வியாழன், 11 நவம்பர், 2021

ஏழுமலையான் பகுதி - ஐந்து

ஏழுமலையான் பகுதி - ஐந்து




லக்ஷ்மி ஒரு இடத்தில் இருக்கும் வரை தான் யாருக்குமே மதிப்பு... நம் வீட்டிலேயே எடுத்துக் கொள்வோமே! வேலைக்கு போகும் வரை மனைவி கணவனை கொண்டாடுவாள், பிள்ளைகள் ஒன்றாம் தேதியானால் சுற்றி சுற்றி வருவார்கள். வேலையில் இருந்து நின்ற பிறகு பென்ஷன் வாங்கினால் ஏதோ கொஞ்சம் மதிப்பிருக்கும். ஒன்று இல்லா விட்டால்... கண்டு கொள்வார் யார்?

லட்சுமி பிராட்டியார் பூலோகம் சென்று கொல்லாபுரத்தில் தங்கி விட்டதால் வைகுண்டத்தின் செல்வச்செழிப்பு அகன்றது. ஸ்ரீதேவி சென்று விட்டதால் தரித்திர தேவி உள்ளே புகுந்தாள். தேவர்களெல்லாம் கலங்கினார்கள். அவர்கள் திருமாலிடம், பெருமாளே! தாங்கள் லக்ஷ்மி தாயார் எங்கிருந்தாலும் கண்டு பிடித்து அவர்களைச் சமாதானம் செய்து மீண்டும் வைகுண்டம் அழைத்து வர வேண்டும். தேவலோகமே வறுமைக்கு ஆட்பட்டால் செல்வம் வேண்டி வணங்கும் நம் பக்தர்களுக்கு எப்படி வாரி வழங்குவது! உலக உயிர்களுக்கு படியளக்காவிட்டால் நமக்கு எப்படி மதிப்பிருக்கும்? என்றனர். திருமாலும், அவர்கள் முன்னால் நாடகமாட ஆரம்பித்து விட்டார்.

ஆமாம்... ஆமாம்... லக்ஷ்மி இங்கிருந்து செல்வதைத் தடுத்திருக்க வேண்டும். பிருகுவைக் கண்டித்திருந்தால் அவள் இங்கிருந்து சென்றிருப்பாளா? பின் விளைவுகளைப் பற்றி சிந்தியாமல் இருந்து விட்டேனே என வருத்தப்படுவது போல நடித்தவர் பூலோக சஞ்சாரத்துக்கு தயாராகி விட்டார். லக்ஷ்மி அங்கேயே இருந்திருந்தால் பூலோகத்தில் முனிவர்களின் கோரிக்கையை எப்படி நிறைவேற்ற முடியும்? கலியுகத்தில் நடக்கும் பாவங்களை எப்படி தடுக்க முடியும்? இந்தக் காரணத்தால் லக்ஷ்மிக்கு கோபம் வரச் செய்த திருமால் அவளுக்கு பூலோகம் செல்லும் மனநிலையை உண்டாக்கி விட்டு தானும் அங்கே செல்ல தயாரானார். தேவர்களே! லக்ஷ்மி எங்கிருந் தாலும் நான் அழைத்து வருகிறேன். அதுவரை பொறுமை காக்க வேண்டும் என்றவர் அவள் மறைந்திருக்கும் இடத்தை தேடியலைவது போல் பல இடங்களிலும் சுற்றினார்.

சீதையைப் பிரிந்த ஸ்ரீராமன் காட்டில் எப்படியெல்லாம் தேடியலைந்தாரோ! செடி, கொடிகளிடம் எல்லாம் என் சீதையைப் பார்த்தீர்களா! என்று கேட்டு புலம்பினாரோ அது போல திருமால் என் லக்ஷ்மியைப் பார்த்தீர்களா! என்று செடி, கொடிகளிடமெல்லாம் கேட்டுக் கொண்டே நடந்தார். எங்கு தேடியும் லக்ஷ்மி கிடைக்காமல் ஏழு மலைகளை உள்ளடக்கிய திருமலை என்னும் மலைக்கு வந்தார். அப்பகுதியில் ஆதிவராஹர் குடியிருந்தார். திருமால் எடுத்த அவதாரங்களில் பன்றி முகம் கொண்ட வராஹ அவதாரமும் ஒன்று. வராஹமாக அவதாரமெடுத்து பூமியைத் தோண்டி வேதங்களைக் கண்டெடுத்து பிரம்மாவிடம் ஒப்படைத்த பிறகு அதே வடிவில் திருமலையில் அவர் குடியிருந்தார். ஆதியில் தோன்றியவர் என்பதால், அவர் ஆதிவராஹர் எனப்பட்டார். இதனால், திருமலையில் அவர் தங்கியிருந்த இடமும் ஆதிவராஹ க்ஷேத்ரம் எனப்பட்டது. இந்த தலத்தை ஆதிவராஹ நரசிம்ம க்ஷேத்ரம் என்றும் அழைப்பர்.

நரசிம்மரும் இதே மலையை ஒட்டிய அஹோபிலத்தில் தன்அவதார காலத்தை முடித்து விட்டு தங்கியிருந்தார். திருப்பதி வெங்கடாசலபதியின் செல்வச்செழிப்புக்கு காரணமே இந்த நரசிம்மர் தான் என்ற கருத்தும் உண்டு. இங்கு வந்த திருமால் ஒரு புளியமரத்தில் இருந்த புற்றில் அமர்ந்து தவம் செய்ய ஆரம்பித்து விட்டார். திருமால் ஒருபுறம் லக்ஷ்மி ஒருபுறம் இருந்தால் உலக இயக்கம் என்னாகும்? இதை சரிசெய்ய எண்ணினார் கலக முனிவர் நாரதர். அவர் தன் தந்தையான பிரம்மாவிடம் சென்றார். தந்தையே! பிருகு முனிவர் செய்த சோதனையால் கோபமடைந்த லக்ஷ்மி தாயார் இப்போது கொல்லாபுரத்தில் இருக்கிறாள். திருமாலோ ஆதிவராஹ க்ஷேத்ரத்தில் தவத்தில் ஆழ்ந்து விட்டார். அவர் லக்ஷ்மியைக் காணாமல் அன்னம் கூட புசிப்பதில்லை. இப்படியே போனால் என்ன செய்வது? முதலில் திருமாலுக்கு அன்னம் புகட்ட வேண்டும். அதற்கு தாங்கள் தான் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார். பிரம்மா உடனடியாக சிவபெருமானிடம் சென்றார். நடந்த விஷயத்தைச் சொன்னார். மேலும் பெருமானே! நாம் இருவரும் பசு, கன்று வேடத்தில் செல்வோம். அவருக்கு பால் புகட்டி வருவோம் என்று வேண்டுகோள் விடுத்தார். மைத்துனருக்கு ஒரு பிரச்னை என்றால் சிவனுக்கு பொறுக்குமா? இப்போதும் கூட கிராமங்களில் மைத்துனன் இருந்தால் மலையேறி பிழைக்கலாம் என்பார்கள். இதன் பொருள் தெரியுமா?மைத்துனரான திருமால் திருமலையில் இருக்கிறார். அவரது பசி போக்க கைலாயமலையில் இருக்கும் சிவன், திருமலையில் ஏறப்போகிறார்.

இதனிடையே நாரதர் பூலோகம் சென்று கொல்லாபுரத்தில் தவத்தில் இருந்த லக்ஷ்மி தாயாரைச் சந்தித்தார். நாராயணா என்ற திருநாமம் முழங்க வந்த அவரை லக்ஷ்மி வரவேற்றாள். தாயே! தாங்கள் சிறு பிரச்னைக்காக கோபித்துக் கொண்டு வந்து விட்டீர்கள். நீங்கள் இல்லாமல் திருமாலால் ஒரு கணமாவது வைகுண்டத்தில் இருக்க முடியுமா? அவர் உங்கள் மீது கொண்டுள்ள அன்பைக் குறைத்து மதிப்பிட்டு விட்டீர்களே! தாங்கள் அவரைப் பிரிந்த ஏக்கத்தால் அவர் மனம் பட்ட பாடு தெரியுமா? அவர் உங்களைத் தேடி காடுகள், மலைகள், குகைகளில் எல்லாம் அலைந்தார். எங்கும் கிடைக்காமல் இப்போது திருமலையிலுள்ள ஆதிவராஹ க்ஷேத்ரத்தில் தங்கியுள்ளார். தங்களை எண்ணி புலம்பி அலைந்த அவர் சாப்பாடு, உறக்கம் ஆகியவற்றை மறந்து தாங்கள் கிடைக்க வேண்டுமென்பதற்காக ஒரு புளியமர பொந்தில் தவத்தில் ஆழ்ந்து விட்டார். தாங்கள் அவரைக் காப்பாற்ற உடனடியாக கிளம்ப வேண்டும் என்றார். லட்சுமிக்கு பகீரென்றது. அவசரப்பட்டு விட்டோமே என வருந்திய அவள் திருமாலைக் காப்பாற்ற முயற்சி எடுத்தாள்.

தொடரும்...


நவபுலியூர் தரிசனம் ஏன் ?

நவபுலியூர் தரிசனம் ஏன் ?

1. பெரும்பற்றப்புலியூர்
2. திருப்பாதிரிப்புலியூர்
3. எருக்கத்தம்புலியூர்
4. ஓமாம்புலியூர்
5. சிறுபுலியூர்
6. அத்திப்புலியூர்
7. தப்பளாம்புலியூர்
8. பெரும்புலியூர்
9. கானாட்டம்புலியூர்
நவபுலியூர.:சில உண்மைகள்

தற்காலத்தி உள்ள பலருக்கும் ஆலய தரிசனம், ஆன்மீக வழிபாட்டு முறைகள் என்பதோ, அவற்றின் முக்கியத்துவம் என்ன, அல்லது அது எப்படி துவங்கியது என்ற விவரங்களோ தெரிந்திருக்க முடியாது. அதில் நவபுலியூர் யாத்திரையும் அடங்கும். பூர்வ ஜென்மங்களில் மற்றும் இந்த ஜென்மத்திலும் அறிந்தோ, அறியாமலோ செய்த பிழைகளினால் ஏற்பட்ட கர்மாக்களை தொலைத்துக் கொள்ள முன் ஒரு காலத்தில் இந்த யாத்திரையை பலரும் மேற்கொண்டு இருந்திருக்கின்றார்கள். முக்கியமாக வாழ்நாளின் இறுதி கட்ட நிலையில் வாழ்ந்திருந்த முதியோர்கள் தமக்கு பிறப்பு இறப்பில் இருந்து விடுதலை தரும் மோட்ஷ கதியை அடைய வேண்டும் என்பதற்காக இந்த யாத்திரையில் கலந்து கொண்டுள்ளார்கள்.

இப்படிப்பட்ட புனித யாத்திரையை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக *மஹரிஷி வியாக்ரபாதர்* மற்றும் *மஹரிஷி பதஞ்சலி* யும் மேற்கொண்டு உள்ளார்கள். மோட்ஷத்துக்கு செல்ல தடையாக இருக்கும் தமது பூர்வஜென்ம வினைப் பயன்களினால் ஏற்பட்ட கர்மாக்கள் விலக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன் சிவபெருமானை துதித்தபடி பயணம் மேற்கொண்டார்கள். அப்படி பயணம் மேற்கொண்ட அந்த இரு மஹரிஷிகளுக்கு தரிசனமும் தந்து இந்த யாத்திரையின் மகத்துவத்தையும் சிவபெருமானே அவர்களுக்கு போதித்ததாகவும், அதன் மூலமே இந்த யாத்திரையின் மகத்துவம் வெளி உலகிற்கு தெரிய வந்தது என்பதாகவும் கூறுகின்றார்கள்.

வியாக்ரபாதர் மற்றும் பதஞ்சலி எனும் மஹரிஷிகள் சிவபெருமானின் முடிவற்ற பேரானந்தம் தரும் அற்புத நடனத்தைக் கண்டு களித்த பின் தமக்கு மோட்ஷமும் கிடைக்க அவர் அருள் புரிய வேண்டும் என்ற ஆவலில் சிதம்பரத்துக்கு சென்றபோது, நடன முடிவில் அவர்களுக்கு காட்சி தந்த சிவபெருமான் தான் ஸ்வயம்புவாக எழுந்துள்ள ஒன்பது தலங்களைக் குறித்து அவர்களுக்கு விளக்கிக் கூறிய பின் அந்த தலங்களுக்கு சென்று தம்மை வழிபட்ட பிறகு அவர்கள் *திருப்பட்டூரில் உள்ள பிரும்மதேவரை* வழிபட்ட பின் முடிவாக ஸ்ரீரங்கத்தில் *ஸ்ரீ ரங்கநாத பகவானாக எழுந்துள்ள விஷ்ணு பகவானையும்* தரிசனம் செய்ய வேண்டும் என்றும் ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ ரங்கநாத பெருமானை தரிசனம் செய்த உடனேயே மோட்ஷத்துக்கு தடையாக இருக்கும் கர்ம வினைகளை தான் அகற்றுவேன் என்றும், அதன் பின், மும்மூர்த்திகளில் மோட்ஷத்திற்கு செல்ல அருள் தரும் சக்தியை கொண்டுள்ள ஸ்ரீ ரங்கநாத பெருமான் அவர்களுக்கு மோட்ஷம் கிடைக்க அருள் புரிவார் என்பதாகவும் கூறினாராம்.

நவபுலியூர் யாத்திரையில் முதலில் ஒன்பது சிவாலயங்களில் தரிசனம் செய்த பின்னரே பிரும்மதேவர் மற்றும் விஷ்ணுவை தரிசனம் செய்ய வேண்டும் என்ற தத்துவத்தின் அடிப்படைக் காரணம் என்ன? நவ என்றால் ஒன்பது என அர்த்தம். ஆகவே ஒன்பது என்பது சிவபெருமானின் ஒன்பது ஆலயங்களையும் அந்த ஒன்பது ஆலயங்களில் உள்ள ஒன்பது கிரகங்களின் நாயகர்களையும் (நவகிரகங்கள்) குறிக்கின்றதாகும். ஒவ்வொருவருடைய வாழ்க்கையின் சுக துக்கங்களை நிர்ணயிப்பது மூல தெய்வங்களின் சார்பாக செயல்படும் நவக்கிரகங்களின் தாக்கம்தான். ஆகவே இந்த ஒன்பது சிவாலயங்களில் அவருக்கு பணிவிடை செய்தபடி அமர்ந்துள்ள நவக்கிரகங்களுக்கு தம்மை தேடி வந்து பிரார்த்தனை செய்யும் மக்களின் கர்ம வினைகளை களையும் விசேஷ சக்திகளை சிவபெருமான் தந்துள்ளாராம்.

பூர்வ ஜென்மங்களிலும், வாழும் ஜென்மத்திலும் அவரவர் செய்த பாவ புண்ணிய பலன்களுக்கு ஏற்பவே கர்மவினைகள் ஒருவரை தாக்குகின்றன. அந்த கர்மாக்களின் அளவுக்கேற்ப தண்டனை தரும் சக்தி ஒவ்வொரு நவக்கிரக நாயகர்களுக்கும் தனித்தனியே தரப்பட்டு உள்ளது. ஒவ்வொருவருடைய வாழ்நாளிலும் குறிப்பிட்ட காலங்கள் நவக்கிரக நாயகர்களின் ஆட்சியில் இருக்கின்றன. என்னென்ன வினைப் பலன்களை அவர்களால் அழிக்க முடியும் என்ற விதிப்படி இயங்கும் வகையில் நவகிரகங்களின் சக்திகள் வரையுறுத்தப்பட்டு உள்ளன. ஆகவே ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் அனுபவிக்க வேண்டிய கர்மவினைப் பலன்களை, தம்முடைய ஆட்சி காலத்தில் அவர்கள் இருக்கும்போது நவகிரக நாயகர்கள் நிறைவேற்றுகிறார்கள். இதனால்தான் கர்மவினைப் பலங்களினால் கஷ்ட நஷ்டங்களை அனுபவிப்பவர்கள் நவகிரக ஆலயங்களுக்கு சென்று நவகிரகங்களை வழிபட்டு அவர்களுடைய அருளை வேண்டி நிற்கிறார்கள்.

ஆலயங்களில் பொதுவாக நவகிரகங்கள் அனைத்தும், வெவ்வேறு திசைகளை நோக்கியபடி ஒரே பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கும். அதே போல நவக்கிரகங்கள் அவற்றுக்கென நிர்மாணம் செய்யப்பட்டு உள்ள தனித்தனி ஆலயத்திலும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன. ஒவ்வொருவரின் வாழ்க்கையில் ஏற்படும் கர்மவினைகளின் தாக்கத்தைக் குறைத்துக் கொள்ள கிரகங்களுக்கு உரிய குறிப்பிட்ட தினங்களில் ஆலயங்களுக்கு சென்று நவகிரகங்களை பூஜித்து ஆராதிக்கின்றார்கள். ஆனால் அதே நவக்கிரங்களும் தம் பெற்று இருந்திருந்த சில சாபங்களை களைந்து கொள்ள சில பிரதான தெய்வங்களை ஆராதித்து சாப விமோசனம் பெற்றார்கள். அதனால் எந்த ஆலயத்தில் அவை சாப விமோசனம் பெற்றனவோ அங்குள்ள மூலவருக்கு பணிவிடை செய்தபடி அங்கும் அந்த நவகிரகங்கள் தங்கி உள்ளார்கள். அதனால் அந்த ஆலயங்களில் உள்ள மூலவர் தனக்கு பணி புரியும் அந்த நவகிரகங்களுக்கு கர்மவினைப் பலன்களை நீக்கும் மேலும் சில விசேஷ சக்திகளை தம்மிடம் உள்ள சக்தியில் இருந்து கொடுத்து அவற்றை தம்முடைய சார்ப்பில் நிறைவேற்றுமாறு கட்டளை இட்டு உள்ளார்கள். அதனால் அங்குள்ள நவக்கிரகங்களுக்கு கர்மாக்களை அகற்றும் விசேஷ சக்தி மற்ற ஆலயங்களில் அவை கொண்டுள்ள சக்திகளை விட அதிக அளவில் இருக்கும். நவபுலியூர் ஆலயங்களில் உள்ள நவகிரகங்களை குறிப்பிட்ட தினங்களில் மட்டுமே சென்று ஆராதித்து பூஜிக்க வேண்டியது இல்லை. தனி ஆராதனை முறைகளும் கிடையாது. அந்த ஆலயங்களில் சென்று மூலவரை வழிபட்ட பின் அங்குள்ள நவகிரகங்களை வழிபடும்போது அதுவரை அவர்களுக்கு சேர்ந்துள்ள அனைத்து கர்மாக்களையும் அங்கேயே அவை விலக்கி விடுகின்றன. இதனால்தான் நவபுலியூர் யாத்திரை மோட்ஷம் பெறுவதற்காக மட்டும் அமைந்து இருக்காமல் கர்ம வினைப் பலன்களை அகற்றும் தலங்களாகவும் உள்ளன என்பது தெளிவாகும்.

பண்டிதர்களின் கூற்றின்படி இந்த தத்துவ உண்மைகளை வெளிப்படுத்தவே ஒரு நாடகமாடி சிவபெருமான் வியாக்ரபாதர் மற்றும் பதஞ்சலி மகரிஷிகளை பூமியிலே பிறப்பு எடுக்க வைத்து, தான் ஸ்வயம்புவாக எழுந்து பல அவதார தோற்றங்களில் உள்ள அந்த ஒன்பது ஆலயங்களுக்கு சென்று தரிசிக்கும் வகையில் இந்த நவபுலியூர் யாத்திரையை மேற்கொள்ள வைத்து இருக்கின்றார் என்கின்றார்கள்.

இந்த நவபுலியூர் யாத்திரை 12 ஆம் நூற்றாண்டுவரை மிகப் பிரபலமான யாத்திரையாகவே இருந்து வந்துள்ளது. ஆனால் சைவ மற்றும் வைஷ்ணவ வழிபாடு என்ற பிரிவினை பேதத்தினால் இந்த யாத்திரை பெரும் அளவில் தடைப்படலாயிற்று என்றாலும், உண்மையை உணர்ந்திருந்த சிறு அளவிலான சைவ மற்றும் வைஷ்ணவ பக்தர்களால் தொடர்ந்து அந்த யாத்திரை கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது என்பதும் உண்மையே.

இந்த யாத்திரைக்கு செல்பவர்கள் பதஞ்சலி முனிவர் யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். பாற்கடலில் பகவான் மஹாவிஷ்ணுவின் படுக்கையாக இருந்த தெய்வீக நாகமான ஆதிசேஷன் ஒருமுறை சிவபெருமானுடைய நாட்டியத்தைக் காண ஆசைப்பட்டு மகாவிஷ்ணுவிடம் தனது ஆசையை வெளிப்படுத்த மகாவிஷ்ணு அவரிடம் கூறினார் ‘ஆதிசேஷா நானே சிவபெருமானின் நடனக் காட்சியைக் கண்டு சொக்கிப் போய், அந்த ஆனந்தத்தை அடக்க முடியாமல் உம்மிடம் சிவபெருமானின் நடனத்தின் அற்புதத் தன்மையைக் குறித்துக் கூறினேன். அந்த மனநிறைவை, மன மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தையே இல்லை எனும்போது அதைக் கேட்கும் அனைவரும் அந்த நடனத்தைக் காண ஆசைப்படுவார்கள் என்பதிலும் ஐயம் இல்லை. ஆகவே என் மகிழ்ச்சியைக் கேட்ட பின் அதைப் பார்க்க உமக்கு ஆவல் ஏற்படுவதில் வியப்பில்லைதான். அதற்கு நான் தடையாக இருப்பது தவறு. ஆகவே நீயும் பூலோகம் சென்று தக்க நேரத்தில் பாதி மனிதன், பாதி நாகம் எனும் உருவத்தில் பதஞ்சலி எனும் உருவம் கொண்டு பிறந்து அந்த உருவில் யோகக் காலையில் வல்லுவனாக இருக்கும் வகையில் யோகக் கலையின் அனைத்து நுணுக்கங்களையும் பெற்றுக் கொண்ட பின் சிவபெருமானின் அற்புத நடனத்தையும் கண்டு களிப்பாய்” என ஆசிகளை வழங்கினார்.

விஷ்ணு பகவான் தொடர்ந்து கூறினார் “இப்போது நீ அதே பதஞ்சலி எனும் உருவம் கொண்டு நாகலோகத்துக்குப் போ. அதற்குள் ஒரு மலையும் அந்த மலைக்குள் ஒரு துவாரமும் உள்ளது. அந்த துவாரத்தின் வழியே நீ சென்றால் சிதம்பரத்தை (தில்லைவானம்) அடையலாம். அங்கு வியாக்ரபாத முனிவர் என்பவர் பேரந்தம் தரும் சிவபெருமானின் நடனக் காட்சியை காண வேண்டும் என்று சிவபெருமான் ஸ்வயம்புவாக எழுந்துள்ள சிவலிங்கத்துக்கு பூஜை செய்து கொண்டு உள்ளார். நீயும் அங்கு சென்று அவரோடு சேர்ந்து பூஜை செய்தால் சிவ தரிசனத்தை பெற்று அவரது நடனத்தையும் கண்டு களிக்க முடியும்”

அடுத்து விஷ்ணு பகவான் ஆதிசேஷனுக்கு ஆசிகளை அளித்து அவரை பூமியிலே பதஞ்சலியாக பிறப்பு எடுக்க அனுப்பி வைக்க அவரும் பதஞ்சலி மாமுனிவராக பிறப்பு எடுத்து வியாக்ரபாத மகரிஷியை சந்தித்தார். அவர்கள் இருவரும் சேர்ந்து சிவபெருமானை துதித்து தவம் இருந்து சிவபெருமானின் தரிசனத்தை பெற்று, அவரது ஆனந்த நடனத்தையும் கண்டு களித்த பின் முடிவில் சிவபெருமானிடம் இருந்து போதனைகளையும் பெற்றார்கள். அதன் முடிவில் அவர்கள் இருவரும் வாழ்வின் இறுதிக்கு கட்ட நிலையை அடைந்திருந்தார்கள். சிவபெருமான் அவர்களுக்கு கொடுத்து இருந்த போதனையின்படி அவர்கள் சிவபெருமான் ஸ்வயம்புவாக தோன்றி இருந்த அனைத்து ஆலயங்களுக்கும் சென்று தரிசனம் செய்த பின் முடிவாக மோட்ஷத்தையும் அடைந்தார்கள்.

அடுத்து வியாக்கியபாதர் யார் என்பதை தெரிந்து கொள்வோம். முன் ஒரு காலத்தில் மத்தியனதின முனிவர் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் மனதில் சிவபெருமானைத் தவிர வேறு எந்த சிந்தனையே இல்லாமல் இருந்தவர் என்றாலும் விஷ்ணு பகவான் மீது ஆழ்ந்த பற்றுதலும் கொண்டிருந்தவர். ஒருநாள் அவரிடம் அவரது மகன் வியாக்ரபாத மகரிஷி வினைப்பயன்களில் இருந்து விடுதலை பெற்று மோட்ஷம் அடையும் வழிமுறையைக் கூறுமாறு வேண்டிக் கேட்டதும், மத்தியனதின முனிவர் அவரை தில்லைவனத்துக்கு சென்று தவம் இருந்து அங்கு சிவபெருமானை வணங்கி துதித்து வந்தால் அவர் அவருக்கு மோட்ஷம் கிடைக்க அருள் புரிவார் என்றும், அப்படி அவர் தோற்றம் தந்தால் பேரானந்தம் தரும் சிவபெருமானின் நடனத்தையும் காண அவருடைய அருளைக் கேட்டுப் பெறுமாறு அறிவுரை கொடுத்தார்.

அதுவரை பால முனிவர் என்ற பெயரில் இருந்த மகரிஷி வியாக்ரபாதரும் தந்தை கூறியபடி பல ஊர்கள் வழியே சென்று சிதம்பரத்தை அடைந்தார். தில்லைவனத்தை அடைந்தவர் சிவகங்கை எனும் குளத்தின் அருகே இருந்த ஆலமரத்தின் அடியில் அமர்ந்து கொண்டு அங்கு தானாகவே எழுந்திருந்த சிவலிங்கத்தை வணங்கி வரலானார். தில்லை எனும் பெயர் கொண்ட மரங்கள் சூழ்ந்த அடர்ந்த காடாக அது இருந்ததினால் அந்த ஊரின் பெயரும் தில்லைவனம் என்று ஆயிற்று.

அங்கிருந்த வனப் பகுதிக்குச் சென்று மரங்களிலும் ஏறி தினமும் பல பூக்களை பறித்து வந்து அந்த லிங்கங்களுக்கு பூஜை செய்து வந்தபோது, நாளடைவில் பூக்கள் கிடைப்பதும் அரிதாயிற்று. மரங்களில் ஏறினால் மரத்தின் முட்கள் அவ்ருடைய உடலில் குத்தி வேதனை செய்தன. அவர் மன உறுதி பெற்றிருந்தது போல இயற்கையை எதிர்த்து நிற்க அவருடைய உடல் உறுதி படவில்லை. மனதில் வேதனை அடைந்தார். சிவபக்தனின் மனக் குமுறலைக் கேட்ட சிவபெருமான் மனம் மகிழ்ந்து மரத்தின் மீது சிரமம் இன்றி ஏறி பூக்களைப் பறிக்க புலிக்கு உள்ளதை போன்ற கால் மற்றும் கண்களைக் கொடுத்து அருள் புரிந்தார். அதனால் வியாக்கிய என்றால் புலி என்றும் பாதர் என்றால் பாதத்தைக் கொண்டவர் என்றும் பொருள் தரும் வகையில் புலியைப் போன்ற உடல் அமைப்பைக் கொண்ட அவர் வியாக்ரபாதர் என்ற பெயரைப் பெற்றார்.

இப்படியாக வியாக்ரபாதர் தன்னுடன் பதஞ்சலி மஹரிஷியையும் அழைத்துக் கொண்டு சிவபெருமான் கூறியபடியே சிதம்பரத்தில் துவங்கி ஒன்பது சிவாலயங்களில் அவரை தரிசனம் செய்த பின் இறுதியாக திருப்பட்டூர் மற்றும் ஸ்ரீரங்கம் ஆலயங்களில் தரிசனம் செய்த பின் ஆத்ம சமாதி அடைந்து மோட்ஷத்தை அடைந்தார்கள். இதனால்தான் புலிக்கால் கொண்ட வியாக்ரபாதர் துதித்த ஒன்பது தலங்கள் நவபுலியூர் தலங்கள் என்ற பெயரை பெற்றன.
திருப்பட்டூர் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் வியாக்ரபாதரின் சமாதி உள்ளது. அதை போல மகரிஷி பதஞ்சலியின் சமாதி பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் உள்ளது. திருப்பட்டூரில் பகவான் பிரும்மாவை வணங்கித் துதித்தப் பின் மகரிஷி பதஞ்சலியின் சமாதியில் வணங்கித் துதிக்க வேண்டும். அதன் பின் அங்கிருந்து கிளம்பி அருகிலேயே உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்துக்கு சென்று அங்குள்ள மகரிஷி வியாக்ரபாதர் சமாதியிலும் வணங்கித் துதிக்க வேண்டும். கடைசியாக ஸ்ரீரங்கம் ஆலயத்துக்கு சென்று ஸ்ரீரங்கநாதரை வணங்கித் துதித்து மோட்ஷம் அளிக்குமாறு வேண்டிக் கொண்டு நேராக தம் வீட்டிற்கு சென்று விட வேண்டும். பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் சிவபெருமானிடம் இருந்து சாப விமோசனம் பெற்றார் பிரும்மதேவர். ஒருகாலத்தில் படைப்புத் தொழிலில் இருந்த பிரும்மா ஆணவத்துடன் நடந்து கொண்டபோது சிவபெருமான் அவருடைய படைப்புத் தொழிலை தடை செய்யும் வகையில் சாபம் தந்து விட்டார். இந்த ஆலயத்தில் சிவபெருமானை வணங்கித் துதித்து அந்த சாபத்தில் இருந்து விடுதலை பெற்ற பிரும்மாவுக்கு மீண்டும் படைக்கும் தொழில் கிடைத்தது என்பதினால் இந்த ஆலயத்தில் தமது ஜாதக புத்தகத்துடன் வந்து, அதை பிரும்மா மற்றும் சிவபெருமான் சன்னதியில் வைத்து பூஜை செய்தபின் எடுத்துச் சென்றால், அனைத்து பாபங்களும் விலகி மீண்டும் மகிழ்ச்சி நிறைந்த மறுவாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இந்த யாத்திரையை மேற்கொள்ளும் பக்தர்கள் யாத்திரை காலத்தில் முடிந்த அளவு சைவ உணவருந்தி, முழு நம்பிக்கையுடன் பக்தியோடு யாத்திரையை மேற்கொண்டால் அனைத்து கர்மாக்களை விலகி மோட்ஷம் பெற வழி கிடைக்கும் என்பதாக நம்பிக்கை. நவபுலியூர் யாத்திரையை செய்து முடித்ததுமே வாழ்வில் புதிய பொலிவு ஏற்படுவதையும், குழந்தை செல்வம் இல்லாதவர்களுக்கு குழந்தை செல்வம் கிடைப்பதையும், நடைபெறாமல் தடைபட்டுக் கொண்டே உள்ள திருமணங்கள் எதிர்பாராத விதத்தில் நடப்பதையும், பணத் தட்டுப்பாடுகள் விலகுவதையும் பலரும் கண்கூடாக அனுபவித்து இருக்கின்றார்கள் என்பதில் இருந்தே இந்த யாத்திரையின் மகத்துவம் புரியும். நாம் இந்த யாத்திரையை மேற்கொள்ளும்போது நம்மை அறியாமலேயே நம்முடன் மகரிஷி வியாக்ரபாதர் மற்றும் மகரிஷி பதஞ்சலி எனும் இருவரும் நமக்கு வழிகாட்டும் விதத்தில் நம்முடன் பயணிக்கின்றார்களாம்.

துலா ஸ்நான ஸங்கல்பம்


துலா ஸ்நான ஸங்கல்பம்  அச்ச - ஸ்வச்ச - லஸத் - துகூலவஸனாம் பத்மாஸனாத்யாயினீம் ஹஸ்த - ந்யஸ்த - வராபயாப்ஜ - கலஸாம் ராகேந்து - கோடி - ப்ரபாம் பாஸ்வத் - பூஷண - கந்த - மால்ய - ருசிராம் சாரு - ப்ரஸன்னானனாம் ஸ்ரீகங்காதி - ஸமஸ்த - தீர்த்த - நிலயாம் த்யாயாமி காவேரிகாம்   காவேரீ ஸ்நான ஸங்கல்ப:  ஆசமனம்: அச்சுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம:   கேசவா + தாமோதரா   ஶூக்லாம் + ஸாந்தயே, ஓம் பூ: + பூர்புவஸ்ஸுவரோம்   ததேவ லக்னம்  + அங்க்ரியுகம் ஸ்மராமி அபவித்ர: பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா, யஸ்மரேத் புண்டரீகாக்ஷம், ஸபாஹ்ய, அப்யந்தர: ஶூசி: மானஸம் வாசிகம், பாபம், கர்மணா, ஸமுபார்ஜிதம், ஶ்ரீராம, ஸ்மரணேனைவ, வ்யபோஹதி நஸம்ஸய: ஶ்ரீராம ராமராம திதிர்விஷ்ணு: ததாவார: நக்ஷத்ரம், விஷ்ணுரேவச யோகஶ்ச கரணஞ்சைவ ஸர்வம் விஷ்ணுமயம், ஜகத், ஶ்ரீகோவிந்த கோவிந்த, கோவிந்த அத்யஶ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராக்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய, அத்யப்ரும்மண: த்விதீய பரார்த்தே ஸ்வேத, வராஹகல்பே, வைவஸ்வத, மன்வந்தரே, அஷ்டாவிம்ஶதி, தமே, கலியுகே, ப்ரதமேபாதே, ஜம்பூத்வீபே, பாரதவருஷே பரதகண்டேமேரோ: தக்ஷிணே பார்ஶ்வே ஶகாப்தே, அஸ்மின்வர்த்தமாணே, வ்யாபஹாரிகே, ப்ரபவாதி, ஷஷ்டி, ஸம்வத்ஸராணாம், மத்யே   ப்லவ நாம ஸம்வத்ஸரே த³க்ஷிணாயனே ஶரத்³ ருʼதௌ துலா மாஸே ஶுக்ல பக்ஷே அத்³ய அஷ்டம்யாம்ʼ ஶுப⁴திதௌ² ப்⁴ருʼகு³ வாஸர யுக்தாயாம்ʼ ஶ்ரவிஷ்டா நக்ஷத்ர யுக்தாயாம்ʼ வ்ருʼத்³தி⁴ நாம யோக³ யுக்தாயாம்ʼ ப⁴வ நாம கரண யுக்தாயாம்ʼ ஏவங்கு³ண விஶேஷண விஶிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமாணாயாம் அஷ்டம்யாம்ʼ ஶுப⁴திதௌ²  மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வார ஸ்ரீ பரமேஶ்வர ப்ரீத்யர்த்தம் பகவத: நாராயணஸ்ய பரமேஶ்வரஸ்ய அஶிந்த்யயா அபரிமிதயா ஶக்த்யா ப்ரியமானஸ்ய மஹாஜலௌகஸ்ய மத்யே பரிப்ரமதாம் அநேக கோடி ப்ருஹ்மாண்டானாம் ஏகதமே ஶதுர்தஶ புவனாந்தர்கதே பூமண்டலே ஸப்தத்வீபமத்யே ஜம்பூத்வீபே நவவர்ஷமத்யே பாரதவர்ஷே நவகண்டமத்யே பரதகண்டே ஹிமாசல - கைலாஸ - விந்த்யாசலாதி - அநேகபுண்யஶைல - ஶிகரிதே தண்டகாரண்ய - விந்த்யாரண்ய - வேதாரண்யாதி - அநேகபுண்யாரண்ய - வனஸ்ரீ - பாஸ்வரே அஸ்மின் பாரததேஶே   த்ரிராத்ரம் ஜாஹ்னவீதீரே பஞ்சராத்ரம் து யாமுனே  ஸத்ய: புனாதி காவேரீ பாபம் ஆ- மரணாந்திகம்   இதி ப்ரஸ்தாயாம் ஸ்ரீவைகுண்ட - ரூபாந்தர - ஸ்ரீரங்க - க்ஷேத்ர - மண்டிதாயாம்.  ஏவமாதிபஹுகுணவிசேஷணவிசிஷ்டாயாம் அஸ்யாம் காவேரீ மஹாநத்யாம் ஸமஸ்த ஹரிஹர தேவதா குருசரண ஶ்ரோத்ரிய ஸந்நிதௌ ப்ரஹ்மண த்விதீயபரார்தே பஞ்சாசத் அப்ததௌ ப்ரதமே வர்ஷே ப்ரதமே மாஸே ப்ரதமே பக்ஷே ப்ரதமே திவஸே அக்னி த்விதீயே யாமே த்ருதீயே முஹுர்த்தே ஸப்தமே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்சதிதமே கலியுகே ப்ரதமே பாதே அஸ்மின் வர்த்தமாணே வ்யாபஹாரிகாணாம் ப்ரபவாதீனாம் ஷஷ்ட்யா: ஸம்வத்ஸராணாம் மத்யே நாமஸம்வத்ஸரே அயனே ருதௌ மாஸே பக்ஷே ஶுபதிதௌ வாஸர யுக்தாயாம் நக்ஷத்ர யுக்தாயாம் யோக கரண யுக்தாயாம் அஸ்யாம் ஶுபதிதௌ துலாகதே தேவகுரௌ புஷ்கர புண்யகாலே அஸ்மாகம் ஸர்வேஷாம் க்ஷேம - ஸ்தைர்ய - வீர்ய - விஜய - ஆயு: - ஆரோக்ய - ஐஸ்வர்யாணாம் அபிவ்ருத்த்யர்த்தம் தர்ம அர்த காம மோக்ஷ ரூப சதுர்வித பல புருஷார்த்த ஸித்யர்த்தம் இஷ்ட காம்யார்த ஸித்யர்த்தம் பகவதோ ப்ருஹஸ்பதே: புண்யகால ப்ரயோஜக சங்கரமண கர்த்து: தேவானாம் ச ருஷீணாம் ச குரும் காஞ்சன ஸந்நிபம் புத்திபூதம் த்ரிலோகேசம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்  இதி ப்ரணுதஸ்ய பூஜாம் ததனு யதாசக்தி விஹிதானி தானானி அன்யானி ச தர்மகார்யாணி யதாஸம்பவம் கரிஷ்யே

புதன், 10 நவம்பர், 2021

ஏழுமலையான் பகுதி - நான்கு

ஏழுமலையான் பகுதி - நான்கு

பகவானின் மார்பில் எட்டி உதைத்தார் பிருகு. மஹா லட்சுமி எங்கிருக்கிறாள்? பெருமாளின் மார்பிலே இருக்கிறாள். தந்தையை மிதித்தது கூட மன்னிக்கத் தகுந்த குற்றம், இங்கே தாயார் மிதி பட்டிருக்கிறாள். அவளை மிதித்தது கொடிய பாவம். தாயை அவமதிப்பவனுக்கு நிச்சயம் தண்டனை உண்டு. இங்கோ அவளை மிதிக்கவே செய்திருக்கிறார் பிருகு. அவருக்கு கண் போய் விட்டது.

ஐயையோ! அப்படியானால் எல்லாருமே கோபக்கார தெய்வங்கள் தானே! கண்ணைப் பறித்துக் கொண்டாரே பெருமாள் என எண்ணி விடாதீர்கள். பெருமாள் முகத்திலுள்ள கண்ணைப் பறிக்கவில்லை. பிருகுவுக்கு கால்களில் கண்கள் உண்டு. அது ஞானக்கண். அதன் மூலம், எதிர்காலத்தில் பிறருக்கு என்ன நடக்கப்போகிறது என்பதை அவர் கணித்துச் சொல்லி விடுவார். இதனால் எல்லார் ஜாதகமும் தன் கையில் என்ற மமதை தான் பிருகுவின் இந்த ஆர்ப்பாட்டங்களுக் கெல்லாம் காரணம். ஆனால் எல்லார் எதிர்காலத்தையும் தெரிந்து வைத்திருந்த அவர் தன்னைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் விட்டது தான் இப்போது இந்த அவலத்துக்கு காரணம்.

ஞானக்கண் இருப்பதால் தானே பிருகு ஆட்டம் போடுகிறான். பெற்ற தாய்க்கு சமமான, உலகத்துக்கே படியளக்கிற லட்சுமி தாயாரை எட்டி உதைத்தானே! இவனுக்கு எதற்கு ஞானக்கண்! மற்றவர்கள் சொன்னார்களே என்பதற்காக தெய்வங்களை இவன் சோதித்ததற்குப் பதிலாக அவர்களில் எல்லாரையும் இறைஞ்சி யார் முதலில் வருகிறாரோ அவருக்கு யாகபலனைக் கொடுப்போம் என்று முடிவெடுத்திருந்தால் இவன் ஞானி! பதிலுக்கு ஆணவத்தால் அறிவிழந்த இவனுக்கு இதுவே தக்க தண்டனை எனக்கருதி  பெருமாள் பிருகுவின் காலிலுள்ள கண்ணை அவர் அறியாமலேயே பறித்து விட்டார். ஆனால் ஏதும் அறியாதவர் போல் சயனத்தில் இருந்படியே முனிவரே! மன்னிக்க வேண்டும். தாங்கள் இங்கு வந்ததை நான் கவனிக்கவில்லை. ஐயோ! தங்கள் திருப்பாதங்கள் என்னை மிதித்த போது என் மீதுள்ள ஆபரணங்களால் தங்கள் கால்களில் காயம் ஏதும் ஏற்பட்டதா? அமருங்கள், அமருங்கள் எனது மஞ்சத்தில் அமரும் தகுதி தங்களுக்குண்டு. தாங்கள் வந்த விபரம் பற்றி தெளிவாகச் சொல்லுங்கள். ஆவன செய்கிறேன் என்று ஆறுதல் மொழி சொன்னார்.

பிருகுவுக்கே என்னவோ போல் ஆகிவிட்டது. ஆஹா... இவரல்லவோ பொறுமையின் திலகம். இவரை எட்டி உதைத்து விட்டோமே! பதிலுக்கு இவரை யாகபலனை வாங்க வரும்படி யாசித்திருக்கலாமே! என நினைத்த போது கண்ணைப் பிடுங்கிய இடத்தில் வலிக்க ஆரம்பித்தது. அவர் அம்மா... அப்பா... எனக் கதறினார். அதே நேரம்  இறைவனை மிதித்ததற்காக தனக்கு இந்த தண்டனையும் தேவை தான் என்றபடியே லட்சுமி நரசிம்மரை துதிக்க ஆரம்பித்தார். மனிதனுக்கு ஒரு கஷ்டம் வந்து விட்டால் உடனே லட்சுமி நரசிம்மரை பிடித்துக் கொள்ள வேண்டும். அவரை நினைத்து லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே எனச் சொன்னால் கஷ்டம் பறந்தோடி விடும். தன் பக்தன் பிரகலாதானுக்கு ஒரு கஷ்டம் என்றவுடன் எங்கும் பரவிநின்ற அவர், அவன் குறிப்பிட்ட தூணில் இருந்து வெளிப்பட்டு பாதுகாத்தவர்.

அப்படிப்பட்ட கருணாமூர்த்தி தன் கண்ணெதிரில் சயனித்திருக்க  லட்சுமி நாராயணான அவரை லட்சுமி நரசிம்மராகக் கருதிய பிருகு  லட்சுமி நரசிம்மா! அறியாமல் செய்த தவறுக்கு என்னை மன்னிக்க வேண்டும் என்றார். மஹா விஷ்ணு அவரிடம் சமாதானமாக, கவலை வேண்டாம் முனிவரே! பக்தனின் பாதம் பட நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். தங்கள் பிரச்னையைச் சொல்லுங்கள், என்றார். பிருகுவும் யாகபலனை பெற பூலோகம் வரவேண்டும் என்று சொல்ல அவ்வாறே ஆகட்டும் என பெருமாள் அருள் பாலித்தார். பிருகு புறப்பட்டார். மஹா லட்சுமிக்கோ கடும் கோபம். இங்கே என்ன நடக்கிறது? இந்த முனிவர் என்னை எட்டி உதைக்கிறார்? நீங்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கிறீர்களே! [முனிவரின் கண்ணைப் பறித்தது லட்சுமிக்கு தெரியாது] இவரை இதற்குள் அழித்திருக்க வேண்டாமா? நம்பி வந்த மனைவியைக் காப்பாற்றுவது கணவனின் கடமை. இந்த தர்மத்தைக் கடைபிடிக்காத உங்களுடன் வாழ எனக்கு விருப்பமில்லை. நான் பூலோகம் செல்கிறேன். என்னை அங்கு வந்து பாருங்கள் என்று சொல்லி விட்டு சயனத்தில் இருந்து எழுந்து வேகமாக எழுந்தாள் லட்சுமி தாயார்.

பகவான் அவளைச் சமாதானம் செய்தார். லட்சுமி! பொறுமைக்கு இலக்கணமான பெண்களுக்கு கோபம் வரக்கூடாது. பிருகு யார்? நம் பக்தன்! பக்தர்கள் நமது குழந்தைகள். பல குழந்தைகளை பூமிக்கு அனுப்பினோம். சிலர் நம்மை வணங்குகிறார்கள், சிலர் தூஷிக்கிறார்கள். நம்மை தூஷிக்கிற குழந்தைகளுக்கு தான் நாம் ஏராளமான செல்வத்தைக் கொடுக்கிறோம் அவர்களையும் கருணையுடன் பார்க்கிறோம். காரணம் என்ன! அவன் தூஷணையை கை விட்டு நற்கதிக்கு திரும்ப வேண்டுமே என்பதற்காகத் தான்! பிருகு ஒரு சோதனைக்காகவே இங்கு வந்தான்.

அந்த சோதனையில் வெற்றி பெற நான் அவனுக்கு உதவினேன். நீயும் அவனை ஆசிர்வதிக்காமல் விட்டு விட்டாயே என்றார். லட்சுமி அவரிடம் தாங்கள் சொல்லும் சமாதானத்தை ஏற்க முடியாது. கணவனிடம் என்று பாதுகாப்பு கிடைக்கவில்லை என ஒரு பெண் உணர்கிறாளோ, அதன் பின் அவனை நம்பிப் பயனில்லை. நான் தங்களை விட்டுப் பிரிகிறேன். மேலும் நீர் சந்தர்ப்பவாதி எந்த விஷயமாக இருந்தாலும் சமாதானம் கூறி மாயம் செய்து தப்பித்து விடுவீர்! என்னை அவமதித்த பிருகுவைத் தண்டித்தே தீருவேன் என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி விட்டாள்.

பூலோகத்திலுள்ள ஒரு புண்ணியத்தலத்துக்கு வந்தாள். ஊரின் பெயரிலேயே பேரழகு.... ஆம்... அவ்வூரின் பெயரிலேயே ஜீவகாருண்யம் இருந்தது... அதுதான் கொல்லாபுரம்.

தொடரும்....


ஏழுமலையான் பகுதி - மூன்று

ஏழுமலையான் பகுதி - மூன்று

பிருகு முனிவர் சத்யலோகம் சென்ற போது அங்கே அன்னை சரஸ்வதியுடன் உரையாடிக் கொண்டிருந்தார் பிரம்மா. அனர்கள் வெள்ளை பொற்றாமரை சிம்மாசனத்தில் வீற்றிருந்தனர். அங்கே ஏராளமான மகரிஷிகள் அமர்ந்திருந்தனர். தேவரிஷிகள், பிரம்மரிஷிகளும் அவர்களில் அடக்கம். அனைவரும் வேதத்தின் பொருளை பிரம்மா மூலம் கேட்டுக் கொண்டிருந்தனர். பிருகு முனிவர் சோதிக்க வந்த வரல்லவா! பிரம்மாவுக்கு கோபமூட்டினாலும், தன்னை வரவேற்கிறாரா அல்லது எடுத்தெறிந்து பேசுகிறாரா என பரீட்சை வைக்கும் பொருட்டு, பிரம்மாவுக்கும், சரஸ்வதிக்கும் சம்பிரதாயத்துக்காக வணக்கம் கூட தெரிவிக்காமல் அங்கிருந்த ஆசனத்தில் மிகவும் கர்வத்துடன் அமர்ந்து கால்மேல் கால் போட்டுக் கொண்டார்.

பிரம்மாவுக்கு கோபம் இந்த பிருகு வந்தான், ஒரு வணக்கம் கூட சொல்லவில்லை எனக்குத்தான் சொல்ல வேண்டும், இங்கே அவனை விட உயர்ந்த விஸ்வாமித்திரர், வசிஷ்டர் போன்ற பிரம்மரிஷிகளெல்லாம் வீற்றிருக்கிறார்கள். அவர்களுக்கு சொல்லியிருக்கலாம். இவனது வாய் பேசுவதற்கு காரணமான சரஸ்வதிக்கு சொல்லியிருக்கலாம். இவனை ஒரு கை பார்த்து விட வேண்டியது தான் என்றெண்ணியவராய், முகத்தில் கடும் கோபத்தைத் தேக்கி, ஏ பிருகு! என் வம்சத்தில் பிறந்த நீ, பிறருக்கு மரியாதை செய்வது என்ற சாதாரண தர்மத்தைக் கூட பின் பற்றவில்லை. இப்படிப்பட்ட, உன்னால் மற்ற உயர்ந்த தர்மங்களை எப்படி காப்பாற்ற முடியும்? இங்கே இருக்கும் விஸ்வாமித்திரர், வசிஷ்டர் போன்றவர்களெல்லாம் நாராயணனையே வழி நடத்தியவர்கள். இதோ இருக்கிறாரே! அத்திரி! அவர் மும்மூர்த்திகளையும் குழந்தையாக்கிய பெருமையை உடையவர். இதோ இருக்கிறாரே! ஜமதக்னி! அவருடைய மகனாக பெருமாளே அவதரித்தார். பரசுராமராக இருந்து இவரது உத்தரவுக்குக் கட்டுப்பட்டு, பெற்றவளையே வெட்டித்தள்ளினார். இதோ இங்கே பவ்யமாக அமர்ந் திருக்கிறாரே, கவுதமர்! அவரது மனைவியை இழிவுபடுத்திய காரணத்துக்காக இந்திரனுக்கே சாபமிட்டவர்... இப்படிப் பட்ட உயர்ந்தவர்கள் முன்னால் நீ கொசுவுக்கு சமமானவன். அப்படியிருந்தும் இந்த சபையை அவமதித்தாய் என்று சத்தமாகப் பேசினார். பிருகுவுக்கு வந்த வேலை முடிந்து விட்டது. ஆனாலும் அவர் பிரம்மனுக்கு ஒரு சாபத்தைக் கொடுத்தார். நான் முனிவனாயினும் மனிதன், நீயோ தெய்வம்.. அதிலும் படைப்பவன், உனக்கு பொறுமை இல்லை. நான் ஒரு தேர்வுக்காக இங்கு வந்தேன், அந்தத் தேர்வில் நீ தோற்றாய் வருகிறேன் என்று கிளம்பினார்.

அடுத்து அவர், சிவலோகத்தை அடைந்தார். அங்கே நந்தீஸ்வரர் வாசலில் நின்றார். சிவபெருமான் தன் மனைவி பார்வதியுடன் தனித்திருந்தார். வாசலில் பூதங்களும், துவார பாலர்களான காவலர்களும் பாதுகாத்து நின்றனர். நந்திதேவர் வாசலை மறித்துக் கொண்டிருந்தார். பிருகுவோ இவர்கள் யாரையும் மதிக்கவில்லை. அங்கே நடந்த தியான வைபவத்தை பார்வையிட்டபடியே அத்துமீறி புகுந்தார். நந்தியிடமோ, பிற காவலர்களிடமோ அனுமதி பெறவில்லை. சிவன் கோபத்தின் பிறப் பிடமல்லவா! தாங்கள் தனித்திருந்த போது உள்ளே நுழைந்த பிருகுவிடம் நீ பிரம்ம வம்சத்தில் பிறந்திருந்தும் தர்மங்களை அறியாமல் உள்ளே வந்து விட்டாய். தம்பதியர் தனித்திருக்கும் போது அங்கே செல்லக்கூடாது என்ற எளிய தர்மம் கூட புரியாத உனக்கு தபஸ்வி என்ற பட்டம் எதற்கு? இதோ! உன்னைக் கொன்று விடுகிறேன் என்றவராய் திரிசூலத்தை எடுத்தார். ஆனால்  அன்னை பார்வதி சிவனைத் தடுத்து விட்டார். நாம் தனித்திருக்கும் வேளையில் நம் பிள்ளை தெரியாமல் வந்து விட்டது. உலக உயிர்கள் அனைத்துமே நம் பிள்ளைகள் தானே! அதிலும் பிருகு தவத்தால் உயர்ந்தவன். எந்நேரமும் இறைநாமம் சொல்பவன். அவன் தெரியாமல் ஏதோ செய்து விட்டான் என்பதற்காக இப்படி சூலத்தை ஓங்குகிறீர்களே என்று பிருகுவுக்கு சாதகமாகப் பேசினாள். ஆனாலும் பிருகு இந்த சமாதானத்தைக் கண்டு கொள்ளவில்லை. அவர் வந்த வேலை முடிந்து விட்டது. கோபப்படுவது போல் நடித்து அங்கிருந்து வைகுண்டம் சென்றார்.

ஹரி ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரம் எங்கும் ஒலித்துக் கொண்டிருந்தது. அன்னை மஹாலட்சுமியின் கடாட்சத்தால் எங்கும் நவரத்தினங்களின் ஒளி வெள்ளம் பாய்ந்தது. அது ஒரு அருமையான நகரம். அந்த நகரத்தில் மாளிகைகளெல்லாம் தங்கத்தால் எழுப்பப் பட்டிருந்தன. வைகுண்டத்திலுள்ள ஒரு அரண்மனையில் மஹா விஷ்ணு துயிலில் இருந்தார். மஹாலட்சுமி அவரது திருவடிகளைப் பிடித்துக் கொண்டிருந்தாள். பிருகு வந்தது மஹா விஷ்ணுவுக்கு தெரியும். ஆனாலும் அவன் மாயவன் ஆயிற்றே! எந்த பரீட்சை வைத்தாலும் தேறி விடுவானே! படிக்கிற குழந்தைகள் மஹா விஷ்ணுவை தினமும் வணங்க வேண்டும். அவர் கல்வியின் அதிபதியான ஹயக்ரீவராகத் திகழ்கிறார். ஞானானந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம் ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவ முபாஸ்மகே என்ற ஸ்லோகத்தை தினமும் சொன்ன பிறகு  கேசவா... கேசவா... கேசவா என ஏழு தடவைகள் தொடர்ச்சியாக சொன்ன பிறகு கல்விக்கூடத்துக்கு கிளம்பும் குழந்தைகள் மிகப்பெரிய தேர்ச்சி பெறுவார்கள். பெருமாள் கோயிலுக்குப் போனால் முதலில் தாயாரை வணங்க வேண்டும். அப்படி அல்லாமல் நேராகப் பெருமாளை போய் வணங்கினால் கோரிக்கை அவ்வளவு எளிதில் நிறைவேறாது. பிருகுவோ மஹாலட்சுமியைக் கண்டு கொள்ளவே இல்லை. அது மட்டுமல்ல! ஏ நாராயணா! பிரம்மலோகத் துக்கும், சிவலோகத்துக்கும் போய் அவமானப்பட்டு உன் லோகம் வந்தேன். நீயோ எழக்கூட இல்லாமல் தூங்கிக் கொண்டிருக்கிறாய். பக்தனின் கோரிக்கைகளை கவனிக்காமல் இப்படி உறங்கினால் உலகம் என்னாவது? எழுந்திரு  என கத்தினார். மஹா விஷ்ணு அது காதில் விழாதது போல் இருந்தார். எல்லாரும் பகவானின் திருவடி தன் மீது படாதா என நினைப்பார்கள். இங்கே பகவானோ பக்தனின் திருவடி தன் மீது படாதா என காத்திருந்தார். இதோ! அது பட்டுவிட்டது.

தொடரும்


செவ்வாய், 9 நவம்பர், 2021

ஏழுமலையான் பகுதி - இரண்டு

 ஏழுமலையான் பகுதி - இரண்டு
 



ஒருவன் பசியால் மயக்கமடைந்து விட்டால், உடனே என்ன செய்வோம்? ஒரு உருண்டை சோறை எடுத்து அவன் வாயில் ஊட்டினால், அது தொண்டைக்குள் இறங்குமா? அதனால், முதலில் சிறிது தண்ணீரை அவன் முகத்தில் தெளிக்கிறோம். அவன் திடுக்கிட்டு கண் விழித்துப் பார்க்கிறான். உடனே சிறிது நீரை அவனுக்குப் புகட்டுகிறோம். இப்போது, அவன் பெருமூச்சு விடுகிறான். அதாவது, நிற்க இருந்த மூச்சு தண்ணீரின் தூண்டுதலால் மீண்டும் துளிர்த்தது. நாரம் என்றால் தண்ணீர். இந்தச் சொல்லில் இருந்தே நாரதர் என்ற வார்த்தை பிறந்தது.

பாவம் செய்தவர்களின் ஆதிக்கத்தால், உலகம் தத்தளித்த போது உயிர் கொடுக்க வந்தவர் நாரதர். அவர் கங்கைக்கரையில் வசித்த முனிவர்களில் தலை சிறந்தவரான காஷ்யபரைச் சந்தித்தார். அப்போது, காஷ்யபரின் தலைமையில் மிகப் பெரும் யாகம் நடந்து கொண்டிருந்தது. மிகப்பெரிய தபஸ்விகள் எல்லாம் இணைந்து, உலகத்தின் நலன் கருதி இந்த யாகத்தை நடத்திக் கொண்டிருந்தனர். நாரதர் மிகுந்த ஆனந்தமடைந்தார். காஷ்யபரே! தங்கள் தலைமையில் நடக்கும் இந்த யாகத்தின் நோக்கம் புனிதமானது. ஆனால், எனக்கொரு சந்தேகம், என்று தன் கலாட்டாவை ஆரம்பித்தார்.

நாரதர் பேச ஆரம்பித்தாலே கலகம் தானே! மகரிஷியே! தாங்கள் யாகம் நடத்துகிறீர்கள் சரி... இந்த யாகத்தின் பலனை எந்த தெய்வத்துக்கு கொடுத்தால், உலகம் சேஷமமடையும் என நினைக்கிறீர்கள்! யாராவது தேவருக்கு இதை அர்ப்பணிக்கப் போகிறீர்களா? அல்லது சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய முப்பெரும் தெய்வங்களில் யாருக்கேனும் தரப் போகிறீர்களா? உங்கள் யாகத்தின் குறிக்கோள் உலக அமைதி. அதைத் தரவல்லவர் யாரோ அவருக்கு இந்த யாகத்தின் பலனை அளித்தால் தானே சரியாக இருக்கும், என்றார். இந்தக் கேள்வியால், காஷ்யபரே சற்று மிரண்டு விட்டார் என்றால், மற்ற மகரிஷிகளின் நிலையைச் சொல்லவும் வேண்டுமோ?அவர்கள் பதில் சொல்லத் தெரியாமல் விழித்தனர். முக்காலமும் அறிந்த முனிவரே! சர்வலோக சஞ்சாரியே! இந்தக் கேள்வியின் நாயகனான நீரே அதற்கும் பதிலும் சொல்லி விட்டால் நன்றாக இருக்கும், என்று அவர் தலையிலேயே பாரத்தைத் தூக்கி வைத்து விட்டார் காஷ்யப மகரிஷி.

நாரதருக்கு சிண்டு முடிய சரியான சந்தர்ப்பம் கிடைத்து விட்டது. முனிவர்களே! கர்வம், கோபம், சாந்தம் என்ற மூன்று குணங்களில் சாந்தமே உயர்ந்தது. எவரொருவர் எந்தச் சூழ்நிலையிலும் கோபம் கொள்ளாமல், உணர்ச்சிவசப்படாமல் இருக்கிறாரோ, அவர் எந்தச் செயலிலும் வெற்றி வாகை சூடுவார். அவ்வகையில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகியோரில் யார் சாந்தகுணம் மிக்கவரோ அவருக்கே யாகத்தின் பலனைக் கொடுங்கள், என்றார். முனிவர்கள் சிக்கிக் கொண்டனர். அதெப்படி முனிவரே! மூன்று ரத்தினங்கள், முக்கனிகள்... இவை நம் கண் முன் தெரிந்தால் எதை வேண்டாமென்று ஒதுக்க முடியும். அனைவருமே சமவல்லமை உடையவர்கள் என்பதை பல சந்தர்ப்பங்களில் அறிந்திருக்கிறோம். அப்படியிருக்க, இதில் யார் சிறந்தவர் என்று சோதித்துப் பார்த்தால், அது நெருப்போடு விளையாண்ட கதையாக அல்லவா இருக்கும், என்றனர்.

ஆமாம்... இது கஷ்டமான காரியம் தான்! ஆனாலும், உங்கள் யாகம் வெற்றி பெற வேண்டுமே! அதற்கு இந்த பரீட்சையை செய்து தானே ஆக வேண்டும். அப்படி செய்தால் தானே ஏதாவது ஒரு தெய்வம் இந்த பூமிக்கு வரும். முந்தைய யுகங்களில் தெய்வங்கள் பல அவதாரங்கள் எடுத்து பூமிக்கு வந்தனர். தர்மத்தை நிலைநிறுத்தினர். கலியுகத்தில் இறைவன் அர்ச்சாவதாரம் (கடவுள் மனிதனாகப் பிறத்தல்) செய்ய வேண்டுமென்றால், அதற்கு தகுந்தவர் யார் என்பதைத் தெரியாமல் யாகம் செய்து என்ன பலன்? என்றார்.

நாரதரின் பேச்சு முனிவர்களைக் குழப்பினாலும், அவர் சொல்வதிலும் ஏதோ அர்த்தமிருப்பதாகப்பட்டது. உடனடியாக, அவர்கள் தங்களில் சிறந்த ஒரு முனிவரை இந்த சோதனைக்காக அனுப்புவது குறித்து விவாதித்தனர். ஒரு பெரிய மனிதரைப் பார்க்க போக வேண்டுமென்றால் அவரைச் சென்று சந்திப்பவர் சகல ஞானங் களிலும் விபரம் அறிந்தவராக இருக்க வேண்டும். அந்தப் பெரிய மனிதர் ஏதாவது தவறாகச் சொன்னால் கூட, அவரை எதிர்த்து வாதிடும் திறமையும் இருக்க வேண்டும். மனிதனின் வாழ்வியலுக்கே இப்படியென்றால், மூன்று கடவுள்களைச் சந்திக்கச் செல்பவர் மகாதிறமைசாலியாக இருக்க வேண்டுமே! அதற்குத் தகுந்தவர் பிருகு என்னும் மாபெரும் தபஸ்வி என முடிவு செய்யப்பட்டது.பிருகு முனிவர் ஆனந்தமடைந்தார். சில தபஸ்விகளுக்கே இத்தகைய யோகம் கிடைக்கும். தங்களைத் தரிசிக்க மகா தபஸ்விகளுக்கு இறைவன் அருளும் மாபெரும் பாக்கியம் அது. அதே நேரம், இந்த பிருகு முனிவர் எப்படிப்பட்டவர் தெரியுமா? மகா அகம்பாவி. யாரையும் மதிக்க மாட்டார். அவருடைய தவவலிமை உயர்ந்தது தான்! ஆனால், ஆணவம் இருக்குமிடத்தில் பக்திக்கு இடமில்லையே! அவருக்கு ஆணவம் ஏற்படக் காரணம் என்ன தெரியுமா?

எல்லோருக்கும் முகத்தில் இரண்டு கண் இருக்கும். ஆனால், இவருக்கு காலில் ஒரு கண் இருந்தது. அது ஞானக்கண், பிறர் வாழ்வில் என்ன நடக்கப் போகிறது என்பதை முன் கூட்டியே உணர்த்தும் கண். இந்தக் கண்ணைப் பெற்றதால் அவருக்கு திமிர். எல்லார் வாழ்வும் தன் கையில் இருப்பது போன்ற ஒரு நினைப்பு.

நாரதருக்கு பிருகு மீது மிகுந்த அன்புண்டு. மகாதபஸ்வியான இவர், ஆணவத்தால் அழிந்து விடக் கூடாதே என்ற நல்லெண்ணத்தில், அவரது கர்வத்தை பங்கம் செய்யும் விதத்தில், பிருகு முனிவரே தெய்வலோகங்களுக்கு செல்லலாம் என ஒப்புக்கொண்டார். பின்னர், அங் கிருந்து விடை பெற்று, பிற லோகங்களுக்கு புறப்பட்டுச் சென்றார். பிருகு முனிவரும் தெய்வலோகங்களுக்கு ஆனந்தமாகப் புறப்பட்டார்.

தொடரும்

ஏழுமலையான் பகுதி ஒன்று


இன்று முதல் ஏழுமலையான் தொடர் ஆரம்பம்..‌.
 

ஏழுமலையான் பகுதி - ஒன்று
 

பாரதத்தில் நைமிசாரண்யம் என்ற காடு இருக்கிறது. நமது தேசத்தின் கிழக்குப்பகுதியில் கோல்கட்டாவுக்கும், டேராடூனுக்கும் இடையில் உள்ளது இந்தக் காடு. தற்காலத்தில் பெருமாளின் 108 திவ்யதேசங்களுக்கு சென்று வருகின்றனர். அந்த தேசங்களில் இதுவும் ஒன்று. இந்த காட்டையே பெருமாளாக கருதி வழிபடுகிறார்கள்.
 

திருமங்கையாழ்வார் இங்கே சென்றிருக்கிறார். இவ்வூர் பற்றி பாசுரம் பாடியுள்ளார். தற்போது இங்கே பெருமாளுக்கு கோயில் இருக்கிறது.இந்த வனத்துக்கு புராணங்களில் மிகுந்த முக்கியத்துவம் உண்டு. எவ்வித இடைஞ்சலும் இன்றி தவம் செய்ய சிறந்த இடம் எது என்று திருமாலிடம் முனிவர்கள் கேட்டனர். பெருமாள் தனது சக்கரத்தை உருட்டி விட்டு, இது எங்கே போய் நிற்கிறதோ அந்த இடமே சிறந்த இடம் என்றார். சக்கரத்துக்கு நேமி என்ற பெயர். ஆரண்யம் என்றால் காடு. அந்தச்சக்கரம் உருண்டு சென்று விழுந்த இடம் நேமிஆரண்யம் என்றானது. பின்னர் இதுவே நைமிசாரண்யம் ஆகி விட்டது.இந்தக் காட்டில் சூதர் என்ற முனிவர் வசித்தார். இவரே புராணங் களுக்கு மூலகர்த்தா. 

வியாசர் எழுதிய பதினெட்டு புராணங்களையும் மற்ற முனிவர்களுக்கு உபதேசித்தவர் இவர். இதுதவிர, எல்லா தெய்வங்களின் வரலாற்றையும் சொல்லியிருக்கிறார்.ஒருமுறை, நைமிசாரண்யத்து முனிவர்கள் சூதமுனிவரை அணுகி, சுவாமி! தாங்கள் எங்களுக்கு, வேங்கடம் என்னும் மலையில் குடிகொண்டுள்ள சீனிவாசனின் வரலாறை உரைக்க வேண்டும், என்றனர்.சூதருக்கு மிகுந்த மகிழ்ச்சி.சீனிவாசனின் கதையைக் கேட்டால் சகல பாவங்களும் நீங்கி விடும். நீங்கள் சரியானதொரு சந்தர்ப்பத்தை எனக்கும் தந்ததுடன், உங்களுக்கும் முக்தி கிடைக்கும். பக்தியுடனும், கவனமாகவும் யார் இதைக் கேட்கிறார் களோ, அவர்களுக்கு மறுபிறப்பில்லை. நீங்கள் முற்றும் துறந்த முனிவர்கள். உலகவாழ்வு பற்றிய கவலையில்லாதவர்கள். எனவே, உங்கள் கவனம் சிதற வாய்ப்பில்லை. இல்லறத்தில் இருப்பவர்களும் கூட, இந்தக் கதையைக் கவனமாக கேட்டால் போதும். அவர்களுக்கு செல்வவளம் சித்திக்கும், வாழ்வுக்குப் பின் ஆனந்தமயமான வைகுண்டத்துக்கும் செல்லும் பாக்கியம் பெறுவார்கள், என்று சொல்லி கதை சொல்ல ஆரம்பித்தார்.
 

இந்த உலகிற்கு சீனிவாசன் வருவதற்கு காரணமே நாரத முனிவர் தான். இவர் ஓரிடத்தில் இருக்கமாட்டார். நாரம் என்றால் தண்ணீர். ஆம்... பசியாலும், களைப்பாலும் மயக்கமடையும் ஒருவனுக்கு கொஞ்சம் தண்ணீர் கொடுத்தால் போதும். போகும் உயிர் திரும்பிவிடும். நாரதரும் அப்படியே. கலகங்கள் செய்தாவது உயிர்களுக்கு நன்மை தந்து விடுபவர். அதனால் தான் தண்ணீர் போல் உயிரூட்டுபவர் என்ற பெயரில் அவரது திருநாமம் அமைந்தது. தேவர்களின் நல்வாழ்வுக்காக, அசுரர்களிடையே கலகத்தை உருவாக்கி அல்லது அவர்களை இக்கட்டில் சிக்க வைக்கும் உபாயங்களை சமயோசிதமாகச் செய்யும் தைரியசாலியும் கூட. பிரம்மனின் புத்திரர் இவர்.
 

எந்நேரமும் நாராயண மந்திரத்தைச் சொல்பவர்.அவர் ஒருநாள் தன் தந்தையைக் காண பிரம்மலோகம் வந்தார். அப்போது, இந்திரனின் தலைமையில் தேவர்களும் தங்கள் குறைகளைச் சொல்ல அங்கு வந்திருந்தனர். ஆனால், சரஸ்வதியின் வீணாகானம் கேட்ட அவர்கள் மெய்மறந்து நின்றனர்.நாரதர் பிரம்மாவிடம், தந்தையே! திருமால் கிருஷ்ணாவதாரம் எடுத்த பிறகு பூமியில் மீண்டும் பிறக்கவில்லை. இதனால் பாவிகள் உலகத்தில் அதிகரித்து விட்டனர். இதற்கு மூல காரணம் செல்வம் சேர்க்கும் ஆசை. செல்வ ஆசை மண்ணாசையையும், பெண்ணாசையையும் தூண்டுகிறது. உலக மக்களில் நல்லவர்களைக் காப்பாற்றவும், பாவிகளைச் சீர்திருத்தவும் மீண்டும் அவர் அவதாரம் எடுத்தால் தான் பூலோகம் பிழைக்கும். எனவே, திருமாலை இவ்வுலகில் பிறக்கச் செய்வதற்குரிய கோரிக்கையை தாங்கள் தான் அவரிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.
 

படைத்தவருக்கு, உயிர்களைப் பாதுகாப்பதிலும் பொறுப்பு இருக்கிறதல்லவா? என்றார். பிரம்மா நாரதரிடம், மகனே! நீ கலகக்காரன் என்பது ஊரறிந்த உண்மை. இன்று தந்தையிடமே கலகம் செய்ய வந்திருக்கிறாய் போலும்! நீ சகல லோகங்களிலும் சஞ்சரிப்பவன். சகல சக்திகளையும் தவத்தின் மூலம் பெற்றுள்ளாய். நீ நினைத்தாலே சகலமும் நடந்து முடிந்து விடும். நாராயணனின் திருப்பாற்கடல் முன்னால் நாங்கள் செல்ல முடியாது. ஜெய, விஜயர்கள் தடுத்து விடுவார்கள். பகவானின் அனுமதி பெற்று கரையில் நின்றே அவரைத் தரிசிக்க முடியும். நீ அப்படியா? அவரது திருவடி தரிசனத்தை கடலில் நின்றே காண்பவன் நீ.
மேலும், உன் வாயில் நாராயண நாமம் ஒலித்துக் கொண்டே இருக்கும். சக்திமிக்க உன்னாலேயே அது முடியுமே! நீயே போய் நாராயணனைப் பார், என்றார்.
 

ஒருவரிடம் ஒரு விஷயத்தைச் சொல்லும் முன்பு, பிறர் சொன்னதை வைத்து சொல்லக்கூடாது. அதில் முன்பின்னாக விஷயங்கள் இருக்கும். நேரில் போய் பார்த்து கேட்டறிந்தால் சரியான தகவல்களைப் பெறலாம். நாராயணனிடம் புகார் சொல்லும் முன்பு, பூலோகத்தின் நிலைமையை நேரில் கண்டறியவும், நாராயணன் அங்கு பிறப்பதற்கு ஏற்ற இடத்தையும், அவரைப் பிறக்கப்போவதை முன்கூட்டியே முனிவர்களுக்கு அறிவிக்கவும் நாரதர் பூலோகம் வந்து சேர்ந்தார்.எத்தனையோ லோகங்கள் இருப்பதாக புராணங்களில் சொல்லப்பட்டாலும், இந்த உலகத்தின் பெயரில் தான் பூ இருக்கிறது. பூ மணக்கும் தன்மையும், வாடும் தன்மையும் உடையது. மலர்ந்த பூவைக் காணும் போது, மனம் மகிழ்கிறது. இதுபோல், நல்லவர்கள் பலர் தங்கள் செயல்பாடுகளால் இவ்வுலகை மகிழச் செய்கிறார்கள். ஆனால், இதே உலகில் பிறந்த வேறுசிலரோ, தங்கள் செயல்பாடுகளால் உலகை வாடச் செய்கிறார்கள்.
 

கெட்டவர்கள் செய்யும் கைங் கர்யத்தால் உலகமே வாடத்தானே செய்கிறது! இதனால், இந்த உலகை பூலோகம் என்றார்கள்.இத்தகைய அருமை யான உலகத்தை வாழச்செய்ய வந்தார் நாரதர். மற்ற தேவர்கள் இங்கு வந்திருக்கலாமே. அவர்கள் பூமிக்கு வராமல் இவர் இங்கு வந்த காரணம் என்ன?
 

தொடரும்...

வியாழன், 5 ஆகஸ்ட், 2021

அக்னி

அக்னி

காற்றின் வகையாக தசவாயுக்களும் அவற்றின் 7 பிரிவுகளும் எப்படி நம்மையும் இந்த பிரபஞ்சத்தையும் வழி நடத்துகின்றதோ ! அதே போல அக்னியும் பலவகையாக நம்மையும் நம் செயல்களையும் வழி நடத்தி சாட்சியாய் ஆதராமாய் உள்ளது.

கிட்டதட்ட 27 வகையான அக்னி உண்டு 27 நட்சத்திர கணக்காட்டம்.

கார்ஹபத்யம், ஆஹவனீயம், தக்‌ஷிணம், நிர்மந்த்யம், வைத்யுதம், சூரம், ஸ்ம்வர்த்தம், லவுகீகம், ஜடாரம், விஷகம், க்ரவ்யாத், க்‌ஷேமவான், வைஷ்ணவம், தஸ்யுமான், பலதம், சாந்தம், புஷ்டம், விபாவஸு, ஜ்யோதிஸ்மான், பரதம், பத்ரம், ஸ்விஷ்டக்ருத், வஸுமான், க்ருது, ஸோமம், பித்ருமான், அங்கிரஸ் என்பன...

இதில் ஒன்னு ரெண்டுதான் நமக்கு தெரியும்.

உதாரணமா முதல் மூனு அக்னியையும் நித்யம் அக்னி ஹோத்திரம் பண்ணறவங்க ஆராதிப்பாங்க.💥

ஆக்சுவலா யாகம் பண்ணும்போது யூப கம்பம் நடுவாங்க. அது சரியா 21 முழம் இருக்குமாறு வெப்பாங்க... அது கணக்கு என்னான்னா... முதல்  மூனு அக்னிக்கும் ரிஷிகள் 7பேருக்கும் கணக்கு பண்ணி 21 முழம் இருக்கறதா சொல்லுவாங்க..

பசுவின் முகத்தில் இந்த 3 அக்னி இருக்கறதா கணக்கு. விபாவஸு அக்னி அஸ்ட வசுக்களில் ஒருவரா இருக்கார்.⚡️⚡️⚡️

ஔபாசன கர்மாவை பண்ணும் போது க்ருதுவை ஆராதிப்பங்கன்னு நினைக்கேன்... (சரியா தெரியல... தெரிஞ்சவங்க சொல்லலாம்).

எது எப்படியோ நமக்கு முக்கியமான அக்னி ஜடாரம்தான்🔥🔥🔥 ஏன்னா அதுதான் நாம சாப்பிடும் ஆகாரத்தை எல்லாம் ஜீரணம் செய்யுது . அது மட்டும் வேலை செய்யல... நோ அவுட்கோயிங் ... நமக்கெல்லாம் குதிரை வால் மயிர் நுனியின் ஆயிரத்தில் ஒரு பங்குதான் அந்த ஜடார அக்னி இருக்காம். அதுக்கே இப்ப்டி சாப்புடறோம்...

பீமசேனருக்கும் அவரின் அம்சமான மத்வருக்கும் இந்த ஜடாரம் கட்டை விரல் அளவுக்கு இருந்ததா சொல்லுவாங்க. அதனால்தான் எம்புட்டு போட்டாலும் அவிகளுக்கு பத்தாம போகுது. எல்லாத்தையும் முழுங்கிடுவாங்க. அதனாலே பீமருக்கு விருகோதரன்ன்னு பேர்.

அதான் பெரும்பாலும்  அந்தகால பெண்கள் காலம்ப்றம் அடுப்பை பத்த வெச்சி அட்சதையை போட்டு நமஸ்காரம் பண்ணிதான் அன்றைய சமையல்  தொடங்கினாங்க...

ஆனா இன்னைக்கு ... நோ கமெண்ட்ஸ்🙅🤦‍♂️🤫



ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2021

உபநயனம்

உபநயனம்....

உத்திராயனத்தில் செய்வது சிறந்ததாக இருக்கும்.... தை மாதம் முதல் ஆனி மாதம் முடிய உத்திராயனம். யஜுர் வேதிகள் சுக்ராஸ்தமனம் இல்லாத காலத்திலும், ருக் வேதிகள் குரு அஸ்தமனம் இல்லாத காலத்திலும், ஸாம வேதிகள் செவ்வாய் அஸ்தமனம் இல்லாத காலத்திலும், சுக்கிரன், குரு, செவ்வாய் நீச மில்லா காலங்களிலும்
செய்ய வேண்டும்.

வேதம் பயிலக்கூடாத நாட்களிலும் உபநயனம் செய்ய க்கூடாது.
உபநயன லக்னத்திற்கு எட்டாமிடத்தில் எந்த கிரஹமும் இருக்க கூடாது. பையனுக்கு சந்திராஷ்டம தினத்திலும் செய்ய கூடாது.
பையனின் சஷ்டாஷ்டக ராசியிலும் லக்னமாக வைக்க வேண்டாம்.
சுக்ல பக்ஷம் சிறந்தது. ஜன்ம சந்திர லக்னங்கள் இல்லாத நாட்களில் செய்ய வேண்டும். தாரா பலம் சந்திர பலம் நன்றாக உள்ள நாட்களில் செய்ய வேண்டும். கசரம் சுத்த மாக இருக்க வேண்டும். பஞ்சகம் சுத்தமாக இருக்க வேண்டும். கரி நாள், தனிய நாட்களில் செய்ய கூடாது. மரண யோகம், உத்பாத யோக நாட்களில் செய்யக்கூடாது.
ஆடி, ஆவணி, புரட்டாசி ஐப்பசி கார்த்திகை மார்கழி மாதங்களில் செய்யக்கூடாது. அமாவாசை, பெளர்ணமி, பிரதமை. ரிக்தை ஸப்தமி அஷ்டமி, நவமி த்ரயோதசி, சதுர்தசி ஆகிய திதிகளில் உபநயனம் செய்யக்கூடாது.

பையன் ஜன்ம நக்ஷத்திலிருந்து எண்ணி 2,4,6,8,9 வர வேண்டும்.
1,3,5,7 நக்ஷத்திரங்களில் செய்ய க்கூடாது. அந்தந்த தமிழ் மாத விஷ சூன்ய திதி, நட்சத்திரம் லக்னம் வேண்டாம். திதிகளின் விஷ சூன்ய ராசிகளும் வேண்டாம். வருஷம், ருது மாதம், திதி, நக்ஷதிரம் முடிவில் செய்யக்கூடாது. ஒரே நாளில் இரண்டு, நக்ஷத்திரமோ திதியோ உள்ள நாட்களும் வேண்டாம். திங்கள், புதன், வெள்ளி கிழமைகள் சிறந்தது.
உபநயனம் செய்ய போகும் தமிழ் மாதத்தில் இரண்டு பெளர்ணமியோ அல்லது இரண்டு அமாவாசையோ அல்லது மாத பிறப்பு இரண்டோ அல்லது மாத பிறப்பு இல்லாமலோ இருக்க கூடாது. திதி, நக்ஷத்திர, லக்ன தியாஜ்யம் இல்லாத லக்னத்தில். உபநயனம் செய்ய வேண்டும்.

பையனின் தாயார் ஆறு மாததிற்கு மேல் கர்பமாக இருந்தால் அந்த பையனுக்கு அப்போது உபநயனம் செய்ய கூடாது. பரணி, கார்த்திகை, திருவாதிரை, ஆயில்யம், பூரம், பூராடம், கேட்டை ஆகிய நக்ஷத்திரங்கள் உபநயனம் செய்வதற்கு சிலாக்கியமில்லை.
ஸந்தியா காலங்கள், ராத்திரி, அபராஹ்னம் மலமாசம் சிலாக்கியமில்லை.

ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய லக்னங்கள் சுபம்.

ராகு காலம், யம கண்டம், இல்லமல் இருக்க வேண்டும். சுப ஹோரையில் அமைய வேண்டும். அக்னி நக்ஷத்திர காலமும் சிலாக்கியமில்லை.


செவ்வாய், 29 ஜூன், 2021

அத்திரி மகரிஷி

அத்திரி மகரிஷி

உலகம் தோன்றிய காலத்திலேயே அவதரித்த ரிஷிகளில் அத்திரியும் ஒருவர். சிருஷ்டி கர்த்தாவான பிரம்மதேவரின் மானச புத்திரர் இவர். இவருடைய மனைவி அனுசூயா. பதிவிரதையான அனுசூயாவால் அத்திரி முனிவருக்கும், அத்திரி முனிவரால் அனுசூயாவுக்கும் பெருமை. தவசக்தியில் இருவருமே சளைத்தவர்கள் அல்ல. வேத புராண இதிகாசங்கள் எல்லாவற்றிலும் இத்தம்பதிகள் உயர்வாகப் பேசப்பட்டுள்ளனர். ராமாயணத்தில் அத்திரி முனிவரின் ஆஸ்ரமத்திற்கே ராமனும் சீதையும் முதன்முதலில் சென்றனர். சித்திரகூட பர்வதத்திலிருந்து காட்டிற்குள் சென்ற ராமனும் சீதையும், அத்திரி முனிவர் ஆஸ்ரமத்தில் ஒருநாள் தங்கினர். அப்போது ராமசீதா தம்பதிகளிடம் அத்திரி முனிவர் தன் மனைவி அனுசூயாவை காட்டி, ராமா! அனுசூயா கோபம் என்பதையே அறியாதவள். அசூயை என்னும் சொல்லுக்கு மனதில் சிறிதும் விருப்பம் இல்லாதவள் எனப்பொருள். இவள் மண்ணுயிர்கள் எல்லாம் போற்றி வணங்கும் பெருமை கொண்டவள். குணவதி, தர்மவதி, பதிவிரதா தர்மத்தில் தலைசிறந்தவள். தர்மமும் புண்ணியமும் நிறைந்த அனுசூயாவிடம் ஆசிபெறுவீர்களாக!, என்று சொன்னார். ஒரு சந்தர்ப்பத்தில் நாட்டில் மழையே பெய்யவில்லை. தொடர்ந்து பத்து ஆண்டுகளாக வறட்சி நிலவியது. எங்கும் தண்ணீர் பஞ்சம். வாயில்லா ஜீவன்களுக்கு பசும்புல் கூட கிடைக்கவில்லை. இந்தக் காட்சியைக் கண்ட அனுசூயாவிற்கு உள்ளம் உருகியது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தான் செய்த தவசக்தியால் கங்கையை வரவழைத்தாள். எல்லா குளங்களையும் நிறைத்தாள். தண்ணீர் பெற்று, பயிர்கள் செழித்து வளர்ந்தன. எங்கும் பசுமை உண்டானதைக் கண்டு மகிழ்ந்தாள். ஒருமுறை அனுசூயாவின் தோழியைச் சந்தர்ப்ப வசத்தால் சபித்தார் ஒரு முனிவர். பொழுது விடிந்தால் நீ விதவையாவாய் என்பதே அந்த சாபம். என்ன செய்ய முடியும்? அபலையாய் ஓடி வந்து அனுசூயாவிடம் வந்து நின்றாள் அவள். விஷயத்தை சொன்னாள். சாபவிமோசனம் என்பது யார் சாபமிட்டார்களோ அவர்களே தரவேண்டியது என்பதை அறியாதவர்கள் யார்? இருந்தாலும், நட்புக்கு கை கொடுக்க முன்வந்த அனுசூயா தன் தோழியிடம், விடிந்தால் தானே நீ விதவையாவாய்! விடியலே இல்லாமல் செய்து விடுகிறேன் என்று ஆறுதல் சொன்னாள். ஒரு நாள் இருநாள் அல்ல. பத்து நாட்கள் விடியாமல் இரவாகவே கழிந்தது. உலகமே திகைத்தது. தேவர்கள் கூடினர். அனுசூயாவிடம் வேண்டிக் கொண்டனர். மீண்டும் பகல்வேளை வரவேண்டுமானால் என் தோழி சுமங்கலியாக வாழ வேண்டும், என்று நிபந்தனையிட்டாள் அனுசூயா. தேவர்களும் அவ்வாறே வாக்களித்தனர். நினைத்ததைச் சாதித்து தன் தோழியைக் காப்பாற்றினாள். இத்தகைய மகாஉத்தமி அனுசூயாவின் கணவர் அத்தரிமுனிவர் என்ன சாமான்யமானவரா? அவரும் புகழிலும், தவத்திலும் யாருக்கும் இணையில்லாதவர். உலகிற்கே ஒளிதரும் சூரியனுக்கே வாழ்வு தந்த வள்ளல் அத்திரிமுனிவர். ஒருமுறை அசுரர்களில் ஒருவனான ஸ்வர்பானு தன்னைக் காட்டிக் கொடுத்த சூரியதேவன் மீது கோபம் கொண்டான். இவனே கிரகங்களில் நிழல் கிரகங்களான ராகுகேதுவாக மாறினான். தன் பகையைத் தீர்த்துக் கொள்ள எண்ணியவன் சூரியனைக் கிரகணமாகப் பிடித்தான். ராகுவின் பாதிப்புக்கு உள்ளாகி ஒளியை இழந்து நின்ற சூரியனுக்கு மீண்டும் ஒளி கொடுத்து காப்பாற்றியவர் அத்திரி முனிவரே. சூரியன் காலையில் கிழக்கில் உதிக்கிறான். மாலையில் மறைந்து விடுகிறான். உலகமே சூரியனின் வருகைக்காகக் காத்துக் கிடக்கிறது. இரவுநேரத்தில் வெளிச்சம் இல்லாமல் சிரமப்படுவதை எண்ணி வருந்தினார் அத்திரி. அதற்கு ஒரு முடிவு கட்ட எண்ணினார். ஆழமான சமுத்திரத்தின் அடிப்புறத்தில் போய் அமர்ந்தார். தவத்தில் ஆழ்ந்தார். மனுஷ வருஷங்கள் அல்ல. பல தேவவருஷங்கள் தவத்தைத் தொடர்ந்தார். தவக்கனல் அதிகரித்தது. அவருடைய கண்களில் அபார ஜோதி தோன்றியது. கடல் நீரையும் கிழித்துக் கொண்டு அந்த ஜோதி பூமியையும் விட்டு வேகமாக கிளம்பிச் சென்றது. பூமியை விட்டு நெடுந்தூரம் சென்ற ஜோதியைக் கண்ட படைப்புக் கடவுள் பிரம்மா, அதை அப்படியே நிலை நிறுத்தும்படி திசைகளுக்கு கட்டளையிட்டார். பிரம்மாவே நேரில் வந்து, அந்த ஜோதியைத் தன் தேரில் ஏற்றிக்கொண்டு 21 முறை பூமியை வலம் வந்தார். பிரம்மா செய்த ஏற்பாட்டினை இன்றளவும் அந்த ஜோதி செய்து கொண்டிருக்கிறது. அந்த ஜோதியினைத் தான் இரவில் நிலாவாக வான மண்டலத்தில் காண்கிறோம். இரவி<லும் பூமிக்கு ஒளி தரும் சந்திரனைத் தந்த பெருமை அத்திரி முனிவருடையதே. யாகம் ஒன்றிற்கு அத்திரி சதுரஹம் என்று பெயர். முதன்முதலில் இந்த யாகத்தைச் செய்தவர் இவர் என்பதால் அவர் பெயராலேயே அழைக்கப்பட்டு வருகிறது. மனதில் எண்ணிய எண்ணங்களுக்கு செயல்வடிவம் தரும் மகத்தான யாகம் இது. இந்த யாகத்தை செய்பவர்கள் வேண்டிய பலனைப் பெற்று வாழ்வர் என்று வேதம் சொல்கிறது. ஆயுர் வேத சாஸ்திரம், ஜோதிடம் போன்ற கலைகளில் அத்திரிமுனிவர் மிகவும் கை தேர்ந்தவர். வைத்திய சாஸ்திரத்தி<லும், ஜோதிட சாஸ்திரத்தி<லும் இவரின் பங்களிப்பு சிறப்பானதாகும். பிரம்மதேவரின் நகங்களில் இருந்து தோன்றிய விகநஸ மகரிஷி அத்திரியின் மாணவர்.இந்த உலகம் தோன்றிய போதே அவதரித்த இவர், தன் தவவலிமையால் பல்லாயிரம் புத்திரர்களை பெற்றெடுத்தார். அவர்கள் தங்களை ஆத்ரேய கோத்திரம் என்று வழங்குகின்றனர். மழை பெய்ய மறுக்கும் இந்த சமயத்தில், மக்களுக்காக அன்று மழையை வரவழைத்த அத்திரி அனுசூயா தம்பதிகளை நினைவில் இருத்தி பிரார்த்திப்போம்.


புதன், 5 மே, 2021

அக்னிபுரீஸ்வரர் கோவில்

அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில்- திருப்புகலூர் (தி

ருவாரூர் மாவட்டம் )

நட்சத்திர கோவில்கள்
நட்சத்திரம் : சதயம்

ஸ்தல வரலாறு : அசுர வம்சத்தை சேர்ந்த பாணாசுரனின் தாயார் மாதினியார். இவள் ஒரு சிவபக்தை. தன் தாய் செய்யும் சிவபூஜைக்காக, அவள் இருக்கும் இடத்திற்கே தினமும் புதுப்புது லிங்கங்களை கொண்டு வந்து சேர்ப்பது பாணாசுரனின் வழக்கம். ஒருமுறை விண்ணில் பறந்த அவன், ஓரிடத்தில் ஏராளமான லிங்கங்கள் இருப்பதை பார்த்தான். அதில் ஒரு லிங்கத்தின் அமைப்பு அவனது கருத்தைக் கவர்ந்தது. இதைக் கொண்டு சென்றால், தனது தாயார் மிகவும் மகிழ்வாள் என்று கருதிய பாணாசுரன், லிங்கத்தை எடுத்தான். ஆனால், அது அசையவில்லை. லிங்கத்தைச் சுற்றிலும் அகழி தோண்டி பெயர்த்தெடுக்க முயன்றான். ஆனால், அகழியில் தண்ணீர் நிரம்பி, லிங்கத்தின் அருகே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.இறைவா! இதென்ன சோதனை! என் தாயின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாத நான் இனியும் உயிர் வாழ்ந்து பயனில்லை, எனச் சொல்லிவாளை எடுத்து தலையை அறுக்க முயன்றான். அப்போது அசரீரி ஒலித்தது. பாணாசுரனே! உனது தாயாரின் பூஜைக்கு நாம் எழுந்தருள்வோம் என்றது. உடனே லிங்கத்தின் உச்சியில் ஒரு புன்னை மலர் பறந்து வந்து அமர்ந்தது. உடனே மறைந்து விட்டது. அது மாதினியாரின் இருப்பிடத்திற்கே சென்றதும், மகிழ்ந்த அவள் பூஜை செய்தாள். பூஜை முடிந்ததும் திருப்புகலூருக்கே திரும்பி விட்டது. இப்படி, பக்தர்கள் இருக்குமிடத்திற்கு ஓடிவந்து அருள் செய்யும் இறைவனுக்கு அக்னிபுரீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது.

வாழ்த்தி பாடியவர்கள்: திருஞானசம்பந்தர்

தேவாரப்பதிகம்:பூவுந்நீரும் பலியும் சுமந்து புகலூரையே நாவினாலே நவின்றேத்த லோவார் செவித் துளைகலால் யாவும் கேளார் அவன்பெருமை அல்லால் அடியார்கள்தாம் ஓவுநாளும் உணர்வொழிந்த நாளென்று உள்ளம் கொள்ளவே.
திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 75வது தலம்.
 

ஸ்தல சிறப்பு : இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு அக்னிபகவானுக்கு 2 முகம், 7 கைகள், 7 ஜுவாலை, 4 கொம்புகள், 3 பாதங்கள் கொண்ட உருவம் உண்டு.

ஸ்தலபெருமை:அப்பர் சுவாமிகள் முக்தி அடைந்த தலம்:
அப்பர் சுவாமிகள் தனது 81 வது வயதில் இத்தலத்தில் உழவார பணி செய்து பெண், பொன், மண்ணாசைகளுக்கு அப்பால் நின்று முக்தி அடைந்த தலம் ஆகும். முக்தி ஷேத்திரங்களில் இதுவும் ஒன்றாகும்.அப்பர் சுவாமிகளுக்கு தனி சந்நிதி. சித்திரை சதயத்திற்கு 10 தினங்களுக்கு முன்பிருந்தே திருநாவுக்கரசர் திருவிழா ஆரம்பமாகி சமண மதத்திலிருந்து சைவ மதமாற்ற, முதல் அரசால் ஆணையிடப்பட்ட ஆக்ஞைகள், உழவாரப் படையின் உயர்வு, அரம்பையர் நடனம், அப்பர் ஐக்கிய காட்சி வரை இன்னும் அப்படியே நடைபெற்று வருகிறது. அருள்மிகு அப்பர் சித்திரை சதயம் நான்காம் சாமத்தில் இறைவனிடம் ஜோதியாக ஆகும்போது பக்தர்கள் கண்ணில் நீர் வழிய தரிசிப்பது கண்கொள்ளா காட்சி ஆகும். ஒரே கோயிலுக்குள் திருநாவுக்கரசரும், சுந்தரரும் பாடிய இரு சன்னதிகள் உள்ளது. ஒரு சன்னதியிள் இறைவன் அக்னீஸ்வரர். சுயம்புமூர்த்தி. இவருக்கு சரண்யபுரீஸ்வரர், பிரத்தியக்ஷ வரதர், கோணபிரான் என்ற பெயர்களும் உண்டு. இறைவிகருந்தார் குழலி. இவள் சூளிகாம்பாள் என்றும் அழைக்கப்படுகிறாள். மற்றொரு சன்னதியின் இறைவன் வர்த்மானேஸ்வரர். இறைவி மனோன்மணி அம்மை. 63 நாயன்மார்களில் முருக நாயனார் இத்தலத்தில் அவதரித்து வர்த்தமானேஸ்வரருக்கு பூத்தொடுத்து சேவை புரிந்துள்ளார்.

அக்னி பகவானுக்கு சிலை: அக்னி பகவான் தவம் செய்து பாவ விமோசனம் பெற்ற தலமாகும். இங்கு இறைவன் சந்திரசேகரர் உருவத்தில் எழுந்தருளி அக்னி பகவானுக்கு காட்சி கொடுத்துள்ளார். அக்னி பகவானுக்கு உருவம் இத்தலத்தில் உண்டு. 2 முகம், 7 கைகள், 7 ஜுவாலை, 4 கொம்புகள், 3 பாதங்கள் உடையவராக உள்ள இந்த அக்னி பகவான் விக்கிரகம் மிகவும் அபூர்வமானது மட்டுமல்ல அரியதும் கூட. இறைவன் சுந்தரருக்கு செங்கற்களை பொன் கற்களாக்கி தந்த அற்புதம் நிகழ்ந்த தலம். இந்த காரணத்தால் புதிய வீடு கட்டுபவர்கள் செங்கற்களை வைத்து பூஜை செய்து மனை முகூர்த்தம் செய்து வருகின்றனர். வாஸ்து பூஜைக்கு இத்தலம் மிகவும் விசேஷமானது.

கருந்தார்குழலி : இத்தலத்து அம்பாள் மிகவும் விசேசமானவள் . அம்மன் கருந்தார் குழலி பெண் ஒருத்திக்கு தானே பிரசவம் பார்த்து, கூலியாக நிலத்தை பெற்றிருக்கி றாள். எனவே சூலிகாம்பாள் என்ற பெயர் வந்து பின்னர் சூளிகாம்பாள் ஆனாள். சூளிகாம்பாள் என்னும் பெயருடைய இந்த பெருந்தகையாள் தெற்குப் பார்த்த முகமுடையாள். கருந்தாள் என்று எல்லோராலும் கருதப்படுவாள். இப்பகுதியில் பிரசவத்தால் இறப்பே ஏற்படாது என்ற ஐதீகம் உள்ளது.

சனீசுவர பகவான் : நளச் சக்கரவர்த்திக்கும் சனீஸ்சுவர பகவானுக்கும் ஒரே சன்னதி. நள சக்கரவர்த்தி பாணாசுரன் தீர்த்தத்தில் மூழ்கி எழுந்ததும் இதிலிருந்து 7 கல் தொலைவில் உள்ள திருநள்ளாறில் நான் விலகிக் கொள்கிறேன் என்று அசரீரி ஏற்பட்டதாகும். இத்தலத்தில் சனீசுவர பகவானுக்கு அனுகிரக சனீசுவர பகவான் என்ற பெயர் உண்டு. பூதேசுவரர், வர்த்தமானேசுவரர், பவிஷ்யேசுவரர் மும்மூர்த்திகளும் முறையே கடந்த காலம், நிகழ்காலம், வருங்காலம் முதலியவைகளை குறிப்பதாகும். இத்தலத்தில் முக்காலங்களும் அடங்கியுள்ளது. அருள்மிகு முருக நாயனார் இத்திருத்தலத்தில் அவதரித்து அருள்மிகு வர்த்தமானேசுவரருக்கு புஷ்பத் தொண்டு புரிந்த இடம். திரிமுகாசூரஜ் மூன்று முகங்களை உடையவர். அதாவது மனித முகம், பட்சி முகம், பன்றி முகம். அசுரர்களுக்கு பயந்து தேவர்கள் தஞ்சமடைந்த தலம் ஆதலால் புகழூர் என்று பெயர்.

திருவிழாக்கள் :வைகாசி மாதம் - வைகாசி பூர்ணிமா - பிரம்மோற்சவம் - 10 நாட்கள் திருவிழா - அன்றைய தினம் தல புராணப்படி அருள்மிகு சந்திரசேகரர் அக்னிபகவானுக்கு காட்சி அளித்தல் நிகழும். மாதங்கள் தோறும் முக்கிய திருவிழாக்கள் நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. சித்திரை மாதம் - சதய நட்சத்திரத்தன்று - 10 நாட்கள் - அப்பர் பக்தோற்சவம் - இதுவும் இத்தலத்தில் நடைபெறும் மிக முக்கிய திருவிழா ஆகும். மாதாந்திர பிரதோச நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும். வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல்,தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.

பொது  தகவல்:சதயம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: பார்ப்பதற்கு வசீகரமான தோற்றம் கொண்டிருப்பர். பால் பாக்கியம் பெற்று செல்வவளத் தோடு வாழ்வர். பொறுமை மிக்க இவர்கள், விசாலமான சிந்தனையுடன் செயல்படுவர். மனதில் எண்ணியதை நிறைவேற்றுவதில் வல்லவர்கள். தீர்க்கமான யோசனைக்குப் பிறகே செயலில் ஈடுபடுவர். செயல்களில் திறமையும், நல்ல நடத்தையும் கொண்டிருப்பர். பாணாசுரன் வெட்டிய அகழி இப்போதும் கூட காணப்படுகிறது. இத்தல விநாயகர் ஞான விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
 
பிரார்த்தனை:சதயம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். வாஸ்து பூஜை செய்தல் இத்தலத்தின் மிகவும் விசேசமான பிரார்த்தனை ஆகும். புதிய வீடு கட்டிடங்கள் கட்டுவதற்கு முன் செங்கல் வைத்து அதற்கு வாஸ்து பூஜை செய்து அர்ச்சனை பண்ணி அந்த செங்கலை எடுத்து செல்கிறார்கள். பெண்களுக்கு பிரசவ காலத்தில் வயிற்றில் வலி ஏற்படாமல் இருக்க இங்கு வழிபடுகிறார்கள்.இங்கு அம்பாளே ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்த்ததாக புராணம் சொல்வதால் இங்கு எண்ணெய் பிரசாதம் தரப்படுகிறது. அது பிரசவ வலியை போக்கி சுகப்பிரசவம் அடையச் செய்வதால் பெண்கள் இங்கு பெருமளவில் வந்து வழிபடுகிறார்கள். இத்தலத்தில் சுயம்புவாய் வீற்றிருக்கும் அக்னீசுவரரை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பிரார்த்தனை செய்கின்றனர். வேலை வாய்ப்பு,தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
 
நேர்த்திக்கடன்:திருமண வரம் வேண்டுவோர் சுவாமி அம்பாளுக்கு கல்யாண மாலை சாத்தி அர்ச்சனை செய்கிறார்கள். அம்பாளுக்கு புடவை சாத்துதலும்,அபிசேகம் செய்தலும்,சந்தனகாப்பு சாத்துதலும் பக்தர்களின் முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது. சுவாமிக்கு வஸ்திரம் சாத்தலாம். மா ,மஞ்சள் பொடி, திரவிய பொடி, தைலம், பால், தயிர்,விபூதி, பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கலாம். தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம். வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.

கோவில் விவரங்கள்

மூலவர் : அக்னிபுரீஸ்வரர்,சரண்யபுரீஸ்வரர், கோணபிரான்
பிரத்தியக்ஷ வரதர்
அம்மன் : கருந்தார் குழலி, சூளிகாம்பாள்
தல விருட்சம் : புன்னை மரம்
தீர்த்தம் : அக்னி தீர்த்தம், பாண தீர்த்தம்
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
ஊர் :திருப்புகலூர்
மாவட்டம் :திருவாரூர்
மாநிலம் :தமிழ்நாடு

அமைவிடம் :திருவாரூர் மாவட்டம், நன்னிலத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் 10 கி.மீ. தொலைவில் திருப்புகலூர் உள்ளது.