ஸ்ரீ கபீர் தாசர்
ஸ்ரீ ராமரை கண்ட கபீர் தாசர்.
சமத்துவத்தின் அடையாளமாகவும், மத நல்லிணக்கத்தின் அடையாளமாகவும் திகழ்ந்தவர் இவர்.
ஸ்ரீ மகாவிஷ்ணுவின் ஆணைப்படி
ஸ்ரீ சுகப்பிரம்மரே கபீராக பிறந்தார்.
இவர் பிறப்பு பற்றி இருவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன.
நெசவுத் தொழில் செய்யும் ஒரு முகமதிய குடும்பத்தில் இவர் பிறந்தார் என்றும்
ஒரு பிராமண விதவைக்கு இவர் பிள்ளையாய்ப் பிறந்து ஊர் அவச்சொல்லுக்குப் பயந்து அவளால் கைவிடப்பட்டார் என்றும் சொல்லப்படுகிறது.
1440ம் வருடம் காசிக்கருகே ‘லகர்டேலோ’ என்ற ஏரியில் தாமரை மலரில் ஒரு குழந்தை இருந்தது.
அந்த குழந்தையை தமால் என்ற முஸ்லிம் நெசவாளர் ஒருவர் எடுத்து வளர்த்தார்.
அவரின் மனைவி பெயர் ஜீஜா பீபீ
அவருக்கு கபீர் என பெயரை சூட்டினர்.
திருக்குரானை திறந்து பார்த்ததும்
தென்பட்ட கபீர் என்ற சொல்லை பெயராக வைத்தனர்.
கபீர் என்றால் பெரியது என அர்த்தம்.
இறைவனை அழகாக பாடுவதில் திறமை பெற்று இருந்தார்.
ஆதலால் நெசவுத் தொழிலில் அதிக ஆர்வம் இல்லாமல் இருப்பார்.
பாடியபட இரவு நேரங்களில் இவர் ஒரு முழம் நெய்தால் இறைவன் பாட்டை கேட்டபடி இரண்டு முழம் நெய்து கொடுப்பாராம்.
இஸ்லாமியராக இருந்தாலும் ஸ்ரீ ராமரின் மேல் அதீத பிரியம் கொண்டவராக இருந்தார்.
கபீருக்கு தன்யாவுடன் திருமணம் நடந்து, கமல், கமலி என மகனும் மகளும் பிறந்தனர்.
எழுதப் படிக்க தெரியாதவராகவே இருந்தார்.
இராமாநந்தரின் சீடர் இவர்.
பக்திமானான இராமாநந்தர், ஒவ்வொருவருக்குள்ளும், ஒவ்வொன்றுக்குள்ளும் பரம்பொருள் இருப்பதாகக் கூறும் அத்வைதத் தத்துவத்தைப் பின்பற்றிய வைணவக் கவிஞராவார்.
முதலில் கபீரை முறையாகச் சீடராக ஏற்க இராமாநந்தர் திட்டவட்டமாக மறுத்து விட்டார்
இராமநந்தர் கங்கைக்குக் குளிக்கச் செல்லும் வழியிலிருந்த படிகளில் இருள்பிரியாத விடிகாலையில், சாக்கால் தன்னை மூடிக்கொண்டு கிடக்க, கீழேகிடந்த கபீரைத் தெரியாமல் மிதித்துவிட்ட இராமாநந்தர் "இராமா இராமா!" என்று சொல்லிவிட்டதால், வேறுவழியின்றி இராமாநந்தர் கபீரைத் தன் சீடராக ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று.
ஒருமுறை கோரக்கர் இராமநந்தரை வாதத்திற்கு அழைத்தார்.
கோரக்கரை கபீர்தாசர் எதிர்கொண்டு வாதத்தில் வென்றார்.
நெய்த துணிகளை விற்று குடும்பத்தை நடத்தி வந்தார் கபீர்தாசர்.
தான் நெய்த துணியை விற்கச் சென்றபோது மாயக் கண்ணனின் லீலையால் ஒரு பெரியவர் அவரிடம் வந்து துணியை விலைக்குக் கொடுக்கும்படி கேட்டார்.
விலை பேசிக்கொண்டிருந்தபோதே, அந்தப் பெரியவர் துணியைப் பிடுங்கிக்கொண்டு செல்ல, அவரைத் தொடர்ந்து ஓடிய கபீர், ''ஐயா, துணிக்கு விலை கொடுங்கள்'' என்று கேட்டார்.
பெரியவர் பணம் கொடுக்க மறுத்ததும், கபீர் பெரியவரிடமிருந்த துணியைப் பிடுங்கினார்.
துணி இரண்டாகக் கிழிந்து ஒரு பாதி பெரியவரின் கையிலும், மறு பாதி கபீரின் கையிலும் வந்துவிட்டது.
பெரியவரின் கையில் இருக்கும் துணிக்கான விலையை மட்டுமாவது கொடுக்கும்படி கபீர் கேட்டார்.
அந்தப் பெரியவரோ, ''நான் இந்த வஸ்திரத்தை கண்ணனுக்காகக் கேட்கிறேன். இதற்குப் பணம் கேட்காதே'' என்ற பெரியவர், கண்ணனின் பெருமைகளை விளக்கிக் கூறியதுடன், ''இனி யார் வந்து கண்ணனின் பெயரைச் சொல்லிக் கேட்டாலும் அவர்களுக்குத் துணியைக் கொடுத்துவிடு'' என்று கூறினார்.
கபீர் நெய்த துணிகளை விற்கச் செல்லும்போதெல்லாம், கண்ணனின் லீலையின் காரணமாக யாரேனும் ஒருவர் வந்து கண்ணனின் பெயரைச் சொல்லி, துணியை வாங்கிச் செல்வது வழக்கமாகிவிட்டது.
இதனால் கபீருக்கு வருமானம் இல்லாமல் குடும்பம் வறுமையில் தவித்தது.
ஒருமுறை கபீரின் வீட்டுக்கு இறைவனடியார்கள் 100 பேர் உணவு வேண்டி வந்தனர்.
வறுமையில் வாடிய கபீர், அவர்களின் பசியை எப்படியும் போக்க வேண்டும் என்று எண்ணினார்.
தன் மனைவியை ஒரு செல்வந்தரின் வீட்டில் வீட்டு வேலை செய்வதற்கு ஒப்படைத்துவிட்டு, அதன் மூலம் பெற்ற பணத்தைக்கொண்டு இறைவனடியார்களுக்கு உணவிட்டார்.
அன்று இரவே ஓர் அரசு அதிகாரி, அந்தச் செல்வந்தரின் வீட்டுக்குச் சென்று கபீரின் மனைவியை மீட்டு வந்து வீட்டில் சேர்ப்பித்தார்.
மனைவி திரும்பி வந்ததைக் கண்டு கோபம் கொண்ட கபீர், மனைவியை அடிக்கக் கையை ஓங்கினார்.
அப்போது அந்த அதிகாரி, ''நான்தான் உன் மனைவியை மீட்டு வந்தேன். வேண்டுமானால் என்னை அடி'' என்று கூறினார்.
கபீர் அவரை அடிக்கக் கையை ஓங்கியபோது, அங்கே அந்த அதிகாரி காணவில்லை.
மாறாக ஶ்ரீராமர் காட்சி தந்தார்.
இறைவனின் தரிசனம் கண்ட கபீர் கலங்கிப்போய் ராமனைத் தொழுது பாடல்கள் புனைந்தார்.
ஸ்ரீகபீர்தாசரின் மகன் கமால் மஹானாக திகழ்ந்தார்.
கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய கமால் ஏழு வயதிலேயே தீர்த்த யாத்திரை செல்ல விரும்பினான்.
அவனைப் பிரிய மனமின்றி ஸ்ரீகபீர் முதலில் மறுத்தாலும் பின்னர் போய் வர சொன்னார்.
செல்லும் இடமெல்லாம் இறைவனது நாமத்தின் பெருமைகளைக் கமால் பரப்பினார்.
கூட்டம் கூட்டமாக வந்து அவரைத் தரிசித்த மக்கள் அவரை ஸ்ரீகிருஷ்ணரின் உருவாகவே கண்டனர்.
ஒரு ரத்ன வியாபாரியின் இல்லத்தில் சிலர் கமாலைப்பற்றி இகழ்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
தீராத வயிற்று நோயினால் துன்புற்ற அந்த வியாபாரி, "இந்த நோயைத் தீர்க்க முடிந்தால் கமால் ஒரு மஹான் என நம்பலாம்" என்றான்.
மறுநாள் காலையில் வலியினால் துடித்தபோது முன்தினம் தான் கமாலைப்பற்றிப் பேசியது நினைவுக்கு வந்தது.
கமாலைப் பற்றி நினைத்தவுடனேயே அவனது வயிற்றுவலி மறைந்தது.
உடனே அவர் கமாலைத் தனது வீட்டுக்கு அழைத்து வணங்கி பொற்காசுகள் நிறைந்த ஒரு பையை அளிக்க, கமால் "இதைக் கட்டிக் காத்து வீட்டுக்குக் கொண்டு போய்ச் சேர்க்கும் திறமை சிறுவனான எனக்கில்லை" என ஏற்க மறுத்தார்.
வியாபாரி அவரே அறியாது அவரது உத்தரீயத்தில் விலையுயர்ந்த மரகதம் ஒன்றை முடித்துவைத்தான்.
வீடு திரும்பி கமால் பெற்றோரை வணங்கும்போதுதான் மரகதம் அவர்கள் கண்ணில் பட்டது.
அதே சமயம் பக்தனுடன் விளையாட விரும்பிய ஸ்ரீஇராமர் ஓர் முதியவராக அங்கு தோன்றி கமால் அந்தப் பச்சைக்கல்லைத் தன்னிடமிருந்து திருடிவிட்டதாகக் கூற ஸ்ரீகபீர்தாசர் தன் மகனை அடிக்கக் கை ஓங்கிவிட்டார்.
இறைவனோ சீதா, லக்ஷ்மண, பரத, சத்ருக்ன, ஹனுமத் சமேதராக அங்கு தோன்றி அந்த சமயத்தில் அங்கு வந்து சேர்ந்த ஸ்ரீஇராமானந்தருக்கும் திவ்ய தரிசனம் தந்தார்.
ஒரு நாள் இரவு களைத்தவர்களாகவும், பசித்தவர்களாகவும் நூற்றுக்கணக்கான சாதுக்கள் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்றிருந்த ஸ்ரீகபீர்தாசரின் இல்லத்தைத் தேடி வந்தனர்.
வீட்டிலோ வறுமை. வேறு வழியின்று தந்தையும் மகனுமாக மளிகைக் கடையில் திருடவும் துணிந்தனர்.
சிறுவன் கமால் சுவரிலுள்ள பிளவு மூலம் சென்று பொருட்களை ஸ்ரீகபீரிடம் தந்துவிட்டு அந்தப் பிளவு மூலமாகவே வெளியேறிவிடுவதெனத் திட்டமிட்டுப் பொருள்களை எடுத்துத் தந்தையிடம் தந்துவிட்டுக் கமால் வெளியேறுமுன் கடைக்காரன் வந்துவிட்டான்.
பாதி வெளியேறிய நிலையில் கமாலின் கால்கள் கடைக்காரனின் கைப்பிடியில் சிக்கிக் கொண்டன.
சற்றும் தயங்காது கமால் தந்தையின் இடையில் இருந்த தறிவேலை செய்யும் கூரிய கத்தியை அவர் கையில் தந்து, "என் தலையை வெட்டி எடுத்துச் சென்று விடுங்கள். தலையின்றி அவர்களால் என்னை அடையாளம் காண முடியாது" என கூறி
தலையை வெட்டுங்க என்றான்.
தயக்கத்துடன் ஸ்ரீகபீரும் அவ்வாறே செய்யக் கடைக்காரர் உடலை மட்டும் கொத்தவாலிடம் ஒப்படைத்தான்.
மற்ற திருடர்களுக்கு ஒரு படிப்பினையாக இருக்கட்டும் என நாற்சந்தியில் அந்த உடல் தொங்கவிடப்பட்டது.
விருந்து முடிந்த நிலையில் மறுநாள் சாதுக்கள் பஜனை செய்தவாறே அவ்வழி வர தலையற்ற அந்த உடல் அவர்களைத் தொழுது நின்றது.
சாதுக்களும், கண்ட ஊர்மக்களும், திகைக்க, இறைவன் அசரீரியாக "கபீர்!
உலகிலே மனைவி மக்களிடம் கொண்ட பாசம்தான் வெல்ல முடியாதது.
அவ்விரண்டையும் சாதுக்களுக்குச் செய்யும் சேவைக்காகத் துறந்த உன் பக்தியே உயர்ந்தது.
"அன்பனே! கமால்! எழுந்திரு!" எனக்கூற அடுத்த கணம் கபீரிடம் இருந்த கமாலின் தலையானது வந்து உடலில் சேரக் கமால் சிரித்த முகத்துடன் நாராயண ஸ்மரணத்துடன் எழுந்து சாதுக்களையும், பெற்றோரையும் வணங்கினார்.
ஸ்ரீ கபீரின் தோஹாக்களின் ஆழமான ஆன்மிகக் கருத்துக்கள் சிலவற்றைப் பார்ப்போம்.
”கபீரான நான் மிக ஆழ்ந்து சிந்தித்து சொல்கிறேன்: நான் அது (இறைவன்) ஒன்றெனச் சொன்னால், அது இல்லை (தவறாகிப் போகும்), நான் இரண்டு எனச் சொன்னாலும் அதுவும் நிந்தனையாகப் போகும், அது எப்போதும் எப்படி இருக்கிறதோ அது அப்படியே இருக்கட்டும்.” இறைவன் பற்றிய விவாதங்கள் அனாவசியம் என்கிற தொனியில் இருக்கிறது இந்த தோஹா.
”எதுவரை, “நான்” “என்” என்று (அகந்தை என்னுள்) இருந்ததோ, “ஹரி” அங்கு வரவில்லை, எப்போது “ஹரி” அங்கு வந்துவிட்டாரோ, அப்போது, “நான்” “என்” என்று என்னுள் இருந்த அகந்தையைக் காண முடியவில்லை.” கடவுள் இருக்கும் இடத்தில் கர்வம் இருக்க முடியாது என்பதை எவ்வளவு அழகாகச் சொல்கிறார் பாருங்கள்.
கபீரின் நேர்மையான ஆணித்தரமான போதனைகள் மக்களை சிந்திக்க வைப்பதாகவும் கவர்வதாகவும் இருந்தன. அவர் தெள்ளத் தெளிவாகச் சொன்னார். ”நமது கர்ம வினைகளுக்கானப் பலனை நாமே தான் தீர்த்தாக வேண்டும். நமது நோக்கம் நேர்மையாக இருக்கும் போது பிறருடைய ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் எண்ணி வருந்த வேண்டியதில்லை. அவர்களுடைய பயனற்ற செயல்களின் விளைவுகளை அவர்களே சந்திப்பர்.”
மிக எளிமையான வாழ்க்கை நடத்தி வந்த கபீரிடம் இருந்த உண்மையான ஞான சக்தி இந்துக்கள், முஸ்லீம்கள் இருபாலாரையும் அவரிடம் ஈர்த்தது. இரண்டு மதங்களிலும் அறிவுக்குப் பொருந்தியவற்றை அவர் ஆதரித்தும், அறிவுக்குப் பொருத்தமற்றதாய் தோன்றியதை மறுத்தும் அவர் வெளிப்படையாகப் பேசினார்.
அதனால் இரு மதங்களில் இருந்தும் எதிர்ப்பு அவருக்கு இருந்த போதும் அவர் போதனைகளைக் கேட்க அவர் குடிசைக்குப் பலர் வந்த வண்ணம் இருந்தனர்.
கபீரின் போதனைகள் இந்து, இஸ்லாமிய மதங்களைக் கடந்து சீக்கிய மதத்திலும் இடம் பெற்றன.
சீக்கியர்களின் தெய்வமும் புனித நூலுமான 'குருகிரந்த சாஹிப்'பில் இடம்பெற்றிருக்கின்றன.
ஆக, மூன்று மதங்களும் போற்றும் மகத்தான ஞானியாக அருள்புரிகிறார்.
இவரது பாடல்கள் இன்றும் இந்திய தேசமெங்கும் பாடப்படுகின்றன.
எளிமையான ஆன்மிக கருத்துகளைக் கொண்ட இவருடைய பாடல்கள் ரவீந்திரநாத் தாகூர், மகாத்மா காந்தி போன்ற பலரையும் கவர்ந்திழுத்தது.
"நெசவு என்ன; பாவு என்ன?
போர்வை நெய்யும் நூல்கள்தான் என்ன?
எட்டு கமலங்கள், ஈரைந்து ராட்டினங்கள்!
ஐந்து மூலப் பொருள்கள். மூன்று போர்வை குணங்கள்.
எல்லாம் சேர்த்து பரமன் போர்வை செய்ய பத்து மாதங்கள்"
இந்த மகானைப் போற்றும் வகையில், மத்திய அரசின் ஜவுளித்துறை சிறந்த நெசவாளருக்கான 'சந்த் கபீர்' விருதை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.
கபீரின் பக்தி இயக்கம் கபீர் பந்த் என்றழைக்கப்படுகிறது. அவரது சீடர்களும், பின்பற்றுவோரும் அந்த இயக்கத்தின் மூலம் அவர் போதனைகளைப் பரப்பினார்கள்.
மத ஒற்றுமையை வலியுறுத்தி வாழ்ந்த கபீர் தாசரின் மறைவுக்குப் பின் அவர் உடலை எரிப்பதா, புதைப்பதா என்ற சண்டை அவர் உடலுக்கு உரிமை கொண்டாடிய இந்து முஸ்லீம்களிடம் ஏற்பட்டது
கடைசியில் அவர் பிணத்தின் மீதிருந்த துணியை விலக்கிப் பார்த்த போது மலர்கள் மட்டுமே இருந்ததாகவும், அவற்றை அவர்கள் பாதியாகப் பிரித்துக் கொண்டு அவரவர் முறைப்படி அந்திமக் கிரியைகள் செய்தார்கள்.
இன்றும் காசியில் அவருடைய கோயிலும்,
அவர் சமாதியில் மசூதியும் இடம் பெற்று அவர் போதித்த மத ஒற்றுமைக்கு சான்றாய் விளங்குகின்றன.
வாரணாசியில் கபீர் சௌரா என்ற இடத்தில் கபீரின் குடும்பம் வசித்ததாம்.
கபீர் சௌராவிலுள்ள கபீர் மடத்தில் கபீர் தொடர்பான கொண்டாட்ட நிகழ்வுகள் இன்றும் நடத்தப்படுகின்றன.
எங்கே தேடுவாய் என்னை?
நீ செல்லும்
புனித யாத்திரையிலா? இல்லை.
நீ வணங்கும்
உருவங்களிலா? இல்லை.
நீ செல்லும்
கோயில் அல்லது மசூதியிலா? இல்லை.
கபாவிலா அல்லது கைலாசத்திலா? இல்லை.
நான் உன்னுடன் தான் இருக்கிறேன், மனிதா,
உன்னுடன் தான்.
எங்கே தேடுவாய் என்னை?
நீ முணுமுணுக்கும்
பிராத்தனைகளிலா? இல்லை.
நீ கண்முடி அமர்ந்திருக்கும்
த்யானத்திலா? இல்லை.
நீ அனுதினம் அனுசரிக்கும்
நோன்புகளிலா? இல்லை.
கால்மடித்து, கைமடித்து செய்யும்
யோகாசனங்களிலா? இல்லை.
எதுவும் வேண்டாம் என்று
சொல்லும் துறவிலா? இல்லை.
உடலிலா அல்லது அதில்
உறையும் உயிர் சக்தியிலா? இல்லை.
எங்கும் வியாபித்திருக்கும்
அண்ட வெளியிலா? இல்லை.
விதையிலிருந்து விருட்சம் வரச்
செய்யும் இயற்கையிலா? இல்லை.
எங்கே தேடுவாய் என்னை?
தேடு – தேடி என்னைக் கண்டெடு.
தேடும் அந்த தருணத்தில் –
கபீர் சொல்கிறான் தம்பி,
கவனமாகக் கேள்,
உன் நம்பிக்கை எங்கிருக்கிறதோ
அங்குதான் நான் இருக்கிறேன்!