வியாழன், 21 மே, 2020

எந்த ஒரு வினைக்கும் நாம் தான் காரணம் என்ற புரிதல் ஏற்படும்போது நம்மை சுற்றி நடக்கும் அனைத்தையும் ஏற்று கொள்வீர்கள்.

கடவுளே! எனக்கு ஏன் இப்படி ஒரு வாழ்க்கை? எனக்கு ஏன் இப்படி ஒரு கஷ்டம்?

கெட்டவனெல்லாம் நல்லா இருக்கானே! என்ற எண்ணங்கள் மாறி நம்முடைய  தவறுக்கான வினைகள்தான் தற்போது நாம் அனுபவித்துவரும் கஷ்டங்கள் என்ற ஆழமான புரிதல் ஏற்படும்.

புரிதல் ஏற்படும்போது எதையும் ஏற்றுகொள்ளும் பக்குவம் வந்துவிடும். அப்படிப்பட்ட பக்குவத்தை நாம் அடையும்போது, நம்முடைய  95% கர்மங்களை நமக்காக வேறு ஒருவர் அனுபவித்து விடுவார். காரணம்!! நீங்கள் அவர்மீது கொண்டுள்ள அதிகப்படியான
அசைக்கமுடியாத நம்பிக்கையே ஆகும். அந்த அவர் ஏற்கனவே பிறவிகடலை கடந்தவராக இருப்பார்.

ஞானி ஒருவர் கூட்டம் நிறைந்த ஒரு தெரு வழியே சென்று கொண்டு இருந்தார். திடீர் என்று அங்கே உள்ள சாக்கடையில் குதித்துவிட்டு பக்கத்தில் உள்ள தண்ணீர் குழாயில் காலை கழுவிவிட்டு சென்றுவிட்டார்.  இதை பார்த்தவர்களுக்கு அவர் பைத்தியகாரன் என்று தோணலாம். ஆனால் அவரை பொறுத்தவரை பொருளுக்கும் அவருக்கும் தொடர்பை ஏற்படுத்தி கொள்வது
ஆகும். ஆனால் அவர் ஏற்படுத்திய தொடர்பு
அவருடையது அல்ல!! அவரை நம்பி இருப்பவர்களின் கர்மவினைகளை தான் அவர் அச்செயலின் மூலம் தீர்த்து வைக்கின்றார்.

இது எப்படி சாத்தியம்?? என்ற கேள்வி வரலாம்!! அந்த ஞானியை பொறுத்தவரை
அவர் செய்யும் எந்த செயலுக்கும் வினை என்ற ஒன்று ஏற்படுவது கிடையாது. காரணம்? அவர் உள்ளே வெறும் வெற்றிடம் தான் உள்ளது. அதாவது அவருக்கு மனம் என்ற ஒன்று கிடையாது!! உள்ளே சூன்யமாக தான் இருக்கும்!! அவரிடம் எந்த எண்ணங்களும் உதிப்பதும் கிடையாது!! மறைவதும் கிடையாது!! இதுவே " சும்மா இருப்பது " என்று சொல்லப்படுகின்றது.

ஒருவன் அவர்மீது கொண்டுள்ள தீவிர பக்தியால் அந்த
வெற்றிடத்தில் இவனது எண்ணங்கள்சுற்றி கொண்டிருக்கும். இவனுக்கு அன்று சாக்கடையில் விழுந்து அடிபட வேண்டும் என்ற விதி இருக்கும், ஆனால் இவன்
உண்மையாக இருப்பதால் இவனுக்கு பதிலாக
அந்த ஞானி அந்த விதியை முடித்து வைக்கின்றார். மேலும் அவர் மீது நம்பிக்கை
கொண்டுள்ள ஒவ்வொருவரின் எண்ண அலைகளும் அங்கே உள்ள வெற்றிடத்தில்
சுற்றிக் கொண்டே இருக்கும்.

இவர்கள் தன் தவறை உணர்ந்து தனக்கு உண்மையாக நடக்க
தொடங்கும்போது அந்த ஞானி எதோ ஒரு செயலின் மூலம் இவர்களின் பாவபுண்ணிய
கணக்குகளை அழித்துவிடுவார்.
முடிவில் இவர்களும் அந்த ஞானியின் நிலைக்கே வந்துவிடுகின்றனர். அதனால் தான் ஞானிகள் அருகில் இருக்கும்போது எதையும்
கேட்காதீர்கள் என்று கூறுவது.

காரணம்!! நீங்கள் கேட்டுதான் பெறவேண்டும் என்ற
அவசியமே அங்கு கிடையாது. மாறாக நீங்கள் கேட்க நினைப்பது கூட சிறியதாக தான்
இருக்கும். அவர் கொடுக்க நினைப்பதோ கணக்கில் அடங்காதவையாக இருக்கும். இதற்கு அவரிடம் பூரண சரணாகதி அடைந்தலே
சிறந்தது ஆகும். இதில் பூரண சரணாகதி என்பது இனி
அனைத்தும் உன் செயல் என பற்றுகளை துறப்பதுவே ஆகும். "நான்" என்ற எண்ணத்திற்கு பதிலாக இனி எல்லாம் "நீ" என்ற
எண்ணத்தை கொண்டு வருவதே சரணாகதி. அதற்குபிறகு  நமக்கென்று தனிப்பட்ட எந்தவொரு செயலும் இருக்காது, இருக்கவும் கூடாது. நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் அவன் செய்வதாகவே இருக்கவேண்டும்.
அருணகிரி திருப்புகழ் பாடியிருக்காரு! அனுபூதி பாடியிருக்காரு! இன்னும் என்னென்னமோ பாடியிருக்காரு! ஆனால் இந்தக் கந்தர் அலங்காரத்துக்கு மட்டும் ஒரு "இனம் புரியாத" தனித்த பெருமை உண்டு! ஏன்-ன்னு உங்களுக்குத் தெரியுமா?

"சும்மா" இரு! அம்-மா பொருள்!

 "சும்மா" இருப்பது எப்படி?  பார்க்கலாம்!:)

"சும்மா" இருக்கறது-ன்னா என்ன? பதிவு போடாம, பின்னூட்டம் இடாம, பதிவு படிக்காம, தமிழ்மணம் பக்கமே வராம, இப்படிப் பல வித "சும்மா" இருத்தல்களா? ஹிஹி!

* "சும்மா" இருக்கும் திறம் அரிதே! - என்று தாயுமானவர் பாடுகிறார்!

* "சும்மா" இரு, சொல்லற என்றலுமே! அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே! - என்று இதே அருணகிரி அநுபூதியில் சொல்றாரு!

"சும்மா" இரு-ன்னு சொன்ன ஆன்மீகவாதிகளும் சும்மா இருக்க வேணாமா? அதை விட்டுட்டு எப்படி அநுபூதி பாடலாம்? அப்படின்னா அவிங்களும் "சும்மா" இல்லை! ஏதோ "சும்மா"-வைப் பற்றிச் சும்மாச் சொல்லிட்டுப் போயிட்டாங்க! அப்படியா என்ன? :)

ஹா ஹா ஹா! இன்னிக்கி அலங்காரத்தைச் "சும்மா" பாக்கலாம் வாங்க! :)

சொல்லுகைக்கு இல்லை என்று, எல்லாம் இழந்து, சும்மா இருக்கும்
எல்லையுள் செல்ல என்னை விட்டவா! இகல் வேலன், நல்ல
கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியைக், கல்வரை கொவ்வைச் செவ்வாய்
வல்லியைப் புல்கின்ற மால்வரை தோள் அண்ணல் வல்லபமே!

இகல் வேலன் = இகல்-னா வலிமை! இகல்-ன்னு வரும் குறள் என்ன? சொல்லுங்க பார்ப்போம்! வலிமை வாய்ந்த வேலன்!

நல்ல கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியை = இது யாருப்பா? கொல்லி-சொல்லின்னு?
கொல்லி என்றால் இந்தளப் பண். நாதநாமக்ரியை ராகம்.
பேசினாலே இந்தளம் போலப் பேசும் சொல்லி -வள்ளி! அவள் எப்பமே நாத நாமம் தானே பேசுவாள்! அதான் அவள் பேச்சே நாதநாம ராகமாய், இந்தளமாய் ஆகிவிட்டது!

இறைவனின் நாமங்களுக்கு இறைவனைக் காட்டிலும் அவ்வளவு பெருமை!
முருகாஆஆஆஆ என்று ஒரு முறை உரக்கச் சொல்லிப் பாருங்கள்!
என்ன, முருகனை விட இனிக்குதா? :) அதான் நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்!

நாத நாமத்தைச் சொல்லிக்கிட்டே இருந்தா, நம்மையும் அறியாமல், நம் குரலும் கனிவாகி, இனிமையாகி, இந்தளம் ஆகிவிடும்!

கல்வரை, கொவ்வைச் செவ்வாய், வல்லியை = கல் மலையில் வாழ்பவள், கொவ்வைப்பழம் போல் சிவப்பான வாயாடி, வல்லிக் கொடி போன்று மெலிந்த வள்ளி!

கல்-மலை என்றால் அதிகம் பசுமை இல்லாத மலை! வள்ளி மலை/திருத்தணி போய் பார்த்தால் தெரியும்! கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பும் என்பது அப்பர் தேவாரம்! கொவ்வை-ன்னா கொய்யாப் பழமா? இல்லையில்லை!
கொவ்வைப் பழம் தான் திரிந்து...கோவைப் பழம் ஆகி விட்டது! கோவைப் பழம்-ன்னா உடனே கோயம்புத்தூர் பழம்-ன்னு சன்னமா வந்து நிக்கப் போறாங்க! :)

கோவைப் பழம் பாத்து இருக்கீங்களா? வீட்டுல கோவக்கா கறி செய்வாங்களா?
கிளிக்கு ரொம்ப பிடிக்குமே, அந்தக் கோவைப் பழம்! அதான் கிளி மூக்கு போலவே சிவப்பான உதட்டைக் கொவ்வைச் செவ்வாய்-ன்னு சொல்லுறாங்களோ?

புல்கின்ற மால்வரை தோள் அண்ணல் = அவளை அணைத்த வண்ணம் காட்சி தரும் அண்ணல்! அவனுக்கு மால்+வரை+தோள் = மயங்கும் மேகம்+மலை+தோள்!

தோள் இரண்டும் மலை போல் குவிந்து இருக்கு! தினமும் ஜிம்-முக்குப் போய் Arm Stretches பண்ணுவான் போல முருகன்! :)
அந்தத் தோள் மலையின் மீது முருகனின் முடிச் சுருள், மேகம் போல வந்து விழுகிறது! அதை ஓவியமா வரைஞ்சி காட்டுறாரு அருணகிரி!

வல்லபமே = அவனுக்குப் பிடித்தமான திறம்! சாமர்த்தியம்! அட, முருகனுக்கு என்னாங்க சாமர்த்தியம்? வேல் விடுறதா? மயில் மேல ஸ்டைலா வரதா? உம்...அதை எல்லாம் சொல்லுறத்துக்கு இல்லையாம்!

சொல்லுகைக்கு இல்லை = சொல்லுன்னு சொன்னா, சொல்ல முடியாது!
எல்லாம் இழந்து = யாவற்றையும் இழந்து

சும்மா இருக்கும் எல்லையுள் = சும்மா இருக்கும் ஒரு எல்லைக்குள்
செல்ல எனை விட்டவா = என்னைச் சென்று சேர்ப்பித்தவா!

உன் வல்லபத்தைச் சொல்லத் தான் முடியுமா?
தாந்த்ரீக முறையில் ஸ்ரீ ராஜசியாமளா தேவி

யந்திரம் மற்றும் மந்திரம் ஆகியவற்றின் துணை கொண்டு ஓர் உயரிய இலக்கை அடையும் முறைக்கு 'தாந்த்ரீகம்' என்று பெயர்.

சரஸ்வதி தேவியின் தாந்த்ரீக ரூபமே ஸ்ரீ ராஜ சியாமளா தேவி. தாந்த்ரீக முறையில் வழிபடப்படும், தச மஹா வித்யைகளுள் மாதங்கி தேவி ஒன்பதாவது வித்யாரூபமாகப் போற்றப்படுகிறாள். தசமாஹவித்யா தேவியரின் தோற்றம் குறித்து பொதுவாக வழங்கப்படும் புராணக்கதை பின்வருமாறு.

தாக்ஷாயணியாக அம்பிகை திருஅவதாரம் புரிந்த சமயத்தில், தேவி, தன் தந்தை தக்ஷன், சிவனாரை மதிக்காமல் துவங்கிய யாகத்திற்கு சென்று அவனுக்குப் புத்தி புகட்ட விரும்பினாள். சிவனார் அதைத் தடுத்ததும் அம்பிகையின் கோபம் பன்மடங்காகப் பெருகியது. அந்த உணர்ச்சி நிலையே பத்து மஹாவித்யைகளாகப் பிரிந்து, எல்லாத் திசைகளிலும் சிவனாரைச் சுற்றி நின்றதாகக் கூறப்படுகிறது. அப்போது, வடமேற்குத் திசையில் நிலைகொண்ட மஹாவித்யையே ஸ்ரீமாதங்கி.

தசமஹாவித்யா தேவியரின் ஒன்றிணைந்த வடிவமாக, ஸ்ரீ தத்தாத்ரேயரின் தர்மபத்தினியான ஸ்ரீ அனகாதேவி போற்றப்படுகிறார். கீழ்வரும் ஸ்லோகம் அதைச் சொல்கிறது.

"காளீ தாரா சின்னமஸ்தா ஷோடசீ மஹேஸ்வரி த்ரிபுரா பைரவீ தூம்ரவதீ பகலாமுகீ மாதங்கீ கமலாலயா தசமஹாவித்யா ஸ்வரூபிணி அனகாதேவீ நமோஸ்துதே.'

தசமஹாவித்யாவில் உள்ள பத்து தேவிகள்:

காளி
தாரா
லலிதா திரிபுரசுந்தரி
புவனேஸ்வரி
பைரவி
சின்னமஸ்தா
துமாவதி
பகளாமுகி
மாதங்கி
கமலா

மற்றொரு புராணக்கதையின்படி, மதங்க முனிவரின் தவத்திற்கு மெச்சி, ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி அளித்த வரத்தின் பலனாக, அவருக்கு மகளாக வந்துதித்தவளே ஸ்ரீ மாதங்கி. மதங்க முனிவரின் மகளாக வந்துதித்த காரணத்தாலேயே 'மாதங்கி' என்ற திருநாமம் அம்பிகைக்கு ஏற்பட்டது.

 கிராமப்புறங்களில், 'பேச்சி', 'பேச்சாயி' 'பேச்சியம்மன்' என்ற திருநாமங்களோடு வழிபடப்படும் தெய்வம், பேச்சுக்கு அதிபதியான இந்த அம்பிகையைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.
ஸ்ரீ தேவிபாகவதத்தின் படி, தசமஹாவித்யைகளும் ஸ்ரீ லலிதா தேவியின் பரிவார தேவதைகளாகப் போற்றப்படுகிறார்கள்.

எல்லைகளற்ற கடல்போல் விரிந்த ஞானத்திற்கும், உள்முகமான அறிவாற்றலுக்கும் மாதங்கி தேவியே அதிதேவதை. மனதில் தோன்றுவதை சாமர்த்தியமாக வெளிப்படுத்தும் நல்லாற்றலும், எதையும் கிரகிக்கும் திறனும், கிரகிப்பதை பிறர் விரும்பும் வண்ணம் வெளிப்படுத்தும் திறனும், ஸ்ரீமாதங்கியின் அருளாலேயே சித்திக்கும். மேலும், ஒருவர் பேசும் வாக்கியத்தின் மத்திமப் பகுதியே அவர் மனதில் நினைத்திருப்பதை வெளிப்படுத்துவதாக அமையும். இந்த மத்திமப் பாகத்துக்கும் மாதங்கி தேவியே அதிதேவதை. நுண்ணறிவுக்கும் அதை வெளிப்படுத்தும் திறனுக்கும் மனதை அறிவின் மூலம் கட்டுப்படுத்தி அம்பிகையிடம் லயிக்கச் செய்யும் ஆற்றலுக்கும் அம்பிகையின் அருள் அவசியம்.

பாட்டு, நடனம், நினைத்த பொழுதில் கவி இயற்றும் திறன் போன்ற நுண்கலைகள் அம்பிகையின் அருளாற்றலாயே ஒருவருக்குக் கிடைக்கிறது. சரஸ்வதி தேவியின் விரிந்த, பேராற்றலுள்ள வடிவமே ஸ்ரீ மாதங்கி தேவி எனக் கொள்ளலாம்.

சரஸ்வதி தேவியை மொழி, கலைகள், கற்கும் திறன் இவற்றின் அதிதேவதையாகக் கொண்டால், மாதங்கி தேவியை மனதை உள்முகமாக திருப்பி, தான் யார் என்பதை அறியும் ஆற்றலுக்கும், ஆத்மவித்தைக்கும் அதிதேவதையாகக் கொள்ளலாம்.

சியாமளாவிற்கு மூன்று அங்க- உபாங்க தேவதைகள் உள்ளனர். லகு மாதங்கி, வாக்வாதினி, நகுலி என்பவர்களே அவர்கள்.

நவக்கிரகங்களில் புதபகவான் இந்த தேவியின் அம்சத்தோடு கூடியவராகக் கருதப்படுகிறார். ஸ்ரீமாதங்கி தேவி, தசாவதாரங்களில் புத்த அவதாரத்தோடு தொடர்புடையவராகவும் கருதப்படுகிறார் (பத்து மஹா வித்யா தேவியரும் மஹாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களோடு தொடர்புடையதாக கொள்ளலாம்.)

சில சோதிடர்கள், ஜாதகத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே, ஜாதகரின் பலன்களைச் மிகச் சரியாகச் சொல்வதைக் காணலாம். இதற்கு, 'கர்ணமாதங்கி' என்கிற, மாதங்கி தேவியின் திருவடிவைப் போற்றும் மந்திர உபாசனையே காரணம். இந்த மந்திரத்தை முறையாக உபாசிப்பவர்களின் கேள்விகளுக்கு, அவர்களின் காதுகளில் தேவியே வந்து பதிலை உச்சரிப்பதாக ஐதீகம்.

தசமஹா வித்யைகளுள் ஒருவராகக் கருதப்பட்டாலும், இந்த தேவி, ஆற்றல் நிறைந்த மிகப் புனிதமான திருவுருவாகவே போற்றித் துதிக்கப்படுகிறாள். அனைத்து கேடுகளையும் தான் ஸ்வீகரித்துக் கொண்டு நன்மையை பிறருக்கு அருள்பவளே ஸ்ரீ மாதங்கி.
ஸ்ருதி ஸீமந்த சிந்தூரி க்ருத பாதாம்ஜ தூளிகாயை நமஹ!

அம்பிகையின் பாதகமல துளிகளே வேத மாதாவின் வகிட்டினில் இருக்கும் ஸிந்தூரம்(அதாவது உபநிஷதமோ).  

"ஸீமந்த ஸிந்தூரி" என்று லலிதா ஸஹஸ்ரநாமம் சொல்வது போல், உச்சியிலே அணிந்து இருக்கிறாள். அலை அலையாய்ப் பரவும் கேசச் சுருள்கள் அந்த சூரியனின் கிரணங்கள் போல் இருக்கின்றன. மாணிக்கக் கல் சிகப்பு நிறம். நவரத்னங்கள் இருந்தாலும், "மனிதருள் மாணிக்கம்" என்று யாரையாவது உயர்த்திப் பேசும்போது, மாணிக்கக் கல்லையே உதாரணம் சொல்லுகிறோம்.

லலிதா ஸஹஸ்ரநாமமோ, அம்பிகையின் வர்ணனையை கேசாதி பாதாந்தமாகத் தொடங்குகிறது. "ஸம்பகாஸோக புன்னாக ஸௌகந்திக லஸத் கஸா" - "ஸம்பகம், அசோகம், புன்னாகம் போன்ற புஷ்பங்களின் வாசனையை எல்லாம் இயற்கையிலேயே தன்னகத்தில் கொண்ட கூந்தல்" என்று கேசத்தில் இருந்து தொடங்குகிறது.

அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி, அரு மறைகள்
அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி, அரு மறைகள்
பழகிச் சிவந்த பதாம்புயத்தாள், பனி மா மதியின்
குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க,
இழவுற்று நின்ற நெஞ்சே!-இரங்கேல், உனக்கு என் குறையே?    
அபிராபி அந்தாதி 71.

அவள் அழகுக்கு ஏதேனும் ஒப்புமை உண்டா என்ன? இல்லை! அவளுடைய காலடிகள், சிவந்து இருக்கின்றன. எதனால்? வேதங்கள், அவளது காலடியிலே விழுந்து விழுந்து நமஸ்காரம் செய்கின்றன. அப்படி ம்றைகளாகிய வேதங்கள் விழுந்து விழுந்து வணங்குவதனாலேயே, அவளுடைய காலடிகள் சிவந்து விட்டனவாம்! சிவந்து, சிகப்பான தாமரை மலர்கள் போல இருக்கின்றனவாம்!

இங்கே, லலிதா சஹஸ்ரனாமத்தினை நினைவு படுத்துகிறார் பட்டர். "ஸ்ருதி சீமந்த சிந்தூரி, க்ருத பாதாப்ஜ தூளிகா" என்று சொல்கிறது லலிதா சஹஸ்ரனாமம். அதனை இங்கே அப்படியே தமிழ்ப் படுத்துகிறார்.

அவள், சந்திரனைத் தம் முடியிலே சூடியவள். சந்திரசூடரின் ஒரு பாகமல்லவா! அந்தக் கோமளவல்லி, இனிமையான கொம்பு போன்ற தேவி இருக்கும்போது, நமக்கு என்ன குறை இருந்து விட முடியும்? நெஞ்சே, நீ ஏன் ஊக்கம் குறைந்து, வருத்தம் தோய்ந்து, அழுது கொண்டிருக்கிறாய்? உனக்கு என்ன குறை இப்போது?

மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் ஒருவரது பார்வையிலிருந்து, இந்தப் பாடலை நாம் பார்க்க வேண்டும். தேவி ஏதேனும் கருணை புரிந்தாலன்றி, மரணம் சர்வ நிச்சயம். அந்த சமயத்தில், அவளை மிக நிச்சயமாக நம்பி, அவள் அருள் புரிவாள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இன்றி இருக்க வேண்டுமானால், எப்பேர்ப்பட்ட நம்பிக்கை அந்த அபிராமியின்மேல் இருந்திருக்க வேண்டும்? ஆவதும், அழிவதும், நிற்பதும், நடப்பதும், பிறப்பதும், இறப்பதும், எல்லாமும் அவளால்தான் என்பதிலே எத்தனை உறுதி இருந்திருந்தால், இப்படி இருக்க முடியும்!

நெஞ்சே! நீ ஏன் நம்பிக்கை தளர்ந்து போகிறாய்? அவள் பார்த்துக் கொள்வாள் ! உனக்கு இப்போது என்ன குறை வந்து விட்டது! அவள் பக்கத்திலேயே இருக்கும்போது, உனக்கு என்ன நேர்ந்துவிட முடியும்? எது நேர்ந்தாலும், அது அவளது அருளினால்தான் என்பது நிச்சயமானால், நீ ஏன் அழுது கொண்டிருக்கிறாய்? கவலை உற்றிருக்கிறாய்? அவளது பாதாரவிந்தங்களிலே, அந்த வேதங்களே, எந்தப் பாதாரவிந்தங்களிலே நித்தம் வணங்கி நிற்கின்றனவோ, அந்தப் பாதாரவிந்தங்களிலே மனதை நிறுத்தி, உற்சாகமாக இரு. அவள் இருக்கும்போது, உனக்கு எந்த ஒரு குறையும் வந்துவிடாது என்று சொல்கிறார் பட்டர்.
அவ்யாஜ கருணா மூர்த்தி:-

ஒரு குடும்பம். அதில் தாய், தந்தை, அக்கா, மற்றும் ஒரு குழந்தை இருக்கிறார்கள். ஒரு நாள், அப்பா வீட்டுக்கு வரும்போது நிறைய இனிப்புகள் வாங்கி வருகிறார். அவருக்கு சம்பள நாள் போல இருக்கிறது!

ஜாங்கிரி என்றால் அந்தக் குழந்தைக்கு ரொம்பப் பிடிக்குமாம். அதனால் முதலில் ஒரு ஜாங்கிரியை எடுத்து அந்தக் குழந்தை கையில் தருகிறார்கள். சிறு பிள்ளைகளிடம் ஏதாவது இருந்தால், விளையாட்டாக நாம் அதைக் கேட்போமில்லையா, அது நமக்குக் கொடுக்கிறதா இல்லையா என்று பார்ப்பதற்காக. அதைப் போல, அப்பா குழந்தையிடம் கேட்கிறார்: “அப்பாக்கு?”

குழந்தை இரண்டு கைகளாலும் ஜாங்கிரியை இறுகப் பிடித்துக் கொண்டு “ஊஹூம்” என்று தலையை ஆட்டுகிறது.

அப்பா பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு, “அப்பாதானே உனக்கு புதுச் சட்டை வாங்கித் தர்றேன், பொம்மை வாங்கித் தர்றேன், எல்லாம் வாங்கித் தர்றேன்… அப்பாக்கு தர மாட்டியா?”

“ஊஹூம்”

“எனக்குத் தருவாள் பாருங்க”, என்று அம்மா வருகிறாள்.

“எனக்கு தர்றியா கண்ணா?” கையை நீட்டிக் கேட்கிறாள்.

“மாத்தேன் போ”

“அம்மாதானே பாப்பாக்கு எல்லாம் பண்றேன். பாப்பாக்கு குளிப்பாட்டி, ட்ரஸ் பண்ணி, கதை சொல்லி, மம்மம் குடுத்து, எல்லாம் பண்றேனே அம்மா. ப்ளீஸ், அம்மாக்கு தாயேன்”

“ஊஹூம். தய மாத்தேன்!” திட்டவட்டமாகச் சொல்கிறது குழந்தை.

அடுத்ததாக அக்கா வருகிறாள்.

“அக்காவுக்கு தர்றியா? அக்காதானே உன்னை பார்க்குக்கு கூட்டிக்கிட்டு போறேன், அம்மா இல்லாதப்ப உன்னைப் பார்த்துக்கறேன். எனக்கு தா கண்ணா”

கைகள் இரண்டையும் பின்னால் கட்டிக் கொண்டு, ஜாங்கிரியை மறைத்துக் கொண்டு, மறுபடியும்
“தய மாட்டேன்”, என்பதாக பலமாகத் தலையை ஆட்டுகிறது குழந்தை.

இந்த சமயத்தில் அவர்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி தன் குழந்தையுடன் வருகிறார். அந்தக் குழந்தை பயந்து கொண்டே அம்மாவின் சேலைக்குப் பின்னால் மறைந்து கொண்டே தயங்கித் தயங்கி வருகிறது.

இந்தக் குழந்தை அந்தக் குழந்தையின் கையைப் பிடித்து முன்னால் இழுத்து, “இந்தா, சாப்பிடு”, என்று ஜாங்கிரியைக் கொடுத்து விடுகிறது.

ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்ன கதை இது. அவர் சொன்ன மாதிரியே அச்சு அசலாக இருக்காது. நினைவிலிருந்து எழுதுகிறேன். கருத்தை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்தக் குழந்தையைப் போலத்தான் அன்னை பராசக்தியும்.

“நான் இத்தனை ஜபம் செய்கிறேன், எனக்கு இதைத் தா. இத்தனை முறை சகஸ்ரநாமம் சொல்கிறேன், எனக்கு அதைத் தா. இத்தனை பூஜைகள் செய்கிறேன், எனக்கு இதெல்லாம் தா”, என்றெல்லாம் பலரும் கேட்கிறோம், அல்லது பேரம் பேசுகிறோம், இந்தக் கதையில் வரும் குடும்பத்தினரைப் போலவே. ஆனால் அதெல்லாம் அன்னைக்கு ஒரு பொருட்டில்லை. காரணம் எதுவும் தேவையில்லாமல் வேலை செய்யும் பெண்மணியின் குழந்தைக்கு இனிப்பைக் கொடுத்து விட்ட குழந்தையைப் போலத்தான் நம் அன்னையும். அவளுக்கும் கருணை செய்வதற்கு எந்தக் காரணமும் தேவையில்லை.

“அவ்யாஜ கருணா மூர்த்தி”. லலிதா சகஸ்ர நாமத்தில் வருகின்ற அன்னையின் ஒரு நாமம் இது. இதற்கு சுகிசிவம் அவர்கள் சொன்ன விளக்கம் தான் இதுவரை சொன்னது.

“வ்யாஜ” என்றால் காரணம். “அவ்யாஜ” என்றால் காரணமில்லாமல். “அவ்யாஜ கருணா மூர்த்தி” என்றால் காரணமில்லாமல் கருணை பொழிபவள். அதாவது கருணை பொழிய வேண்டுமெனத் தீர்மானித்து விட்டால், அந்த தீர்மானம் ஒன்றே போதும் அவளுக்கு; வேறு எந்த ஒரு காரணமுமே தேவையில்லை.

ஒரு வேளை நாமும் அவளிடம் காரணமில்லாத, எந்த முகாந்திரமும் இல்லாத, எதிர்பார்ப்பில்லாத, அன்பைப் பொழிந்தால், அவளும் நம்மிடம் காரணமில்லாத கருணையைப் பொழிவாளோ என்று தோன்றுகிறது. ஆனால் அந்த எண்ணமும் கூட இல்லாமல் அவளிடம் அன்பு செய்வதே நல்லது.

அதற்காக, நாம் வேண்டிக் கொள்வதெல்லாம் நடக்காதா என்று நினைக்கத் தேவையில்லை. மனமுருகி நாம் வேண்டிக் கொள்ளும் அனைத்துக்கும் இறைவன் செவி சாய்க்கிறான் என்பார், ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர். “நான் உனக்காக அதைச் செய்தேன், நீ எனக்காக இதைச் செய்”, என்று மனிதர்களிடம் எதிர்பார்ப்பது போல அன்னையிடம் முடியாது என்பதே கருத்து.
உணர்ந்திருந் துள்ளே ஒருத்தியை நோக்கிற்
கலந்திருந் தெங்குங் கருணை பொழியும்
மணந்தெழும் ஓசை யொளியது காணுந்
தணந்தெழு சக்கரந்
தான்தரு வாளே.

#திருமந்திரம்1348.

திருவருள் துணையால் சக்கரத்தில் தோன்றும் அம்பிகையின் திருவுருவினை உணர்ந்திருந்து, உள்ளத்தின் உள்ளே நோக்கினால், நோக்குவார்க்கு எங்கும் கலந்து பேரருள் பொழிவாள். அகத்தே மணி, யானை, கடல், புல்லாங்குழல்,மேகம், வண்டு, தும்பி, சங்கு, பேரிகை, யாழ் ஆகிய இன்னோசை பத்தும் ஒலித்திடும்.

அம்பிகையே சக்கரத்திலிருந்து வெளிப்பட்டு காட்சி தந்து அருள்புரிவாள். என்று திருமூலர் ஸ்ரீசக்கரத்தின் பெருமையை பறைசாற்றுகிறார்.

ஸ்ரீசக்கர தியானம் உயர்ந்த தியானமாகும். இதில் மனம் ஒருமுகப்பட்டு ஏகாக்கிர சித்தம் பெறுகிறது. இதுவே தியானம் வெற்றி பெற, சித்திகள் நமை வந்து அடைய சிறந்த மார்க்கமாகும்.

அம்பிகையைத் தியானித்தால் தொழுபவர்களுக்கு அவள் அருளாலே எல்லா வளங்களும், நலமங்களும் பெருகும்.காலனும் அணுகான்.

கதிரவனைப்போல பிரகாசிக்கலாம். நித்தர்களும் அம்பிகையான வாலைப் பெண்ணை தியானிக்காமல் தியானிக்காமல் வெற்றி பெற முடியாது என்று திட்டவட்டமாகக் கூறுகிறார்கள்.

#ஸ்ரீசக்கரம் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற #ஆலயங்கள் :

#காஞ்சி #காமாட்சி அம்மன் ஆலயத்தில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்ரத்திற்கே அனைத்து பூஜைகளும் செய்யப்படுகின்றன.
#லலிதா  #ஸஹஸ்ர #நாமத்தை இயற்றிய வசின்யாதி வாக்தேவதைகள் எண்மரும் இதில் எழுந்தருளியுள்ளனர்.

பூந்தமல்லிக்கு அருகே மாங்காட்டில் பிரதிஷ்டை செய்யப்பட்ட அர்த்தமேருவுக்கு புனுகு, சந்தனம் சாத்தப்படுகிறது.

கும்பகோணம்-மாயவரம் பாதையில் உள்ள பாஸ்கரராயபுரம் ஆனந்தவல்லி அம்மன் முன் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை புவனேஸ்வரி தேவி முன் உள்ள மகாமேரு, சாந்தானந்த சுவாமிகளால் ஸ்தாபிக்கப்பட்டது.

ஸ்ரீசைலம் பிரமராம்பிகா தேவியின் முன் ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரப் பிரதிஷ்டை செய்துள்ளார்.

சென்னை-திருவொற்றியூர் தியாகராஜர் ஆலயத்தில் வட்டப்பாறை அம்மனின் உக்கிரம், ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீசக்ரத்தால் தணிக்கப்பட்டது.

திருவானைக்கா அகிலாண்டேஸ்வரியின் ஒரு காதில் ஸ்ரீசக்ர தாடங்கத்தையும் மற்றொரு காதில் சிவசக்ர தாடங்கத்தையும் ஆதிசங்கரர் அணிவித்துள் ளார். அதன் பின்னரே தேவியின் உக்ரம் தணிந்து சாந்தமானார்.

கொல்லூர் மூகாம்பிகையின் மகிமைக்கு காரணம் தேவியின் முன் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீசக்ரமே.

சென்னை-காளிகாம்பாள் ஆலய மேருவில் அந்தந்த மாத்ருகா அட்சரங்கள் அந்தந்த ஸ்தானத்தில் செதுக்கப்பட்டுள்ளன.

சென்னை-திருவல்லிக்கேணி அனுமந்தலாலா தெருவில் உள்ள காமகலா காமேஸ்வரி சந்நதியிலும் ஸ்ரீசக்ரப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. த்ரிபங்க நிலையில் வீற்றருளும் இவள் மிக்க வரப்பிரசாதி.

சென்னை-நங்கநல்லூரில் திதிநித்யா தேவிகளின் சக்ரங்களும் விக்ரகங்களும் இரு புறங்களிலும் திகழ, 16 படிகளின் மேல் மகாமேருவுடன்  கோலோச்சுகிறாள், ராஜராஜேஸ்வரி.

நேபாளம் குஹ்யேஸ்வரி ஆலயத்திலுள்ள தாமரை மொட்டின் நடுவே அமைந்துள்ள ஸ்ரீசக்ரத்தை அனைவரும் தொட்டு பூஜிக்கலாம்; அதில் பொங்கி வரும் தீர்த்தத்தை தலையில் தெளித்துக்கொண்டு பிரசாதமாகவும் உட்கொள்ளலாம்.

திருப்போரூர் முருகன் ஆலய பிராகாரத்தில் சிதம்பர சுவாமிகள் நிறுவிய சக்ரத்தை தனி சந்நதியில் தரிசிக்கலாம்.

தாம்பரம்-ஸ்ரீபெரும்புதூர் பாதையிலுள்ள பண்ருட்டிக்கண்டிகை தலத்தில் பூரணமகாமேருவிற்கு இருபுறங்களிலும் வாராஹி, மாதங்கி மற்றும் திதி  நித்யா தேவியர் பதினைந்து பேரும் யந்திர வடிவாக அருள்கிறார்கள்.

திருச்சி மலைக்கோட்டையில் சுகந்த குந்தளாம்பாளின் சந்நதி ஸ்ரீசக்ர வடிவில் அமைந்திருக்கிறது.

கேரளாவில் ஓணத்தக்குளம் அருகே உள்ள செட்டிக்குளத்தில் அம்பிகை சந்நதியில் ஸ்ரீசக்ரம் பொருத்தப்பட்டிருக்கிறது.

காசி-அனுமன் காட்டில் முத்துஸ்வாமி தீட்சிதர் ஆராதனை செய்த சிவலிங்கத்தின் உச்சியில் ஸ்ரீசக்ரம் பொறிக்கப்பட்டுள்ளது.

மன்னார்குடி ராஜகோபாலன், தேவியின் அம்சமான கோபாலஸுந்தரியாக விளங்குகிறார். அதனால் அவர் திருவடிகளில் ஸ்ரீசக்ரம் வைத்து வழிபடப்ப டுகிறது.

திருவிடைமருதூரில் மூகாம்பிகை முன் மகாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தேவி உபாசகரான பாஸ்கரராயர் பூஜித்தது இந்த மகாமேரு.

புன்னை நல்லூர் மாரியம்மனின் முன் ஸ்ரீசக்ரப் பிரதிஷ்டை செய்தவர், மகான் சதாசிவபிரம்மேந்திரர்.
ஓம். சொற்கள் மிகுந்த சக்தியுடையவை. The words are having power to heal and destoy as well. சாதாரண வார்த்தைகளுக்கே அத்தகைய பலன் உண்டு என்னும் போது, மந்திர பீஜாக்ஷரங்களுக்கு மகத்தான சக்தியுண்டு என்பது உலகம் கண்ட உண்மை.

ஒரு சீடன் குருவினை நாடி உபதேசம் வேண்டினான். குருவோ சீடன் ஒருபாமரன் என்பதால் ஏற்றுக்கொள்ளவிழையவில்லை. அவனுக்கு அடிப்படை அறிவே போதுமானதன்று என்று நினைத்து பலமுறை தட்டிக் கழித்தும் அவன் விடாது நச்சரிக்கத் தொடங்கினான்.

ஒரு நாள், அவர் எங்கோ வெளியே புறப்படும் வேளை அவரருடைய கால்களைப்பற்றிக் கொண்டு உபதேசம் செய்தே ஆகவேண்டும் என்று கதர ஆரம்பித்தான். அவனுக்கு சுக துக்கங்கள் ஆசை நிராசை என்பதெல்லாம் தெரியாத யதார்த்தவாதி.

“இது அங்கே! அது இங்கே!! எழுந்து கிழக்குமுகமாக நின்றுகொண்டு சொல் ” என்றார். கருணைபிறந்த ஆசானை மனதாரப் பாராட்டி, வணங்கி , கைகட்டி வாய்புதைத்து அவர் எப்படிச் சொல்லவேண்டும் என்று சொன்னாரோ அதை உள்ளத்தில் வாங்கிக்கொண்டு அவரிடம் விடைபெற்றான். அதன் பின்னர் அவன் அவரைப் பார்க்க வரவே இல்லை.

அவரும் அப்படி ஒரு சீடன் வந்துபோனதை மறந்தேபோனார். ஆறு மாதங்கள் கழிந்து அவன் வந்து குருவினை வணங்கி, சில கனிவகைகளைக் கொண்டுவந்ததை முன்னர் வைத்து “குருவே வணக்கம். நான் சித்தியடைந்துவிட்டேன்”. என்றான்.

அவருக்கு எல்லாமே வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் பட்டது. ” நீ யாரப்பா? எங்குவந்தாய்? என்ன சித்தியடைந்தாய்? “என்று கேட்டார்.

“அவன் சொல்லட்டுமா ?” என்று குருவின் அனுமதியை வேண்டினான்.

அவர் அனுமதியளித்தார்.

சீடன் கிழக்குமுகமாக வணங்கிக் கண்களை மூடி, “இது அங்கே! ” என்றான். குரு ஆகாய மார்க்கமாக தூக்கிஎறியப்பட்டு கூப்பிடு தூரத்தில் ஆற்று மணலில் விழுந்தார்.

நடந்தசம்பவம் அவரை மிகவும் வேதனைப் படுத்தியது. கண்மூடி நின்ற சீடன் அடுத்த வார்த்தையைப் பிரயோகித்தான்.”அது இங்கே!”.

மீண்டும் குரு ஆரம்பத்தில் நின்ற தன் வீட்டருகே வீசப்பட்டு நின்றார்.

குழந்தைத் தனமாய் வந்த ஒருவனுக்கு வேடிக்கைக்காக வாயினால் கூறிய யதார்த்தவார்த்தை இவ்வளவு பயன் தரும் சக்தியுடையது என்று அவர் நம்பமுடியாமல், “என்றுமுதல் இதனை அறிந்துகொண்டாய்? ” என்று கேட்டார்.

நேற்றுத்தான் வழக்கம் போல் பாறையின் அருகே உட்கார்ந்து ஜபித்துக் கொண்டிருக்கும் போது சப்தம் கேட்டது. பயந்துவிட்டேன். கடகட சத்தத்துடன் நான் பார்த்துக் கொண்டிருந்த பாறாங்கற்கள் இடம் மாறி திரும்பவும் வந்துகொண்டிருந்தன.

நான் சொல்வதை அவை கேட்டு அசையற்று தூங்கிவிட்டன. அதனை உங்களிடம் சொல்லவந்தபோது உங்களைப்பார்த்துக்கொண்டே சொல்லிவிட்டேன். என்னுடைய அபராதத்தை மன்னித்துக் கொள்ளுங்கள். அடிபட்டுவிட்டதா?” என்று கண்ணிர் மல்கக் கேட்டான் அப்பாவித்தனமாய்.
காலில் பட்ட அடியினைவிட மனதில் பட்ட அடியே அவருக்கு வேதனையளித்தது.

சேங்காலிபுரம் அனந்தராம தீட்சதர் இச்சம்பவத்தைக் குறிப்பிட்டார்.
ஸ்ரீ குமாரீ ஸ்தோத்ரம்

ஜகத்பூஜ்யே ஜகத்வந்த்யே ஸர்வஶக்தி ஸ்வரூபிணீ
பூஜாங்க்ருஹாண கௌமாரீ ஜகன்மாதர் நமோஸ்துதே
த்ருபுரான் த்ரிபுரான் தாரான் த்ரிவர்ஷாம் ஞானரூபிணீம்
த்ரைலோக்ய வந்திதான் தேவீன் த்ரிமூர்த்திம் பூஜயாம்யஹம்
காலாத்மிகாம் கலாதீதாம் காருண்ய ஹ்ருதயாம் ஶிவாம்
கல்யாண ஜனனீம் தேவீம் கல்யாணீம் பூஜயாம்யஹம்
அணிமாதி குணாதாராம் அகாராதி அக்ஷராத்மிகாம்
அனந்த ஶக்திகாம் லக்ஷ்மீம் ரோஹிணீம் பூஜயாம்யஹம்
காமசாரீம் ஸுபாங்காந்தாம் காலசக்ர ஸ்வரூபிணீம்
காமதாம் கருணோதாராம் காளிகாம் பூஜயாம்யஹம்
சண்டவீராம் சண்டமாயாம் சண்டமுண்ட ப்ரபஞ்சனீம்
பூஜயாமி சதா தேவீம் சண்டிகாம் சண்டவிக்ரமாம்
ஸதானந்தகரீம் ஶாந்தாம் ஸர்வதேவ நமஸ்க்ருதாம்
ஸர்வபூதாத்மிகாம் லக்ஷ்மீம் ஶாம்பவீம் பூஜயாம்யஹம்
துர்கமே துஸ்தரே கார்யே பவது:க நிவாஸினீம்
பூஜயாமி ஸதா பக்த்யா துர்கா துர்கார்த்தி நாஶினீம்
ஸுந்தரீம்ஸர்வ வர்ணாபாம் ஸுகஸௌபாக்யதாயினீம்
ஸுபத்ரா ஜனனீம் தேவீம் ஸுபத்ராம் பூஜயாம்யஹம்
இதி சாக்தப்ரமோதே குமாரீ தந்த்ரே ஸ்ரீ குமாரீ ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்
நம்முள்ளே அம்மையப்பனுடைய நினைப்பு எப்படி இருக்கவேண்டும் ஸ்ரீ பெரியவா அருள்கிறார்

சக்தியும் தீபமும் அதன் ப்ரகாசமும் போல, புஷ்பமும் அதன் ஸுகந்தமும் போல, தேனும் அதன் மாதுர்யமும் போல, பாலும் அதன் வெளுப்பும் போல, சொல்லும் அதன் பொருளும் போல ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்கவே முடியாதபடி அல்லவா சேர்ந்திருக்கிறவர்கள்?அதனால் அவனுடைய அசைவுக்காக அவளுக்குத் தனி க்ரெடிட் கொடுத்தாலுங்கூட அவளையே அவனிடமிருந்து தனியாகப் பிரித்துவிட முடியாது. சிவ சக்திகளுடைய இந்த அன்யோன்ய உறவு நம் ஹ்ருதயத்தின் அடியில் எந்நாளும் இருக்க வேண்டும். [மீண்டும்] சிவன், சக்தி என்பவர்களுடைய அன்யோன்ய உறவு நம் ஹ்ருதயத்தின் அடிவாரத்தில் எந்நாளும் இருக்க வேண்டும்.

சக்தி விலாஸத்தால் என்ன பண்ணினாலும் அதிலே சிவனுந்தான் சேர்ந்து இருக்கிறான். கஷாயத்தின் உறைப்பைக் குறைப்பதற்காக பாலுடைய மதுரமான ருசியைச் சேர்க்கே வேண்டும் என்றால் பாலிலிருந்து அந்த ருசியை மட்டும் பிரித்தெடுத்துச் சேர்க்க முடியுமா?சக்தி கார்யம் அத்தனையிலும் சிவ ஸம்பந்தமில்லாமல் செய்ய முடியாது.

ஒரு தெய்வத்தை ஸ்துதிக்கும்போது அதற்கே ஸர்வோத்கர்ஷம் [எல்லாவற்றுக்கும் மேலான நிலை]சொன்னால்தான் அதனிடமே மனஸ் ஆழப் புதைகிறது என்பதாலும், 'சிவனைவிட அம்பாள் உசத்தி', அல்லது 'அம்பாளைவிட சிவன் உசத்தி'என்று சொன்னாலும், அவர்கள் பிரிக்கவே முடியாமல் ஒன்றாக இருக்கிறவர்கள் என்ற எண்ணத்தை நம் ஹ்ருதயத்தின் அடி மூலையில் ஊறப் போட வேண்டும்.
சங்கீத மும்மூர்த்திகளின் ஒருவரும் சிறந்த ஸ்ரீவித்யா உபசகருமான திரு. முத்துஸ்வாமி தீக்ஷ்தரும் லக்ஷ்மியின் மீது லலிதா ராகத்தில் "ஹிரண்மயிம்" என்ற கீர்த்தனத்தை இயற்றியுள்ளார். லலிதா ராகமும் வசந்தா ராகமும் இரட்டைபிறவி சகோதரிகள் ஒரே ஒரு ஸ்வரம்தான் ப என்கிற பஞ்சமம்தான் கிடையாது லலிதாவில். ஒருசமயம் தீக்ஷ்தரை அவ்ர் மனைவி தனக்கு செல்வம் வேண்டும் என்பதாற்காக தஞ்சை மன்னரைப் புகழ்ந்து அவர் மீது கீர்த்தனை இயற்றிப் பாடி செல்வத்தைக் கேளுங்கள் என்று கேட்டாளாம். அதற்கு அவர் மறுத்து மனிதரைப் பாடமாட்டேன் என்று கூறி லக்ஷ்மியின் மீது இந்தக் கீர்த்தனையை பாடினார்

ராகம்: லலிதா தாளம்: ரூபகம்

பல்லவி

ஹிரண்மயிம் லக்ஷ்மீம் சதா பஜாமி

ஹீன மானவ ஆஸ்ரியம் த்வஜாமி-----(ஹிரண்மயீம்)

அனுபல்லவி

கிரதர சம்பிரதாயம் க்ஷிராம்புதி தனயாம்

ஹரிவத்ஸ்தலாலயாம் ஹரிணீம் கரனகிஸலயாம்

கரகமலத்ருத குவலயாம் மரகத மணிமய நிலயாம்------(ஹிரண்மயீம்)

சரணம்

ஸ்வேத தீபவாஸிணீம் ஸ்ரீகமலாம்பிகாம் பராம்

பூதபவ்ய விலாசணீம் பூசுர பூஜிதாம் வராம்

மாதராம் அப்ஜமாலினீம்

மாணிக்ய ஆபரணாதராம்

சங்கீத வாத்ய விநோதினீம்

கிரிஜாம் தாம் இந்திராம்

சீதகிரண நிபவதனாம்

ஸ்ருதசிந்தாமணி சதனாம் பீடவஸனாம்

குருகுஹ மாதுலகாந்தாம் லலிதாம்---- (ஹிரண்மயீம்)

ஹிரண்யவர்ணாம் ஹரிணீம் என்று தொடங்கும் ஸ்ரீசூக்தத்திலிருந்து முதல் அடியை எடுத்து தொடங்குகிறார்.

பல்லவி

தங்கமயமான வண்ணத்துடன் ஜொலிக்கும் லக்ஷ்மியைத்தான் நான் பாடுவேன் மற்றபடி ஒருபொழுதும் நான் மனிதர்களை பாடமாட்டேன்

அனுபல்லவி

அழிவில்லாத செல்வத்தைத் தருபவளும்

பாற்கடல் பெற்று எடுத்தவளும்

மஹாவிஷ்ணுவின் மார்பில் எப்பொழுதும்

கோவில் கொண்டு இருப்பவளும்

இளம் தளிரைப் போன்ற தனது செம்பஞ்சு சரணங்களை உடையவளும்

தனது கையினில் எப்பொழுதும் இருக்கும் தாமரையினால் அந்த பூவுக்கு அழகு சேர்ப்பவளும்

இடுப்பில் மரகத மணி பச்சை ஒட்யாணத்தால் அலங்கரித்துக்கொண்டுஇருப்பவளுமானலக்ஷ்மியை மட்டும் தான்

நான் எப்பொழுதும் பாடுவேன்

சரணம்

வெண்மை ஓளிவிடும் தீபத்தில் வசிப்பவளும்

பூலோகத்தில் ஸ்ரீகமலாம்பிகையாக உருவெடுத்தவளும்

சகலபூதங்களும் அமைதியாக அவளிடத்தில் உறைபவளாகவும்

தேவர்களாலும் மனிதர்களாலும் பூஜிக்கப் பெற்று வரம் தருபவளாகவும்

உலகுக்கே தாயாக விளங்குபவளாகவும் தாமரைப் பூவில் அமர்ந்தவளும்

மாணிக்கம்,வைரம், முதலான நவரத்தினங்களால் அலங்கரித்துக் கொண்டு இருப்பவளும்

சங்கீதத்தையும் வேறு வேறு வத்யங்களயும் கேட்டு சந்தோஷிப்பவளாகவும்

சந்திரனனின் குளிர்ந்த கிரணங்களைப் போன்ற முகமுடையவளும்

அழகிய சிந்தாமணி மண்டபத்தில் இருக்கும் ரத்னபீடத்தில் அமர்ந்திருப்பவளும்

குருகுஹனான முருகனுக்கு மாமனான மஹாவிஷ்ணுவின் அன்பிற்கு உரியவளும்

லலிதாதேவியுமான மஹாலக்ஷ்மியைத்தவிர வேறு யாரையும் பாடமாட்டேன்
எந்த ஒரு வினைக்கும் நாம் தான் காரணம் என்ற புரிதல் ஏற்படும்போது நம்மை சுற்றி நடக்கும் அனைத்தையும் ஏற்று கொள்வீர்கள்.

கடவுளே! எனக்கு ஏன் இப்படி ஒரு வாழ்க்கை? எனக்கு ஏன் இப்படி ஒரு கஷ்டம்?

கெட்டவனெல்லாம் நல்லா இருக்கானே! என்ற எண்ணங்கள் மாறி நம்முடைய  தவறுக்கான வினைகள்தான் தற்போது நாம் அனுபவித்துவரும் கஷ்டங்கள் என்ற ஆழமான புரிதல் ஏற்படும்.

புரிதல் ஏற்படும்போது எதையும் ஏற்றுகொள்ளும் பக்குவம் வந்துவிடும். அப்படிப்பட்ட பக்குவத்தை நாம் அடையும்போது, நம்முடைய  95% கர்மங்களை நமக்காக வேறு ஒருவர் அனுபவித்து விடுவார். காரணம்!! நீங்கள் அவர்மீது கொண்டுள்ள அதிகப்படியான அசைக்க முடியாத நம்பிக்கையே ஆகும். அந்த அவர் ஏற்கனவே பிறவிகடலை கடந்தவராக இருப்பார்.

ஞானி ஒருவர் கூட்டம் நிறைந்த ஒரு தெரு வழியே சென்று கொண்டு இருந்தார். திடீர் என்று அங்கே உள்ள சாக்கடையில் குதித்துவிட்டு பக்கத்தில் உள்ள தண்ணீர் குழாயில் காலை கழுவிவிட்டு சென்றுவிட்டார்.  இதை பார்த்தவர்களுக்கு அவர் பைத்தியகாரன் என்று தோணலாம். ஆனால் அவரை பொறுத்தவரை பொருளுக்கும் அவருக்கும் தொடர்பை ஏற்படுத்தி கொள்வது ஆகும். ஆனால் அவர் ஏற்படுத்திய தொடர்பு
அவருடையது அல்ல!! அவரை நம்பி இருப்பவர்களின் கர்மவினைகளை தான் அவர் அச்செயலின் மூலம் தீர்த்து வைக்கின்றார்.

இது எப்படி சாத்தியம்?? என்ற கேள்வி வரலாம்!! அந்த ஞானியை பொறுத்தவரை அவர் செய்யும் எந்த செயலுக்கும் வினை என்ற ஒன்று ஏற்படுவது கிடையாது. காரணம்? அவர் உள்ளே வெறும் வெற்றிடம் தான் உள்ளது. அதாவது அவருக்கு மனம் என்ற ஒன்று கிடையாது!! உள்ளே சூன்யமாக தான் இருக்கும்!! அவரிடம் எந்த எண்ணங்களும் உதிப்பதும் கிடையாது!! மறைவதும் கிடையாது!! இதுவே " சும்மா இருப்பது " என்று சொல்லப்படுகின்றது.

ஒருவன் அவர்மீது கொண்டுள்ள தீவிர பக்தியால் அந்த வெற்றிடத்தில் இவனது எண்ணங்கள்சுற்றி கொண்டிருக்கும். இவனுக்கு அன்று சாக்கடையில் விழுந்து அடிபட வேண்டும் என்ற விதி இருக்கும், ஆனால் இவன் உண்மையாக இருப்பதால் இவனுக்கு பதிலாக அந்த ஞானி அந்த விதியை முடித்து வைக்கின்றார். மேலும் அவர் மீது நம்பிக்கை கொண்டுள்ள ஒவ்வொருவரின் எண்ண அலைகளும் அங்கே உள்ள வெற்றிடத்தில் சுற்றிக் கொண்டே இருக்கும்.

இவர்கள் தன் தவறை உணர்ந்து தனக்கு உண்மையாக நடக்க
தொடங்கும்போது அந்த ஞானி எதோ ஒரு செயலின் மூலம் இவர்களின் பாவபுண்ணிய கணக்குகளை அழித்துவிடுவார். முடிவில் இவர்களும் அந்த ஞானியின் நிலைக்கே வந்துவிடுகின்றனர். அதனால் தான் ஞானிகள் அருகில் இருக்கும்போது எதையும்
கேட்காதீர்கள் என்று கூறுவது.

காரணம்!! நீங்கள் கேட்டுதான் பெறவேண்டும் என்ற அவசியமே அங்கு கிடையாது. மாறாக நீங்கள் கேட்க நினைப்பது கூட சிறியதாக தான்
இருக்கும். அவர் கொடுக்க நினைப்பதோ கணக்கில் அடங்காதவையாக இருக்கும். இதற்கு அவரிடம் பூரண சரணாகதி அடைந்தலே சிறந்தது ஆகும். இதில் பூரண சரணாகதி என்பது இனி அனைத்தும் உன் செயல் என பற்றுகளை துறப்பதுவே ஆகும். "நான்" என்ற எண்ணத்திற்கு பதிலாக இனி எல்லாம் "நீ" என்ற எண்ணத்தை கொண்டு வருவதே சரணாகதி. அதற்குபிறகு  நமக்கென்று தனிப்பட்ட எந்தவொரு செயலும் இருக்காது, இருக்கவும் கூடாது. நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் அவன் செய்வதாகவே இருக்கவேண்டும்.