புதன், 10 நவம்பர், 2021

ஏழுமலையான் பகுதி - மூன்று

ஏழுமலையான் பகுதி - மூன்று

பிருகு முனிவர் சத்யலோகம் சென்ற போது அங்கே அன்னை சரஸ்வதியுடன் உரையாடிக் கொண்டிருந்தார் பிரம்மா. அனர்கள் வெள்ளை பொற்றாமரை சிம்மாசனத்தில் வீற்றிருந்தனர். அங்கே ஏராளமான மகரிஷிகள் அமர்ந்திருந்தனர். தேவரிஷிகள், பிரம்மரிஷிகளும் அவர்களில் அடக்கம். அனைவரும் வேதத்தின் பொருளை பிரம்மா மூலம் கேட்டுக் கொண்டிருந்தனர். பிருகு முனிவர் சோதிக்க வந்த வரல்லவா! பிரம்மாவுக்கு கோபமூட்டினாலும், தன்னை வரவேற்கிறாரா அல்லது எடுத்தெறிந்து பேசுகிறாரா என பரீட்சை வைக்கும் பொருட்டு, பிரம்மாவுக்கும், சரஸ்வதிக்கும் சம்பிரதாயத்துக்காக வணக்கம் கூட தெரிவிக்காமல் அங்கிருந்த ஆசனத்தில் மிகவும் கர்வத்துடன் அமர்ந்து கால்மேல் கால் போட்டுக் கொண்டார்.

பிரம்மாவுக்கு கோபம் இந்த பிருகு வந்தான், ஒரு வணக்கம் கூட சொல்லவில்லை எனக்குத்தான் சொல்ல வேண்டும், இங்கே அவனை விட உயர்ந்த விஸ்வாமித்திரர், வசிஷ்டர் போன்ற பிரம்மரிஷிகளெல்லாம் வீற்றிருக்கிறார்கள். அவர்களுக்கு சொல்லியிருக்கலாம். இவனது வாய் பேசுவதற்கு காரணமான சரஸ்வதிக்கு சொல்லியிருக்கலாம். இவனை ஒரு கை பார்த்து விட வேண்டியது தான் என்றெண்ணியவராய், முகத்தில் கடும் கோபத்தைத் தேக்கி, ஏ பிருகு! என் வம்சத்தில் பிறந்த நீ, பிறருக்கு மரியாதை செய்வது என்ற சாதாரண தர்மத்தைக் கூட பின் பற்றவில்லை. இப்படிப்பட்ட, உன்னால் மற்ற உயர்ந்த தர்மங்களை எப்படி காப்பாற்ற முடியும்? இங்கே இருக்கும் விஸ்வாமித்திரர், வசிஷ்டர் போன்றவர்களெல்லாம் நாராயணனையே வழி நடத்தியவர்கள். இதோ இருக்கிறாரே! அத்திரி! அவர் மும்மூர்த்திகளையும் குழந்தையாக்கிய பெருமையை உடையவர். இதோ இருக்கிறாரே! ஜமதக்னி! அவருடைய மகனாக பெருமாளே அவதரித்தார். பரசுராமராக இருந்து இவரது உத்தரவுக்குக் கட்டுப்பட்டு, பெற்றவளையே வெட்டித்தள்ளினார். இதோ இங்கே பவ்யமாக அமர்ந் திருக்கிறாரே, கவுதமர்! அவரது மனைவியை இழிவுபடுத்திய காரணத்துக்காக இந்திரனுக்கே சாபமிட்டவர்... இப்படிப் பட்ட உயர்ந்தவர்கள் முன்னால் நீ கொசுவுக்கு சமமானவன். அப்படியிருந்தும் இந்த சபையை அவமதித்தாய் என்று சத்தமாகப் பேசினார். பிருகுவுக்கு வந்த வேலை முடிந்து விட்டது. ஆனாலும் அவர் பிரம்மனுக்கு ஒரு சாபத்தைக் கொடுத்தார். நான் முனிவனாயினும் மனிதன், நீயோ தெய்வம்.. அதிலும் படைப்பவன், உனக்கு பொறுமை இல்லை. நான் ஒரு தேர்வுக்காக இங்கு வந்தேன், அந்தத் தேர்வில் நீ தோற்றாய் வருகிறேன் என்று கிளம்பினார்.

அடுத்து அவர், சிவலோகத்தை அடைந்தார். அங்கே நந்தீஸ்வரர் வாசலில் நின்றார். சிவபெருமான் தன் மனைவி பார்வதியுடன் தனித்திருந்தார். வாசலில் பூதங்களும், துவார பாலர்களான காவலர்களும் பாதுகாத்து நின்றனர். நந்திதேவர் வாசலை மறித்துக் கொண்டிருந்தார். பிருகுவோ இவர்கள் யாரையும் மதிக்கவில்லை. அங்கே நடந்த தியான வைபவத்தை பார்வையிட்டபடியே அத்துமீறி புகுந்தார். நந்தியிடமோ, பிற காவலர்களிடமோ அனுமதி பெறவில்லை. சிவன் கோபத்தின் பிறப் பிடமல்லவா! தாங்கள் தனித்திருந்த போது உள்ளே நுழைந்த பிருகுவிடம் நீ பிரம்ம வம்சத்தில் பிறந்திருந்தும் தர்மங்களை அறியாமல் உள்ளே வந்து விட்டாய். தம்பதியர் தனித்திருக்கும் போது அங்கே செல்லக்கூடாது என்ற எளிய தர்மம் கூட புரியாத உனக்கு தபஸ்வி என்ற பட்டம் எதற்கு? இதோ! உன்னைக் கொன்று விடுகிறேன் என்றவராய் திரிசூலத்தை எடுத்தார். ஆனால்  அன்னை பார்வதி சிவனைத் தடுத்து விட்டார். நாம் தனித்திருக்கும் வேளையில் நம் பிள்ளை தெரியாமல் வந்து விட்டது. உலக உயிர்கள் அனைத்துமே நம் பிள்ளைகள் தானே! அதிலும் பிருகு தவத்தால் உயர்ந்தவன். எந்நேரமும் இறைநாமம் சொல்பவன். அவன் தெரியாமல் ஏதோ செய்து விட்டான் என்பதற்காக இப்படி சூலத்தை ஓங்குகிறீர்களே என்று பிருகுவுக்கு சாதகமாகப் பேசினாள். ஆனாலும் பிருகு இந்த சமாதானத்தைக் கண்டு கொள்ளவில்லை. அவர் வந்த வேலை முடிந்து விட்டது. கோபப்படுவது போல் நடித்து அங்கிருந்து வைகுண்டம் சென்றார்.

ஹரி ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரம் எங்கும் ஒலித்துக் கொண்டிருந்தது. அன்னை மஹாலட்சுமியின் கடாட்சத்தால் எங்கும் நவரத்தினங்களின் ஒளி வெள்ளம் பாய்ந்தது. அது ஒரு அருமையான நகரம். அந்த நகரத்தில் மாளிகைகளெல்லாம் தங்கத்தால் எழுப்பப் பட்டிருந்தன. வைகுண்டத்திலுள்ள ஒரு அரண்மனையில் மஹா விஷ்ணு துயிலில் இருந்தார். மஹாலட்சுமி அவரது திருவடிகளைப் பிடித்துக் கொண்டிருந்தாள். பிருகு வந்தது மஹா விஷ்ணுவுக்கு தெரியும். ஆனாலும் அவன் மாயவன் ஆயிற்றே! எந்த பரீட்சை வைத்தாலும் தேறி விடுவானே! படிக்கிற குழந்தைகள் மஹா விஷ்ணுவை தினமும் வணங்க வேண்டும். அவர் கல்வியின் அதிபதியான ஹயக்ரீவராகத் திகழ்கிறார். ஞானானந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம் ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவ முபாஸ்மகே என்ற ஸ்லோகத்தை தினமும் சொன்ன பிறகு  கேசவா... கேசவா... கேசவா என ஏழு தடவைகள் தொடர்ச்சியாக சொன்ன பிறகு கல்விக்கூடத்துக்கு கிளம்பும் குழந்தைகள் மிகப்பெரிய தேர்ச்சி பெறுவார்கள். பெருமாள் கோயிலுக்குப் போனால் முதலில் தாயாரை வணங்க வேண்டும். அப்படி அல்லாமல் நேராகப் பெருமாளை போய் வணங்கினால் கோரிக்கை அவ்வளவு எளிதில் நிறைவேறாது. பிருகுவோ மஹாலட்சுமியைக் கண்டு கொள்ளவே இல்லை. அது மட்டுமல்ல! ஏ நாராயணா! பிரம்மலோகத் துக்கும், சிவலோகத்துக்கும் போய் அவமானப்பட்டு உன் லோகம் வந்தேன். நீயோ எழக்கூட இல்லாமல் தூங்கிக் கொண்டிருக்கிறாய். பக்தனின் கோரிக்கைகளை கவனிக்காமல் இப்படி உறங்கினால் உலகம் என்னாவது? எழுந்திரு  என கத்தினார். மஹா விஷ்ணு அது காதில் விழாதது போல் இருந்தார். எல்லாரும் பகவானின் திருவடி தன் மீது படாதா என நினைப்பார்கள். இங்கே பகவானோ பக்தனின் திருவடி தன் மீது படாதா என காத்திருந்தார். இதோ! அது பட்டுவிட்டது.

தொடரும்


கருத்துகள் இல்லை: