அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில்- திருப்புகலூர் (தி
ருவாரூர் மாவட்டம் )
நட்சத்திர கோவில்கள்
நட்சத்திரம் : சதயம்
ஸ்தல வரலாறு : அசுர வம்சத்தை சேர்ந்த பாணாசுரனின் தாயார் மாதினியார். இவள் ஒரு சிவபக்தை. தன் தாய் செய்யும் சிவபூஜைக்காக, அவள் இருக்கும் இடத்திற்கே தினமும் புதுப்புது லிங்கங்களை கொண்டு வந்து சேர்ப்பது பாணாசுரனின் வழக்கம். ஒருமுறை விண்ணில் பறந்த அவன், ஓரிடத்தில் ஏராளமான லிங்கங்கள் இருப்பதை பார்த்தான். அதில் ஒரு லிங்கத்தின் அமைப்பு அவனது கருத்தைக் கவர்ந்தது. இதைக் கொண்டு சென்றால், தனது தாயார் மிகவும் மகிழ்வாள் என்று கருதிய பாணாசுரன், லிங்கத்தை எடுத்தான். ஆனால், அது அசையவில்லை. லிங்கத்தைச் சுற்றிலும் அகழி தோண்டி பெயர்த்தெடுக்க முயன்றான். ஆனால், அகழியில் தண்ணீர் நிரம்பி, லிங்கத்தின் அருகே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.இறைவா! இதென்ன சோதனை! என் தாயின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாத நான் இனியும் உயிர் வாழ்ந்து பயனில்லை, எனச் சொல்லிவாளை எடுத்து தலையை அறுக்க முயன்றான். அப்போது அசரீரி ஒலித்தது. பாணாசுரனே! உனது தாயாரின் பூஜைக்கு நாம் எழுந்தருள்வோம் என்றது. உடனே லிங்கத்தின் உச்சியில் ஒரு புன்னை மலர் பறந்து வந்து அமர்ந்தது. உடனே மறைந்து விட்டது. அது மாதினியாரின் இருப்பிடத்திற்கே சென்றதும், மகிழ்ந்த அவள் பூஜை செய்தாள். பூஜை முடிந்ததும் திருப்புகலூருக்கே திரும்பி விட்டது. இப்படி, பக்தர்கள் இருக்குமிடத்திற்கு ஓடிவந்து அருள் செய்யும் இறைவனுக்கு அக்னிபுரீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது.
வாழ்த்தி பாடியவர்கள்: திருஞானசம்பந்தர்
தேவாரப்பதிகம்:பூவுந்நீரும் பலியும் சுமந்து புகலூரையே நாவினாலே நவின்றேத்த லோவார் செவித் துளைகலால் யாவும் கேளார் அவன்பெருமை அல்லால் அடியார்கள்தாம் ஓவுநாளும் உணர்வொழிந்த நாளென்று உள்ளம் கொள்ளவே.
திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 75வது தலம்.
ஸ்தல சிறப்பு : இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு அக்னிபகவானுக்கு 2 முகம், 7 கைகள், 7 ஜுவாலை, 4 கொம்புகள், 3 பாதங்கள் கொண்ட உருவம் உண்டு.
ஸ்தலபெருமை:அப்பர் சுவாமிகள் முக்தி அடைந்த தலம்:
அப்பர் சுவாமிகள் தனது 81 வது வயதில் இத்தலத்தில் உழவார பணி செய்து பெண், பொன், மண்ணாசைகளுக்கு அப்பால் நின்று முக்தி அடைந்த தலம் ஆகும். முக்தி ஷேத்திரங்களில் இதுவும் ஒன்றாகும்.அப்பர் சுவாமிகளுக்கு தனி சந்நிதி. சித்திரை சதயத்திற்கு 10 தினங்களுக்கு முன்பிருந்தே திருநாவுக்கரசர் திருவிழா ஆரம்பமாகி சமண மதத்திலிருந்து சைவ மதமாற்ற, முதல் அரசால் ஆணையிடப்பட்ட ஆக்ஞைகள், உழவாரப் படையின் உயர்வு, அரம்பையர் நடனம், அப்பர் ஐக்கிய காட்சி வரை இன்னும் அப்படியே நடைபெற்று வருகிறது. அருள்மிகு அப்பர் சித்திரை சதயம் நான்காம் சாமத்தில் இறைவனிடம் ஜோதியாக ஆகும்போது பக்தர்கள் கண்ணில் நீர் வழிய தரிசிப்பது கண்கொள்ளா காட்சி ஆகும். ஒரே கோயிலுக்குள் திருநாவுக்கரசரும், சுந்தரரும் பாடிய இரு சன்னதிகள் உள்ளது. ஒரு சன்னதியிள் இறைவன் அக்னீஸ்வரர். சுயம்புமூர்த்தி. இவருக்கு சரண்யபுரீஸ்வரர், பிரத்தியக்ஷ வரதர், கோணபிரான் என்ற பெயர்களும் உண்டு. இறைவிகருந்தார் குழலி. இவள் சூளிகாம்பாள் என்றும் அழைக்கப்படுகிறாள். மற்றொரு சன்னதியின் இறைவன் வர்த்மானேஸ்வரர். இறைவி மனோன்மணி அம்மை. 63 நாயன்மார்களில் முருக நாயனார் இத்தலத்தில் அவதரித்து வர்த்தமானேஸ்வரருக்கு பூத்தொடுத்து சேவை புரிந்துள்ளார்.
அக்னி பகவானுக்கு சிலை: அக்னி பகவான் தவம் செய்து பாவ விமோசனம் பெற்ற தலமாகும். இங்கு இறைவன் சந்திரசேகரர் உருவத்தில் எழுந்தருளி அக்னி பகவானுக்கு காட்சி கொடுத்துள்ளார். அக்னி பகவானுக்கு உருவம் இத்தலத்தில் உண்டு. 2 முகம், 7 கைகள், 7 ஜுவாலை, 4 கொம்புகள், 3 பாதங்கள் உடையவராக உள்ள இந்த அக்னி பகவான் விக்கிரகம் மிகவும் அபூர்வமானது மட்டுமல்ல அரியதும் கூட. இறைவன் சுந்தரருக்கு செங்கற்களை பொன் கற்களாக்கி தந்த அற்புதம் நிகழ்ந்த தலம். இந்த காரணத்தால் புதிய வீடு கட்டுபவர்கள் செங்கற்களை வைத்து பூஜை செய்து மனை முகூர்த்தம் செய்து வருகின்றனர். வாஸ்து பூஜைக்கு இத்தலம் மிகவும் விசேஷமானது.
கருந்தார்குழலி : இத்தலத்து அம்பாள் மிகவும் விசேசமானவள் . அம்மன் கருந்தார் குழலி பெண் ஒருத்திக்கு தானே பிரசவம் பார்த்து, கூலியாக நிலத்தை பெற்றிருக்கி றாள். எனவே சூலிகாம்பாள் என்ற பெயர் வந்து பின்னர் சூளிகாம்பாள் ஆனாள். சூளிகாம்பாள் என்னும் பெயருடைய இந்த பெருந்தகையாள் தெற்குப் பார்த்த முகமுடையாள். கருந்தாள் என்று எல்லோராலும் கருதப்படுவாள். இப்பகுதியில் பிரசவத்தால் இறப்பே ஏற்படாது என்ற ஐதீகம் உள்ளது.
சனீசுவர பகவான் : நளச் சக்கரவர்த்திக்கும் சனீஸ்சுவர பகவானுக்கும் ஒரே சன்னதி. நள சக்கரவர்த்தி பாணாசுரன் தீர்த்தத்தில் மூழ்கி எழுந்ததும் இதிலிருந்து 7 கல் தொலைவில் உள்ள திருநள்ளாறில் நான் விலகிக் கொள்கிறேன் என்று அசரீரி ஏற்பட்டதாகும். இத்தலத்தில் சனீசுவர பகவானுக்கு அனுகிரக சனீசுவர பகவான் என்ற பெயர் உண்டு. பூதேசுவரர், வர்த்தமானேசுவரர், பவிஷ்யேசுவரர் மும்மூர்த்திகளும் முறையே கடந்த காலம், நிகழ்காலம், வருங்காலம் முதலியவைகளை குறிப்பதாகும். இத்தலத்தில் முக்காலங்களும் அடங்கியுள்ளது. அருள்மிகு முருக நாயனார் இத்திருத்தலத்தில் அவதரித்து அருள்மிகு வர்த்தமானேசுவரருக்கு புஷ்பத் தொண்டு புரிந்த இடம். திரிமுகாசூரஜ் மூன்று முகங்களை உடையவர். அதாவது மனித முகம், பட்சி முகம், பன்றி முகம். அசுரர்களுக்கு பயந்து தேவர்கள் தஞ்சமடைந்த தலம் ஆதலால் புகழூர் என்று பெயர்.
திருவிழாக்கள் :வைகாசி மாதம் - வைகாசி பூர்ணிமா - பிரம்மோற்சவம் - 10 நாட்கள் திருவிழா - அன்றைய தினம் தல புராணப்படி அருள்மிகு சந்திரசேகரர் அக்னிபகவானுக்கு காட்சி அளித்தல் நிகழும். மாதங்கள் தோறும் முக்கிய திருவிழாக்கள் நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. சித்திரை மாதம் - சதய நட்சத்திரத்தன்று - 10 நாட்கள் - அப்பர் பக்தோற்சவம் - இதுவும் இத்தலத்தில் நடைபெறும் மிக முக்கிய திருவிழா ஆகும். மாதாந்திர பிரதோச நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும். வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல்,தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.
பொது தகவல்:சதயம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: பார்ப்பதற்கு வசீகரமான தோற்றம் கொண்டிருப்பர். பால் பாக்கியம் பெற்று செல்வவளத் தோடு வாழ்வர். பொறுமை மிக்க இவர்கள், விசாலமான சிந்தனையுடன் செயல்படுவர். மனதில் எண்ணியதை நிறைவேற்றுவதில் வல்லவர்கள். தீர்க்கமான யோசனைக்குப் பிறகே செயலில் ஈடுபடுவர். செயல்களில் திறமையும், நல்ல நடத்தையும் கொண்டிருப்பர். பாணாசுரன் வெட்டிய அகழி இப்போதும் கூட காணப்படுகிறது. இத்தல விநாயகர் ஞான விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
பிரார்த்தனை:சதயம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். வாஸ்து பூஜை செய்தல் இத்தலத்தின் மிகவும் விசேசமான பிரார்த்தனை ஆகும். புதிய வீடு கட்டிடங்கள் கட்டுவதற்கு முன் செங்கல் வைத்து அதற்கு வாஸ்து பூஜை செய்து அர்ச்சனை பண்ணி அந்த செங்கலை எடுத்து செல்கிறார்கள். பெண்களுக்கு பிரசவ காலத்தில் வயிற்றில் வலி ஏற்படாமல் இருக்க இங்கு வழிபடுகிறார்கள்.இங்கு அம்பாளே ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்த்ததாக புராணம் சொல்வதால் இங்கு எண்ணெய் பிரசாதம் தரப்படுகிறது. அது பிரசவ வலியை போக்கி சுகப்பிரசவம் அடையச் செய்வதால் பெண்கள் இங்கு பெருமளவில் வந்து வழிபடுகிறார்கள். இத்தலத்தில் சுயம்புவாய் வீற்றிருக்கும் அக்னீசுவரரை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பிரார்த்தனை செய்கின்றனர். வேலை வாய்ப்பு,தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:திருமண வரம் வேண்டுவோர் சுவாமி அம்பாளுக்கு கல்யாண மாலை சாத்தி அர்ச்சனை செய்கிறார்கள். அம்பாளுக்கு புடவை சாத்துதலும்,அபிசேகம் செய்தலும்,சந்தனகாப்பு சாத்துதலும் பக்தர்களின் முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது. சுவாமிக்கு வஸ்திரம் சாத்தலாம். மா ,மஞ்சள் பொடி, திரவிய பொடி, தைலம், பால், தயிர்,விபூதி, பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கலாம். தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம். வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.
கோவில் விவரங்கள்
மூலவர் : அக்னிபுரீஸ்வரர்,சரண்யபுரீஸ்வரர், கோணபிரான்
பிரத்தியக்ஷ வரதர்
அம்மன் : கருந்தார் குழலி, சூளிகாம்பாள்
தல விருட்சம் : புன்னை மரம்
தீர்த்தம் : அக்னி தீர்த்தம், பாண தீர்த்தம்
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
ஊர் :திருப்புகலூர்
மாவட்டம் :திருவாரூர்
மாநிலம் :தமிழ்நாடு
அமைவிடம் :திருவாரூர் மாவட்டம், நன்னிலத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் 10 கி.மீ. தொலைவில் திருப்புகலூர் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக