வெள்ளி, 13 மே, 2022

குரு பாடல்கள்

குரு பாடல்-1

மறைமிகு கலைநூல் வல்லோன்
வானவர்க்கு ஆசான் மந்திரி
நறைசொரி கற்பகப்பொன்
நாட்டினுக்கு அதிபதியாகி
நிறைதனம் சிவிகை மன்றல்
நீடு போகத்தை நல்கும்
இறையவன் குரு வியாழன்
இருமலர்ப்பாதம் போற்றி போற்றி!

குரு பாடல் 2

அன்றால நீழற்கீழ் அருமறைகள் தானருளி
நன்றாக வானவர் மாமுனிவர் நாடோறும்
நின்றார வேத்து நிறைகழலோன் புனைகொன்றைப்
பொன்றாது பாடிநம் பூவல்லி கொய்யாமோ

குரு பாடல் 3

ஆலின்கீழ் அறங்களெல்லாம் அன்றவர்க்கு அருள்செய்து
நூலின் கீழ் அவர்கட்கெல்லாம்
 நுண்பொருளாகி நின்று
காலின்கீழ் காலன்தன்னைக்
கடுகத்தான் பாய்ந்து பின்னும்
பாலின்கீழ் நெய்யு மானார்
பழனத்தெம் பரமனாரே.

குரு பாடல் 4

குணமிகு வியாழ குருபகவானே
மணமுடன் வாழ மகிழ்வுடன் அருள்வாய்
பிரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா
கிரக தோஷமின்றி காத்தருள்வாயே

குரு பாடல் 5

பெருநிறை செல்வம் மேன்மை
பெற்றிடும் சுகங்கள் யாவும்
வருநிறை மரபு நீடி வாய்க்கும் சந்ததி தழைக்க
குருநிறை ஆடை ரத்னம்தான் பெற அருளும் தேவ
குருநிறை வியாழன் பொற்றாள்
குரைகழல் தலைக் கொள்வோமே.

குரு பாடல் 6

ஆலநிழல் கீழ் இருப்பதுவும் ஆய்வதறம்
ஆலம் அமுது செய்வ தாடுவதீ- ஆலம்
துறையுடையான் ஆனை உரியுடையான் சோற்றுத்
துறையுடையான் சோராத சொல்லு

குரு பாடல் 7

வேத நூல் தர்ம சாஸ்திரம்
மேன்மையை அறிந்தோனாகி
சாதனையால் கற்பகத்
தனிநாட்டின் இறைவனாகி
சோதியாய் குருவுமாகி
சொர்க்கத்தை மண்ணில் நல்கும்
ஆதியாம் குருவே! நின்தாள்
அடைக்கலம் போற்றி! போற்றி!!

குரு பாடல் 8

கல்லாலின் புடையமர்ந்து நான்மறை
ஆறங்கமுதல் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த
பூரணமாய் மறைக்கு அப்பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை
இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல்
நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்.

கருத்துகள் இல்லை: