புதன், 18 நவம்பர், 2020

கந்தபுராணம் பகுதி ஒன்று

கந்தபுராணம் பகுதி-1

ஒம் சரவணபவ

இந்து சமயத்தில் மொத்தம் 18 புராணங்கள் உள்ளன. அதில் ஒன்று கந்தபுராணம். வாசகர்களின் வசதிக்காக கந்தபுராணம் கதை வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. அசுரகுரு சுக்ராச்சாரியார் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார். இந்த அசுரர் குலத்தை என்ன முயற்சி செய்தாலும், தேவர்களின் புகழ் நிலைக்கு உயர்த்த முடியவில்லை. ஆனால், இப்போது அசுரர்களுக்கு நேரம் நன்றாக இருக்கிறது. தட்சனின் யாகத்தில், சிவன் பங்கேற்காத போது, அவரது அனுமதியின்றி, யாகத்தில் கலந்து கொண்ட தேவர்களை சிவனின் காவலரான நந்திதேவர் கண்டித்திருப்பதுடன் அவர்களின் சக்தியையும் இழக்கச் செய்திருக்கிறார். தேவர்கள் சக்தி இழந்துள்ள இந்த நல்ல சமயத்தில், அசுரர்களை வெற்றிக் கொடி நாட்டச் செய்யலாம். தட்சனின் மகளும், சிவனின் பத்தினியுமான தாட்சாயணி, தன் தந்தையை அசுரனாகும்படி சபித்திருக்கிறாள். அந்த தட்சனை இப்பிறவியில் நம் குடும்பத்தில் ஒருவனாக்கி விட்டால், இதைச் சாதித்து விடலாம். இந்த சிந்தனை ஓட்டத்தை செயல்வடிவாக்க எண்ணினார் சுக்ராச்சாரியார். பிரம்மாவின் புத்திரரான காஷ்யபருக்கும், அவரது தர்மபத்தனி அதிதிக்கும் பிறந்த அசுரக்குழந்தைகளை 66கோடி பேரின் எதிர்காலம் சிறப்பாக இருக்க அவர் திட்டமிட்டார். திட்டத்தைச் செயல்படுத்த அசுரக்குழந்தைகளில் முதலாமவன் அசுரேந்திரன் - மங்களகேசினியின் தம்பதியரின் புதல்வி சுரஸையைத் தேர்ந்தெடுத்தார். இவள் சுக்கிராச்சாரியாருக்கு முகமலர்ச்சியுடன் பணி விடை செய்து வந்தவள். அவளுக்கு பல கலைகளைக் கற்றுக் கொடுத்து, பெயரையும் மாயா என மாற்றிவிட்டார். அவளிடம், மாயா ! நம் குலம் தழைத்தோங்க வேண்டும் என்பது உன் தந்தை அசுரேந்திரனின் விருப்பம். அவர்கள் தேவர்களால் தொடர்ந்து அழிக்கப்படுகிறார்கள். இந்த அழிவைத்தடுக்க உன்னால் தான் இயலும். நாம் தேவர்களை அடக்கி, நமது சாம்ராஜ்யத்தை ஈரேழு உலகிலும் நிலைநாட்ட வேண்டும். அது உன்னால் முடியும் என்றார். வியப்படைந்த மாயாவிடம், தன் திட்டத்தையும் விளக்கினார். குருநாதரின் கட்டளையை ஏற்ற மாயா, தன் தந்தை அசுரேந்திரனிடம் இதுபற்றி சொல்ல, அவனும் அகமகிழ்ந்து, மகளை வாழ்த்தி அனுப்பினான். சுக்ராச்சாரியாரின் திட்டம் இதுதான். அசுரர்களின் தந்தையான காஷ்யபரை மாயா மயக்க வேண்டும். இன்னும் மிகச்சிறந்த அசுரர்கள் பலரை அவர் மூலமாக பெற வேண்டும் என்பதே அவரது திட்டம். மாயாவும் காஷ்யபர் இருந்த கானகத்திற்கு சென்றாள். தன் மாயசக்தியால், புதிய மாளிகைகளை அந்த கானகத்தில் எழுப்பினாள். அழகிய நந்தவனத்தை உருவாக்கினாள். மணம் பொங்கும் மலர்கள் அதில் பூத்தன. அந்த கானகத்தின் ஒருபகுதி அடையாளம் தெரியாமல் போனது. அந்த மாளிகையிலேயே தங்கியிருந்தாள் மாயா. அவள் எதிர்பார்த்தபடியே, காஷ்யபர் அங்கு வந்தார். இந்த இடம் எப்படி இவ்வளவு அழகாக மாறியது. விஷ்ணு இங்கு வந்திருப்பாரோ ? அந்த மாயவன் தான் இப்படி மாயச்செயல்கள் செய்திருப்பானோ ? பிரம்மா தன் பிரம்மலோகத்தை இந்த பூமிக்கு மாற்றி விட்டாரோ ? என்று மனதில் கேள்விகள் எழ, ஆச்சரியத்துடன் மாளிகைக்குள் பார்த்தார். அங்கே ஒரு அழகுசுந்தரி நடமாடிக் கொண்டிருந்தாள். பூக்களில் அமரும் பட்டாம்பூச்சிகளை அவளது பட்டுக்கரங்களின் பிஞ்சு விரல்கள் தொட்டு விளையாடிக் கொண்டிருந்தன. அவள் மான்போல் துள்ளித்துள்ளி, விளையாடுவதைக் கண்ட காஷ்யபர், ஆஹா... உலகில் இப்படி ஒரு அழகியா ? இவளைப் போன்ற பேரழகியை இதுவரை பார்த்ததில்லை, இனிமேலும் காண்போமா என்பது சந்தேகம் தான். இனி இப்பூமியில் ஒருநாள் வாழ்ந்தால் கூட போதும். ஆனால், இவளோடு வாழ்ந்து விட வேண்டும், என எண்ணியவராய் மாளிகைக்குள் சென்றாள். அழகுப்பெண்ணே ! நீ யார் ? இந்த கானகத்தில் உனக்கென்ன வேலை ? இந்த மாளிகையை எப்படி உருவாக்கினாய் ? உன் அங்கங்கள் என் மனதைக் குலைக்கிறதே ! ஏற்கனவே திருமணமானவன். தவசீலன். அப்படியிருந்தும் என் மனம் உன்னைக் கண்டு அலை பாய்கிறதே, என்று புலம்ப ஆரம்பித்து விட்டார். அவள் காஷ்யபரிடம் நல்லவள் போல் நடித்தாள். தவசீலரே ! இந்த மலைப்பகுதியில் நீண்டகாலமாக வசிப்பவள். எனக்கு இந்த மாளிகைகள் எப்படி வந்தன எனத் தெரியாது. ஆனால், யாரும் இல்லாததால், இங்கே புகுந்தேன். வேண்டுமானால், இந்த மாளிகையை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் முனிவராக இருந்தும், என் அழகை வர்ணிப்பதில் நியாயமில்லை. நான் இளங்கன்னி. நீங்களோ முதியவர். வயதிற்காவது மரியாதை கொடுங்கள் சுவாமி ! என்றவளை காஷ்யபர் மீண்டும் வற்புறுத்தினார். அவள் மாயா அல்லவா ? அங்கிருந்து மறைந்து விட்டாள். காஷ்யபர் அடைந்த துன்பத்துக்கு அளவே இல்லை. அழகே ! எங்கே போனாய். நீ இல்லாமல் எனக்கு இனி வாழ்வில்லை. எங்கு மறைந்திருந்தாலும் வந்துவிடு. என்னை ஏற்றுக்கொள். நீ என்ன சொன்னாலும் கட்டுப்படுகிறேன், என நாள்கணக்கில் புலம்பிக் கொண்டு, அங்கேயே பசி பட்டினியுடன் கிடந்தார். மன்மதனின் வலைக்குள் சிக்கிய பிறகு தவசீலனாயின் என்ன ! சாதாரண மனிதனாயின் என்ன ! எல்லாரும் ஒன்றும் தான். காஷ்யபர் மயக்க நிலையில் கிடந்தார். அப்போது அவர் முன் மீண்டும் தோன்றினாள் அப்பெண். காஷ்யபர் அடைந்த ஆனந்தத்துக்கு அளவில்லை. அவர் பரவசத்துடன் அவளை நோக்கி ஓடினார். தான் ஒரு முனிவர் என்பதையும், பிரம்மாவின் புதல்வன் என்பதையும் மறந்து அவளது காலிலேயே விழுந்து விட்டார்.

தொடரும்


ஜாதகம்

உங்கள் ஜாதக கட்டத்தில் நவகிரகங்கள் சரியான இடத்தில் அமர்ந்திருந்தாலும் கூட உங்களது  வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு இல்லை. இந்த தவறுகளை நீங்கள் செய்திருந்தால் நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சுக துக்கங்களுக்கு நல்லவை கெட்டவைகளுக்கு ஜாதக கட்டங்களும் அதில் அமர்ந்திருக்கும் நவகிரகங்களும் தான் காரணம் என்று சொல்கிறது ஜோதிடம். இருப்பினும் சில பேருக்கு ஜாதக கட்டத்தில் எந்த தோஷமும் இல்லை. எந்த பிரச்சனையும் இல்லை. ஆனாலும் கிரகங்களின் அனுகிரக பார்வை கிடைக்கவில்லையே!

அது எதனால்?
 

நல்ல ஜாதகத்தை கொண்டவர்களும், வாழ்க்கையில் ஒரு சில கட்டங்களில்,
கஷ்டப்படுவதற்கு என்ன காரணம்
என்ற உண்மையை நீங்கள் தெரிந்து கொண்டால் நிச்சயமாக வியப்பில் மூழ்கி விடுவார்கள்!

இது கூடவா ஒரு காரணம் என்ற அளவிற்கு உங்களையே ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும்.

அந்த காரணம் என்ன?
தினம்தோறும் நம்முடைய வாழ்க்கையில் நாம் செய்யக்கூடிய தவறு என்ன? என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
 

எவர் ஒருவர் தங்களுடைய சொந்த பந்தங்களை மதிக்காமல் அலட்சியமாக மரியாதை குறைவாக நடத்துகிறார்களோ அவர்களுக்கு நவகிரகத்தின் ஆசீர்வாதமும், அனுக்கிரஹமும் கட்டாயம் கிடைக்கவே கிடைக்காது.

 இப்படியாக சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? நம்ப மாட்டீங்கன்னு தெரியும்.

 சாட்சியோடு சொன்னா நம்புவீங்களானு பாப்போம்?
 

எந்த கிரகத்துக்குரிய சொந்த, பந்தம் எது என்பதையும் பார்த்து விடலாம்.
 

உங்களுடைய அப்பாவை நீங்கள் மரியாதையாக நடத்தவில்லை என்றால், அப்பாவிற்கு கொடுக்க வேண்டிய ஸ்தானத்தை அவருக்கு நீங்கள் கொடுக்கவில்லை என்றால்,
உங்களுக்கு திருமணம் தள்ளிப்போகும்.

 வேலைவாய்ப்பில் பிரச்சனை ஏற்படும். சொந்த தொழில் முன்னேற்றம் ஏற்படாது. ஏனென்றால் அப்பா ஸ்தானத்தை குறிப்பது சூரியன். உங்களுடைய அம்மாவை நீங்கள் மதிக்கவில்லை என்றால், அவர்களை மரியாதை குறைவாக நடத்தினால், அவர்களை அவமானப்படுத்தி பேசினால்,
கட்டாயம் உங்களின் அழகு குறைய ஆரம்பிக்கும். அறிவாற்றல் மங்கிப் போகும். குழப்பமான வாழ்க்கை வாழத் தொடங்குவீர்கள். மனநிம்மதியே இருக்காது. ஏனென்றால் அம்மா ஸ்தானத்தை குறிப்பது சந்திரபகவான்.
 

நீங்கள் கணவனாக இருந்தால்,
உங்கள் வீட்டில் இருக்கும் மனைவியை மரியாதையோடு தான் நடத்த வேண்டும். மனைவிக்கு மரியாதை இல்லை என்றால், உங்கள் வீட்டில் மஹாலட்க்ஷ்மி இல்லை. வீடு, மனை, வாகனம், சொத்து, பத்து சந்தோஷமான வாழ்க்கை, எல்லாவற்றையும் நீங்கள் பெற வேண்டுமென்றால் மனைவிக்கு மரியாதை கொடுக்கவேண்டும்.
மனைவி இடத்தை குறிப்பது சுக்கிரன்.


நீங்கள் மனைவியாக இருந்தால் உங்களுடைய கணவருக்கு கட்டாயம் மரியாதை கொடுக்க வேண்டும். உங்கள் கணவர் இடத்தை குறிப்பது குரு. உங்கள் வீட்டில் நிம்மதியான சூழ்நிலை நிலவ, சந்தோஷம் நிலைத்திருக்க கட்டாயம் மனைவிமார்கள், கணவனை மதிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தாய்மாமன் ஸ்தானத்தை குறிப்பவர் புதன். தாய்மாமன் மட்டுமல்ல,
அத்தை ஸ்தானத்தையும் குறிப்பதும் புதன் பகவான்.

 உங்களது குழந்தைகள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால் தாய்மாமன்,
அத்தை போன்ற சொந்த பந்தங்களை மதிப்போடு நடத்த வேண்டும். சகோதர சகோதரிகளை இழிவாகப் பேசினால்ங செவ்வாய் பகவானின் அனுக்கிரகம் கிடைக்காது. உங்களால் ஆடம்பர பொருட்களை வாங்கி, நிலம் வீடு போன்ற சொத்துக்களை வாங்கி, கட்டாயம் சேர்க்க முடியாத. வாழ்க்கையில் முன்னேற்றம் தடைபடும். (இது உங்களுடைய சகோதர சகோதரிகளுக்கும் பொருந்தும்.

 கணவனாக இருந்தால், மனைவியின் சகோதரர் சகோதரிகளையும் மதிக்கவேண்டும்.
மனைவியாக இருந்தால் கணவரின் சகோதர சகோதரியையும் மதிக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.)
அடுத்ததாக பாட்டிமார்களும் தாத்தாக்களும். இவர்கள் இல்லை என்றால் நம்முடைய வாழ்க்கையில் நல்லது கெட்டது சொல்வதற்கு ஆளே கிடையாது. அதாவது ராகு கேதுவிற்கு உரியவர்கள் இவர்கள்.
ஆகவே இவர்களை மிகவும் மரியாதையோடு நடத்த வேண்டும்.
முதியவர்களை கஷ்டப்படுத்தினால், நாமும் வாழ்க்கையில் கஷ்டப்பட வேண்டியதுதான்.

 இப்போதாவது நம்புவீர்களா கஷ்டம் எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்று!

ஆக மொத்தம் உறவினர்களுக்குள் ஆயிரம் பிரச்சினைகள்  இருந்தாலும்
சண்டை போட்டாலும் ஓருவருக்கொருவர்
பார்க்காமல் பேசாமல் இருப்பதை
தவிர்த்து அவர்களுடன் அன்புடன்
பழகி அவர்களையும் சந்தோஷப்படுத்தி அதன் மூலம் நாமும் சந்தோஷமாய் வாழ்வோம். நவகிரகங்களும் சந்தோஷப்பட்டு நம் தோஷங்களை களைந்து நமக்கு சந்தோஷத்தைக் கொடுப்பார்கள்..!

வாழ்க வளமுடன்...

செவ்வாய், 17 நவம்பர், 2020

குலசேகர ஆழ்வார்

ஆழ்வார்களும் அவதாரமும்

10. குலசேகர ஆழ்வார்

பிறந்த இடம் : திருவஞ்சைக்களம் (கோழிக்கோடு அருகில்)
பிறந்த நாள் : எட்டாம் நூற்றாண்டு, பராபவ ஆண்டு மாசி மாதம்
நட்சத்திரம் : மாசி புனர்பூசம், (வளர்பிறை துவாதசி திதி)
கிழமை : வெள்ளி
தந்தை : திட விரதன்
எழுதிய நூல் : பெருமாள் திருமொழி
பாடிய பாடல் : 105
சிறப்பு : மன்னனின் மகனாய் பிறந்து பக்தி மார்க்கத்தில் திளைத்தவர். (கவுஸ்துபாம்சம்)
பிற பெயர்கள் : கொல்லிகாவலன், கூடல்நாயகன், கோழிக்கோன், சேரலர்கோன், வில்லவர்கோன்

திருமாலின் திருவருளால் சேர மன்னன் திடவிரதன் என்பவனுக்கு  கவுஸ்து அம்சமாக குலசேகராழ்வார் அவதரித்தார். தனது தந்தைக்குப்பின் சேரநாட்டை மிகவும் சிறப்பான ஆட்சி செய்தார். இவரது சிறப்பான ஆட்சி கண்டு பொறாமைப்பட்டு இவருடன் போருக்கு வந்த சோழ, பாண்டிய மன்னர்களை வென்று தமிழகத்தை ஒரே ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார். இவரது வீரத்தை கண்ட பாண்டியமன்னன் தன் மகளை இவருக்கு திருமணம் செய்து வைத்தார். வீரம், போர், நான், எனது என்ற அகங்காரத்துடன் இருந்த குலசேகராழ்வாரின் மனதில் திருமால் புகுந்து மாயையை விலக்கி தன் மீது மட்டும் நேசம் உடையடவராக மாற்றினார். இதனால் மனம் மாறிய குலசேகராழ்வார் இது நாள் வரை தான் செய்து வந்த அற்பத்தனமான செயல்களை நினைத்து வருந்தினார். அத்துடன் நாளுக்கு நாள் நாராயணன் மீது அளவுகடந்த அன்பும் பக்தியும் மிகுதியானது. இந்த அன்பையும் பக்தியையும்

செந்தழலே வந்து அழலைச்
செய்திடினும் செங்கமலம்
அந்தரம் சேர் வெம்கதிரோறரு
அல்லால் அலராவால்;

வெம்துயம் வீட்டாவிடினும் விற்
றுவக் கோட்டு அம்மானே ! உன்
அந்தம் இல்சீர்க்கு அல்லால்
சுகம் குழைய மாட்டேனே

என்று பாடி அதன் படி வாழ்ந்தும் வந்தார். அத்துடன் நாள்தோறும் வைணவப் பெரியவர் மூலம் ராமாயணக் கதைகளை கேட்டும் வந்தார். ராமாயணக்கதை கேட்ட போது ராமர் சீதையைக் மீட்க அரக்கர்களுடன் போர் புரிந்தார் என்பதை கேட்ட போது உணர்ச்சிவசப்பட்டு அந்த அரக்கர்களுடன் சண்டை போ தன் படையை தயார் செய்தவர். இப்படி பெருமாள் மீது அதிக ஈடுபாடு கொண்டிருந்த மன்னர் ஒருநாள் திடீரென தன் நாட்டை ஆளும் பொறுப்பை தன் மகனிடம் ஒப்படைத்து விட்டு பெருமானை தரிசிப்பதற்காக ஸ்ரீரங்கம், திருப்பதி, காஞ்சிபுரம் போன்ற திருத்தலங்களுக்கு யாத்திரை சென்றார். இவர் பெருமாள் மேல் பாடிய பாசுரங்களுக்கு பெருமாள் திருமொழி என்று பெயர் இவர் தன் வாழ்நாள் முழுவதும் பெருமாளை பூமாலையாலும் பாமாலையாலும் பூஜை செய்தார். இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம் மன்னார்கோயில் சென்று பெருமாளை தரிசித்து நிற்கும் போது இறைவன் பேரருளால் இவ்வுலகை விட்டு வைகுண்டம் சேர்ந்தார். பெருமாளின் 108 திருப்பதிகளில் குலசேகர ஆழ்வார் தனியாக சென்று 1 கோயிலையும், பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து 7 கோயில்களையும் என மொத்தம் 8 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.


திங்கள், 16 நவம்பர், 2020

வள்ளல்கள் இருவர்!

வள்ளல்கள் இருவர்!

கொடை வள்ளல் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது கர்ணன்தான். ஆனால், அவன் வள்ளல் தன்மைக்கே சவால் விடும்படியாக செயற்கரிய செயல்புரிந்த இரு அடியவர்களைப் பற்றி அறியும்போது வியப்பாகத்தான் உள்ளது. யாருமே  செய்வதற்கு அஞ்சுகின்ற அச்செயலை, இறைவன் மீதும் இறை அடியார்கள் மீதும் கொண்ட தூய பக்தியின் நிமித்தம் செய்த அருளாளர்கள் இயற்பகை நாயனார் மற்றும் ஜலராம் பாபா.

இயற்பகை நாயனார்: சோழ நாட்டின் தலைநகரான காவிரிப்பூம்பட்டினத்தில், வணிகர் குலத்தில் இயற்பகையார் அவதரித்தார். சிவபெருமானுக்கு அடிமை செய்தும், சிவனடியார்களுக்கு இல்லை என்னாது இனிது வழங்கியும், அடியார்கள் பணியை நிறைவேற்றுவதையே கொள்கையாகக் கொண்டு சிவப்பணி செய்து, இல்லாளோடு இனிதே இல்லறம் நடத்தி வந்தார். இயற்பகையாரின் கொடைச்சிறப்பை உலகிற்குக் காட்ட திருவுள்ளம் கொண்டான். திருச்சிற்றம்பலக் கூத்தன், பால் வெண்ணீறணிந்து, அந்தனர் வேடந்தாங்கி, பார்வதி மணாளன் இயற்பகையார் இல்லத்துக்கு வருகை புரிந்தான். அகமும், முகமும் மலர அவரை ஓடிச்சென்று வரவேற்றார் இயற்பகையார். அந்தணராக வந்த அரனார், சிவனடியார் வேண்டிய பொருள் எதுவாயினும் இல்லை என்னாது நீ கொடுப்பதை அறிந்து நாம் இங்கு வந்துள்ளோம். நாம் ஒரு பொருளை விரும்புகிறோம். நீ கொடுக்க உடன் பட்டால் நான் சொல்கிறேன் என்று கூறினார். என்னிடம் இருப்பவை அனைத்தும் இறைவனின் உடைமையே. அடியவர் பெருமானே! நீங்கள் கேட்கும் பொருள் என்னிடம் இருக்குமானால், உங்களுக்கு உடனே கொடுப்பேன். இது உறுதி என்று இயற்பகையார் கூற, வந்திருந்த வேதியர், அப்படியானால் உன் மனைவியை எனக்குக் கொடு என்று கேட்டார். இதைக் கேட்டதும் சீறி எழுந்தாரா நமது தொண்டர்? இல்லை. மாறாக, சிரித்த முகத்துடன், நீர் கேட்ட பொருள் என்னிடம் இருக்கிறது. இது இறைவன் தந்த பேறு. என்று மகிழ்ந்து, மனைவியிடம் சென்று நடந்ததைக் கூறினார். அம்மையாரும் முதலில் கலங்கினாலும், பின்பு தெளிவு பெற்றார். இயற்பகையாரின் சுற்றத்தாரால் தனக்குத் துன்பம் நேராவண்ணம் வழித்துணையாய் வரவும் தொண்டருக்கு ஆணையிட்டார் அந்õணர். என்ன விபரீதம்? மனைவியுடன் மாற்றான் செல்ல, பாதுகாப்பிற்குச் சென்றார் இந்த விநோத சிவத் தொண்டர். கேட்கக் கூடாததை வாய்கூசாமல் கேட்டு வேதியர் வேடம் தரித்த இறைவன் பெற்றுக்கொண்டது வேடிக்கையாய் உள்ளதென்றால், துறவி வேடம் பூண்டு மற்றொரு தொண்டனிடமும் இதையே யாசகமாய்  கேட்டுப் பெற்றான் இறைவன் என்று அறியும்போது வியப்பு இரட்டிப்பாகிறது.      

ஜலராம் பாபா: குஜராத்திலுள்ள வீர்பூர் கிராமத்தில் பிரதான் தாக்கர் என்ற வணிகருக்கு ராஜ்பாய் என்ற அம்மையாருக்கும் இரண்டாவது மகனாக அவதரித்தார் ஜலராம். குழந்தைப் பருவத்திலிருந்தே ஜலராமுக்கு தெய்வபக்தி அதிகம். அவருக்குப் பத்து வயது ஆனபோது அவர்கள் இல்லத்துக்கு ஒரு துறவி வந்தார். இரண்டாவது மகனைப் பார்க்க வேண்டும் என்று கூறினார். வீட்டுக் குள்ளிலிருந்து வெளியே வந்த ஜலராம், துறவியைக் கண்டான். உள்ளத்தில் ஒளிவெள்ளம் பாய, பரவச நிலையை அடைந்தான். புன்னகையுடன் துறவி, அவனை ஆசீர்வதித்துவிட்டுச் சென்றார். அன்றிலிருந்து சீதாராம், சீதாராம் என்று இடைவிடாமல் உச்சரிக்கத் தொடங்கினான் ஜலராம். என்னைப் பார்க்க வந்தவர் ராமதூதனான ஆஞ்சநேயர்தான் என்று பின்னாளில் ஜலாராம் குறிப்பிட்டுள்ளார். இல்லறத்தில் அவருக்கு விருப்பமில்லா விட்டாலும், பதினாறு வயதிலேயே அவருக்குத் திருமணம் செய்து வைத்து, வியாபாரத்தைக் கவனித்துக் கொள்ள கடைசியில் உட்கார வைத்தார்கள். ஆனால், அவர் மனம் வியாபாரத்தில் ஈடுபடவில்லை. எந்நேரமும் எதையோ பறிகொடுத்தவர் போல் காணப்பட்டார். சித்தப்பாவின் அறிவுரைப்படி பல புனிதத் தலங்களுக்கு மனைவியுடன் சென்று வந்ந்தார். ஃபதேபூர் என்ற இடத்தில் போஜலராம் என்ற மகானிடம் உபதேசம் பெற்றார். இருபது வயதில், அன்னதானத்தை ஏற்றுக்கொள்ள வந்த ஒரு துறவி, ஜலராமுக்கு தன்னிடமிருந்த ஒரு விக்ரகத்தை அன்பளிப்பாகக் கொடுத்தார். சிரத்தையாக அந்த விக்ரகத்தைப் பூஜை செய்து வந்த ஜலராம், அந்த விக்ரகத்தில் ஆஞ்சநேயர் பிரதிஷ்டை ஆன காட்சியைக் காணும் பேறு பெற்றார். ஒரு மாலை நேரம். ஜலாராமும் அவர் மனைவியும் ஆஞ்சநேயர் ஆராதனையில் ஈடுபட்டிருந்தனர். வாசலில் அம்மா என்ற குரல் ஒலித்தது. கணவனும் மனைவியும் வெளியே வந்து பார்த்ததுபோது, திண்ணையில் ஒரு துறவி, தோளில் துணிப்பை, கையில் தண்டத்துடன் இருந்தார்; மூச்சுவிடவே மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். பசியாற உள்ளே அழைத்தனர் தம்பதியர். மறுத்த துறவி ஜலாராமைப் பார்த்து,
வயதானதால் என் வேலைகளைச் செய்துகொள்ள எனக்குச் சிரமமாக உள்ளது. உன் மனைவியை எனக்கு சேவை செய்ய என்னுடன் அனுப்புவாயா? என்று கேட்டார். ஜலராம் அதிர்ச்சியுறவில்லை. அவரது மனைவியோ, கணவனிடம் அனுமதிகூட கேட்காமல் அவருடன் புறப்பட்டாள். துறவி தோள் பை, தண்டம் சகிதம் அந்த இளம்பெண்ணுடன் புறப்பட்டுச் சென்றார்.ஜலாராம் சோகம் சற்றுமின்றி ஆஞ்சநேய பூஜையைத் தொடர்ந்தார். மாதவருக்கு மனைவியை தாரை வார்த்துக் கொடுத்த மகிழ்ச்சி ஒருபுறம் தம்மைப் பாதுகாப்பாக உடன்வர ஆணையிட்ட சந்தோஷம் மறுபுறம்.

இயற்பகையார் களிப்புடன் இல்லத்துக்குள் சென்று பொன்னாடை தரித்து ஆயுதம் தாங்கினார்.அக்னி சாட்சியாய் மணமுடித்த அன்பு மனைவி அன்னிய ஆடவனுடன் முன்செல்ல அவர்களுக்குப் பாதுகாவலனாய் அருமைக் கணவன் பின்செல்ல பயணம் தொடர்ந்தது.ஊர் முழுவதும் செய்தி பரவியது.தன் மனைவியை மாற்றனுடன் அனுப்பி வைக்கும் இயற்பகையாரை பித்தன் என்று ஏசியும் பிறன்மனை விழைந்த வேதியர் மீது ஆயுதங்கள் வீசியும் சுற்றத்தார்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.அஞ்சி நின்ற அந்தணருக்கு அபயம் அளித்து, சுற்றி நின்று எதிர்த்தவர்களைத் தாக்கினார் இயற்பகையார்.அந்தத் தாக்குதலில் பலர் மாண்டனர்.திருச்சாய்க்காடு என்னும் ஊருக்கு அருகில் வந்தவுடன் சிவனடியார் இயற்பகையாரை நோக்கி இனி நீ திரும்பிச் செல்லலாம்!என்று கூறி விடை கொடுத்தார். விடைகொடுத்துச் செல்வது விடையேறும் பரமன் என்று அறியவில்லை அந்த பரமபக்தர்.மிக்க மகிழ்ச்சியுடன் திரும்பிக்கூட பார்க்காமல் தனது இல்லம் திரும்பினார்.அவரது அச்செயலைக் கண்டு நெகிழ்ந்த இறைவன் இயற்பகையானே! என்னை எப்போதும் மறவாதவனே! அன்புடையவனே! செயற்கரிய செயல் செய்தவனே! ஓலம்! என்று பலமுறை ஓலமிட்டு அழைத்தார். மறுக்கறு மறைஓலிட்டு மாலயன் தேட நின்றான் குரல் கேட்டு ஓடோடியும் வந்தார் இயற்பகையார். இறையடியார்க்கு இன்னல் ஏதேனும் வந்துவிட்டதோ என்றெண்ணி விரைந்து வந்தார்.தொண்டரை மேலும் சோதிக்க எண்ணாத தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அவ்விடத்திலிருந்து மறைந்தருளினார். தம் மனைவியார் மட்டும் அங்கு நிற்பதை நாயனார் கண்டார்.அப்போது, வானத்தின் மீது உமையம்மையுடன் சிவபெருமான் காளையூர்தியின் மீதமர்ந்து காட்சியளித்தார். இயற்பகையார் உணர்ச்சி மேலிட தரையில் வீழ்ந்து வணங்கினார். இவ்வுலகில் நீ செலுத்திய அன்புகண்டு மகிழ்ந்தோம்.நீரும் உம் மனைவியும் நம்மிடம் வருக!என்று அருள் செய்ததோடு இறந்த இயற்பகையாரின் சுற்றத்தார்க்கு வீரசுவர்க்கமும் அளித்தார் மறைபோற்றும் இறைவன்.

கணவனின் கட்டளைப்படி முனிவர் பின் சென்றார் இயற்பகையாரின் மனைவி என்றால் ஜலாராமின் துணைவியோ வந்திருந்த துறவியுடன்பதியின் ஆணைக்குக்கூட காத்திராமல் புறப்பட்டாள்.இருவரும் ஊரைக்கடந்து அருகில் இருந்த ஒரு வனத்தை அடைந்தனர்.ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் துறவி வீர்பாயிடம் தனது தோளில் தொங்கிய பையையும் தண்டத்தையும் கொடுத்து விட்டு, இதை பாதுகாப்பாக வைத்திரு. நான் வரும் வரை இந்த இடத்தைவிட்டு நகரக் கூடாது என்று கூறிச் சென்றார்.இரவு வந்தது. இருள் சூழ்ந்தது.ஆனால் துறவி வரவில்லை.வீர்பாய் பொறுமையாய் அமர்ந்திருந்தாள்.அப்போது வானிலிருந்து மகளே! தணடத்தையும் பையையும் எடுத்துக்கொண்டு போய் உன் கணவனுடன் சேர்ந்து வாழ்வாயாக! உங்களைச் சோதிக்கவே இவ்வாறு செய்தேன் என்று அசரீரி ஒலித்தது. மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினாள் வீர்பாய். அன்று முதல் ஜலாராமும் வீர்பாயும் இறைவனின் பரிசான அந்தப் பையையும் தண்டத்தையும் ஆராதித்து வந்ததோடு அவர்கள் இல்லத்துக்கு வந்தவர்க்கெல்லாம் வயிறாற அன்னமிட்டு நிறைவாழ்வு வாழ்ந்து இறைவனடி சேர்ந்தனர்.இன்றும் ராஜ்கோட் மாவட்டத்திலிருக்கும் வீர்பூர் கிராமத்து ஆசிரமத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஜலராம் வணங்கிய ஆஞ்சநேயரையும் இறைவன் வீர்பாய்க்கு அளித்த தோள்பை மற்றும் தண்டத்தையும் தரிசித்துச் செல்கின்றனர். பூஜ்யத்துக்குள்ளிலிருந்து ராஜ்யம் நடத்துபவனைப் புரிந்து கொள்வது கடினம். புரிந்துகொண்டால்? அவன்தான் இறைவன்!

அருள் மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில்

அருள் மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில்
 



மூலவர் :  பசுபதீஸ்வரர்
அம்மன்:  திரிபுரசுந்தரி
தல விருட்சம் :  கொன்றை
பழமை :2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் :  திருஆமூர்
ஊர் :  திருவாமூர்
மாவட்டம் :  கடலூர்
மாநிலம் :  தமிழ்நாடு
 
பாடியவர்கள்:தனித் தேவாரத்திருப்பதிகம் இக்கோயிலுக்கு இல்லை என்றாலும் அப்பர் சுவாமிகள் பாடியருளிய பசுபதி திருவிருத்தம் இத்தலத்து இறைவரைக் குறித்தே அருளிச் செய்யப் பெற்றது எனலாம்.

இத்தலத்தின் சிறப்பை பெருமையை சேக்கிழார் பெரிய புராணத்தில் சிறப்பித்து கூறுகின்றார்.
 
திருவிழா:அப்பர் குருபூஜை சித்திரை சதயத்திலும், அவதார நாள் பங்குனி மாதம் ரோகிணியிலும் நடக்கிறது.   
       
தல சிறப்பு:சிவனது தேவாரப் பாடல் பாடிய அப்பர் என்ற அழைக்கப்படும் திருநாவுக்கரசர் அவதரித்த தலம்.   
       
திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.  
     
முகவரி:அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், திருவாமூர் - 607106, கடலூர் மாவட்டம்.போன்:+91 4142- 239 6333.  
      
பொது தகவல்:இந்த பசுபதீசுவரர் ஆலயம் மிகவும் பழமையானது. சுவாமி சன்னதிக்கு எதிரில் அப்பர் சுவாமிகள் திருவுருவம் நின்ற திருக்கோலத்துடன் மூலாதாரமாக விளங்குகிறது. அதில் உழவாரப்படை இடது தோளில் சார்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அருணகிரிநாதர் இத்தலத்து முருகப்பெருமான் குறித்து திருப்புகழ் பாடியுள்ளார். அப்பரின் அக்காள் திலகவதியாருக்கு தனி சன்னதி உள்ளது. அப்பரின் தாயார் மாதினியார் தகப்பனார் புகழனார் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. திருவாமூர் நாற்புறமும் கழனிகள் சூழ்ந்த மிக அழகிய சிறிய கிராமம்.தெற்கு பிரகாரத்திலும் அப்பர் திருவுருவம் உள்ளது.
 
பிரார்த்தனை:இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும். இது சைவ சமயத்தின்பால் அதீத பற்றும் அக்கறையும் கொண்ட அன்பர்கள் அவசியம் வந்து வழிபட வேண்டிய அருமையான சிறப்பு பெற்ற கோயில் இது. இத்தலத்து ஈசுவரனைத்தான் அப்பரின் தாய் தகப்பனார் வழிபட்டுள்ளனர். ஈசுவரன் மீது மாறாத பக்தியும் சிரத்தையும் கொண்டோர் இத்தலத்து பசுபதீசுவரனை வணங்கினால் அத்தனை பேறுகளும் கிடைக்கும்.மேலும் நின்ற நிலையில் உள்ள அப்பர் பெருமானை வணங்கினால் மனதுக்கு நிம்மதியும், வாக்கு வன்மையும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் ஆற்றலும் , ஈசனின் அருளும் கிடைக்கும்.
 
நேர்த்திக்கடன்:சுவாமிக்கு நல்லெண்ணெய், மஞ்சள் பொடி, மாப் பொடி, பால், தயிர், பழ வகைகள், கரும்புச்சாறு, தேன், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். தவிர உலர்ந்த தூய வஸ்திரம் சாத்தலாம்.தவிர சுவாமிக்கு வேட்டியும்,அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிசேகம், புடவை சாத்துதல் ஆகியவற்றையும் செய்யலாம். தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.  
      
தலபெருமை:இங்கே பசுபதீஸ்வரரும், திரிபுரசுந்தரி அம்மனும் அருள்பாலிக்கிறார்கள். சைவ சமயத்தின்மீது பற்றுக்கொண்டவர்கள் வணங்க வேண்டிய தலம் இது. இங்கே அப்பர் பெருமான் நின்ற நிலையில் காட்சி தருகிறார். அவரை வணங்கினால் மனதிற்கு நிம்மதியும், வாக்கு வன்மையும், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கும் ஆற்றலும், ஈசனின் அருளும் கிடைக்கும். இங்கே பசுபதீஸ்வருரம் திரிபுர சுந்தரியும் அருள்பாலித்தாலும் அப்பர் பெருமானுக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. திலகவதியாரை மணம் பேசிய கலிப்பகையார் போரில் இறந்துவிட்டதால் இவ்வூரில் திருமணத்துக்கு முதல் நாளிலோ அல்லது திருமணத்தன்றோ தான் நிச்சயதார்த்தம் செய்கிறார்கள்.திலகவதியாருக்கும், அப்பரின் தாய் தந்தைக்கும் இங்கு தனி சன்னதிகள் உள்ளன. ஊரைச்சுற்றிலும் கழனிகள் அதிகம். நாவுக்கரசர் பாடிய ஒரு பாடல் குழந்தைகளும் கற்றுக்கொள்ள கூடிய வகையில் மிகவும் எளிமையாக உள்ளது.

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே.

நாவுக்கரசர் அவதாரம் செய்த களரி வாகை மரத்தடியில் சுவாமிக்கு அழகிய கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த மரத்தை ஒரு அதிசய மரமாக கருதி மக்கள் பூஜிக்கின்றனர். இது செடியாகவும் இல்லாமல் கொடியாகவும் இல்லாமல் மரமாகவும் இல்லாமல் ஒரு புதுவகை அம்சமாக உள்ளது. இதன் இலையை சுவைத்தால் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு, உவர்ப்பு, கார்ப்பு என்ற அறுசுவைகளையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. கி.பி.7ம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே இந்த மரம் இங்கு உள்ளது.

3 ம் குலோத்துக்க சோழன் திருப்பணி செய்த தலம், 11 ம் நூற்றாண்டில் திருப்பணிகள் நடைபெற்றுள்ளன.

அப்பர் குருபூஜை தினமான சித்திரைச் சதயத்தில் பெருவிழாவும் திருமுறை மாநாடும் நிகழ்ந்து வருகின்றன. திருநாவுக்கரசர் நினைவாக ஆண்டுதோறும் இவ்விழாவில் மூத்த திருமுறை இசைவாணர் (சிறந்த ஓதுவாமூர்த்தி) ஒருவருக்குத் திருமுறைக் கலாநிதி என்ற பட்டம் பொறித்த பொற்பதக்கமும் பொன்னாடையும் இரண்டாயிரம் பணமுடிப்பும் ஸ்ரீ லஸ்ரீ குருமகாசந்நிதானம் அவர்களால் வழங்கப்பெற்று வருகின்றன.

அப்பர் சுவாமிகள் பரம்பரையினர் பக்கத்து ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர். அப்பர் சுவாமிகள் பங்குனிமாதம் ரோகினியில் அவதரித்ததாகக் கொண்டு அன்றைய நாளிலும், அவர் இறைவனடி கூடிய சித்திரைச் சதயத் திருநாளிலும் அப்பருக்கு வழிபாடுகள் நிகழ்த்தி வருகின்றனர். தவிர விசேஷ நாட்களின் போது கோயிலில் பக்தர்கள் நிரம்ப அளவில் வருகின்றனர்.
 
தல வரலாறு:திருவாமூர் என்ற இந்த தலத்தில்தான் தேவாரம் பாடிய நால்வருள் முக்கியமானவரான அப்பர் என்று அழைக்கப்பட்ட திருநாவுக்கரசர் அவதரித்தார். இவரது தந்தை புகழனார்; தாயார் மாதினியார்; சகோதரி திலகவதியார். பெற்றோர் அப்பருக்கு மருள்நீக்கியார் என பெயர் வைத்தனர். இளமையிலேயே அவரது பெற்றோர் இறந்துவிட்டனர். சகோதரியின் பாதுகாப்பில் மருள்நீக்கியார் வளர்ந்தார். உறவினர்கள் திலகவதியாருக்கு அவ்வூரில் சேனைத் தலைவராக இருந்த கலிப்பகையாரை திருமணம் செய்துவைக்க நிச்சயித்தனர். மன்னனால் போருக்கு அனுப்பப்பட்ட கலிப்பகையார் போரில் கொல்லப்பட்டார். திருமணம் நின்றுபோனதால், மனம் உடைந்த திலகவதி திருவதிகை என்ற தலத்திற்கு சென்று சிவத்தொண்டு செய்துவந்தார். திருநாவுக்கரசரோ சமண சமயத்தை சார்ந்து, தர்மசேனர் என்ற பெயரை சூட்டிக்கொண்டார்.திலகவதியார் தனது தம்பியை நம் தாய் சமயமான  சைவ சமயத்திற்கு மீட்டுத்  தரவேண்டும் என சிவபெருமானிடம்  வேண்டிக் கொண்டார். இதையடுத்து நாவுக்கரசரை சூலைநோய் தாக்கியது. திருவதிகை சென்று இறைவனின் திருநீறை வயிற்றில் பூசியதும் வலி குணமானது. இதனால் மெய்சிலிர்த்த அவர் திருப்பதிகம் பாடி வழிபட்டார். எனவே இறைவனே அவர் முன்பு தோன்றி நாவுக்கரசு என பெயர்சூட்டினார். பல தலங்களுக்கும் சென்று தேவாரம் பாடிய அப்பர் பெருமான் திருப்புகலூரில் சித்திரை சதய நாளில் இறைவனடி சேர்ந்தார். இவரது காலம் கி.பி. 7 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாகும்.
 
சிறப்பம்சம்: சிவனது தேவாரப் பாடல் பாடிய அப்பர் என்ற அழைக்கப்படும் திருநாவுக்கரசர் அவதரித்த தலம்.

அருள் மிகு ரேணுகாம்பாள் திருக்கோயில்

அருள் மிகு ரேணுகாம்பாள் திருக்கோயில்
 



மூலவர் :  ரேணுகாம்பாள்
தல விருட்சம் :  மாமரம்
தீர்த்தம் :  கமண்டலநதி
பழமை :2000 வருடங்களுக்கு முன்
ஊர் :  படவேடு
மாவட்டம் :  திருவண்ணாமலை
மாநிலம் :  தமிழ்நாடு
 
திருவிழா:ஆடி மாதம் - ஏழு வெள்ளிக் கிழமைகளும் இத்தலத்தில் மிகவும் விசேசமாக இருக்கும். இந்த விசேச நாட்களின் போது மட்டும் 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து அம்மனை வழிபடுகிறார்கள். புரட்டாசி மாதம் - நவராத்திரி கொலு ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பின் போதும் இக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் பெருமளவில் இருக்கும். மார்கழி பூஜை, தைமாதம் வெள்ளிக்கிழமைகள் ஆகியவை இத்தலத்தில் சிறப்பான விழா நாட்கள் ஆகும். வருடத்தின் மிக முக்கிய விசேச நாட்களான தமிழ், ஆங்கில புத்தாண்டு தினங்கள், தீபாவளி, பொங்கல் ஆகிய தினங்களிலும் கோயிலில் சுவாமிக்கு விசேச அபிசேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.அப்போது கோயிலில் பெருமளவில் பக்தர்கள் கூடுவார்கள்.   
       
தல சிறப்பு:இங்கு அம்மன் (சிரசு மட்டும்) சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சக்தி பீடங்களில் இத்தலம் மிகவும் முக்கியமானது. மற்ற அம்மன் சன்னதிகளில் குங்குமம்தான் பிரசாதமாக தரப்படும். ஆனால் இங்கு குங்குமத்திற்கு பதில் வெட்டி எடுக்கப்பட்ட மண் பிரசாதமாக தரப்படுகிறது. இக்கோயில் அம்மன் கோயில் என்றாலும் சுற்றுச் சுவர்களில் சிங்க வாகனம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு பதில் இங்கு பசுவே உள்ளது. பொதுவாக அம்மன் சன்னதிகளில் பலிபீடம் முன்பு யாழி அல்லது சிங்கம் இருக்கும். ஆனால் இங்கு மட்டும் எருது உள்ளது.   
       
திறக்கும் நேரம்:காலை 6.40 மணி முதல் 1 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.  
     
முகவரி:அருள்மிகு ரேணுகாம்பாள் அம்மன் திருக்கோயில் , படவேடு. திருவண்ணாமலை மாவட்டம்.போன்:+91- 4181 - 248 224, 248 424.  

பொது தகவல்:சக்திக்குள் அனைத்தும் அடக்கம் என்பதற்கேற்ப இங்குள்ள மூலஸ்தானத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் அரூபமாக அருள்பாலிக்கின்றனர். எனவே, அம்பிகையை வழிபட்டால் முப்பத்து முக்கோடி தேவர்களையும் வழிபாடு செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.   
       
பிரார்த்தனை:அம்மை கண்டவர்கள் இத்தலத்தில் வந்து வேண்டிக் கொள்கின்றனர். விரதமிருந்து இத்தலத்துக்கு வந்து தங்கி அம்மனுக்கு சேவை செய்து வந்து அதிக பட்சம் 3 அல்லது 5 நாட்களுக்குள் அம்மை இறங்கி விடுகிறது. தலத்தில் தரும் தீர்த்தத்தை உடல் மேல் தெளித்துக் கொள்கின்றனர். வேப்பிலை தண்ணீரை தீர்த்தமாக வாங்கிக் குடித்துவிட்டு அம்மனை வணங்கிச் செல்கிறார்கள். மேலும் திருமண வரம், குழந்தை வரம் வேண்டியும் பக்தர்கள் இத்தலத்தில் வேண்டிக் கொள்கின்றனர்.எந்த வகை நோயானாலும் இங்கு வந்து வழிபட்டால் அம்மனின் அருளால் உடனே குணமடைவதாக இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் பரவசத்துடன் கூறுகின்றனர். குறிப்பாக கண் நோய், கண்பார்வை இல்லாதவர்கள் இங்கு வந்து அம்மனை வழிபடுகின்றனர்.
 
நேர்த்திக்கடன்:பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேறியவுடன் நேர்த்திகடன்களாக எடைக்கு எடை நாணயம் செலுத்துகிறார்கள்(துலாபாரம்) , நெய்தீபம் ஏற்றுகின்றனர். சிலை கண்ணடக்கம், உருவ வகையறா, மற்றும் புடவை ஆகியவற்றையும் செலுத்துகிறார்கள். வேப்பிலையை மட்டும் உடையாக உடுத்திக் கொண்டு கோயிலை வலம் வருதல், அங்கபிரதட்சணம் செய்தல், மொட்டை அடித்தல், காதுகுத்தல், தொட்டில் கட்டுதல், ஆடு மாடு கோழி காணிக்கை செலுத்தல் ஆகியவை இத்தலத்தில் பக்தர்கள் செலுத்தும் முக்கியமான நேர்த்திகடன்களாகும். முகத்தில் உள்ள மருக்கள், பருக்கள் ஆகியன நீங்குவதற்காக வெல்லம் மிளகு ஆகியவற்றை செலுத்துகிறார்கள். குழந்தை வரம் வேண்டுவோர் பரசுராமருக்கு தொட்டில் கட்டுகின்றனர். கோடிதீபம் ஏற்றுதல் இத்தலத்தில் மிகவும் சிறப்புடையதாக கருதப்படுகிறது. மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் நேர்த்திகடன்களாக பிரசாதம் செய்து பக்தர்களுக்கு தருகிறார்கள். தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்கிறார்கள்.  
      
தலபெருமை: பொதுவாக அம்மன் தலங்களில் குங்குமம் தான் பிரசாதமாக தரப்படும். ஆனால் இங்கு மட்டும் வித்தியாசமாக மண்ணே திருநீராக தரப்படுகிறது. இத்தலத்தில் தரப்படும் மண் விசேசமானது. தானாக தோன்றியாதாகும். பூமியில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டதாகும். இந்த மண் இத்தலத்திலிருந்து சற்று தொலைவில் உள்ள ஜமதக்னி முனிவர் (அதாவத ரேணுகாதேவியின் கணவர்)வாழ்ந்ததாக கருதப்படும் ஆசிரமத்தில் அவர் யாகம் செய்த இடத்திலிருந்து வெட்டி எடுக்கப்படுகிறது.

வருடாவருடம் ஆனித்திருமஞ்சனம் அன்று அந்த இடத்தில் பூமியில் பூத்திருக்கும் மண்ணை வெட்டி எடுத்து வந்து பக்தர்களுக்கு தரப்படுகிறது. பிணி, வயிற்றுவலி ஆகியவை குணமடையவும் குழந்தைவரம் கிடைக்கவும் இந்த மண்ணை தண்ணீரில் கலந்து பக்தர்கள் அருந்துகிறார்கள்.இவ்வாறு அருந்திய சிலதினங்களில் தங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

கருவறைச் சிறப்பு : இத்திருக்கோயிலின் கருவறையில் வேறெங்குமில்லாத வகையில் சிறப்பு அம்சமாக அன்னை ரேணுகாதேவி (சிரசு மட்டும்) சுயம்பு உருவமாகவும், பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மும்மூர்த்திகள் அரூபங்களுடன் எழுந்தருளியுள்ளார்கள். மேலும் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த பாணலிங்கமும், சிலா சிரசும், சுதையிலான அம்மன் முழு திருவுருவமும் கருவறையில் அமையப் பெற்றுள்ளது. மும்மூர்த்திகளுடன் எழுந்தருளியுள்ள அன்னை ரேணுகா தேவியை வழிபட மும்மூர்த்திகளையும் வழிபட்ட பலன் உண்டு.பரசுராமரின் சிலையும் கருவறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அம்மன் இங்கு சுயம்புவாய் எழுந்தருளியிருப்பது முக்கிய சிறப்பம்சம். அதோடு பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளையும் உடன் கொண்டு பேருருக் கொண்டு உலகில் சக்தியே எல்லாமென எடுத்துக்காட்டி அருள்புரிந்து வருகிறாள். ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பாணலிங்கமும் ஜனாகர்ஷண சக்கரமும் அமைந்துள்ளது சிறப்பாகும். ஞானியர் பலர் தவமிருந்து சித்திகள் பல பெற்றதும்இத்திருத்தலத்தில்தான். தொண்டை மண்டலத்து சக்தி தலங்களில் இத்தலம் முக்கியமான ஒன்றாகும்.

ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகாம்பாளுக்கும் பிறந்த பரசுராமர் அவதரித்த தலம் இது. இது பரசுராமர் பிறந்த ஷேத்திரம் என்பதால் பரசுராம ஷேத்திரம் என்று இத்தலத்துக்கு பெயர். ஸ்தானத்தில் பரசுராமரின் சிலை தனியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இக்கோயில் அம்மன் கோயில் என்றாலும் சுற்றுச் சுவர்களில் சிங்க வாகனம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.அதற்கு பதில் இங்கு பசுவே உள்ளது.

பொதுவாக அம்மன் சன்னதிகளில் பலிபீடம் முன்பு யாழி அல்லது சிங்கம் இருக்கும். ஆனால் இங்கு மட்டும் எருது உள்ளது. கணபதி முனிவர் இங்கு யாகம் செய்துள்ளார். அவர்தான் அம்பாளின் சிறப்பை வெளிக்கொணர்ந்தவர். அழகிய சிற்பங்கள் உள்ள அற்புதமான கோயில் இது.
 
தல வரலாறு:ரேணுகாதேவி இரைவத மகாராஜனின் மகளாக பிறந்து ஜமதக்னி முனிவரை மணம் முடித்து பரசுராமரை பெற்றெடுக்கிறாள். கணவரின் பூஜைக்கு கமண்டல நதியில் நீர் முகந்திடும்போது வானவீதியில் சென்ற கந்தர்வன் சாயையை நீரிலே கண்டு அவன் அழகில் மயங்கி ஆச்சர்யப்பட்டதால் மண்குடம் உடைந்து நீர் உடம்பெல்லாம் நனைந்ததை முனிவர் ஞானக்கண்ணால் கண்டு கோபம் கொண்டார். மகன் பரசுராமரை அழைத்து தாயின் தலையை வெட்டிக் கொண்டு வரும் படி கூற, அவ்வாறே அன்னையின் தலையை பரசுராமர் கொண்டுவந்தார். இருப்பினும் "பெற்ற தாயை வெட்டிய கையை வெட்டி விட்டேன்,' என்று கூற முனிவரும், "வரம் கேள்; தருகிறேன்,' என்று பரசுராமரிடம் கூறினார்.தன் தாயை உயிர்ப்பித்து கொடுக்கும்படி கேட்டார்.

முனிவர் கமண்டல நீரை மந்திரம் ஓதி தந்தார். அதைபெற்றுக் கொண்டு வெட்டுப்பட்டுக் கிடக்கும் தன் தாய் சடலம் அருகே சென்று தவறுதலாக தாயின் தலையை வேறொரு பெண்ணின் உடம்போடு ஒட்ட வைத்து தண்ணீரை தெளிக்க உயிர் பெற்றார். இதற்கிடையில் கார்த்தவீரிய அர்ச்சுனன் முனிவரிடம் இருந்த காமதேனுவை கேட்டும் தர மறுத்ததால் அவரைக் கொன்று காமதேனுவை கவர்ந்து செல்கிறான். கணவர் இறந்ததால் ரேணுகாதேவி உடன்கட்டை ஏறுகிறாள். அப்போது மழை பெய்ய கொப்புளங்களுடன் ஆடை இன்றி வேப்பிலை கட்டி மகன் பரசுராமனை சந்தித்தாள். பரசுராமன் வந்து கோபத்துடன் சென்று கார்த்தவீரியனை கொன்று சினத்துடன் திரும்ப,சத்திரிய குலம் முழுவதும் அழிக்க சபதமிடுகிறான்.

பின் சிவபெருமான் வந்து நடந்திருப்பது விதிச் செயல் என்று சமாதானம் செய்தார். பின் ஜமதக்னி முனிவரை உயிரத்தெழ செய்கிறார். அன்னை ரேணுகாதேவி சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டபடி சிரசு மட்டும் பிரதானமாகக் கொண்டு இப்பூலகில் பூஜைக் கருவாய் விளங்குவதோடு, உடலின் மற்ற பிரிவு முனிவருடன் சொர்க்கத்துக்கு சென்றது. இவ்வாறே அன்னை ரேணுகை இப்பூவுலகில் சிரசை மட்டுமே பிரதானமாக கொண்டு படவேட்டில் அமர்ந்து அருள்பாலிக்கிறார்.
 
சிறப்பம்சம்: இங்கு அம்மன்(சிரசு மட்டும்)சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

ஆழ்வார்களும் அவதாரமும் 8.திருமங்கையாழ்வார்

ஆழ்வார்களும் அவதாரமும்
8.திருமங்கையாழ்வார்

பிறந்த இடம் : திருக்குறையலூர் ( நாகப்பட்டினம் மாவட்டமசீர்காழி அருகில்)
தந்தை : ஆலிநாடுடையார்
தாய் : வல்லித்திரு அம்மையார்
பிறந்த காலம் : எட்டாம் நூற்றாண்டு நளஆண்டு கார்த்திகை மாதம்
நட்சத்திரம் : கார்த்திகை க்ருத்திகை (பவுர்ணமி திதி)
கிழமை : வியாழன்
எழுதிய நூல் : பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருஎழுகூற்றிருக்கை,  பெரிய திருமடல், சிறிய   திருமடல்.
பாடிய பாடல் : 1253
சிறப்பு : திருமாலின் சார்ங்கம் என்ற வில்லின் அம்சமாக பிறந்தவர், மன்னனாகப் பிறந்து பக்தி மார்க்கத்தில் திளைத்தவர்.
பிற பெயர்கள் : ஆலிநாடன், கலியன், நாலுகவிப்பெருமாள், அருள்மாரி, மங்கையர்கோன், பரகாலன்

பெற்றோர்கள் இவருக்கு நீலன் என்று பெயரிட்டனர். இவரது வீரத்தில் மகிழ்ந்த மன்னன் நீலனை தன் படைத்தளபதி ஆக்கியதுடன் திருவாலி நாட்டின் மன்னனாகவும் ஆக்கினான். அமங்கலை என்ற தேலோக கன்னி கபில முனிவரின் சாபத்தால் பூமியில் குமுதவல்லி நாச்சியார் என்ற பெயரில் வளர்ந்து வந்தாள். இவளது புகழையும் அறிவையும் கேள்விப்பட்ட திருமங்கை ஆழ்வார் இவளை திருமணம் செய்ய விரும்பினார். விஷ்ணுவின் பக்தையான குமுதவல்லியோ தன்னை திருமணம் செய்ய வேண்டுமானால் தினமும் ஆயிரத்தெட்டு வைணவர்களுக்கு அமுது படைக்க வேண்டும் என்ற நிபந்தனை விதித்தாள். நிபந்தனையின் பேரில் அமுது படைத்து படைத்து அரண்மனையின் நிதி நிலை சரிந்தது. வழக்கமாக சோழமன்னனுக்கு கப்பம் கேட்டு வந்த ஏவலர்களிடம் தன் நிலையை கூறி அனுப்பி விட்டார். கோபமடைந்த மன்னன் அமைச்சர்களுடன் தன் படையை அனுப்பி ஆழ்வாரை பிடித்து வரும்படி கூறினான். ஆனால் அனைவரும் விரட்டியடிக்கப்பட்டனர். எனவே மன்னனே பெரும் படையுடன் சென்றான். ஆனாலும் ஆழ்வார் அவர்களை புறமுதுகிட்டு ஓடச்செய்தார். ஆழ்வாரின் வீரத்தில் மகிழ்ந்த மன்னன் அவரிடம் நேரில் சென்று பேச்சுப்படி கப்பம் கட்டுவதே சிறந்தது. அதுவரை என் கைதியாக கோயிலில் தங்கியிரு என்றார். மன்னன் கூறியபடி ஆழ்வாரும் மூன்று நாட்கள் எதுவும் சாப்பிடாமல் கோயிலில் தங்கியிருந்தார். பசி மயக்கத்தில் தூங்கிய ஆழ்வாரின் கனவில் தோன்றிய காஞ்சிபுரத்து பெருமாள். தன் சேவைக்கு வந்தால் அவரது கடன் தீர்க்கும் வகையில் பொருளுதவி செய்வதாக கூறினார். மன்னனின் அனுமதி பெற்று படையினருடன் காஞ்சிபுரம் சென்ற ஆழ்வார். பெருமாள் கூறிய இடத்தில் தோண்டவும் பெரும் புதையல் இருந்தது. அதை எடுத்து மன்னனுக்குரிய கடனை அடைத்து விட்டு மீதியை அமுது படைக்க வைத்துக்கொண்டார். இதையறிந்த மன்னன் ஆழ்வாரைப் பணிந்து பணத்தை திருப்பிக்கொடுத்து அமுது படைக்கவைத்துக் கொள்ள கூறினார். இந்தப்பணமும் தீர்ந்து போகவே ஆழ்வார் தன் அமைச்சர்களுடன் பணக்காரர்களிடம் கொள்ளையடித்து அமுதுபடைத்து வந்தார். ஒரு முறை நாராயணன் லட்சுமி தேவியுடன் மணக்கோலத்தில் வந்தார். ஆழ்வார் தன் படையினருடன் அவர்களை மிரட்டி அவர்களது நகைகளை பெற்றுக்கொண்டார். ஆனால் தன் கால் விரல் மோதிரத்தை மட்டும் நாராயணன் கழட்டவில்லை. ஆழ்வாரும் மோதிரத்தை கழட்டும் படி கூறியதற்கு என்னால் முடியவில்லை முடிந்தால் நீயே கழட்டிக்கொள் என்றார் நாராயணன். அதேபோல் ஆழ்வாரும் குனிந்து தன் பற்களால் விரலைக்கடித்து மோதிரத்தை இழுத்தார். அப்போது நாராயணன் ஆழ்வாரின் காதுகளில் நாராயண மந்திரத்தை உபதேசித்தார். வந்திருப்பது நாராயணன் என்பதை அறிந்த ஆழ்வார் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டார். ஆழ்வார் திருடனாக இருந்தாலும் தன் உணவுக்கு கூட அதை எடுக்காமல் யாசித்து சாப்பிட்டார். பெருமாளின் 108 திருப்பதிகளில் திருமங்கை ஆழ்வார் தனியாக சென்று 46 கோயில்களையும் மற்ற ஆழ்வார்களுடன் சேர்ந்து 36 கோயில்களையும் என மொத்தம் 82 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.  12 ஆழ்வார்களில் இவர் தான் அதிக பெருமாள் திருத்தலங்களை மங்களாசாசனம் செய்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது வரலாற்றில் ஒரு சிறப்பு என்னவென்றால் இவர் மொத்தம் 82 பெருமாள் கோயில்களை மங்களாசாசனம் செய்திருந்தாலும் தான் பிறந்த சொந்த ஊரான திருக்குறையலூரில் உள்ள பெருமாள் கோயிலை மங்களாசாசனம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


அருள்மிகு இலஞ்சிக்குமாரர் திருக்கோயில்

அருள்மிகு இலஞ்சிக்குமாரர் திருக்கோயில்


 
மூலவர்    :     குமாரர்சுவாமி
உற்சவர்    :     இலஞ்சிக்குமாரர்
தல விருட்சம்    :     மகிழம்
தீர்த்தம்    :     சித்ராநதி
ஆகமம்/பூஜை     :     மகுட ஆகமம்
பழமை    : 2000 வருடங்களுக்கு முன்
ஊர்    :     இலஞ்சி
மாவட்டம்    :     திருநெல்வேலி
மாநிலம்    :     தமிழ்நாடு
பாடியவர்கள்:அருணகிரியார்
திருவிழா:சித்திரையில் 10 நாள், கந்தசஷ்டி, தைப்பூசம், வைகாசி விசாகம், ஆடிக்கிருத்திகை, ஆவணி பவித்ரஉற்சவம், நவராத்திரி, திருக்கார்த்திகை, மகாசிவராத்திரி.      
             
தல சிறப்பு:அகத்தியரால் வெண்மணலில் பிடித்து வைக்கப்பட்ட சிவன் இங்கு இருவாலுக நாயகராக அருள்பாலிக்கிறார்      
             
திறக்கும் நேரம்:காலை 6.15 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.     
முகவரி:அருள்மிகு திருஇலஞ்சிக்குமாரர் திருக்கோயில், இலஞ்சி -627805 திருநெல்வேலி.போன்:+91-4633-283201,226400,223029     

பொது தகவல்:இங்கு சுவாமிக்கு செய்யப்படும் அபிஷேகத்திற்கு தேவையான பால் அப்பகுதியில் வசிக்கும் பக்தர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்டே செய்யப்படுகிறது. குமாரரின்  வாகனமான மயில் அவருக்கு இடது புறத்தில் வடக்கு நோக்கியபடி உள்ளது.குமாரருக்கு இடப்புறம் அகத்தியரால் மணலில் பிடித்து வைக்கப்பட்ட சிவன் இருவாலுக நாயகராகவும், அவரது உமையாள் இருவாலுக ஈசர்க்கினியாளாகவும் இருந்து அருள் புரிகின்றனர்.      
             
பிரார்த்தனை:திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, தொழில் சிறக்க, குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருக இங்கு வேண்டிக்கொள்ளப்படுகிறது.

நேர்த்திக்கடன்:வேண்டிக்கொண்ட செயல்கள் நிறைவேறிட சுவாமிக்கு முடிக்காணிக்கை செலுத்தி பால் அபிஷேகம் மற்றும் விசேஷ அர்ச்சனை, ஆராதனைகள் செய்யப்பட்டு காவடி எடுக்கப்படுகிறது. குழந்தை பாக்கியம் கிடைத்தவர்கள் குழந்தைகளை தத்து கொடுத்து வாங்கி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.     
            
தலபெருமை:சிவபெருமானின் திருமணம் காண யாவரும் கைலாயம் சென்றதால் பூமி வடக்கே உயர்ந்து தெற்கே தாழ்ந்திட அதனைச்சமப்படுத்த அகத்தியர் தெற்கே வந்தார். சிவனின் திருமணத்தைக்காண அவர் விரும்பிடவே திருக்குற்றாலநகரில் இருக்கும் தம்மை பூஜிக்க திருமணமும், நடனக்காட்சியும் அவருக்கு கிட்டும் எனக்கூறி  அருள்புரிந்தார். அதன்படி, அகத்தியமுனிவர் திருக்குற்றாலம் வந்தார். அங்கோ சங்குவடிவிலான பெருமாள் கோயில் இருந்தது. சிவனடியாரான அவர் அக்கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. எனவே இவர் இலஞ்சி வந்து சிவனை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்க அருளும்படியாக குமாரரை வேண்டினார். குமரப் பெருமானும் அருள் வழங்க, அகத்தியர் சிற்றாற்றின் கரையில் குமாரருக்கு அருகிலேயே வெண்மணலை குவித்து பூஜை செய்தார். அவ்வாறு, மணலைக்குவித்து அகத்தியர் பூஜை செய்த லிங்கம், இருவாலுக நாயகர்  ( பெருமை பொருந்திய அகத்தியரால் வெண்மணல் கொண்டு செய்யப்பட்டவர்) எனும் திருப்பெயரால் அழைக்கப்படுகிறார். அதன்பின், அவர் திருக்குற்றாலம் சென்று வைணவ வேடம் பூண்டு அரியை, அரனாக மாற்றி வணங்கினார். இவ்வாறு சிவபெருமானை வழிபட அகத்தியருக்கு அருளியவராக இத்தலத்தில் உள்ள முருகப்பெருமான் திகழ்கிறார். இத்தலத்தில் இருக்கும் விநாயகர் செண்பகவிநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.

இலஞ்சியில் வீற்றிருக்கும் குமாரர்,  கட்டிளமைக் கோலத்தில் அருள்புரிகிறார். இவருக்கு தோசை, அப்பம், வடை நிவேதனமாகப் படைக்கப்படுகிறது. பிரமதேவரும், இந்திரனின் குமாரரை வணங்கி அருள்பெற்றுச்சென்ற பெருமை பெற்ற தலம். இவரை அருணகிரியார் தனது திருப்புகழில் "வரதராஜப்பெருமாள்' என்ற சிறப்புப்பெயர் கொண்டு அழைத்து சிறப்பித்துள்ளார்.      
             
தல வரலாறு:பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பிரம்மபுத்திரரான காசிப முனிவர், திருமாலின் அம்சம் பொருந்திய கபிலமுனிவர் சீகண்ட பரமசிவத்தினின்று தோன்றிய துர்வாசமுனிவர் ஆகியோர் திரிகூடாசலமலையின் வடகீழ்திசையில் ஒன்று கூடி உலகின் பல்வேறு தத்துவப்பொருளையும், அதன் நுணுக்கங்களையும் பற்றி கூடிப்பேசி  ஆராய்ந்தனர். அப்போது, அவர்களுக்குள் இவ்வுலகம் உள் பொருளா? அல்லது இல்பொருளா? என்ற வினா எழுந்தது. கபிலர், உலகம் இல்பொருளே எனக்கூறி தனது கருத்தை வலியுறுத்தினார். ஆனால் காசிபரும், துர்வாசரும் உலகம் முத்தொழில் செய்யும் கடவுளர் இல்லாது இல்பொருள் தோன்றாது. ஆகவே, உலகம் உள்பொருளே என்றனர். அவர்களின் கருத்தை கபிலர் ஏற்றுக்கொண்டார். பின் அவர்கள் உள்பொருளான உலகின் உண்மைப்பொருள் யார் ? என ஆராய்ந்தனர். அப்போது, கபிலர் உண்மையான உள்பொருள் திருமால் என்றார். அதனை மறுத்த காசிபர் உள்பொருள் பிரம்மனே என்றும், உருத்திரனே என்று துர்வாசரும் வாதிட அவர்களுக்குள் குழப்பம் ஏற்பட்டது. அப்போது, உண்மை விளங்கிட முடிவு கூறும்படி துர்வாசர் முருகக்கடவுளை வேண்டினார்.  

அவரது வேண்டுகோளை ஏற்ற முருகப்பெருமான், இளமைப்பருவமுடையோனாய் அவர்கள் முன் தோன்றினார் அவர் "யாமே விதியாக நின்று படைப்போம், அரியாக நின்று காப்போம், மற்றையோராக நின்று அழிப்போம் என மூவினையும் செய்யும் மும்மூர்த்தியாக அவர்களிடம் தன்னை அவதரித்துக் காட்டி தானே முக்காலமும் செய்பவன் என அவர்களுக்கு உணர்த்தினார். அதன்பின், அவரை வணங்கிய மும்முனிவர்கள் இவ்விடத்தில் எழுந்தருளி தமக்கு அருள் புரிந்தது போல, இவ்விடத்திலேயே இருந்து வழிபடுவோருக்கு ஞானம் கொடுத்து, விரும்பும் வரம் தருதல் வேண்டும் என்று வேண்டினர். அவர்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்த குமாரர், இவ்விடத்தில் வீற்றிருந்து அருள்புரிகிறார்      
             
சிறப்பம்சம்:    அதிசயத்தின் அடிப்படையில்: அகத்தியரால் வெண்மணலில் பிடித்து வைக்கப்பட்ட சிவன் இங்கு இருவாலுக நாயகராக அருள்பாலிக்கிறார்.

கவிராஜ காளமேகம்!

கவிராஜ காளமேகம்!

கல்வி இருக்குமிடத்தில் செல்வம் இருக்காது. செல்வம் இருக்கும் இடத்தில் கல்வி இருக்காது. அதாவது... கலைமகள் இருக்கும் இடத்தில் அலைமகள் இருக்கமாட்டாள் அலைமகள் இருக்கும் இடத்தில் கலைமகள் இருக்கமாட்டாள்! பெரும் தமிழ்க்கவிஞர்கள் எல்லாம் சாப்பாட்டுக்கே திண்டாடிய கதையை அறிந்தால் இது உண்மை என்பது புலப்படும். தமிழ் வளர்த்த அந்த புலவர்களில், பலரது பெயர்கள்கூடத் தெரியாமல் போய் விட்டன. தெரிந்த புலவர்களின் பாடல்களும் அர்த்தம் தெரியாததால், அநாதைகளாகிப் போய்விட்டன. அப்படி அந்த புலவர்கள் எல்லாம், தாம் வறுøயில் நாடி உருக்குலைந்து போனாலும், தங்கள் தமிழைத் துருப்பிடிக்க விடவில்லை. அவர்களில் ஒருவர் தன்னுடைய நிலையை வெளிப்படுத்திய பாடல் இது. இந்திரனில் ஆரம்பித்து, குபேரனில் முடித்திருக்கிறார் பாடலை!

இந்திரன் கலையாய் என் மருங்கு இருந்தான். அதாவது, இந்திரன் என் இடுப்பில் ஆடையாக இருந்தான் என்கிறார் புலவர். இந்திரன் இவ்வாறு ஆடையாக மாறி அடுத்தவரை அலங்கரித்ததாக இதிகாச புராணங்கள் எதிலும் இல்லை. பிறகு புலவர் ஏன் அவ்வாறு சொல்ல வேண்டும். கவுதம முனிவரின் சாபத்தின் காரணமாக இந்திரனுக்கு உடம்பில் ஆயிரக்கணக்கான கண்கள் இருந்தன. அதனாலேயே அவனுக்கு ஸகஸ்ராட்சன் என்ற பெயரும் உண்டு. அவன் வந்து எனக்கு ஆடை (வேட்டி)யாக இருந்தான் என்றால்... எனது வேட்டியிலும் ஆயிரம் கண்கள் (ஓட்டைகள்) உள்ளன. அதாவது பீற்றல் வேட்டி என்கிறார் புலவர்! அடுத்து... துணிக்கே வழியில்லாதபோது, சோற்றுக்கு எங்கே போவது? ஜீரணம் செய்வதற்கு ஏதுமில்லாததால், அக்னி பகவான் என் வயிற்றில் எரிந்து கொண்டிருக்கிறான் என்கிறார்.

தொடர்ந்து அவர், இவ்வாறு துணிக்கும் சோற்றுக்கும் வழியில்லாமல் திரியும் என்னிடம் யமன் கூடப் பக்கத்தில் வர மாட்டான் என்கிறார். அந்த புலவரைப் பார்த்ததும், சிவபெருமான் பிட்சாடன மூர்த்தியாக வருவதைப் போல இருக்கும். ஏற்கனவே மார்க்கண்டேயனைப் பிடிக்கப் போய், சிவபெருமானிடம் உதைபட்டது அவனுக்கு நினைவுக்கு வராதா என்ன? அந்த எண்ணத்தில்தான் யமன் கூட அருகில் வரமாட்டான் இந்த நிலையில் நிருதி - வாயு பகவான்தான் (தென்மேற்கு திசைக்கு அதிபதி) என்னிடம் வந்து, என்ன செய்யப் போகிறான்? வரமாட்டான்! உடல்மெலிந்து உள்ளம் உடைந்து இருக்கும் தன் பக்கம் காற்று கூட வீசாது என்கிறார் புலவர். வருணனோ என் இருக் கண்களையும் விட்டு அகலாமல் இருக்கிறான் என்கிறார். அதாவது அவர் கண்களில் இருந்து எப்போதும் கண்ணீர் வழிந்துகொண்டிருக்கிறது என்பது பொருள். இப்படிக் கண்ணீர் விட்டுக்கொண்டே இருந்தால், கட்டிய மனைவிக்கும் குழந்தைகளுக்கும் பசிக்காதா என்றால்... நானும் என் மனைவி- மக்களும் காற்றையே உணவாகக் கொள்கிறோம் என்கிறார் புலவர். அதாவது, உண்ண ஏதுமில்லை என்பது பொருள்.

இப்படிப்பட்ட நிலையில் இருக்கும் எனக்கு இணையாக, இந்த உலகில் யார் இருக்கிறார்கள்? என்று கேட்பவர், எப்போதும், இப்படி பெருமைகளை வரிசையாகப் பெற்று தரித்திர ராஜனைத் தலை வணங்கி நிற்கும் என்னைக் காப்பாற்றவேண்டியது, மன்னா... உனது பொறுப்பு. அதைச் செய்தால், உன்னை ஈசனாகவே நினைப்பேன் என்று பாடலை முடிக்கிறார் புலவர். திருவானைக்கா அன்னை அகிலாண்டேஸ்வரியை நேருக்கு நேராகத் தரிசித்தவர், தமிழ் புலவர்களில் எமகண்டம் பாடிய ஒரே புலவர்... கவிராஜ காளமேகம்!

அவர் எழுதிய அந்தப் பாடல்...

இந்திரன் கலையாய் என் மருங்கு இருந்தான்
அக்கினி உதரம் விட்டு அகலான்
எமன் எனைக்கருதான் அரன் எனக் கருதி
நிருதிவந்து என்னை என் செய்வான்
அந்தமாம் வருணன் இருகண் விட்டு அகலான்
அகத்துறு மக்களும் யானும்
அனிலமதாகும் அமுதினைக் கொள்வோம்
யார் எனை உலகினில் ஒப்பார்
சந்ததம் இந்த வரிசையைப் பெற்றுத்
தரித்திர ராசனை வணங்கித்
தலை செயும் என்னை நிலை செய் கல்யாணிச்
சாளுவத் திருமலைராயன்
மந்தர புயனாங் கோப்பய னுதவு
மகிபதி விதரண ராமன்
வாக்கினால் குபேரனாக்கினால் அவனே
மாசிலா ஈசனாவானே

இந்தப் பாடலில், அஷ்டதிக்குப் பாலகர்கள் எண்டிசைக் காவலர்கள் எனப்படும் எட்டு பேர்களின் பெயர்களைச் சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது. அறிஞர்களை, அறிவாளிகளை, கல்விமான்களை ஆதரிக்காத நாடு, எந்த வகையில் முன்னேறியிருந்தாலும் அது முன்னேற்றம் ஆகாது. ஆதரிக்க வேண்டியது அரசனின் கடமை. இந்தக் காலத்தில் அரசர்கள் ஏது? எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்பதற்கு ஏற்ப, நல்லோரை ஆதரிப்பது, நம் எல்லோரது கடமையும் ஆகும்.

அருள் மிகு திருக்காலடியப்பன் திருக்கோயில்


அருள் மிகு திருக்காலடியப்பன் திருக்கோயில்
 
மூலவர்: காலடியப்பன் (ஸ்ரீ கண்ணன்)
தல விருட்சம் : பவளமல்லி
தீர்த்தம் : பூர்ணாநதி
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : சசலம்
ஊர் : காலடி
மாவட்டம் : எர்ணாகுளம்
மாநிலம் : கேரளா
 
திருவிழா: அட்சய திரிதியை, ஆண்டு தோறும் கண்ணன் பிரதிஷ்டை திருவிழா கொண்டாடப்படுகிறது. திருவிழாவின்போது, தினமும் அபிஷேகம், கலசாபிஷேகம், நவதானிய பூஜை நடக்கும். திருவோணம், கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி, மகரசங்கராந்தி ஆகிய விழாக்களும் கொண்டாடப்படுகிறது. வியாழக்கிழமை இங்கு விசேஷ நாள்.   
       

சிறப்பு: இந்துக்களின் புனித பூமியான இங்கு இந்துக்கள் அனைவரும் சென்று தரிசிக்க வேண்டும். இங்குள்ள கண்ணன் விக்ரகம் 3.5 அடி உயரத்தில் "அஞ்சனா' எனும் கல்லால் ஆனது. இந்தக்கல்லில் இரும்பு, தாமிரம் அதிக அளவில் கலந்திருப்பதால் இதற்கு சக்தி அதிகம். பெருமாள் தலங்களிலேயே குருவாயூரில் உள்ள கண்ணன் சிலையும், இங்கும் மட்டுமே "அஞ்சனா' கல்லில் ஆன விக்ரகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.   
       
திறக்கும் நேரம்:காலை 5 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:நிர்வாக அறங்காவலர், அருள்மிகு திருக்காலடியப்பன் திருக்கோயில் காலடி தேவஸ்தானம், ஸ்ரீ கிருஷ்ணர் கோயில், காலடி, - 638 574. எர்ணாகுளம் மாவட்டம். கேரளா மாநிலம்.   
போன்: +91- 93888 62321.  
      
பொது தகவல்:கண்ணனின் வலது பக்கம் சிவன்,பார்வதி,கணபதி அருள்பாலிக் கின்றனர்.நமஸ்கார மண்டபத்தில் பரசுராமர் ஆதிசங்கரர் இருவரது சன்னதிகள் உள்ளன. இங்கு தொடர்ந்து தீபம் எரிந்து கொண்டிருக்கிறது.சுற்றுப்பகுதியில் ஐயப்பன் அருள்பாலிக்கிறார்.
 
பிரார்த்தனை:குழந்தைபாக்கியம் வேண்டுபவர்கள் நமஸ்கார மண்டபம் அருகே நின்று கண்ணனை வேண்டிக்கொள்கிறார்கள்.இங்குள்ள சின்னக்கண்ணனுக்கு வெண்ணெய் சாத்தி வழிபாடு செய்தால் வேண்டியது கிடைக்கும் என்பது ஐதீகம்.

கிரக தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள் திருமணத்தில் தடை உள்ளவர்கள் குழந்தைபாக்கியம் வேண்டுபவர்கள் வியாபார விருத்தி, கல்வி நடனத்தில் மேன்மை அடைய விரும்புபவர்கள் இங்கு நடக்கும் நவதானிய பூஜையில் கலந்து கொள்வார்கள்.
 
 நேர்த்திக்கடன்:பிரார்த்தனை நிறைவேறியவுடன் குழந்தையுடன் வந்து தொட்டில் கட்டுகிறார்கள். அத்துடன் குழந்தையை சன்னதி படிக்கட்டில் வைத்து காணிக்கை செலுத்தி எடுத்து செல்கிறார்கள்.  
      
தலபெருமை:தர்மத்தையும் நீதியையும் விட கருணையே பெரியது என நிலைநாட்டியவர் ஆதிசங்கரர்.இவரது குலதெய்வம்தான் கேரள மாநிலம் காலடியில் வீற்றிருக்கும் "திருக்காலடியப்பன்'. கண்ணபரமாத்மா தான் திருக்காலடியப்பனாக இங்கு அருள்பாலிக்கிறார்.தீவினைகளை கருணையால் மாய்த்த ஆதிசங்கரர் உலகுக்கே உபதேசம் செய்து "ஜகத்குரு' ஆனார்.அவரது குலதெய்வமான திருக்காலடியப்பன் இத்தலத்தில் உன்னி கிருஷ்ணனாக (சின்னக் கண்ணன்) அருள்பாலிக்கிறார்.இங்குள்ள கண்ணன் விக்ரகம் 3.5 அடி உயரத்தில் "அஞ்சனா'எனும் கல்லால் ஆனது. இந்தக்கல்லில் இரும்பு தாமிரம் அதிக அளவில் கலந்திருப்பதால் இதற்கு சக்தி அதிகம்.பெருமாள் தலங்களிலேயே குருவாயூரில் உள்ள கண்ணன் சிலையும் இங்கும் மட்டுமே "அஞ்சனா' கல்லில் ஆன விக்ரகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கோயில் அமைப்பு : மூலவரான திருக்காலடியப்பன் வலது கையில் வெண்ணெய் வைத்துள்ளார்.இடதுகை இடுப்பில் இருக்கிறது.வலது மேல்கையில் சக்கரம் இடது மேல்கையில் சங்கு வைத்திருக்கிறார்.  பெருமாள் கோயில்களில் கண்ணனின் அருகில் சிவ பார்வதி அருள்பாலிப்பது இங்கு மட்டும் தான் என்கின்றனர். இதன் அருகே தலவிருட்சமான பவளமல்லி உள்ளது.நுழைவு வாயில் முழுவதும் பித்தளை தகடு பதிக்கப்பட்டுள்ளது.இதில் குழலூதும் கண்ணனும் அமர்ந்த நிலையில் ஆதிசங்கரரும் அருளுகின்றனர். கோயிலின் எதிரில் சங்கரரின் தாய் ஆரியாம்பாள் சமாதி உள்ளது.

ஒரு அட்சய திரிதியை நாளில் தான் மகாலட்சுமி இங்கு தங்க நெல்லிக்கனி மழை பொழிந்தாள்.அதன் காரணமாக ஆண்டு தோறும் அட்சய திரிதியை நாளில் இங்கு கனகதாரா யாகம் சிறப்பாக நடக்கிறது.சங்கரர் வாழ்ந்த 32 ஆண்டை நினைவுபடுத்தும் வகையில் 32 நம்பூதிரிகள் இந்த யாகத்தை நடத்துகின்றனர்.யாகத்தின் முடிவில் பணம் செலுத்தியவர்களுக்கு பிரசாதமாக  தங்கநெல்லிக்கனியும் வெள்ளி நெல்லிக்கனியும் யந்திரமும் வழங்குகிறார்கள்.ஐயப்பன் சன்னிதானத்தின் முன்னால் "தத்வமஸி'என்று எழுதப்பட்டிருக்கும். "ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் கடவுள் இருக்கிறார்'என்பது இதன் பொருள்.தத்வமஸி கொள்கையை அத்வைதமாக உலகிற்கு வழங்கியவர் ஆதிசங்கரர்.அவர் அவதரித்த காலடி தலத்தையும் அங்குள்ள திருக்காலடியப்பன் கோயிலையும் ஐயப்பன் கோயில் செல்லும் பக்தர்கள் அவசியம் தரிசிக்க வேண்டும்.
 
தல வரலாறு:இவர் சிவனின் அம்சமாக அவதரித்தவர்.கேரள மாநிலம் காலடியில் வசித்து வந்த சிவகுரு ஆர்யாம்பாள் தம்பதியினருக்கு வெகு  நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது.இவர்கள் திருச்சூர் வடக்குநாதரிடம் குழந்தை வேண்டி வழிபட்டனர்.சிவனின் கருணையால் கி.பி.788ல் இந்த தம்பதியினருக்கு ஆதிசங்கரர் அவதரித்தார்.சங்கரரின் 3வது வயதில் அவரது தந்தை காலமானார். உறவினர்கள் உதவியுடன் சங்கரர் 5 வயதிற்குள் சாஸ்திரங்களை பயின்றார்.7 வயதிற்குள் வேதங்களை பயின்ற சங்கரர் திருமணம் செய்யாமல் தன் தாய்க்கு பணிவிடை செய்து வந்தார்.பின்னர் தாயின் அனுமதியை சமயோசிதமாகப் பெற்று, துறவு மேற்கொண்டார்.

பொன் மழை : சங்கரர் தனது குருகுல வாசத்தின் போது தினமும் பிட்சை எடுத்து குருவிற்கு அர்ப்பணித்த பிறகு, தான் உண்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.ஒருமுறை ஏகாதசி விரதம் இருந்த சங்கரர் மறுநாள் துவாதசி திதியில் பிட்சை கேட்டு அயாசகன் என்ற ஏழை வீட்டு வாசலில் நின்று"பவதி பிட்சாம்ம் தேஹி' என்றார்.வெளியே வந்த பெண்மணியிடம் உணவேதும் இல்லை. ஆயினும் தன்னிடம் உணவு கேட்டு வந்த பாலகனை வெறும் கையுடன் அனுப்ப மனமில்லாமல் காய்ந்து போன நெல்லிக்கனியை தானமாக வழங்கினாள்.சங்கரரின் கண்கள் குளமாகின.பிஞ்சு பாலகனின் நெஞ்சை உலுக்கிய இந்த செயல் உணர்ச்சி பிழம்பாக உருவெடுத்தது. உடனே சங்கரர் அந்த பெண்ணின் வறுமையை போக்க நினைத்து தன் குலதெய்வம் மகாவிஷ்ணுவின் மனைவி மகாலட்சுமியை குறித்து ஸ்தோத்திரம் பாடி துதித்தார்.19வது ஸ்தோத்திரம் பாடி முடித்தபோது, மகாலட்சுமியின் கருணையால் ஏழை பெண்மணி வீட்டில் தங்க நெல்லிக்கனி மழை பொழிந்தது.அதுவே "கனகதாரா ஸ்தோத்திரம்' என பெயர் பெற்றது.

காலடி பெயர்க்காரணம் : சங்கரரின் தாய் தினமும் நீண்ட தூரம் நடந்துசென்று பெரியாறு ஆற்றில் குளித்து அங்கிருந்த கண்ணனை தரிசனம் செய்து வந்தார். வயதாகிவிட்டதால் அவரால் நீண்ட தூரம் நடக்க முடியவில்லை.ஆனால் பெரியாற்றில் குளிக் காமல் இருக்கவும் முடியவில்லை.அம்மாவின் நிலை குறித்து சங்கரருக்கு வருத்தம் உண்டானது.அவரது ஆசையை நிறைவேற்ற கண்ணனை பிரார்த்தனைசெய்தார்.அப்போது அசரீரி தோன்றி"குழந்தாய்! நீ உனது காலால் அடி வைக்கும் இடத்தில் பெரியாறு உன்னைத்தேடி வரும்''என ஒலித்தது.என்ன ஆச்சரியம்? சங்கரர் காலால் அடி வைத்த உடனேயே ஆறு ஊருக்குள் புகுந்தது.அப்பழுக்கற்ற பெரியாறு நதி சங்கரரின் தாய் இருக்கும் இடம் தேடி ஓடி வந்தது. அதுவரை "சசலம்' என்ற பெயருடன் விளங்கிய கிராமம் இந்த நிகழ்ச்சிக்கு பின் "காலடி' என பெயர் பெற்றது.தன் தாயின் விருப்பத்தை நிறைவேற்றிய தன் குலதெய்வத்திற்காக, கி.பி 795ல் தானே ஒரு கோயில் கட்டி அதில் திருக்காலடியப்பனை பிரதிஷ்டை செய்தார் சங்கரர்.புதிய வழியில் ஓட ஆரம்பித்த பெரியாறு"பூர்ணா'என பெயர் பெற்றது.இதில் தான் முதன் முதலில் திருக்காலடியப்பனுக்கு ஆறாட்டு விழா நடந்தது.அன்று முதல் சங்கரரின் தாய் இங்கேயே குளித்து கண்ணனை வணங்கினார்.

முதலைக்கு முக்தி : ஒருநாள் சங்கரர் பூர்ணா நதியில் குளித்துக்கொண்டிருந்தார்.அவரது தாய் கரையில் அமர்ந்திருந்தார். அப்போது ஒரு முதலை சங்கரரின் காலை கவ்வியது.தாயின் கண்முன்னே இந்த சம்பவம் நடந்ததும் அலறிவிட்டார். கிராமமே திரண்டது.கொஞ்சம் கொஞ்சமாக முதலையின் வாய்க்குள் சங்கரரின் உடல் செல்ல தொடங்கியது.என்ன நடக்க போகிறது என்பதை அறிந்தார் சங்கரர். சந்நியாசம் வாங்கினால் தான் முதலை விடும்.இல்லாவிட்டால் விழுங்கிவிடும் என்பதை தாயிடம் கூறினார்.மகன் உயிர்பிழைத்தால் போதும் என்பதால் சந்நியாசத்திற்கு அனுமதி அளித்தார். உடனே முதலை சங்கரரை விடுவித்தது. முன்காலத்தில் துர்வாச முனிவரின் சாபத்திற்கு ஆளான ஒரு கந்தர்வனே முதலையாக மாறி அந்த ஆற்றில் கிடந்தான்.ஆதிசங்கரரின் ஸ்பரிசம் கிடைத்ததும் சாபவிமோசனம் பெற்றான்.இந்த ஆற்றில் குளித்து கண்ணனை வணங்கினால் சகல பாவங்களும் விலகும் என்பது நம்பிக்கை.
 
அடிப்படையில்: இங்குள்ள கண்ணன் விக்ரகம் 3.5 அடி உயரத்தில்"அஞ்சனா' எனும் கல்லால் ஆனது. இந்தக்கல்லில் இரும்பு தாமிரம் அதிக அளவில் கலந்திருப்பதால் இதற்கு சக்தி அதிகம். பெருமாள் தலங்களிலேயே குருவாயூரில் உள்ள கண்ணன் சிலையும் இங்கும் மட்டுமே"அஞ்சனா' கல்லில் ஆன விக்ரகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கந்தசஷ்டி விரதமும் அதன் சிறப்பும்

கந்தசஷ்டி விரதமும் அதன் சிறப்பும்
 
முருகன் துணை

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.
"அமரர் இடர் தீர அமரம் புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி"

சஷ்டி விரதம் ஐப்பசி மாத தீபாவளி அமாவாசையின் பின் அதாவது வளர்பிறை பிரதமை முதல் ஆரம்பித்து, ஆறாம்/ஐந்தாம் நாளான சஷ்டி திதி வரையான ஆறு தினங்களும் நோற்கப்படும் முருகப்பெருமானுடைய சிறப்பான நோன்பாகும்.

அறியாமை என்னும் அஞ்ஞான இருளை அகற்றி, மெய்ஞானமாகி மிளிர்கின்ற பரம்பொருளின் முக்திப் பேரருளை அடைவதற்காகச் சைவப் பெருமக்களால் அனுஷ்டிக்கப்படும் விரதங்களுள் தலையாயது கந்தசஷ்டி விரதம். முருகனுக்குரிய விரதங்கள் மூன்று. அவையாவன வெள்ளிக்கிழமை (வாரம்) விரதம், கார்த்திகை (நட்சத்திரம்) விரதம், கந்த சஷ்டி (திதி) விரதம் என்பனவாம். வல்வினை நீக்கி, வரும் வினை போக்கி, செல்வமும் செல்வாக்கும் தந்து; அழகும், அறிவும் தந்திடும் வள்ளி மணாளனை, வடிவேலனை வழிபடும் விரதங்களில் மிகவும் சிறந்தது இந்தக் கந்தசஷ்டி விரதமாகும்.

 

அனாதியாகவே "செம்பில் களிம்பு போன்று" ஆன்மாக்கள் ஆணவமலத்தால் பீடிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஆன்மாக்கள் இப்பூவுலகில் பிறந்ததன் நோக்கம் சகல இன்பங்களையும் அறவழியில் அனுபவித்து, இறுதியில் பிறப்பு, இறப்பு அற்ற மோட்ச நிலையில் இறைவனுடன் இரண்டறக் கலந்தற்கேயாகும். எனவே முருகப் பெருமானை வழிபடுவதன் மூலம் தமது கன்ம வினைகளை மிக விரைவில் அறுத்து ஆன்மாக்களின் இறுதி இலட்சியமாகிய மோட்சத்தினை இலகுவில் அடையலாம் என்பது ஐதீகம்.

ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும் மலங்களை மட்டுமன்றி ஆறுவகை எதிரிகளான காமம், கோபம், பேராசை, செருக்கு, மயக்கம், தற்பெருமை ஆகிய வகைகளை அழித்து முற்றுணர்வு, வரம்பிலாற்றல், தன் வயமுடைமை, வரம்பின்மை, இயற்கையுணர்வு, பேரருள் ஆகிய தேவ குணங்களை நிலை நாட்டுவதால் "ஒப்பரும் விரதம்" எனஸ்கந்தஷஷ்டி விரத மகிமை பற்றிக் கந்தபுராணம் சிறப்பாகப் புகழ்ந்து பேசுகின்றது.

கந்தசஷ்டி விரதம்; எல்லா முருகன் ஆலயங்களிலும் அதிவிஷேச அபிஷேக ஆராதனைகள், பூசைகள் நிறைந்த பக்தியான விரதமாக அனுஸ்டிக்கப் பெறுவதுடன் சூரன்போர் காட்சியும் வெகுசிறப்பாக நிகழ்தப்பெறுகின்றன.

முருகன் ஆலயத்தில் பக்தர்கள் உண்ணா நோன்பிருந்து; பக்திசிரத்தையுடன் முருகனை நினைந்துருகி வழிபட்டு, தியானத்திலும், பஜனை செய்வதிலும், கந்தரனுபூதி, கந்தசஷ்டிகவசம், கந்தரலங்காரம் ஓதுவதிலும், கந்தபுராணம்-பயன் கேட்பதிலும் தம்மை ஈடுபடுத்தி முருகனருள் வேண்டி நிற்பர்.

அத்துடன்; விரத முடிவு தினமான சஷ்டிதினம் (சூரன்போரில்) முருகன் வீசும் வேல் குறிதவறாது சூரனின் சகோதரர்களான; யானை முகம் கொண்ட தாரகன், சிங்க முகம் கொண்ட சிங்கன் கழுத்தில் வீழ்ந்து தலைகள் சாய்வதும்; பல மாயைகள் செய்து போர்புரிந்து கடைசியாக, நடுக்கடலில் மாமரமாய் நின்ற சூரன்-பதுமனை சங்காரம் "சங்கரன் மகன் சட்டியில் மாவறுப்பதை" (சங்கரன் புதல்வராகிய முருகப் பெருமான் சஷ்டித் திதியிலே மாமரமாகதோன்றிய சூரனை, இரண்டாக பிளந்து சாங்காரம் செய்யும் காட்சியை கண்டு) தரிசித்து தம் வினை போக்க பக்தர்கள் காதலாகி கசிந்துருகி நிற்கும் காட்சியும், கண்கொள்ளாக் காட்சிகளாகும்.

கொடுங்கோலாட்சி செலுத்திய ஆணவத்தின் வடிவமாகிய சூரனையும், கன்மத்தின் வடிவமாகிய சிங்கனையும், மாயா மலத்தின் வடிவமாகிய தாரகனையும், (ஆணவம், கன்மம், மாயை என்ற) அசுர சக்திகளையெல்லாம் அழித்து, நீங்காத சக்தியை கலியுக வரதனான முருகப் பெருமான் நிலை நாட்டிய உன்னத நாளே கந்த சஷ்டியாகும்.

கந்தசஷ்டி விரத நாட்களில், ஆன்மா மும்மலங்களையும் நீக்குவதற்குரிய பக்குவமான மனதுடன் தனித்து, விழித்து, பசித்துஇருக்க வேண்டும். உணவையும் உறக்கத்தையும் தவிர்த்து, தனித்திருந்து செய்யும் தவமே கந்தசஷ்டி விரதமாகும். உணர்வுகளை அடக்கி உள்ளத்தை ஒருநிலைப்படுத்தி கந்தப் பெருமானின் பெருமை பேசி இம்மைக்கும் மறுமைக்கும் சிறந்த வழியமைப்பதே இந்த விரதத்தின் பெறுபேறாக அமைகிறது.

கந்தசஷ்டி விரதத்தை முறையாக அனுஷ்டிப் போர்க்கு இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூன்று சக்திகளுக்கும் தலைவனான முருகப்பெருமானது பேரருள் கிட்டும். சஷ்டியன்று கந்தனுக்கு அபிஷேகம் செய்த பாலைப் பருகுவோர்க்கு புத்திர பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்!.

சகல செல்வங்களையும், சுகபோகங்களையும் தரவல்ல இந்த விரதம் புத்திரலாபத்துக்குரிய சிறப்பான விரதமுமாகும்."சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்பதற்கேற்ப; ஸ்கந்தஷஷ்டியில் விரதமிருந்தால் ”அகப் பையாகிய"கருப்பையில்" கரு உண்டாகும் என்பதும்; கந்தர் சஷ்டி விரதத்தை முறையாகக் கைக்கொள்வதால் அகப்"பை" எனும்"உள்ளத்தில்" நல்ல எண்ணங்களும் பக்தி எனும் பாதையால் எழுந்த அமைதியும் அமையும் என்பதும் மறை பொருள்களாகும்.

அறிவு வளர்ச்சிக்கு விஞ்ஞானம் உதவுவதைப் போன்று மன வளர்ச்சிக்கு சமயம் அடிகோலுகின்றது. இறைவன் ஒருவன், அவன் மக்களின் தந்தை என்றெல்லாம் போதிப்பதன் மூலம் அன்பு, சகோதரத்துவம் போன்ற ஜீவ ஊற்றுகளை அருளி மக்களின் வாழ்வு நலம் பெறச் சமயம் உதவுகின்றது. நல்லவர்களைப் பாதுகாக்கவும் தீயவர்களை அடக்கவும் தர்மத்தை நிலை நாட்டவும் யுகந்தோறும் இறைவன் அவதாரம் செய்தருளுகின்றான்.

தனு, கரண, புவன, போகங்கள் அனைத்தையும் படைத்தலும், காத்தலும், அழித்தலும் இறைவனது இடையறாத திருவிளையாடல்கள். இறைவனை உணர்ந்து அவனைச் சரணடைந்தால் அழிவில்லாத பேரின்பம் அடையலாம் என்பது சமயங்கள் காட்டும் பேருண்மை. இறைவனது திவ்ய அவதாரத்தையும் செயலையும் யாரொருவர் உள்ளபடி அறிகின்றார்களோ அவர்கள் மீண்டும் பிறவாமல் இறைவனையே அடைந்து விடுகிறார்கள் என்று கீதையில் கிருஷ்ணபகவான் கூறியுள்ளார்.

தெய்வ அவதாரங்களில் தீய சக்திகளை அடக்கி நல்லவர்களைக் காத்தார்கள் என்றால் இச்செயல்கள் தீமைகளை நீக்கி நன்மைகளையே செய்து மக்கள் உய்ய வேண்டும் என்று போதிப்பதற்கே நிகழ்ந்தன என உணர்ந்து பக்தியுடன் வாழ்ந்து இகபர நலன்களை அடைய முயலவேண்டும். இத்தகைய அவதார இரகசியத்தை விளக்கி மக்கள் உய்வதற்கு உகந்த பெருவழிகளை விளக்கிக் காட்டுவதே ஆறுமுகப்பெருமானின் அவதாரம்.

வசிட்ட மாமுனிவர் முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு சஷ்டி விரத மகிமையையும் வரலாற்றையும் விதிமுறைகளையும் உபதேசித்த பெருமையையுடையது. அரசர்கள், தேவர்கள், முனிவர்கள் பலரும் இந்த விரதம் அனுஷ்டித்து வேண்டிய வரங்களைப் பெற்றதோடு, இம்மை இன்பம், மறுமை இன்பம் ஆகியவற்றை பெற்றனர்.