சனி, 15 ஆகஸ்ட், 2020

ஒரே சுலோகத்தில் நவக்ரஹ தியானம்

ஒரே சுலோகத்தில் நவக்ரஹ தியானம்

ஆரோக்யம் ப்ரதாது நோ தினகர
சந்த்ரோ யசோ நிர்மலம்
பூதிம் பூமி ஸுதாம் சு தனய:
ப்ரக்ஜாம் குருர் கௌரவம்
கான்ய: கோமள வாக் விலாஸ மதுலம்
மந்தோமுத முததம் ஸர்வத:
ராஹுர் பாஹுபலம் விரோத சமனம்
கேது: குலஸ்யோன்னதிம் ஓம்

சூர்ய நமஸ்கார மந்திரம்

சூர்ய நமஸ்கார மந்திரங்கள்

ஓம் மித்ராய நம:
ஓம் ரவயே நம:
ஓம் சூர்யாய நம:
ஓம் பானவே நம:
ஓம் ககாய நம:
ஓம் பூஷ்ணே நம:
ஓம் ஹிரண்ய கர்ப்பாய நம:
ஓம் மரீசய நம:
ஓம் ஆதித்யாய நம:
ஓம் ஸவித்ரே நம:
ஓம் அர்க்காய நம:
ஓம் பாஸ்கராய நம:

சூரிய நமஸ்காரம் முடிந்ததம் சூரியனையும் மற்ற நவகிரகங்களையும் நமஸ்கரிக்கும் மந்திரம்

நம ஸூர்யாய ஸோமாய அங்காரகாய புதாயச
குரு சுக்ர சனிப்யஸ்ச ராகவே கேதவே நமஹ.

சூரிய (பூஜை) நமஸ்காரம் என்பது மற்ற தெய்வங்களை பூஜை அறையில் வழிபடுவது போல சூரியனையும் வழிபடுவதையேக் குறிக்கும். இது யார் வேண்டுமானாலும் எளிய முறையில் செய்யலாம். அதிகாலையில், அதாவது ஆறு மணிக்குள் எழுந்து குளித்து சுத்தமான ஆடை அணிந்து சமயச் சின்னங்களை (விபூதி, குங்குமம், திருமண் போன்றவை) அணிந்து கிழக்கு திசை நோக்கி நின்று சூரியனை தரிசனம் செய்வது சூரிய நமஸ்காரத்தின் முதல்படி.

பாஸ்கராய வித்மஹே
மஹத் யுதிகராய தீமஹி
தன்னோ ஆதித்ய ப்ரசோதயாத்

என்பது சூரிய காயத்ரி. இதனை மூன்று முறை ஜெபித்து விட்டு அடியிற்கண்ட எளிய மந்திரத்தைச் சொல்லி சூரியனை நமஸ்காரம் செய்யலாம்.

ஓம் தினகராய பாஸ்கராய
ஜ்யோதிஸ்வ ரூபாய
சூர்ய நாராயணாய தேவாய
நமோ நமஹ
இது சூரிய நமஸ்காரத்திற்கு எளிய மந்திரம். ராமாயணத்தில் ஸ்ரீராமனுக்கு அகஸ்தியர் உபதேசித்த ஆதித்ய ஹ்ருதயத்தையும் பாராயணம் செய்யலாம்.

காலையில் எழுந்ததும் சொல்ல வேண்டியவை

காலையில் எழுந்ததும் சொல்ல வேண்டியவை

1. கராக்ரே வஸதே லக்ஷ?மீ: கரமத்யே ஸரஸ்வதீ
கரமூலே து கௌரி ஸ்யாத் ப்ரபாதே கரதர்சனம்
2. ஸமுத்ரவஸனே தேவி பர்வதஸ்தன மண்டிதே
விஷ்ணுபத்னி நமஸ்துப்யம் பாதஸ்பர்சம் க்ஷமஸ்வமே
3. அஹல்யா திரௌபதீ ஸீதா தாரா மந்தோதரீ ததா
பஞ்ச கன்யா: ஸ்மரேந்நித்யம் மஹாபாதகநாசனம்
4. புண்யச்லோகோ நலோ ராஜா புண்யச்லோகோ யுதிஷ்டிர:
புண்யச்லோகா ச வைதேஹீ புண்யச்லோகோ ஜனார்தன:
5. கார்கோடகஸ்ய நாகஸ்ய தமயந்த்யா: நளஸ்ய ச
ருதுபர்ணஸ்ய ராஜர்ஷே: கீர்த்தனம் கலி நாசனம்
6. அச்வத்தாமா பலிர்வ்யாஸ : ஹனுமான் ச விபீசண:
க்ருப: பரசுராமஸ்ச்ச ஸப்தைதே சிரஜீவின:
7. ப்ரம்மா முராரி : ஸ்திரிபுராந்தகச்ச
பானுச்சசீ பூமிஸுதோ புதச்ச
குருச்ச சுக்ரச்சனிராஹுகேதவ:
குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம்
8. ப்ருகுர்வஸிஷ்ட : க்ரதுரங்கிராச்ச
மனு: புலஸ்த்ய : புலஹச்ச கௌதம:
ரைப்யோ மரீசி : ச்யவனோத தக்ஷ:
குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம்
9. ஸனத்குமாரச்ச ஸனந்தனச்ச
ஸனாதனோப்யாஸுரிஸிம்ஹலௌச
ஸப்தஸ்வராஸ்ஸப்த ரஸாதலானி
குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம்
10. ஸப்தார்ணவா : ஸப்தகுலாசலாச்ச
ஸப்தர்ஷயோ த்வீபவனானி ஸப்த
பூராதிலோகா : புவனானி ஸப்த
குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம்
11. ப்ருத்வீ ஸகந்தா ஸரஸாஸ்ததா ஸஸப:
ஸ்பர்சச்ச வாயூர்ஜ்வலிதம்ச தேஜ:
நபஸ்ஸசப்தம் மஹாதாஸஹைவ
குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம்
12. குருர்ப்ரஹ்மா குருர்விஷ்ணு குருர்தேவோ மஹேச்வர:
குரு: ஸாக்ஷ?த் பரம் ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீகுரவே நம:

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

அப்பா சொல்லை தட்ட முடியவில்லை

அப்பா சொல்லைத் தட்டமுடியாமல் ஓரிக்கைக்கு வந்தார் கணபதி. அங்கே பெரியவா இருந்த சின்ன அறையில் வெளிச்சம் கூட இல்லை. அவரும் ஏதோ காஷாயம் சுற்றிக்கொண்டு உட்கார்ந்திருந்தார். கணபதிக்கு அங்கே எந்த ஈர்ப்பும் ஏற்படவில்லை. என்ன இவர்... கோயில் வாசலில் இருக்கும் ஆண்டியைவிட சாதாரணமா இருக்காரே என்ற எண்ணம்!

அறைக்குள் நுழைந்தது முதல், வைத்த கண் எடுக் காமல் கணபதியைப் பார்த்துக் கொண்டிருந்த மஹா பெரியவா சிறிது நேரம் கழித்துப் 'போகலாம்’ என்று உத்தரவு கொடுத் ததும்தான் 'அப்பாடா’ என்றிருந்தது கணபதிக்கு.

இருந்தாலும் வீடு திரும்பிய பின்னரும் கணபதியின் மனசு பூராவும் பெரியவா நினைப்பே சுழன்று சுழன்று வந்தது. எங்கே திரும்பினாலும் பெரியவா இருக்கிற மாதிரி ஒரு பிரமை! 'பெரியவா என்னைத் தடுத்தாட்கொண்டு இருக்கார்னு புரிஞ்சுது. அதன் பிறகு என் வாழ்க்கையே திசை திரும்பிடுச்சு!’ என்று கூறியிருக்கிறார் கணபதி. அதன் பிறகு, 'கல்கி’ பத்திரிகையுடன் தொடர்பு ஏற்பட்டு, சதாசிவம், எம்.எஸ் தம்பதியின் கருணை வட்டத்தில் வந்து விட்டார். சில காலம் கழித்து, மடத்துக்கு மீண்டும் அறிமுகமாகி, பெரியவா சொல்வதைக் குறிப்பு எடுக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

பெரியவா ஓரிடத்தில் சொன்ன சமாசாரத்தை இன்னோர் இடத்தில் தொடர்வார். பெரியவா பேச்சில் சயின்ஸ் இருக்கும்; வேதம் இருக்கும். கணபதி எல்லாவற்றையும் ஒன்று விடாமல் குறித்துக்கொள்வார். வேத வியாசருக்கு விநாயகர் அமைந்த மாதிரி, மஹா பெரியவாளுக்கு ரா.கணபதி கிடைத்தார் னுதான் சொல்லணும். ஆசார நியம நிஷ்டை, தபஸ் எல்லாமே கணபதிக்குப் பழகிப் போச்சு. நைஷ்டிக பிரம்மசாரி. ராமகிருஷ்ண மடத்து 'அண்ணா’தான் அவருக்கு மந்திர குரு; உபதேசம் செய்து வைத்தவர்.

கணபதி அம்பத்தூரில் தங்கியிருந்த காலத்தில் அவர் அம்பாள் பூஜை செய்வதை பார்க்கணுமே... அவ்வளவு சிலிர்ப்பா இருக்கும். கேரள நம்பூதிரி ஒருவர் இந்த அம்பாள் விக்கிரகத்தைத் தலையிலேயே சுமந்துகொண்டு வந்து, சிதம்பரத்தில் இருந்த இவரது வீட்டில் சேர்ப்பித்தாராம். கேட்டதற்கு, 'இங்கேதான் கொடுக்கணும்னு அம்பாள் சொல்லிட்டா’ என்றாராம்.

கொஞ்ச காலம் புட்டபர்த்தியில் தங்கலாம் என்று அங்கே போனார் கணபதி. ஆனால், ஸ்ரீசாயிபாபா இவரைக் கூப்பிட்டு, 'தெய்வத்தின் குரலை’ எழுதுவதே உங்களின் பிறவிப் பணி. நீங்கள் தொகுக்கும் 'தெய்வத்தின் குரல்’ இந்து மதத்துக்கும் சனாதன தர்மத்துக்கும் பலமாக - உபநிஷத்துக்குச் சமானமாக இருக்கப் போகிறது’ என்று அருளினாராம்.
மஹா பெரியவாளை ஸ்ரீராமர் என்றுதான் கணபதி சொல்வார். பெரியவாளுடைய நூற்றாண்டு விழாவின் போது, கணபதியை கௌரவம் பண்ணி சன்மானம் கொடுக்க... அதை அப்படியே ஓரிக்கை கோயிலுக்குக் கொடுத்துவிட்டார் கணபதி.

ஒரு சந்தர்ப்பத்தில், பெரியவா சரிதத்தைக் 'கல்கி’யில் எழுதத் தொடங்கினார். இரண்டு வாரம்தான் வந்திருக்கும். பெரியவா கணபதியைக் கூப்பிட்டனுப்பி, 'போறும் நிறுத்திடு’ன்னு சொல்லிட்டார். 'அதுக்குப் பதிலா, மடத்திலே எனக்காக எத்தனையோ பேர் இரவும் பகலும் உழைக்கறவா இருக்கா. அவாளைப் பத்தி எழுது!’ன்னார். 'அவர்களைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாதே’ என கணபதி தயங்கவும், 'தெரிஞ்சதை எழுது; தெரியாததை நான் சொல்றேன். 1907-ல் பைங்காநாடு கணபதி சாஸ்திரி எனக்கு வித்யா குருவா இருந்திருக்கார். அவரைப் பற்றி எழுது. பெரிய புராணம் மாதிரி, இதைத் திருத்தொண்டர் புராணம்னு எழுது’ என்று சொன்னாராம் பெரியவா. ஆனால், கடைசியில், மடத்தைச் சேர்ந்த ஏ.குப்புசாமி ஐயர் என்பவர்தான் அதை எழுதினார்.
'தெய்வத்தின் குரலை’ நான் உபன்யாசம் செய்வது இருக்கட்டும்... அதைப் படித்தவர்கள் யாரேனும் வாழ்க்கையில் சிறிதேனும் தங்களை மாற்றிக்கொண்டு இருக்கிறார்களா என்பதை அறிய, நானும் நண்பர் சிவராமனும் போகிற இடங்களில் எல்லாம் கவனித்துப் பதிவு செய்வது வழக்கம். அப்படியான சம்பவங்கள் நிறைய! 'தெய்வத்தின் குரல்’ ஏழு பாகங்கள் வெளியாகி இருக்கு. ஏழாவது வால்யூமை பெரியவா பார்க்கலை. கணபதி, இன்னும் இரண்டு வால்யூம்களுக்கு விஷயம் வைத்திருந்தார். 'அதையெல்லாம் எப்போது எழுதப் போகிறீர்கள்?’ என்று கேட்டபோது, கணபதி என்ன சொன்னார் தெரியுமா? 'என் புத்தியில் இருந்து எழுத வெச்ச பேய் மலை ஏறிடுத்து. இனிமே என்னால எழுத முடியாது!’ என்றார் தமாஷாக. மகா பெரியவா மாதிரியே கணபதிக்கும் அசாத்திய ஞாபக சக்தி. பத்து வருஷத்துக்கு முந்தி சந்தித்தவரைக்கூட, நினைவில் வைத்து விசாரிப்பார்.

ரா.கணபதி போதேந்திராள் சரிதத்தையும் 'காம கோடி ராம கோடி’ எனும் தலைப்பில் எழுதி வெளியிட்டிருக்கார். போதேந்திராள் 59-வது ஆசார்ய பீடம்; அவர் கோபி சந்தனம் இட்டுக் கொண்டிப்பார் எனப் புத்தகத்தில் எழுதியிருந்தார் கணபதி. 'அது தப்பு; திருத்தணும்!’ என்றாராம் பெரியவா. அத்துடன், 'விபூதி, ருத்ராட்சம் தவிர வேறெதுவும் அணிவதில்லை என்ற மடத்து சம்பிரதாயத்தை அவர்கள் (போதேந்திராள்) ரட்சித்துக் கொடுத்தார்கள். அதை ஜனங்க தெரிஞ்சுக் கணும்’ என்றும் அறிவுறுத்தினாராம்.

ஆதிசங்கரர் குறித்த 'ஜெயஜெய சங்கர’, ஸ்ரீரமணரைப் பற்றிய 'ரமணாயனம்’, மீராபாயின் வரலாற்றைச் சொல்லும் 'காற்றினிலே வரும் கீதம்’, பாபாவின் சரிதம் சொல்லும் 'ஸ்வாமி’, ராமகிருஷ்ண பரமஹம்சர்- விவேகானந்தர்- சாரதாமணி அம்மையார் பற்றி 'அறிவுக்கனலே, அருட் புனலே’ ஆகிய அற்புதமான நூல்களும் ரா.கணபதியின் படைப்புகளே! எனினும், 'தெய்வத்தின் குரல்’ ஒன்றுக்காகவே தமிழுலகமும் ஆத்திக உலகும் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது'' - நெகிழ்ச்சியுடன் சொல்லி முடித்தார் கணேச சர்மா.
'ஒருமுறை நானும் பால்யூவும் ரா.கணபதி சாரும் பாபாவை தரிசிச்சுட்டு, புட்டபர்த்தியில் இருந்து ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தோம். மாலை நேரம் ஆனதும் தியானத்தில் ஆழ்ந்துவிட்டார் கணபதி சார். நெற்றி நிறைய விபூதியுடன் அவரைப் பார்த்தபோது ஆதிசங்கரர் மாதிரி இருந்தது.

வழியில் ஓரிடத்தில் பயங்கரச் சத்தம். அசம்பாவிதம் எதுவும் இல்லை என்றாலும், எல்லோரும் பயந்துபோனோம். ஆனால், கணபதி சார் கொஞ்சம்கூட அசையவில்லையே! அப்படியரு யோக நிஷ்டையில் இருந்தார். இப்போது நினைத்தாலும் சிலிர்க்க வைக்கும் ஆச்சரியம் அது!'' என்று நெகிழ்கிறார் ஓவியர் மணியம் செல்வன். அறிஞர் அண்ணாவின் அன்னையார் மறைந்த தருணம்... மிகுந்த வருத்தத்தில் ஆழ்ந்திருந்தாராம் பேரறிஞர். அந்த வாரம் கல்கி இதழில் 'ஜய ஜய சங்கர’ தொடரில்... ஆதிசங்கரரின் தாயார் ஆர்யாம்பாள் மரணம் அடைவது பற்றி உருகி எழுதியிருந்தார் கணபதி. 'அதில் தாயை இழந்த சோகத்தை சங்கரர் அனுபவித்த விதம் குறித்து கணபதி எழுதியிருந்த விதத்தைப் படித்து நானும் நெகிழ்ந்துவிட்டேன்’ என அறிஞர் அண்ணா, பாரதி பதிப்பகம் வெளியிட்டிருக்கும் 'தன் வரலாறு’ நூலில் பதிவு செய்திருக்கிறார். ஆம்... அனைத்துத் தரப்பினரையும் அசைத்துப் பார்க்கும் எழுத்து நடைக்குச் சொந்தக்காரர் ரா.கணபதி.

வேண்டாம் இந்த சூதாட்டம்

வேண்டாம் இந்தச் சூதாட்டம் என்று தடுத்திருக்கலாம் அல்லவா? ஏன் அப்படிச்செய்யவில்லை பகவானே? என்று கேட்கப்பெற்ற போது கிடைத்த பதில். அதிரவைக்கும் பதில்

உத்தவர் கேட்க ஆரம்பித்தார்: "கண்ணா! முதலில் எனக்கு ஒரு விளக்கம் வேண்டும்.கிருஷ்ணா!

நீ பாண்டவர்களின் உற்ற நண்பன். உன்னை அவர்கள் ஆபத்பாந்தவனாக பரிபூரணமாக நம்பினார்கள். நடப்பதை மட்டுமல்ல நடக்கப் போவதையும் நன்கறிந்த ஞானியான நீ உற்ற நண்பன் யார் என்பதற்கு நீ அளித்த விளக்கத்தின் படி முன்னதாகவே சென்று தருமா! வேண்டாம் இந்தச் சூதாட்டம் என்று தடுத்திருக்கலாம் அல்லவா? ஏன் அப்படிச் செய்யவில்லை? போகட்டும். விளையாட ஆரம்பித்ததும் தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும் படி செய்து வஞ்சகர்களுக்கு நீதி புகட்டியிருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. தருமன் செல்வத்தை இழந்தான் நாட்டை இழந்தான் தன்னையும் இழந்தான். சூதாடியதற்குத் தண்டனையாக அதோடு அவனை விட்டிருக்கலாம். தம்பிகளை அவன் பணயம் வைத்த போதாவது நீ சபைக்குள் நுழைந்து தடுத்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப் பணயம்வைத்து ஆடு. இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன் என்று சவால் விட்டான் துரியோதனன். அப்போதாவது உனது தெய்வீக சக்தியால் அந்த பொய்யான பகடைக்காய்கள் தருமனுக்குச் சாதகமாக விழும்படி செய்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. மாறாக திரௌபதியின் துகிலை உரித்து அவளின் மானம் பறிபோகும் நிலை ஏற்பட்ட போது தான் சென்று துகில்தந்தேன் திரௌபதி மானம் காத்தேன் என்று மார்தட்டிக் கொண்டாய். மாற்றான் ஒருவன் குலமகள் சிகையைப் பிடித்து இழுத்து வந்து சூதர்சபையில் பலர் முன்னிலையில் அவள் ஆடையில் கை வைத்த பிறகு எஞ்சிய மானம் என்ன இருக்கிறது? எதனைக் காத்ததாக நீ பெருமைப்படுகிறாய்? ஆபத்தில் உதவுபவன் தானே ஆபத்பாந்தவன்? இந்த நிலையில் உதவாத நீயா ஆபத்பாந்தவன்? நீ செய்தது தருமமா?' என்று கண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர்.

இது உத்தவரின் உள்ளக் குமுறல் மட்டுமன்று; மகாபாரதம் படித்து விட்டு நாம் அனைவருமே கேட்கும் கேள்விகளே இவை. நமக்காக இவற்றை அன்றே கண்ணனிடம் கேட்டிருக்கிறார் உத்தவர்.

பகவான் சிரித்தார். உத்தவரே! விவேகம் உள்ளவனே ஜெயிக்க வேண்டும் என்பது உலக தர்ம நியதி. துரியோதனனுக்கு இருந்த விவேகம் தருமனுக்கு இல்லை. அதனால் தான் தருமன் தோற்றான் என்றான் கண்ணன். உத்தவர் ஏதும் புரியாது திகைத்து நிற்க கண்ணன் தொடர்ந்தான். துரியோதனனுக்கு சூதாடத்தெரியாது. ஆனால் பணயம் வைக்க அவனிடம் பணமும் ஏராளமான ஆஸ்தியும் இருந்தது. பணயம் நான் வைக்கிறேன். என் மாமா சகுனி பகடையை உருட்டிச் சூதாடுவார் என்றான் துரியோதனன். அது விவேகம். தருமனும் அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு நானும் பணயம் வைக்கிறேன். ஆனால் என் சார்பாக என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன் பகடைக்காயை உருட்டுவான்' என்று சொல்லியிருக்கலாமே? சகுனியும் நானும் சூதாடியிருந்தால் யார் ஜெயித்திருப்பார்கள்? நான் கேட்கும் எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக் காய்களில் போடத்தான் முடியுமா? அல்லது,அவன் கேட்கும் எண்ணிக்கைளை என்னால்தான் போடமுடியாதா? போகட்டும். தருமன் என்னை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்து விட்டான் என்பதையாவது மன்னித்து விடலாம். ஆனால் அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும் தவறையும் செய்தான். ஐயோ! விதி வசத்தால் சூதாட ஒப்புக் கொண்டேனே! ஆனால் இந்த விஷயம் ஸ்ரீகிருஷ்னுக்கு மட்டும் தெரியவே கூடாது. கடவுளே! அவன் மட்டும் சூதாட்ட மண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். என்னை மண்டபத்துக்குள் வர முடியாதவாறு அவனே கட்டிப் போட்டு விட்டான். நான் அங்கு வரக் கூடாதென என்னிடமே வேண்டிக்கொண்டான். யாராவது தனது பிரார்த்தனையால் என்னைக் கூப்பிடமாட்டார்களா என்று மண்டபத்துக்கு வெளியில் காத்துக் கொண்டு நின்றேன். பீமனையும் அர்ஜுனனையும் நகுல சகாதேவர்களையும் வைத்து இழந்தபோது அவர்களும் துரியோதனனைத் திட்டிக் கொண்டும் தங்கள் கதியை எண்ணி நொந்து கொண்டும் இருந்தார்களே தவிர என்னைக் கூப்பிட மறந்து விட்டார்களே! அண்ணன் ஆணையை நிறைவேற்ற துச்சாதனன் சென்று திரௌபதியின் சிகையைப் பிடித்த போது அவளாவது என்னைக் கூப்பிட்டாளா? இல்லை. அவளும் தனது பலத்தையே நம்பி சபையில் வந்து வாதங்கள் செய்து கொண்டிருந்தாளே ஒழிய என்னைக் கூப்பிடவில்லை! நல்லவேளை.. துச்சாதனன் துகிலுரித்த போதும் தனது பலத்தால் போராடாமல் ஹரி... ஹரி... அபயம் கிருஷ்ணா! அபயம் எனக் குரல் கொடுத்தாள் பாஞ்சாலி. அவளுடைய மானத்தைக் காப்பாற்ற அப்போது தான் எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அழைத்ததும் சென்றேன். அவள் மானத்தைக் காக்க வழி செய்தேன். இந்தச் சம்பவத்தில் என் மீது என்ன தவறு? என்று பதிலளித்தான் கண்ணன்.

அருமையான விளக்கம் கண்ணா! அசந்துவிட்டேன். ஆனால் ஏமாறவில்லை. உன்னை இன்னொரு கேள்வி கேட்கலாமா?" என்றார் உத்தவர்.

"கேள்" என்றான் கண்ணன்.

அப்படியானால் கூப்பிட்டால் தான் நீ வருவாயா? நீயாக நீதியை நிலை நாட்ட ஆபத்துகளில் உன் அடியவர்களுக்கு உதவ வரமாட்டாயா? புன்னகைத்தான் கண்ணன்.

உத்தவா மனித வாழ்க்கை அவரவர் கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்துவதும் இல்லை; அதில் குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும் 'சாட்சி பூதம்’. நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே! அதுதான் தெய்வ தர்மம்" என்றார்.

நன்றாயிருக்கிறது கிருஷ்ணா! அப்படியானால் நீ அருகில் நின்று நாங்கள் செய்யும் தீமைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய். நாங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து பாவங்களைக் குவித்து துன்பங்களை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படித்தானே?" என்றார் உத்தவர். உத்தவரே! நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நன்றாக உணர்ந்து பாருங்கள். நான் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை நீங்கள் உணரும் போது உங்களால் தவறுகளையோ தீவினைகளையோ நிச்சயமாகச் செய்ய முடியாது. அதை நீங்கள் மறந்து விடும் போது தான் எனக்குத் தெரியாமல் செயல்களைச் செய்து விடலாம் என்று எண்ணுகிறீர்கள். பாதிப்புக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் நிகழ்வதும் அப்போது தான். எனக்குத் தெரியாமல் சூதாடலாம் என்று தருமன் நினைத்தானே அது தான் அவனது அஞ்ஞானம். நான் சாட்சி பூதமாக எப்போதும் எல்லோருடனும் இருப்பவன் என்பதை தருமன் உணர்ந்திருந்தால் இந்த சூதாட்ட நிகழ்ச்சி வேறு விதமாக முடிந்திருக்கும் அல்லவா? என்றான் ஸ்ரீகிருஷ்ணன். உத்தவர் வாயடைத்து பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தார். ஆகா! எத்தனை ஆழமான தத்துவம்! எத்தனை உயர்ந்த சத்யம்! பகவானைப் பூஜிப்பதும் பிரார்த்தனை செய்வதும் அவனை உதவிக்கு அழைக்கும் ஓர் உணர்வுதானே! அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்ற நம்பிக்கை வரும் போது அவன் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை எப்படி உணராமல் இருக்க முடியும்? அதனை மறந்துவிட்டு எப்படிச் செயலாற்ற முடியும்?

இந்த தத்துவத்தைதான் பகவத்கீதை முழுவதிலும் கண்ணன் அர்ஜுனனுக்கு உபதேசித்தான்.
அர்ஜுனனுக்காகத் தேரைச் செலுத்தி வழி நடத்தினானே தவிர அர்ஜுனன் இடத்தில் தானே நின்று அவனுக்காகப் போராடவில்லை அது தான் பகவானின் மேன்மை!

வியாழன், 13 ஆகஸ்ட், 2020

வால்மீகி ராமாயணம்

வால்மீகி வரலாறு தேவலோகத்தில் வருண பகவான் தன்னுடைய குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது நாராயண நாமத்தை சொல்லிக்கொண்டு நாரதர் அங்கு வந்தார். வருண பகவானோ நாரதர் வருவதைக் கவனிக்காமல் குழந்தையுடனே விளையாடிக் கொண்டிருந்தார். நாராயண நாமத்தை கவனிக்காத வருணன் மேல் கோவம் கொண்ட நாரதர் நீ உன் குழந்தையை பிரிவாயாக என்று சாபமிட்டார். நாரதரிடம் தன்னை மன்னிக்கும் படியும் சாப விமோசனம் கொடுக்கும் படியும் கேட்டுக்கொண்டான் வருணன். அதற்கு நாரதர் இந்தச் சாபம் ஒரு வரம் இக்குழந்தை பூலோகத்தில் பிறந்து பிற்காலத்தில் விஷ்ணுவின் அவதாரப் புராணத்தை ஒரு இதிகாசமாகப் படைக்கும் என்று வாழ்த்திவிட்டு சென்றார். அக்குழந்தையே பிற்காலத்தில் வால்மீகி என்ற பெயர் பெற்று ராமாயணத்தை படைத்தார். மகரிஷி கஷ்யப அதிதி தம்பதியருக்கு ஒன்பதாவது குழந்தையாக வருண் பிரசேதாஸ் என்பவர் பிறந்தார். அந்த வருண் பிரசேதாஸிற்கு ரிக்சன் என்கிற ரத்னாகர் பத்தாவது குழந்தையாகப் பிறந்தார். ரத்னாகர் தனது மிகவும் ஏழ்மையான குடும்பத்தைக் காப்பாற்ற வழி தெரியாமல் திருட ஆரம்பித்தான். காட்டு வழியில் வருபவர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி கொள்ளை அடித்துக் கொண்டு தன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தான். அவனுடைய ஜென்ம காரணத்தினால் நாரதர் ரத்னாகர் இருந்த காட்டு வழியே வந்தார். அவர் வருவதைப் பார்த்துவிட்டு கத்தியை எடுத்துக் கொண்டு அவர் அருகில் சென்றான். அவரை அருகில் சென்று பார்ததுமே அவன் மனதில் சிறிது சாந்தம் ஏற்பட்டது. அவரிடம் யார் நீங்கள்? எங்கு வந்தீர்கள்? இருப்பதையெல்லாம் கீழே வைத்துவிட்டு பேசாமல் ஓடிப்போங்கள் என்றான். அதற்கு அவர் என்னிடம் ஒன்றுமே இல்லை நான் நாராயண மந்திரத்தைச் சொல்லிக் கொண்டு பகவானை வணங்கிக் கொண்டு இருக்கின்றேன். எனக்கு எதுவும் தேவை இல்லை. சதா பகவத் தியானத்திலேயே ஆனந்தமாக இருக்கின்றேன் என்றார். அதற்கு ரத்னாகர் பார்த்தாலே தெரிகிறது நீங்கள் சாந்தமாக ஆனந்தமாக இருக்கின்றீர்கள். ஆனால் உங்களிடம் ஒன்றும் இல்லை என்கின்றீர்கள். நான் நிறைய கொள்ளையடித்து சேர்த்து வைத்திருக்கிறேன் என்றான். நீ இப்படி சேர்த்து வைத்த பணமெல்லாம் பண மூட்டை இல்லையப்பா இதெல்லாம் பாவ மூட்டை. இதற்காக நரகத்தில் கஷ்டப்படுவாய். இந்த உலக வாழ்க்கைக்குப் பிறகு சொர்க்கம் நரகம் என்று உள்ளது. இங்கே நல்ல வாழ்க்கை வாழ்ந்து புண்ணிய காரியங்கள் செய்தால் சொர்க்கம் செல்வார்கள். பாவச் செயல்கள் செய்தால் நரகத்திற்கு செல்வார்கள். நரகத்தில் பலவிதமான தண்டனைகளைப் பெற்று அவதிப் படவேண்டியிருக்கும் என்றார் நாரதர். நான் செய்யும் செயல்கள் அனைத்தும் என் மனைவி குழந்தைகளுக்காகத் தானே செய்கிறேன். அவர்கள் எல்லோரும் என்னுடைய பாவத்தைப் பகிர்ந்து கொள்வார்கள் என்றான் ரத்னாகர். அப்படியானால் நீ அவர்களைப் போய் கேட்டுக் கொண்டு வா என்றார் நாரதர். முனிவரே தப்பித்துப் போக முயல்கிறீரா இதெல்லாம் என்னிடம் முடியாது என்றான். இல்லையப்பா நீ வேண்டுமானால் என்னைக் கயிற்றால் கட்டிப் போட்டுவிட்டுச் செல். அவர்களிடம் கேள். அவர்கள் உன் பாவத்தில் பங்கு கொள்வதாய்க் கூறிவிட்டால் என்னிடம் உள்ளதை எல்லாம் எடுத்துக்கொள். அவர்கள் இல்லையென்று சொல்லிவிட்டால் நான் சொல்வதை நீ செய்ய வேண்டும் என்றார் நாரதர். ரத்னாகர் யோசித்துப் பார்த்தான். இந்த முனிவர் சொல்வதும் சரியாகத் தான் இருக்கிறது. நாம் கேட்டுத்தான் பார்ப்போமே என்று நினைத்து நாரத முனிவரை அங்கிருந்த ஒரு மரத்தில் கட்டிப் போட்டு விட்டு சென்றான். 

ரத்னாகர் அவனின் வீட்டுக்கு வந்து தன் அப்பா அம்மா மனைவி மற்றும் குழந்தைகளிடம் நான் நிறைய பாவம் செய்துவிட்டதாக ஒரு முனிவர் சொல்கிறார். அந்த பாவங்களை எல்லாம் நீங்கள் என்னோடு பகிர்ந்து கொள்கிறீர்களா என்று கேட்டான். அதற்கு அவர்கள் நாங்கள் எதற்காக உன் பாவங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்? நீ நல்ல வழியில் சம்பாதிக்க வேண்டியதுதானே? நீ ஏன் பாவ வழியில் சம்பாதிக்கின்றாய்? குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டியது உன்னுடைய கடமை. அதற்கு நல்ல வழியில் சம்பாதிக்க வேண்டியது உன்னுடைய தர்மம். அதை விட்டு விட்டு தவறான வழியில் சம்பாதிப்பது உன் தவறு. அதனால் உன்னுடைய பாவத்தை நாங்கள் வாங்கிக் கொள்ள மாட்டோம் என்று கூறிவிட்டனர்.

இதைக் கேட்டவுடன் ரத்னாகருக்கு அகக்கண் திறந்துவிட்டது. திரும்பி வரும்போது முற்றிலும் மாறியிருந்தான் ரத்னாகர். ஓடி வந்து நாரதரின் காலில் விழுந்து சுவாமி நீங்கள் சொன்னது சரிதான் என்று கண் கலங்கியபடியே நாரதரின் கட்டுகளை அவிழ்த்து விட்டான். சுவாமி நீங்கள் சொன்னபடி என் மனைவி குழந்தைகள் பெற்றோர் என எல்லோரிடமும் என் பாவத்தில் பங்கு கொள்வீர்களா என்று கேட்டேன். எல்லோரும் ஒரே விதமாய் எங்களைக் காப்பாற்ற வேண்டியது உன் கடமை. நீ எப்படிப் பொருள் கொண்டு வருகிறாய் என்பது பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. நீ பாவ வழிகளில் சம்பாதித்தால் அந்த பாவங்களை நீதான் அனுபவிக்க வேண்டும். அதில் எங்களுக்கு எந்த பங்கும் இல்லை என்று கூறிவிட்டார்கள் என்றான். அதற்கு நாரதர் அவர்கள் சொன்னதில் தவறில்லையே? மனைவி மக்களைக் காப்பாற்றுவது உன் கடமை. அதை நல்வழியில் செய்கிறாயா இல்லையா என்பதைப் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை என்றார் நாரதர். ஆமாம் சுவாமி அதை நான் இப்போது உணர்கிறேன். நீங்கள் தான் நான் எல்லா பாவங்களில் இருந்தும் விடுபட ஒரு நல்ல வழி காண்பிக்க வேண்டும் என்றான். நீ செய்த பாவங்களுக்கு எல்லாம் தகுந்த பிராயச்சித்தம் இராம நாமத்தைச் சொல்லிக் கொண்டு இருப்பதே. இராம நாமத்தை ஜபம் செய்வது எல்லாப் பாவத்தையும் போக்கும் என்றார் நாரதர்.

ரத்னாகருக்கு ராம என்ற சொல் வாயில் நுழையவில்லை. இதனை பார்த்த நாரதர் அங்கிருக்கும் மரத்தை காட்டி இது என்ன மரம் என்று கேட்டார். இது மரா மரம் என்றான். நீ இந்த மரத்தின் பெயரான மரா என்பதைச் சொல்லிக் கொண்டிரு அது போதும் என்றார். நீங்கள் சொன்னபடியே இந்த மரா மரத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்று வணங்கி நின்றான். நாரதரும் அவனை ஆசீர்வசித்து விட்டுத் தன் வழியே சென்றார். அவர் போனபின் ரத்னாகர் அங்கேயே அமர்ந்து தன்னை மறந்து மரா மரா மரா என்று ஜபிக்க ஆரம்பித்தான். நாளடைவில் அது ராம ராம ராம என்று மறுவி ஒலித்தது. ரத்னாகர் இரவு பகலாய் பசி தாகத்தை மறந்து ராம ராம ராம என்று ஜபம் செய்து கொண்டே சமாதி எனும் நிஷ்டையில் இருந்தான். அசையாமல் அவன் இருந்ததால் நாளடைவில் அவன் மேல் புற்று வளர்ந்தது. ராம நாம ஜபத்தால் அவன் பாவமெல்லாம் அழிந்து ஞானம் பெற்றான்.

சில காலம் கழித்து சப்தரிஷிகள் அந்தப் பக்கம் வந்தார்கள். அங்கே ராம நாம ஜபம் ஒரு புற்றுக்குள்ளிருந்து ஒலித்துக் கொண்டிருப்பதைக் கேட்டு அதற்குள் இருப்பவரை தங்களின் ஞானக்கண்ணால் பார்த்து வால்மீகி என்று அழைத்தனர். சமஸ்கிருதத்தில் வால்மீகி என்றால் புற்றுக்குள்ளிருப்பவன் என்று பெயர். அவர்களின் அழைப்பினால் தவம் கலைந்து புற்றிலிருந்து ரத்னாகர் வால்மீகியாக வெளியே வந்தார். இடைவிடாத ராம நாம ஜெபத்தின் பயனால் நீங்கள் ஒரு மகரிஷியாகிவிட்டீர்கள். இன்றிலிருந்து உமக்கு வால்மீகி என்று பெயரே நிலைக்கும். ராம நாமத்தின் மகிமையை உங்கள் மூலமாக இந்த உலகம் தெரிந்துக் கொள்ளும் என்று கூறி ஆசீர்வதித்தனர். அவரும் ரிஷிகளை நமஸ்கரித்து விட்டு பின் ராம நாமத்தையே ஜபித்துக் கொண்டு ஒரு ஆசிரமத்தை தமஸா நதிக் கரையில் கட்டிக் கொண்டார். அவரிடம் சிஷ்யர்கள் எல்லாம் வந்து சேர்கிறார்கள். வால்மீகி தன்னுடைய தவத்தினால் ராமனின் வரலாற்றை தனது ஞானதிருஷ்டியில் கண்டார். இப்படிப்பட்ட குணாதிசயங்களோடு ஒரு மனிதன் இந்த உலகத்தில் இருப்பானா என்று அவருக்கு சந்தேகம் வந்தது.

ஒரு நாள் நாரதர் அவரது ஆசிரமத்திற்கு வருகிறார். அவரை வரவேற்ற வால்மீகி தன்னுடைய ஞான திருஷ்டியில் கண்ட மனிதனை பற்றி நாரதரிடம் கேட்கின்றார். இந்த உலகில் சத்யம், தர்மம், அழகு, படிப்பு, வீரம், ஒழுக்கம் என்று எல்லா நல்ல குணங்கள் கொண்ட மனிதன் யாரேனும் உண்டா என்று நாரதரிடம் கேட்டார். அதற்கு நாரதர் உண்டு அவர் தான் இக்ஷ்வாகு வம்சத்தில் வந்த தசரத மன்னனின் குமாரர் ஸ்ரீராமர் என்று கூறி வால்மீகி முனிவருக்கு ராம சரித்திரத்தை சுருக்கமாக நூறு சுலோகங்களில் உபதேசித்தார். இது ஸங்க்ஷேப இராமாயணம் எனப்படும். இதுவே வால்மீகி ராமாயணத்தின் முதல் சர்கம் ஆகும்.

ஒரு நாள் வால்மீகி முனிவர் தமஸா நதியில் குளிக்க செல்கிறார். அப்போது அங்கு இரண்டு அன்றில் பறவைகள் மகிழ்ச்சியுடன் விளையாடிக் கொண்டு இருக்கின்றன. அப்போது வேடன் ஒருவன் அம்பால் ஒரு அன்றில் பறவையை அடித்துவிடுகிறான். ஒரு பறவை இறந்தவுடன் இன்னொரு பறவை தன்னுடைய ஜோடி பறவை இறந்த துக்கத்தில் ஓலமிட்டது. பறவையின் துக்கத்தை கண்ட வால்மீகி தன் ஞான திருஷ்டியில் கண்ட ராமனும் இப்படி தானே சீதையை பிரிந்து துக்கப்பட்டிருப்பான் என்று எண்ணி திரேதாயுக விஷ்ணுவின் அவதாரமான ராமாயண இதிகாசத்தை 24000 சுலோகங்கள் கொண்டதாக முழுமையாக இயற்றினார். யோக வாசிஷ்டம், அத்புத ராமாயணம், கங்காஷ்டகம் ஆகிய நூல்களும் இவரால் இயற்றப்பட்டவையே.

வால்மீகி இயற்றிய ராமாயணம் இந்தியாவின் அனைத்து மக்களிடமும் பரவி உலகில் பல்வேறு மொழிகளிலும் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இவர் இயற்றிய ராமாயணமும் அதன் பாத்திரங்களும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. ராமாயணம் நூல் இதிகாசமே என்றாலும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் புவியியல் அமைவுகள் விவரிக்கப் பட்டிருக்கும் ஆட்சி முறைமைகள் அரசுகள் போன்றவற்றை ஆய்வு நோக்கில் பார்க்கும் போது வெறுமனே கற்பனையை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு இவ்வாறான ஒரு இதிகாசத்தைப் படைக்க முடியாது என்று தெரிந்து கொள்ளலாம். நான்கு வரிகள் கொண்ட சுலோகங்களால் எழுதப்பட்டுள்ள வால்மீகியின் ராமாயணத்திலிருந்து ஒரு வரியைக் கூட மாற்ற முடியாது அல்லது புதிதாக இடைச் செருகல் என்று சேர்க்க முடியாது என்பது மகாகவி பாரதியாரின் வாக்கு.

பல முனிவர்கள் வால்மீகி என்கிற இதே பெயரில் இருந்து சித்தி அடைந்திருக்கிறார்கள். எட்டுகுடியில் ஒரு வால்மீகியின் சமாதி இருக்கிறது. அவர் எழுதிய பாடல்கள் மூலம் அவர் பிற்காலத்தவர் என்று தெரிந்து கொள்ளலாம். திருவாரூர், சங்கரன்கோவில், குடவாசல், திருவெற்றியூர், காஞ்சீபுரம் இப்படிப் பல கோவில்களில் வால்மீகநாதர் சந்நிதியும் வேறுபாடான திரு உருவங்களும் உண்டு. இவை எல்லாம் வால்மீகி என்ற பெயரில் பல முனிவர்கள் இருந்திருக்கின்றார்கள் என்பதற்குச் சான்றாகும்.

கர்மாவின் கதை

கர்மாவின் கதை:-

ஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார்.! யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் என்றார்.! பின் சித்திரக்குப்தனை யமன் ரிஷியுடன் செல்ல பணிந்தார்.! சித்திரக்குப்தன் யமன் ஆணைக்கு இணங்க ரிஷியுடன் சென்றார்.

யமலோகம் விசித்திர லோகம். அங்கே நடக்கும் ஒவ்வொரு காரியத்துக்கும் உண்டான காரணம், பாகுபாடற்ற-பாரபட்சமற்ற நீதி, நிலை நிறுத்தப்படும் தர்மம் அத்தனையையும் பார்க்கப் பார்க்க, அந்த ரிஷியே ஆடிப்போனார். தண்டனைகளுக்கான காரணங்களில் அத்தனை துல்லியம். ‘இப்படி நரகம் என்று ஒன்று இருப்பது தெரிந்தும், தண்டனை கிடைக்கும் என்பதை அறிந்தும் ஏன் இந்த மனிதர்கள் பாவங்களைச் செய்கிறார்கள்?’ நினைக்க நினைக்க அவருக்கு ஆச்சர்யமாக இருந்தது.  

மனிதர்கள் தங்கள் பாவங்களுக்காக அனுபவிக்கும் கொடூர தண்டனைகள் அவரை சஞ்சலம்கொள்ள வைக்கவில்லை. பந்த பாசங்களுக்கு அப்பாற்பட்ட, அனைத்தையும் கடந்த, சித்தி பல பெற்ற முனிவர் அல்லவா?! சந்தேகம் எழும் இடங்களில் எல்லாம் சித்ரகுப்தனைத் திரும்பிப் பார்ப்பார். அவரின் குறிப்பை உணர்ந்தவனாக, சித்ரகுப்தனே அவருக்கு அனைத்தையும் விளக்குவார்.

இருவரும் நடந்துவரும் வழியில், ஓர் இடத்தில் ஐந்தடி உயரத்துக்கு கற்பாறை ஒன்றைக் கண்டார் முனிவர்.

“இது என்ன... கற்பாறை?”

“ஒன்றுமில்லை மகாமுனி! ஒரு சிறுவனின் பாவம்... இப்படி வளர்ந்து நிற்கிறது!’’

“சிறுவன் செய்த பாவமா? அது என்ன பாவம்?’’

''பூலோகத்தில் ஒரு முனிவரின் ஆசிரமத்துக்கு தினமும் பல அதிதிகள் வருவது வழக்கம். முனிவரும் வருபவர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்று உபசரித்து உணவு அளிப்பார். அந்த முனிவருக்கு ஒரு பிள்ளை. அந்தப் பிள்ளை மிகவும் சேட்டைக்காரன். எப்போதும் ஏதாவது குறும்புகள் செய்துகொண்டே இருப்பான். அதிதியாக வருபவர்களுக்கு முனிவர் பரிமாறும் உணவில் சிறு சிறு கற்களைப் போட்டு, அவர்கள் சாப்பிடும்போது படும் கஷ்டத்தை ரசித்துப் பார்ப்பான். அப்படி அவன் அதிதிகளுக்கு செய்த பாவமான அந்தக் கற்கள்தான் சிறுவன் வளர வளர சிறு பாறையாக இப்படி வளர்ந்து நிற்கிறது. விதி முடியும் நேரத்தில் அவன் யமலோகத்துக்கு வரும்போது இந்தப் பாறையை அவன் உண்ண வேண்டும். இதுதான் அவனுக்கான தண்டனை'' என்றான் சித்ரகுப்தன்.

அசந்துபோனார் முனிவர். இருவரும் நடந்தார்கள். முனிவருக்கு அந்தச் சிறுவன் யார் என அறிந்துகொள்ள ஆர்வம். இது எங்கோ நடந்ததை தான் அறிந்ததாக அவருக்குள் ஒரு நினைவு நிழலாட்டம். ஆனால், சித்ரகுப்தனிடம் கேட்கத் தயக்கம். அவன் வேறுபுறம் சென்றதும், ரிஷி தன் ஞான திருஷ்டியில் அந்தச் சிறுவன் யார் எனப் பார்த்தார். அது வேறு யாரும் அல்ல... சாட்சாத் அவரேதான்.  

தன் தவறை உணர்ந்தார், யமதர்மனிடம் போனார். நடந்ததைச் சொன்னார்.

யமதர்மா... நான் முக்தி பெற்று இறைவனடி சேர விரும்புகிறேன். அதற்குத் தடையாக நிச்சயம் இந்தக் கல் இருக்கும். எனவே, இந்த ஜன்மத்திலேயே அந்தப் பாவத்தைப் போக்க விரும்புகிறேன். நானே கொஞ்சம் கொஞ்சமாக இந்தக் கல்லை தின்று செரித்துவிடுகிறேனே...’’

முனிவரின் கோரிக்கையை யமதர்மன் ஏற்றான். கல்லைச் சிறிது சிறிதாக அரைத்து உண்டார் முனிவர். `சிலா’ என்றால் கல் என்று பொருள். கல்லை உண்டவர் என்பதால் அந்த முனிவர், `சிலாதர்’ ஆனார்.

எத்தனை சக்தி பெற்றவராக இருப்பினும், எண்ணற்ற தவம், ஞானம் பெற்றவராக இருந்தாலும், ஒருவர் பிறருக்கு செய்யும் தீமை அவரைச் சும்மா விடாது. பெரும் கர்ம வினையாக வளர்ந்துகொண்டே போகும். ஒருநாள் மொத்தமாகத் திரும்பக் கிடைக்கும். அப்போது நாம் அந்த கர்ம வினையை அனுபவித்தே தீர்க்க வேண்டும்.! இதை உணர்ந்தவர்கள் எறும்புக்குக்கூட இன்னல் விளைவிக்க நினைக்க மாட்டார்கள். சிலாதரின் கதை எத்தனை யாகம் ஹோமம் தவம் பரிகாரம் இறைவழிபாடு செய்தாலும் நம் கர்மவினை நம்மை விட்டு அகலாது அதை கல் போல் மனம் இல்லாமல் உண்டு அனுபவித்து கழிக்க வேண்டும் இந்த நீதியைத்தான் அழுத்தமாக உணர்த்துகிறது.

அயோத்தி ராமர் கோவில்

161 அடி உயரம், 318 தூண்கள், 300 கோடி... பிரமாண்டமாகத் தயாராக இருக்கும் அயோத்தி ராம் மந்திர்!


சுமார் 120 ஏக்கர் பரப்பளவில் உலகின் மூன்றாவது பெரிய இந்துக் கோயிலாக அயோத்தி ராம் மந்திர் அமைய உள்ளது.

உலகில் மிகப்பெரிய கோயில்களில் பெரியது கம்போடியா, அங்கூர்வாட்டில் சுமார் 401 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள விஷ்ணு ஆலயம். இரண்டாவதாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயில் 155 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்துவிரிந்து காணப்படுகிறது. இந்த இரண்டு கோயில்களுக்கும் அடுத்த பெரிய கோயிலாகத் திகழப்போகிறது அயோத்தியில் உருவாகும் ராம் மந்திர். சுமார் 120 ஏக்கர் பரப்பளவில் இந்தக் கோயில் வளாகம் அமைய இருக்கிறது.

நாகர் கட்டடக் கலை வடிவில் அமைய இருக்கும் இந்தத் திருக்கோயில் சுமார் 84,000 சதுர அடி பரப்பளவில் அமைய இருக்கிறது. 5 குவி மாடங்களோடும் மூன்று தளங்களோடும் கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கோயிலின் நீளம் 300 அடியாகவும் அகலம் 280 அடியாகவும் உயரம் 161 அடியாகவும் இருக்கும். 20 ஆண்டுகளுக்கு முன்பு வடிவமைக்கப்பட்ட வரைபடத்தில் உயரம் 141 அடியாக இருந்தது. தற்போது அது 20 அடிகள் உயர்த்தப்பட்டு 161 அடியாக மாற்றப்பட்டுள்ளது.

மூன்று தளங்களாக அமையவிருக்கும் இந்தக் கோயிலில் ஒவ்வொரு தளத்திலும் 106 தூண்கள் வீதம் மொத்தம் 318 தூண்கள் அமைய உள்ளன.

பூமி பூஜை செய்யப்படும் நிலத்தில் சேர்ப்பதற்காக நாடு முழுவதும் உள்ள புனிதத் தலங்களிலிருந்து மண் மற்றும் புனித நதிகளான கங்கை, யமுனை, சரஸ்வதி, காவிரி ஆகியவற்றிலிருந்து தீர்த்தம் அயோத்திக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

கோயில் கட்டிமுடிக்க 300 கோடி ரூபாயும் கோயிலைச் சுற்றியிருக்கும் 20 ஏக்கர் நிலப்பரப்பில் தேவையான வசதிகளை உருவாக்க 1,000 கோடி ரூபாய் வரையிலும் செலவாகும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இதுதவிர, விமான நிலையம், சாலை வசதி விரிவாக்கம் போன்ற பல்வேறு நலத் திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருக்கிறார்.

கோயில் கட்டிமுடிக்க சுமார் 3.5 ஆண்டுகள்வரை ஆகலாம்.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தக் கோயிலின் கட்டுமானத்துக்கான பூமி பூஜை நாளை நடைபெற உள்ளது. இதில் 135 சாதுக்கள் உட்பட மொத்தம் 170 முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டுகிறார். இதற்கான முகூர்த்தமாக 32 நொடிகள் குறிக்கப்பட்டுள்ளது. நாளை (5.8.2020) பிற்பகல் 12.44.08 முதல் 12.44.40 வரை இந்த முகூர்த்தம் அமைகிறது.

அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் விரிவாகச் செய்யப்பட்டுள்ளன. மேலும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளும் பின்பற்றப்படும் என்று மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பூமி பூஜை அன்று விநியோகம் செய்வதற்காக 1.25 லட்சம் லட்டுகள் தயாராக உள்ளன. இதற்கு ரகுபதி லட்டு என்று பெயரிட்டுள்ளனர். இவற்றில் 50,000 லட்டுகள் ராம் ஜன்ம பூமி டிரஸ்ட் மூலம் சீதையின் ஜன்ம பூமி என்று கருதப்படும் சீதாமர்கி எனப்படும் பீகாரில் இருக்கும் ஆலயத்துக்கும் அதைச் சுற்றியுள்ள புனிதத் தலங்களுக்கும் அனுப்பப்பட இருக்கிறது.

நிகழ்வையொட்டி அயோத்தி மின் ஒளியில் ஜொலிக்கிறது. எனவே, நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

1989-ம் ஆண்டு இந்த ஆலயம் நிர்மாணிக்கப் பெரிய அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போதைய விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவராக விளங்கிய எஸ்.சி.தீக்‌ஷித், நாடுமுழுவதும் உள்ள மக்களின் உதவியை நாடினார். ஸ்ரீராம் என்று பொறிக்கப்பட்ட செங்கல்களை அயோத்திக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் செங்கல்கள் அயோத்திக்கு அனுப்பப்பட்டன. 31 ஆண்டுகளுக்குப் பிறகு, பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு தற்போதுதான் கோயில்கட்டும் பணி தொடங்க உள்ளது.

நாளை நடைபெற இருக்கும் பூமி பூஜை நிகழ்வு தூர்தர்ஷன் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று ராம் ஜன்ம பூமி டிரஸ்ட் தெரிவித்துள்ளது. இந்த நேரத்தில் உலகெங்கும் உள்ள ராம பக்தர்கள் தங்கள் வீடுகளில் குடும்பத்தோடு பஜனை செய்து வழிபடுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

ஒரே ஸ்லோகத்தில் ஒட்டுமொத்த ராமாயணம்

ராமாயண பாராயணம் என்பது மிகவும் புண்ணியமான ஒன்றாகக் கருதப்படுவது. ராமாயணத்தின் ஒரு பகுதியைப் பாராயணம் செய்தாலே புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆனால், ஒரு ஸ்லோகம் சொன்னால் முழு ராமாயணமும் பாராயணம் செய்த பலன் கிடைக்கும் என்கிறார்கள் சான்றோர்கள். அந்த ஸ்லோகம் இதோ...

பூர்வம் ராம தபோவனாதி கமனம் ஹத்வா ம்ருகம் காஞ்சனம்

வைதேஹி ஹரணம் ஜடாயுமரணம் சுக்ரீவ ஸம்பாஷணம்

வாலி நிர்தலனம் ஸமுத்ர தரணம் லங்காபுரி தாஹனம்

பஸ்சாத் ராவண கும்பகர்ண ஹனனம் ஏதத் ஹி ராமாயணம்

நாளை பூமி பூஜை நடக்கும் நேரத்தில் இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்து ராமபிரானின் அருளுக்குப் பாத்திரர் ஆவோம்.

கபீர் தாசர்

ஸ்ரீ கபீர் தாசர்

ஸ்ரீ ராமரை கண்ட கபீர் தாசர்.

சமத்துவத்தின் அடையாளமாகவும், மத நல்லிணக்கத்தின் அடையாளமாகவும் திகழ்ந்தவர் இவர்.

ஸ்ரீ மகாவிஷ்ணுவின் ஆணைப்படி
ஸ்ரீ சுகப்பிரம்மரே கபீராக பிறந்தார்.

இவர் பிறப்பு பற்றி இருவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன.

நெசவுத் தொழில் செய்யும் ஒரு முகமதிய குடும்பத்தில் இவர் பிறந்தார் என்றும் 

ஒரு பிராமண விதவைக்கு இவர் பிள்ளையாய்ப் பிறந்து ஊர் அவச்சொல்லுக்குப் பயந்து அவளால் கைவிடப்பட்டார் என்றும் சொல்லப்படுகிறது.

1440ம் வருடம் காசிக்கருகே ‘லகர்டேலோ’ என்ற ஏரியில் தாமரை மலரில் ஒரு குழந்தை இருந்தது.

அந்த குழந்தையை தமால் என்ற முஸ்லிம் நெசவாளர் ஒருவர் எடுத்து வளர்த்தார்.
அவரின் மனைவி பெயர் ஜீஜா பீபீ

அவருக்கு கபீர் என பெயரை சூட்டினர்.

திருக்குரானை திறந்து பார்த்ததும்
தென்பட்ட கபீர் என்ற சொல்லை பெயராக வைத்தனர்.

கபீர் என்றால் பெரியது என அர்த்தம்.

இறைவனை அழகாக பாடுவதில் திறமை பெற்று இருந்தார்.
ஆதலால் நெசவுத் தொழிலில் அதிக ஆர்வம் இல்லாமல் இருப்பார்.

பாடியபட இரவு நேரங்களில் இவர் ஒரு முழம் நெய்தால் இறைவன் பாட்டை கேட்டபடி இரண்டு முழம் நெய்து கொடுப்பாராம்.

இஸ்லாமியராக இருந்தாலும் ஸ்ரீ ராமரின் மேல் அதீத பிரியம் கொண்டவராக இருந்தார்.

கபீருக்கு தன்யாவுடன் திருமணம் நடந்து, கமல், கமலி என மகனும் மகளும் பிறந்தனர்.

எழுதப் படிக்க தெரியாதவராகவே இருந்தார்.

இராமாநந்தரின் சீடர் இவர்.

பக்திமானான இராமாநந்தர், ஒவ்வொருவருக்குள்ளும், ஒவ்வொன்றுக்குள்ளும் பரம்பொருள் இருப்பதாகக் கூறும் அத்வைதத் தத்துவத்தைப் பின்பற்றிய வைணவக் கவிஞராவார்.

முதலில் கபீரை முறையாகச் சீடராக ஏற்க இராமாநந்தர் திட்டவட்டமாக மறுத்து விட்டார்

இராமநந்தர் கங்கைக்குக் குளிக்கச் செல்லும் வழியிலிருந்த படிகளில் இருள்பிரியாத விடிகாலையில், சாக்கால் தன்னை மூடிக்கொண்டு கிடக்க, கீழேகிடந்த கபீரைத் தெரியாமல் மிதித்துவிட்ட இராமாநந்தர் "இராமா இராமா!" என்று சொல்லிவிட்டதால், வேறுவழியின்றி இராமாநந்தர் கபீரைத் தன் சீடராக ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று.

ஒருமுறை கோரக்கர் இராமநந்தரை வாதத்திற்கு அழைத்தார்.
கோரக்கரை கபீர்தாசர் எதிர்கொண்டு வாதத்தில் வென்றார்.

நெய்த துணிகளை விற்று குடும்பத்தை நடத்தி வந்தார் கபீர்தாசர்.

தான் நெய்த துணியை விற்கச் சென்றபோது மாயக் கண்ணனின் லீலையால் ஒரு பெரியவர் அவரிடம் வந்து துணியை விலைக்குக் கொடுக்கும்படி கேட்டார்.

விலை பேசிக்கொண்டிருந்தபோதே, அந்தப் பெரியவர் துணியைப் பிடுங்கிக்கொண்டு செல்ல, அவரைத் தொடர்ந்து ஓடிய கபீர், ''ஐயா, துணிக்கு விலை கொடுங்கள்'' என்று கேட்டார்.

பெரியவர் பணம் கொடுக்க மறுத்ததும், கபீர் பெரியவரிடமிருந்த துணியைப் பிடுங்கினார்.

துணி இரண்டாகக் கிழிந்து ஒரு பாதி பெரியவரின் கையிலும், மறு பாதி கபீரின் கையிலும் வந்துவிட்டது.

பெரியவரின் கையில் இருக்கும் துணிக்கான விலையை மட்டுமாவது கொடுக்கும்படி கபீர் கேட்டார்.

அந்தப் பெரியவரோ, ''நான் இந்த வஸ்திரத்தை கண்ணனுக்காகக் கேட்கிறேன். இதற்குப் பணம் கேட்காதே'' என்ற பெரியவர், கண்ணனின் பெருமைகளை விளக்கிக் கூறியதுடன், ''இனி யார் வந்து கண்ணனின் பெயரைச் சொல்லிக் கேட்டாலும் அவர்களுக்குத் துணியைக் கொடுத்துவிடு'' என்று கூறினார்.

கபீர் நெய்த துணிகளை விற்கச் செல்லும்போதெல்லாம், கண்ணனின் லீலையின் காரணமாக யாரேனும் ஒருவர் வந்து கண்ணனின் பெயரைச் சொல்லி, துணியை வாங்கிச் செல்வது வழக்கமாகிவிட்டது.

இதனால் கபீருக்கு வருமானம் இல்லாமல் குடும்பம் வறுமையில் தவித்தது.

ஒருமுறை கபீரின் வீட்டுக்கு இறைவனடியார்கள் 100 பேர் உணவு வேண்டி வந்தனர்.

வறுமையில் வாடிய கபீர், அவர்களின் பசியை எப்படியும் போக்க வேண்டும் என்று எண்ணினார்.

தன் மனைவியை ஒரு செல்வந்தரின் வீட்டில் வீட்டு வேலை செய்வதற்கு ஒப்படைத்துவிட்டு, அதன் மூலம் பெற்ற பணத்தைக்கொண்டு இறைவனடியார்களுக்கு உணவிட்டார்.

அன்று இரவே ஓர் அரசு அதிகாரி, அந்தச் செல்வந்தரின் வீட்டுக்குச் சென்று கபீரின் மனைவியை மீட்டு வந்து வீட்டில் சேர்ப்பித்தார்.

மனைவி திரும்பி வந்ததைக் கண்டு கோபம் கொண்ட கபீர், மனைவியை அடிக்கக் கையை ஓங்கினார்.

அப்போது அந்த அதிகாரி, ''நான்தான் உன் மனைவியை மீட்டு வந்தேன். வேண்டுமானால் என்னை அடி'' என்று கூறினார்.

கபீர் அவரை அடிக்கக் கையை ஓங்கியபோது, அங்கே அந்த அதிகாரி காணவில்லை.

மாறாக ஶ்ரீராமர் காட்சி தந்தார்.

இறைவனின் தரிசனம் கண்ட கபீர் கலங்கிப்போய் ராமனைத் தொழுது பாடல்கள் புனைந்தார்.

ஸ்ரீகபீர்தாசரின் மகன் கமால் மஹானாக திகழ்ந்தார்.

கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய கமால் ஏழு வயதிலேயே தீர்த்த யாத்திரை செல்ல விரும்பினான்.

அவனைப் பிரிய மனமின்றி ஸ்ரீகபீர் முதலில் மறுத்தாலும் பின்னர் போய் வர சொன்னார்.

செல்லும் இடமெல்லாம் இறைவனது நாமத்தின் பெருமைகளைக் கமால் பரப்பினார்.

கூட்டம் கூட்டமாக வந்து அவரைத் தரிசித்த மக்கள் அவரை ஸ்ரீகிருஷ்ணரின் உருவாகவே கண்டனர்.

ஒரு ரத்ன வியாபாரியின் இல்லத்தில் சிலர் கமாலைப்பற்றி இகழ்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

தீராத வயிற்று நோயினால் துன்புற்ற அந்த வியாபாரி, "இந்த நோயைத் தீர்க்க முடிந்தால் கமால் ஒரு மஹான் என நம்பலாம்" என்றான்.

மறுநாள் காலையில் வலியினால் துடித்தபோது முன்தினம் தான் கமாலைப்பற்றிப் பேசியது நினைவுக்கு வந்தது.

கமாலைப் பற்றி நினைத்தவுடனேயே அவனது வயிற்றுவலி மறைந்தது.

உடனே அவர் கமாலைத் தனது வீட்டுக்கு அழைத்து வணங்கி பொற்காசுகள் நிறைந்த ஒரு பையை அளிக்க, கமால் "இதைக் கட்டிக் காத்து வீட்டுக்குக் கொண்டு போய்ச் சேர்க்கும் திறமை சிறுவனான எனக்கில்லை" என ஏற்க மறுத்தார்.

வியாபாரி அவரே அறியாது அவரது உத்தரீயத்தில் விலையுயர்ந்த மரகதம் ஒன்றை முடித்துவைத்தான்.

வீடு திரும்பி கமால் பெற்றோரை வணங்கும்போதுதான் மரகதம் அவர்கள் கண்ணில் பட்டது.

அதே சமயம் பக்தனுடன் விளையாட விரும்பிய ஸ்ரீஇராமர் ஓர் முதியவராக அங்கு தோன்றி கமால் அந்தப் பச்சைக்கல்லைத் தன்னிடமிருந்து திருடிவிட்டதாகக் கூற ஸ்ரீகபீர்தாசர் தன் மகனை அடிக்கக் கை ஓங்கிவிட்டார்.

இறைவனோ சீதா, லக்ஷ்மண, பரத, சத்ருக்ன, ஹனுமத் சமேதராக அங்கு தோன்றி அந்த சமயத்தில் அங்கு வந்து சேர்ந்த ஸ்ரீஇராமானந்தருக்கும் திவ்ய தரிசனம் தந்தார்.

ஒரு நாள் இரவு களைத்தவர்களாகவும், பசித்தவர்களாகவும் நூற்றுக்கணக்கான சாதுக்கள் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்றிருந்த ஸ்ரீகபீர்தாசரின் இல்லத்தைத் தேடி வந்தனர்.

வீட்டிலோ வறுமை. வேறு வழியின்று தந்தையும் மகனுமாக மளிகைக் கடையில் திருடவும் துணிந்தனர்.

சிறுவன் கமால் சுவரிலுள்ள பிளவு மூலம் சென்று பொருட்களை ஸ்ரீகபீரிடம் தந்துவிட்டு அந்தப் பிளவு மூலமாகவே வெளியேறிவிடுவதெனத் திட்டமிட்டுப் பொருள்களை எடுத்துத் தந்தையிடம் தந்துவிட்டுக் கமால் வெளியேறுமுன் கடைக்காரன் வந்துவிட்டான்.

பாதி வெளியேறிய நிலையில் கமாலின் கால்கள் கடைக்காரனின் கைப்பிடியில் சிக்கிக் கொண்டன.

சற்றும் தயங்காது கமால் தந்தையின் இடையில் இருந்த தறிவேலை செய்யும் கூரிய கத்தியை அவர் கையில் தந்து, "என் தலையை வெட்டி எடுத்துச் சென்று விடுங்கள். தலையின்றி அவர்களால் என்னை அடையாளம் காண முடியாது" என கூறி
தலையை வெட்டுங்க என்றான்.

தயக்கத்துடன் ஸ்ரீகபீரும் அவ்வாறே செய்யக் கடைக்காரர் உடலை மட்டும் கொத்தவாலிடம் ஒப்படைத்தான்.

மற்ற திருடர்களுக்கு ஒரு படிப்பினையாக இருக்கட்டும் என நாற்சந்தியில் அந்த உடல் தொங்கவிடப்பட்டது.

விருந்து முடிந்த நிலையில் மறுநாள் சாதுக்கள் பஜனை செய்தவாறே அவ்வழி வர தலையற்ற அந்த உடல் அவர்களைத் தொழுது நின்றது.

சாதுக்களும், கண்ட ஊர்மக்களும், திகைக்க, இறைவன் அசரீரியாக "கபீர்!
உலகிலே மனைவி மக்களிடம் கொண்ட பாசம்தான் வெல்ல முடியாதது.

அவ்விரண்டையும் சாதுக்களுக்குச் செய்யும் சேவைக்காகத் துறந்த உன் பக்தியே உயர்ந்தது.

"அன்பனே! கமால்! எழுந்திரு!" எனக்கூற அடுத்த கணம் கபீரிடம் இருந்த கமாலின் தலையானது வந்து உடலில் சேரக் கமால் சிரித்த முகத்துடன் நாராயண ஸ்மரணத்துடன் எழுந்து சாதுக்களையும், பெற்றோரையும் வணங்கினார்.

ஸ்ரீ கபீரின் தோஹாக்களின் ஆழமான ஆன்மிகக் கருத்துக்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

”கபீரான நான் மிக ஆழ்ந்து சிந்தித்து சொல்கிறேன்: நான் அது (இறைவன்) ஒன்றெனச் சொன்னால், அது இல்லை (தவறாகிப் போகும்), நான் இரண்டு எனச் சொன்னாலும் அதுவும் நிந்தனையாகப் போகும், அது எப்போதும் எப்படி இருக்கிறதோ அது அப்படியே இருக்கட்டும்.” இறைவன் பற்றிய விவாதங்கள் அனாவசியம் என்கிற தொனியில் இருக்கிறது இந்த தோஹா.

”எதுவரை, “நான்” “என்” என்று (அகந்தை என்னுள்) இருந்ததோ, “ஹரி” அங்கு வரவில்லை, எப்போது “ஹரி” அங்கு வந்துவிட்டாரோ, அப்போது, “நான்” “என்” என்று என்னுள் இருந்த அகந்தையைக் காண முடியவில்லை.” கடவுள் இருக்கும் இடத்தில் கர்வம் இருக்க முடியாது என்பதை எவ்வளவு அழகாகச் சொல்கிறார் பாருங்கள்.

கபீரின் நேர்மையான ஆணித்தரமான போதனைகள் மக்களை சிந்திக்க வைப்பதாகவும் கவர்வதாகவும் இருந்தன. அவர் தெள்ளத் தெளிவாகச் சொன்னார்.  ”நமது கர்ம வினைகளுக்கானப் பலனை நாமே தான் தீர்த்தாக வேண்டும். நமது நோக்கம் நேர்மையாக இருக்கும் போது பிறருடைய ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் எண்ணி வருந்த வேண்டியதில்லை. அவர்களுடைய பயனற்ற செயல்களின்  விளைவுகளை அவர்களே சந்திப்பர்.”

மிக எளிமையான வாழ்க்கை நடத்தி வந்த கபீரிடம் இருந்த உண்மையான ஞான சக்தி இந்துக்கள், முஸ்லீம்கள் இருபாலாரையும் அவரிடம் ஈர்த்தது. இரண்டு மதங்களிலும் அறிவுக்குப் பொருந்தியவற்றை அவர் ஆதரித்தும், அறிவுக்குப் பொருத்தமற்றதாய் தோன்றியதை மறுத்தும் அவர் வெளிப்படையாகப் பேசினார்.

அதனால் இரு மதங்களில் இருந்தும் எதிர்ப்பு அவருக்கு இருந்த போதும் அவர் போதனைகளைக் கேட்க அவர் குடிசைக்குப் பலர் வந்த வண்ணம் இருந்தனர்.

கபீரின் போதனைகள் இந்து, இஸ்லாமிய மதங்களைக் கடந்து சீக்கிய மதத்திலும் இடம் பெற்றன.

சீக்கியர்களின் தெய்வமும் புனித நூலுமான 'குருகிரந்த சாஹிப்'பில் இடம்பெற்றிருக்கின்றன.

ஆக, மூன்று மதங்களும் போற்றும் மகத்தான ஞானியாக அருள்புரிகிறார்.

இவரது பாடல்கள் இன்றும் இந்திய தேசமெங்கும் பாடப்படுகின்றன.

எளிமையான ஆன்மிக கருத்துகளைக் கொண்ட இவருடைய பாடல்கள் ரவீந்திரநாத் தாகூர், மகாத்மா காந்தி போன்ற பலரையும் கவர்ந்திழுத்தது.

"நெசவு என்ன; பாவு என்ன?
போர்வை நெய்யும் நூல்கள்தான் என்ன?
எட்டு கமலங்கள், ஈரைந்து ராட்டினங்கள்!
ஐந்து மூலப் பொருள்கள். மூன்று போர்வை குணங்கள்.
எல்லாம் சேர்த்து பரமன் போர்வை செய்ய பத்து மாதங்கள்"

இந்த மகானைப் போற்றும் வகையில், மத்திய அரசின் ஜவுளித்துறை சிறந்த நெசவாளருக்கான 'சந்த் கபீர்' விருதை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.

கபீரின் பக்தி இயக்கம் கபீர் பந்த் என்றழைக்கப்படுகிறது. அவரது சீடர்களும், பின்பற்றுவோரும் அந்த இயக்கத்தின் மூலம் அவர் போதனைகளைப் பரப்பினார்கள்.

மத ஒற்றுமையை வலியுறுத்தி வாழ்ந்த கபீர் தாசரின் மறைவுக்குப் பின் அவர் உடலை எரிப்பதா, புதைப்பதா என்ற சண்டை அவர் உடலுக்கு உரிமை கொண்டாடிய இந்து முஸ்லீம்களிடம் ஏற்பட்டது

கடைசியில் அவர் பிணத்தின் மீதிருந்த துணியை விலக்கிப் பார்த்த போது மலர்கள் மட்டுமே இருந்ததாகவும், அவற்றை அவர்கள் பாதியாகப் பிரித்துக் கொண்டு அவரவர் முறைப்படி அந்திமக் கிரியைகள் செய்தார்கள்.

இன்றும் காசியில் அவருடைய கோயிலும்,
அவர் சமாதியில் மசூதியும் இடம் பெற்று அவர் போதித்த மத ஒற்றுமைக்கு சான்றாய் விளங்குகின்றன.

வாரணாசியில் கபீர் சௌரா என்ற இடத்தில் கபீரின் குடும்பம் வசித்ததாம்.

கபீர் சௌராவிலுள்ள கபீர் மடத்தில் கபீர் தொடர்பான கொண்டாட்ட நிகழ்வுகள் இன்றும் நடத்தப்படுகின்றன.

எங்கே தேடுவாய் என்னை?

நீ செல்லும்
புனித யாத்திரையிலா? இல்லை.

நீ வணங்கும்
உருவங்களிலா? இல்லை.

நீ செல்லும்
கோயில் அல்லது மசூதியிலா? இல்லை.

கபாவிலா அல்லது கைலாசத்திலா? இல்லை.

நான் உன்னுடன் தான் இருக்கிறேன், மனிதா,
உன்னுடன் தான்.

எங்கே தேடுவாய் என்னை?
நீ முணுமுணுக்கும்
பிராத்தனைகளிலா? இல்லை.

நீ கண்முடி அமர்ந்திருக்கும்
த்யானத்திலா? இல்லை.

நீ அனுதினம் அனுசரிக்கும்
நோன்புகளிலா? இல்லை.

கால்மடித்து, கைமடித்து செய்யும்
யோகாசனங்களிலா? இல்லை.

எதுவும் வேண்டாம் என்று
சொல்லும் துறவிலா? இல்லை.

உடலிலா அல்லது அதில்
உறையும் உயிர் சக்தியிலா? இல்லை.

எங்கும் வியாபித்திருக்கும்
அண்ட வெளியிலா? இல்லை.

விதையிலிருந்து விருட்சம் வரச்
செய்யும் இயற்கையிலா? இல்லை.

எங்கே தேடுவாய் என்னை?

தேடு – தேடி என்னைக் கண்டெடு.
தேடும் அந்த தருணத்தில் –
கபீர் சொல்கிறான் தம்பி,
கவனமாகக் கேள்,
உன் நம்பிக்கை எங்கிருக்கிறதோ
அங்குதான் நான் இருக்கிறேன்!

ராமர் பட்டாபிஷேகம்

ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் ஏற்ற பின் ராமரை பார்த்து ஆசி கூற அகஸ்திய மாமுனிவர்  அயோத்திக்கு வருகை புரிந்தார். அகஸ்தியர் சபையில் அமர்ந்ததும்  ராவண வதம் பற்றி விவாதிக்கலாயினர் அனைவரும்.

அப்பொழுது அகஸ்தியர் சபையினரை பார்த்து ராவண கும்பகர்ண வதத்தை விட லக்ஷ்மணன் ராவணன் மகன் மேகநாதனை வதைத்ததே மாபெரும் வீர செயல் என்றார் அகஸ்தியர்.

அதை கேட்டு அனைவரும் ஆச்சரியமாக அகஸ்தியரை பார்க்க ஸ்ரீராமர் ஏதும் அறியா தவர் போல் ஸ்வாமி எதை வைத்து அப்படி கூறினீர்கள். மேகநாதன் அவ்வளவு சக்தியுள் ளவனா என்று கேட்க,

அகஸ்தியர் ராமா எல்லாம் அறிந்தவன் நீ  ஆனால் ஏதும் அறியாதவன் போல் லக்ஷ்மண னின் பெருமையை என் வாயாலே கூறவேண் டும் என்றுதானே இப்படி அறியாதவன் போல் கேட்கிறாய்,  சரி நானே கூறுகிறேன்.

சபையோர்களே  ராவணன் மகன் மேகநாதன் தேவலோக அரசன் இந்திரனுடன் போர்புரிந்து அவனை வென்று சிறையில் அடைத்து வைத்தது யாவரும் அறிந்ததே.

நான் முக கடவுளான பிரம்மா இந்திரனை விடுவிக்க மேகநாதனிடம் கோரிக்கை வைக்க மேகநாதன் இந்திரனை விடுவிக்க வேண்டு மென்றால் தாங்கள் மூன்று அறிய வரங்கள் தர வேண்டும் என நிபந்தனை வைத்தான்.

அவை
1.பதினான்கு ஆண்டுகள் உணவு உண்ணாதவனும்,
2.அதே பதினான்கு ஆண்டுகள் ஒரு நொடி கூட உறங்காது இருப்பவனும், 
3.அதே பதினான்கு ஆண்டுகள் எந்த ஒரு பெண் முகத்தையும் ஏறெடுத்து பார்க்காது இருப்பவன் எவனோ அவனால் மட்டுமே எனக்கு மரணம் நிகழவேண்டும்..

என்று பிரம்மாவிடம் மூன்று அறியவரங்களை பெற்று இந்திரனை விடுவித்தான். அதனால் மேகநாதனை யாவரும் இந்திரஜித் என்று அழைத்தனர். இப்படி பட்ட மேகநாதனை வதம் செய்த பெருமை லக்ஷ்மணனையே சேரும் என்று கூறி முடிக்க,

ராமர் ஸ்வாமி லக்ஷ்மணன் என்னுடன் பதினா ன்கு ஆண்டுகள் வனவாசம் இருந்த போது அவன் எந்த ஒரு மாதையும் (பெண்ணையும்) ஏறெடுத்து பார்த்ததில்லை என்பதை நான் அறிவேன்.

ஆனால் உணவும் உறக்கமும் இல்லாமல் எப்படி இருந்திருப்பான் என்று கேள்வி எழுப்ப அகஸ்தியர் அனைத்தும் அறிந்து வைத்து கொண்டே கேட்கிறாயே சரி சற்று பொறு உன் கேள்விக்கான விடையை லக்ஷ்மணனிடமே கேட்டு தெரிந்து கொள்வோம் என கூறி லக்ஷ் மணனை அழைத்து வர ஏற்பாடு செய்தார்.

அகஸ்தியர் சபைக்கு வந்த லக்ஷ்மணன் அண்ணன் ராமரையும் குரு அகஸ்தியரையும் சபையோரையும் வணங்கிய பின் ராமர் தன் சந்தேகத்தை கேட்டார் லக்ஷ்மணா என்னோடு வனவாசம் இருந்தபோது எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்காமையும் உணவு உண்ணா மையும் உறக்கம் கொள்ளாமையும் இருந்தாய் என அகஸ்தியர் கூறுகிறாரே எப்படி என சபை யோர் முன் விளக்கமுடியுமா.?

லக்ஷ்மணர், " அண்ணா உங்களுக்கு நினைவு இருக்கலாம் ரிஷிமுக பர்வதத்தில் மாதா சீதையை தேடி அலைந்த போது மாதாவால் வீசப்பட்ட அணிகலன்களை சுக்ரீவன் நம்மிடம் காட்டும்போது அன்னையின் பாத அணிகலன் களை தவிர வேறு எதுவும் என்னால் அடையா ளம் காண முடியவில்லை காரணம் அன்னை யின் பாதத்தை மட்டுமே பார்த்து நான் தினமு ம் வணங்குவேன். அதனால் பாத அணிகலன் களை மட்டுமே என்னால் அடையாளம் காண முடிந்தது..."

"அடுத்து வனவாசத்தின் போது நீங்களும் மா தாவும் இரவில் உறங்கும்போது நான் காவல் புரியும் நேரம் நித்ராதேவி என்னை ஆட்கொ ள்ள வரும் நேரம் நான் நித்ராதேவியிடம் ஒரு வரம் கேட்டேன்.."

அம்மா அண்ணன் ராமரையும் என் அண்ணி யான மாதா சீதா தேவியையும் பாதுகாக்கவே நானும் அண்ண னோடு வனவாசம் வந்துள் ளேன். அதனால் எங்கள் வனவாசம் முடியும் வரை என்னை நீ ஆட்கொள்ளவே கூடாது. இந்த வனவாசம் முடியும் வரை  உறக்கமே வரக்கூடாது என வேண்டிக்கொண்டேன்.." நித்ராதேவியும் என் வேண்டுதலுக்கு செவி சாய்த்து என்னை பதினான்கு ஆண்டுகள் ஆட்கொள்ள மாட்டேன் என வரமளித்தாள். அதனால் எனக்கு உறக்கம் என்பதே இல்லா மல் இருந்தது வனவாசத்தின் போது.

"மூன்றாவது நம் குருநாதராகிய விஸ்வாமித் திரர் நம் உடல்சோர்வு அடையாமல் இருக்கவும் பசியே எடுக்காமல் இருக்கவும் பலா அதிபலா என்னும் மிகவும் சக்தி வாய்ந்த காயத்திரி மந்திரத்தை நம் இருவருக்கும் அவரது யாகம் வெற்றி பெற காவல் புரிந்ததற்காக உபதேசி த்தார். அந்த பலா அதிபலா மந்திரத்தை தினமும் உச்சரித்தே எனக்கு பசி ஏற்படாமலும் சோர்வு அடையாமலும் பார்த்து கொண்டேன்.." என்று கூற சபையினர் எல்லோருமே லக்ஷ்ம ணனை ஆச்சிரியமாக பார்க்க ஆஞ்சநேயர் அயர்ந்தே போனார். 

லக்ஷ்மணின் ராம பக்தியை நினைத்து ராமர் அரியணையை விட்டு இறங்கி வந்து லக்ஷ்மணனை கண்ணீருடன் ஆரத்தழுவி கொண்டார்.

 *ஜெகம் புகழும்... புண்ணிய கதை ராமனின் கதை மட்டும் அல்ல, லக்ஷ்மணின் கதையும்.*

ஆலங்காட்டு ரகசியம்

ஆலங்காட்டு ரகசியம்

*அது என்ன?.., ஆலங்காட்டு ரகசியம்.....?*

*சிதம்பர ரகசியம் னு ஒன்னு இருப்பது எல்லோருக்குத் தெரியும்.*

*அதுபோல ஆலங்காட்டு ரகசியம்னு ஒன்னும் இருக்கு.*

*நடராஜர் பஞ்ச சபைகளில் நாட்டியமாடியவர்.*

*நடராஜர் நாட்டியமாடிய முதல் தலம் திருவாலங்காடு ஆகும்.*

*இங்கு சிவபெருமான் வடாரண்யேஸ்வரராககோயில் கொண்டருளுகிறார்.*

*இதை, ரத்தின சபைஎன்று போற்றப்படுகிறது.*

*சிதம்பரம் திருத்தலத்தில் நடராஜர் ஆகாய வெளியாக இருப்பதை, சிதம்பர ரகசியம் என்பார்கள்.*

*அதுபோல, ஆலங்காடு எனப்படும் இந்த திருவாலங்காட்டிலும் ஒரு ரகசியம் புதைந்து உள்ளது. நிறையவர்க்குத் தெரியுமோ?, தெரியாதோ!, தெரியாது.*

*சிவபெருமானைத் தரிசிக்க, காரைக்கால் அம்மையார் கயிலாயத்திற்கு தலைகீழாக நடந்து சென்று கொண்டிருந்தார்.*

*இப்படி வருவதைக் கண்ட பார்வதி, சிவபெருமானிடம், இவர் யார்? கேட்டாள்.*

*அதற்கு பதிலளித்த சிவபெருமான், இவர்கள் என் அம்மை என்றார்.*

*வெகு அருகே வந்துவிட்ட காரைக்காலம்மையாரை, என்ன வரம் வேண்டும்?என  சிவபெருமான் கேட்டபோது.....*

*அதற்கு காரைக்காலம்மை, எப்போதும் உன் நாட்டிய தரிசனம் காணும் பாக்கியம் எனக்கு வேண்டும் என்றார்.*

*அம்மை கேட்ட வரத்தை, அப்படியே ஆகட்டும் என்று அருளினார் சிவபெருமான்.*

*அந்தசமயத்தில், திருவாலங்காடு பகுதியை ஆட்சி செய்து கொண்டிருந்த மன்னனின் கனவில் அன்றே தோன்றினார் சிவபெருமான்.*

*காரைக்கால் அம்மையார் இங்குள்ள எம் கோயிலில் தங்கப் போகிறார், எனவே எனக்கு பின்புறத்தில், அவருக்காக ஒரு சன்னிதியை நீ எழுப்பும்படி கூறிவிட்டு மறைந்தருளினார்.*

*அதன்படியே அம்மன்னனும், நடராஜருக்கு பின்புறம் உள்ள இடத்தில், சன்னிதியில் பாதியை மறைத்து, சுவர் எழுப்பி கட்டிவித்தான்.*

*சிவபெருமான் அருள் கிடைத்த காரைக்காலம்மையாரும், அதனுள் ஐக்கியமானார்.*

*இன்றுவரை இந்த நிமிட அளவிலும், இங்கு சிவனின் ஆனந்த தாண்டவத்தை காரைக்கால் அம்மையார் தரிசித்துக்* *கொண்டிருப்பதாக ஐதீகம்.*

*இதுவே, ஆலங்காட்டு ரகசியம்*.

*இந்த திருத்தலம் சிவன் கோயிலாக இருந்தாலும், இங்கு பெருமாள் கோவில்களைப் போல பக்தர்களுக்குத் தீர்த்தத்தையே இங்கு வழங்குகின்றனர்.*

*ஆச்சரிய அம்பிகை:*
*நடராஜரின் அருகிலுள்ள சிவகாமியை ஆச்சரிய அம்பிகை என்கின்றனர்.*

*சிவனுக்கு ஈடு கொடுத்து, காளி நடனம் ஆடியதைக் கண்ட அம்பிகை ஆச்சரியப்பட்டாள்.*

*இதனால் அவளுக்கு சமிசீனாம்பிகை என்று பெயர் ஏற்ப்பட்டது.*

 *இதற்கு ஆச்சரியம் அடைந்தவள் என்று பொருள்.*

*இடது கை நடுவிரலை மடக்கி, கன்னத்தில் கை வைக்கப் போகும் விதத்தில் முகத்தில் வியப்பை வெளிப்படுத்தும் இந்த சிலையின் அமைப்பை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.*

*நடராஜர் ஆடிய போது, அவரது உக்கிரம் தாங்காத தேவர்கள் மயக்கத்திற்கு ஆளாயினர்.*

*சுவாமி அவர்களைத் தன் தலையிலிருந்த கங்கை நீரைத் தெளித்து எழுப்பினார்.*

*இதனடிப்படையில் இங்கு பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கப்படுகிறது.*

*நடுவர்களாக இருவர்:*

*சுனந்தரிஷி என்பவர் சிவநடனம் காண விரும்பி தவமிருந்தார்.*

*இவரைச் சுற்றி புற்று வளர்ந்து நாணல் புல் வளர்ந்து மூடியது.*

*இதனால் இவருக்கு முஞ்சிகேசர் (முஞ்சி நாணல்)என பெயர் வந்தது.*

*அதே சமயம், கார்கோடகன் என்ற நாகமும், செய்த தவற்றுக்கு மன்னிப்பு வேண்டி இங்கு தவமிருந்தது.*

*இருவருக்கும் அருளிய சிவன், நடன போட்டிக்கு அவர்களை நடுவராக இருக்கச் செய்தார்.*

*சிவநடனத்தைக் காணும் பேறு இருவருக்கும் கிடைத்தது.*

*நாட்டிய காளி:*

*நடராஜருடன் போட்டியிட்ட காளிதேவிக்கு தனிக்கோயில்இங்கு உள்ளது.*

*இவள் காலை தூக்க முயன்ற நிலையில் நாட்டிய காளியாக சாந்தமாக வீற்றிருக்கிறாள்.*

*இக்கலிகால வாழ்வு, மிக அபரீத ஆசைகளை உள்ளடக்கிக் கொண்டவை.*

*இதில் வாழ்ந்து வரும்போது, நிறைய வினைப் பெருக்கங்களை பெருக்கி அதன் இயல்பாகவே வாழ்கிறோம்.*

*வாழ்வில் எது கிடைத்தாலும், சேமித்து வைத்தாலும், அது நமக்காக அது சொந்தமாகாது.*

*இறுதியில், நம் இறப்புக்கு அப்புறம், அது நம் உறவுகளுக்கோ, அடுத்தவர்க்கோ போய் விடும், அவர்களுக்கும் இதே நிலைதான்.*

*என்றும் இறுதி வரையும் ஒன்று மட்டுமே நம்மோடு இருக்கும், அது தானம் தர்மம் புண்ணியம் மட்டுமே.*

*இதைச் செய்யாது விட்டோர், பின் விளைவு கண்டு வருந்துவர்.*

*இருப்பினும்,*

 *பிறவாமையைப் பெற்றுக் கொள்வதுதான், கடைசி வழி.*

*நம் செயலும், சிந்தனையும் நல்லதாக இருக்க வேண்டுமென்றால், நாம் சிவநெறிக்குள்ளாக பயணிக்க வேண்டும்.*

*பிறந்தோம், வாழ்கிறோம் என இருந்திடல் கூடாது.*

*இனி இறப்பென்று ஒன்று நமக்கு வருமே?*

*நமக்கு, பிறவா நிலையொன்று ஒன்று வேண்டுமே!, அது முக்கியமல்லவா?*

*இந்த எண்ணம் ஒவ்வொரு ஆன்மாவுக்கும் உயிருக்கும் வர வேண்டும்.*

*இப்பிறப்பில், கர்ம வினைப் பயன்கள் இனி தொடராதிருந்து, பிறவிப்பயனை முடித்து, மீண்டும் பிறவாமையை பெற வேண்டுமே?*

*அதனால்தான்,*

 *பிறப்பை வெறுத்து, பிறவாமைக்கு முற்பட வேண்டுவது.*

*சிவன் இல்லையேல் இப்  புவனம் இல்லை*

*சிவன் இல்லையேல் சலனம் இல்லை!*

*சிவன் இல்லையேல் பயணம் இல்லை!*

*சிவன் இல்லையேல் எதுவும் இல்லை!*

*சிவன் இல்லையேல் சக்தி இல்லை!*

*அந்தச் சிவன் இல்லையேல் எந்த  ஜீவன் இல்லை!*

*சிவனின்றி ஓர்  அணுவும் அசைவதில்லை!*

*என்றும் எதற்கும், எல்லையே இல்லாதவை சிவனே!!*

*ஓம் நமசிவாய*
*அவனருளால் அவன்தாள் வணங்குவோம்!*

 *பகிர்தல் ஒரு மிகச் சிறந்த பண்பாடு மட்டுமல்ல வாழ்க்கையில் உயர்வான இடத்தை அடைய முக்கியமானதொரு ஆயுதமும் அதுதான்*