சனி, 7 நவம்பர், 2020

சுவாமிநாத தேசிகர்

சுவாமிநாத தேசிகர்

செஞ்சொற் புலவர்க்கு அன்புற்ற திருச்செந்திற் குமரப் பெருமானே! என்று புகழ்வார் திருப்புகழ் அருணை முனிவர். அப்படி, செந்தமிழ்ப் புலவர்கள் செந்திற் கந்தனை இன்புற்றுப் பாடிப்பரவிய எத்தனையோ  அருட்பனுவல்கள் உள்ளன. அந்தப் பாமாலைகளில் ஒப்பற்ற ஓர் அருட்பிரபந்தம்தான் திருச்செந்திற் கலம்பகம். செந்தமிழ் மொழியில் பலவிதமான பாவகைகளைக் கொண்டு தொகுக்கப்பெற்றது இது. கற்பவர் மனத்தைக் கவரும் அம் சொற்களும், செம்பொருளும், பல சந்தநயங்களும் அமைந்த பக்திச்சுவை பழுத்துத் தித்திக்கப்பெறும் கற்பகம் போன்றது திருச்செந்திற் கலம்பகம். இதை இயற்றிய சுவாமிநாத தேசிகர் யார்?

பாண்டிய நாட்டில், சைவ வேளாளர் குலத்தில் தோன்றியவர் சுவாமிநாதர், இளமையிலேயே திருக்கயிலாயப் பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்தின் தொடர்பு கிடைத்தது. அங்கு ஞானதேசிகராக இருந்த அன்பலவான பண்டார சந்நிதிகள், சுவாமிநாதருக்கு சைவ சமய விசேஷ தீøக்ஷகளை அளித்தார். அவரிடம் துறவறம் பெற்று, நித்திய நியமங்களை வழுவாமல் செய்து, அறநூல்களைக் கற்றுணர்ந்தார். ஆதீன தேசிகரிடம் சிறந்த தொண்டராய்த் திகழ்ந்தார். திருநெல்வேலியில் வாழ்ந்த மயிலேறும் பெருமாள்பிள்ளை என்பவர் கல்லாடம் என்னும் உயர் செந்தமிழ் நூலுக்கு உரை எழுதியவர். அவர் ஒருமுறை சுவாமிநாத தேசிகரைச் சந்தித்தார். இவருடைய அறிவின் மிகுதியையும், ஒழுக்கம், அன்பு முதலான நற்குணங்களையும் கண்டு வியந்தார். இளமைப் பருவத்தில் இத்தகைய உயர்ந்த பண்புடையவருக்குத் தாம்கற்ற நூல்களைப் போதிக்க விருப்பம் கொண்டார். ஆதீன கர்த்தரிடம் அனுமதி பெற்று, இவரை அழைத்துச்சென்று தமது இல்லத்தில் தங்கவைத்து, பல அறநூல்களைக் கற்பித்தார். செப்பறை என்ற ஊரில் வாழ்ந்த கனகசபாபதி சிவாச்சாரியர் சிறந்த வடமொழி வல்லுநர். அவரிடம் தேசிகரை அழைத்துச் சென்று வியாகரண நூல்களை அறிந்துகொள்ள வழிசெய்தார் பிள்ளையவர்கள். இவ்வாறு தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் சிறந்த புலமைபெற்ற சுவாமிநாத தேசிகர், மீண்டும் திருவாவடுதுறையை அடைந்து, தம்பிரானை வணங்கினார் இவரது கல்வித்திறமையைக் கண்டு மிகவும் மகிழ்ந்தார் தம்பிரான். அக்காலத்தில் இலக்கண இலக்கியங்களில் உள்ள பல அரிய செய்திகளைத் திரட்டி இலக்கணக் கொத்து என்ற நூலையும், தசகாரியம் என்ற ஞான நூலையும் செய்தருளினார்.

பெரும்புலவர் வைத்தியநாத நாவலர் என்பவர், இலக்கண விளக்கம் என்ற நூலை இயற்றியவர். திருவாரூரைச் சேர்ந்தவர். அவர் ஒருநாள் ஆதீனத்தில் சுவாமிநாதரைச் சந்தித்தபோது அவரது கல்வி கேள்வி ஞானத்தை உணர்ந்து தொல்காப்பியம் முதலான நூல்களை எழுத்தெண்ணிப் படித்த சுவாமிநாத மூர்த்தியா தாங்கள்? என்று மிகவும் வியந்து பாராட்டினார். அப்போது ஆதீன கர்த்தர் சுவாமிநாத தேசிகருக்கு ஆசார்ய அபிஷேகம் செய்வித்து, ஈசான தேசிகர் என்னும் அபிஷேகப் பெயர் சூட்டினார். அதோடு அவரை திருநெல்வேலியில் தமது ஆதீனத்தைச் சார்ந்த மடாலயத்தில் இருக்கும்படி பணித்தார். சுவாமிநாத தேசிகரும் அந்த மடத்தில் ஈசான தேசிகர் மடம் என்ற பெயர் அமைந்தது. நன்னூலுக்கு விருத்தியுரை செய்த சங்கர நமசிவாய புலவர் தேசிகரது சீடர் ஆவார். திருச்செந்தூரில் நடைபெறும் விசேஷ நாட்கள் மற்றும் உத்ஸவங்களில் கந்தவேளை தவறாமல் தரிசித்து வரும் வழக்கத்தைக் கொண்டிருந்தார் சுவாமிநாத தேசிகர். அவ்வாறு ஒருமுறை செந்திலாண்டவர் சந்நிதியில் நின்று தன் மனம், மொழி, மெய்களால் அலைவாய் அழகனைத் தரிசித்தபோது கலம்பகம் பாடலாமே என்று ஒரு குரல் ஒலித்தது. தேசிகர் சுற்றுமுற்றும் திரும்பிப் பார்த்தபோது, அருகில் யாரையும் காணவில்லை. இது செந்தில்முருகன் ஆணை போலும்! என்று உணர்ந்து, திருச்செந்திற் கலம்பகம் என்னும் பாமாலையைப் பாடத் தொடங்கினார். முருகப் பெருமான் தமிழாகிய தென்கடலைக் கடக்கும் தோணி போல உள்ளான். சந்திரன், சூரியன் ஆகியோருக்கும் தன் பன்னிரு விழிகளால் அருள்பாலிக்கிறான். அத்தகைய முருகனுக்கு உரியதாகிய திருச்செந்திற் கலம்பகம் என்ற நூலை துறைசை நகர் சுவாமிநாத தேசிகன் துதி செய்து சமர்ப்பிப்பதாக இந்த நூலின் பாயிரச் செய்யுளில் பாடுகிறார் தேசிகர்.

கலம் என்பது பன்னிரண்டையும், பகம் என்பது ஆறு என்பதையும் குறிக்கும். அதாவது பதினெட்டு உறுப்புகளைக் கொண்ட சிற்றிலக்கியம் கலம்பகம், புயவகுப்பு, மதங்கு, அம்மானை, களி, சிந்து, இரங்கல், கைக்கிளை, தூது, வண்டு, தாழை, ஊசல், காலம் சம்பிரதம், கார், தவம், குறம், மறம், பாண் ஆகிய பதினெட்டு உறுப்புகள் உடையது. ஆயினும், சில நூல்களில் இருபத்தாறு உறுப்புகளும் உண்டு. கலம்பகம் கவிதைச்சுவையில் சிறந்தது. தமிழில் பல கலம்பகங்கள் இருப்பினும், கலம்பகத்துக்கு இரட்டையர் என்று இரட்டைப் புலவர்களைக் குறிப்பிடுவர் கலம்பகம் விருந்து எனப்படும் வனப்புடையது. செந்திற்கந்தன் விரும்பியபடி கலம்பகம் பாடி, அதனை அவன் அருள்மழை பொழியும் கோயிலில் அரங்கேற்றம் செய்தார் தேசிகர், இதனைச் செவிமடுத்த அறிஞர்களும் அடியார்களும், இதன் பக்திச்சுவையையும் இலக்கியச் சுவையையும் நன்கு ரசித்துப் பாராட்டினர். இதில் முப்பது பாடல்களை மட்டும் தேர்ந்தெடுத்து, செந்திலாண்டவர் இரவு பள்ளியறைக்கு எழுந்தருளும்போது, ஓதுவார்கள் அதனைத் தோத்திரம் செய்யும் வழக்கமும் பின்னாளில் ஏற்பட்டது. இதிலிருந்தே இந்தக் கலம்பகத்தின் அருமை பெருமைகளை நாம் உணர முடியும். இந்த நூலின் ஒவ்வொரு செய்யுளும் தித்திக்கும். கருத்தாழமும் சொல் அமைதியும் சிந்தனைக்கு விருந்தாகும். திருச்செந்தூருக்கு நீ அன்புடன் சென்று முருகனைத் தொழுது. மயிலும் வேலும் எனத் தொழு. ஏழ்வகைப் பிறப்பிலும் நீ பிறந்து உழல மாட்டாய்! என நெஞ்சுக்கு அறிவுறுத்தி இந்த நூலை நிறைவு செய்கிறார் சுவாமிநாத தேசிகர். இந்த அரிய நூலை சென்னை குரோம்பேட்டை குமரன்குன்றம் திருப்புகழ் மன்றத்தினர் 2008 ஆம் ஆண்டில் உரையுடன் வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லையிலா நலம் பெருகும் இயற்றமிழ் நாவலர் பலரும்
அல்லலுறா வகையினிலே அவிரும் உயர் இலக்கணமும்
கல்வியருள் நூல்பலவும் கலம்பகமும் எளிதில் அருள்
நல்லபுகழ் பெறுசாமி நாதர்சேர் பதம் போற்றி


கருத்துகள் இல்லை: