வெள்ளி, 13 மே, 2022

வாயு ஸ்தலமாகிய ‘ஸ்ரீகாளஹஸ்தி’ வரலாறு

வாயு ஸ்தலமாகிய ‘ஸ்ரீகாளஹஸ்தி’ வரலாறு...
 

ஸ்ரீ காளஹஸ்தி என்கிற பெயரை கேட்டவுடன் நமக்கு நினைவிற்கு வருவது ராகு - கேது பரிகார பூஜை செய்யும் ஸ்தலமாகும் என்பது தான்.

திருமணத்தடை நீங்க தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு ராகு - கேது பரிகார பூஜை செய்து வருகின்றனர். பஞ்சபூதங்களில் வாயுவிற்காக கட்டப்பட்ட இத்திருத்தலம் 1500 வருடங்களுக்கும் மேல் பழமையானது என்று கூறப்படுகிறது.

இதன் வரலாற்றை கேட்கையில் இப்படியும் ஒரு பக்தி இருக்க முடியுமா? என்கிற அளவிற்கு நம்மை வியப்பில் ஆழ்த்தி விடுகிறது. சைவத் ஸ்தலமான ஸ்ரீ காலஹஸ்தியில் சிவபெருமான் காளத்திநாதர் என்கிற பெயரோடு, ஞானப்பிரசன்னாம்பிகை தாயாரோடு அருள் பாலிக்கின்றார். பல நூறு ஆண்டுகளுக்கு முன் வனமாக இருந்த இந்த இடத்தில் வாயு லிங்கமாக தோன்றிய சிவபெருமானை வழிபட சிலந்தி ஒன்று தினமும் வருமாம்.

மழையில் நனைந்த சிவபெருமானைக் கண்ட அந்த சிலந்தி தன்னுடைய உமிழ் நீரில் இருந்து உருவாகும் சிலந்தி வலையை பின்னி வைத்ததாம். பெரும் இடி ஒன்று இடித்ததில் அந்த வலை எரிந்து சாம்பலானது. சிலந்தியால் அதை தாங்கிக் கொள்ள முடியாமல் இறந்து போனதாம். இதனால் அந்த சிலந்தியின் பக்தியை மெச்சிய சிவபெருமான் அதற்கு முக்தி கொடுத்தாராம்.

தினமும் நாகம் ஒன்று அந்த லிங்கத்தை ஆரத்தழுவி மாணிக்கங்களை கக்கி அர்ச்சனையாக செய்து வழிபடும். அதற்கு பின்னால் வரும் யானை ஒன்று தன் தும்பிக்கையால் நீரை வாரி இறைத்து அபிஷேகம் செய்யும். பின் மலர்களை பறித்து வந்து அர்ச்சனையும் செய்து வரும். இதனால் அந்த மாணிக்கங்கள் கீழே விழுந்து சிதறி விடுவது உண்டு. தொடர்ந்து இது போல் நடந்து கொண்டிருக்க அந்த நாகத்திற்கு சந்தேகம் வந்தது. யானை இது போல் செய்வதை அந்த நாகம் ஒரு நாள் பார்த்து விட்டது. உடனே கோபமுற்ற நாகம் யானையின் தும்பிக்கையினுள் சென்று விட்டு மூச்சடைக்க செய்தது. சுவாசிக்க முடியாமல் அந்த யானை பாறையில் மோதி மோதி கடைசியில் இரண்டும் இறந்து போனது. இவைகளின் பக்தியை மெச்சிய சிவபெருமான் இவர்களுக்கும் முக்தியை கொடுத்தார் என்று ஸ்தலபுராணம் எடுத்துரைக்கிறது.

இந்த தலத்தில் வீற்றிருக்கும் காளத்திநாதர் உருவத்தில் கீழே இரண்டு தந்தங்களும், இடையில் பாம்பும், பின்புறம் சிலந்தியும் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ என்பது சிலந்தியையும், காளம் என்பது நாகத்தையும், அத்தி என்பது யானையையும் குறிப்பதால் ஸ்ரீ காளஹஸ்தி என பெயர் பெற்று விளங்குகிறது. கோவிலைப்பற்றி பல குறிப்புகள் தேவாரப் பாடல்களும், புராணங்களும் தெளிவாக கூறுகிறது.

இங்கு வரும் பக்தர்களுக்கு எத்த


னை குறைகள் இருந்தாலும் உடனே நீங்குவதாக நம்பிக்கையுள்ளது.

திருப்பதி செல்பவர்கள் பெரும்பாலும் காளத்தி நாதரை வழிபடாமல் வீடு திரும்புவதில்லை.

அனைவரும் ஒரு முறையேனும் தரிசிக்க வேண்டிய திருத்தலங்களில் திருக்காளஹஸ்தி ஒன்று.

கருத்துகள் இல்லை: