய அற்புதக் காட்சியால் இது எல்லோரையும் கவர்கிறது. கிராமத்தின் எல்லாக் கோவில்களிலும் உள்ள கடவுளர்களின் பிம்பங்கள் முக்கியமான கோவில்களுக்கு யானைகளால் எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்தத் திருவிழாவின் உச்சகட்டமாக முப்பது யானைகளின் கண்காட்சியும், உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.30 மணிக்கு நடக்கும் புகழ்பெற்ற வானவேடிக்கை நிகழ்ச்சியும் இருக்கிறது.

⭐திரிச்சூர் பூரம் திருவிழாவில் மதம் மற்றும் சாதித் தடைகளைக் கடந்து எல்லா மக்களும் பங்கேற்கின்றனர். மத்தியகால பாரம்பரிய பெருவானத்தோடு உறவு கொண்டுள்ள இந்தத் திருவிழா தேவி மற்றும் சாஸ்தா (சிவன் மற்றும் விஷ்ணுவின் தெய்வீகக் கலவை)கோவிலோடு வரம்பிற்குட்பட்டதாக இருக்கிறது.


அருகாமையிலுள்ள கோவிலிலுள்ள பத்து கடவுளர்கள் திரிச்சூரின் குலதெய்வமான சிவனுக்கு தங்கள் மரியாதையை செலுத்துகின்றனர்.

⭐வடக்குநாதன் கோவிலுக்கு நெருக்கமான பெரமக்காவு மற்றும் திருவம்பாடி ஆகியவை முதன்மைப் பங்கேற்பாளர்கள் ஆவர்.மேலும் பங்கேற்பவை மற்றும் பூரத்தில் அடங்கியிருப்பவை மொத்தத்தில் எட்டு கடவுளர்கள்.

⭐வடக்குநாதன் கோவிலைச் சுற்றி,நீண்டு செல்லும் தெக்கின்காடு சிறுமலை,திருவிழாவின் முக்கியத் தளம் என்பதோடு வழக்கமாக திரிச்சூர் ஸ்வராஜ் சுற்று என்று அறியப்படுகிறது.

சுதர்ஸன சக்கரம்

சுதர்சன சக்கரத்தின் மகிமை;   சக்கரத்தாழ்வாரை வணங்குவோம்!  

கிருஷ்ணரின் கையில் உள்ளது சுதர்சன சக்கரம் என்பது நமக்கெல்லம் தெரியும். சுதர்சன சக்கரம் குறித்து இன்னும் அறிந்துகொள்வோம்.

சுதர்ஷன் என்றால் மங்கலகரமானது, மங்கலகரமானவன் என்று அர்த்தம். ‘சக்ரா’ என்றால் எப்பொழுதும் செயல் பாட்டில் இருந்து கொண்டே இருப்பது என்று பொருள். மற்ற ஆயுதங்களைப் போல் சுதர்சன சக்கரம் இல்லை. எல்லா ஆயுதங்களைக் காட்டிலும் வலிமையானது. அத்துடன் எப்பொழுதும் சுழன்று கொண்டே இருக்கக் கூடியது. சாதாரணமாகவே சுதர்சன சக்கரம் என்பது பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சுண்டு விரலில் காணப்படும் மகா விஷ்ணுவோ தன் ஆள் காட்டி விரலில் வைத்துக் கொண்டிருக்கிறார். யார் மீதாவது ஏவும் பொழுது கிருஷ்ணனும், ஆள்காட்டி விரலில் இருந்து தான் ஏவுகிறார். எதிரிகளை, அசுரக்கூட்டத்தை அழித்த பின்னர் சுதர்சனச் சக்கரமானது மீண்டும் அந்த இடத்துக்கே திரும்ப வந்து விடுகிறது. அதாவது சுதர்சன சக்கரம் ஏவப்பட்ட பிறகு ஏவிய பகவானின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு, அவரின் திருக்கரங்களுக்கே வந்து விடுகிறது.

எவ்வித அழுத்தமும் இல்லாத சூன்யப்பாதையில் செல்வதால் சுதர்சன சக்கரத்தால் எந்த இடத்திற்கும் கண்மூடி கண் திறக்கும் நேரத்திற்குள் செல்ல முடியும் என்கிறது விஷ்ணு புராணம். மேலும் மகாவிஷ்ணுவின் திருக்கரத்திலிருந்து சுதர்சனச் சக்கரமானது கிளம்பியதும் தெரியாது, எதிரிகளை அழித்ததும் தெரியாது. மீண்டும் அவரின் திருக்கரங்களுக்கு வந்து விரலில் வந்து உட்கார்ந்து கொள்வதும் தெரியாது. எல்லாமே கணப்பொழுதில் அரங்கேறிவிடும்.

ஒருவேளை, எதிரியானவன் மிகுந்த பராக்கிரம் மிக்கவனாக இருந்தால், சுதர்சனச் சக்கரத்தின் வேகத்தில் தடையேதும் ஏற்பட்டால்... அப்போது சக்கரத்தின் வேகம் இதுவரை இல்லாத அளவுக்கு வேகம் கூடுமாம்! இதை ‘ரன்ஸகதி’ என்பர். இன்னொரு விஷயம்... சுதர்சனச் சக்கரம் சுழலும் தருணத்தில், சப்தங்கள் எழுப்புவதில்லை.

சுதர்சனச் சக்கரத்தின் வடிவம் எத்தகையது தெரியுமா? சின்னஞ்சிறு துளசி தளத்தில், ஒரு கைப்பிடி அளவு துளசியில் அடங்கக்கூடியது. அதே சமயம், இந்தப் பிரபஞ்சம் அளவுக்கு பரந்து விரிந்துமாகவும் இருக்கிறது.

சுதர்சனச் சக்கரம் என்பதே சக்கரத்தாழ்வார். மகாவிஷ்ணுவின் திருப்பாதத்தை தரிசிப்பதும் பிரார்த்திப்பதும் எத்தனை விசேஷமோ அதே போல் சக்கரத்தாழ்வாரை பூஜித்து வருவதும் விசேஷமானது. நம் எதிர்ப்புகளையும், எதிரிகளையும் அழித்து நமக்கான தடைகளை எல்லாம் தகர்த்தருள்வார் சக்கரத்தாழ்வார் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

ஏகாதசி, புதன்கிழமை, திருவோணம், சனிக்கிழமை உள்ளிட்ட நாட்களில், சக்கரத்தாழ்வாருக்கு துளசி சார்த்தி வேண்டிக்கொண்டால், நம் இன்னல்கள் யாவும் பறந்தோடும். இல்லத்தில் நிம்மதியும் ஆனந்தமும் குடிகொள்ளும் என்பது பக்தர்களின் நம்பிக்கை!


வாயு ஸ்தலமாகிய ‘ஸ்ரீகாளஹஸ்தி’ வரலாறு

வாயு ஸ்தலமாகிய ‘ஸ்ரீகாளஹஸ்தி’ வரலாறு...
 

ஸ்ரீ காளஹஸ்தி என்கிற பெயரை கேட்டவுடன் நமக்கு நினைவிற்கு வருவது ராகு - கேது பரிகார பூஜை செய்யும் ஸ்தலமாகும் என்பது தான்.

திருமணத்தடை நீங்க தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு ராகு - கேது பரிகார பூஜை செய்து வருகின்றனர். பஞ்சபூதங்களில் வாயுவிற்காக கட்டப்பட்ட இத்திருத்தலம் 1500 வருடங்களுக்கும் மேல் பழமையானது என்று கூறப்படுகிறது.

இதன் வரலாற்றை கேட்கையில் இப்படியும் ஒரு பக்தி இருக்க முடியுமா? என்கிற அளவிற்கு நம்மை வியப்பில் ஆழ்த்தி விடுகிறது. சைவத் ஸ்தலமான ஸ்ரீ காலஹஸ்தியில் சிவபெருமான் காளத்திநாதர் என்கிற பெயரோடு, ஞானப்பிரசன்னாம்பிகை தாயாரோடு அருள் பாலிக்கின்றார். பல நூறு ஆண்டுகளுக்கு முன் வனமாக இருந்த இந்த இடத்தில் வாயு லிங்கமாக தோன்றிய சிவபெருமானை வழிபட சிலந்தி ஒன்று தினமும் வருமாம்.

மழையில் நனைந்த சிவபெருமானைக் கண்ட அந்த சிலந்தி தன்னுடைய உமிழ் நீரில் இருந்து உருவாகும் சிலந்தி வலையை பின்னி வைத்ததாம். பெரும் இடி ஒன்று இடித்ததில் அந்த வலை எரிந்து சாம்பலானது. சிலந்தியால் அதை தாங்கிக் கொள்ள முடியாமல் இறந்து போனதாம். இதனால் அந்த சிலந்தியின் பக்தியை மெச்சிய சிவபெருமான் அதற்கு முக்தி கொடுத்தாராம்.

தினமும் நாகம் ஒன்று அந்த லிங்கத்தை ஆரத்தழுவி மாணிக்கங்களை கக்கி அர்ச்சனையாக செய்து வழிபடும். அதற்கு பின்னால் வரும் யானை ஒன்று தன் தும்பிக்கையால் நீரை வாரி இறைத்து அபிஷேகம் செய்யும். பின் மலர்களை பறித்து வந்து அர்ச்சனையும் செய்து வரும். இதனால் அந்த மாணிக்கங்கள் கீழே விழுந்து சிதறி விடுவது உண்டு. தொடர்ந்து இது போல் நடந்து கொண்டிருக்க அந்த நாகத்திற்கு சந்தேகம் வந்தது. யானை இது போல் செய்வதை அந்த நாகம் ஒரு நாள் பார்த்து விட்டது. உடனே கோபமுற்ற நாகம் யானையின் தும்பிக்கையினுள் சென்று விட்டு மூச்சடைக்க செய்தது. சுவாசிக்க முடியாமல் அந்த யானை பாறையில் மோதி மோதி கடைசியில் இரண்டும் இறந்து போனது. இவைகளின் பக்தியை மெச்சிய சிவபெருமான் இவர்களுக்கும் முக்தியை கொடுத்தார் என்று ஸ்தலபுராணம் எடுத்துரைக்கிறது.

இந்த தலத்தில் வீற்றிருக்கும் காளத்திநாதர் உருவத்தில் கீழே இரண்டு தந்தங்களும், இடையில் பாம்பும், பின்புறம் சிலந்தியும் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ என்பது சிலந்தியையும், காளம் என்பது நாகத்தையும், அத்தி என்பது யானையையும் குறிப்பதால் ஸ்ரீ காளஹஸ்தி என பெயர் பெற்று விளங்குகிறது. கோவிலைப்பற்றி பல குறிப்புகள் தேவாரப் பாடல்களும், புராணங்களும் தெளிவாக கூறுகிறது.

இங்கு வரும் பக்தர்களுக்கு எத்த


னை குறைகள் இருந்தாலும் உடனே நீங்குவதாக நம்பிக்கையுள்ளது.

திருப்பதி செல்பவர்கள் பெரும்பாலும் காளத்தி நாதரை வழிபடாமல் வீடு திரும்புவதில்லை.

அனைவரும் ஒரு முறையேனும் தரிசிக்க வேண்டிய திருத்தலங்களில் திருக்காளஹஸ்தி ஒன்று.

வியாழன், 12 மே, 2022

உலகின் தொன்மையான நடராஜர்

உலகின் தொன்மையான நடராஜர்

அருளும் செப்பறை
திருநெல்வேலி மாநகரில் இருந்து சுமார் 18 கி.மீ தொலைவில் தாமிரபரணியின் நதியின் வடகரையில் அமையப்பெற்றுள்ள அழகிய கிராமம் ராஜவல்லிபுரம். ராஜவல்லிபுரம் ஊரிலிருந்து சுமார் 1.5 கி.மீ தொலைவில் வயல்வெளிகளுக்கு மத்தியில் அமையப்பெற்றுள்ளது செப்பறை ஸ்ரீ அழகிய கூத்தர் திருக்கோவில்.

சுவாமி பெயர்: நெல்லையப்பர்.
அம்மை பெயர்: காந்திமதி.
திருக்கோவில் விருட்சம்:    வில்வ மரம்.
தீர்த்தம்: தாமிரபரணியின் புஷாபதன தீர்த்தக்கட்டம்.
சிறப்பு சன்னதி: செப்பறை அம்பலம் அழகியகூத்தர் சன்னதி.
 


திருக்கோவில் வரலாறு: முற்காலத்தில் தற்போதைய கோவில் அமையப்பெற்றுள்ள இப்பகுதியை மணப்படைவீடு என்னும் நகரை தலைநகராகக் கொண்டு ராமபாண்டியன் என்னும் மன்னனர் ஆட்சி செய்து வந்தார். ராமபாண்டிய மன்னர் திருநெல்வேலியில் உறையும் சுவாமி நெல்லையப்பர் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்தார். அதன் காரணமாக தினமும் திருநெல்வேலி சென்று சுவாமி நெல்லையப்பரை தரிசித்த பிறகே உணவருந்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருமுறை தாமிரபரணியில் பெரும் வெள்ளம் வந்துவிட்டதனால் அவரால் ஆற்றைக் கடந்து திருநெல்வேலிக்கு செல்லமுடியவில்லை. அன்று முழுவதும் ராமபாண்டியன் மனம்வருந்தி உணவருந்தாமலே இருந்தார். அன்று இரவில் மன்னரின் கனவில் சுவாமி நெல்லையப்பர் தோன்றி, "இனிமேல் உன் மாளிகைக்கு அருகிலேயே நான் கோயில் கொள்ள முடிவு செய்துள்ளேன் என கூறியதுடன், சிதம்பரத்திலிருந்து சிற்பி ஒருவன் தனது நடனம் புரியும் வடிவமுடைய விக்ரகத்துடன் வருவான். அந்த விக்ரகத்தை உன் மாளிகையின் அருகில் பிரதிஷ்டை செய்து கோயில் கட்டு. கோயில் கட்டுமிடத்தின் அருகே குழிக்குள் எறும்புகள் ஊர்ந்துசெல்லும். அந்த இடத்தில் லிங்கம் ஒன்றையும் பிரதிஷ்டை செய்துவிடு", என திருவாய் மலர்ந்தருளினார். அதன்படியே, சிற்பி ஒருவர் வடதிசையிலிருந்து நடராஜரின் விக்ரகம் ஒன்றை சுமந்து வந்தார். வழியில் ஓரிடத்தில் சிலை மிகவும் கனத்தது. அதற்கு மேல் அவரால் சிலையை சுமக்க முடியவில்லை. எனவே சற்று நேரம் இளைப்பாறும் பொருட்டு, அச்சிலையை அவர் ஒரு இடத்தில் இறக்கி வைத்துவிட்டு, களைப்பினால் தூங்கி விட்டார். கண்விழித்து பார்த்த போது சிலையை காணவில்லை. அவர் பதைபதைத்து மன்னனிடம் முறையிட்டார். ராமபாண்டியன் அதிர்ச்சியடைந்து சிலையை தேடிச்சென்றார். அப்பொழுது ஓரிடத்தில் (தற்பொழுது கோவில் அமையபெற்றுள்ள இடத்தில்) சலங்கை ஒலியும், யாரோ நடனமாடும் சப்தமும் கேட்டது. அந்த இடத்தில் மன்னர் சென்று பார்த்தபோது, நடராஜரின் சிலை இருப்பதனையும், . அதன் பக்கத்திலேயே ஒரு குழியில் எறும்புகள் ஊர்ந்து சென்று கொண்டிருப்பதையும் கண்டார். உடனே ராமபாண்டியன் மகிழ்வடைந்து லிங்கம் ஒன்றை எறும்புகள் ஊர்ந்த குழியின் மீது சுவாமி உத்தரவிட்டபடியே பிரதிஷ்டை செய்தார். நடராஜருக்கும் செப்பு தகடுகளால் வேயப்பட்ட நடன சபை ஒன்றை உருவாக்கி தனி சன்னதி அமைத்தார். இவர் நெல்லையப்பரின் மீது கொண்டிருந்த பக்தியால் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கத்திற்கு ஸ்ரீ நெல்லையப்பர் என்றும், அம்மைக்கு ஸ்ரீ காந்திமதி என்றும் திருநெல்வேலி திருக்கோவிலின் பெயரையே சூட்டிமகிழ்ந்தார். எனவே இது திருநெல்வேலி கோவிலின் சாரப்பதி ஆகும்.

இங்கு அருள் புரியும் நடராஜரின் திருநாமம் ஸ்ரீ அழகிய கூத்தர்.

உலகின் முதல் நடராஜர் வரலாறு:
முன்னர் சிதம்பரத்தை ஆட்சி செய்த சிங்கவர்மன் என்னும் மன்னன், நமச்சிவாயமூர்த்தி என்ற சிற்பியைக் கொண்டு நடராஜர் சிலையை உருவாக்க ஆணையிட்டான். அதன்படி சிற்பியும் மிக நேர்த்தியாக நடராஜர் சிலையை செய்து முடித்தார். அந்த நடராஜர் சிலை தாமிரத்தால் செய்யப்பட்டு பிரமிக்கவைக்கும் அழகில் தோன்றினாலும், அதற்கு பதிலாக தங்கத்தினால் சிலையைச் செய்தால் இன்னும் நன்றாக இருக்கும் எனக் கருதி தங்கத்தால் மற்றொரு நடராஜர் சிலையைச் செய்ய ஆணையிட்டான். சிற்பி அதனையும் சிறப்பாக செய்து முடித்தார். ஆனால் மன்னன் வந்து காணும் போது அந்த தங்க நடராஜர் சிலை மீண்டும் தாமிரச் சிலையாகவே மாறி காட்சியளித்தது.

இதனால் வருந்திய மன்னரின் கனவில் தோன்றிய சிவபெருமான், “நான் உன் கண்களுக்கு மட்டுமே தங்கமாகத் தெரிவேன். பிறர் கண்ளுக்குத் தாமிரமாகவே தெரிவேன்’’ என்று கூறியருளினார். இதனால், மகிழ்ந்த மன்னர் அந்த இரண்டாவதாக செய்யப்பட்ட நடராஜரையே சிதம்பரத்தில் நிறுவினான். முதலில் செய்யப்பட்ட தாமிரச்சிலையை வைத்திருந்த சிற்பியின் கனவில் தோன்றிய சிவபெருமான் அந்தச் சிலையை எடுத்துக் கொண்டு தென்னாட்டுக்குச் செல்லுமாறு அவனுக்கு ஆணையிட்டார். அதன் படி அவன் கொண்டுவந்த முதல் தாமிர நடராஜர் சிலையே பின்னர் இங்கு செப்பறையில் அழகியகூத்தராக நிறுவப்பட்டது.

சுவாமி நெல்லையப்பர்: கிழக்கு நோக்கிய கருவறையில் லிங்கத்திருமேனியாக அழகுற காட்சித்தருகிறார் நெல்லையப்பர். இவருக்கு நாகாபரணம் அணிவித்து விசேஷ காலங்களில் அலங்காரம் செய்யப்படும்.

காந்திமதியம்மை: தெற்கு நோக்கிய கருவறையில் ஒரு கரத்தில் மலர் தாங்கி, மற்றோரு கரத்தை தொங்க விட்டு, சற்றே இடைநெளித்து நின்ற கோலத்தில், புன்சிரிப்பு மிளிர காட்சித்தருகிறாள் அம்மை காந்திமதி.

அழகியகூத்தர்: செப்பு (செம்பு) தகடுகளால் வேயப்பட்டு அழகுடன் காட்சியளிக்கும் தாமிரசபைக்குள் கம்பீரமாக எழுந்தருளியுள்ளார் சிவகாமி அம்மை உடனாய அழகிய கூத்தர். இவர் பெயருக்கு ஏற்றாற்போல கொள்ளை அழகுடன் திருநடனக் கோலம் காட்டியருளுகிறார்.

திருக்கோவில் அமைப்பு:
திருக்கோவில் வாயிலை கடந்து உள்ளே சென்றால் அதிகார நந்தி மற்றும் சூரியபகவான் சன்னதி உள்ளது. அடுத்து கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியோரை தரிசிக்கலாம். பின்னர் உள்ளே சென்றால் நேராக கிழக்கு பார்த்த கருவறை.கருவறைக்கு வெளியே ஒரு புறம் விநாயகரும், மறுபுறம் சுப்பிரமணியரும் துவாரபாலகர்களோடு இருக்க, உள்ளே கிழக்கு நோக்கி காட்சித்தருகிறார் இறைவன் ஸ்ரீ நெல்லையப்பர். இவரை தரிசித்து சற்றே திரும்பினால், இறைவன் சந்நிதிக்கு இடதுபுறம் தனி சந்நிதியில் தெற்கு நோக்கி காட்சித்தரும் அன்னை ஸ்ரீ காந்திமதியையும் தரிசிக்கலாம்.

இறைவன் சந்நிதிக்கும், அம்பாள் சந்நிதிக்கும் மத்தியில் உள்ள செப்பறை நடன சபையில் அன்னை ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேதராய் ஸ்ரீ அழகிய கூத்தர் காட்சித்தருகிறார். இவரையும் வணங்கி பிரகார வலம் வந்தால், பரிவார மூர்த்திகளான மெய்கண்டார், சுரதேவர், கன்னி விநாயகர், குரு பகவான், விசுவநாதர்-விசாலாட்சு, வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், சனீஸ்வரர், ஸ்ரீ சந்தன சபாபதி, பைரவர் ஆகியோரையும் தரிசத்து அருள்பெறலாம்.

திருக்கோவில் சிறப்புகள்: இக்கோவிலின் தலவிருட்சமாக வில்வமும், தீர்த்தமாக தாமிரபரணியும் விளங்குகிறது. சிதம்பரத்திற்கு அடுத்த படியாக இங்கு தான் நடராஜர் பிரதானமாக அருள் பாலிக்கிறார். இங்கு இவருக்கு தனித்தேர் இருக்கிறது. முற்காலத்தில் இங்கு வாழ்ந்த வீரபாண்டியன் என்ற மன்னன் ராமபாண்டியனின் எல்கைக்குட்பட்ட சிற்றரசன். இவன் செப்பறையில் இருந்த நடராஜர் சிலையை கண்டு அதன் அழகில் மயங்கியிருந்தான். அதேபோல தனக்கும் இரண்டு சிலைகள் வேண்டும் என சிற்பியிடம் கூறினான். சிற்பியும் சிலை செய்யும் பணியை துவக்கினார். இறுதியில் சிலை செய்யும் பணியும் முடிந்தது. சிலைகளின் அழகைக் கண்டு மன்னன் ஆனந்தம் கொண்டான் மன்னன் வீரபாண்டியன். இதே போல சிலைகள் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற எண்ணத்தில் சிற்பியை கொன்று விடும்படி தன் வீரர்களுக்கு உத்தரவிட்டான். ஆனால் வீரர்களோ சிற்பி மீது இரக்கம் கொண்டு அவரது கையை மட்டும் வெட்டிவிட்டனர். இதைக் கேள்விப்பட்ட ராமபாண்டியன், வீரபாண்டியன் மீது கடும் கோபம் கொண்டான். சிற்பியின் கையை வெட்டிய வீரபாண்டியனின் கைகளை துண்டித்தான். இவ்வாறு செய்யப்பட்ட இரண்டு சிலைகளும் கட்டாரிமங்கலம் மற்றும் கரிசூழ்ந்தமங்கலத்தில் உள்ள சிவாலயங்களில் தற்போதும் உள்ளன. இதன் பிறகு சிற்பிக்கு மரக்கை பொருத்தப்பட்டது. கலையின் மேல் ஆர்வமுடைய அந்தச்சிற்பி, மரக்கைகளின் உதவியுடன், முன்னை விட அழகாக மற்றொரு நடராஜர் சிலை செய்தார். அந்தச்சிலையின் அழகைப் பார்த்து அதன் கன்னத்தில் கிள்ளினார். அவ்வாறு கிள்ளிய வடுவுடன் கூடிய சிலையை இன்றும் கருவேலங்குளம் கோயிலில் தரிசிக்கலாம்.

இவ்வாறு ஒரே சிற்பி செய்த ஐந்து நடராஜர் அருளும் தலங்கள், பஞ்சபடிம தலங்களாக சிறப்பிக்கப்படுகின்றன.
அவைகள்.,

சிதம்பரம்
செப்பறை
கரிசூழ்ந்தமங்கலம்
கருவேலங்குளம்
கட்டாரிமங்கலம்.
ஆக பஞ்சபடிம தலங்களுள் சிறப்பு பெற்றதாக இந்த செப்பறை விளங்குகிறது.

இங்குள்ள அழகிய கூத்தப் பெருமானுக்கு, சிதம்பரத்தை போலவே நிறைய விலைமதிப்புள்ள ஆபரணங்கள் இருக்கின்றன. விழாக்காலங்களில் இன்றும் கூத்தருக்கு அனைத்து ஆபரணங்களும் அணிவிக்கப்படுகின்றன.

இவருக்கு நடைபெறும் ஆனி உத்திரம் மற்றும் மார்கழி திருவாதிரை அபிஷேகத்திற்கு வருடந்தோறும் பழனியில் இருந்து பஞ்சாமிர்தம் வரவழைக்கப்படுகிறது. இங்கு இவருக்கு நடைபெறும் தாண்டவ தீபாராதனை பிரசித்தி பெற்றது. விழாக்காலங்களில் மண்டபத்தில் எழுந்தருளும் கூத்தப்பெருமானுக்கு சோடஷ தீபாராதனையை, குறிப்பிட்ட ராகத்தில் வாசிக்கப்படும் தவில், நாதஸ்வரத்தின் இசைக்கு ஏற்ப ஏற்றி, இறக்கி காட்டியருளுவார்கள்.

தற்போது உள்ள கோவில் புதிதாக கட்டப்பட்டது என்றும் அதற்கு முந்தைய கோவில் தாமிரபரணி ஆற்றை ஒட்டி இருந்ததாகவும், ஒரு வருடம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது அக்கோவில் சிதிலமடைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. அப்படி ஆற்று வெள்ளம் பெருக்கெடுத்த போது இங்கிருந்த பல பொருட்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாம். அப்படி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் செப்பறை கோவிலுக்குரிய பெரிய சப்பரம் ஒன்றும், பூத வாகனம் ஒன்றும் அடங்கும். அந்த பெரியசப்பரம் தற்போது முறப்பநாடு சிவன் கோவிலிலும், பூத வாகனம் தற்போது திருவைகுண்டம் சிவன் கோவிலிலும் உள்ளதாம். செப்பறை மகாத்மியம் என்னும் வடமொழியில் இயற்றப்பட்ட நூல் ஒன்று இத்தலத்தின் சிறப்புகளை விவரிக்கிறது.
 

திருவிழாக்கள்: இங்கு சிதம்பரம் திருக்கோவில் போன்றே ஆனி திருமஞ்சன திருவிழா மற்றும் மார்கழி மாதம் திருவாதிரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாக்களில், திருவாதிரைக்கு முதல் நாள் நடராஜ பெருமான் திருத்தேரில் உலா வருவதை காண கண்கள் கோடி வேண்டும். சிதம்பரம் தலத்திற்கு அடுத்தபடியாக இங்கு தான் நடராஜ பெருமானுக்கு என தனித்தேர் உள்ளது சிறப்பம்சமாகும்.

திருவாதிரை திருநாள் அன்று இங்கு அதிகாலை நடைபெறும் பசு தீபாராதனை சிறப்பு வாய்ந்தது. இதற்காக பக்தர்கள் பலர் முதல் நாளே இங்கு வந்து தங்கி, அதிகாலையில் தாமிரபரணி நதியில் நீராடி தரிசிப்பார்கள். பின்னர் உச்சிக்காலத்தில் நடராஜருக்கு நடன தீபாராதனை வெகு விமரிசையாக நடைபெறும். அப்பொழுது நடராஜ பெருமான் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வருகையில், திருவெம்பாவை பாடல் பாட பட்டு தீபாராதனை நடைபெறும்.

இதுதவிர நடராஜருக்குரிய வருடாந்திர ஆறு அபிஷேக நாட்கள், மாத திருவாதிரை நாட்களில் இங்கு விசேஷ அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறும்.

இங்கு மாதந்தோறும் திருவாதிரை நட்சத்திரத்தன்று அழகிய கூத்தப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும் நடைபெறும்.

அமைவிடம்: திருநெல்வேலி மாநகரிலிருந்து வடகிழக்கே சுமார் 18கி.மீ தொலைவில் உள்ளது ராஜவல்லிபுரம் கிராமம். அங்கிருந்து சுமார் 1.5 கி.மீ தொலைவில் அமையப்பெற்றுள்ளது செப்பறை.

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து ராஜவல்லிபுரம் மார்க்கமாக செல்லும் நகர பேருந்தில் சென்று ராஜவல்லிபுரத்தில் இருந்து ஆட்டோவில் செல்லலாம். திருவாதிரை திருநாள் அன்று மட்டும் சிறப்பு பேருந்துகள் பக்தர்கள் வசதிக்காக சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து செப்பரைக்கே இயக்கப்படும்.

*✶✶⊶⊷⊷❍ 𝑴K ❍⊶⊶⊷✶✶*

🟨🟥🕉️🟨🟥🕉️🟨🟥

புதன், 11 மே, 2022

சதாசிவ பிரும்மேந்திரர்


18ம் நூற்றாணடின் துவக்கத்தில், அந்தணக் குடும்பத்தில் அவதரித்தவர் சதாசிவ பிரம்மேந்திரர். சோமநாதர்-பார்வதி அம்மையார் தம்பதிக்கு அருந்தவப் புதல்வனாக அவதரித்தார் சிவராமகிருஷ்ணன். ஆம்! சதாசிவ பிரம்மேந்திரருக்குப் பெற்றோர் வைத்த பெயர் அதுதான். கல்வி-கேள்வி, சாஸ்திரம், வேதம், சங்கீதம் முதலானவற்றை முறையாகக் கற்றார். திருவிசநல்லூர் ஸ்ரீதர ஐயாவாள், கோவிந்தபுரம் போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், அப்பைய தீட்சிதர், சிவயோகி தாயுமான ஸ்வாமி, தியாகராஜர் முதலானோரெல்லாம் சதாசிவ பிரம்மேந்திரரின் சமகாலத்தவர்கள் என்று கூறப்படுகிறது.

துறவு என்றால் காவிதானா? அவதூத நிலையும் (நிர்வாணம்) ஒரு துறவுதான். சதாசிவ பிரம்மேந்திரர் இதைத்தான் கடைப்பிடித்து வாழ்ந்தார். வாழ்க்கையின் பிற்பகுதி முழுவதும் மவுன நிலை. எவரிடமும் எந்த ஒரு பேச்சும் இல்லை. காரணம்? ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இவரது குரு சும்மா இருக்க மாட்டியா! உன் வாயைக் கொஞ்ச நேரம் மூடு என்று அதிகாரமாகச் சொன்னதை. ஆண்டவன் தனக்கு இட்ட கட்டளையாகக் கருதி, அந்தக் கணம் முதல், பேச்சை நிறுத்தினார்.

மவுனமே நிரந்தரமான பரிவர்த்தனை ஆனது. அவசரமான சந்தர்ப்பங்களில் மட்டும் மணலில் எழுதிக் காண்பித்துக் குறிப்பு சொல்வார். தேசத்தின் பல பாகங்களுக்கும் சதாசிவ பிரம்மேந்திரர் சென்று வந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. துருக்கி நாட்டுக்குக்கூட இவர் சென்று வந்ததாக செவி வழிச் செய்தி உண்டு. ஒரு முறை இவர் திகம்பரராக சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது, சிற்றரசன் ஒருவனது அந்தப்புரத்தைக் கடக்க நேர்ந்தது. ஆடை இல்லாதவர் அந்தப்புரத்தின் வழியாக நடந்து செல்கிறார் என்ற தகவல். அந்த சிற்றரசனைக் கடுங்கோபத்துக்கு உள்ளாக்கியது.

ஆத்திரத்துடன் அரசவையில் இருந்து வெளிவந்த சிற்றரசன் சாலையில் சென்று கொண்டிருந்த சதாசிவரைத் தன் வாளால் சரேலென வெட்டினான். அந்த மகானின் கை வெட்டுப்பட்டு தனித் துண்டாக நிலத்தில் விழுந்தது. கை வெட்டுப்பட்டதையும் அந்த இடத்தில் ரத்தம் ஆறுபோல் வழிந்துகொண்டு இருப்பதையும் பற்றி சற்றும் உணராத சதாசிவர், எதுவுமே நடக்காதது போல், சென்று கொண்டிருந்தார்.

இந்தக் காட்சியைப் பார்த்த சிற்றரசன் விதிர்விதிர்த்துப் போனான். கை வெட்டுப்பட்டும் சலனம் இல்லாமல் ஒருவர் நடந்து செல்கிறார் என்றால், இவர் யாராக இருக்கும் என்று குழும்பிப் போய் பயம் மேலிட, அவர் பின்னே தொடர்ந்தான்.

மகானின் நிலை, தொடர்ந்து அவனை பீதிக்குள்ளாக்க, ஓடிப்போய் அவருடைய பாதம் பணிந்து தனது செயலுக்கு மன்னிப்புக் கேட்டான். அப்போது சதாசிவரிடம் எந்த மாற்றம் இல்லை. எதுவுமே நிகழாததுபோல் வெட்டுப்பட்ட இடத்தை மெல்லத் தடவிவிட்டார். அடுத்து நடந்ததை அதிசயம் என்றுதான் சொல்ல வேண்டும். ரத்தம் வழிவது சட்டென நின்று, வெட்டுப்பட்டுத் தரையில் கிடந்த அவரது திருக்கரம் தானாகவே வந்து ஒட்டிக்கொண்டது!

அதன்பின் சதாசிவரின் அருளுக்கும் ஆசிக்கும் அந்த சிற்றரசன் பாத்திரமாகிவிட்டான். இதுபோல் சதாசிவரின் வாழ்க்கையில் ஏராளமான அதிசயங்கள் நடந்துள்ளன.

சிறு வயதிலேயே பரப்பிரம்ம நிலையை எய்தியவர் சதாசிவர். அதாவது, கல், கட்டை, மனிதர், புல், பூண்டு அனைத்தையும் ஒன்றாகப் பார்க்கும் நிலைதான் பரப்பிரம்ம நிலை. எதற்கும் பேதம் பார்ப்பதில்லை. தனது வாழ்க்கையின் பெரும்பாலான பொழுதுகளைக் காவிரிக் கரை ஓரத்திலேயே கழித்தவர் சதாசிவர். அதனால்தானோ என்னவோ , எங்கெங்கோ சுற்றி இருந்தாலும் இறுதிக் காலத்தில் அருகில் உள்ள நெரூருக்கு வந்து, தான் சமாதி ஆகப்போகும் இடத்தை அவரே தேர்ந்தெடுத்தார்.

ஜீவசமாதி ஆவதற்குச் சில நாட்கள் முன்பிருந்தே சமாதி நிலையில் இருந்தார் சதாசிவர். உணவு, உறக்கம் போன்ற இயல்பான செயல்கள் எதுவும் இல்லாமல். கட்டை போல் இருக்கும் நிலை. அப்போது மட்டுமில்லை. அடிக்கடி சமாதி நிலையில் இருக்கும் சுபாவம் கொண்டவர் சதாசிவர். இப்படித்தான் ஒரு முறை கொடுமுடிக்கு அருகில் ஆற்றங்கரையில் சமாதி நிலையில் உட்கார்ந்தார் சதாசிவர். ஓரிரு நாட்கள் கழித்து காவிரி ஆற்றில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது. அப்போது கரையில், சமாதி நிலையில் இருந்த சதாசிவரையும் வெள்ளம் மூழ்கடித்துவிட்டது. கரையில் இருந்தவர்கள் பதறினார்கள். கரையில் உட்கார்ந்து தியானம் செய்த சாமியக் காணோம் என்று ஒருவர் அலற.... அடுத்தவர் சோகத்துடன் ஆத்து வெள்ளம் பாய்ஞ்ச வேகத்தைப் பாத்தீல்ல. அது அவரையும் அடிச்சிட்டுப் போயிருக்கும். வெள்ளத்துக்கு நல்லவாங்க கெட்டவங்க வித்தியாசம் தெரியவா போகுது. பாவம்! அவரோட ஆயுளு இப்படி அற்பமா முடிஞ்சு போச்சே என்று அங்கலாய்த்தார்.

இதன் பிறகு சதாசிவரைப் பற்றிக் கொடுமுடிவாசிகள் மறந்தே போய்விட்டார்கள். ஒரு கோடை காலத்தில் தண்ணீர் வற்றிய நேரத்தில், காவிரியில் வாய்க்கால் வெட்டுவதற்காக ஒரு மணல்கோட்டை மண்வெட்டி மூலம் வெட்ட ஆரம்பித்தார்கள் பணியாளர்கள். ஓர் ஆசாமி மண்வெட்டியால் வெட்டியபோது பதறிப்போனார். உள்ளே விசித்திரமான ஏதோ ஒன்றின் மேல் மண்வெட்டி பட்டதாகத் தெரிகிறது என்று அலறி, மண்வெட்டியை அப்படியே போட்டுவிட்டு ஓடிப்போய் விட்டார்!

திகிலான மற்ற பணியாளர்கள் விரைந்து வந்து. அந்த மண்வெட்டியை எடுத்துப் பார்க்க.... அதன் முனையில் ரத்தம்! இதைப் பார்த்தவர்கள் மிரண்டு போனார்கள். பிறகு, அவர்களே சமாதானம் அடைந்து, அந்தக் குறிப்பிட்ட இடத்தைச் சுற்றிலும் இருந்த மண்ணை மெதுவாக விலக்கினார்கள். உள்ளே பள்ளத்தில் உடலெங்கும் மணல் அப்பிய கோலத்தில் சமாதி நிலையில் காட்சி தந்தார் சதாசிவ பிரம்மேந்திரர். காற்றுகூட புக முடியாத அந்த மண் மூடிய இடத்தில் எத்தனை காலமாகத்தான் சமாதி நிலையில் இருந்தாரோ அந்த மகான்? இறைவனுக்குத்தான் தெரியும்.

தன் சமாதி நிலை கலைந்ததால், பள்ளத்தில் இருந்து எழுந்தார் சதாசிவ. அவர் உடலில் இருந்து மண் துகள்கள் உதிர்ந்தன. அவர் உடலில் மண்வெட்டி பட்ட இடத்தில் இருந்து ரத்தம் கசிந்து வழிந்து கொண்டிருந்தது. ஆனால் எதையுமே கண்டுகொள்ளாமல் விறுவிறு வென்று நடந்து சென்றார். பணியாட்கள் இதைக்கண்டு திகைத்துப் போனார்கள். பரப்பிரம்மத்துக்கு ஏது வலி? ரத்தத்தைக் கண்டு ஏது பயம்.?

இதுபோல், தான் சமாதி ஆவதற்குச் சில நாட்கள் முன்பும் சமாதி நிலையில் நெரூரில் இருந்தவர் சதாசிவர். பல நாட்கள் இப்படி ஓடின. திடீரென ஒரு நாள் கண்விழித்தார் பிரம்மேந்திரர் . ஏதோ சொல்லப் போகிறார் என்று அவரைச் சுற்றி இருந்தவர்கள் அனைவரும் அவரை நெருங்கினார்கள். ஊரில் இருந்த முக்கிய பிரமுகர்களை உடனே அங்கே வரச் சொல்லுமாறு கேட்டுக்கொண்டார். அந்தணர்கள் உட்பட அனைவரும் கூடினர்.

ஆனி மாதம் வளர்பிறை தசமி அன்று. பூத உடலை, தான் துறக்க இருப்பதாக அவர்களுக்கு உணர்த்தினர். தான் சமாதி ஆன பின், காசியில் இருந்து அந்தணர் ஒரு பாண லிங்கம் ஒன்றைக் கொண்டு வருவார் என்றும் அதைத் தன் சமாதிக்கு அருகில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று உணர்த்தினார். ஜீவ சமாதியாகும் நாள் நெருங்கியது காவிரி ஆற்றங்கரை ஓரம் சதாசிவர். தான் சமாதி ஆவதற்காகத் தேர்வு செய்ய இடத்தில் இருந்த புல், பூண்டுகளை அகற்றும் பணியில் ஊர்க்காரர்கள் இறங்கினர். நெரூர் பூமி, புண்ணியம் செய்த பூமி, இல்லையென்றால் இத்தனை பெரிய மகான் நம்மூருக்கு வந்து சமாதி ஆவாரா? என்று ஊர்க்காரர்கள் நெகிழ்ந்தனர். சாஸ்திரப்படி குழி வெட்டினார்கள். இன்னும் சற்று நேரத்தில் பரப்பிரம்மம். ஜீவசமாதி ஆவதைக் காண அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்தும் ஜனங்கள் திரண்டிருந்தனர். அனைவரின் முகமும் சோகம் கப்பியதாக இருந்தது.

குறித்தநேரம் வந்ததும். ஜனத்திரளில் நீந்தி. தனக்காகத் தோண்டப்பட்ட குழியை அடைந்தார் சதாசிவர். வேத மந்திர கோஷங்களின் ஒலி. அந்தப் பிராந்தியத்தையே நிறைத்தது. இரு புறமும் கூடி இருந்த மக்களின் வழிபாடுகளை எல்லாம் ஏற்றுக்கொண்டு, தனக்கான குழியில் இறங்கினார். ஜனங்கள் அனைவரையும் ஒரு முறை சந்தோஷமாகப் பார்த்தார். பிறகு குழியின் நடுவில் சமாதி நிலையில் உட்கார்ந்தார். மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்று அங்கு கூடி இருந்தவர்களுக்கு சமிக்ஞையாகச் சொன்னார். சமாதி மூடப்பட்டு சடங்குகள் நடந்தன. வந்திருந்தோர் அனைவரும் கண்ணீருடன் வழிபட்டுத் திரும்பினர். அந்த பரப்பிரம்மம். இந்த உலகத்துடனான தன் சரீரத் தொடர்பை விலக்கிக்கொண்டது சதாசிவ பிரம்மேந்திரர் சொன்னபடியே, அவர் சமாதியான பின், காசியில் இருந்து அந்தணர் ஒருவர் பாண லிங்கத்தைக் கொண்டு வந்தார். பிரம்மேந்திரருடைய விருப்பப்படி அவரது சமாதி அருகில் அந்த பாண லிங்கம் காசி விஸ்வநாதர் என்கிற திருநாமத்துடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

பிரம்மேந்திரரின் அருளுக்குப் பாத்திரமானவரும் புதுக்கோட்டை சமஸ்தான மன்னருமான விஜயரகுநாதராய தொண்டைமான் தகவல் கேள்விபட்டு நெரூர் வந்தார். காசி விஸ்வநாதருக்கு ஒரு கோயில் கட்டினார். முறைப்படி நடக்க வேண்டிய கோயில் பூஜைகளுக்கும் சமாதி வழிபாடுகளுக்கும் ஏற்பாடுகளைச் செய்தார். காசி விஸ்வநாதர் கோயிலுக்கு ஆகம பூஜை. ஜீவ சமாதிக்கு வைதீக பூஜை. கோயில் மற்றும் அதிஷ்டானம் ஆகிய இரண்டும் இணைந்த திருக்கோயிலாக இது காட்சி அளிக்கிறது.

இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் கண்காணிப்பில் கோயில் இன்று இருந்து வருகிறது. காசி விஸ்வநாதர் (சதாசிவ பிரம்மேந்திரர் சொன்னபடி காசியில் இருந்து வந்த பாண லிங்கம் இதுதான்) மற்றும் விசாலாட்சி ஆகிய தெய்வங்கள் கோயிலுக்குள் அருள் புரிகின்றனர். காசி விஸ்வநாதர் சன்னதிக்குப் பின்பக்கம் பிரம்மேந்திரரின் ஜீவசமாதி அமைந்துள்ளது. சமாதிக்குக் குடை பிடித்தபடி ஒரு பிரமாண்ட வில்வ மரம் காணப்படுகிறது.

சதாசிவர், ஜீவ சமாதி ஆன பத்தாம் நாளில் இந்த வில்வ மரம் தானாக வந்தது. இப்படி ஒரு வில்வ மரம் முளைக்கும் என்கிற செய்தி புதுக்கோட்டை மகாராஜாவின் கனவில் வந்து சொல்லப்பட்டது என்பது ஆச்சரியமான விஷயம். தினமும் காலையில் ஒன்பது மணிக்கு சமாதிக்கு அபிஷேகம் நடக்கும். அப்போது ருத்ரம், சமகம், புருஷசூக்தம் முதலிய பாராயணம் நடக்கும்.

ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் காலை பத்து மணிக்கு விசேஷ அபிஷேகம் அலங்காரம் உண்டு. அன்று சகஸ்ரநாம அர்ச்சனை, புஷ்ப அலங்காரம், அன்னதானம் ஆகியவை சிறப்பாக நடைபெறும். தவிர, ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது என்றார் நாராயண உபாத்யாயா. இவர்தான், ஜீவ சமாதியின் வழிபாடுகளை தற்போது கவனித்து வருகிறார்.

மகான்களின், மரணம் என்பது உடல் நீக்கம் மட்டுமே! காலங்களைக் கடந்தும் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அருளாசிகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு. அந்த மகானின் சன்னிதியைத் தரிசித்துச் செல்லும் அன்பர்களே சாட்சி.

ஸ்ரீசதாசிவரின் திருப்பாதம் பணிவோம்.

மகானின் திருக்கரம் பட்ட மந்திர மண்!

சமஸ்தானமாக இருந்தபோது புதுக்கோட்டையின் மன்னராக விளங்கிய விஜயரகுநாதராய தொண்டைமான் சதாசிவ பிரம்மேந்திரருக்கு நெருக்கமானவர்.

திருமணம் சம்பந்தமான ஒரு கொண்டாட்டம் சதாசிவ பிரம்மேந்திரரின் வீட்டில் நடந்து கொண்டிருந்தது. அப்போது சதாசிவருக்குப் பசி எடுத்தது. தாயை அணுகி உணவு அளிக்குமாறு கேட்டார். சற்றுப் பொறுத்திருப்பா. உன் திருமணத்துக்காக கொண்டாட்டங்கள் நடந்து வருகிறது. நீ இப்போது அவசரப்படலாமா? என்று தாயார் கேட்ட போது துணுக்குற்றார் சதாசிவர்.

திருமணத்துக்கு முன்னரே பசித்த போது வயிற்றுக்குச் சோறு போட முடியவில்லை என்றால், மணமானபின் இல்லற வாழ்க்கையில் என்னவெல்லாம் கஷ்டப்பட வேண்டி இருக்கும்; எப்படியெல்லாம் சிரமங்கள் நம்மை ஆட்கொள்ளும் என்று சிந்தித்தவர், சொல்லாமல் கொள்ளாமல் வீட்டைவிட்டுப் புறப்பட்டுவிட்டார் நடந்தார்.... நடந்தார்......

தஞ்சாவூர் வழியே சென்றால். 1738 வாக்கில் புதுக்கோட்டையை அடுத்த திருவரங்குளக் காடுகளில் (இதை திருவரங்கம் என்பாரும் உண்டு) நடந்து கொண்டிருந்தபோது அந்தப் பகுதியின் மன்னரான விஜயராகுநாத ராய தொண்டைமான். மகானான சதாசிவரை சந்தித்தார். தன்னந்தனியே இருந்த மன்னரைக் கண்ட மாத்திரத்திலேயே மகானின் மனதும் இளகியது. குருவிடம் உபதேசம் கேட்கும் சீடன் கோலத்தில், சதாசிவம் முன் பணிந்தபடி நின்றார் மன்னர். மவுனத்தையே தான் கடைப்பிடித்து வந்ததால், கீழே அமருமாறு சைகை காண்பித்தார். மன்னரும் அமர்ந்தார். அதன்பின் கீழே இருந்த மணலில் சில மந்திரங்களுடன் ஸ்ரீதட்சிணாமூர்த்தி மந்திரத்தையும் எழுதிக் காண்பித்த அவருக்கு உபதேசம் செய்தார்.

அந்த மந்திரம்:

ஓம் நமோ பகவதே தட்சிணாமூர்த்தயே மஹ்யம் மேதாம் ப்ரஃஞாம் ப்ரயச்ச ஸ்வாஹா.

மந்திர உபதேசத்தைப் பெற்றுக்கொண்டபின், எந்த மணலில் சதாசிவர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி மந்திரத்தை எழுதினாரோ அந்த மணலைத் தன் இரு கைகளால் பவ்யமாக அள்ளி, தலைப்பாகையில் எடுத்துக்கொண்டு அரண்மனை திரும்பினார் தொண்டைமான். இந்த மந்திர மண்ணை பூஜையறையில் வைத்து தினமும் வழிபட்டார் மன்னர் என்கிறார். சமஸ்தானத்தின் இன்றைய ராணியான ரமாதேவி ராதாகிருஷ்ண தொண்டைமான்.

சதாசிவர் தன் கைவிரல்களால் மந்திர எழுத்துக்களை எழுதிக் காண்பித்த அந்த மணல் இன்று எங்கே இருக்கிறது.

ஞாயிறு, 23 ஜனவரி, 2022

காஞ்சி மஹா பெரியவா....

காஞ்சி மஹா பெரியவா...

காஞ்சிப் பெரியவர் 1894, மே மாதம் 20ஆம் தேதி விழுப்புரம் நகரில் அவதரித்தார். இவரது தந்தை சுப்பிரமணிய சாஸ்திரிகள், தாயார் லட்சுமி அம்மையார். இவர்களுக்கு சுவாமிகளைத் தவிர நான்கு மகன்களும், ஒரு மகளும் இருந்தனர். இதில் ஸ்வாமிகள் அவர்களின் இரண்டாவதாகப் பிறந்தவர். சுவாமிநாதன் என்ற பெயரே சுவாமிகளுக்கு பெற்றோர் சூட்டியதாகும். இவர்களது குலதெய்வம் சுவாமிமலை சுவாமிநாதன். அவரது பெயரே சுவாமிகளின் பெயராக அமைந்தது. சுவாமிநாதன் எட்டு வயது வரை தந்தையிடமே கல்வி கற்றார். பின் திண்டிவனம் ஆற்காடு அமெரிக்க மிஷன் உயர் நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பில் சேர்ந்தார். இப்பள்ளியில் கண்டிப்பும், ஒழுங்கும் நல்ல முறையில் இருந்தன. அறிவுக்கூர்மையுடன் நன்கு ஆர்வத்துடன் படித்து வந்தார். ஆண்டு தோறும் பைபிள் ஒப்புவித்தல் போட்டி நடப்பது வழக்கம். இப்போட்டியில் எப்படியும் பரிசு பெற்று விடுவது என்ற உறுதியுடன் சுவாமிநாதன் படித்து முதல் பரிசும் பெற்றார். இவர் வெற்றி பெற்றது அனைவருக்கும் ஆச்சரியத்தை தந்தது. எல்லா ஆசிரியர்களும் சுவாமிநாதனைப் பாராட்டி மகிழ்ந்தனர். ஒரு சமயம் அப்பள்ளியை ஆய்வு செய்ய உதவிக்கல்வி அதிகாரி மஞ்சக்குப்பம் சிங்காரவேலு முதலியார் வந்திருந்தார். கண்டிப்பு மிக்க அவர், மாணவர்களின் கல்வித்திறனை அறிய சிக்கலான பல கேள்விகளைக் கேட்டார். சுவாமிநாதனின் தெளிவான பேச்சு அதிகாரியின் கவனத்தை ஈர்த்தது. நிச்சயம் இந்த மாணவர் எதிர் காலத்தில் உயர்ந்த நிலையை அடைவார் என்று பாராட்டிச் சென்றார். சுவாமிநாதன் அப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது பள்ளியின் ஆண்டு விழாவில் ஷேக்ஸ்பியர் எழுதிய ஜான் மன்னர் என்ற நாடகத்தை நடத்த பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. நாடகத்தின் முக்கிய கதாபாத்திரமான ஆர்தர் இளவரசர் வேடத்தில் நடிப்பதற்கு சுவாமிநாதனைத் தேர்ந்தெடுத்தார் தலைமையாசிரியர். நாடகத்தில் நடிப்பதற்கு தன்னைத் தேர்ந்தெடுத்ததை அறிந்து சுவாமி நாதன் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. சுவாமிநாதனின் பெற்றோருக்கோ இதில் உடன் பாடில்லை. ஆனாலும், தன் பெற்றோரைச் சம்மதிக்க வைத்தார் சுவாமிநாதன். அவரது விருப்பப்படியே பெற்றோர் நாடக உடைகளை தைக்க ஏற்பாடு செய்தனர். இரண்டே நாட்களில் ஜான் மன்னருக்குரிய வசனங்களை மனப்பாடம் செய்து, அருமையாக நடித்தார். நாடகத்தைக் கண்ட தலைமை விருந்தினர் பிஷப், சுவாமிநாதனைப் பாராட்டி மகிழ்ந்தார். இன்று ஜான் மன்னரை நேரடியாக சுவாமி நாதனின் நடிப்பில் கண்டேன் என்று சொல்லி முதல் பரிசை வழங்கினார்.

அந்த சுவாமிநாதனே காஞ்சி காமகோடி 68வது பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சந்திர சேகரேந்திர ஸ்வாமிகளாகி நமக்கு அருள் பாலித்தார். காஞ்சி பெரியவர் 1914 முதல் 1918 வரை கும்பகோணத்தில் தங்கி பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தார். ஒரு சமயம், கலைமேதைகளை வர வழைத்து பாராட்டு விழா நடத்தினார். அங்கு வந்த அஷ்டாவதானிகள், சதாவதானிகள் ஆகிய பல்கலை நிபுணர்கள் ஸ்வாமிகளிடம் ஆசி பெற எண்ணினர். சதாவதானி என்பவர் நூறு விஷயங்களுக்குரிய கேள்விகளை மனதில் வாங்கிக் கொண்டு பின்னர் அவற்றுக்கு ஒன்று விடாமலும், தவறு இல்லாமலும் விடை கூறுபவர். அஷ்டாவதானி என்பவர் ஒரே நேரத்தில் எட்டு விஷயங்களை வாங்கிக் கொண்டு பதில் கூறுபவர். இவர்கள் பலமொழிகளிலும் கவிதை இயற்றும் திறன் படைத்தவர்களாக இருப்பர். ஸ்வாமிகள் தலைமையில் இத்தகைய சிறப்பு போட்டி ஒன்று ஏற்பாடாகி இருந்தது. அப்போட்டியில் கலந்து கொள்ள மூத்த சதாவதானி ஒருவர் வந்திருந்தார். அவர் தன்னுடைய செயல் திறமையினை ஸ்வாமிகளிடம் எடுத்துச் சொன்னதோடு யாரும் தன்னோடு போட்டியிட்டு வெற்றி பெற முடியாது என்று கர்வத்துடன் கூறிக் கொண்டார். போட்டி துவங்கும் முன், ஸ்வாமிகள் ஒருவரை அழைத்து, சதாவதானியிடம் கேட்கும் போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வைக்கும் படி கூறினார். பதில்களை சதாவதானி கூறும் போதே ஸ்வாமிகளின் பதில்களும் வாசிக்கப்பட்டு வந்தது. இருவர் சொன்ன விடைகளும் ஒன்றாக இருப்பதை கண்டு சதாவதானி ஆச்சரியப்பட்டார். சுவாமிகளின் பாதங்களில் விழுந்து தன்னை மன்னிக்கும் படி வேண்டினார். அதன் பின் ஸ்வாமிகள் அவருக்குப் பொன்னாடை போர்த்தி ஆசி வழங்கினார். அக்காலத்தில் சர்க்கஸ் கம்பெனி நடத்திய பேராசியர் ராமமூர்த்தி யோகக்கலையில் நிபுணராக இருந்து வந்தார். இவர் சுவாமிகளைத் தரிசிக்க வந்திருந்தார். இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தனர். பேசிவிட்டு வெளியே வந்த பேராசிரியரின் கண்களில் நீர் பெருகியது. பிரம்மச்சர்யத்தின் தெய்வீக சக்தியை ஸ்வாமிகளிடத்தில் உணர்ந்ததாகவும், இதை விட வேறு பாக்கியம் வாழ்வில் தேவையில்லை என்று மகிழ்ச்சி அடைந்தார். கும்பகோணம் அரசு கல்லூரியில் பணியாற்றிய இயற்பியல் பேராசிரியர் ராஜகோபால் ஐயரும், இன்ஜினியர் பி.வி. மாணிக்கநாயக்கரும் ஸ்வாமிகளிடம் பக்தி கொண்டவர்கள். இருவரும் ஸ்வாமிகளிடம் வானசாஸ்திரத்தைப் பற்றிப் பேசினர். அவர்களிடம், ஒரு டெலஸ்கோப் மூலமாக, இக்கலையில் நம் நாட்டு வழிமுறைக்கும், வெளி நாட்டவர் வழி முறைக்கும் உள்ள ஒற்றுமைகளை எடுத்துச் சொல்லி, ஸ்வாமிகள் விளக்கம் அளித்தார். அவரது நுணுக்கமான வானவியல் அறிவு கண்டு இருநிபுணர்களும் பெருமிதமும் ஆச்சரியமும் கொண்டனர். காஞ்சி பெரியவர் ஆற்காடு அருகிலுள்ள பூசைமலைக்குப்பம் மடத்தில், 1930ல் தங்கியிருந்தார்.

அந்த மடத்தில் இருந்த யானை மஹா பெரியவரைக் கண்டகால் துதிக்கையைத் தூக்கி நமஸ்காரம் செய்யும். பெரியவரும் யானையைத் தடவிக் கொடுத்து அன்பு காட்டுவார். ஒரு நாள் இரவில் யானையைக் கட்டியிருந்த கொட்டகை தீப்பற்றிக் கொண்டது. யானை சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடி விட்டது. மறு நாள் பாகனும், மடத்து ஆட்களும் காட்டில் யானையைத் தேடி அலைந்தும் இருக்கும் இடத்தை அறிய முடியவில்லை. சில நாட்கள் கழித்து, மடத்திலிருந்து எட்டு கி.மீ.,தொலைவில் உள்ள குளத்தில் அது நின்று கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. பாகன் குளத்தில் இறங்கி, யானையை கொண்டு வர முயற்சித்தான். அது வர மறுத்து அடம் பிடித்தது. விஷயமறிந்த பெரியவர் தானே குளத்திற்கு சென்று  யானையை அன்புடன் ஒரு பார்வை பார்த்தார். யானையின் கண்களில் கண்ணீர் பெருகியது. குளத்தை விட்டு வெளியே வந்து அவர் அருகில் நின்றது. பெரியவர் அதைத் தடவிக் கொடுத்து சமாதானம் செய்தார். இதே போல, யானையிடம் சிக்கிய பக்தரைக் காத்த நிகழ்ச்சி ஒன்றும் நடந்தது. சிதம்பரத்தில் ஆடிட்டராக இருந்தவர் பாலசுப்ரமண்யம். இவர் தமிழ் தாத்தா உ.வே.சா. பரம்பரையில் வந்தவர். அவர் மஹா பெரியவரின் தீவிர பக்தர். எப்போதும் சந்திரசேகரா ஈசா என்று உச்சரிக்கும் வழக்கம் கொண்டவர். ஒரு நாள் சிதம்பரம் நடராஜரை தரிசிக்க சென்ற ஆடிட்டருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கோயில் யானைக்கு மதம் பிடித்து வந்தவர்களைப் பயமுறுத்திக் கொண்டிருந்தது. அப்போது ஆடிட்டர் உள்ளே நுழைந்தார். அது அவரை கோபத்துடன் தூக்கியது. அவர் பயத்தில் நடுங்கினார். ஆனால் வாய் மட்டும் சந்திரசேகரா, ஈசா என்ற நாமத்தை சொல்ல மறக்கவில்லை. அப்போது அதிசயம் ஒன்று நிகழ்ந்தது. மதம் கொண்ட யானை ஒரு நிமிஷத்தில் அமைதியானது. ஆடிட்டரை கீழே இறக்கி விட்டு விட்டு பாகனுடைய கட்டுப்பாட்டுக்குள் வந்து மண்டியிட்டது. பக்தர்கள் இதைப் பார்த்து அதிசயப்பட்டனர். ஸ்வாமிகளின் மீது நாய்க்கும் கூட பக்தி உண்டு. 1927ல் மடத்தில் நாய் ஒன்று வளர்ந்து வந்தது. மடத்து பொருட்களையும், கால்நடைகளையும் பாதுகாத்து வந்தது. ஸ்வாமிகள் ஒவ்வொரு நாளும் நாய்க்கு ஆகாரம் கொடுத்தாகி விட்டதா? என்று அக்கறையாய் விசாரிப்பார். அவரைக் கண்டவுடன் அது சுற்றிச் சுற்றி வரும். ஒரு முறை சிறுவன் ஒருவன் அந்த நாயைக் கல்லால் அடித்துத் துன் புறுத்தினான். அதன் பின் அது பார்ப்பவர்களை எல்லாம் கடிக்க ஆரம்பித்தது. மடத்து அதிகாரிகள் நாயை 40 கி.மீ., தூரத்தில் இருக்கும் கிராமத்தில் கொண்டு விட்டு விட்டு வந்தனர். மஸா பெரியவருக்கு இந்த விஷயம் தெரியாது. ஆனால், நாயை விட்டு வந்தவர்கள் மடத்திற்கு வருவதற்கு முன் நாய் மடத்திற்கு வந்து சேர்ந்தது. மடத்து ஆட்களிடம், நாய் வந்து விட்டதா? என்று கேட்டார் பெரியவர். நாயும் அன்போடு பெரியவரிடம் வந்து நின்று சாந்தமானது. மடத்தில் இருப்பவர்கள் பெரியவர் செய்த அற்புதத்தை எண்ணி வியந்தனர். மடத்து நாய்க்கு இருந்த பக்தி உணர்வு மனிதர்களான நமக்கு இருக்கட்டும். ஒரு ஆங்கில எழுத்தாளர் பால்பிரண்டன் 1921ல் இந்தியா வந்தார். எழுத்தாளர் கே.எஸ். வெங்கடரமணியோடு சேர்ந்து ஆன்மிக ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டார்.

இந்திய மகான்களைத் தரிசிக்க வேண்டும் என்பது அவரது நோக்கமாக இருந்தது. வெங்கடரமணி பால் பிரண்டனிடம் காஞ்சி பெரியவர் ஒரு உண்மையான துறவி. பாதயாத்திரையாக இந்தியா முழுவதும் சென்று ஆன்மிக கருத்துக்களைப் பரப்பி வருபவர். யோக மார்க்க உண்மைகளை நன்கு அறிந்தவர். நீங்கள் அவரை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன் என்று உறுதியளித்தார். அப்போது பெரியவர் செங்கல்பட்டில் முகாமிட்டிருந்தார். அவரைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. பால் பிரண்டன் பெரியவரை சந்தித்த நிகழ்ச்சி, பகவான் கிருஷ்ணரிடம் அர்ஜுனன் உபதேசம் பெற்றதைப் போல அமைந்தது. பிரண்டன் தனக்கு ஏற்பட்ட ஆன்மிக சந்தேகங்களுக்குரிய விடைகளை பெரியவரிடம் இருந்து பெற்றார். அவரிடம் பெரியவர், திருவண்ணாமலையில் இருக்கும் ரமணமகரிஷியையும் சந்தியுங்கள், என்றார். ரமணரையும் சந்தித்து பால்பிரண்டன் ஆசி பெற்றார். பால் பிரண்டன் காஞ்சி பெரியவரிடம் தான் பெற்ற அனுபவத்தை தன் நூலில் பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார். குழந்தைப் பருவம் முதற் கொண்டே இறைப்பணியில் ஈடுபட்டிருக்கும் இப்பெரியவரை விட்டுப்பிரிய எனக்கு மனம் வரவே இல்லை. இம்மகான் பீடாதிபதியாக இருந்தாலும், அவரது மனம் அதிகாரத்தை நாடவில்லை. அவர் எல்லாவற்றையும் துறந்தவர். அவருக்கு அளிக்கும் காணிக்கைகளை எல்லாம் தகுதியுடையவர்களுக்கே பங்கிட்டு அளிக்கிறார். அவரது அழகிய உருவத்தை நான் ஒரு போதும் மறக்க முடியாது. நான் செங்கல்பட்டில் தங்கியிருந்த நாளில் அந்த ஊரையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தேன். ஸ்வாமிகளை மறுபடியும் தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் என்னுள் உதித்தது. அவர் ஒரு பெரிய கூட்டத்தில் உபதேசம் செய்து கொண்டிருந்தார். அந்த கூட்டத்தில் இருந்தவர்கள் அவர் மீது கொண்டிருக்கும் நம்பிக்கை கண்டு பெருமை கொண்டேன். கடவுள் என்ற ஒருவர் இருக்கிறார் என்ற எண்ணம் அந்த மக்களின் உள்ளத்தில் ஆழமாக இருந்தது. அவர்கள் வேறு எந்த சிந்தனையிலும் நாட்டம் செலுத்தவில்லை. அன்று இரவில் தூங்கிக் கொண்டிருந்தேன். படுத்திருந்த போது என்னுடைய உடம்பிலுள்ள நரம்புகள் அனைத்தும் முறுக்கேறி இருந்தது. யாரோ என்னை இழுப்பது போல ஒரு உணர்ச்சி ஏற்பட்டது. என்னைச் சுற்றி மின்சாரம் பாய்வது போல உணர்ந்தேன். எனது பக்கத்தில் வெளிச்சம் தோன்றியது. மிகுந்த பரபரப்பான நான் எழுந்த போது, மஹா ஸ்வாமிகளின் உருவத்தைக் கண்டேன். அதில் எந்தவித ஐயமும் இல்லை. கருணையை வெளிப்படுத்தவே அவர் வந்திருந்திருப்பதை உணர்ந்தேன். தாழ்மையுடன் இரு; நீ கோருவதை எல்லாம் அடைவாய் என்று அவர் கூறுவதை என் காதுகள் உணர்ந்தன. அதன் பின் அந்த உருவம் மறைந்து விட்டது. மறக்க முடியாத இந்த நிகழ்ச்சியை எப்போதும் என் மனம் நினைத்துக் கொண்டே இருந்தது  என்று எழுதியிருக்கிறார். பால் பிரண்டனுக்கு கிடைத்த மஹா பெரியவரின் அருள் பார்வை நமக்கும் கிடைக்கட்டும். காஞ்சி மஹா  பெரியவர், 1935ல், மிட்னாபூரில் உள்ள மடத்தில் முகாமிட்டிருந்தார். இவ்வூர் கோல்கட்டாவிலிருந்து 100 கி.மீ., தூரத்தில் உள்ளது. நாடு முழுவதும் சுதந்திரப்போராட்டம் மிகத் தீவிரமாக நடந்து கொண்டிருந்த நேரம் அது. டாக்டர்கள், கல்வியாளர்கள், தொழிலதிபர்கள் என்று பலரும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு கைதிகளாக மிட்னாபூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். பெரியவரின் வருகையைக் கேள்விப்பட்ட சிறைக்கைதிகள் எப்படியும் அவரைத் தரிசிக்க வேண்டும் என்று ஆர்வம் கொண்டனர். சிறை அதிகாரியாக இருந்த ஆங்கிலேயரிடம் அனுமதி கேட்டனர். கண்டிப்பு மிக்கவராக அந்த அதிகாரி இருந்தாலும், கைதிகளின் பக்தியுணர்வைக் கண்டு இரக்கப்பட்டு, தானும் அவர்களோடு பெரியவர் தங்கியிருந்த இடத்திற்குப் புறப்பட்டார். கூண்டிற்குள் அடைபட்ட பறவைகள் சுதந்திரமாகப் பறப்பது போல, கைதிகளும் மகிழ்ச்சியுடன் பெரியவரைத் தரிசிக்கக் கிளம்பினர். மாலை ஐந்து மணிக்கு கிளம்பிய அவர்கள், ஆறுமணிக்குள் தரிசனத்தை முடித்து விட்டு, சிறைச்சாலைக்குத் திரும்பி விட வேண்டும் என்பது அந்த அதிகாரியின் நிபந்தனை. சிறைக்கைதிகள் வந்த நேரத்தில் பெரியவர் வழக்கமான மாலை நேர பூஜையில் இருந்தார். பூஜை முடிய ஆறு மணிக்கு மேலாகும் என்று சீடர்கள் தெரிவித்தனர். உடனடியாக அவர் வெளியே வந்தால் மட்டுமே தரிசிக்க முடியும் என்ற நிலையில் என்ன செய்வதென தெரியாமல் கலங்கினர். மாலை 5.45 மணி ஆகி விட்டது. இன்னும் 15 நிமிடத்திற்குள் சிறைக்குள் சென்றாக வேண்டும். நேரம் சென்று கொண்டிருந்தது. பெரியவர் வருவதாகத் தெரியவில்லை. இனி அவரைக் காண்பதற்கு இயலாது என்ற நிலையில் ஏமாற்றமான மனதுடன் கைதிகள் அதிகாரியுடன் கிளம்ப ஆயத்தமாயினர். ஆனால் திடீரென தன் பூஜையை முடித்துக் கொண்ட ஸ்வாமிகள் வெளியே வந்தார். சிறைக்கைதிகள் தன்னைப் பார்ப்பதற்கு அனுமதித்தார். சற்றும் இதனை எதிர்பார்க்காத கைதிகள் ஆர்வத்துடன் அவரைக் காண ஓடினர். அப்போது கைதிகள் ஸ்வாமிகளிடம் ஒருமித்த குரலில் நாடு சுதந்திரமடைய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். ஸ்வாமிகளும், நாடு விடுதலை அடைந்து மக்கள் யாவரும் சுதந்திர வாழ்வு வாழ வேண்டும், என்று பிரார்த்தித்தார். தேசிய உணர்வு கொண்ட கைதிகளுக்கு பெரியவரின் சந்திப்பு உற்சாகத்தைத் தந்தது. அவர்களை ஆசிர்வதித்து பிரசாதமும் வழங்கி மகிழ்ந்தார். இந்நிகழ்வைப் பற்றி, அந்த ஆங்கிலேய அதிகாரி தன் டைரியில் துப்பாக்கி குண்டுக்கு கூட பயப்படாமல், அதை எதிர் நோக்க மார்பைத் திறந்து காட்டும் சுதந்திரப் போராட்ட கைதிகள், அந்த மஹா பெரியவரின் முன்னால், சாந்தமாக அடங்கி ஒடுங்கி நிற்பதை நான் இன்று கண்டேன். இந்த ஆன்மிகப்பணிவினை இந்தியாவில் மட்டும் தான் பார்க்க முடியும். எனக்குமே அப்பெரியவரைப் பார்த்த பிறகு நான் ஒரு சிறை அதிகாரி என்ற எண்ணமே மறந்து போனது. என் மனம் அதிகாரத்தில் இருந்து விலகி அன்பு மார்க்கத்திலும், பக்தி நெறியிலும் சென்றது. இனி அன்பு வழியே என் வழி, என்று குறிப்பிட்டுள்ளார்.