ஞாயிறு, 8 நவம்பர், 2020

உயிர் பிரியும் போது தச வாயுக்களின் பங்கு

உயிர் பிரியும் போது தச வாயுக்களின் பங்கு :

உடலை விட்டு


இந்த இடத்தில் உயிர் பிரிய வேண்டும் என முன்பே தீர்மானிக்கப்பட்டுள்ள இடத்தில்தான் உயிர் உடலை விட்டு பிரியும்.

மனித உடலில் பத்துவித வாயுக்கள் உண்டு . இவை தச வாயுக்கள் எனப்படும்.

1. உயிர் காற்று. (பிராணன்)
2. மலக்காற்று. (அபானன்)
3. தொழில் காற்று. (வியானன்)
4. ஒலிக்காற்று. (உதானன்)
5. நிரவுக்காற்று.( சமானன்)
6. தும்மல் காற்று. (நாகன்)
7. விழிக்காற்று. (கூர்மன்)
8. கொட்டாவிக் காற்று. (கிருகரன்)
9. இமைக் காற்று. (தேவதத்தன்)
10. வீங்கற் காற்று. (தனஞ்சயன்)

உயிர் வெளியே புறப்படும் நாள் , நேரம் நெருங்கியுடன் உடலின் அனைத்து செல்களும் முடக்கப்பட்டு, எல்லாவித வாயுக்களின் வழிகளும் ஒவ்வொன்றாக அடைக்கப்பட்டுக் கொண்டே வரும்.

உதாரணமாக . . . .
ஒரு வீட்டை நாம் காலி செய்யும்போது எப்படி எல்லா பொருள்களையும் ஒழுங்காக அடுக்கி கட்டி கொண்டுவந்து நடு வீட்டில் வைத்து பின் அங்கிருந்து சரியாக எண்ணி ஒவ்வொன்றாக வெளியே கொண்டு செல்வது போல , நமது அனைத்து அவயங்களும் ஒவ்வொன்றாக முழுச் செயலையும் , ஒவ்வொன்றாக நிறுத்தி , நமது நடுநெஞ்சுக்கு கொண்டு வந்து வைத்து உயிர் வெளியேற வழி வகுத்து கொடுக்கும்.

சிலருக்கு கண்களின் வழியாகவும், சிலருக்கு வாயின் வழியாகவும், வேறு சிலருக்கு உச்சிமண்டையின் வழியாகவும் , இன்னும் சிலருக்கு ஆசன துவாரத்தின் வழியாகவும் , மூத்திர வாசல் வழியாகவும் , காதின் வழியாகவும் , மூக்கின் வழியாகவும், தொப்புள் குழி வழியாகவும் உயிர் வெளியேறும் .

ஒன்பது காற்றும் நிறுத்தப்பட்டு , அவயங்களும் முழு நிறுத்தம் கண்டு , எந்த வழியாக உடலை விட்டு உயிர் வெளியேற வேண்டுமோ அந்த வழியாக தனஞ்சயன் என்ற அந்த வாயு மற்றவற்றையும் வெளியே அழைத்து செல்லும்.உயிர் பிரியும் .

மீண்டும் பிறப்பெடுக்கும் காலம் வரும்போது அதற்கென குறிப்பிட்ட தாயின் கர்ப்பத்தில் சேர்ப்பிக்கும் வேலையும் அந்த தனஞ்சயன் செய்வது தான் .

உயிரற்ற உடல்களை ஸ்ரீராகவேந்திரர் போன்ற மகான்கள் பிழைக்க வைப்பதுவும் இந்த தனஞ்சயனை தம் யோக சக்தியால் ஊக்கி விட்டு மற்ற ஒன்பது வாயுக்களை அழைத்து வரச்செய்து உடலினுள் புகுத்தி உயிர் அளிப்பதே ஆகும் .இவ்வாறாக புனரபி ஜனனம் , புனரபி மரணம் .
என்ற நிலை அமைகிறது .

பிறப்பின் துவக்கம் ஆசையின் தூண்டலால் அமைகிறது.
பாபங்களும் , புண்ணியங்களும் அற்ற சம நிலையை அடைவதே பிறப்பற்ற நிலையைத் தரும் , அதுவே ஒவ்வொரு மனிதரும் காண வேண்டிய உன்னதமான முக்தி நிலையாகும்.

#தச_வாயுக்களின்_சுற்று:

1. பிராணன் - மூலாதரத்தில் ஆரம்பித்து மூக்கு வழியாக மூச்சு விடல், பூச உதவமு குரல்வளையில் உள்ளது. கை,கால்களை வேலை செய்ய பெரு விரல் உள்ளது.
2. அபானன் - சுவாதிட்டானத்தில் இருந்து வெளிப்பட்டு மலத்தை கீழ் நோக்கி தள்ளும், ஆசனவாயை சுருக்கும். அன்னத்தை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்கும்.குறியில் காம வேகத்தை உண்டு பண்ணும்.

3. வியானன் - தோளிலிருந்து எல்லா நரம்பிலும் அசையும் அசையாபொருளில் உருப்புக்களைநீட்ட மடக்க உணர்ச்சிகளை அறியவும் உணவின் சாரத்தை கொடுத்து உடலைக்காக்கும்.

4. உதானன் - உணவின் சாரத்தை கொண்டு செல்லும் உடலை எழுந்து நிற்க உதவும். மேல் நோக்கி இயங்கும் வாயு.

5. சமானன் - நாபியிலிருந்து கால் வரை பரவும் வாயுக்களை அதிகப்படாமல் சரி செய்யும், உண்ட உணவு செரித்தவுடன் எல்லா இடங்களுக்கும் அனுப்புகிறது.

6. நாகன் - அறிவை வளர்க்கும், கண்களை திறப்பதற்கும், மயிர் சிலிர்க்க, இமை மூட வேலை செய்யும். வாந்தி எடுத்தால் துப்புதல் ஆகிய வேலை செய்யும்.

7. கூர்மன் - மனதில் கிளம்பி, கண் இமை, கொட்டாவி, வாய் மூட, கண்திறந்து மூட, கண்ணீர் வர வேலை செய்யும்.

8. கிருகரன் - நாக்கில் கசிவு, நாசி கசிவு உண்டுபண்ணும், பசி வர வைக்கும், செயல் புரிய, தும்மல் இருமலை உண்டு பண்ண.

9. தேவதத்தன் - சோம்பல், தூங்கி எழுகையில் அயர்ச்சி, தாக்குதல், கண்களை அசைத்தல், சண்டையிடுதல், தர்க்கம் பேசல்.

10. தனஞ்செயன் - மூக்கிலிருந்து உடல் முழுதும் வீக்கம் பண்ணும், காதில் கடல் அலை இரைச்சல் போல் இரைத்தல், இறந்த மூன்றாம் நாள் தலை வழியாகவெழியே செல்லுதல்.

குழந்தை கருவில் உற்பத்தியாகும் போது தச வாயுக்கள்தான் அவற்றின் வளர்ச்சியை நிர்மானிக்கின்றன.
#ஹரிஓம்.#ஓம்நமசிவாய!

சனி, 7 நவம்பர், 2020

திருமழிசையாழ்வார்

4. திருமழிசையாழ்வார்

பிறந்த ஊர் : திருமழிசை (காஞ்சிபுரம் அருகில்)
பிறந்த நாள் : கி.பி.7ம் நூற்றாண்டு
நட்சத்திரம் : தை மகம் (தேய்பிறை பிரதமை திதி)
கிழமை : ஞாயிறு
தந்தை : பார்க்கவ முனிவர்
தாய் : கனகாங்கி
எழுதிய நூல் : நான்முகன் திருவந்தாதி, திருச்சத விருத்தம்
பாடல்கள் : 216
சிறப்பு : திருமாலின்ஆழி என்ற சக்கரத்தாழ்வாரின் அம்சம்,
பிற பெயர்கள் : மழிசைப்பிரான், மஹீஸாபுரீஸ்வரர், பக்திஸாரர், பார்க்கவர்.

சக்கரத்தாழ்வாரின் அம்சமான திருமழிசை ஆழ்வார் பார்க்கவ மகரிஷியின் மகனாக திருமழிசை என்னும் திருத்தலத்தில் அவதரித்தவர். பிரம்பறுக்க வந்த திருவாளன் என்பவர் இவரை எடுத்துச்சென்று வளர்த்தார். ஆனால் ஆழ்வார் பிறந்தது முதல் பால் கூட குடிக்கவில்லை. இதைக்கேள்விப்பட்ட வேளாளர் ஒருவர் தன் மனைவியுடன் பசும்பாலை காய்ச்சி எடுத்து வந்து இவருக்கு கொடுத்து அருந்தக் கூறினார். இப்படியே தினமும் வேளாளர் கொடுத்த பாலை குடித்து வந்த ஆழ்வார். ஒரு நாள் சிறிது பாலை மட்டும் அருந்தி விட்டு மீதியை அவர்களிடமே அருந்தக் கூறினார். மனைவியுடன் அந்த பாலை அருந்திய வேளாளர் தன் முதுமை நீங்கி இளமை பெற்றார். பாலின் மகிமையால் இவர்களுக்கு பிறந்த குழந்தைக்கு கனிக்கண்ணன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். களிக்கண்ணனும் திருமழிசை சீடர் ஆனார். பல சமயங்களில் உள்ள குறைபாடுகளை அறிந்த ஆழ்வார் கடைசியில் சைவ சமயத்தை சார்ந்திருந்தார். ஆழ்வார்களில் ஒருவரான பேயாழ்வார், திருமழிசை ஆழ்வாரை வைணவ சமயத்தை ஏற்கச் செய்ததுடன் திருமந்திர உபதேசம் செய்தார். ஒருமுறை காஞ்சிபுரம் சென்ற ஆழ்வார் அங்குள்ள திருவெங்குடி திருத்தல பெருமாளுக்கு பல ஆண்டுகள் தொண்டாற்றி வந்தார். அங்கு ஆசிரமத்தை சுத்தம் செய்யும் மூதாட்டியின் விருப்பப்படி அவளுக்கு இளமை வரம் கொடுத்தார். இவளின் அழகில் மயங்கிய பல்லவ மன்னன் இவளை தன் மனைவியாக்கினான். தனக்கும் இளமை வரம் வேண்டும் என்று விருப்பப்பட்ட மன்னன். ஆழ்வாரின் சீடனான களிகண்ணனிடம் தனக்கும் இளமை வரம் கேட்டான். ஆனால் எல்லோருக்கும் ஆழ்வார் வரம் தர மாட்டார் என களிக்கண்ணன் கூறியதால் அவனை நாடு கடத்த மன்னன் உத்தரவிட்டார். இதையறிந்த ஆழ்வார் சீடனுடன் தானும் வெளிறே முடிவு செய்து காஞ்சி வரதராஜப் பெருமாளிடம் நாங்கள் இல்லாத இடத்தில் உனக்கும் வேலை இல்லை எனவே நீயும் எங்களுடன் வந்து விடு என அழைத்தார். பெருமாளும் தன் பாம்பணையை சுருட்டிகொண்டு ஆழ்வாருடன் சென்றார். இதனால் இந்த பெருமாளுக்கு சொல் வண்ணம் செய்த பெருமாள் என்ற பெயர் வழங்கப்படுகிறது. அதன் பின் கும்பகோணம் வந்த ஆழ்வார் நீண்ட காலம் அங்கிருந்து பெருமாளுக்கு சேவை செய்து திருவடியை அடைந்தார். பெருமாளின் 108 திருப்பதிகளில் திருமழிசை ஆழ்வார் தனியாக சென்று 2 கோயில்களையும் பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து 11 கோயில்களையும் என மொத்தம் 13 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்


பேயாழ்வார்


 3. பேயாழ்வார்

பிறந்த ஊர் :  மயிலாப்பூர்
பிறந்த நாள் : ஏழாம் நூற்றாண்டு
நட்சத்திரம் : ஐப்பசி சதயம் (வளர்பிறை தசமி திதி)
கிழமை : வியாழன்
எழுதிய நூல் : மூன்றாம் திருவந்தாதி
பாடல்கள் : 100
சிறப்பு : செவ்வல்லி மலரில் பிறந்தவர், திருமாலின் கட்கம் என்னும் வாளின் அம்சம் (நந்தகாம்சம்)
பிற பெயர்கள் : கைரவமுநி, மஹதாஹ்வயர்

இவர் சென்னையிலுள்ள ஆதிகேசவப்பெருமாள் கோயில் அருகிலுள்ள குளத்தில் அதிசயமாக மலர்ந்த செவ்வரளிப்பூவில்  பிறந்தவர். சிறுவயது முதல் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார். அவர் மனம் எப்போதும் பரமனின் திருவடியையே நாடி நின்றது. திருமாலின் திருப்புகழை பாமாலையாக்கி நாள்தோறும் தொடுப்பார் இவர். அப்பொழுது இவர் கண்களில் ஆனந்த வெள்ளம் கரை புரண்டோடும். திருமாலின் திருப்பாதம் பணியுங்கள். உங்கள் வினைகள் ஓடிப்போகும். அத்துடன் மீண்டும் உங்களை தொடாது. இதையே

அகநன்று, இது தீது என்று ஐயப்படாதே
மது நன்று தண் துழாய் மார்வன்-பொது நின்ற
பொன்அம் கழலே தொழுமின் ! முழு வினைகள்
முன்னம் கழலும் முடிந்து

என்ற பாடலால் உணர்த்தியுள்ளார். இவர் நூறு பாசுரங்கள் கொண்ட மூன்றாம் திருவந்தாதியை அருளினார். முதலாழ்வார்கள் எனப்பட்ட பூதத்தாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வாரில் இவர் தான் அதிகமான ஸ்தலங்களைப்பாடியுள்ளார். அத்துடன் பதினைந்து திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்துள்ளார். திருக்கோவிலூரில் உள்ள ஒரு வைணவரின் வீட்டில் விளக்கு வெளிச்சத்தில் நாராயணன் நிற்பது முதலில் பேயாழ்வாருக்கு தான் தெரிந்தது. இப்படி பரமனைக் கண்ட பரவசத்தில் திருக்கண்டேன். பொன்மேனி கண்டேன் என்று துவங்கி நூறு பாடல்களை பாடினார். மேலும் திருவேங்கடம் சென்ற இவர் பெருமானை சிவனும், விஷ்ணுவும் கலந்த உருவாக கண்டார். பெருமாள் மேல் ஆராக்காதல் கொண்டு வேறு எதையும் நினைக்காமல் வாழ்ந்தார். பேயனாயொழிந்தே ஏனம்பிரானுக்கே என்று பாடியருளினார். பக்தி பரவசத்தில் அதுவே ஒரு வெறிபோல் தோன்றும்படி அவர் அழுவார். தொழுவார். ஆடிக் காண்பார் இறை பக்தியில் தன்னை முழுதும் மறந்து போனதால் இவர் பேயர் போலும் பித்தர் போலும் திரிந்தார். இதனாலேயே இவர் பேயாழ்வார் என் அழைக்கப்பட்டார். பெருமாளின் 108 திருப்பதிகளில் பேயாழ்வார் தனியாக சென்று 1 கோயிலையும், பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து 11 கோயில்களையும் என மொத்தம் 12 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.

சுவாமிநாத தேசிகர்

சுவாமிநாத தேசிகர்

செஞ்சொற் புலவர்க்கு அன்புற்ற திருச்செந்திற் குமரப் பெருமானே! என்று புகழ்வார் திருப்புகழ் அருணை முனிவர். அப்படி, செந்தமிழ்ப் புலவர்கள் செந்திற் கந்தனை இன்புற்றுப் பாடிப்பரவிய எத்தனையோ  அருட்பனுவல்கள் உள்ளன. அந்தப் பாமாலைகளில் ஒப்பற்ற ஓர் அருட்பிரபந்தம்தான் திருச்செந்திற் கலம்பகம். செந்தமிழ் மொழியில் பலவிதமான பாவகைகளைக் கொண்டு தொகுக்கப்பெற்றது இது. கற்பவர் மனத்தைக் கவரும் அம் சொற்களும், செம்பொருளும், பல சந்தநயங்களும் அமைந்த பக்திச்சுவை பழுத்துத் தித்திக்கப்பெறும் கற்பகம் போன்றது திருச்செந்திற் கலம்பகம். இதை இயற்றிய சுவாமிநாத தேசிகர் யார்?

பாண்டிய நாட்டில், சைவ வேளாளர் குலத்தில் தோன்றியவர் சுவாமிநாதர், இளமையிலேயே திருக்கயிலாயப் பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்தின் தொடர்பு கிடைத்தது. அங்கு ஞானதேசிகராக இருந்த அன்பலவான பண்டார சந்நிதிகள், சுவாமிநாதருக்கு சைவ சமய விசேஷ தீøக்ஷகளை அளித்தார். அவரிடம் துறவறம் பெற்று, நித்திய நியமங்களை வழுவாமல் செய்து, அறநூல்களைக் கற்றுணர்ந்தார். ஆதீன தேசிகரிடம் சிறந்த தொண்டராய்த் திகழ்ந்தார். திருநெல்வேலியில் வாழ்ந்த மயிலேறும் பெருமாள்பிள்ளை என்பவர் கல்லாடம் என்னும் உயர் செந்தமிழ் நூலுக்கு உரை எழுதியவர். அவர் ஒருமுறை சுவாமிநாத தேசிகரைச் சந்தித்தார். இவருடைய அறிவின் மிகுதியையும், ஒழுக்கம், அன்பு முதலான நற்குணங்களையும் கண்டு வியந்தார். இளமைப் பருவத்தில் இத்தகைய உயர்ந்த பண்புடையவருக்குத் தாம்கற்ற நூல்களைப் போதிக்க விருப்பம் கொண்டார். ஆதீன கர்த்தரிடம் அனுமதி பெற்று, இவரை அழைத்துச்சென்று தமது இல்லத்தில் தங்கவைத்து, பல அறநூல்களைக் கற்பித்தார். செப்பறை என்ற ஊரில் வாழ்ந்த கனகசபாபதி சிவாச்சாரியர் சிறந்த வடமொழி வல்லுநர். அவரிடம் தேசிகரை அழைத்துச் சென்று வியாகரண நூல்களை அறிந்துகொள்ள வழிசெய்தார் பிள்ளையவர்கள். இவ்வாறு தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் சிறந்த புலமைபெற்ற சுவாமிநாத தேசிகர், மீண்டும் திருவாவடுதுறையை அடைந்து, தம்பிரானை வணங்கினார் இவரது கல்வித்திறமையைக் கண்டு மிகவும் மகிழ்ந்தார் தம்பிரான். அக்காலத்தில் இலக்கண இலக்கியங்களில் உள்ள பல அரிய செய்திகளைத் திரட்டி இலக்கணக் கொத்து என்ற நூலையும், தசகாரியம் என்ற ஞான நூலையும் செய்தருளினார்.

பெரும்புலவர் வைத்தியநாத நாவலர் என்பவர், இலக்கண விளக்கம் என்ற நூலை இயற்றியவர். திருவாரூரைச் சேர்ந்தவர். அவர் ஒருநாள் ஆதீனத்தில் சுவாமிநாதரைச் சந்தித்தபோது அவரது கல்வி கேள்வி ஞானத்தை உணர்ந்து தொல்காப்பியம் முதலான நூல்களை எழுத்தெண்ணிப் படித்த சுவாமிநாத மூர்த்தியா தாங்கள்? என்று மிகவும் வியந்து பாராட்டினார். அப்போது ஆதீன கர்த்தர் சுவாமிநாத தேசிகருக்கு ஆசார்ய அபிஷேகம் செய்வித்து, ஈசான தேசிகர் என்னும் அபிஷேகப் பெயர் சூட்டினார். அதோடு அவரை திருநெல்வேலியில் தமது ஆதீனத்தைச் சார்ந்த மடாலயத்தில் இருக்கும்படி பணித்தார். சுவாமிநாத தேசிகரும் அந்த மடத்தில் ஈசான தேசிகர் மடம் என்ற பெயர் அமைந்தது. நன்னூலுக்கு விருத்தியுரை செய்த சங்கர நமசிவாய புலவர் தேசிகரது சீடர் ஆவார். திருச்செந்தூரில் நடைபெறும் விசேஷ நாட்கள் மற்றும் உத்ஸவங்களில் கந்தவேளை தவறாமல் தரிசித்து வரும் வழக்கத்தைக் கொண்டிருந்தார் சுவாமிநாத தேசிகர். அவ்வாறு ஒருமுறை செந்திலாண்டவர் சந்நிதியில் நின்று தன் மனம், மொழி, மெய்களால் அலைவாய் அழகனைத் தரிசித்தபோது கலம்பகம் பாடலாமே என்று ஒரு குரல் ஒலித்தது. தேசிகர் சுற்றுமுற்றும் திரும்பிப் பார்த்தபோது, அருகில் யாரையும் காணவில்லை. இது செந்தில்முருகன் ஆணை போலும்! என்று உணர்ந்து, திருச்செந்திற் கலம்பகம் என்னும் பாமாலையைப் பாடத் தொடங்கினார். முருகப் பெருமான் தமிழாகிய தென்கடலைக் கடக்கும் தோணி போல உள்ளான். சந்திரன், சூரியன் ஆகியோருக்கும் தன் பன்னிரு விழிகளால் அருள்பாலிக்கிறான். அத்தகைய முருகனுக்கு உரியதாகிய திருச்செந்திற் கலம்பகம் என்ற நூலை துறைசை நகர் சுவாமிநாத தேசிகன் துதி செய்து சமர்ப்பிப்பதாக இந்த நூலின் பாயிரச் செய்யுளில் பாடுகிறார் தேசிகர்.

கலம் என்பது பன்னிரண்டையும், பகம் என்பது ஆறு என்பதையும் குறிக்கும். அதாவது பதினெட்டு உறுப்புகளைக் கொண்ட சிற்றிலக்கியம் கலம்பகம், புயவகுப்பு, மதங்கு, அம்மானை, களி, சிந்து, இரங்கல், கைக்கிளை, தூது, வண்டு, தாழை, ஊசல், காலம் சம்பிரதம், கார், தவம், குறம், மறம், பாண் ஆகிய பதினெட்டு உறுப்புகள் உடையது. ஆயினும், சில நூல்களில் இருபத்தாறு உறுப்புகளும் உண்டு. கலம்பகம் கவிதைச்சுவையில் சிறந்தது. தமிழில் பல கலம்பகங்கள் இருப்பினும், கலம்பகத்துக்கு இரட்டையர் என்று இரட்டைப் புலவர்களைக் குறிப்பிடுவர் கலம்பகம் விருந்து எனப்படும் வனப்புடையது. செந்திற்கந்தன் விரும்பியபடி கலம்பகம் பாடி, அதனை அவன் அருள்மழை பொழியும் கோயிலில் அரங்கேற்றம் செய்தார் தேசிகர், இதனைச் செவிமடுத்த அறிஞர்களும் அடியார்களும், இதன் பக்திச்சுவையையும் இலக்கியச் சுவையையும் நன்கு ரசித்துப் பாராட்டினர். இதில் முப்பது பாடல்களை மட்டும் தேர்ந்தெடுத்து, செந்திலாண்டவர் இரவு பள்ளியறைக்கு எழுந்தருளும்போது, ஓதுவார்கள் அதனைத் தோத்திரம் செய்யும் வழக்கமும் பின்னாளில் ஏற்பட்டது. இதிலிருந்தே இந்தக் கலம்பகத்தின் அருமை பெருமைகளை நாம் உணர முடியும். இந்த நூலின் ஒவ்வொரு செய்யுளும் தித்திக்கும். கருத்தாழமும் சொல் அமைதியும் சிந்தனைக்கு விருந்தாகும். திருச்செந்தூருக்கு நீ அன்புடன் சென்று முருகனைத் தொழுது. மயிலும் வேலும் எனத் தொழு. ஏழ்வகைப் பிறப்பிலும் நீ பிறந்து உழல மாட்டாய்! என நெஞ்சுக்கு அறிவுறுத்தி இந்த நூலை நிறைவு செய்கிறார் சுவாமிநாத தேசிகர். இந்த அரிய நூலை சென்னை குரோம்பேட்டை குமரன்குன்றம் திருப்புகழ் மன்றத்தினர் 2008 ஆம் ஆண்டில் உரையுடன் வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லையிலா நலம் பெருகும் இயற்றமிழ் நாவலர் பலரும்
அல்லலுறா வகையினிலே அவிரும் உயர் இலக்கணமும்
கல்வியருள் நூல்பலவும் கலம்பகமும் எளிதில் அருள்
நல்லபுகழ் பெறுசாமி நாதர்சேர் பதம் போற்றி


வியாழன், 5 நவம்பர், 2020

பிராயச்சித்தம்

பிராயச்சித்தம்

ஸ்ரீமத் பாகவதத்திலே ஆறாவது ஸ்கந்தத்திலே #பரீக்ஷித்_மகாராஜா சுகப்பிரும்மரைப் பார்த்துக் கேள்விகள் கேட்கிறான்.

அதிலே ஒரு கேள்வி:

'சுவாமி! பிராயச்சித்தம் என்று சில கர்மாக்கள் சொல்லப்
பட்டிருக்கின்றன - பாபத்தைப் போக்குவதற்காக. பிராயச்சித்தம் எதற்காகச் செய்வது?

யானையைக் குளிப்பாட்டி விட்டால் அது மீண்டும் மண்ணை அள்ளித் தலையில் போட்டுக் கொள்கிறதே! அந்த மாதிாிதானே மனிதன் பிராயச்சித்தம் செய்தாலும் திரும்பவும் பாபத்தைப் பண்ணுகிறான்.

அப்படியானால் பிராயச்சித்தத்தினால் பிரயோஜனமில் லையே . அது வீண்தானே? '.அடியேன் மனத்தில் இவ்வாறு தோன்றுகிறது. அதைத் தெளிவிக்க வேண்டும் என்று சுகபிரம்மத்தைப் பார்த்து பரீக்ஷத் கேட்டதும் அவா் ரொம்ப சந்தோஷப்பட்டார்.

இந்த மாதிாி நுணுக்கமாகக் கேள்விகள் கேட்பாரைக் கண்டால் மகான்களுக்கு ரொம்பப் பிடிக்கும்.

சிஷ்யனானவன் பிரச்னமதியாக இருக்க வேண்டும் - அதாவது கேள்விகள் கேட்கும் புத்தி உடையவனாக இருக்க வேண்டும். அந்தக் கேள்விகள் பரீட்சார்த்தமாக இருக்கக்கூடாது. சாஸ்திர ரீதியாக இருக்க வேண்டும்.

பிரச்னோபநிஷத் என்ற உபநிஷத்தானது கேள்வி எப்படி கேட்க வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுக்கிறது.

பரீக்ஷத்தின் கேள்வியைக் கேட்ட சுகர் சொல்கிறார்

பிராயச்சித்தத்தினுடைய தன்மையை நீ தொிந்து கொள்.

ஒருத்தர் பிராயச்சித்த கர்மாவாக ஏகாதசி உபவாஸம் இருந்து, துவாதசி பாரணை பண்ணி, யாத்ரா தானம் பண்ணி, க்ஷேத்ராடனம் கிளம்புகிறார். . புண்ய நீராடிவிட்டுத் திரும்பி வந்து தசமி ராத்திாி உபவாஸம்; ஏகாதசி நிர்ஜல உபவாஸம். துவாதசி பாரணை பண்ணி அதற்கப்புறம் சகஸ்ரநாமம் சொல்லி, கீதையைப் பாராயணம் பண்ணி, ராத்திாி யோகம் என்ற நிலையில் பகவானைத் தியானம் பண்ணிக் கொண்டேயிருந்தால் ...பாபங்கள் அகலும்.

ஆனால் உபவாஸம் இருந்தவருக்கு உணவு உள்ளே போனதுமே உறக்கம் வருகிறது. அப்புறம் இரவெல்லாம் எவ்வாறு தியானம் செய்வார்? ஆனால் சாஸ்திரமோ 'தூங்காதே' என்கிறது.இதற்கு என்ன பண்ணலாம் என்று

கேட்டால் ஒரு வழியிருக்கிறது.

பகலவனைக்கண்ட பனிபோல் பாபம் நம்மை விட்டு விலக வேண்டுமானால் நாராயண நாமத்தை பாராயணம் பண்ணவேண்டும்.

'வாசுதேவ பாராயண: ' - திருஷ்டாந்தத்தோடு சொல்கிறாா் சுகபிரும்மம்.

ஒரு மகாிஷி காட்டு வழியே வருகிறாா். மூங்கிலெல் லாம் ஒன்றோடு ஒன்று உரசித் தீப்பிடித்து எரிகின்றன. காட்டைத் தகிக்கிறது அக்னி! மகாிஷி பார்த்துக் கொண்டேயிருக்கிறார் ஐயோ! இவ்வளவு பசுமையான காடு அழிந்து கருகிப் போய் விட்டதே! என்று ரொம்ப வருத்தம் அவருக்கு.

க்ஷேத்திராடனமெல்லாம் முடித்து, மூன்று மாதம் கழித்து அந்த வழியிலே திரும்புகிறாா். பார்த்தால், அந்த இடமெல்லாம் - காிக்கட்டையாக இருந்த இடமெல்லாம் - பசுமையாக ஆகிவிட்டது.

அப்போதுதான் அவர் மனத்திலே ஒன்று தோன்றியது. அக்னி இருக்கிறதே,, அது எல்லாவற்றையும் எரிந்தது - எதை எதை என்று பார்த்தால், பூமிக்கு மேல இருக்கும் படியான மரத்தை எரித்ததே தவிர பூமிக்குள்ளே இருக் கும்படியான வேரை அழிக்கக் கூடிய சக்தி அக்னிக்கு இல்லை.வேர் உள்ளே இருந்ததனாலே,மழை பொழிந்த துமே முளைத்துவிட்டன மூங்கில்கள்.

அந்த மாதிாிதான். எத்தனையோ பிறவிகள் நாம் அடைந்து , துர்லபோ மனுஷோ தேகோ என்று சொல்லப்படுகிற மனித ஜன்மாவை அடைந்திருக்கி றோம். பாபத்தைத் தூண்டக்கூடிய வாஸனா பலம் உள்ளுக்குள்ளே வேர் மாதிாி இருக்கிறது.

பிராயச்சித்த கர்மா இருக்கிறது பாருங்கள்...அது மேலே இருக்கிற மூங்கில்கள், செடி கொடிகளை அழிப்பது போல, பாவத்தை போக்குமேயொழிய, பாபங்களைச் செய்வதற்கு நம்மைத் தூண்டக்கூடிய, உள்ளே இருக்கிற கெட்ட வாசனைகளைப் போக்கடிக்காது.

அந்தச் சக்தி பிராயசித்த கர்மாக்களுக்குக் கிடையாது.

பாபங்களை வேரோடு களைய வேண்டுமானால்,

வாசுதேவ பாராயண: எம்பெருமானை உள்ளுக்குள்ளே நிலைபெறச் செய்ய வேண்டும். விடாமல் அவனை நினைக்க வேண்டும்.

பிரஹலாதனுக்கு இந்த அறுபடாத நினைவு சித்தித்தது.

சதா சர்வ காலம், சந்தத் தாரையாக விடாமல் அவனை யார் நினைக்கிறார்களோ, அத்தகையவர்களை மறுபடியும் பாபம் செய்கிற சித்தம் ஏற்படாமல் ரக்ஷிக் கிறான்...பரமாத்மா!

ஆகையினாலே, பரமாத்மாவை மனத்தில் தியானம் பண்ண, நாம் கெடுதல் நீங்கி பவித்ரமாகிறோம்.

புதன், 4 நவம்பர், 2020

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இவற்றை தெரியுமா?

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இவற்றை தெரியுமா?

மீனாட்சி அம்மனின் மற்றொரு பெயர் அங்கயற்கண்ணி, மீனாட்சி அம்மனின் அப்பா, அம்மா மலயத்துவசன், காஞ்சனமாலை, மீனாட்சி அம்மனின் சிலை மரகதக்கல்லினால் ஆனது. மீனாட்சி அம்மன் வலது கையில் கிளி வைத்திருப்பார், மீனாட்சி அம்மன் கோயில் குளத்தின் பெயர் பொற்றாமரைக் குளம், மீனாட்சி அம்மன் கோயில் விமானத்தின் பெயர் இந்திர விமானம். பஞ்ச சபைகளில் மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள சபையின் பெயர் வெள்ளியம்பல சபை. மீனாட்சி அம்மன் கோயிலில் கால் மாறி நடனமாடியவர் நடராஜர். மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள மிகப்பெரிய விநாயகர் பெயர் முக்குறுணி விநாயகர். மதுரையில் சிவபெருமானுக்குத் தொண்டு செய்த நாயன்மார் மூர்த்தி நாயனார், நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என கூறியவர் நக்கீரர். மீனாட்சி அம்மன் கோயிலிலுள்ள கோபுரங்கள் எத்தனை ? 14 கோபுரங்கள். மீனாட்சி அம்மன் கோயிலின் மிக உயரமானது தெற்கு கோபுரம். மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள புகழ்பெற்ற மண்டபம் எது? ஆயிரங்கால் மண்டபம் நவகிரக ஸ்தலங்களில் மீனாட்சி அம்மன் கோயில் புதன் ஸ்தலமாகும்.

மீனாட்சி குங்குமத்தில் காந்தம்: மதுரை மீனாட்சி குங்குமம் காந்தசக்தி மிக்கது என்கிறார் இங்கிலாந்து அறிஞர் சார்லஸ் டபிள்யூ லெட்பீட்டர். இவர் ஒருமுறை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வருகை தந்தார். அங்கே அவருக்கு குங்கும பிரசாதம் கொடுத்தார்கள். அடுத்து, சுந்தரேஸ்வரர் சந்நிதிக்கு சென்ற போது விபூதி தரப்பட்டது. இதை ஏன் இந்திய மக்கள் நெற்றியில் இட்டுக் கொள்கிறார்கள் என்பதை அறிய அவருக்கு ஆவல். உடனே, அதை பரிசோதனை செய்தார். அவற்றிலிருந்து காந்தசக்தி வெளிப்பட்டதை உணர்ந்தார். இது என் வாழ்வில் நான் கண்ட அதிசயம் எனதான் எழுதிய தி இன்னர் லைப் என்ற புத்தகத்தில் எழுதினார். இதை விட அதிசயம் ஒன்று உண்டு என்றும் அவர் சொல்கிறார். சில ஆண்டுகள் கழித்தபிறகு, அந்த குங்குமம், விபூதியை பரிசோதனை செய்தார். அப்போதும், முன்பு கண்ட அதே அளவு காந்தசக்தி சற்றும் குறையாமல் வெளிப்படுவது கண்டு அசந்து போனார். இப்படி ஓர் அதிசயத்தை நான் எந்த நாட்டிலும் கண்டதில்லை என்று அவர் எழுதி வைத்திருக்கிறார். நாம், மீனாட்சி குங்குமத்தை கோயில் தூண்களில் கொட்டி வைத்து பாழாக்கிக் கொண்டிருக்கிறோம். இனிமேலாவது, அன்னையின்  குங்குமத்தை அளவோடு வாங்கி, பூஜையறையில் பத்திரமாக வைப்போம். அன்னையின் அருட்கடாட்சம் என்று நிலைத்திருக்கச் செய்வோம்.


சாப்பாட்டை சிந்தக்கூடாது.... ஏன் தெரியுமா?

சாப்பாட்டை சிந்தக்கூடாது.... ஏன் தெரியுமா?

தனக்கு தேவையான உணவை தானே சமைத்துக் கொள்வதை சுயம்பாகம் என்பர். மற்றவர்கள் சமைக்கும் உணவை விட இது உயர்வானது. ஏனென்றால், சமைப்பவரின் எண்ணங்கள் சமையலைப் பாதிக்கும். சமைக்கும்போது, தெய்வ சம்பந்தமாகவே கடவுளின் திருநாமத்தைச் சொல்லிக் கொண்டே சமைக்க வேண்டும். சாப்பிடும்போது, நான் உண்ணும் இந்த உணவைக் கடவுளுக்கு அர்ப்பணிக்கிறேன், என்று சொல்ல வேண்டும்.நாம் உண்ணும் அன்னமும் சிவன். அதை ஜீரணிக்கும் அக்னியும் சிவன். அதை சாப்பிடுபவனும் சிவன். அதனால் அடையப்போகும் லட்சியமான கடவுளும் சிவன், என்கிறார் காஞ்சி பெரியவா அதாவது, சாப்பாட்டை தெய்வமாகவே மதிக்க வேண்டும். அதனால் தான் குழந்தைகள் சாப்பிடும் போது, சிந்தாமல் சிதறாமல் சாப்பிடு, என கற்றுக் கொடுக்க வேண்டும்.


ஆழ்வார்களும் அவதாரமும் பொய்கையாழ்வார்

பன்னிரெண்டு ஆழ்வார்கள் பற்றிய விபரம் பகுதி : 1

                           பொய்கையாழ்வார்

பிறந்த ஊர் : காஞ்சிபுரம், திருவெக்கா பொற்றாமரை பொய்கையில்அவதரித்தவர்
பிறந்த நாள் : 7ம்நூற்றாண்டு
நட்சத்திரம் : ஐப்பசி திருவோணம் (வளர்பிறை அஷ்டமி திதி)
கிழமை : செவ்வாய்
எழுதிய நூல் : முதல் திருவந்தாதி
பாடல்கள் : 100
சிறப்பு : திருமாலின் சங்கின் அம்சம் (பாஞ்சஜந்யாம்சம்).
பிற பெயர்கள் : பொய்கைப்பிரான் கவிஞர் போரேறு, பத்மமுநி ஸரோயோகி காஸாரயோகி

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேன்சொன் மாலை
இடராழி நீங்குகவே என்று !

இவ்வாறு நூறு பாடல்களைப்பாடியவர் பொய்கையாழ்வார்.
வைணவத்தினர் இவரை கவிஞர் தலைவன் என்று போற்றுகின்றனர். இவர்  காஞ்சி நகர் திருவெக்கா பொய்கையில் அவதரித்தார். பொய்கையில் அவதரித்த காரணத்தாலேயே இவர் பொய்கைஆழ்வார் என அழைக்கப்பட்டார். திருமாலின் கருணையால் அனைத்தையும் கற்றார். கற்றதின் பயனாய் இம்மைக்கும் மறுமைக்கும் பயன் தரக்கூடியது திருமாலின் தொண்டு தான் என்பதை உணர்ந்தார். அத்துடன் தன்னையே பெருமாளின் தொண்டிற்கு அர்ப்பணித்து கொண்டார். மொத்தம் 6 திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்துள்ளார். இவர்தான் முதலில் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை இவ்வுலகிற்கு அர்ப்பணித்தவர். சதா சர்வ காலமும் விஷ்ணுவின் நினைப்பிலேயே இருப்பார். தன்னையே மறந்து பகவானை பாடி மகிழ்வார். ஹரியும் சிவனும் ஒன்றுதான். ஹரியை வணங்குபவர்கள் சிவனை வெறுக்க வேண்டாம். சிவனை வழிபடுபவர்கள் ஹரியை பழிக்க வேண்டாம். இதை மக்களிடம் கூறிக்கொண்டதோடு ஹரியிடம் மாறாபக்தி கொண்டும் அவருக்கு சேவைசெய்தும் வாழ்ந்து வந்தார். இறைவனை அடைந்து ஒன்றாக கலப்பது தான் ஆத்மாவின் தன்மை என்றும், இறைவனை பிரிந்திருப்பது தான் துன்பங்களுக்கெல்லாம் மூல காரணம் என்பதையும் பொய்கையாழ்வார் உணர்த்துகிறார். ஒரு சமயம் பொய்கை ஆழ்வார் திருக்கோவிலூர் மிருகண்டு முனிவரது ஆசிரமத்துக்கு சென்றார். அங்கு பூதத்தாழ்வாரும்  பேயாழ்வாரும் வந்து சேர்ந்தனர். இவர்கள் மூவரும் நெருக்கியடித்து நிற்க அங்கு சங்கு சக்கரத்துடன் திருமால் தோன்றி மூவருக்கும் காட்சியளித்தார். இவர் பேயாழ்வார் மற்றும் பூதத்தாழ்வாருடன் பல திவ்ய தேசங்களுக்கு சென்று பரந்தாமனைப் பாடி பணிந்தார்.


சூரபத்மனின் வரலாறு

சூரபத்மனின் வரலாறு

சூரபத்மன் மிகப்பெரிய அரக்கன். சிவனிடம் பெற்ற வரத்தால் உலகையே ஆட்டிப்படைத்தான். ஆணவத்தின் உச்சியில் இருந்த அவன் பற்றிய வரலாறு வருமாறு:-

பிரம்மதேவனுக்கு தக்கன், காசிபன் என்னும் இரு மகன்கள் இருந்தார்கள். அவர்களுள் தக்கன் சிவனை நோக்கித் கடுந்தவம் புரிந்து பல வரங்களைப் பெற்றிருந்தான். ஆனால் வரத்தின் வலிமையைச் சிரத்தில் கொண்டு சிவனை மதியாது யாகம் செய்தான். இதனால் சிவனால் தோற்றுவிக்கப் பெற்ற வீரபத்திர கடவுளால் கொல்லப்பட்டான். காசிபனும் கடுந்தவம் புரிந்து சிவனிடம் இருந்து மேலான சக்தியைப் பெற்றான். ஒருநாள் அசுரர்களின் குருவான சுக்கிரனால் (நவக் கிரகங்களுள் வெள்ளியாக கணிக்கப்பெறுபவர்) ஏவப்பட்ட "மாயை'' என்னும் அரக்கப் பெண்ணில் மயங்கி தான் பெற்ற தவ வலிமை எல்லாவற்றையும் இழந்தான். இதனைத் தொடந்து காசிபனும் மாயை என்னும் அசுரப் பெண்ணும் இணைந்து மனித தலையுடன் கூடிய சூரபத்மனும் சிங்க முகம் கொண்ட சிங்காசுரனும் யானை முகம் கொண்ட தாரகாசுரனும் ஆட்டின் முகம் கொண்ட அசமுகி என்ற அசுர குணம் கொண்ட பிள்ளைகளைப் பெற்றனர். இவர்களுள் சூரபத்மன் சர்வலோகங்களையும் அரசாளும் சர்வவல்லமைகளைப் பெற எண்ணி சுக்கிலாச்சாரியாரிடம் உபதேசம் பெற்று சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்தான். அதன் மூலம் 108 யுகங்கள் உயிர் வாழவும் 1008 அண்டங்களையும் ஆரசாளும் வரத்தையும் இந்திரஞாலம் எனும் தேரையும் சிவசக்தியால் அன்றி வேரு ஒரு சக்தியாலும் அவனை அழிக்க முடியாது என்னும் வரத்தையும் பெற்றான். இவ்வரத்தின் பயனாக சூரன் தம்மைப்போல் பலரை உருவாக்கி அண்ட சராசங்களை எல்லாம் ஆண்டு வந்தான். சூரபத்மன் பதுமகோமளை என்னும் பெண்ணை திருமணம் செய்தான். வீரமகேந்திரபுரியை இராச தானியாகக் கொண்டு ஆட்சி செய்து வந்தான். அவனுக்கு பதுமகோமளை மூலம் பானுகோபன், அக்கினிமுராசுரன், இரணியன், 10 தலைகளைக் கொண்டவச்சிரவாகு ஆகிய நான்கு மகன்களும் வேறு மனைவியர் மூலம் மூவாயிரவரும் பேர் (3000) பிறந்தனர். இவர்களுடன் இன்னும் 120 பிள்ளைகள் இருந்ததாகவும் கூறப்படுகின்றது. சூரபத்மன் தான் பெற்ற வரத்தின் வலிமையினால் ஆணவம் மிகுந்து கர்வம் கொண்டான். இந்திரன் மகனான சயந்தன் முதலான தேவர்களை சிறையிலிட்டு சித்திரவதை செய்தான். அதர்ம வழியில் ஆட்சி செய்யலானான். அசுரர்களின் கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள் சிவனிடம் சென்று முறையிட்டனர். இறைவன் அவர்களைக் காப்பாற்ற திருவுளம் கொண்டார் சூரபத்மன் முதலான பலம் மிக்க அசுரர்களை அழிக்கும் சக்தி படைத்த ஆறுமுகனை அவதரிக்க செய்தார். அதன் படி தான் முருகன் திருச்செந்தூர் தலத்தில் எழுந்தருளினார். அவருக்கும் சூரனுக்கும் 6 நாட்கள் கடும் போர் நடந்தது. 6வது நாள் சூரனை முருகப்பெருமான் வீழ்த்தினார். அதுவே சூரசம்ஹாரம் என்று அழைக்கப்படுகிறது.


ஆழ்வார்களும் அவதாரமும் பூதத்தாழ்வார்

ஆழ்வார்களும் அவதாரமும்

2. பூதத்தாழ்வார்

பிறந்த ஊர் : மகாபலிபுரம்
பிறந்த நாள் : 7ம் நூற்றாண்டு
நட்சத்திரம் : ஐப்பசி அவிட்டம் (வளர்பிறை நவமி திதி)
கிழமை : புதன்
எழுதிய நூல் : இரண்டாம் திருவந்தாதி
பாடல்கள் : 100
சிறப்பு : குருக்கத்தி மலரில் பிறந்தவர், திருமாலின் கதாயுத அம்சம்.

மகாபலிபுரத்தில் மல்லிகைப்புதரின் நடுவில் நீலோத்பவ மலரின் பெருமாளின் கவுமாதிதி என்னும் கதையில் அம்சமாக பிறந்தார் பூதத்தாழ்வார். இந்த உலக வாழ்வை சிறிதும் விரும்பாமல் பரமனிடம் ஆழ்ந்த பக்தியோடு திகழ்ந்தார். இவர் 13 திவ்யதேசங்களில் மங்களாசாசனம் செய்துள்ளார். முதல் ஆழ்வார் மூவருள் இரண்டாவது ஆழ்வார் இவர். பொய்கையாழ்வார், பேயாழ்வார் இருவரையும் திருக்கோவிலூரில் சந்தித்து மகிழ்கிறார். பொய்கையாழ்வார் வையம் தகளியாய் என ஆரம்பித்து நூறு பாடல்களை பாட பூதத்தாழ்வாரோ அன்பே தகளியாய் என நூறு பாடல்களை பாடினார். மகிழ்வில் உருகிய மனமாகிய திரியை பக்தி என்று எண்ணெயில் இட்டு ஞானச்சுடர் ஏற்றி என பாடி திருமாலை பாடும் பெருமையை தனக்கு கிடைத்ததை நினைத்து அடிக்கடி மகிழ்கிறார். பல திவ்ய தேசங்களுக்கும் சென்று பெருமாளின் புகழைப் பரப்பினார். பெருமாளின் 108 திருப்பதிகளில் பூதத்தாழ்வார் தனியாக மங்களாசாசனம் செய்யாமல் பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து மொத்தம் 14 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.


செவ்வாய், 3 நவம்பர், 2020

சேக்கிழார்

சேக்கிழார்

இது சேக்கிழார் திருப்பணி செய்த ஸ்தலமாகும். இங்கு திருப்பணிகள் செய்த சேக்கிழார் தான் பிறந்த,

சென்னை - குன்றத்தூரிலும் இதே பெயரில் ஒரு கோயிலை கட்டி அதற்கு திருநாகேஸ்வரம் என்று பெயர் சூட்டினார் என்றால் அவருக்கு இந்த ஆலயத்தின் மீது எந்த அளவுக்கு பக்தியும் மரியாதையும் இருந்திருக்கும் என்பதை உணரலாம்.

இக்கோயிலில் இவருடைய அமர்ந்த நிலையிலான சிலை உள்ளது. 

உருத்திராக்க மாலையோ அணிகலன்களோ இல்லாமல் உள்ள இந்த சிலையின் அருகே இவரது தம்பியான பாலறாவாயரின் உருவச்சிலையும் இவரது தாயாரின் உருவச்சிலையும் உள்ளன.

ராகு ஸ்தலம் : பெரிய பிரகாரத்தின் தென் மேற்கு மூலையில் ராகு சன்னதி உள்ளது. ராகுவின் பிறப்பு வரலாறும் கிரகச்சிறப்பும் சுவை நிரம்பியவை. ராஜ வம்சத்து மன்னன் ஒருவனுக்கும் அசுரகுலப் பெண்ணொருத்திக்கும் மகனாகப் பிறந்தவன் ராகு. தேவர்களும் - அசுரர்களும் பாற்கடலைக் கடையும் போது அசுரனாகிய ராகு உருமாறி தேவர்கள் வரிசையில் சேர்ந்து மகா விஷ்ணுவிடமிருந்து அமிர்தத்தைப் பெற்று உண்டு விட்டான். 

உண்மை அறிந்த மகா விஷ்ணு கையிலிருந்த அகப்பையால் அவனது மண்டையில் அடிக்க தலை வேறு உடல் வேறாகி விழுந்தான். ஆனாலும் அமிர்தம் உண்ட மகிமையால் அவன் தலைப்பகுதியில் உயிர் இருந்தது. 
ராகுவும் தவறுக்கு வருந்தி இறைவனை வேண்டி நிற்க இறைவன் பாம்பின் உடலை அவனுக்குக் கொடுத்து அவனை ஒரு நிழல் கிரகமாகவும் ஆக்கினார்...