சனி, 7 செப்டம்பர், 2019

2. பிரபஞ்ச உற்பத்தி

மைத்ரேயருக்குப் பராசர முனிவர் புராணஞ்சொல்லத் துவங்கி, அதன் முக்கிய விஷயமான ஸ்ரீவிஷ்ணுவைப் பலவகையாகத் துதிக்கலானார். விகாரமற்றவனாய், தூய்மையானவனாய், நித்தியனாய், பரமாத்மாவாய், எப்போதும் மாறாத இயல்புடைய திவ்விய மங்களவிக்கிரகமுடையவனாய், சகலமும் ஸ்வாதீனமாய் இருக்கும்படியான ஜயசாலியான ஸ்ரீமகாவிஷ்ணுவுக்கு என் வணக்கம் உரியதாகுக! படைக்கும்போது ஹிரண்யகர்ப்ப ரூபியாகவும், காக்கும்போது ஹரிரூபியாகவும், சங்கரிக்கிறபோது சங்கர ரூபியாகவும் இருந்து வழிபடுவோருக்கு விடுதலையளிப்பவருமான ஸ்ரீவாசுதேவருக்கு என் வணக்கம் உரியதாகுக! ஒன்றாயும் பலவுமான சொரூபமுள்ளவராயும், காரணவஸ்தையிலேயே ஒன்றாய் சூட்சுமமுமாய் அவ்யக்தமுமான ரூபத்தையும் காரியாவஸ்தையிலே அநேகமாய் ஸ்தூலமாய், வியக்தமுமான ரூபத்தையும் உடையவராகி, அனாதியான பிரகிருதி வாசனையாலே, கட்டுப்பட்ட சேதனங்களுக்கெல்லாம் மோட்ச காரணமான ஸ்ரீவிஷ்ணுவுக்கு என் வணக்கம் உரியதாகுக! படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றுக்கு மூலமாய், நிமேöஷான் மேஷ சூரியகமனாதி சகல பதார்த்த ஸ்வரூபமான காலத்தையே தனது சரீரமாக உடையவராயும், அந்தக்காலத்துக்குட்படாத மேன்மையான சொரூபமுடையவராயும், சர்வ வியாபகருமானவருக்கு என் வணக்கம் உரியதாகுக! பிரபஞ்சங்களுக்கெல்லாம் ஆதாரமாய் ஆதிசூட்சுமத்துக்கும் சூட்சுமமான ரூபமாய், எல்லாவற்றினுள்ளும் அந்தரியாமியாய் பிரகிருதி சம்பந்தத்தினாலே குற்றமடையாமல் என்றும் உண்மையான ஞானத்துக்குரியவராய், கல்யாண குணங்களால் புரு÷ஷாத்தமர் என்று வழங்கப்படுபவரான எம்பெருமானைச் சேவித்தேன். தெண்டனிட்டேன். அதன் பிறகு இதனைச் சொல்லுகிறேன்.

பரமார்த்தமாக விசாரிக்குமிடத்தில் சுத்தஞான சொரூபமாய், அஞ்ஞானம், தூக்கம் ஆகியவை இல்லாத அத்தியந்த நிர்மலராய், அனாதிப் பிரகிருதி வாசனையினால் உண்டான பிரமிப்பினால் தேக இந்திரியாதிகளை ஆன்மாவாக நினைப்போருக்கு தேவ, மனுஷ்யாதி ரூபமாகத் தோன்றுபவராய், சேதனங்களிலெல்லாம் வியாபித்து, ஜகங்களைக் கிரகித்து, தனது சங்கல்ப மாத்திரத்தாலேயே, சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரங்களைச் செய்து கொண்டு, தன் திருவுளத்தாலல்லது கருமவசத்தினாலே பிறப்பு இறப்பில்லாதவருமான ஸ்ரீவிஷ்ணு பகவானை தக்ஷப்பிரஜாபதி முதலிய முனிவர்கள் சேவித்து வணங்குகிறார்கள். பிறகு அவர்கள், உலகத்துக்கெல்லாம் படைப்புக் கர்த்தராயும், எம்பெருமானின் நாபிக் கமலத்தில் உதித்தவராயும், யாவற்றின் உற்பத்தி நாசம் முதலியவற்றை அறிந்த உலகத் தந்தையாகவும் விளங்கும் பிரம்மாவினிடம் கேட்க அவர் அருளியதைச் சொல்கிறேன். பிரம்மதேவன் அருளியதை கேட்டறிந்தவர்களான தக்ஷர் முதலிய முனிவர்கள், உள்ளத் தூய்மையுடன் நர்மதை நதிக்கரையில் ஆட்சி புரிந்து வந்த புருகுத்சன் என்ற மன்னனுக்கு, தாம் பிரம்மனிடம் கேட்டவற்றைக் கூறினார்கள். அதை அந்த மன்னன் சாரஸ்வதன் என்ற முனிவருக்கு உபதேசித்தான். அந்த மாமுனிவரின் திருவருளால், நான் அவற்றை அறிந்தேன். இவ்விதமாக, ஆசாரிய பரம்பரை ரீதியில் நான் அறிந்து இந்த மகாபுராணத்தை விளக்கமாக உமக்குச் சொல்கிறேன்.

மைத்ரேயரே! சொரூப குணங்களின் மேம்பட்ட லோகாதிபதிகளுக்குள்ளே உயர்ந்தவர்களான பிரம்மாதிகளில் உயர்ந்தவரும், தன்னை விட உயர்ந்தோரில்லாத வருமாய்ப் பரமாத்மாவாய், சேதனா சேதனங்களுக்கெல்லாம் தானே ஆதாரமாய், தனக்கு வேறெதுவும் ஆதாரமில்லாதவராய் தன்னிடத்திலே தானிருப்பவராய், தேவ மனுஷ்யாதி ஜாதிகளையும் கறுப்பு வெளுப்பு முதலிய வர்ணங்களையும் கிரியைகளையும் திரவியங்களையும் சொல்கின்ற இயல்புகள் இல்லாதவராய் குறைதல். விநாசம், திரிதல், வளர்தல், பிறப்பு என்ற விவகாரங்களை விட்டிருக்கையால், சர்வகாலங்களிலும் அப்பிரமேயங்களான ஞானம், சக்தி, தேஜஸ், பலம் முதலிய ஷட்குண சொரூபத்தோடே இருப்பவர் என்று சொல்லக்கூடியவராய், தோனா சேதனங்கள் யாவற்றிலும் மேலும் கீழும் உள்ளும் புறமும் பக்கமும் தான் வசித்துக் கொண்டு சேதனா சேதனங்களும் தன்னிடத்தில் வசிக்கத்தக்கதாகிய, சர்வலோக வியாபகமான சொரூபமுடையவராய், ஒன்றிலும் ஒட்டாமல் எல்லாமே தன்னால் விளங்கும்படிப் பிரகாசிப்பவராகையால், ஸ்ரீவாசுதேவர் என்ற வேதாந்த அறிஞர்கள் கொண்டாடும்படியிருக்கிறார். சொரூபத்திலும் குணத்திலும் பெருமையுடையவர் ஆகையால் பிரமம், பரமன் என்றும் சொல்லப்பட்டு நித்தியனும் ஜனனரகிதனும் அட்சரனும் எப்பொழுதும் ஒரேவிதமான சொரூபனுமாய், துக்கம் அஞ்ஞானம் முதலிய ஈன குணங்களற்றவராகையினாலே, நிர்மலராய் தோன்றுவதும், தோன்றாததுமான சகல லோகங்களையும் சரீரமாகக் கொண்டவராய், புருஷ ரூபமாயும் கால ரூபராயும் இருக்கிற பரப்பிரம்மம் என்று சொல்லப்படும் பகவான் ஒருவர் உண்டல்லவா? அந்தப் பிரம்மத்துக்குச் சேதனமான க்ஷேத்திரக்கியன் முக்கிய சரீரம்.

அறிஞர்கள் பிரதானம், புருஷம், வியக்தம், காலம் ஆகியவை விஷ்ணுவின் தூய்மையும் மிகவுயர்வுடையதுமான நிலை என்று கருதுகின்றனர். இந்த நான்கு நிலைகளும் தக்க அளவுகளின் அமைப்புகளாகப் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றை செய்விக்கின்றன. மூலப்பிரகிருதியும், சீவனும், தேவமனுஷ்யாதி வியக்தங்களும், காலமும் வகுத்தபடியே அந்தப் பரமாத்மாவின் சிருஷ்டி, ஸ்திதி, சங்காரங்களினுடைய தோற்றத்திற்கும் விளக்கத்திற்கும் சாதனமான ரூபங்களாக இருக்கும். அது எப்படியெனில் வியக்தமான சராசரங்களும் அவ்வியக்தமான பிரகிருதியும் சேதனமான ÷க்ஷத்ரக்கியனும் களாகாஷ்டாதி ரூபமானகாலமும் ஸ்ரீவிஷ்ணுவினாலேயே தாங்கப்பட்டும் ஆளப்பட்டும் இருப்பதால் அவருக்கே சொரூபமாக இருக்கும். சகல இஷ்டங்களும் நிறைந்துள்ள அவருக்குச் சிருஷ்டி முதலியவற்றை ஏன் செய்ய வேண்டும் என்று நீங்கள் கேட்பீராயின், அதற்கு சொல்கிறேன். விளையாடும் பாலகனுக்கு அந்த விளையாட்டே பயனுவது போல, பரமாத்மாவுக்குச் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் முதலியவை விலைகளேயன்றி வேறு பயன் கிஞ்சித்தும் இல்லை என்று அறிவீராக. இனிமேல் படைப்புக் கிரமத்தைக் கேளுங்கள்: எம்பெருமானுக்குச் சரீரம் என்று எதைச் சொன்னேனோ, அந்த அவ்வியக்தமானது பிரகிருதி என்றும் பிரதானம் என்றும் மனு முதலானவர்களால் சொல்லப்படுகின்றது. அது சேதனா சேதனங்கள் அடங்கியது ஆகையால் நித்தியமாய். அளவில்லாததாய் தான் அசேதனமாகியும் மரங்களிடத்தில் அக்கினியிருப்பது போலத் தன்னிடத்திலே சேதனங்களான சீவகோடிகள் எல்லாம் இருக்கப்பெற்று, அக்ஷயமுமாய் அப்பிரமேயமுமாய் பகவானேயல்லாது வேறு ஒரு ஆதாரமுமற்றதாய், நிச்சலமாய், சப்த, ஸ்பரிச, கந்த, ரூப, ரச, கந்தங்கள் இல்லாததாய், சத்துவ, ரஜஸ், தாமச குணத்துமகமாய், ஜகத்துக்குக் காரணமாய் காரணம், உற்பத்தி, விநாசம் என்ற இம்மூன்றும் இல்லாததாக இருக்கும்.

இந்த சிருஷ்டிக்குப் பூர்வத்தில், மகாப்பிரளயமானவுடனே அதனாலேயே யாவும் வியாபிக்கப்பட்டிருந்தது. மைத்ரேயரே! வேதாந்தத் தத்துவ பிரமவாதிகள், பிரதானத்தை தெரிவிப்பதான இந்தப் பொருளையே சொல்வார்கள். எப்படியெனில், அப்பொழுது பகலும் இரவும் ஆகாயமும், பூமியும், காற்றும், நீரும், சூரிய சந்திராதி ஜோதிகளும் இருளும், சாத்துவிக, தாமச, ராஜசகுண விலாசங்களும் மற்றுமுண்டான வஸ்துக்கள் ஒன்றும் இல்லாமல் மூலப்பிரகிருதி ஒன்று மட்டுமே சமஷ்டி புருஷ ரூபமாக இருந்தது. எல்லாவற்றிற்கும் மேம்பட்டதான அந்த ஸ்ரீவிஷ்ணு ஸ்வரூபத்தினின்று, பிரதானம் என்கிற பிரகிருதியும் புருஷன் என்கிற ஆத்துமாவும் உண்டாகி, சிருஷ்டிக்கு உபயோகமான சேர்க்கையில்லாதவைகளாய், அந்த எம்பெருமானுடைய எந்த ரூபத்தினால் தரிக்கப்பட்டிருந்தனவோ அது அவருக்குக் காலம் என்கின்ற பெயரையுடையதான ஒரு சொரூபமாக இருக்கும். மைத்ரேயரே! வியக்தமான மகத்தகங்காராதிகள் அந்தப் பிரகிருதியில் இருக்கும். பிரகிருதியும் பரமாத்மாவிடத்தில் லயப்பட்டதனால் மகாப்பிரளயத்துக்குப் பிராகிருதப் பிரளயம் என்றும் பெயருண்டு. அந்தக் காலம் அனாதியானது. அந்தக் காலத்துக்கு எப்போதும் முடிவில்லாமையினாலே, சிருஷ்டி ஸ்திதி, சங்காரங்கள் அவிச்சின்ன பிரவாக ரூபமாய்ப் பிரவர்த்திக்கின்றன.

மைத்ரேயரே! பிரகிருதி சமகுணமாகவும் புருஷன் வேறாகவும் இருக்குமிடத்தில் விஷ்ணுவின் ஸ்வயரூபமான காலமானது சிருஷ்டிக்கு அனுகூலமாகப் பிரவர்த்திக்கிறது. பிறகு பரப்பிரமமும் பரமாத்மாவும் செகன்மயனும், சர்வக்தனும் சர்வபூதேஸ்வரனும் சர்வாத்மகனும், பரமேஸ்வரனுமான ஸ்ரீஹரி, தன்னிச்சையினாலேயே லீலார்த்தமாகப் பிரகிருதி புருஷர்களிடத்தில் பிரவேசித்து, ஒன்றுக்கொன்று ஏற்றத்தாழ்வில்லாமல் சமமாக இருக்கிற சத்துவ, ராஜஸ, தாமச குணங்களுக்கு வைஷம்மியங்களைக் கற்பித்து, பிரகிருதி புருஷர்களுக்குச் சலனமுண்டாக்கி அருளினார். எப்படி வாசனையானது அதிகம்பீரமான மனதுக்கு தன் சான்னித்யத்தினாலேயே விகாரத்தை உண்டு பண்ணுகிறதே அல்லாது யாதொரு தொழிலையும் செய்வதில்லையோ, அது அல்லாது யாதொரு தொழிலையும் செய்வதில்லையோ, அது போலவே பரமேஸ்வரன் தன் சான்னித்ய விசேஷத்தாலேயே பிரகிருதி புருஷர்கள் பிரபஞ்சத்தைப் படைப்பிக்கக் கலக்குகிறான். வாசனையானது மனோவிகாரத்துக்கு நிமித்தம். பரமாத்மாவோ பிரபஞ்சத்துக்கு நிமித்தகாரணம் மட்டுமல்ல தானே சலனமுண்டாக்குகிறவனாய், சலிப்பிக்கப்படுவதுமான பிரகிருதி புருஷ ஸ்வரூபமாகத் தானே ஆகின்றான். ஆகையால் உபாதான காரணமும் அவனே! சூட்சும ரூபமும் ஸ்தூல ரூபமுமான பிரகிருதியும், வியஷ்டி சமஷ்டி ரூபமான பிரம்மாதி ரூபங்களும் வியக்தமாயும் அவ்வியக்தமாயும் இருக்கின்ற பிரபஞ்சமும் மூலப்பிரகிருதியும் சர்வேசுரனாய் புரு÷ஷாத்தமானாயிருக்கின்ற விஷ்ணுவின் ஸ்வரூப மாகையினாலே, காரியமான செகத்தும் அவனன்றி வேறல்ல. இது நிற்க.

மைத்ரேயரே! ஜீவனுடைய கர்மவசத்தினாலே சலனப்பட்ட பிரகிருதியினின்றும் சத்துவ, ராஜச, தாமஸ, குண வைஷம்மிய ரூபமான மகத்தத்துவம் உற்பத்தியாயிற்று. பராத்பரனான ஸ்ரீவிஷ்ணுவினுடைய சரீரமான பிரகிருதியானது. தன்னால் உண்டான மகத்தத்துவத்தை மூடிக்கொண்டது. அந்த மகத்தத்துவம் சாத்வீக ராஜச, தாமசம் என்ற குணத்திரயத்தை கொண்டதாய், விதையானது மேற்புறம் தோலால் மூடப்பட்டிருப்பதைப் போல பிரகிருதியினால் மூடிக்கொள்ளப்பட்டது. அப்பால், அந்த மகத்தத்துவத்திலிருந்து வைகாரிகம், தைஜஸம், பூதாதிகள் என்ற மூன்றுவித அகங்காரம் பிறந்தது. அதில் சாத்விக அகங்காரம் வைகாரிகம் ஆகும். ராஜச அகங்காரம் தைஜஸம் ஆகும். தாமஸ அகங்காரம் பூதாதி என்று சொல்லப்படும். அந்த அகங்காரங்கள் திரிகுணாத்மகமான படியினாலே, பஞ்ச பூதங்களுக்கும் இந்திரியங்களுக்கும் ஏதுவாக இருக்கும். பிரகிருதியினாலே மகத்தத்துவம் மூடப்பட்டது போல அகங்காரம் மகத்தத்துவத்தினாலே மூடப்பட்டு இருந்தது அதில் பூதாதி என்று வழங்கப்பட்ட தாமச அகங்காரம் விகாரப்பட்டு, சப்த தன்மாத்திரையை உண்டாக்கிற்று. அதிலிருந்து, சப்தத்தை லக்ஷணமாகக் கொண்ட ஆகாசம் பிறந்தது. அந்த ஆகாசம் தாமச அகங்காரத்தாலே மூடிக்கொண்டது. அந்த ஆகாசம் விகாரப்பட்டு, ஸ்பரிச தன்மாத்திரையை உண்டாக்க, அதனால் காற்று தோன்றியது. அந்தக் காற்றுக்கு ஸ்பரிசம் குணமாகும். அந்த ஸ்பரிச தன் மாத்திரையான வாயுவும் ஆகாசத்தாலே மூடப்பட்டது. அந்த வாயு விகாரப்பட்டு ரூப தன்மாத்திரையை உண்டாக்கிற்று. அதனால் தேஜசு பிறந்தது. அந்த தேஜசு அசாதாரணமான குணத்தையுடையது.

ஸ்பரிச தன்மாத்திரையினாலே ரூப தன்மாத்திரையான தேஜசு மூடப்பட்டுள்ளது. தேஜசு விகாரப்பட்டு ரச தன்மாத்திரையை உண்டாக்கிற்று. அதிலிருந்து அப்பு பிறந்தது, ரச தன்மாத்திரையான அப்புவும், ரூப தன்மாத்திரையினாலே மூடப்பட்டது. அந்த அப்பு விகாரப்பட்டு, கந்த தன்மாத்திரையை உண்டாக்கிற்று. அதனால் பிருத்வி பிறந்தது. பிருதிவிக்குக் கந்தம் அசாதாரண குணமாக இருக்கும் சூட்சுமம் கண்ணுக்குப் புலனாகாதபடியினால் பஞ்சமகாபூத காரணங்களான சப்த, ஸ்பரிச, ரூப, ரச, கந்தங்களுடனே கூடிய சூட்சும பூதங்கள் தன்மாத்திரைகள் என்று சொல்லப்படும் ஸ்தூலங்களான ஆகாசாதி பூதங்களிலே சப்தாதி குணங்கள் விகசிதமாய்க் காணப்படும். தன்மாத்திரைகள் அதிநுண்ணியதாய் சரீரலகுத்துவமும், அற்புதப் பிரகாசமும், பிரசன்னத்துவமும் உண்டாக்குகிற சாந்தமான சாத்வீக குணமும், வியாகுலமும் நானாவித வியாபாரங்களும் உண்டாக்குகின்ற கோரமான ராஜசகுணமும், நித்திரையும் ஆலசியமும் உண்டாக்குகின்ற மூடமான தாமச குணமும் இல்லாதிருக்கும். இவ்விதமாக ஆகாசாதி பூதங்களும், தன்மாத்திரைகளும் பூதாதியென்று வழங்கப்படும் தாமச அகங்காரத்தால் பிறந்தன தைஜசம் என்று வழங்கப்பட்ட ராஜச அகங்காரத்தால் இந்திரியங்கள் உண்டாயின என்று சிலர் கூறுவார்கள். வைகாரிகம் என்று சொல்லப்பட்ட சாத்வீக அகங்காரத்தால் இந்திரியங்கள் பிறந்தன என்றும் சிலர் கூறுவார்கள். இந்த இரு பக்ஷங்களிலேயும் மனதுடன் பதினோரு இந்திரியங்கள் சாத்வீக அகங்காரத்திலே பிறந்தன என்பதே நிச்சயம். ராஜச அகங்காரம், சாத்வீக தாமச அகங்காரங்கள் இரண்டுக்கும் சகாயமாக இருக்கும்.

இனி, இந்த ஞானேந்திரியங்கள், கர்மேந்திரியங்கள் ஆகியவற்றின் சொரூபத்தைக் கேளுங்கள்! மெய் கண், மூக்கு, வாய், செவி என்ற இவ்வைந்தும் ஞானேந்திரியங்கள்! இவற்றுக்கு ஸ்பரிசம், ரூபம், கந்தம், ரசம், சப்தம் என்ற இவ்வைந்தும் போக்கிய பதார்த்தங்கள், வாக்கு, பாணி, பாதம், பாயு, உபஸ்தம் முதலிய ஐந்தும் கர்மேந்திரியங்கள், வசனம், கர்மம், கமனம், சொர்க்கம், ஆனந்தம், இன்னுமிவை ஐந்தும் அவ்வைந்துக்கும் காரியங்கள், ஆகாயம், வாயு, தேயு, அப்பு, பிரிதிவி என்ற பூதங்கள் தமக்கு அசாதாரண குணமான சப்த, ஸ்பரிச, ரூப ரச, கந்தங்கள், (பூமியில் ஐந்தும், நீரில் நான்கும், தீயில் மூன்றும், காற்றில் இரண்டும், வானில் ஒன்றும்) தாங்கள் மேன்மேலும் அதிகமாகப் பெற்று, அன்னியோன்னிய சையுக்தமாய்ச் சாத்வீக, ராஜச, தாமச குணாத்மகங்களான படியால், சாந்தங்களாயும் கோரங்களாயும் மூடங்களாயும் சிறப்புற்று விளங்கும். இந்த விதமாகப் பிறந்த பஞ்சபூதங்களும் நானாவித சக்தி யுக்தங்களாய் ஒன்றோடொன்று கலந்து ஐக்கியமாயின. அதெப்படியென்றால், பிரிதிவியில் அப்புவும், தேயுவும், வாயுவும், ஆகாயமும், ஜலத்தில் பூமி, தேயு, வாயு, ஆகாயமும், தேயுவில் பிருதிவி, அப்பு வாயு, ஆகாயமும், ஆகாயத்தில் பிருத்வி, அப்பு தேயு மாருதங்களும் கலந்தன. இதுவே பஞ்சீகரப் பிரகாரம் இவ்விதமாக அன்னியோன்னியமாகக் கலந்ததனாலே பிரம்மாண்டத்தைச் சிருஷ்டிப்பதற்கும் நான்குவதைப் பிறவிகளைச் சிருஷ்டிப்பதற்கும் சாமர்த்தியமுடையவைகளாய், ஜீவனுடைய கர்ம விசேஷத்தினாலும் பிரகிருதி மகத்தகங்கார தன்மாத்திரைகளின் சையோகத்தினாலும் ஈசுவர சங்கல்பத்தினாலும் பிரமாண்டத்தை உண்டாக்கின.

இப்படி, பஞ்சபூதங்களினாலே பிறந்த அந்த அண்டம் நீர்க்குமிழி போல ஒரு கணப்பொழுதிலே அபிவிருத்தியாயிற்றேயல்லாமல் கிரமக் கிரமமாக அபிவிருத்தியாகவில்லை, இவ்விதமாகப் பிரகிருதியினாலே உண்டான அதிவிசாலமான பிரமாண்டம் பிரகிருதி சரீரகரான ஸ்ரீவிஷ்ணு பகவானுக்கு லீலா ஸ்தானமாய் மகா ஜலத்திலே மிதந்து கொண்டிருந்தது. இவ்விதமாகப் பிறந்த பிரம்மாண்டத்தில் பிரகிருதி சொரூபனும் மகத்தகங்காரத் தன்மாத்திரா மகாபூத சரீரகனும் ஜகதீச்வரனுமான விஷ்ணுதேவர் சதுர்முக ஸ்வரூபமாய்த் தானே அவதரித்தார். அந்த அண்டத்துக்கு மேருமலையானது உல்ப்பம்; மற்ற மலைகள் ஜராயு; சமுத்திரங்கள் கர்ப்போதகமுமாகும். உல்ப்பம் என்றால் கருவை சுற்றியுள்ள ஆடையைப் போன்ற ஒன்றாகும். ஜராயு வென்றால் அதன்மீது சுற்றியிருக்கிற கருப்பை, கர்ப்போதகமாவது அதிலிருக்கும் தண்ணீர் அந்தப் பிரமாண்டத்தில் மலைகள், தீவுகள், சாகரங்கள் ஜோதிச் சக்கரங்கள், மனுஷ்யர், தேவர், அசுரர் ஆகியவை பிறந்தன. இப்படியுண்டான பிரம்மாண்டத்தை கவிந்து, ஒன்றுக்கொன்று தசகுணோத்தரமான சகலமும் அக்கினியும் காற்றும் ஆகாயமும் தாமச அகங்காரமும் மகத்தத்துவமாகிய சத்தாவரணங்களும் இருக்கின்றன. எப்படி தேங்காயானது நார் மட்டை ஆகியவற்றால் கவியப்பட்டிருக்கிறதோ அதுபோலவே, பிரம்மாண்டமும் சத்தாவரணங்களாலே கவியப்பட்டுள்ளது. அந்த அண்டத்தில் விசுவரூபமான நாராயணர், பிரமரூபியாகி, ரஜோகுணத்தைப் பிரதானமாகவுடையவராய் தேவ, அசுர, கந்தர்வ மனுஷ்ய, பசு, பக்ஷி தாவரங்கள் ஆகியவற்றைப் படைத்துக் கொண்டு, அப்பிரமேயப் பராக்கிரமனும் சட்குண ஐசுவரிய சம்பன்னனுமான தானே சாத்வீகக்குணப் பிரதானனாய், லீலார்த்தமாக யுகங்கள் தோறும் நானாவிதமான திவ்விய அவதாரங்களைச் செய்து கல்பாந்தர பரியந்தமும் ஜகத்தைப் பரிபாலனம் செய்து கொண்டும், பிரளய காலத்தில் தாமச குணப் பிறதானனாய் ருத்திர ரூபியாகிறான். அப்பொழுது அதிபயங்கரனாய் சராசரங்களான அகில பூதங்களையும் விழுங்கி, மூவுலகங்களையும் ஏகார்ணவமாகச் செய்து, ஸஹஸ்ர பணு மண்டல மண்டிதனான ஆதிசேடனாகிய படுக்கையில், சயனித்துக் கொண்டு பிறகு பிரளயாந்தத்தில் திரும்பவும் எழுந்திருந்து பிரமரூபியாகி, முன்போலவே, பிரபஞ்சத்தை படைத்தருள்வான்.

ஷட்குண சம்பன்னனான ஜனார்த்தனன் ஒருவன், அந்தந்தச் சொரூபங்களில் நின்று, சிருஷ்டி ஸ்திதி சங்காரங்களைச் செய்வதனால், பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் என்ற திருப்பெயர்களைப் பெறுகின்றான். அந்தப் பகவான் தானே சிருஷ்டி கர்த்தாவாக இருந்து சராசர சரீரகனாக தன்னைத் தானே சிருஷ்டித்துக் கொள்கிறேன் அப்படியே தானே காக்கின்றான். யுகமுடிவில் தானே சங்கரிக்கின்றான். ஆகையால் சிருஷ்டி கர்த்தாவாகவும் சங்கார கர்த்தாவாகவும் தோற்றுகிறவர்களுக்கும் சிருஷ்டிக்கப்படுவதும் சங்கரிக்கப்படுவதுமாகத் தோற்றுபவைகளுக்கும் தாரதம்மியம் ஒன்றும் இல்லை. ஏனெனில் பிருத்வி அப்பு, தேயு, வாயு ஆகாயங்களும் இந்திரியங்களும் மனமும் க்ஷேத்ரக்ஞனுமாகிய சக்ல பிரபஞ்சங்களும் அந்த ஸ்ரீமந் நாராயணனேயாம்! எப்படியெனில் சகல பூதங்களுக்கும் ஆன்மாவாய், எல்லாவற்றையும் தனக்கு சரீரமாகவுடையவனாகையால் கை, கால் முதலிய சரீரத்தின் செய்கை, சரீரியான ஆன்மாவுக்கு உபகாரமாவது போல, பிரம்மாதிகள் செய்கின்ற சிருஷ்டி முதலியவை யாவும் அவனுக்கு உதவியாக இருக்கும். இனிமேல், நான் சொன்னவற்றையெல்லாம் சுருக்கமாகச் சொல்கிறேன். அதாவது, சேதனாசேதனங்களான சகல பிரபஞ்சங்களும், சரீரமாயிருப்பதான சொரூபமுடையவனாகையாலே பிரமாதி ரூபங்களில், படைப்பவன் அவன் ! படைக்கப்படுபவனும் அவன்! காப்பவன்-அவன். காக்கப்படுவோனும் அவன்! சங்கரிக்கிறவன் அவன்; சங்கரிக்கப்படுகிறவனும் அவனே! ஆனால் தான் சர்வசக்தனாக இருக்கும்போது, பிரம்மாதிகளை இடையில் வைப்பது ஏனெனில் அவர்களுக்கு அப்படிச் செய்யும்படி அவனே வரங்கொடுத்திருக்கிறேன். ஆகையால் தான், மைத்ரேயரே! அந்த ஸ்ரீமகாவிஷ்ணுவே சகல விதத்திலும் உபாசிக்கத் தக்கவனாக இருக்கிறான்!
தேவர்களுக்கு இரவாகவும் உத்தராயணம் பகலுமாகவும் இருக்கும். தேவமானத்தில் பன்னீராயிரம் ஆண்டுகளானால் அது ஒரு சதுர்யுகம். அதில் கிருதயுகம் நாலாயிரமும் சந்தி, சந்தியம்சங்கள் எண்ணூறு திவ்விய சம்வச்சரமுமாக இருக்கும். திரேதாயுகம் சந்தி சந்தியம்சங்கள் உட்பட மூவாயிரத்தறு நூறு ஆண்டுகள், துவாபரயுகம் சந்தி, சந்தியம்சங்கள் உட்பட இரண்டாயிரத்து நானூறு தேவ ஆண்டுகள். கலியுகத்திற்கு ஆயிரமும் சந்தி சந்தியம்சங்களின் ஆண்டுகள் இருநூறுமாக இருக்கும் சந்தியாவது யுகத்துவக்கத்திற்கு முந்தியகாலம் சந்தியம்சமாவது யுகத்திற்குப் பிற்பட்ட காலம் சந்தி சந்தியம்சங்களுக்கு இடைப்பட்ட காலமானது, கிருத, திரேதா, துவாபர, கலி என்ற பெயர்களைப் பெற்று யுகம் என்று வழங்கப்படுகிறது. இந்த விதமான கிருதத்திரேதா துவாபர கலியுகங்கள் என்கின்ற சதுர்யுகங்களும் ஆயிரந்தரம் திரும்பினால் சதுர்முகனாகிய பிரமனுக்கு ஒரு பகல் என்று சொல்லப்படும். அந்த சதுர்முகனுடைய தினத்தில் பதினான்கு மநுக்கள் அதிகாரம் செய்வார்கள். இனி அந்த மநுவந்தரப் பிராமணத்தைக் கூறுகிறேன், கேட்பீராக;

மைத்ரேயரே! சப்தரிஷிகளும், வசு, ருத்திராதியர் ஆகிய தேவதைகளும், இந்திரன் மநுக்கள், மநு புத்திரரான அரசர்கள் ஆகியவர்களும் ஏககாலத்தில் சிருஷ்டிக்கப்படுவார்கள். ஏககாலத்திலே சங்கரிக்கப்படுவார்கள். தேவமானத்தில் எழுபத்தோரு மகாயுகம் ஒரு மநுவந்தரம் என்று சொல்லப்படும். இந்திராதி நூறு தேவதைகளுக்கும் மநுக்களுக்கும் இதுவே ஆயுட் பிரமாணமாகும். ஒரு மநுவந்தரத்துக்கு தேவமானத்தில் எட்டு லட்சத்து ஐம்பத்தீராயிரம் ஆண்டுகள் அளவாகும். அது மனுஷிய மானத்தினாலே, முப்பது கோடியும் அறுபத்தேழு லட்சத்து இருபதினாயிரம் ஆண்டுகள் ஆகும். இப்படிப் பதினாலு மநுவந்தரங்களானால் பிரமனுக்கு ஒரு பகல் இதன் முடிவில் ஒரு நைமித்திகப் பிரளயம் உண்டாகும். அந்தத் தினப் பிரளயத்தில், பூலோக, புவர்லோக சுவர் லோகங்கள் தகிக்கப்பட்டு நாசமடையும் அப்போது மகர் லோகத்தில் வாசஞ் செய்பவர்கள், அந்தப் பிரளயாக்கினி ஜ்வாலையின் கனல் வேகத்தைப் பொறுக்க முடியாமல் தங்கள் லோகத்தைவிட்டு ஜனலோகத்துக்குச் செல்வார்கள். அதன் பிறகு, சப்த சாகரங்களும் பொங்கித் திரிலோகங்களையும் ஏகார்ணவஞ் செய்யும் அந்தச் சமயத்தில் நாராயணாத் மகனான ஹிரண்யகர்ப்பன், திரிலோகங்களையும் விழுங்கிய எம்பெருமானுடைய அநுப்பிரவேசத்தினால் பருத்தவனாகி, அவனுடைய நாபிக்கமலத்தில் இருப்பதால், ஆதிசேடனாகிய சயனத்தில் சயனித்துக் கொண்டு ஜனலோக நிவாசிகளான யோகிகளால் தியானிக்கப்பட்டவனாய், முன்பு சொன்ன பகல் ராத்திரியளவு யோக நித்திரை செய்தருளுவன். இதுபோல் ஆயிரம் சதுர்யுகப் பிரமாணமான ராத்திரியும் கடந்த பிறகு பிதாமகன் மீண்டும் சராசரங்களை படைப்பான். இப்படிப்பட்ட தினங்களைக் கொண்ட ஆண்டுகள் நூறு ஆனால் சதுர்முகப் பிரமனின் ஆயுள் முடியும் அதில் ஐம்பது ஆண்டுகள் பரார்த்தம் என்று சொல்லப்படும். முன்பு ஒரு பரார்த்தமாயிற்று. அது பிரமனின் ஆயுளில் பாதியாகும். இப்போது இரண்டாவது பரார்த்தம் நடக்கிறது. இதுவராக நாமகமான முதலாவது கல்பமாகும். இது ஸ்ரீவராக கல்பம்!
விஷ்ணு புராணம் முதல் அம்சம்(பகுதி-1)

                           1. புராணம் கேட்ட வரலாறு

18 புராணங்களில் மூன்றாவதாக கருதப்படுவது விஷ்ணு புராணம். இது 23,000 ஸ்லோகங்கள் கொண்டது. ஒருநாள் அதிகாலையில் பராசர முனிவர், காலைக்கடன்களை முடித்துக் கொண்டு, பத்மாசனத்தில் வீற்றிருந்தார். அப்போது மைத்ரேய முனிவர் அங்கு வந்து அவரை வணங்கிக் கூறலானார். என் குருநாதரே! அடியேன் சகல வேதங்களையும் சகல தரும சாஸ்திரங்களையும் வேதாகமங்களையும் தங்களமிடமிருந்தல்லவா கற்றறிந்தேன்? சாஸ்திரங்கள் யாவற்றையும் கற்ற அறிஞர்கள் அனைவரும் என்னைத் தங்களுடைய அனுக்கிரகத்தினாலே சகல சாஸ்திரங்களிலேயேயும் நல்ல பயிற்சி பெற்றவன் என்று சொல்வார்கள். தருமங்கள் அனைத்தையும் அறிந்தவரே! உலகம் உண்டான விதத்தையும் இனி உண்டாகப்போகும் விதத்தையும் நான் அறிய விரும்புகிறேன். தாங்கள் அருள்புரிய வேண்டும்! மேலும், இந்த உலகம் எல்லாம் எந்த வஸ்துவின் சொரூபமாக இருக்கிறது? எங்கிருந்து எப்படி உண்டாயிற்று? எப்படி எங்கே லயப்பட்டது? இனி எங்கே லயமாகும்? நிலம், நீர், நெருப்பு, காற்று, விசும்பு எனும் ஐந்து பருப்பொருட்களில் (பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் என்னும் பஞ்சபூதங்களின் நிலை என்ன? எதனால் அவை விளங்கும்? இவ்விஷயங்களையும் தேவதைகள் முதலானவருடைய உற்பத்தியையும், மலைகள், கடல்கள் இவற்றின் தோற்றத்தையும் பூமியிருக்கும் விதத்தையும் சூரியன், சந்திரன், கோள்கள் ஆகியவற்றின் நிலையையும் அளவுகளையும் தேவர்களின் வம்சங்களையும், மனுக்களையும், மனுவந்தாரங்களையும், மகாகல்பங்களையும், நான்கு யுகங்களால் விகற்பிக்கப்பட்டவையான கல்பங்களின் பிரிவுகளையும் அவற்றின் முடிவு நிலைகளையும், சகல யுகதர்மங்களையும் தங்களிடமிருந்து அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

ஓ முனிவரில் உயர்ந்தவரே! தேவர்கள், அரசர்கள், முனிவர்கள் முதலானவர்களின் வரலாறுகளையும் வியாச முனிவர் வகுத்தருளிய வேதசாகைப் பிரிவுகளையும் பிராமணன் முதலிய வருணங்களின் குலதர்மங்களையும், பிரமச்சரியம் முதலான நான்கு ஆச்சிரமங்களின் தருமங்களையும் தங்களிடமே நான் கேட்க விரும்புகிறேன். வசிஷ்ட முனிவரின் மகனான சக்தியின் குமாரரே! இவ்விஷயங்கள் யாவற்றையும் எனக்கு கூறியருள தாங்கள் திருவுள்ளங்கொள்ள வேண்டும். இவ்வாறு மைத்ரேய முனிவர் பராசர முனிவரை வேண்டினார். அதற்குப் பராசர முனிவர், அவரை நோக்கிக் கூறலானார். தருமங்களையெல்லாம் அறிந்துள்ள மைத்ரேயரே! உலகஉற்பத்தி முதலியவற்றை அறிந்துள்ள என் பாட்டனாரான ஸ்ரீவசிஷ்ட பகவான் எனக்கு அருளிச்செய்த முன் விருத்தாந்தத்தை நீர் எனக்கு மீண்டும் நினைப்பூட்டினீர். அதாவது, முன்பு ஒரு சமயம், விசுவாமித்ரரால் ஏவப்பட்ட அரகன் ஒருவன் என் தகப்பனாரைப் பழித்தான் என்ற சங்கதியை அறிந்தேன். உடனே மிகவும் கோபம் அடைந்து அந்த அரக்கர்களை அழியச் செய்யும்படியான யாகம் ஒன்றைச் செய்யத் துவங்கினேன். அந்த யாகத்தினால் பல்லாயிரம் அரக்கர்கள் அழிந்தார்கள். அதைக்கண்ட என் பாட்டனாரான வசிஷ்ட முனிவர், பிள்ளாய் உன் கோபத்தை விட்டுவிடு. அரக்கர்கள் மீது குற்றம் இல்லை. உன் தகப்பன் மாய்வதற்கு அப்படிப்பட்ட விதியிருந்தது. இத்தகைய கோபம் மூடருக்குத்தான் தோன்றுமே ஒழிய ஞானியருக்குக் கோபம் வராது குழந்தாய்! யாரால் யார் கொல்லப்படுகிறான்? ஒருவனால் மற்றொருவன் கொல்லப்படுவதில்லை. அவனவன் தான் செய்த பாவ புண்ணியங்களையே புசிக்கிறான். மனிதன் மிகவும் வருந்திச் சம்பாதித்த புகழையும் தவத்தையும் அவனுடைய கோபமானது அழித்து விடுகிறது. சொர்க்கம் மோட்சம் ஆகிய இரண்டையும் கொடுப்பதற்குக் காரணமாகிய கோபத்தை முனிவர்கள் அனைவருமே விட்டு விடுகிறார்கள்.

ஆகையால், பேரனே! நீ அந்தக் கோபத்திற்கு வசப்பட்டு விடாதே! எந்தவிதமான அபராதமும் செய்வதறியாத பேதையரான அரக்கர்களில் அநேகர் இதுவரை எரிந்துபோனது போதும்! இனி இந்த யாகத்தை நிறுத்திவிடு. பெரியோருக்குப் பொறுமையாக இருப்பதே சிறந்த ஆசாரமாகும்! என்றார் நானும் அவருடைய வாக்குக்கு மதிப்பளித்து, என் யாகத்தை நிறுத்தி விட்டேன் அதனால் வசிஷ்ட முனிவர் மகிழ்ச்சியடைந்தார். அப்போது பிரம்ம புத்திரரான புலஸ்திய முனிவர் அங்கு வந்தார். அவர் வந்ததும் என் பாட்டனார் அவருக்கு ஆசனமும், அர்க்கியமும் (இருக்கையும் திருவடி கழுவுதலும்) கொடுத்து உபசரித்தார். மைத்ரேயரே! புலசு முனிவருக்கு தமையனாரான அந்த புலஸ்திய முனிவர் என்னை நோக்கி, பராசரர்! உனக்கு பெருங்கோபமும் வைரமும் இருந்துங்கூட குருவாக்கிய பரிபாலனத்திற்காக, பொறுமையடைந்தாய். ஆகையால் இனிமேல் நீ சகல சாஸ்திரங்களையும் அறியக்கடவாய். கோபத்தால் நமது சந்ததியாரை அழியாமற்செய்த உன் பொறுமையின் பெருமையை பாராட்டி, உனக்கு நாங்கள் வேறொரு வரந்தருகிறோம். அதாவது நீ புராண சம்ஹிதையைச் செய்யும் சக்தியுடையவனாகக் கடவாய்! தேவதையின் உண்மை இயல்புகள் அதாவது இதுதான் மேலான தேவதை என்பதை நீ அறியக்கடவாயாக பிரவிருத்தி, நிவர்த்தி (முயற்சி, நீக்கம்) என்ற இருவகைக் கருமங்களிலேயும் உன் புத்தியானது எமது அனுக்கிரகத்தில் நிலைத்தும், சந்தேகமற்றும் விளங்குவதாக! என்று கூறினார். அவர் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்த வசிஷ்ட முனிவர். என்னைப் பார்த்து பராசரா! புலஸ்தியர் அருளியவை, உனக்குச் சித்தியாகட்டும்! என்றார்.

இவ்விதமாக மகாஞானியரான புலஸ்தியராலும் வசிஷ்டராலும் கூறப்பட்டவையெல்லாம் இப்போது நீர் கேட்ட கேள்விகளால் மீண்டும் என நினைவுக்கு வந்தன. மைத்ரேயரே! பெரியோரின் அருள்பெற்றதால் சிறப்பான ஞானம் பெற்ற நான், யாவற்றையும் உமக்குக் கூறுகிறேன். நன்றாகக் கேளும். புராணக்கருத்தின்படி பார்த்தால், உலகமானது ஸ்ரீவிஷ்ணுவினாலேயே உண்டாக்கப்பட்டு, அவரிடத்திலே தான் இருக்கிறது. தொடர்புக்கும் முடிவுக்கும் அவரேதான் கர்த்தாவாகும். இந்த உலகங்கள் எல்லாம் அவராலேயே வியாபிக்கப்பட்டு, அவருடைய சொரூபமாகவே இருக்கின்றன. அவரேதான் உலகம்! இவ்வாறு மைத்ரேய முனிவரின் கேள்விகளுக்கு பராசர மகரிஷி சுருக்கமாகப் பதில் சொன்னார்.
பக்தி கதைகள்

உயர்ந்தவரென்ன..தாழ்ந்தவரென்ன!

கங்கைக்கரையில் பண்டிதர் ஒருவர் இருந்தார். சாஸ்திர ஞானம் மிக்க அவருக்கு மற்றவர்களைக் கண்டால் பிடிக்காது. தான் மட்டுமே கடவுள் வழிபாட்டுக்குத் தகுதியானவர் என்ற அகங்காரம் அவருக்கு உண்டு. ஒருநாள் கங்கையில் நீராடச் சென்று கொண்டிருந்தார். வழியில் பண்டிதரின் செருப்பு அறுந்து விட்டது. உடனே, செருப்பு தைக்கும் தொழிலாளியை நாடினார். ஏய்! இதை உடனே தைத்துக் கொடு என்றார் அதிகாரமாக. அவனும் கச்சிதமாகத் தைத்துக் கொடுத்தான். காலில் அணிந்த பண்டிதர், கூலிக் காசை விட்டெறிந்தார். ஐயா! எனக்கு காசு தேவையில்லை, என்றான்.காசில்லாமல் குடும்பம் எப்படி நடத்துவாய்? என்றார் பண்டிதர் அலட்சியமாக.இதை நீங்களே எடுத்துக் கொள்ளலாம். அதற்குப் பதிலாக எனக்கொரு உதவி மட்டும் செய்தால் போதும்.சொல்லேன் பார்க்கலாம்! என்றார் பண்டிதர்.நீங்கள் நீராடும் போது கங்கா மாதாவுக்கு இந்த வெற்றிலை,பாக்குகளை என் சார்பாக அர்ப்பணியுங்கள். காசை எறிந்தது போல வீசி விடாதீர்கள்.

அன்னையின் கையில்  சேர்த்து விடுங்கள், என்று வேண்டினான்  தொழிலாளி.பண்டிதர் வெற்றிலை பாக்குடன் கங்கையில் இறங்கினார். என்ன அதிசயம்! கங்கா மாதா நேரில் தோன்றி, தன் கைகளை நீட்டி, என் பக்தன் எனக்கு அன்புடன் அளித்த வெற்றிலை பாக்கைத்தாருங்கள், எனக் கேட்டு வாங்கிக் கொண்டாள்.  பிரமித்துப் போனார் பண்டிதர். இன்னொரு  ஆச்சரியமும் நடந்தது. தான் அணிந்திருந்த ஒரு  நவரத்தின வளையலை, பண்டிதரிடம் கொடுத்து, இதை செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் கொடுத்து விடுங்கள், என சொல்லி மறைந்தாள். அதைப் பெற்றுக்கொண்ட பண்டிதரின்  புத்தி மாறியது.வேலைப்பாடு மிக்க இந்த வளையல்  அந்த தொழிலாளிக்கு எந்த  வகையில் பெருமை தரப்  போகிறது? நம் வீட்டுக்குச் சென்று மனைவியிடம்  கொடுத்தாலாவது மனம்  மகிழ்வாள் என்று எண்ணினார். அதன்படியே அவரது  மனைவியிடம் கொடுத்து விட்டார். பண்டிதரின் மனைவி, அதைஅணிந்து கண்ணாடியில் அழகு பார்த்தாள். அதேநேரம் பண்டிதரிடம்,  ஊரில் உள்ளவர்கள் எப்படி இந்த வளையல் கிடைத்தது என்று கேட்டால் என்ன செய்வது? அதனால், இதை உடனே விற்று பணமாக்குங்கள், என்றாள்.

ராஜாவுக்கு ஆபரணம் செய்யும் அரண்மனைப் பொற்கொல்லரிடம் சென்றால் அதிக விலைக்கு விற்கலாம் என்ற எண்ணத்துடன் புறப்பட்டார் பண்டிதர். பொற்கொல்லர் மூலம் வளையலைப் பெற்ற ராணிக்கு மிகவும் பிடித்துப் போனது. இரண்டு வளையல்களாக இருந்தால் அணிந்து கொள்ள வசதியாக இருக்குமே! என்றாள் ராணி. ராஜாவும் வளையலை விற்க வந்த பண்டிதரை அழைத்து,  ஜோடி வளையலையும் இப்போதே கொண்டு வா! இல்லாவிட்டால் தண்டனைக்கு ஆளாவாய்! என்று கட்டளையிட்டான்.வேறு வழி தெரியாமல் செருப்பு தைக்கும் தொழிலாளியின் உதவியை நாடினார் பண்டிதர். பாவம் பண்டிதர் பிழைத்து விட்டுப் போகட்டும் என்று இரக்கப்பட்ட தொழிலாளி, மீண்டும் வெற்றிலை, பாக்கை அளித்து கங்கைக்கு அர்ப்பணிக்க கூறினார். அதன்படியே செய்ய கங்கையும் நேரில் தோன்றி இன்னொரு வளையலையும் வழங்கி மறைந்தாள். பண்டிதர்அதை மன்னரிடம் கொடுத்து தண்டனையில் இருந்து தப்பினார். மனம் திருந்திய பண்டிதர், தன்னை மன்னிக்கும்படி தொழிலாளியிடம் வேண்டினார். அதற்கு தொழிலாளி, பண்டிதரே! பிறப்பாலும், படிப்பாலும்  ஒருவருக்கு பெருமை உண்டாவதில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்,என்றார்.

படித்ததில் பிடித்தது!
5. ஓங்கார தியானம்

பிரச்ன உபநிஷதம் கூறுகின்ற சாதனைப் பகுதிக்கு வருகிறோம். உலகைப்பற்றி, உலகை இயக்குகின்ற பிராணனைப்பற்றி, மனிதனைப்பற்றிய ஆராய்ச்சிகளுக்குப் பிறகே சாதனைப் பகுதி வருகிறது. இது மிகவும் கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

இந்த உபநிஷதத்தில் வருகின்ற 6 பேரும் இறை நாட்டம் உடையவர்கள், இறையுணர்வில் நிலைபெற்றவர்கள்(1:1). அவர்கள் உதவிக்காக நாடிய பிப்பலாதர் தெய்வமுனிவர்(1:1). அவர்கள் உலகைப்பற்றியும் மனிதனைப்பற்றியும் ஆராய்ச்சி செய்கிறார்கள். இறை வாழ்வு, ஆன்மீக வாழ்வு, அல்லது தெய்வீக வாழ்வின் ஓர் அடிப்படை நிபந்தனையை இங்கே நாம் காண்கிறோம். இறை வாழ்வை நாடுபவர்களுக்கு தன்னைப்பற்றி, தன்மீது செயல்படுகின்ற சக்திகளைப்பற்றிய அறிவு அத்தியாவசியமானது. அவற்றை அறிந்து அவற்றைச் சாதகமாக மாற்றியமைப்பதால் ஆன்மீக வாழ்வில் விரைந்து முன்னேறலாம் என்பது இங்கே உணர்த்தப்படுகிறது. எனவே உலகைப்பற்றியும் நம்மைப்பற்றியும் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு விடையளித்த பிறகு சாதனைப் பகுதிக்கு நம்மை அழைத்துச் செல்கிறது உபநிஷதம். இந்த உபநிஷதம் காட்டும் சாதனை ஓங்கார தியானம்.

இறைவனைக் குறிப்பிட ஒரு சொல் இருக்குமானால் அது ஓம்( தஸ்ய வாசக ப்ரணவ- யோக சூத்திரங்கள், 1:27) என்கிறார் பதஞ்ஜலி முனிவர். இதனை விளக்குகிறார் சுவாமி விவேகானந்தர்: இந்தச் சொல்லை அவர் (பதஞ்சலி முனிவர்) ஏன் வற்புறுத்திக் கூற வேண்டும்? கடவுளைக் குறிக்க நூற்றுக்கணக்கான சொற்கள் உள்ளன... எல்லா ஒலிகளும் பிறக்கக் கூடியதும் மிகவும் இயற்கையானதுமான ஓர் ஒலி இருக்கிறதா?ஆம் அத்தகைய ஒலி ஓம்.

ஓங்கார மந்திரத்தை ஜபிப்பது, அதனைத் தியானிப்பது போன்றவற்றைப் பொதுவாக நாம் அறிவோம். அது ஓங்கார தியானத்தின் சாதாரண பரிமாணம் மட்டுமே. அதற்கு உயர் பரிமாணம் ஒன்று உள்ளது. அதை இந்த உபநிஷதம் கூறுகிறது. பொதுவாக, ஓங்கார தியானமும் ஜபமும் ஒரு மனப் பயிற்சியாகச் செய்யப்படுகிறது. ஆனால் ஓங்கார மந்திரத்தின் உயர் பரிமாணம் கர்ம, பக்தி, ஞான யோகங்களையும் அவற்றின் சமரசத்தையும் உள்ளடக்கிய ஒரு வாழ்க்கை முறையாக விரிகிறது.

ஓங்கார தியானம்: இரண்டு பரிமாணங்கள் 1-2

1. அத ஹைனம் சைப்ய: ஸத்யகாம பப்ரச்ச
ஸ யோ ஹ வை தத்பகவன் மனுஷ்யேஷு ப்ராயணாந்தம்
ஓங்காரமபித்யாயீத கதமம் வாவ ஸ தேன லோகம் ஜயதீதி

அத ஹ-பிறகு; சைப்ய-சிபியின் மகனான; ஸத்ய காம-சத்தியகாமன்; ஏனம்-அவரிடம்; பப்ரச்ச-கேட்டார்; பகவன்-தெய்வ முனிவரே; மனுஷ்யேஷு-மனிதர்களில்; ஸ ய-யார்; ப்ராயணாந்தம்-வாழ்நாள் முழுவதும்; தத்-அந்த; ஓங்காரம்-ஓங்கார மந்திரம்; அபித்யாயீத-ஆழ்ந்து தியானிக்கிறானோ; ஸ-அவன்; தேன-அதனால்; கதமம்-எந்த லோகம்-நிலையை; ஜயதி-அடைகிறான்; இதி-என்று.

பொருள் : பிறகு சிபியின் மகனான சக்தியகாமன் பிப்பலாத முனிவரிடம் கேட்டார்; தெய்வ முனிவரே வாழ்நாள் முழுவதும் ஓங்கார மந்திரத்தை ஆழ்ந்து தியானிப்பவன், எந்த நிலையை அடைகிறான்?

2. தஸ்மை ஸ ஹோவாச
ஏதத் வை ஸத்யகாம பரம் சாபரம் ச ப்ரஹ்ம யதோங்கார
தஸ்மாத் வித்வான் ஏதேனைவ ஆயதனேன ஏகதரம் அன்வேதி

தஸ்மை-அவரிடம்; ஸ-முனிவர்; உவாச ஹ-கூறினார்; ஸத்யகாம-சத்தியகாமா; ஏதத் வை-இது; பரம்-உயர் நிலை; அபரம் ச-சாதாரண நிலை; ப்ரஹ்ம-இறைவன்; யத்-எது; ஓங்கார-ஓங்காரம்; தஸ்மாத்-எனவே; வித்வான்-மகான்; ஏதேன-இந்த; ஆயதனேன-வழியால்; ஏகதரம்-இரண்டில் ஒன்றை; அன்வேதி-அடைகிறார்.

பொருள் : சத்தியகாமனிடம் பிப்பலாத முனிவர் கூறினார்: சத்தியகாமா, உயர் நிலை, சாதாரண நிலை என்று இறைவனின் இரண்டு நிலைகளாக இருப்பது இந்த ஓங்கார மந்திரம். எனவே அதனைத் தியானிக்கின்ற மகான், அதற்கேற்ப, இந்த இரண்டு நிலைகளில் ஒன்றை அடைகிறார்.

இறைவனுக்கு இரண்டு நிலைகள்-உருவமற்ற நிலை, உருவ நிலை. உருவமற்ற நிலை என்பது உயர் நிலை. உருவம் இல்லாத, குணங்கள் அற்ற, சிந்தனைக்கு எட்டாத நிலை அது. மிக உயர்ந்த நிலையிலுள்ள மிகச்சிலரே அந்த நிலையில் இறைவனை வழிபடவும் தியானிக்கவும் வல்லவர்கள். சாதாரண நிலையில், இறைவன் நம்மால் சிந்திக்கத்தக்க ஓர் உருவில் பல்வேறு மங்கலமான குணங்களுடன் உள்ளார். சிவன், விஷ்ணு, தேவி என்று பல்வேறு வடிவங்களில் நாம் அவரையே வழிபடுறோம். பொதுவாக, நம்மால் இந்த நிலையிலேயே இறைவனை வழிபட முடியும். இறைவனைப் போலவே ஓங்காரமும் உயர் நிலையிலும், சாதாரண நிலையிலும் தியானிக்கப்படுகிறது. வாழ்நாள் முழுவதும் ஒருவர் எப்படி அதனை தியானித்துப் பழகியிருக்கிறாரோ, அவர் அடைகின்ற நிலை அதற்கேற்ப அமையும். தொடர்ந்து இந்தக் கருத்து விளக்கப்படுகிறது.

இந்த உபநிஷதத்தில் ஓங்கார தியானத்தின் உயர் பரிமாணம் மட்டுமே விளக்கப்படுகிறது.

உயர் பரிமாண ஓங்கார தியானத்தின் வகைகளும் பலன்களும்(3-5)

அ, உ, ம் என்ற மூன்று எழுத்துக்களின் சேர்க்கையால் அமைந்தது ஓம் எனப்படும் ஓங்கார மந்திரம். இந்த எழுத்துக்கள் ஒவ்வொன்றும் மாத்திரை எனப்படுகின்றன. இவ்வாறு மூன்று மாத்திரைகள் சேர்ந்தது ஓங்கார மந்திரம்.

இந்த ஓங்கார மந்திரமே முதன்முதலாகப் படைக்கப்பட்டது. இந்த மந்திரத்தின் விரிவே ஓம் தத் ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந ப்ரசோதயாத் என்னும் காயத்ரீ மந்திரம். (திரண்ட பொருள்: யார் நமது புத்தியைத் தூண்டுகிறாரோ, அனைத்தையும் படைப்பவரான அந்த தெய்வத்தின் சிறந்த ஒளி வடிவை தியானிப்போம். அ விலிருந்து தத் ஸவிதுர் வரேண்யம் என்ற பகுதியும், உ விலிருந்து பர்கோ தேவஸ்ய தீமஹி என்ற பகுதியும், ம் மிலிருந்து தியோ யோ ந; ப்ரசோதயாத் என்ற பகுதியும் வெளிவந்தன. காயத்ரீ மந்திரத்தின் முதல் பகுதியிலிருந்து ரிக்வேதமும், 2-ஆம் பகுதி யஜுர் வேதமும், 3-ஆம் பகுதியிலிருந்து சாம வேதமும் தோன்றின.

ரிக் வேதம் ஸ்துதிபரமானது, அதாவது துதிகளால் அமைந்தது. யஜுர் வேதம் கிரியாபரமானது, அதாவது யாகங்கள் போன்ற கிரியைகள் நிறைந்தது. சாம வேதம் ஞானபரமானது. அதாவது ஞான நெறியை அதிகம் வற்புறுத்துவது. இதன்படி, ரிக்வேதம்  பக்தியோகத்தையும், யஜுர் வேதம் கர்மயோகத்தையும், சாம வேதம் ஞான யோகத்தையும் குறிப்பதாகக் கொள்ளலாம்.

இந்த அடிப்படையில் இங்கே ஓங்கார தியானம் விளக்கப்படுகிறது. முதல் மாத்திரையைத் தியானிப்பது, அதாவது பக்தியோக சாதனைகள் செய்வது முதல் வகை(3). இரண்டு மாத்திரைகளைத் தியானிப்பது, அதாவது பக்தி யோகத்துடன் கர்மயோகச் சாதனைகளையும் உரிய முறையில் இணைத்துச் செய்வது இரண்டாம் வகை(4). மூன்று மாத்திரைகளையும் சேர்த்து தியானிப்பது, அதாவது பக்தி, கர்ம, ஞான யோகங்களின் சமரச சாதனையே மூன்றாம் வகை. இந்தச் சாதனைகளையும் அவற்றினால் கிடைக்கின்ற பலன்களையும் இந்த மந்திரங்கள் கூறுகின்றன.

ஓங்கார தியானம்: முதல் வகை

3. ஸ யத்யேகமாத்ரம் அபித்யாயீத ஸ தேனைவ
ஸம்வேதிதஸ்தூர்ணமேவ ஜகத்யாமபிஸம்பத்யதே
தம்ரிசோ மனுஷ்யலோகமுபநயந்தே ஸ தத்ர தபஸா
ப்ரஹ்மசர்யேண ச்ரத்தயா ஸம்பன்னோ மஹிமானமனுபவதி

ஸ-அவன்; ஏகமாத்ரம்-முதல் மாத்திரை; யதி-அபித்யாயீத-ஆழ்ந்து தியானித்தால்; ஸ-அவன்; தேன ஏவ-அதனாலேயே; ஸம்வேதித-உணர்வொளி பெற்று; தூர்ணம் ஏவ-விரைவிலேயே; ஜகத்யாம்-உலகில்; அபிஸம்பத்யதே-திரும்பி வருகிறான்; தம்-அவளை; ரிச-ரிக்வேத தேவதைகள்; மனுஷ்யலோகம்-மனித உலகிற்கு; உபநயந்தே-கொண்டு வருகின்றன; ஸ-அவன்; தத்ர-அங்கே; தபஸா-தவத்துடனும்; ப்ரஹ்மசர்யேண-பிரம்மச்சரியத்துடனும்; ச்ரத்தயா-ஆழ்ந்த நம்பிக்கையுடனும்; ஸம்பன்ன-நிறையப் பெற்றவனாக; மஹிமானம்-மகிமையை; அனுபவதி-அனுபவிக்கிறான்.

பொருள் : ஓங்காரத்தின் முதல் மாத்திரையை ஆழ்ந்து தியானிப்பவன் உணர்வொளி பெறுகிறான். விரைவிலேயே உலகிற்குத் திரும்பி வருகிறான். ரிக்வேத தேவதைகள் அவனை மனித உலகிற்குக் கொண்டு வருகின்றன. அவன் இங்கே தவம், பிரம்மச்சரியம், ஆழ்ந்த நம்பிக்கை ஆகியவை நிறையப் பெற்றவனாக மகிமையை அனுபவிக்கிறான்.

ஓங்கார மந்திரத்தின் முதல் மாத்திரையைத் தியானிப்பவன், அதாவது பிரார்த்தனைகள், ஜபம், துதிகள், தோத்திரங்கள் போன்ற பக்தியோக சாதனைகளில் ஈடுபடுபவனை இந்த மந்திரம் குறிப்பிடுகிறது. அவன் உணர்வொளி பெறுகிறான். அதாவது, அவனுக்குச் சாதாரண வாழ்க்கை, இந்த உலகம் போன்ற உண்மைகளைக் கடந்த உயர் உலகங்கள், இறைவன் போன்ற உண்மைகள் தெளிவாகின்றன. இது கற்றறிவு, கேட்டறிவு போன்று புறத்திலிருந்து பெறப்படும் அறிவு அல்ல. அகவுணர்விலேயே கிடைக்கின்ற அனுபவம் ஆகும்.

உயர்வாழ்வில் இந்த அனுபவம் முதற்படி என்றாலும் ஆழ்ந்து தியானிப்பவனுக்கே இது வாய்க்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். காற்றில்லாத இடத்தில் எரிகின்ற தீபம்போல் மனம் வேறு எதனையும் நினைக்காமல், தியானப்பொருளை மட்டுமே இடையீடின்றி சிந்திப்பது தான் ஆழ்ந்த தியானம். (ஆத்மப்ரத்யய ஸந்தான அவிச்சேதோ பின்னஜாதீய ப்ரத்யய அந்தராகிலீக்ருதோ நிர்வாதஸ்த தீபசிகாஸமோ பித்யான சப்தார்த்த 5:1 விளக்கவுரையில் ஸ்ரீசங்கரர்). பிரார்த்தனைகள், ஜபம், தியானம் போன்றவற்றை ஆழ்ந்த மன ஒருமைப்பாட்டுடன் செய்தால் மட்டுமே இந்தப் பலன் கிடைக்கும் என்பது பொருள்.

இத்தகையவன் மரணத்திற்குப் பிறகு நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதில்லை. அவனுக்கு அடுத்த பிறவி விரைவிலேயே வாய்க்கிறது. அந்தப் பிறவியில், அவன் உயர்வாழ்க்கைக்கான சாதனைகளைத் தொடர்வதற்கு ஏற்ற சூழ்நிலையில், உரிய மனநிலையுடன் பிறக்கிறான். தவம், பிரம்மச்சரியம், நம்பிக்கையுடன் கூடிய செயல்பாடு போன்றவை அவனுக்கு இயல்பாகவே வாய்க்கின்றன.

ஓங்கார தியானம்: 2 ஆம் வகை

4. அத யதி த்விமாத்ரேண மனஸி ஸம்பத்யதே ஸோந்தரிக்ஷம்
யஜுர்பிருன்னீயதே ஸோமலோகம்
 ஸ ஸோமலோகே விபூதிமனுபூத புனராவர்த்ததே

அத-மேலும்; யதி த்விமாத்ரேண-இரண்டு மாத்திரைகள்; மனஸி-மனத்தில்; ஸம்பத்யதே-வளம் பெறுகிறான்; ஸ-அவன்; யஜுர்பி-யஜுர்வேத தேவதைகளால்; அந்தரிக்ஷம்-இடைவெளியிலுள்ள; ஸோமலோகம்-சந்திர லோகத்திற்கு; உன்னீயதே-அழைத்துச் செல்லப்படுகிறான்; ஸ-அவன்; ஸோமலோகே-சந்திர லோகத்தில்; விபூதிம்-இன்பங்களை; அனுபூய-அனுபவித்து; புன-மீண்டும்; ஆவர்த்ததே-பிறக்கிறான்.

பொருள் : ஓங்கார மந்திரத்தின் இரண்டு மாத்திரைகளை ஆழ்ந்து தியானிப்பவன் மனவளம் பெறுகிறான். மரணத்திற்குப் பிறகு, யஜுர்வேத தேவதைகள் அவனைச் சந்திரலோகத்திற்கு அழைத்துச் செல்கின்றன. அங்கே இன்பங்களை அனுபவித்த பிறகு மீண்டும் பூமியில் பிறக்கிறான்.

பிரார்த்தனை, ஜபம், துதிகள் போன்றவற்றுடன் யாகம் முதலிய கிரியைகளையும் சேர்த்துச் செய்பவனுக்கு மனம் விரைவாக வசப்படுகிறது. பற்றின்றிச் செய்கின்ற நற்பணிகளும் யாகம் முதலிய கிரியைகளைப் போன்றவைதான். இப்படி பக்தியோகத்தையும் கர்மயோகத்தையும் இணைத்துச் செய்பவனுக்கு மனம் எளிதாக வசப்படுகிறது; மரணத்திற்குப் பிறகு இன்பங்களும் அவனுக்கு வாய்க்கின்றன. ஆனால் அவனும் பூமியில் மீண்டும் பிறக்க வேண்டியவனே.

ஓங்கார தியானம்: 3-ஆம் வகை

5. ய புனரேதம் த்ரிமாத்ரேண ஓமித்யேதேனைவ அக்ஷரேண
பரம் புருஷமபித்யாயீத ஸ தேஜஸி ஸூர்யே ஸம்பன்ன
யதா பாதோதரஸ்த்வசா விநிர்முச்யத ஏவம் ஹ வை ஸ பாப்மனா விநிர்முக்த ஸ ஸாமபிருன்னீயதே
ப்ரஹ்மலோகம் ஸ ஏதஸ்மாத் ஜீவகனாத் பராத்பரம் புரிசயம்
புருஷமீக்ஷதே ததேதௌ ச்லோகௌ பவத

புன-மேலும்; ய-யார்; த்ரிமாத்ரேண-மூன்று மாத்திரைகள்; ஓம் இதி-ஓம் என்று; அக்ஷரேண-மந்திரத்தால்; பரம்-மேலான; புருஷம்-இறைவனை; அபித்யாயீத-ஆழ்ந்து தியானிக்கிறானோ; ஸ-அவன்; தேஜஸி-ஒளியில்; ஸூர்யே-சூரியனில்; ஸம்பன்ன-அடைகிறான்; யதா-எப்படி; பாதோதர-பாம்பு; த்வசா-தோலிலிருந்து; விநிர்முச்யதே-விடுபடுகிறதோ; ஏவம் ஹ வை-அதுபோல் ஸ-அவன்; பாப்மனா-பாவங்களிலிருந்து; விநிர்முக்த-விடுபடுகிறான்; ஸாமபி-சாமவேத தேவதைகளால்; ப்ரஹ்மலோகம்-பிரம்ம லோகத்திற்கு; உன்னீயதே-கொண்டு செல்லப்படுகிறான்; ஏதஸ்மாத்-அங்கிருந்து; ஜீவகனாத்-உயிர்த்தொகுதிகளுக்கும்; பராத் பரம்-மேலானதற்கும் மேலான; புரிசயம்-உடம்பில் உறைகின்ற; புருஷம்-இறைவனை; ஈக்ஷதே-காண்கிறான்; தத்-அதுபற்றி; ஏதௌ-இரண்டு; ச்லோகௌ-மந்திரங்கள்; பவத-உள்ளன.

பொருள் : ஓங்கார மந்திரத்தின் மூன்று மாத்திரைகளையும் இணைத்து தியானிப்பதுடன், மேலான இறைவனையும் ஆழ்ந்து தியானிப்பவன் ஒளிப்பொருளான சூரியனை அடைகிறான். பாம்பு எப்படி தோலிலிருந்து விடுபடுகிறதோ, அப்படி அவன் பாவங்களிலிருந்து விடுபடுகிறான். மரணத்திற்குப் பிறகு, சமவேத தேவதைகள் அவனைப் பிரம்ம லோகத்திற்குக் கொண்டு செல்கின்றன. உயிர்த்தொகுதிகளின் தலைவரும், மேலானதற்கு மேலானவரும், உடம்புகளில் உறைபவருமான இறைவனை அங்கே அவன் காண்கிறான்.

இதுபற்றி, கீழ்வரும் இரண்டு மந்திரங்கள் உள்ளன.

இந்த மூன்றாவது வகை தியானத்தில் இறைவடிவையும் தியானிக்குமாறு கூறப்படுகிறது. பிரார்த்தனைகள், துதிகள், பற்றற்ற நற்பணிகள் போன்றவற்றுடன் இறைதியானமும் சேர்த்துச் செய்வதே மூன்றாம் வகை தியானம். சிவன், விஷ்ணு, தேவி போன்றதொரு தெய்வத்தையும் தியானிக்கும்போது அவர்களின் அருளும் நமக்குக் கிடைக்கிறது. (ஓங்காரே து விஷ்ண்வாதி ப்ரதிமா ஸ்தானீயே பக்த்யாவேசித ப்ரஹ்மபாவே த்யாயினாம் தத் ப்ரஸீததி 5:2 விளக்கவுரையில் ஸ்ரீசங்கரர்). உயர் வாழ்க்கையில் விரைந்து முன்னேற அது உதவுகிறது. இந்த வகை தியானத்தால் ஒருவனுக்கு இறைக் காட்சியே கிடைக்கிறது.

மூன்று வகை தியானங்களின் பலன்:6-7

மேலே கண்ட(3-5) மூன்று வகை தியானங்களின் பலன் இங்கே தொகுத்துச் சொல்லப்படுகிறது.

6. திஸ்ரோ மாத்ரா ம்ருத்யுமத்ய
ப்ரயுக்தா அன்யோன்ய ஸக்தா அனவிப்ரயுக்தா
க்ரியாஸு பாஹ்யாப்யந்தரமத்யமாஸு
ஸம்யக்ப்ரயுக் தாஸுந கம்பதே ஜ்ஞ

திஸ்ர-மூன்று; மாத்ரா-மாத்திரைகள்; ம்ருத்யுமத்ய-மரணத்திற்கு உட்பட்டவை; அனவிப்ரயுக்தா-பிரிக்காமல்; அன்யோன்ய ஸக்தா-ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு; க்ரியாஸு தியானத்தில்; ப்ரயுக்தா-ஈடுபடுத்தப்படும் போது; பாஹ்ய அப்யந்தர மத்யமாஸு-புற, அக, இடை நிலைச் செயல்களில்; ஸம்யக்-ஆழ்ந்து; ப்ரயுக்தாஸு-ஈடுபடுத்தப்படும்போது; ஜ்ஞ-மகான்; ந கம்பதே-சஞ்சலப்படுவதில்லை.

பொருள் : ஓங்காரத்தின் மூன்று மாத்திரைகளின் விளைவுகளும் மரணத்திற்கு உட்பட்டவை. ஆனால் அவற்றைப் பிரிக்காமல், ஒன்றுடன் ஒன்றை இணைத்து, புற-அக-இடைநிலைகளில் செயல்படும் விதமாகத் தியானத்தில் ஈடுபடுத்துகின்ற மகான் சஞ்சலப்படுவதில்லை.

மூன்று வகை தியானங்களில் ஒன்றை எடுத்துக் கொண்டு, அதுமட்டுமே சரியானது என்று கண்மூடித்தனமான கருத்துடன் அதனைப் பின்பற்றுவதால் சிறந்த விளைவுகளை எதுவும் ஏற்படுவதில்லை. அதனால் கிடைக்கின்ற பலன் உலகியல் ரீதியானதாக இருக்கும். மீண்டும்மீண்டும் பிறக்கவும் இறக்கவுமே அது வழி வகுக்கும். அதனால்தான் மூன்று மாத்திரைகளின் விளைவும் மரணத்திற்கு உட்பட்டது என்று கூறப்பட்டது.

செயல்கள்-தியானம், உருவ வழிபாடு-அருவ வழிபாடு ஆகிய இரட்டைகளை விளக்கும்போது ஈசாவாஸ்ய உபநிஷதம் கூறுகின்ற கருத்தை இங்கு நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும். செயல்கள் மற்றும் தியானத்தைத் தனித்தனியாகப் பின்பற்றுபவர்கள் காரிருளில் மூழ்குகின்றனர். இரண்டையும் இணைத்துச் செய்பவர்கள் மரணத்தைக் கடந்து, இறவா நிலையை அடைகின்றனர். அதுபோலவே, உருவ வழிபாட்டையும், அருவ வழிபாட்டையும் தனித்தனியாகச் செய்பவர்கள் காரிருளில் மூழ்குகின்றனர். இரண்டையும் இணைத்துச் செய்பவர்கள் மரணத்தைக் கடந்து, இறவா நிலையை அடைகின்றனர். ஒருதலைப் பட்சமாக, கண் மூடித்தனமாக எதையும் பின்பற்றக் கூடாது. ஒவ்வொரு சாதனைகளையும் அவற்றின் தேவைக்கும், நமது தகுதிக்கும் ஏற்ப பயன்படுத்திக்கொண்டு முன்னேற வேண்டும் என்பதே ஈசாவாஸ்ய உபநிஷதம் காட்டுகின்ற கருத்து ஆகும். (ஈசாவாஸ்ய உபநிஷதம் (ஒளிக்கு அப்பால்), 9-14 மந்திரங்களின் விளக்கவுரை காண்க.

இதுபோன்ற கருத்தே இந்த மந்திரத்திலும் கூறப்படுகிறது. ஓங்கார மந்திரத்தின் அ, உ, ம் என்ற மூன்று மாத்திரைகளையும் தனித்தனியாக தியானிப்பவன் உயர்ந்த பலனைப் பெறுவதில்லை. பிரார்த்தனை, துதிகள் போன்ற பக்தி நெறி சாதனைகளை அ என்ற மாத்திரை குறிக்கிறது; யாகங்கள் அல்லது பற்றற்ற பணிகளை உ வும், ஞான நெறியை ம் என்ற மாத்திரையும் குறிப்பதாகக் கண்டோம். இவற்றில் ஒன்றை மட்டுமே எடுத்துக்கொள்ளாமல், நமது தேவைக்கும் தகுதிக்கும் ஏற்ப மூன்றையும் இணைத்துச் செய்ய வேண்டும் என்பதே இந்த மந்திரத்தின் கருத்து ஆகும். சுவாமி விவேகானந்தரின் கருத்து இங்கே நினைவில் கொள்ளப்பட வேண்டியதாகும்:

இந்த நான்கும் வகைகளின்( பக்தி, ஞானம், கர்மம் ஆகியவற்றுடன் யோகம் என்ற பாதையையும் சேர்த்து நான்கு என்று குறிப்பிடுகிறார் சுவாமி விவேகானந்தர். உபநிஷதம் முதல் மூன்றை மட்டுமே கூறுகிறது.) இணைப்பே உலகம் தழுவிய மதத்திற்கு மிகவும் நெருங்கியுள்ள குறிக்கோளாகும். இந்த ஞானம், யோகம், பக்தி, கர்மம் எல்லா அம்சங்களும் சமநிலையில் நிறைவாக உள்ள மனம் கொண்டவர்களாக எல்லோரும் இருப்பதற்கும் கடவுள் அருள் புரிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! அதுதான் லட்சியம், நிறைமனித லட்சியம் என்று நான் கருதுவது இதைத்தான். இந்த அம்சங்களுள் ஒன்றோ இரண்டோ உள்ளவர்கள் என்னைப் பொறுத்தவரை ஒருதலைப் பட்ச மானவர்களே. இத்தகைய ஒருதலைப்பட்சமானவர்களால்தான் இந்த உலகம் ஏறக்குறைய நிறைந்துள்ளது. அவர்களுக்குத் தங்கள் பாதை மட்டுமே தெரியும், மற்ற எல்லாம் அவர்களைப் பொறுத்தவரை அபாயமானவை, பயங்கரமானவை. இந்த நான்கு வழிகளிலும் சமச்சீராக இயைந்திருப்பதுதான் மதத்தைப்பற்றி நான் கொள்கின்ற லட்சியம்.

புற-அக-இடைநிலைகளில் செயல்படும் விதமாகத் தியானத்தில் ஈடுபட வேண்டும் என்கிறது மந்திரம். புற, அக, இடை நிலைகள் என்றால் விழிப்பு, தூக்கம், கனவு நிலைகள் என்று பொருள். தியானம் மேலோட்டமானதாக இருந்தால் உயர்ந்த பலன் கிடைப்பதில்லை. மனத்தின் ஆழங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி, மூன்று நிலைகளிலும் விளைவுகளை ஏற்படுத்த வல்லதாக இருக்க வேண்டும். அதாவது, தியானம் ஒரு மனப்பயிற்சி என்ற நிலையில் அல்லாமல் ஒரு வாழ்க்கை முறையாக, முழு வாழ்க்கையும் ஈடுபடுகின்ற விதத்தில் அமைய வேண்டும். அப்போது மட்டுமே பலன் உண்டு என்பது இங்கே குறிப்பிடப்பட்டது.

சஞ்சலப்படுவதில்லை என்றால் சூழ்நிலையால் பாதிக்கப்படுவதில்லை என்று பொருள். அவன் எந்தச் சூழ்நிலையிலும் தனது லட்சியத்தைத் தெளிவாக உணர்ந்தவனாக, கலக்கமுறாதவனாக இருக்கிறான்.

7. ரிக்பிரேதம் யஜுர்பிரந்தரிக்ஷம்
ஸாமபிர்யத் தத் கவயோ வேதயந்தே
தமோங்காரேணைவ ஆயதனேனான்வேதி வித்வான்
யத்தச்சாந்தம் அஜரமம்ருதமபயம் பரம் சேதி

ரிக்பி-ரிக்வேதம் பாதையால்; ஏதம்-இந்த உலகம்; யஜுர்பி-யஜுர்வேதப் பாதையால்; அந்தரிக்ஷம்-இடைவெளி; ஸாமபி-சாமவேதப் பாதையால்; யத் தத்-எதுவோ அதை; கவய-மகான்கள்; வேதயந்தே-அறிந்திருக்கிறார்கள்; யத்-எது; சாந்தம்-அமைதிமயமான; அஜரம்-மூப்பற்ற; அம்ருதம்-மரணமற்ற; அபயம்-பயங்களைக் கடந்த; பரம்-மேலான; தம்-அவரை; வித்வான்-மகான்; ஓங்காரேண ஆயதனேன ஏவ-ஓங்காரப் பாதையாலேயே; அன்வேதி-அடைகிறார்.

பொருள் : ரிக்வேதப் பாதையால் இந்த உலகமும், யஜுர் வேதப் பாதையால் இடைவெளியும், சாமவேதப் பாதையால்(பிரம்ம லோகமும்) கிடைக்கின்றன என்பதை மகான்கள் அறிந்திருக்கிறார்கள். அமைதி மயமான, மூப்பற்ற, மரணமற்ற, பயங்களைக் கடந்த, மேலான இறைவனை அவர்கள் ஓங்காரப் பாதையாலேயே அடைகிறார்கள்.

அ மாத்திரை தியானத்தால் விரைவில் மனிதப் பிறவியும், உ மாத்திரை தியானத்தால் சந்திரலோகமும், ம் மாத்திரை தியானத்தால் பிரம்ம லோகமும் கிடைக்கின்றன என்பதை 3-5 மந்திரங்களால் கண்டோம். ஆனால் இவை அனைத்தும் எல்லைக்கும் உட்பட்ட, மீண்டும் பிறவிக்குக் காரணமான பலன்களையே தரும். எனவே இறைவனை அடைந்து, மீண்டும் பிறப்பற்ற நிலையை அடைய விரும்புகின்ற மகான்கள் மூன்றையும் இணைப்பதான ஓங்காரப் பாதையைத் தேர்ந்தெடுக்கிறார்கள்; இறைவனை அடைகிறார்கள்.

பிரச்ன உபநிஷதம் பரமபுருஷ வித்யை என்ற தியான முறையைக் கூறுவதாகக் கண்டோம். இந்த 6 மந்திரங்கள் அதனை விளக்குகின்றன. அ, உ, ம் என்ற மூன்று எழுத்துக்களின் சேர்க்கையான ஓங்கார மந்திரத்தை வெவ்வேறு விதமாகத் தியானிப்பது, அவற்றிற்கான வேறுபட்ட பலன்கள் ஆகியவற்றை இந்த வித்யை கூறுகிறது.
6. ஆன்ம அனுபூதி

அறிவைத் தேடி புறப்பட்ட 6 சாதகர்கள் பிப்பலாத முனிவரிடம் கேட்ட கேள்விகளும் அவர் அளித்த விடைகளுமே இந்த உபநிஷதம், முதலில் (1-3 அத்தியாயங்கள்) உலகம். அடுத்தது(4) மனிதன், அடுத்து(5) ஓங்கார சாதனை என்று அவர்களின் கேள்விகள் படிப்படியாக அமைந்துள்ளது.

இந்த 6-ஆம் அத்தியாயம் ஆன்ம அனுபூதி பற்றி கூறுகிறது.

பதினாறு பகுதிகள் உடைய நபர்: 1-4

1. அத ஹைனம் ஸுகேசா பாரத்வாஜ பப்ரச்ச
பகவன் ஹிரண்யநாப கௌஸல்யோ ராஜபுத்ரோ மாமுபேத்யைதம்
ப்ரச்னமப்ருச்சத ஷோடசகலம் பாரத்வாஜ புருஷம் வேத்த? தமஹம்
குமாரமப்ருவம் நாஹமிமம் வேத யத்யஹமிமமவேதிஷம் கதம் தே
நாவக்ஷ்யமிதி ஸமூலோ வா ஏஷ பரிசுஷ்யதி யோன்ருதமபிவததி
தஸ்மாத் நார்ஹாம்யன்ருதம் வக்தும் ஸ தூஷ்ணீம் ரதமாருஹ்ய
ப்ரவவ்ராஜ தம் த்வா ப்ருச்சாமி க்வாஸெள புருஷ இதி

அத-பிறகு; பாரத்வாஜ-பரத்வாஜரின் மகனான; ஸுகேசா-ஸுகேசன்; ஏனம்-அவரிடம்; பப்ரச்ச ஹ-கேட்டார்; பகவன்-தெய்வ முனிவரே; கௌஸல்ய-கோசல நாட்டின்; ராஜபுத்ர-இளவரசனான; ஹிரண்யநாப-ஹிரண்யநாபன்; மாம்-என்னை; உபேத்ய-அணுகி; ஏதம்-இந்த; ப்ரச்னம்-கேள்வியை; அப்ருச்சத-கேட்டார்; பாரத்வாஜ-பரத்வாஜரின் மகனே; ÷ஷாடச கலம்-பதினாறு பகுதிகள் உள்ள. புருஷம்-நபரை; வேத்த-தெரியுமா; அஹம்-நான்; தம்-அந்த; குமாரம்-இளவரசனிடம்; அப்ருவம்-சொன்னேன்; இமம்-இது; ந வேத-தெரியாது; யதி அவேதிஷம்-தெரிந்திருந்தால்; தே-உங்களுக்கு; கதம்-எப்படி; ந அவக்ஷ்யம்-சொல்லாமல் இருப்பேன்; ய-யார்; அன்ருதம்-பொய்யை; அபிவததி-சொல்கிறானோ; ஏஷ-அவன்; ஸமூவ-வேருடன்; பரிசுஷ்யதி வை-அழிந்தே போகிறான்; தஸ்மாத்-எனவே; அன்ருதம்-பொய்யை; வக்தும்-சொல்வதற்கு; ந அர்ஹாமி-துணிவு இல்லை; ஸ-அவர்; தூஷ்ணீம்-அமைதியாக; ரதம்-தேரில்; ஆருஹ்ய-ஏறி; ப்ரவவ்ராஜ-போய்விட்டார்; தம்-அதனை; த்வா-உங்களிடம்; ப்ருச்சாமி-கேட்கிறேன்; அஸெள-இந்த; புருஷ-நபர்; க்வ-எங்கே; இதி-என்று.

பொருள் : பிறகு பரத்வாஜரின் மகனான ஸுகேசன் பிப்பலாத முனிவரிடம் கேட்டார்:
தெய்வ முனிவரே! கோசல நாட்டு இளவரசனான ஹிரண்யநாபன் என்னிடம் பரத்வாஜரின் மகனே! பதினாறு பகுதிகள் உடைய நபரை உமக்குத் தெரியுமா? என்ற கேள்வியைக் கேட்டார். அதற்கு நான் அவரிடம் தெரியாது. தெரிந்திருந்தால் உங்களிடம் எப்படிச் சொல்லாமல் இருப்பேன்? பொய் சொல்பவன் வேருடன் அழிந்து போவானே! எனவே பொய் சொல்வதற்கு எனக்குத் துணிவில்லை என்று கூறினேன். இதைக் கேட்டதும் அவர் அமைதியாகத் தேரில் ஏறிப் போய்விட்டார். அந்த நபர் எங்கே இருக்கிறார்? என்ற அந்தக் கேள்வியை இப்போது நான் உங்களிடம் கேட்கிறேன்.

2. தஸ்மை ஸ ஹோவாச இஹைவாந்த சரீரே ஸோம்ய
ஸ புரு÷ஷா யஸ்யின்னேதா ÷ஷாடசகலா ப்ரபவந்தீதி

தஸ்மை-அவரிடம்; ஸ-முனிவர்; உவாச ஹ-கூறினார்; ஸோம்ய-இனியவனே; ஸ-புருஷ-அந்த நபர்; இஹ-இங்கே; அந்த; சரீரே-உடம்பினுள்; யஸ்மின்-யாரிடம்; ஏதா-இந்த; ÷ஷாடச கலா-பதினாறு பகுதிகள்; ப்ரபவந்தி-தோன்றுகின்றன; இதி-என்று.

பொருள் : ஸுகேசனிடம் பிப்பலாத முனிவர் கூறினார்:
இனியவனே! அந்த நபர் ஆன்மா, ஆன்மா இங்கே உடம்பின் உள்ளேயே உள்ளது. அதனிடமிருந்தே பதினாறு பகுதிகள் தோன்றுகின்றன.

பதினாறு பகுதிகள் என்பவை படைப்பின் பதினாறு அம்சங்கள் ஆகும். இது 4-இல் விளக்கப்படுகிறது.

3. ஸ ஈக்ஷõம்சக்ரே கஸ்மின் அஹமுத்க்ராந்த உத்க்ராந்தே
பவிஷ்யாமி கஸ்மின் வா ப்ரதிஷ்ட்டிதே ப்ரதிஷ்ட்டாஸ்யாமீதி

ஸ-ஆன்மா; ஈஷாம்சக்ரே-சிந்தித்தது; கஸ்மின்-யார்; உத்க்ராந்தே-வெளியேறுவதால்; அஹம்-நான் உத்க்ராந்த-வெளியேறியவனாக; பவிஷ்யாமி-ஆவேன்; கஸ்மின்-யார்; ப்ரதிஷ்ட்டிதே-நிலைபெறுவதால்; ப்ரதிஷ்ட்டாஸ்யாமி-நிலைபெறுவேன்; இதி-என்று.

பொருள் : யார் வெளியேறுவதால் நான் வெளியேறியவனாக ஆவேன்? யார் நிலைபெறுவதால் நான் நிலைபெறுவேன்? என்று ஆன்மா சிந்தித்தது.

ஒருவர் இறந்துவிட்டார் என்று எப்போதும் முடிவு செய்யப்படுகிறது? புலன்களோ மனமோ செயல் இழப்பதால் ஒருவர் மரணமடைவதில்லை. பிராணன் வெளியேறும் போதே ஒருவர் இறந்துவிட்டதாகக் கருதப்படுகிறார். அந்தப் பிராணன் எங்கிருந்து வந்தது என்று சிந்தனை அடுத்த மந்திரத்தில் தொடர்கிறது.

4. ஸ ப்ராணமஸ்ருஜத ப்ராணாச்சரத்தாம் கம்
வாயுர்ஜ்யோதிராப ப்ருதிவீந்த்ரீயம் மன: அன்னமன்னாத்வீர்யம்
தபோ மந்த்ரா கர்மலோகா லோகேஷு ச நாம ச

ஸ-அது; ப்ராணம்-பிராணனை; அஸ்ருஜத-படைத்தது; ப்ராணாத்-பிராணனிலிருந்து; ச்ரத்தாம்-புத்தி; கம்-ஆகாசம்; வாயு-காற்று; ஜ்யோதி-நெருப்பு; ஆப-நீர்; ப்ருதிவீ-பூமி; இந்த்ரியம்-புலன்கள்; மன-மனம்; அன்னம்-உணவு; அன்னாத்-உணவிலிருந்து; வீர்யம்-ஆற்றல்; தப-தவம்; மந்த்ரா-மந்திரங்கள்; கர்ம-கிரியைகள்; லோகா-உலகங்கள்; லோகேஷு-உலகில்; நாம ச-பெயர்கள்.

பொருள் : ஆன்மா பிராணனைப் படைத்தது. பிராணனிலிருந்து புத்தி, ஆகாசம், காற்று, நெருப்பு, நீர், பூமி, புலன்கள், மனம், உணவு ஆகியவை தோன்றின. உணவிலிருந்து ஆற்றல், தவம், மந்திரங்கள், கிரியைகள், உலகங்கள் எல்லாம் தோன்றின. உலகங்களில் பெயர்கள் படைக்கப்பட்டன.

பதினாறு பகுதிகள் உடையதாகக் கூறப்பட்ட அந்த ஆன்மாவே பிராணனைப் படைத்தது. உடம்பும் மனமும் எவற்றால் ஆக்கப்பட்டனவோ அந்தத் தூல, நுண் அம்சங்கள் பிராணனிலிருந்து தோன்றின. இந்தப் பதினாறு அம்சங்களும் ஆன்மாவின் பதினாறு பகுதிகள் என்று கூறப்பட்டன.

ஆன்ம அனுபூதி

5. ஸ யதேமா நத்ய ஸ்யந்தமானா; ஸமுத்ராயணா
ஸமுத்ரம் ப்ராப்யாஸ்தம் கச்சந்தி பித்யதே தாஸாம் நாமரூபே
ஸமுத்ர இத்யேவம் ப்ரோச்யதே ஏவமேவாஸ்ய பரித்ரஷ்ட்டரிமா
÷ஷாடசகலா புநுஷாயணா புருஷம் ப்ராப்யாஸ்தம் கச்சந்தி பித்யேதே
தாஸாம் நாமரூபே புருஷ இத்யேவம் ப்ரோச்யதே
ஸ ஏ÷ஷா கலோ ம்ருதோ பவதி ததேஷ ச்லோக

ஸ-அந்த; யதா-எப்படி; இமா; இந்த; நத்ய-நதிகள்; ஸமுத்ராயணா-கடலை நோக்கி; ஸ்யந்தமானா; ஓடி; ஸமுத்ரம்-கடலை; ப்ராப்ய-அடைந்ததும்; அஸ்தம் கச்சந்தி-மறைகின்றன; தாஸாம்-அவற்றின்; நாமரூபே-பெயரும் வடிவங்களும்; பித்யதே-அழிந்துவிடுகின்றன; ஸமுத்ர-கடல்; இதி ஏவம்-என்றே; ப்ரோச்யதே-அழைக்கப்படுகிறது; ஏவம் ஏவ-அதுபோலவே; அஸ்ய-இந்த; பரித்ரஷ்ட்ட-பிராணன்; இமா-இந்த; ÷ஷாடசகலா-பதினாறு பகுதிகள்; புருஷாயணா-ஆன்மாவை நாவி; புருஷம்-ஆன்மாவை; ப்ராப்ய-அடைந்து; அஸ்தம் கச்சந்தி-மறைகின்றன; தாஸாம்-அவற்றின்; நாமரூபே-பெயரும் வடிவங்களும்; பித்யதே-அழிந்துவிடுகின்றன; புருஷ-ஆன்மா; இதி ஏவம்-என்றே; ப்ரோச்யதே-அழைக்கப்படுகிறது; ஸ-ஆன்மா; ஏஷ-இந்த; அகல-பகுதிகள் அற்றதாக; அம்ருத-மரணமற்றதாக; பவதி-ஆகிறது; தத்-அதுபற்றி; ஏஷ-இந்த; ச்லோக-மந்திரம்.

பொருள் : நதிகள் கடலை நோக்கி ஓடுகின்றன. கடலை அடைந்ததும் அதில் கலந்து மறைகின்றன; அவற்றின் நாமரூபங்கள் அழிந்துவிடுகின்றன. அதன்பிறகு எல்லாம் கடல் என்றே அழைக்கப்படுகிறது. அது போலவே (ஆன்ம அனுபூதிக்கு பிறகு) பிராணன் முதலிய பதினாறு பகுதிகளும் ஆன்மாவை நாடி, ஆன்மாவை அடைந்து அதில் மறைந்துவிடுகின்றன. அவற்றின் பெயரும் வடிவங்களும் அழிந்து விடுகின்றன. அனைத்தும் ஆன்மா என்றே அழைக்கப்படுகிறது. பகுதிகள் அற்றதாக, மரணமற்றதாக ஆன்மா திகழ்கிறது. கீழ்வரும் மந்திரம் அதுபற்றி கூறுகிறது.

பரித்ரஷ்ட்டா என்றால் அனைத்தையும் காண்பவன் என்று பொருள். அனைத்தையும் இயக்குபவன் என்று கொள்ளப்பட்டு இங்கே பிராணன் என்ற பொருள் தரப்படுகிறது. ஆன்மாவிலிருந்தே பிராணன் முதலிய பதினாறு பகுதிகளும் தோன்றுகின்றன. ஒரு மனிதனின் உடம்பும் மனமும் அமைய இவை காரணமாக அமைகின்றன. இந்தப் பதினாறு பகுதிகளிலிருந்தும் உருவாகின்ற ஒன்றையே நாம் மனிதன் அல்லது தனிநபர் என்கிறோம். இந்த மனிதன் உண்மையை உணர்ந்து ஆன்மாவை நாடி, ஆன்ம அனுபூதி பெறும்போது இந்தத் தனித்துவம் மறைந்துவிடுகிறது. உடம்பு, மனம், பிராணன் என்ற பெயர்களும் வடிவங்களும் எல்லாம் மறைகின்றன. நதிகள் கடலில் கலப்பதுபோல் தனிநபர் சம்பந்தப்பட்ட அனைத்தும் ஆன்மாவில் கரைகின்றன.

தோன்றியதற்கே மரணம் வாய்க்கிறது. பதினாறு பகுதிகளால் உருவாக்கப்பட்ட தனிநபர் மரணமடைகிறார். ஆன்மா பகுதிகள் அற்றதாக, மரணமற்றதாக என்றும்போல் திகழ்கிறது. ஆன்ம அனுபூதி பற்றிய ஒரு சித்திரம் இது.

ஆன்மாவை அறிந்து மரணத்தை வெல்லுங்கள்: 6-7

6 சீடர்களும் கேட்ட கேள்விகளுக்குரிய பதில்களைக் கூறியபிறகு. எனக்கு இவ்வளவே தெரியும். தெரிந்ததை உங்களுக்குக் கூறினேன் என்று பணிவுடன் தெரிவித்து, அவர்களைப் பிப்பலாத முனிவர் வாழ்த்துவதுபோல் இந்த மந்திரங்கள் அமைகின்றன.

6. ஆரா இவ ரதநாபௌ கலா யஸ்மின் ப்ரதிஷ்ட்டிதா
தம் வேத்யம் புருஷம் வேத யதா மா வோ ம்ருத்யு பரிவ்யதா இதி

ரதநாபௌ-தேர்ச்சக்கரத்தின் அச்சில்; அரா-ஆரக்கால்கள்; இவ-போல்; யஸ்மின்-யாரில்; கலா-பகுதிகள்; ப்ரதிஷ்ட்டிதா-நிலைபெற்றுள்ளனவோ; வேத்யம்-அறிவதற்குரிய; தம்-அந்த; புருஷம்-ஆன்மாவை; வேத-அறியுங்கள்; யதா-எப்படி; வ-உங்களை; ம்ருத்யு-மரணம்; மா பரிவ்யதா-தீண்டாமல்; இதி-என்று.

பொருள் : தேர்ச்சக்கரத்தின் அச்சில் ஆரக்கால்கள் கூடுவது போல், யாரில் பதினாறு பகுதிகள் நிலைபெற்றுள்ளனவோ, அறிவதற்குரிய அந்த ஆன்மாவை அறியுங்கள். அதன்மூலம் மரணம் உங்களைத் தீண்டாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

7. தான் ஹோவாச ஏதாவதேவாஹமேதத் பரம்
ப்ரஹ்ம வேத நாத பரமஸ்தீதி

தான்-அவர்களிடம்; உவாச ஹ-கூறினார்; அஹம்-நான்; ஏதத்-இந்த; பரம்-மேலான; ப்ரஹம்-ஆன்மா; வேத-அறிந்தது; ஏதாவத்-இவ்வளவே; அத பரம்-இதற்கு மேலாக; ந அஸ்தி-இல்லை; இதி-என்று.

பொருள் : கடைசியாக பிப்பலாத முனிவர் அந்தச் சீடர்களிடம், மேலான ஆன்மாவைப்பற்றி எனக்குத் தெரிந்தது இவ்வளவே. இதற்கு மேலாக எதுவும் இல்லை என்று கூறினார்.

சீடர்கள் நன்றி கூறுதல்

8. தே தமர்ச்சயந்தஸ்த்வம் ஹி ந பிதா யோ ஸ்மாகமவித்யாயா
பரம் பாரம் தாரயஸீதி நம பரமரிஷிப்யோ நம பரமரிஷிப்ய

தே-அவர்கள்; தம்-முனிவரை; அர்ச்சயந்த-வழிபட்டு; த்வம் ஹி-நீரே; ந-எங்கள்; பிதா-தந்தை; ய-யார்; அஸ்மாகம்-எங்களை; அவித்யாயா-அறியாமைக் கடலின்; பரம்-மேலான; பாரம்-கரைக்கு; தாரயஸி-கூட்டிச் சென்றீர் ; பரமரிஷிப்ய-தெய்வ முனிவர்களுக்கு; நம-வணக்கம்.

பொருள் : அந்தச் சீடர்கள் ஆறு பேரும் பிப்பலாத முனிவரை வழிபட்டு கூறினர்:
நீரே எங்கள் தந்தை. அறியாமைக் கடலின் மேலான மறுகரைக்கு எங்களைக் கூட்டிச் சென்றவர் நீரே. உமக்கும் உம்மைப் போன்ற தெய்வ முனிவர்களுக்கும் எங்கள் வணக்கம். தெய்வ முனிவர்களுக்கும் எங்கள் வணக்கம்.

ஆன்ம அனுபூதி பெற்று, அதன்மூலம் மரணத்தை வெல்வதற்கு வழிகாட்டிய குருவாகிய பிப்பலாத முனிவரையும், ஆன்மீக வாழ்க்கையை நாடுகின்ற அனைவருக்கும் அருள் புரியக் காத்திருக்கும் மற்ற மகான்களையும் வணங்கி ஆறு சீடர்களும் விடைபெறுகின்றனர். இவ்வாறு இந்த உபநிஷதம் நிறைவுறுகிறது.

இதி ப்ரச்னோபநிஷதி ஷஷ்ட்ட: ப்ரச்ன:

பிரச்ன உபநிஷதம் நிறைவுபெறுகிறது.
ஆன்மாவை அறிவதற்கான அடிப்படை நிபந்தனை ..

2.1 அதுவே நீ

கட உபநிஷதத்தின் இரண்டாம் பகுதி ஆரம்பிக்கிறது. உயர் வாழ்விற்கான அடிப்படைகள் சிலவற்றை முதற் பகுதியில் கண்டோம். சிரத்தை, ஆசையின்மை போன்ற அடிப்படைப் பண்புகளுடன் புத்தியின் விழிப்பு மிகவும் அவசியம் என்பது அங்கே விளக்கப்பட்டது.

விழிப்புற்ற புத்தியில் எவ்வாறு ஆன்ம தரிசனம் உண்டாகிறது, இறையனுபூதி என்றால் என்ன போன்றவற்றை விளக்குகிறது இந்த இரண்டாம் பகுதி. கட உபநிஷதம் கூறுகின்ற வித்யைகளுள் ஒன்றான அங்குஷ்ட்டமாத்ர வித்யை இந்தப் பகுதியில் வருகிறது.

மரணத்திற்குப் பின்னால் என்ன நிகழ்கிறது என்பது நசிகேதனின் கேள்வி. மரணம் என்பது உடம்புக்கு மட்டுமே, மரணத்தால் பாதிக்கப்படாத ஒன்று இந்த உடம்பினுள் உள்ளது. அதுவே நீ என்று அவனுக்கு இங்கே உபதேசிக்கிறான் எமதர்மன். அது எனப்படுகின்ற அந்த ஆன்மா மூன்று அத்தியாயங்களிலுமாக 10 கோணங்களில் விளக்கப்படுகிறது.

ஆழ்ந்த சிந்தனைக்கு, தியானத்திற்கு உரியது இந்தப் பகுதி. எதை நினைக்கிறோமோ அது ஆகிறோம் என்பார் சுவாமி விவேகானந்தர். நான் உடம்பல்ல, உயிரல்ல; அனைத்தையும் கடந்த ஆன்மா என்பதைத் திரும்பத்திரும்ப பல்வேறு கோணங்களில் ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டுகிறது அதுவே நீ என்ற இந்த உபதேசப் பகுதி. அதுவே நான் என்ற இந்த உயர்நிலை தியானத்தின்மூலம் நாம் ஆன்மா என்பதை உணர்கிறோம், ஆன்மா ஆகிறோம்.

ஆன்மாவை அறிவதற்கான அடிப்படை நிபந்தனையுடன் அத்தியாயம் தொடங்குகிறது.

புலன்களை உள்ளே திருப்புதல் : 1-2

1. பராஞ்சி கானி வ்யத்ருணத் ஸ்வயம்பூ
தஸ்மாத் பராங் பச்யதி நாந்தராத்மன்
கச்சித்தீர: ப்ரத்யகாத்மானமைக்ஷத்
ஆவ்ருத்த சக்ஷúரம்ருதத்வமிச்சன்

கானி-புலன்களை; பராஞ்சி-புற நோக்குடன்; ஸ்வயம்பூ-இறைவன்; வ்யத்ருணத்-அமைத்துள்ளார்; தஸ்மாத்-அதனால்; பராங்-வெளியில்; பச்யதி-பார்க்கின்றன; ந அந்தராத்மன்-அகத்திலுள்ள ஆன்மாவைப் பார்ப்பதில்லை; அம்ருதத்வம்-மரணமற்ற நிலையை; இச்சன்-விரும்புகின்ற; கச்சித்-யாரோ; தீர-விவேகி; ஆவ்ருத்த சக்ஷú-அக நோக்குடன்; ப்ரத்யகாத்மானம்-ஆன்மாவை; ஐக்ஷத்-பார்க்கிறான்.

பொருள் : புலன்களைப் புற நோக்குடன் இறைவன் அமைத்துள்ளார். அதனால் அவை வெளியில் பார்க்கின்றன; அகத்திலுள்ள ஆன்மாவைப் பார்ப்பதில்லை. மரண மற்ற நிலையை விரும்புகின்ற யாரோ விவேகி அக நோக்கு உடையவனாய் ஆன்மாவைப் பார்க்கிறான்.

தொலைநோக்கியால் தூரத்திலுள்ள  பொருட்களைப் பார்க்க முடியும்; அருகிலுள்ள ஒன்றைப் பார்க்க முடியாது. தூரத்தில் உள்ளவற்றைப் பார்ப்பதற்காகவே தொலைநோக்கி உருவாக்கப்பட்டுள்ளது. அதுபோலவே புலன்கள் வெளியுலகை அனுபவிப்பதற்காக உள்ளவை. அவற்றை உள்ளே திருப்புவது என்றால் அவற்றின் புற நாட்டத்தைத் தடுப்பது, அவ்வளவுதான். அவை புறமுகமாகச் செயல்படாமல் இருக்குமானால் அக வளர்ச்சியும் அக மாற்றங்களும் இயல்பாகவே நிகழும். இது சொல்வது எளிது, செய்வது மிகமிகக் கடினமானது. அதனால்தான் யாரோ விவேகி ஒருவன் அக வளர்ச்சியை நாடுவாக மந்திரம் கூறுகிறது.

2. பராச: காமானனுயந்தி பாலா
தே ம்ருத்யோர்யந்தி விததஸ்ய பாசம்
அத தீரா அம்ருதத்வம் விதித்வா
த்ருவமத்ருவேஷ்விஹ ந ப்ரார்த்தயந்தே

யே-எந்த; பாலா-மனப்பக்குவம் இல்லாதவர்கள்; பராச-புறத்திலுள்ள ;காமான்-சுகபோகப் பொருட்களை; அனுயந்தி-நாடுகிறார்களோ; தே-அவர்கள்; விததஸ்ய-எங்கும் இருக்கின்ற; ம்ருத்யோ-மரணத்தின்; பாசம்-வலையை; யந்தி-அடைகின்றனர்; அத-எனவே; தீரா-விவேகிகள்; அத்ருவேஷு-நிலையற்றவற்றில் அம்ருதத்வம்-அழிவற்ற; த்ருவம்-நிலையானதை; விதித்வா-அறிந்து; இஹ-இங்கே; ந ப்ரார்த்தயந்தே-விரும்புவதில்லை.

பொருள் : மனப்பக்குவம் இல்லாதவர்கள் புறத்திலுள்ள சுகபோக பொருட்களை நாடுகின்றனர். எங்கும் இருக்கின்ற மரண வலையில் அவர் வீழ்கின்றனர். ஆனால் நிலையற்ற உலகில் அழிவற்ற நிலையான பொருள் ஒன்று இருப்பதை விவேகிகள் அறிகின்றனர். எனவே அவர்கள் சுகபோகப் பொருட்களை விரும்புவதில்லை.

சுகபோகப் பொருட்கள் புலன்களின் ஆற்றலை அழித்துவிடுகின்றன என்று ஏற்கனவே(1.1.26) கண்டோம். எனவே சுகபோகங்களை நாடுபவர்கள் விரைவில் மரணத்தின் பிடியில் சிக்குகிறார்கள் என்பது இங்கே குறிப்பால் உணர்த்தப்படுகிறது.

மரணம் எங்கும் நிறைந்ததாகக் கூறப்படுவதைக் கருத்தில்கொள்ள வேண்டும். உண்மையில் இந்த உலகம் மரணத்தின் நிழல் பிடிந்தது. தோன்றிய அனைத்தும் மரணம் என்ற மாபெரும் அழிவை நோக்கியே சென்று கொண்டிருக்கின்றன. புலன்களின் வசப்பட்டு, அவற்றின் போக்கிலேயே சென்று கொண்டிருந்தால் நாமும் மரண வலையில் விழுவதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் இந்த நிலையற்ற உலகின் உள்ளே, அதாவது அதன் பின்னணியில், அழிவற்ற, நிலையான இறைவன் உள்ளார். அவரை நாடும்போது சுகபோகப் பொருட்களிலிருந்து நாம் விலகுகிறோம்; மரணத்திலிருந்து விலகுகிறோம். இவ்வாறு விவேகி சுகபோகப் பொருட்களை நாடாமல் இருக்கிறான், புலன்களின் போக்கைத் தடுத்து, புற வளர்ச்சியை விரும்பாமல் அக வளர்ச்சியில் நாட்டம் செலுத்தி மரணத்தை வெல்கிறான்.

அதுவே நீ (3-9)

அதுவே நீ என்ற இந்தப் பகுதி ஆழ்ந்த சிந்தனைக்கு உரியதாகும். ஆழ்ந்த சிந்தனையின்மூலம் இந்த உணர்வு, அதாவது உடம்பையும் மனத்தையும் கடந்த ஆன்மா நான் என்ற உணர்வு நம்மிடம் வலுப்படுகிறது. புலன்களை வசப்படுத்துவதில் இது மிகவும் உதவுகிறது. புலன்கள் வசப்படும்போது அக வளர்ச்சி உண்டாகிறது. அக வளர்ச்சி ஆன்ம அனுபூதியில் நிறைவுறுகிறது.

சாட்சிப் பொருள் நீ : 3-4

புலன்களின் புற நாட்டத்தைத் தடுக்க வேண்டும். எப்படி? அவற்றிற்கு உண்மையை உணர்த்த வேண்டும்; உலகின் அனுபவங்களில் உள்ளீடு எதுவும் இல்லை என்பதை அவை புரியுமாறு செய்ய வேண்டும். அதற்கான பயிற்சியை இந்த மந்திரங்கள் தெரிவிக்கின்றன.

வாழ்வில் எவ்வளவோ நிகழ்கின்றன. உடம்பிற்கு எத்தனையோ அனுபவங்கள் வருகின்றன. எத்தனையோ விஷயங்கள் மனத்தைக் கடந்து செல்கின்றன. அவற்றுடன் இணைந்து நாமும் துயரப்படுகிறோம், சுகத்தை அனுபவிக்கிறோம், வெறுக்கிறோம், விரும்புகிறோம், அழுகிறோம், சிரிக்கிறோம், ஆனால் இவை எதிலும் பங்கெடுக்காமல் நம்முள் ஒன்று இருப்பதாக ஏற்கனவே (1.3.1) கண்டோம். அதுவே ஆன்மா. அதனுடன் நம்மை ஒன்றுபடுத்திக் கொள்ள வேண்டும்.

3. யேன ரூபம் ரஸம் சப்தான் ஸ்பர்சாம்ச்ச மைதுனான்
ஏதேனைவ விஜானாதி கிமத்ர பரிசிஷ்யதே ஏதத்வை தத்

ரூபம்-காட்சி; ரஸம்-சுவை; கந்தம்-மணம்; சப்தான்-ஒலி; ஸ்பர்சான்-தொடு உணர்ச்சி; மைதுனான் ச-உடலின்பம்; யேன-எதனால்; விஜானாதி-உணர்கிறானோ; ஏதேன-எதனால்; அத்ர-இவற்றில்; கிம்-என்ன; பரிசிஷ்யதே-எஞ்சியிருக்கிறது; ஏவ-என்று; ஏதத்வை-இதுவே; தத்-அது.

பொருள் : காட்சி, சுவை, மணம், ஒலி, தொடு உணர்ச்சி, உடலின்பம் முதலியவற்றை எதனால் ஒருவன் உணர்கிறானோ, இந்த அனுபவங்களில் என்ன எஞ்சியிருக்கிறது என்பதையும் எதனால் தெரிந்துகொள்கிறானோ அதுவே நீ கேட்ட பொருள்.

அழகிய பூவை ரசிக்கிறோம். நம்முள்ளே உணர்வுப் பொருளாகிய ஆன்மா இருப்பதால்தான் அதனை நம்மால் ரசிக்க முடிகிறது என்பதை மறந்துவிடுகிறோம். உயிரற்ற உடலின் முன்னால் அழகோ நறுமணமோ எந்த விளைவையும் ஏற்படுத்துவதில்லை. நம்முள் இருக்கின்ற இருவருள் ஒருவர் அனுபவங்களில் ஈடுபட்டு அனுபவிக்கிறார். மற்றொருவர் சாட்சியாக நின்று அவற்றைக் கவனிக்கிறார் அனுபவங்களைப் பெறுபவருடன் நம்மை ஒன்றுபடுத்திக் கொள்ளும்போது மேலும்மேலும் செயல்களில் ஈடுபட்டு தளைகளை அதிகப்படுத்திக் கொள்கிறோம். மாறாக, சாட்சியாக நிற்கின்ற ஆன்மாவுடன் நம்மை ஒன்றுபடுத்திக் கொண்டு, விலகி நின்று, அனுபவங்களின் உள்ளீடற்ற தன்மை நமக்கு மேலும்மேலும் தெரியவரும்.

புலன் அனுபவங்கள் உள்ளீடற்றவை என்ற கருத்து நம்முள் பதியும்போது புலன்கள் புறவுலகை நாடுவதை இயல்பாகவே விட்டுவிடுகின்றன; அக நோக்கு என்பது தானாகவே நிகழ்கிறது. எனவே, சாட்சியாக இருந்து பழகுவது என்பது புலன்களை வசப்படுத்துவதற்கான ஒரு சிறந்த பயிற்சி ஆகிறது.

நாம் ஆன்மா என்ற உணர்வு இந்தப் பயிற்சியின் மூலம் வலுப்பெறுகிறது. எனவே சுகதுக்க அனுபவங்கள் நம்மை அணுகும்போது அவற்றுடன் நம்மை இணைத்துக் கொள்ளாமல் விலகி நின்று பார்க்க நம்மைப் பழக்கம் படுத்திக் கொள்ள வேண்டும்.

4. ஸ்வப்னாந்தம் ஜாகரிதாந்தம் சோபௌ யேனானுபச்யதி
மஹாந்தம் விபுமாத்மானம் மத்வா தீரோ ந சோசதி

ஸ்வப்ன அந்தம்-கனவு நிலை; ஜாகரித அந்தம்-விழிப்பு நிலை; ச உபௌ-இரண்டு நிலைகளையும்; யேன-எதனால்; அனுபச்யதி-பார்க்கிறானோ; மஹாந்தம்-மகிமை வாய்ந்த; விபும்-எங்கும் நிறைந்த; ஆத்மானம்-ஆன்மாவை; மத்வா-அனுபூதியில் உணர்கின்ற; தீர-விவேகி; ந சோசதி-கவலைப்பட மாட்டான்.

பொருள் : கனவு, விழிப்பு ஆகிய இரண்டு நிலைகளையும் எதனால் ஒருவன் உணர்கிறானோ அதுவே ஆன்மா, அது மகிமை வாய்ந்தது, எங்கும் நிறைந்தது. அதனை அனுபூதியில் உணர்கின்ற விவேகி கவலையிலிருந்து விடுபடுகிறான்.

நாம் சாட்சிப் பொருள் என்பதை இங்கே மற்றொரு கோணத்திலிருந்து விளக்க முற்படுகிறான் எமதர்மன். கனவு, விழிப்பு, ஆழ்ந்த தூக்கம் இந்த மூன்று நிலைகளின் வழியாக நாம் தொடர்ந்து சஞ்சரித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு மாலையிலுள்ள நூல் பல முத்துக்களைக் கோர்த்து, அவற்றிற்கிடையே ஒரு தொடர்பை உண்டாக்குவதுபோல் நமது இந்த மூன்று நிலைகளையும் தொடர்பு படுத்திக்கொண்டு நிற்கின்ற பொருளே ஆன்மா.

கனவுலகம் வேறு, விழிப்பில் நாம் வாழ்கின்ற உலகம் வேறு, ஆழ்ந்த தூக்கத்தை அனுபவிக்கின்ற உலகம் வேறு, ஆனால் இந்த மூன்றிலும் நான் என்ற உணர்வு இருக்கிறது. அதனால்தான் நான் கனவு கண்டேன் நான் விழித்திருக்கிறேன். நான் ஆழ்ந்து தூங்கினேன் என்று சொல்கிறோம். கனவில் நனவுலகம் மறைகிறது, ஆழ்ந்த தூக்கத்தில் இரண்டு உலகங்களுமே மறைகின்றன. மறைகின்ற எதுவும் உண்மையாக இருக்க முடியாது. எனவே இந்த மூன்று நிலைகளும் உண்மை அல்ல. இந்த நிலைகள் எதனுடனும் சம்பந்தப் படாமல், மூன்று நிலைகளும் தன்னைக் கடந்து செல்வதை ஒரு சாட்சியாக நின்று காண்கிறது ஆன்மா.

காலத்தின் தலைவன் நீ

நமது உணர்வைப் பிரபஞ்சம் முழுவதுமாக விரிப்பதற்கான ஒரு முயற்சியை இந்த மந்திரத்திலிருந்து காண்கிறோம். உடம்பினும் இதயக் குகையினுள் உள்ள ஆன்மா நான் என்ற கருத்தும் பிரபஞ்சம் முழுவதும் நிறைந்துள்ள பொருளே நான் என்ற கருத்தும் ஒவ்வொரு மந்திரத்திலும் வருகிறது. உணர்வை விரிப்பதற்கான சாதனை இது.

5. ய இமம் மத்வதம் வேத ஆத்மானம் ஜீவமந்திகாத்
ஈசானம் பூத பவ்யஸ்ய ந ததோ விஜுகுப்ஸதே ஏதத்வை தத்

ய-யார்; மத்வதம்-கர்ம பலன்களை அனுபவிக்கின்ற; ஜீவம்-உயிருக்கு ஆதாரமான; இமம்-இந்த; ஆத்மானம்-ஆன்மாவை; அந்திகாத்-அருகில் இருப்பதாக; பூத பவ்யஸ்ய-இறந்த காலம் மற்றும் எதிர்காலத்திற்கு; ஈசானம்-தலைவனாக; வேத-அறிகிறானோ; தத-பிறகு; ந விஜுகுப்ஸதே-வெறுப்பதில்லை; ஏதத் வை-இதுவே; தத்-அது.

பொருள் : கர்ம பலன்களை அனுபவிக்கின்ற உயிருக்கு ஆதாரமான இந்த ஆன்மாவை இருப்பதாகவும், அதேவேளையில் இறந்தகாலம் மற்றும் எதிர்காலத்திற்குத் தலைவனாகவும் அறிபவன் யாரையும் வெறுப்பதில்லை. அதுவே நீ கேட்ட பொருள்.

நம்முள் உள்ள இருவரில் (1.3.1) ஒருவர் அனுபவங்களைப் பெறுகிறார். மற்றொருவர் அந்த அனுபவங்களைப் பெறுவதற்கு ஆதாரமாக இருக்கிறார். அதுவே ஆன்மா. அதுவே நாம். நம்முள் உள்ள ஆன்மாவே நாம் என்று கூறிவிட்டு, அடுத்த வரியிலேயே, காலத்தின் தலைவன் நாம் என்று நமது உணர்வை விரிக்கிறது உபநிஷதம்.

காலத்தின் தலைவன் ஆவது என்றால் என்ன?

பொதுவாக நாம் கடந்த காலத்தை அசை போட்டுக் கொண்டிருப்போம், அல்லது எதிர்காலக் கற்பனைகளில் மிதந்து கொண்டிருப்போம். அதாவது நமது வாழ்க்கை இறந்த மற்றும் எதிர்காலங்களில் உழன்று கொண்டிருக்கிறது. நாம் நிகழ்காலத்தில் வாழ்வதே இல்லை. காலத்தின் தலைவனாக இருப்பது என்றால் இறந்த மற்றும் எதிர்காலங்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபடுவது; நிகழ்காலத்தில் வாழ்வது. நிகழ்காலத்தில் வாழ்வது என்றால் நிரந்தர தியான நிலையில் திளைப்பது என்கிறார். (ம-என்ற புனைபெயரில் தம்மை மறைத்துக்கொண்ட மகேந்திரநாத் குப்தர் ஸ்ரீராம கிருஷ்ணரின் சீடர்; இல்லற ஞானி காலத்தால் அழியாத காவியமான அமுதமொழிகள் என்ற நூலை உலகிற்குத் தந்தவர்) தியானத்தில் கால இடைவெளி மறைகிறது. அன்பு செய்வது பக்தி செய்வது என்றால் நிரந்திர நிகழ்காலத்தின் சன்னதியில் இருப்பது; அங்கே கடந்தகாலத்திற்கோ எதிர் காலத்திற்கோ எந்தத் தொடர்பும் இல்லை என்று விளக்குகிறார் அவர்.

எனவே காலத்தை வெல்வது என்றால் கடந்த மற்றும் எதிர்காலங்களில் பிடியிலிருந்து விடுபட்டு நிகழ்காலத்தில் வாழ்வது என்றாகிறது. இதை எப்படிச் செய்வது? கடந்த மற்றும் எதிர்காலங்கள் நம்மீது எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகின்றன? எண்ணங்களின்மூலம். எனவே மனத்தில் எண்ணங்களே எழாமல் தடுப்பது நிகழ்காலத்தில் வாழ்வதற்கான வழிகளுள் ஒன்றாகும்.

ஓர் எண்ணம் எழுந்து மறைந்தபிறகு அடுத்த எண்ணம் எழுகிறது. இரண்டு எண்ண அலைகளுக்கு இடையேயுள்ள காலத்தை அதிகப்படுத்தும்போது இது நிகழ்கிறது. ( இங்கு ஒரு விஷயத்தைக் கவனத்தில்கொள்ள வேண்டும். இந்தப் பயிற்சிகள் மனக்கட்டுபாடு உடைய, நல்லொழுக்க வாழ்வில் நிலைபெற்ற உயர்நிலை சாதர்களுக்கு உரியவை. அதுவும், தகுந்த குருவின் வழிகாட்டுதலுடன் செய்யப்பட வேண்டியவை. முதற்பகுதியில் நல்லொழுக்கம் போன்ற அடிப்படை பண்புகளைக் கூறிய பிறகு இரண்டாம் பகுதியில் இவை கூறப்படுவதைக் கருத்தில்கொள்ள வேண்டும். )

முதலில் தோன்றியவன் நீ

6. ய பூர்வம் தபஸோ ஜாதமத்ப்ய பூர்வமஜாயத
குஹாம் ப்ரவிச்ய திஷ்ட்டந்தம் யோ பூதேபிர் வ்யபச்யத ஏதத்வை தத்

ய-யார்; பூர்வம்-முன்னால் ; தபஸ-தவத்தினால்; ஜாத-தோன்றியவரோ; அத்ப்ய-தண்ணீர் முதலான பஞ்ச பூதங்களுக்கு; பூர்வம்-முன்னால்; அஜாயத-தோன்றியவரோ; ய-யார்; பூதேபி-உயிர்களின்; குஹாம்-இதயக் குகையில்; ப்ரவிச்ய-புகுந்து; திஷ்ட்டந்தம்-உறைகிறாரோ; வ்யபச்யத-காண்கிறார்.

பொருள் : யார் தண்ணீர் முதலான பஞ்ச பூதங்களுக்கும் முன்னால் தவத்தினால் தோன்றியவரோ, யார் உயிர்களின் இதயக் குகையில் உறைபவரோ அவரே அனைத்தையும் காண்கிறார். அதுவே நீ கேட்ட பொருள்.

பிரபஞ்ச்சத்திற்கு ஆதாரமான பேருணர்வுப் பொருள் தான் நம்முள் ஆன்மாவாக உறைகிறது என்ற உண்மை இங்கே மற்றொரு கோணத்தில் கூறப்படுகிறது. பூமி, தண்ணீர், அக்கினி, காற்று, ஆகாசம்(வெளி) ஆகிய ஐந்தும் பஞ்ச பூதங்கள் அதாவது ஐந்து அடிப்படைப் பொருட்கள். இந்த ஐந்தின் சேர்க்கையாலேயே உலகமும் உயிர்களும் தோன்றியுள்ளன. (ஸ்ரீமத் பகவத்கீதை (7.4-5), பக். 308-311. அவற்றிற்கு முன்பே தோன்றியவர் இறைவன். அந்த இறைவன்தான் நம்மில் ஆன்மாவாக நமது இதயக் குகையில் விளங்குகிறார்.

இறைவன் தவத்தினால் தோன்றியவர் என்று கூறுவதன்மூலம், அவரது அம்சமான ஆன்மாவை அடைய வேண்டுமானால் தவம் வேண்டும் என்பது குறிப்பால் உணர்த்தப்படுகிறது. தவத்தினால் மரணத்தையே வெல்லலாம். (கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றிலின்; ஆற்றல் தலைப்பட்ட டவர்க்கு  திருக்குறள், 27.9)
என்கிறார் திருவள்ளுவர். தவம்பற்றி பகவத்கீதை விரிவாக ஆராய்கிறது. (ஸ்ரீமத் பகவத்கீதை(17. 14-19). உணவு, உடை, சுகபோகப் பொருட்கள் என்ற புறமுகமாக செலவிடப்படுகின்ற ஆற்றலைச் சுருக்கி அந்த ஆற்றலை உயர்ந்த லட்சியங்களுக்காகப் பயன்படுத்துவது தவம்.

பிரபஞ்சத்தை இயக்கும் சக்தி நீ

7. யா ப்ராணேன ஸம்பவதி அதிதிர் தேவதாமயீ
குஹாம் ப்ரவிச்ய திஷ்ட்டந்தம் யா பூதேபிர் வ்யஜாயத ஏதத்வை தத்

ப்ராணேன ஸம்பவதி-பிராண வடிவானவளும்; தேவதாமயீ-எல்லா தெய்வங்களின் வடிவனவளும்; பூதேபி-பஞ்ச பூதங்களுடன்; வ்யஜாயதே-தோன்றியவளும்; யா-எந்த; அதிதி-தேவி; குஹாம்-இதயக் குகையில்; ப்ரவிச்ய-புகுந்து; திஷ்ட்டந்தீம்-உறைகிறாளோ; ஏதத்வை தத்-இதுவே அது.

பொருள் : பிராண வடிவானவளும், எல்லா தெய்வங்களின் வடிவானவளும், பஞ்ச பூதங்களுடன் தோன்றியவளுமாகிய எந்த தேவி உயிர்களின் இதயக் குகையில் புகுந்து உறைகிறாளோ அந்த தேவியின் வடிவாக இருப்பதே நீ கேட்ட பொருள்.

மின்சாரத்தின் ஆற்றலால் விளக்குகள் எரிவதைக் காண்கிறோம்; விசிறிகள் சுழல்வதைக் காண்கிறோம்; இன்னும் எத்தனையோ இயக்கங்களைக் காண்கிறோம். ஆனால் மின்சாரத்தைக் காண்பதில்லை. அதுபோல் இந்தப் பிரபஞ்சத்தில் எத்தனையோ இயக்கங்களைக் காண்கிறோம். பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் உயிரினங்கள் தோன்றுகின்றன, மறைகின்றன, தீ எரிகிறது, தண்ணீர் ஓடுகிறது, சூரியன் உதிக்கிறது. இவ்வாறு எத்தனையோ செயல்களைக் காண்கிறோம். இதற்குக் காரணமான சக்தியை நாம் காண்பதில்லை. அதுவே பிராண சக்தி. இதனை விளக்குகிறார் சுவாமி விவேகானந்தர்:

இந்தியத் தத்துவ ஞானிகள் கொள்கைப்படி பிரபஞ்சம் இரண்டு பொருட்களால் ஆக்கப்பட்டுள்ளது. அவற்றுள் ஒன்று ஆகாசம். இது எங்கும் வியாபித்து அனைத்தையும் ஊடுருவியுள்ளது. உருவம் உள்ள அனைத்தும், சேர்க்கையால் விளைந்த அனைத்தும் ஆகாசத்திலிருந்தே வெளிப்பட்டுள்ளன. ஆகாசமே காற்றாகவும், திரவப் பொருட்களாகவும், திடப் பொருட்களாகவும் ஆகியுள்ளது. சூரியனாக, சந்திரனாக, பூமியாக, நட்சத்திரங்களாக, வால் நட்சத்திரங்களாக ஆகியுள்ளதும் ஆகாசமே. மனித உடல், பிராணி உடல், தாவரங்கள் அனைத்தும், நாம் காண்கின்ற, நாம் உணர்கின்ற அனைத்தும், இருப்பவை அனைத்துமாக இருப்பதும் ஆகாசமே........

எந்தச் சக்தியால் இந்த ஆகாசம் பிரபஞ்சமாகிறது? பிராண சக்தியால்தான்.......... இந்தப் பிராணனிலிருந்தே நாம் ஆற்றல் என்று அழைக்கின்ற நாம் சக்தி என்று அழைக்கின்ற அனைத்தும் வெளிப்படுகின்றன. புவியீர்ப்பாக, காந்த சக்தியாக வெளிப்படுவதும் பிராணனே. உடல் இயக்கங்களாக, நாடி ஓட்டங்களாக, எண்ணச் சக்தியாக வெளிப்படுவதும் பிராணனே. எண்ணம் முதல் மிகச் சாதாரண சக்திவரை எல்லாம் பிராணனின் சக்தியடா என்று பாடினார் பாரதியார். எங்கும் நிறைந்துள்ள இறைவன் நம்முள் ஆன்மாவாக விளங்குவது போல் பிரபஞ்சத்தை இயக்குகின்ற இந்தப் பிராண சக்தியே நம்முள் நமது உடம்பையும் மனத்தையும் இயக்குகின்ற பிராணனாகச் செயல்படுகிறது. பிரபஞ்ச நிலையில் அந்தப் பிராணன் எல்லா தெய்வங்களின் வடிவாக, அதாவது அனைத்து ஆற்றல்களின் உறைவிடமாக, பஞ்ச பூதங்களுடன் தோன்றியதாகக் கூறப்படுகிறது.

ஆன்ம அக்கினி நீ

8. அரண்யோர்நிஹிதோ ஜாதவேதா
கர்ப இவ ஸுப்ருதோ கர்பிணீபி
திவே திவ ஈட்யோ ஜாக்ருவத்பி
ஹவிஷ்மத்பிர் மனுஷ்யேபிரக்னி ஏதத்வை தத்

அரண்யோ-அரணிக்கட்டைகளில்; நிஹித-இருக்கின்ற; ஜாதவேதா-அக்கினி; கர்பிணீபி-கருவுற்ற பெண்களால்; கர்ப இவ-கருபோல்; ஸுப்ருத-காக்கப்படுகிறது; ஜாக்ருவத்பி-விழிப்புணர்ச்சி பெற்றவர்களால்; ஹவிஷ்மத்பி; மனுஷ்யேபி; யோகிகளான மனிதர்களால் அக்னி-ஆன்ம அக்கினி; திவே திவே-நாள்தோறும்; ஈட்ய:-வழிபடப்படுகிறது.

பொருள் : கருவுற்ற பெண்கள் கருவை எச்சரிக்கையாகக் காப்பதுபோல் அரணிக்கட்டைகளில் அக்கினி பாதுகாக்கப்படுகிறது. விழிப்புணர்ச்சி பெற்ற யோகிகள் ஆன்ம அக்கினியை அதுபோல் கவனமாக நாள்தோறும் வழிபடுகின்றனர். அந்த ஆன்ம அக்கினியே நீ கேட்ட பொருள்.

யாக குண்டங்களில் வளர்க்கப்படுகின்ற அக்கினி ஏற்கனவே எரிகின்ற தீயால் ஏற்றப்படுவதில்லை. யாக அக்கினி அவ்வளவு புனிதமாகக் கருதப்படுகின்றது. யாகத்திற்குத் தீ மூட்ட அரணிக்கட்டைகளைப் பயன்படுத்துகின்றனர். மேலொன்றும் கீழொன்றுமாக உள்ள இரண்டு கட்டைகள் அவை. அவற்றை உரசுவதால் ஏற்படுகின்ற தீப்பொறியால் யாக அக்கினியை வளர்க்கின்றனர். அரணிக்கட்டைகளில் மறைந்துள்ள அந்த அக்கினி கருவிற்கு ஒப்பிடப்படுகிறது. கருப்பைக்குள் கரு எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது என்பது பிரமிப்பூட்டுகின்ற ஒரு விஷயமாகும். இயற்கையின் மகிமைகளின் ஒன்றாகக் கருதப்பட வேண்டியது அது. எவ்வாறு கரு வெளியில் தெரிவதில்லையோ அதுபோல் அரணிக்கட்டைகளில் மறைந்துள்ள அக்கினியும் வெளியில் தெரிவதில்லை.

நமது ஆன்மா அந்த அக்கினிபோல் வெளியில் தெரியாததாக, கருப்பைக்குள் கரு பாதுகாக்கப்படுவது போல் இதயக் குகைக்குள் விளங்குகிறது. அரணிக்கட்டைகளை உரசும்போது எவ்வாறு அக்கினி வெளிப்படுகிறதோ அதுபோல் தியானத்தின்மூலம் யோகிகள் அந்த ஆன்மாவைக் காண்கின்றனர்.

ஆணையிடுபவன் நீ

9. யதச்சோதேதி ஸூர்யோ அஸ்தம் யத்ர ச கச்சதி
தம் தேவா ஸர்வே அர்ப்பிதாஸ்தது நாத்யேதி கச்சன ஏதத் வை தத்

யத- யாரிலிருந்து; ஸூர்ய-சூரியன்; உதேதி-உதிக்கிறானோ; யத்ர-எங்கே; அஸ்தம் கச்சதி ச மறைகிறானோ; தம்-அந்த இறைவனை; ஸர்வே-எல்லா; தேவா-தெய்வங்களும்; அர்ப்பிதா;-அடைகின்றனர்; தத் உ- அவரை; கச்சன-யாரும்; ந அத்யேதி-கடப்பதில்லை.

பொருள் : யாரிலிருந்து சூரியன் உதிக்கிறானோ, எங்கே மறைகிறானோ, அந்த இறைவனை எல்லா தெய்வங்களும் போற்றுகின்றனர். அவரை மீறி யாரும் நடப்பதில்லை. நீ கேட்ட பொருள் அந்த இறைவனே.

பிராண சக்தி நம்மை இயக்குகிறது, பிரபஞ்சத்தை இயக்குகிறது, தெய்வமாகப் போற்றப்படுகிறது என்று 7-ஆம் மந்திரத்தில் கண்டோம். பல்வேறு விதமாகச் செயல்படுகின்ற பிராண சக்தி பல்வேறு தெய்வங்களாகக் கொண்டாடப்படுகிறது. அந்த தெய்வங்கள் அனைத்தும், அதாவது பிராண சக்தி முழுவதும் முழுமுதற்பொருளாகிய இறைவனுக்கு அடங்கியதே. அவரது ஆணையால்தான் இந்தப் பிரபஞ்சம் இயங்குகிறது. அந்த இறைவனே நம்முள் ஆன்மாவாக விளங்குகிறார், அந்த ஆன்மாவை நீ என்று நசிகேதனுக்கு எமதர்மன் அறிவுறுத்துகிறான்.

இங்கே இருப்பதே அங்கே உள்ளது

10. யதேவேஹ ததமுத்ர யதமுத்ர ததன்விஹ
ம்ருத்யோ ஸ ம்ருத்யுமாப்னோதி ய இஹ நானேவ பச்யதி

இஹ-இங்கே; யத் ஏவ-எதுவோ; தத்-அது; அமுத்ர-அங்கே; யத்- எது; அமுத்ர-அங்கே; தத்-அது; அனு இஹ-இங்கே; ய-யார்; இஹ-இங்கே; நானா இவ-வேறுபாடு இருப்பதுபோல்; பச்யதி-காண்கிறானோ; ஸ:-அவன்; ம்ருத்யோ-மரணத்திலிருந்து; ம்ருத்யும்-மரணத்தை; ஆப்னோதி-அடைகிறான்.

பொருள் : இங்கே எது இருக்கிறதோ அதுவே அங்கே இருக்கிறது. அங்கே எது இருக்கிறதோ அதுவே இங்கும் இருக்கிறது. இந்த உலகில் வேறுபாடு இருப்பது போல் யார் காண்கிறானோ அவன் மரணத்திலிருந்து மரணத்தை அடைகிறான்.

இறைவனை எங்கும் தேடி கிடைக்காமல், கடைசியில் தன்னுள்ளே கண்டதாகக் கூறுகிறார் அப்பர் பெருமான்.
(தேடிக் கண்டுகொண்டேன் திருமாலொடு நான்முகனும்
தேடிக் தேடொணா தேவனே என்னுள்ளே
தேடிக் கண்டுகொண்டேன்-திரு அங்கமாலை தேவாரம்.)
எங்கும் நிறைந்துள்ள இறைவன் நம்முள்ளே ஆன்மாவாக விளங்குகிறார். எனவே இறைவனைத் தேட வேண்டுமானால் முதலில் நம்முள் தேட வேண்டும். இறைவனை அடைவதற்கான பாதை நம்முள்தான் இருக்கிறது.

மந்திரத்தின் இரண்டாம் வரி கருத்துச் செறிந்த ஒன்றாகும். இறைவன் என்னும் பேரொளியின் சுடர் ஒன்று நம்மில் இருக்கிறது; நம் ஒவ்வொருவருள்ளும் இருக்கிறது; மனிதர்கள் என்றல்ல, மிருகங்கள், தாவரங்கள் என்று உயிரினங்கள் அனைத்திலும் இருக்கிறது. சமுதாயத்தை நாம் அணுகுவதற்கான ஒரு முக்கிய அடிப்படைக் கருத்தை இங்கே காண்கிறோம். நம் ஒவ்வொருவருள்ளும் இருப்பது ஒரே இறைவனின் அம்சம் என்றால் நம்மில் வேறுபாடு இல்லை என்றாகிறது. எனவே வெறுப்பு, கோபம் போன்ற எதிர்மறை பண்புகளுக்கு இடமில்லாமல் போய்விடுகிறது.

எல்லாரிலும் எல்லா இடங்களிலும் இறைவன் இருக்கிறார் என்ற கருத்து நல்லொழுக்கத்திற்கு ஒரு சிறந்த அடிப்படை ஆகிறது. நான் ஏன் அடுத்தவனைத் துன்புறுத்தக் கூடாது? போன்ற கேள்விகளுக்கு இறைவன் நம்மைத் தண்டிப்பார் என்பதல்ல பதில்; நான் இறைவனின் அம்சம், நல்லவனாக இருப்பது என் இயல்பு என்பதே பதில். நான் எதற்காக என்னைச் சுற்றியிருப்பவர்களிடம் அன்பு பாராட்ட வேண்டும்? ஏன் மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும்? என்னைக் கட்டாயப்படுத்துவது எது? அதுதான் இரக்கம்; எங்கும் ஒரே பொருள் உள்ளது என்ற உணர்ச்சி என்று விளக்குகிறார் சுவாமி விவேகானந்தர்.

இவ்வாறு எல்லோரிலும் இறையம்சத்தைக் கண்டு அனைவரையும், அனைத்தையும் நேசிக்காதவன் மீண்டும் மீண்டும் பிறவிக்கு உள்ளாகிறான். எங்கும் ஒரே பேருணர்வு நிலவுவதைக் காண்கின்றவன் பிறவிச் சுழலிலிருந்து விடுபடுகிறான்.

உண்மையை அறிய மனனே கருவி

11. மஜஸைவேதமாப்தவ்யம் நேஹ நானாஸ்தி கிஞ்சன
ம்ருத்யோ ஸ ம்ருத்யும் கச்சதி ய இஹ நானேவ பச்யதி

இதம்-இந்த உண்மை; மனஸா-மனத்தினால்; ஆப்தவ்யம்-அடையப்படுகிறது; இஹ-இங்கே; நானா-வேறுபாடு; கிஞ்சன-எதுவும்; ந அஸ்தி- இல்லை; ய-யார்; இஹ-இங்கே; நானா இவ-வேறுபாடு இருப்பதுபோல்; பச்யதி-காண்கிறானோ; ஸ-அவன்; ம்ருத்யோ-மரணத்திலிருந்து; ம்ருத்யும்-மரணத்திற்கு; கச்சதி-செல்கிறான்.

பொருள் : இந்த உண்மை மனத்தினால் உணரப்படுகிறது. இந்த உலகில் வேறுபாடு எதுவும் இல்லை. இங்கே வேறுபாடு இருப்பதுபோல் யார் காண்கிறோனோ அவன் மரணத்திலிருந்து மரணத்திற்குச் செல்கிறான்.

எங்கும் இறைவன் இருக்கிறார், நம் ஒவ்வொருவருள்ளும் இறைவனின் அம்சமே நிலவுகிறது என்ற உண்மையை அறிவதற்கு நம்மிடமுள்ள ஒரே கருவி மனம். இந்த மனம் தூயதாகும்போது, ஒன்றாகும்போது அது இந்த உண்மையை அறிவதற்கான தகுதி பெறுகிறது.

தூய மனம் என்றால் என்ன?

எண்ணங்களே எழாத ஒருங்கிணைந்த மனமே தூய மனம், அந்த மனமே உண்மையைக் காட்ட வல்லது, சற்று விளக்கமாகக் காண்போம்.

தண்ணீர் தூய்மையாக இருக்கும்போது அதில் நாம் முகம் பார்க்க முடியும். அதில் எதைக் கலந்தாலும் அதன் தூய்மை கெடுகிறது. கலப்பது பாலாக இருந்தாலும், விஷமாக இருந்தாலும் விளைவு ஒன்றுதான். நமது முகம் அதில் பிரதிபலிக்காது. அதுபோல் மனமும் ஆன்மாவைப் பிரதிபலிக்க வேண்டுமானால் அதில் எண்ணங்களே இருக்கக் கூடாது. முதலில் நல்ல எண்ணங்களை மனத்தில் நிரப்புவதன்மூலம் தீய எண்ணங்களை விரட்ட வேண்டும். பிறகு நல்ல எண்ணங்களையும் விட்டுவிட வேண்டும். காலில் முள் ஒன்று தைத்தால் மற்றொரு முள்ளைக் கொண்டுவர வேண்டும். காலிலிருந்து முள்ளை எடுத்தபிறது இரண்டு முட்களையும் எறிந்துவிடுகிறோம். அதுபோல் அஞ்ஞான முள்ளை எடுப்பதற்கு ஞான முள்ளைத் தேட வேண்டியிருக்கிறது. அஞ்ஞானம் அழிந்ததும், ஞானம் அஞ்ஞானம் இரண்டையும் எறிந்துவிட வேண்டும் என்று இதனை விளக்குகிறார் ஸ்ரீராமகிருஷ்ணர்.

அதுபோலவே, மனத்தை உன்னிப்பாகக் கவனிக்கின்ற யாருக்கும் ஓர் உண்மை புரிய வரும். மனம் பல்வேறாகப் பிரிந்து கிடப்பதுதான் அது. ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொன்றை நிறைவேற்றத் துடித்துக் கொண்டிருப்பதை நாம் உணர முடியும். ஒரு தேரில் பூட்டப்பட்ட குதிரைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் செல்ல முற்படுமானால்  அதில் பயணம் செய்பவனின் கதி என்னவாகும்? மனம் பிளவுபட்டுக் கிடக்கின்ற ஒருவனின் கதியும் அதுதான். அவனால் எதையும் ஒழுங்காகச் செய்ய முடியாது. புற விஷயங்களையே செய்ய முடியாத அவனால் அக வாழ்க்கை என்பதை நினைத்துப் பார்க்கவே முடியாது. ஒருங்கிணைந்த மனம்தான் தூய மனம்.

தூய மனம் என்று கூறும்போது இந்த இரண்டு கருத்துக்களையும் மனத்தில்கொள்ள வேண்டும்.

அங்குஷ்ட்ட மாத்ர வித்யை : 12-13

இங்கே அங்குஷ்ட்ட மாத்ர வித்யை கூறப்படுகிறது. அங்குஷ்ட்டம் என்றால் பெருவிரல் இறைவன் பெருவிரல் அளவினராக இதயக் குகையில் உறைகிறார்.

12. அங்குஷ்ட்ட மாத்ர: புரு÷ஷா மத்ய ஆத்மனி திஷ்ட்டதி
ஈசனோ பூதபவ்யஸ்ய ; ததோ விஜுகுப்ஸதே ஏதத் வை தத்

அங்குஷ்ட்ட மாத்ர-பெருவிரல் அளவில்; புருஷ-இறைவன்; ஆத்மனி-உடம்பின்; மத்யே-நடுவில்; திஷ்ட்டதி-இருக்கிறார்; பூத பவ்யஸ்ய-இறந்த மற்றும் எதிர்காலங்களுக்கு; ஈசான-தலைவர்; தத-இந்த அறிவினால்; ந விஜுகுப்ஸதே-வெறுப்பதில்லை.

பொருள் : எங்கும் நிறைந்தவரும், இறந்த மற்றும் எதிர் காலங்களுக்குத் தலைவரும் ஆன இறைவன் உடம்பின் நடுவில் இதயக் குகையில் பெருவிரல் அளவில் இருக்கிறார். அவரை அறிந்தவன் யாரையும் வெறுப்பதில்லை. நீ கேட்ட பொருள் அவரே.

13. அங்குஷ்ட்டமாத்ர புரு÷ஷா ஜ்யோதிரிவாதூமக
ஈசானோ பூதபவ்யஸ்ய ஏவாத்ய ஸ உச்வ ஏதத் வை தத்

அதூமக-புகையற்ற; ஜ்யோதி: இவ-ஒளி போல்; அங்குஷ்ட்டமாத்ர-பெருவிரல் அளவில்; புருஷ-இறைவன்; பூத பவ்யஸ்ய-இறந்த மற்றும் எதிர்காலங்களுக்கு; ஈசான-தலைவர்; ஸ ஏவ-அவரே; அத்ய-இப்போது; ஸ உ- அவரே; ச்வ-பின்னர்.

பொருள் : எங்கும் நிறைந்தவரும், இறந்த மற்றும் எதிர் காலங்களுக்குத் தலைவருமான இறைவன் புகையற்ற ஒளிபோல் பெருவிரல் அளவினராக உள்ளார். இப்போது இருப்பவர் அவரே, என்றென்றும் நிலைத்திருப்பவரும் அவரே நீ கேட்ட பொருள் அவரே.

இறைவன் நம் இதயத்தில் ஆன்மாவாக விளங்குகின்ற நிலையில் அவருக்கு இங்கே ஒரு பரிமாணம் கூறப்படுகிறது. ஆன்மா பெருவிரல் இருப்பதாக இந்த மந்திரங்கள் கூறுகின்றன.

அளவில் பெரியதாக இருக்கின்ற மரத்தைப் புகைப்படம் எடுத்தால் அது அந்த புகைப்படச் சுருளின் அளவினதாக இருக்கும். அதுபோல், இதயத்தில் இஷ்டதெய்வத்தை தியானிக்கும்போது, ஆரம்ப காலங்களில் சிறிய உருவத்தையே தியானிக்க முடியும். இவ்வாறு தியானத்திற்கு வசதியாக இருப்பதைக் குறிப்பிடுவதற்காக பெருவிரல் அளவு என்று கூறப்பட்டுள்ளது.

அளவில் சிறியதாக இருப்பதால் அது ஆன்மா அல்ல, இறைவனின் அம்சம் என்று நினைத்துவிடக் கூடாது என்பதற்காகவே 13-ஆம் மந்திரம் அதனை ஒளி என்று குறிப்பிடுகிறது. சிறிய பொருளின் ஒளி சிறியதாக இருக்கும், பெரிய பொருளின் ஒளி பெரியதாக இருக்கும் என்று எந்த நியதியும் கிடையாது; சிறிய நவீன மின்விளக்குகள் பெரிய அரங்கங்களை ஒளிரச் செய்வதைக் காண்கிறோம். அது போல் பெருவிரல் அளவுடைய இந்த ஆன்மாவும் உணர்வுப் பேரொளியால் உடம்பையும் மனத்தையும் ஒளிரச் செய்கிறது.

புகையற்ற ஒளி என்பதும் கருத்தில்கொள்ள வேண்டிய ஒன்றாகும். ஒரு பொருள் எரிவதால் ஒளி உண்டாகிறது.

அந்தப் பொருளின் தன்மையைப் பொறுத்து புகை அதிகமாக இருக்கலாம், குறைவாக இருக்கலாம்; சில வேளைகளில் கண்ணுக்குத் தெரியாத அளவிற்குக்கூட இருக்கலாம். ஆனால் புகை இருந்தே தீரும். புகையற்ற ஒளி என்றால் அது எதையும் சாராத ஒளி என்பது பொருள்.

இறைவனின் அம்சமான இத்தகைய ஒளிப் பொருள் நம்மில் உள்ளது. அதை உணர்ந்தவன் மரணத்தை வெல்கிறான் என்று நசிகேதனுக்கு உணர்த்துகிறான் எமதர்மன்.

உண்மையை அறியாதனும் அறிந்தவனும் : 14-15

14. யதோதகம் துர்கே வ்ருஷ்ட்டம் பர்வதேஷ விதாவதி
ஏவம் தர்மான் ப்ருதக் பச்யன்ஸ்தானேவானுவிதாவதி

பர்வதேஷு-மலைகளில்; துர்கே-உயர்ந்த பகுதியில்; வ்ருஷ்ட்டம்-பெய்த; உதகம்-மழை நீர்; யதா-எவ்வாறு; விதாவதி-ஓடிவிடுகிறதோ; ஏவம்-அவ்வாறு; தர்மான்-உயிரினங்களை; ப்ருதக்-வேறாக; பச்யன்-காண்பவன்; தான் ஏவ-அவற்றையே; அனுவிதாவதி-பின்பற்றி ஓடுகிறான்.

பொருள் : மலைகளின் உயர்ந்த பகுதியில் பெய்த மழை நீர் எவ்வாறு தாழ்ந்த பகுதிகளுக்கு ஓடிவிடுகிறதோ, அவ்வாறே உயிரினங்களை வெவ்வேறாகக் காண்பவன் மீண்டும் மீண்டும் அவையாகப் பிறக்கிறான்.

இறைவன் ஆன்மாவாக நம்மில் உறைகிறார் என்று கண்டோம். எல்லோரிலும் உள்ளது. இறையம்சம் என்றால் வேறுபாட்டுக்கு இடமேது? வேறுபாடு காண்பவன் உண்மையை அறியவில்லை. உண்மையை உணராததால் மீண்டும் மீண்டும் பிறப்புக்கு உள்ளாகிறான். இந்தக் கருத்தை 10 ஆம் மந்திர விளக்கவுரையில் விரிவாகக் கண்டோம்.

15. யதோதகம் சுத்தே சுத்தம் ஆஸிக்தம் தாத்ருகேவ பவதி
ஏவம் முனேர் விஜானத ஆத்மா பவதி கௌதம

கௌதம-நசிகேதா; சுத்தே-தெளிந்த நீரில்; ஆஸிக்தம்-விடப்பட்ட; சுத்தம்-தெளிந்த; உதகம்-நீர்; யதா-எவ்வாறு; தாத்ருக் ஏவ-அதுவாகவே; பவதி-ஆகிறதோ; ஏவம்-அவ்வாறு; விஜானத-உண்மையை உணர்ந்த; முனே-மகானின்; ஆத்மா-ஆன்மா; பவதி-ஆகிறது.

பொருள் : நசிகேதா தெளிந்த நீரில் விடப்பட்ட தெளிந்த நீர் எவ்வாறு அதுவாகவே ஆகிறதோ அவ்வாறு உண்மையை உணர்கின்ற மகான் ஆன்ம வடிவாகவே ஆகிறார்.

குளவியை எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருக்கின்ற புழு கடைசியில் குளவியாகவே மாறிவிடுகிறது என்பதை நீ கேட்டதில்லையா?  என்று விளக்குகிறார் ஸ்ரீராமகிருஷ்ணர். நான் ஆன்மா என்பதைப் பல்வேறு கோணங்களில் ஆழ்ந்து சிந்திக்கும்போது நான் ஆன்மா என்ற ஆன்ம அனுபூதி வாய்க்கிறது.

இதி காடக உபநிஷதி த்விதீயாத்யாயே ப்ரதமா வல்லீ
----------------------------------------------------------------------------------------------------------

மரண பயத்தை வெல்!
மரணத்தைவிட கொடியது மரண பயம். மரணம் ஒரு முறைதான் மனிதனைக் கொல்கிறது. ஆனால் மரண பயம் ஒவ்வொரு கணமும் அவனைக் கொன்று கொண்டிருக்கிறது. எனவே மரண பயத்தை விடுமாறு இந்தக் கடைசி அத்தியாயத்தில் எமதர்மன் அறிவுரை கூறுகிறான். ஆன்ம அனுபூதி, இறையனுபூதி என்று அனைத்து உயர் அனுபவங்களுக்கும் இது முதற்படியாக அமைவது இங்கே விளக்கப்படுகிறது.

மரணத்திற்குப் பின்னால் என்ன உள்ளது என்பது நசிகேதனின் கேள்வி. அதற்கு மரணத்திற்குப் பின்னால் ஆன்மா இருக்கிறது. உண்மையில் நீ ஆன்மா, மரணம் என்பது உடம்பிற்கு மட்டுமே. உனக்கு மரணம் இல்லை என்று பல கோணங்களில் இதுவரை எமதர்மன் கூறியதைக் கண்டோம்.

நமக்கு மரணம் இல்லாததால் நாம் தைரியமாக மரணத்தை எதிர்கொள்ளலாம் அதற்கு ஒரு படியாக வாழும்போதே மரண பயத்தை விலக்கி வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.

எப்படி கற்றுக்கொள்வது?

அதற்கு மூன்று அடிப்படை உண்மைகளைப் புரிந்து கொள்ளுமாறு கூறுகிறார் எமதர்மன்.

மூன்று உண்மைகள்(1-4)

வாழ்க்கை ஒரு பிரதிபிம்பம்

1. ஊர்த்வமூலோ வாக்சாக ஏ÷ஷாச்வத்த ஸனாதன
ததேவ சுக்ரம் தத் ப்ரஹ்ம ததேவாம்ருதமுச்யதே
தஸ்மின் லோகா ச்ரிதா ஸர்வே
தது நாத்யேதி கச்சன ஏதத்வை தத்

ஏஷ-இந்த; அச்வத்த-அரச மரம்; ஸனாதன-பழமையானது; ஊர்த்வ மூல-மேலே வேர் உள்ளது; அவாக் சாக-கீழே கிளைகள் உடையது; தத் ஏவ-அதுவே; சுக்ரம்-தூயது; தத்-அதுவே; ப்ரஹ்ம-இறைவன்; தத் ஏவ-அதுவே; அம்ருதம்-அழிவற்றது; உச்யதே-சொல்லப்படுகிறது; தஸ்மின்-அதில்; ஸர்வே-எல்லா; லோகா-உலகங்களும்; ச்ரிதா-சார்ந்திருக்கின்றன; தத் உ-அதனை; கச்சன-எதுவும்; ந அத்யேதி-கடந்திருக்கவில்லை.

பொருள் : இந்த அரச மரம் பழமையானது, மேலே வேரும் கீழே கிளைகளும் உடையது. அதுவே தூயது. அதுவே இறைவன். அது அழிவற்றது. எல்லா உலகங்களும் அதையே சார்ந்திருக்கின்றன. அதை யாரும் கடந்து செல்ல முடியாது. நீ கேட்ட உண்மை அதுவே.

தலைகீழாக நிற்கின்ற ஓர் அரச மரத்திற்கு வாழ்க்கை ஒப்பிடப்படுகிறது (இத்தகைய உவமை கீதையிலும்(15.1.3) வருகிறது. அங்கே இன்னும் விரிவாக ஆராயப்படுகிறது.) எப்போது ஒரு பொருள் தலைகீழாகத் தெரியும்? பிரதிபலிக்கும்போது. ஆற்றின் கரையில் நிற்கின்ற மரத்தின் பிரதிபிம்பத்தைத் தண்ணீரில் பார்க்கும் போது மரம் தலைகீழாக நிற்பதுபோல் தோன்றும். அதன் வேர்ப் பகுதி மேலேயும், கிளைகள் கீழேயும் இருப்பதாகத் தெரியும். பிரதிபிம்பம் உண்மையல்ல.

இங்கே வாழ்க்கை ஒரு தலைகீழான மரத்திற்கு ஒப்பிடப்படுகிறது. அதாவது வாழ்க்கை ஒரு பிரதிபிம்பம். எனவே இது உண்மையல்ல. அதாவது வாழ்க்கையில் காண்பது உண்மையல்ல, தலைகீழ்த் தோற்றம். இதன் பொருள் என்ன?

வாழ்க்கையில் நாம் இன்பமாகக் காண்பவை உண்மையில் இன்பம் அல்ல. அதுபோலவே துன்பமாகக் காண்பவை துன்பம் அல்ல, பிறப்பை நாம் இன்பமாகக் காண்கிறோம், மரணத்தைக் கண்டு நடுங்குகிறோம். ஆனால் உண்மையை உணர்ந்த மகான்கள் பிறப்பு வேண்டாம் என்கிறார்கள், மரணத்தைக் கண்டு சிரிக்கிறார்கள். மரணத்தை நேசிக்க வேண்டும் என்கிறார் சுவாமி விவேகானந்தர்; துறவு என்பது மரணத்தை நேசித்தல். சாதாரண மனிதர்கள் வாழ்வை நேசிக்கிறார்கள். துறவி மரணத்தை நேசிக்க வேண்டும். அது போலவே, உலகம், அதன் உறவுகள், அது தரும் சுகங்கள் எல்லாவற்றையும் உண்மை, நிலையானவை என்று நம்புகிறோம், ஆனால் உண்மை அதுவல்ல.

அப்படியானால் உண்மை என்ன?

ஆற்று நீரில் மரம் தலைகீழாக தெரிகிறது. அதன் உண்மையை உணர வேண்டுமானால் அந்தப் பிரதிபிம்பத்தை விட்டுவிட்டு, அந்தப் பிரதிபிம்பத்திற்கு ஆதாரமான மரத்தைப் பார்க்க வேண்டும். அதுவே உண்மை. அது போலவே வாழ்க்கையின் உண்மையை அறிய வேண்டுமானால் வாழ்க்கைக்கு ஆதாரமான இறைவனை நாட வேண்டும்.

வாழ்க்கை-மரத்தையே இறைவனாகக் கூறுவது மந்திரம். வேத, உபநிஷதக் கண்ணோட்டத்தின் அடிப்படையை இங்கே காண்கிறோம். ஒருமை உணர்வு என்பது வேத ரிஷிகளின் அனுபூதியாக இருந்தது. அவர்கள் எங்கும் ஒரே உணர்வுப் பொருளையே கண்டனர். வாழ்க்கை என்பது இறைவனிலிருந்து வேறுபட்டது அல்ல. ஆன்மா, கடவுள் அனுபூதி என்று எது வேண்டுமானாலும் இந்த வாழ்க்கையிலிருந்து விலகி ஓடுவதால் பயனில்லை. இந்த எல்லா நிலைகளும் வாழ்க்கையைச் சார்ந்துள்ளன என்பதையே எல்லா உலகங்களும் அதையே சார்ந்திருக்கின்றன என்று மந்திரம் கூறுகிறது. அதுவே நீ தியானப் பகுதி இது.

இறைவனே தலைவர்

2. யதிதம் கிஞ்ச ஜகத் ஸர்வம் ப்ராண ஏஜதி நி ஸ்ருதம்
மஹத்பயம் வஜ்ரமுத்யதம் ய ஏதத்விதுரம்ருதாஸ்தே பவந்தி

இதம்-இங்கே; யத் கிம் ச-எந்தெந்த; ஜகத்-உலகங்கள் உண்டோ; ஸர்வம்-அனைத்தும்; ப்ராணே-பிராணனில்; நி:ஸ்ருதம்-வெளிப்படுகிறது; ஏஜதி-இயங்குகிறது; மஹத் பயம்-பெரும் பயம்; உத்யதம்-உயர்த்திய; வஜ்ரம்-வஜ்ராயுதம்போல்; ய-யார்; ஏதத்-இதனை; விது-அறிகிறார்களோ; தே-அவர்கள்; அம்ருதா-மரணமற்றவர்களாக; பவந்தி-ஆகின்றனர்.

பொருள் : இந்த உலகங்கள் அனைத்தும் பிராணனிலிருந்து வெளிப்படுகின்றன; பிராணனால் இயங்குகின்றன. வஜ்ராயுதத்தை உயர்த்திப் பிடித்திருப்பதுபோல் இறைவன் இருக்கின்ற பெரும் பயம் காரணமாகத் தான் இந்த இயக்கங்கள் நடைபெறுகின்றன. இதனை அறிபவர்கள் மரணமற்றவர்கள் ஆகின்றனர்.

பிராணனால்தான் அனைத்தும் இயங்குகின்றன என்பது பற்றி 2.1.7 விளக்கவுரையில் விரிவாகக் கண்டோம். இறைவனின் சக்தியாகிய அந்தப் பிராணன் எவ்வாறு இயங்குகிறது? இறைவனிடம் உள்ள பயத்தால் என்கிறது இந்த மந்திரம்.

வஜ்ராயுதம் என்பதற்கு இரண்டு பொருள் உண்டு. ஒன்று, இடி; மற்றொன்று, விருத்திராசுரனை அழிப்பதற்காக ததீசி முனிவரின் எலும்பிலிருந்து செய்யப்பட்ட ஆயுதம். இரண்டும் பேராற்றலின் சின்னங்கள். இறைவன் பேராற்றலின் வடிவமாக உள்ளார் என்பது இங்கே சுட்டிக்காட்டப்படுகிறது.

வாழ்க்கையின் உண்மையை அறிய வேண்டுமானால் இறைவனை நாட வேண்டும் என்று கண்டோம்(1). அந்த இறைவன் பேராற்றலின் உறைவிடம், அனைத்திற்கும் தலைவர் என்பதை இந்த மந்திரம் கூறுகிறது.

பயம் ஓர் அடிப்படை உணர்ச்சி

3. பயாதஸ்யாக்னிஸ்தபதி பயாத் தபதி ஸூர்ய
பயாதிந்த்ரச்ச வாயுச்ச ம்ருத்யுர் தாவதி பஞ்சம

அஸ்ய-அவர்மீதுள்ள; பயாத்-பயத்தினால்; அக்னி-அக்கினி; தபதி-எரிக்கிறது; ஸூர்ய-சூரியன்; தபதி-சுடுகிறது; இந்த்ர: ச-இந்திரனும்; வாயு ச-வாயு தேவனும்; பஞ்சம-ஐந்தாவதான; ம்ருத்யு-மரண தேவனும்; பயாத்-பயத்தினால்; தாவதி-ஓடுகின்றனர்.

பொருள் : இறைவன் மீதுள்ள பயத்தினால் அக்கினி எரிக்கிறது; சூரியன் சுடுகிறது. இந்திரனும் வாயுதேவனும் தத்தம் வேலைகளைச் செய்கின்றனர். ஐந்தாவதான மரண தேவனும் அந்த பயத்தினால்தான் தன் தொழிலைச் செய்கின்றான்.

எனக்கு மேல் ஒருவன் இருக்கிறான். அவனுக்குப் பதில் சொல்ல நான் கடமைப்பட்டவன் என்ற உணர்ச்சி இருக்கும்போது ஒருவன் கண்ணும்கருத்துமாக வேலை செய்கிறான். இயற்கைச் சக்திகள் அனைத்தும் அவ்வாறு செயல்படுவதாக இங்கே கூறப்படுகிறது. தாங்கள் தவறினால் தண்டிப்பதற்காக ஒருவர் உயர்த்திய ஆயுதத்துடன் நிற்கிறார் என்ற பயத்துடன் இயற்கை சக்திகள் வேலை செய்கின்றன.

பொதுவாக இறைவனை அன்பு, இனிமை, மென்மை, கருணை போன்ற அமைதியான குணங்களின் இருப்பிடமாகத்தான் கருதுகிறோம். ஆனால் வாழ்க்கைக்கு மறுபக்கம் ஒன்று உள்ளது. பயங்கரம், கொடுமை போன்ற பண்புகள் உலகில் நிலவுவதை யாரும் மறுக்க முடியாது. அவையும் இறைவனிலிருந்தே வந்திருக்க வேண்டும். இல்லையென்றால் இறைவனின் ஆதிக்கம் இல்லாத இடங்களும் இருப்பதாக ஆகிவிடும். எனவே பயங்கரம் போன்ற பண்புகளையும் சேர்த்து இறைவனைக் காணும்போதுதான் வாழ்க்கையை முழுமையாக ஏற்றுக்கொண்டவர்கள் ஆவோம். படுபயங்கரத்தின் உறைவிடமாக ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்குக் காட்டிய விசுவரூப தரிசனம் வாழ்க்கையின் இந்த மறுபக்கமே(ஸ்ரீமத் பகவத்கீதை(11.1.44). காளி, நரசிம்ம மூர்த்தி, ருத்திரன் போன்ற பயங்கர வடிவில் தெய்வத்தை வழிபடுவதன் உண்மை இதுவே.

இவ்வாறு மரணபயம் முதலான அனைத்து எதிர்மறை உணர்ச்சிகளையும் வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டு, வாழ்க்கையை முழுமையாக இறைவனை நோக்கித் திருப்புமாறு இந்த மந்திரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்த உண்மைகள் உணர்வதன் விளைவு

4. இஹ சேதசகத் போத்தும் ப்ராக் சரீரஸ்ய விஸ்ரஸ
தத ஸர்கேஷு லோகேஷு சரீரத்வாய கல்பதே

இஹ-இங்கே; சரீரஸ்ய-உடம்பு; விஸ்ரஸ-விழுவதற்கு; ப்ராக்-முன்பு; போத்தும்-உணர்வதற்கு; அசகத் சேத்-முடியுமானால்; தத-இல்லாவிட்டால்; ஸர்கேஷு லோகேஷு-உயிரினங்கள் உள்ள உலகில்; சரீரத்வாய-உடலைப் பெற; கல்பதே-நேர்கிறது.

பொருள் : இங்கே உடம்பு வீழ்வதற்கு முன்பு இந்த உண்மைகளை உணர முடியாமானால் அகக் காட்சி வாய்க்கிறது. உணர முடியாவிட்டால் உலகில் மீண்டும் மீண்டும் பிறக்க நேர்கிறது.

அகக் காட்சியின் படிகள்

வாழ்க்கையை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் போது அகக் காட்சி தெளிவு பெறுகிறது. ஆன்ம அனுபூதியை நாடி ஆன்மீகப் பயணத்தை மேற்கொள்பவர்கள் முதலில் சந்திப்பது இருளையே, குழப்பத்தையே. குரு ஒருவரின் வழிகாட்டுதலுடன் தொடர்ந்து சாதனைகளில் ஈடுபடும் போது இந்த குழப்பங்கள் விலகுகின்றன. மனம் பக்குவம் பெறப்பெற அகவுலகக் காட்சி தெளிவாகிறது; புறவுலகை விட அகவுலகம் உண்மையானதாகத் தெரியத் தொடங்குகிறது. இவ்வாறு அகக் காட்சி தெளிவு பெறுவதை இந்த மந்திரம் நான்கு படிகளாகக் கூறுகிறது.

5. யதாதர்சே ததாத்மனி யதா
ஸ்வப்னே ததா பித்ருலோகே
யதாப்ஸு பரீவ தத்ருசே ததா கந்தர்வலோகே
சாயாதபயோரிவ ப்ரஹ்ம லோகே

ஆதர்சே-கண்ணாடியில்; யதா-எவ்வாறோ; ததா-அவ்வாறு; ஆத்மனி-புத்தியில்; ஸ்வப்னே-கனவில்; யதா-எவ்வாறோ; ததா-அவ்வாறு; பித்ருலோகே-பித்ருலோகத்தில்; அப்ஸு தண்ணீரில்; யதா-எவ்வாறோ; பரிஇவ-தெளிவற்று; த்தருசே-காணப்படுகிறதோ; ததா-அவ்வாறு; கந்தர்வ லோகே-கந்தர்வ லோகத்தில்; சாயா தபயோ; இவ-நிழலும் வெயிலும்போல்; ப்ரஹ்மலோகே-பிரம்ம லோகத்தில்.

பொருள் : புத்தியில் கண்ணாடியில் போலவும், பித்ரு லோகத்தில் கனவில் போலவும், கந்தர்வ லோகத்தில் தண்ணீர்போல் தெளிவற்றும், பிரம்ம லோகத்தில் நிழலும் வெயிலும் போல் தெளிவாகவும் அகக் காட்சி வாய்க்கிறது.

1. கந்தர்வ லோகம்: இதுபோன்ற உலகங்கள் போகங்களுக்கு உரியவை. பூமியில் ஏராளம் நற்பணிகள் செய்தவர்கள் தங்கள் புண்ணிய பலனை அனுபவிப்பதற்காகச் செல்கின்ற உலகங்கள் இவை.

சுகபோக நாட்டங்களிலிருந்து விடுபடாத நிலைக்கு இந்த உலகங்கள் உதாரணமாகக் கூறப்பட்டுள்ளன. மனம் சுகபோகங்களை நாடுகின்ற நிலையில் ஆன்மா பற்றி உண்மைகள் தெளிவற்றதாக உள்ளன. நீரில் தெரிகின்ற பிம்பம் ஒரு சிறிய அலை எழுந்தாலும் எவ்வாறு தெளிவற்றுப் போய்விடுகிறதோ, அவ்வாறே இந்த நிலையில் இருப்பவனின் விவேகம், லட்சிய நாட்டம் போன்றவை சிறிய எதிர்மறை எண்ணங்களாலும் கலங்கிவிடுகின்றன.

2. பித்ரு லோகம்: இறந்தவர்கள் வாழும் உலகம் இது. உடம்பு வீழ்ந்த பிறகு உள்ள நிலை இது. சாதனைகளின்மூலம் உடம்பிலிருந்து தன்னைப் பிரித்தறியத் தெரிந்த ஒருவனின் நிலைக்கு உதாரணமாக இது கூறப்படுகிறது. இங்கே ஆன்மா பற்றிய உண்மைகள் கனவுக் காட்சிகள் போல் உள்ளன. கனவுக் காட்சிகள் அந்த நேரத்திற்கு முற்றிலும் உண்மைப்போல் விழித்தபிறகு உண்மையற்றவை என்றும் தெரிபவை. அதுபோல், உடம்பு வேறு, தான் வேறு என்பதை அனுபவரீதியாக உணராதவன் சில நேரங்களில் அக உலகத்திற்கும் சில நேரங்களில் புற உலகத்திற்குமாக ஊசலாடுகிறான். இரண்டும் அந்தந்த நேரங்களுக்கு உண்மைபோலவே தெரிகின்றன.

3. புத்தி: புத்தி பற்றியும் அதன் விழிப்புபற்றியும் ஏற்கனவே(1.3.3.9) விரிவாகக் கண்டோம். புத்தி விழிப்புற்ற நிலையில் அவனுக்கு அக உண்மைகள் அழுக்கற்ற கண்ணாடியில் தெரிகின்ற பிம்பம்போல் தெளிவாக உள்ளன. இருந்தாலும் கவனமில்லாமல் இருந்தால் கண்ணாடி அழுக்குற வாயப்பு உள்ளது. எனவே புத்தி விழிப்புற்ற நிலையில் இருப்பவனும் கவனமாக இருக்க வேண்டும்.

4. பிரம்ம லோகம்: பிரம்ம லோகம், கைலாசம், வைகுண்டம் போன்றவை தெய்வங்களின் உறைவிடங்களாகக் கருதப்படுபவை. சாதனைகள்மூலம் இறைநிலை பெற்றவர்களுக்கு உவமையாக இங்கே கூறப்பட்டுள்ளது. நிழலும் வெயிலும் என்ற உவமை நேரடியாக பொருந்துவதல்ல. இறைநிலை அல்லது ஆன்ம நிலை என்பது எந்த உவமையாலும் விளக்கப்பட முடியாதது. எனவே கோடி காட்டுவதுபோல் ஓர் உதாரணம் சொல்லப்பட்டுள்ளது.  நிழலும் வெயிலும் எதிரிடையானவை. நிழல் இருப்பதால் வெயிலும், வெயில் இருப்பதால் நிழலும் தெளிவு பெறுகின்றன. அவ்வாறு துல்லியமாக தெளிவாக ஆன்மக் காட்சி கிடைப்பதாக இங்கே கூறப்படுகிறது.

சாதனை முறை : 6-8

அகக் காட்சி தெளிவுற்று, மனம் குழப்பங்களிலிருந்து விடுபட்ட பிறகுதான் உண்மையான ஆன்மீக சாதனை ஆரம்பிக்கிறது. இந்த மூன்று மந்திரங்கள் சாதனைபற்றி கூறுகின்றன. புலன்களைபற்றிய உண்மையை அறிவதிலிருந்து சாதனை தொடங்குகிறது.

6. இந்த்ரியாணாம் ப்ருதக் பாவம் உதயாஸ்தமயௌ ச யத்
ப்ருதக் உத்பத்யமானானாம் மத்வா தீரோ சோசதி

இந்த்ரியாணாம்-புலன்களின்; ப்ருதக்-தனி; யத்-எந்த; பாவம்-தன்மை; உதய அஸ்தமயௌ ச-எழுச்சி மற்றும் ஒடுக்கத்தையும்; ப்ருதக் -தனியாக; உத்பத்ய மானானாம்-உண்டானவதையும்; மத்வா-பகுத்தறிகின்ற; தீர-விவேகி; ந சோசதி-கவலைப்படுவதில்லை.

பொருள் : புலன்களின் தனித்தன்மை, அவற்றின் எழுச்சி மற்றும் ஒடுக்கம், தனித்தனியான உற்பத்தி ஆகியவற்றைப் பகுத்தறிகின்ற விவேகி கவலையிலிருந்து விடுபடுகிறான்.

ஐந்து புலன்களும் பஞ்சபூதங்களின் தன்மைகளை அடிப்படையாகப் பெற்றுள்ளன. பஞ்சபூதங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பண்பு உள்ளது.

காது-ஆகாசம்-ஒலி
மூக்கு-வாயு-மணம்
கண்-அக்கினி-ஒளி
நாக்கு-தண்ணீர்-சுவை
உடம்பு(தோல்)-பூமி-ஸ்பரிசம்

இவ்வாறு ஒவ்வொரு புலனும் பஞ்ச பூதங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் தனித்தனியாகத் தோன்றின, தனித்தனி செயல்களைச் செய்கின்றன. விழிப்புநிலையில் எல்லா புலன்களும் செயல்படுகின்றன. கனவிலும் தூக்கத்திலும் ஒடுங்கிவிடுகின்றன.

புலன்களின் ஆரம்பமும் சரி, செயல்படுகின்ற நேரமும் சரி, ஒடுக்கமும் சரி எல்லாம் ஜீவனுடன், பிராணனுடன் சம்பந்தப்பட்டவை; ஆன்மாவுடன் எந்த விதத்திலும் சம்பந்தப்படாதவை. புலன்களின் செயல்பாட்டிற்கும் ஆன்மாவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதே இங்கு நாம் கருத்தில் கொள்ள வேண்டியது. இந்த உண்மையை அறிபவன் புலன்களின் செயல்பாட்டால் கலங்குவதில்லை; தான் ஆன்மா என்பதில் நிலைபெற்று நிற்கிறான் அவன்.

7. இந்த்ரியேப்ய பரம் மனோ மனஸ ஸத்வமுத்தமம்
ஸத்வாததி மஹானாத்மா மஹதோ வ்யக்தமுத்தமம்

இந்த்ரியேப்ய-புலன்களைவிட; மன-மனம்; பரம்-வலிமையானது; மனஸ-மனத்தைவிட; ஸத்வம்-புத்தி; உத்தமம்-வலிமையானது; ஸத்வாத்-புத்தியைவிட; ஆத்மா-ஆன்மா; அதிமஹான்-மிக மேலானது; மஹத-மேலான ஆன்மாவைவிட; அவ்யக்தம்-அவ்யக்தம்; உத்தமம்-மேலானது

பொருள் : புலன்களைவிட மனம் வலிமையானது. மனத்தை விட புத்தி வலிமையானது. புத்தியைவிட ஆன்மா மிக மேலானது. மேலான ஆன்மாவைவிட மாயை மேலானது.

8. அவ்யக்தாத் து பர: புரு÷ஷா வ்யாபகோலிங்க ஏவ ச
யம் ஜ்ஞாத்வா முச்யதே ஜந்து அம்ருதத்வம் ச கச்சதி

அவ்யக்தாத் து-அவ்யக்தத்தைவிட; புருஷ-இறைவன்; பர-மேலானவர்; வ்யாபக-எங்கும் நிறைந்தவர்; அலிங்க; ஏவ ச-எந்த அடையாளமும் இல்லாதவர்; யம்-யாரை; ஜ்ஞாத்வா-அனுபூதியில் உணர்வதால்; ஜந்து-மனிதன்; முச்யதே-விடுபடுகிறான்; அம்ருதத்வம் ச-மரணமிலாப் பெருநிலையையும்; கச்சதி-அடைகிறான்.

பொருள் : அவ்யக்தத்தைவிட இறைவன் மேலானவர். அவர் எங்கும் நிறைந்தவர். (இவர்தான் என்று சுட்டிக்காட்டுவதற்கு) எந்த அடையாளமும் இல்லாதவர். அவரை அனுபூதியில் உணர்வதால் மனிதன் (தளைகளிலிருந்து) விடுபடுகிறான்; மரணமிலாப் பெருநிலையையும் அடைகிறான்.

புலன்களின் செயல்பாடு தனியானவை அவற்றுடன் ஆன்மாவிற்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பதை உணர்ந்து மனம் ஆன்மாவில் நிலைபெறும்போது புலன்கள் இயல்பாகவே தங்கள் வேகத்தை இழக்கின்றன. இதனைப் படிப்படியாக 7 மற்றும் 8 ஆம் மந்திரங்கள் தெரிவிக்கின்றன 1.3.10-11 மந்திரங்களும் இதே கருத்தை வலியுறுத்துவதாக அமைந்தது ஒப்புநோக்கத் தக்கது.

இறையனுபூதி : (9-16)

இறைவனை உணர்ந்தால் மனிதன் மரணமிலாத நிலையை அடைகிறான். அந்த நிலையைப்பற்றிய சில விளக்கங்கள் இங்கே தரப்படுகின்றன.

இந்தக் கண்களால் காண முடியாது

9. ந ஸந்த்ருசே திஷிட்டதி ரூபமஸ்ய
ந சக்ஷúஷா பச்யதி கச்சனைனம்
ஹ்ருதா மனீஷா மனஸா பிக்ல்ருப்தோ
ய ஏதத் விதுரம்ருதாஸ்தே பவந்தி

அஸ்ய-அவரது; ரூபம்-உருவம்; ஸந்த்ருசே-காணக்கூடியதாக; ந திஷ்ட்டதி-இல்லை; ஏனம்-அவரை; கச்சன-யாரும்; சக்ஷúஷா-கண்களால்; ந பச்யதி-காண்பதில்லை; ஹ்ருதா-இதயத்திலுள்ள பொருளால்; மனீஷா-விழிப்புற்ற புத்தியில்; மனஸா-மனத்தின் தொடர்ந்த முயற்சியால்; அபி க்ல்ருப்த-உணரப்படுகிறார்; ய-யார்; ஏதத்-அதனை; விது-அறிகிறாரோ; தே-அவர்கள்; அம்ருதா-மரணமற்றவர்களாக; பவந்தி-ஆகின்றனர்.

பொருள் : இறைவனுடைய உருவம் புறத்தில் காணக் கூடியதாக இல்லை. யாரும் அவரைக் கண்களால் காண்பதில்லை. இதயக் குகையிலுள்ள ஆன்மாவால், விழிப்புற்ற புத்தியில், மனத்தின் தொடர்ந்த முயற்சியால் உணரப்படுகிறார். அவரை அறிபவர்கள் மரணமற்றவர்களாக ஆகின்றனர்.

மிகவும் பொருள் பொதிந்த மந்திரம் இது. இறையனுபூதி என்பதன் ஒரு தெளிவான விளக்கத்தை இங்கு நாம் காண்கிறோம். இறையனுபூதிக்கு இங்கே ஐந்து விளக்கங்கள் தரப்படுகின்றன.

1. புறத்தில் காணக்கூடியதல்ல; 2. கண்களால் காண்பதில்லை: இந்தக் கருத்துக்களை ஏற்கனவே(2.2.14-15)கண்டோம்.

3. ஆன்மாவால் காணப்படுகிறது. உடம்பிலுள்ள சாதாரணக் கண்கள் இறைவனைக் காண்பதில்லை என்றால் அவரைக் காண்பது, உணர்வது யார்? இதயக் குகையிலுள்ள ஆன்மா. இதயக் குகை பற்றியும் ஆன்மா பற்றியும் ஏற்கனவே விரிவாகக் கண்டுள்ளோம். இறைவன் ஒரு பேரொளி என்றால் ஆன்மா ஒரு சுடர், ஒரு பொறி. ஒவ்வொருவரிலும் அந்தப் பொறி உள்ளது. அந்தப் பொறிதான் இறைவனை அறிகிறது.

4. புத்தி தெளிய வேண்டும்: ஆன்மா இறைவனை எங்கே காண்கிறது? விழிப்புற்ற புத்தியில். இதுபற்றியும் ஏற்கனவே (1.3.6-9) விரிவாகக் கண்டுள்ளோம்.

5. மனத்தின் தொடர்ந்த முயற்சி வேண்டும்: ஆன்மா, இதயக் குகை, புத்தி என்றெல்லாம் கூறியதால் அவை ஏதோ நம்மை மீறிய விஷயங்கள் என்று எண்ணி விடாமல், நமது கருவியாகிய மனத்தைத் தொடர்ந்து சாதனைகளில் ஈடுபடுத்த வேண்டும். ஏதாவது ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து முழுமூச்சுடன் அதில் முன்னேற வேண்டும்.

இவ்வாறு மனத்தின் தொடர்ந்த முயற்சியால் புத்தி தெளிகிறது. தெளிந்த புத்தியால் தன்னை ஆன்மாவுடன் ஒன்றுபடுத்திக் காண முடிகிறது. நம்மில் உள்ள இருவரில் (1.3.1) நாம் ஜீவன் என்ற நிலை மாறி நாம் ஆன்மா என்ற நிலை உருவாகிறது. இந்த ஆன்மா நிலையில் இறைக் காட்சி கிடைக்கிறது.

இறையனுபூதி ஓர் ஓய்வுநிலை

10. யதா பஞ்சாவதிஷ்ட்டந்தே ஜ்ஞானானி மனஸா ஸஹ
புத்திச்ச ந விசேஷ்ட்டதி தாமாஹு பரமாம் கதிம்

யதா-எப்போது; பஞ்ச-ஐந்து; ஜ்ஞானானி-புலன்களும்; மனஸா ஸஹ-மனமும்; அவதிஷ்ட்டந்தே-ஓய்வுநிலையில் இருக்கின்றனவோ; புத்தி:ச-புத்தியும்; ந விசேஷ்ட்டதி-முயற்சியற்று இருக்கிறதோ; தாம்-அது; பரமாம் கதிம்-மிக மேலான நிலை; ஆஹு-சொல்லப்படுகிறது.

பொருள் : எப்போது ஐந்து புலன்களும் மனமும் ஓய்வு நிலையில் இருக்கின்றனவோ, புத்தி முயற்சியற்று இருக்கிறதோ அது மிக மேலான நிலை என்று சொல்லப்படுகிறது.

எந்தச் செயலுமற்ற நிலை மிக மேலான நிலையாகச் சொல்லப்படுகிறது. இதனைச் சரியாகப் புரிந்துகொள்வது மிகவும் இன்றியமையாதது. சோம்பிக் கிடப்பதையும் தூக்கத்தையும் இதனுடன் குழப்பிடப்பட்டுள்ளதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். சாதாரண மனிதர்களிடம் புத்தி விழிப்புறவில்லை என்பதை ஏற்கனவே பல இடங்களில் கூறியுள்ளோம் எனவே புத்தி விழிப்புற வேண்டும். அப்போதுதான் புலன்களும் மனமும் ஓய்வு நிலையை அடையும். அதன் பிறகு செயலற்ற நிலை உண்மையில் வாய்க்க முடியும். அக விழிப்புணர்வு ஏற்பட்டு, மனமும் புலன்களும் நமக்கு வசப்பட்ட பிறகே இந்த நிலைபற்றி யோசிக்க வேண்டும். அதற்கு முன்னால் செயலற்ற நிலைக்காக முயற்சிப்பது தவறான முயற்சியாகும்.

தன்னுணர்வு நிலை

11. தாம் யோகமிதி மன்யந்தே ஸ்திராமிந்த்ரியதாரணாம்
அப்ரமத்தஸ்ததா பவதி யோகோ ஹி ப்ரபவாப்யயௌ

இந்த்ரியதாரணாம்-புலன்கள் வசப்பட்டு; ஸ்திராம்-நிலையாக நிற்கின்ற; தாம்-அந்த நிலை; யோகம்-யோகம்; இதி-என்று; மன்யந்தே-கருதப்படுகிறது; ததா-அப்போது; அப்ரமத்த-தன்னுணர்வு உடையவனாக; பவதி-ஆகிறான்; ஹி-ஆனால்; யோக-யோக நிலை; ப்ரபவ-அப்யயௌ-வளர்வது, வீழ்வது.

பொருள் : புலன்கள் வசப்பட்டு, நிலையாக நிற்கின்ற அந்த நிலை யோகம் என்று கருதப்படுகிறது. அந்த நிலையை அடைந்தவன் தன்னுணர்வு உடையவனாக ஆகிறான். ஆனால் யோக வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் உட்பட்டது.

தன்னுணர்வு என்றால் என்ன? இதனை சத்வ நிலை என்று கீதை விளக்குகிறது(ஸ்ரீ மத் பகவத்கீதை, 14.11) புலன்கள் எதுவும் தங்கள் பாதையில் திரியாமல், அதே வேளையில் தூக்கத்திலும் ஆழ்ந்துவிடாமல் சுற்றி நடக்கின்ற அனைத்தையும் அறிந்த வண்ணம் உணர்வுபூர்வமாக நிற்கின்ற அமைதி நிலை இது. புலன்கள் என்பவை மனத்தின் வாசல்கள், இவ்வாறு வாசல்கள் அடைபட்டுவிட்ட இந்த நிலையில் மனத்தை எங்கு செலுத்தினாலும் அது ஆழமாகச் செல்ல முடியும். படிப்பு, ஆராய்ச்சி, ஆன்மீக சாதனைகள் போன்றவற்றை இந்த நேரம் செய்தால் விரைவில் வெற்றி கிடைக்கும்.

இந்த நிலையை சுவாமி விவேகானந்தர் மிகவும் புகழ்ந்து கூறுகிறார்; உறங்கும் ஆன்மாவை எழுப்புங்கள், அது எவ்வாறு விழித்தெழுகிறது என்பதைப் பாருங்கள். உறங்குகின்ற ஆன்மா மட்டும் விழித்தெழுந்து தன்னுணர்வுடன் செயலில் ஈடுபடுமானால் சக்தி வரும், பெருமை வரும், நன்மை வரும், தூய்மை வரும், எவை யெல்லாம் மேலானதோ அவை  அத்தனையும் வரும் என்கிறார் அவர்.

புத்தி விழித்தெழுந்து, அந்த நிலையில் மனத்தை எதில் செலுத்தினாலும் அதில் பல அரிய விஷயங்களைச் சாதிக்க முடியும். விஞ்ஞானம், கலை என்று எந்தத் துறையை எடுத்தாலும் அதில் உன்னதங்களைக் காண முடியும். ஆனால் ஆன்மீகத்தில் சாதிக்க வேண்டுமானால் புத்தியும் மனமும் செயலற்றதாக வேண்டும் என்பதை முந்தின மந்திரம் வலியுறுத்தியதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

யோக நிலையை அடைந்து, அதன்பிறகு நாம் எந்தத் துறையை மேற்கொண்டாலும் அதில் வெற்றி பெற முடியும். ஆன்மீகம் அல்லது உயர் வாழ்வு வேண்டுமானால் மனத்தையும் புத்தியையும் புறத்தில் செல்ல விடாமல் அகத்தில் நிலை நிறுத்த வேண்டும்.

மற்றொரு கருத்தும் இங்கே கூறப்பட்டுள்ளது. இந்த யோக நிலை என்பது எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் உட்பட்டது. அதாவது புத்தி விழித்தெழுந்த நிலையை அடைந்தாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது இன்றியமையாதது. ஒருமுறை யோக நிலை வாய்த்தாலும் தொடர்ந்த பயிற்சியின் மூலம் அதைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அந்த நிலையிலிருந்து வீழ்ச்சி அடைய நேரும்.

விளக்க முடியாத நிலை: 12-13

12. நைவ வாசா ந மனஸா ப்ராப்தும் சக்யோ ந சக்ஷúஷா
அஸ்தீதி ப்ருவதோன்யத்ர கதம் ததுபலப்யதே

வாசா-வாக்கினாலோ; மனஸா-மனத்தினாலோ சக்ஷúஷா-கண்களாலோ; ப்ராப்தும்-அடைவதற்கு; ந சக்ய: ஏவ-முடியாது; அஸ்தி-இருக்கிறது; இதி-என்று; ப்ருவத-சொல்பவன்; அன்யத்ர-வேறொருவர்; கதம்-எப்படி; தத்-அதனை; உபலப்யதே-அடைவது.

பொருள் : வாக்கினாலோ மனத்தினாலோ கண்களாலோ அந்த அறுதி உண்மையை அடைய இயலாது. இருக்கிறது என்று சொல்பவனைத் தவிர வேறு யார் அதனை அடைய முடியும்?

அன்பு, பாசம் போன்றவற்றை அனுபவிக்காத மனிதர்கள் இருக்க முடியாது ஆனால் அறிவினால் அவற்றை விளக்க இயலாது, இதயத்தால் அவற்றை உணர மட்டுமே முடியும். அதுபோலவே இறைவன், ஆன்மா போன்ற உண்மைகளையும் சாதாரண அறிவினால் அடைய இயலாது. கடவுள் ஒருவர் இருக்கிறார் ஆன்மா என்ற ஒன்று இருக்கிறது, என்பதையெல்லாம் நூலறிவு போன்ற எந்த அறிவின் துணையும் இன்றி இயல்பாகவே உணர்ந்து யார் இறைவனை நாடுகிறானோ அவனே வெற்றி பெறுகிறான்.

13. அஸ்தீத்யேவ உபலப்தவ்ய தத்வபாவேன சோபயோ
அஸ்தீத்யேவ உபலப்தவ்ய தத்வபாவேன ப்ரஸீததி

அஸ்தி-இருக்கிறது; இதி ஏவ-என்று; தத்வ பாவேன-உண்மை நிலையில்; உபலப்தவ்ய-உணர வேண்டும்; உபய-இரண்டுள்; அஸ்தி-இருக்கிறது; இதி ஏவ-என்று; உபலப்தஸ்ய-உணர்பவனுக்கு; தத்வ பாவ-உண்மைநிலை அனுபூதி; ப்ரஸீததி-இயல்பாக வாய்க்கிறது.

பொருள் : இந்த உண்மை இருக்கிறது என்று முதலில் அறிய வேண்டும், பிறகு அதன் உண்மைநிலையில் உணர வேண்டும். இருக்கிறது என்ற நிலையில் ஆழமாக உணரும்போது, அதிலிருந்து உண்மை நிலை அனுபூதி இயல்பாக வாய்க்கிறது.

பாவனையே தெய்வப் பேருணர்வின் வாசல் என்கிறார் சுவாமி விவேகானந்தர். ஓர் உண்மையை அடைய வேண்டுமானால் அதனை மீண்டும் மீண்டும் சிந்திக்க வேண்டும். அதைப்பற்றி கேட்க வேண்டும், சிந்திக்க வேண்டும் தியானிக்க வேண்டும்(ச்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாஸிதவ்ய பிருஹதாரண்யக உபநிஷதம், 2.4.5, 4.5.6)

மரணமிலாப் பெருநிலை : 14-15

14. யதா ஸர்வே ப்ரமுச்யந்தே காமா யேஸ்ய ஹ்ருதி ச்ரிதா
அத மர்த்யோ ம்ருதோ பவதி அத்ர ப்ரஹ்ம ஸமச்னுதே

ஹ்ருதி-மனத்தை; ச்ரிதா-சார்ந்திருக்கும்; யே ஸர்வே-எல்லா; காமா-ஆசைகளும்; ப்ரமுச்யந்தே-விலகுகின்றனவோ; அஸ்ய-அவனது; அத-பிறகு; மர்த்ய-மனிதன்; அம்ருத-அவனது; அத-பிறகு; மர்த்ய;-மனிதன்; அம்ருத-மரணமற்றவன்; பவதி-ஆகிறான்; அத்ர-இங்கேயே; ப்ரஹ்ம-இறைநிலையை; ஸமச்னுதே-அடைகிறான்.

பொருள் : மனத்தைச் சார்ந்திருக்கும் எல்லா ஆசைகளும் விலகும்போது மனிதன் மரணமற்றவன் ஆகிறான்; இங்கேயே இறைநிலையை அடைகிறான்.

எப்போது ஆசைகளை விட முடியும்? முந்தின மந்திரம் கூறிய, இருக்கிறது என்ற கருத்து ஆழ்ந்த சிந்தனையின் மூலம் நம்மில் நிலைபெறும்போது. ஒன்றிலிருந்து ஒன்றிற்குத் தாவிக்கொண்டிருப்பது மனத்தின் இயல்பு. வெளியில் அது அலைபாயாமல், ஆசை வசப்பட்டு பொருள்களின் பின் செல்லாமல் இருக்க வேண்டுமானால் உள்ளே அது நிலைபெற ஓர் இடம் வேண்டும். அந்த இடம் புற உலகத்தைவிட உண்மையானது, இன்பமானது, இனிமையானது என்பதை மனம் நம்ப வேண்டும். அப்போது மட்டுமே அது புற ஆசைகளை விடும். அதனால்தான் ஆன்மா என்ற ஒன்று இருக்கிறது, கடவுள் ஒருவர் இருக்கிறார் என்ற கருத்தை மீண்டும்மீண்டும் சிந்திக்க வேண்டும் என்று முந்தின மந்திரம் கூறியது.

15. யதா ஸர்வே ப்ரபித்யந்தே ஹ்ருதயஸ்யேஹ க்ரந்தய
அத மர்த்யோம்ருதோ பவதி ஏதாவத்யனுசாஸனம்

ஹ்ருதயஸ்ய-மனத்தின்; ஸர்வே-எல்லா; க்ருந்தய-முடிச்சுகளும்; யதா-எப்போது; ப்ரபித்யந்தே-அவிழ்கின்றனவோ; அத-பிறகு; மர்த்ய-மனிதன்; அம்ருத:-மரணமற்றவன்; பவதி-ஆகிறான்; அனுசாஸனம்-உபதேசம்; ஏதாவத் ஹி-இவ்வளவுதான்.

பொருள் : மனத்தின் எல்லா முடிச்சுகளும் அவிழும்போது மனிதன் மரணமற்றவன் ஆகிறான். உபதேசம் இவ்வளவுதான்.

ஆசைகள் மட்டுமல்ல; மனத்தில் இன்னும் எவ்வளவோ உள்ளன. உணர்ச்சிப் போரட்டங்கள், உணர்ச்சிக் சிக்கல்கள் என்று எத்தனையோ விஷயங்கள் மனத்தில் உள்ளன. அவை அனைத்தும் சரியாக வேண்டும். மனம் தூய்மை பெறுவது தான் ஆன்ம வாழ்வின் அடிப்படை என்பதை ஒரு சத்தியப் பிரமாணம் போல் சொல்வதற்காக உபதேசம் இவ்வளவு தான் என்று கூறுகிறான் எமதர்மன்.

16. சதம் சைகா ச ஹ்ருதயஸ்ய நாட்ய
தாஸாம் மூர்தானமபி நி ஸ்ருதைகா
தயோர்த்வமாயன் அம்ருதத்வமேதி
விஷ்வங்ஙன்யா உத்க்ரமணே பவந்தி

ஹ்ருதயஸ்ய-இதயத்தின்; நாட்ய-நாடிகள்; சதம் ச ஏகா-நூற்றொன்று; தாஸாம்-அவற்றுள்; ஏகா-ஒன்று மூர்தானம்-உச்சந்தலையை; அபிநி; ஸ்ருதா-பிளந்து செல்கிறது; தயா-அதன் வழியாக; ஊர்த்வம்-மேலே; ஆயன்-செல்பவன்; அம்ருதத்வம்-மரணமற்ற நிலையை; ஏதி-அடைகிறான்; அன்யா-மற்றவை; உத்க்ரமணே-வெளியேறுவதில்; விஷ்வக்-பல திசைகளாக; பவந்தி-ஆகின்றன.

பொருள் : இதயத்தின் நாடிகள் நூற்றொன்று. அவற்றுள் ஒன்று உச்சந்தலையைப் பிளந்து செல்கிறது. அதன் வழியாக மேலே செல்பவன் மரணமற்ற நிலையை அடைகிறான். மற்ற நாடிகளின் வழியாக வெளியேறுபவன் பல்வேறு கீழ் உலகங்களில் உழல்கிறான்.

இதயம் என்பது பிராணனின் இருப்பிடம் உணர்ச்சிகள், செயல்பாடுகள் என்று வாழ்க்கையின் அனைத்தும் இங்கிருந்தே கட்டுப்படுத்தப்படுகின்றன. விஞ்ஞானத்தைப் பொறுத்தவரை மூளை அனைத்துச் செயல்களின் மையமாக இருந்தாலும் நமது சாஸ்திரங்கள் இதயத்தையே மையமாகக் கொள்கின்றன. நான் என்று சொல்லும்போது சரி, ஆழ்ந்த மனக் கவலை, அளவற்ற சந்தோஷம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் போதும் சரி, இதயத்தில் கைவைத்தே நாம் பேசுவது இங்கு நினைவுகூரத் தக்கது. இந்த இதயம் நாம் அறிந்த பவுதீக இதயம் அல்ல. இது உணர்ச்சி இதயம்.

இந்த இதயத்திலிருந்து நூற்றொரு நாடிகள் புறப்பட்டுகின்றன. இவற்றின்மூலமே கட்டளைகள் இடப்படுகின்றன, அனுபவங்கள் பெறப்படுகின்றன. நாடிகள் சாதாரண கண்களுக்குப் புலனாகாதவை. இவற்றுள் ஒன்று உச்சந்தலை வழியாக செல்கிறது. உச்சந்தலையில் பிரம்ம ரந்திரம் உட்பட இந்த உடம்பில் பதினொரு துவாரங்கள் இருப்பதாக ஏற்கனவே(2.2.1) கண்டோம். இந்த பிரம்ம ரந்திரத்தின் வழியாக ஒரு நாடி செல்கிறது. இதன் வழியாக உயிரை விடுபவன் மரணமற்ற நிலையை அடைகிறான். மற்ற நூறு நாடிகளும் மீதி பத்து வாசல்களுள் ஏதாவது ஒன்றில் நினைவுபெறுகின்றன. இவற்றின் வழியாக உயிர் வெளியேறினால் மீண்டும் பிறவி வாய்க்கிறது. ஆசைகளற்ற யோகியால் மட்டும் பிரம்ம ரந்திரத்தின் வழியாக உயிரை வெளியேற்ற முடியும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அங்குஷ்ட்டமாத்ர புருஷ வித்யை

17. அங்குஷ்ட்ட மாத்ர புருஷோந்தராத்மா
ஸதா ஜனானாம் ஹ்ருதயே ஸன்னிவிஷ்ட்ட
தம் ஸ்வாச்சரீராத் ப்ரவ்ருஹேன்
முஞ்ஜாதிவேஷீகாம் தைர்யேண
தம் வித்யாச்சுக்ரமம்ருதம் தம் வித்யாச்சுக்ரமம்ருதமிதி

புருஷ-உடம்பில் உறைகின்ற; அந்தராத்மா-ஆன்மா; அங்குஷ்ட்ட மாத்ர-பெருவிரல் அளவுடையது; ஜனானாம்-மக்களின்; ஹ்ருதயே-இதயத்தில்; ஸதா-எப்போதும்; ஸன்னிவிஷ்ட்ட-உள்ளது; தம்-அதனை; முஞ்ஜாத்-முஞ்சைப் புல்லிலிருந்து; இஷீகாம் இவ-ஈர்க்குச்சியைப் பிரிப்பதுபோல்; ஸ்வாத் சரீராத்-சொந்த உடம்பிலிருந்து; தைர்யேண-பொறுமையுடன்; ப்ரவ்ருஹேத்-பிரிக்க வேண்டும்; தம்-அதனை; சுக்ரம்-தூய்மையானது; அம்ருதம்-அழிவற்றுது. இதி-என்று; வித்யாத்-அறி.

பொருள் : உடம்பில் உறைவதான ஆன்மா பெருவிரல் அளவுடையது; மக்களின் இதயத்தில் எப்போதும் உள்ளது. முஞ்சைப் புல்லிலிருந்து ஈர்க்குச்சியைப் பிரிப்பதுபோல் அதனைச் சொந்த உடம்பிலிருந்து பொறுமையுடன் பிரிக்க வேண்டும். அந்த ஆன்மா தூயது, அழிவற்றது என்று அறிந்துகொள். அந்த ஆன்மா தூயது, அழிவற்றது என்று அறிந்துகொள்.

நசிகேதனுக்கு எமதர்மன் கூறிய உபதேசத்தைப் பொறுத்தவரை கடைசி மந்திரம் இது. கட உபநிஷதம் அங்குஷ்ட்ட மாத்ர புருஷ வித்யை, நாசிகேத வித்யை என்ற இரண்டு முறைகளை போதிப்பதாக ஏற்கனவே கண்டோம். பெருவிரல் அளவுடைய ஒளிப் பொருள் ஒன்று நம்முள் இதயக் குகையில் உள்ளது. அதனை உடம்பிலிருந்து பிரித்தறிய வேண்டும். அந்த ஆன்மாவை எங்கும் நிறைந்த பரம்பொருள் என்பதை உணர வேண்டும் இதுவே இந்த இரண்டு வித்யைகளின் பொதுவான கருத்து ஆகும். இந்தக் கடைசி மந்திரத்தில் மீண்டும் ஒருமுறை அந்தக்  கருத்தை வலியுறுத்தி உபதேசித்தை நிறைவு செய்கிறான் எமதர்மன்.

ஆன்மா, அதை உணர்வது போன்றவை அவ்வளவு சுலபமானவை அல்ல. சாதனைகளின் விடா முயற்சியும். உடனடியாக பலன் தெரியாத நிலையில் பொறுமையும், பலர் இதனைச் சாதித்திருக்கிறார்கள் என்னாலும் முடியும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையும் வேண்டும். அதனை இந்த மந்திரம் வலியுறுத்துகிறது.

நிறைவு

18. ம்ருத்யுப்ரோக்தாம் நசிகேதோத லப்த்வா
வித்யாமேதாம் யோகவிதிம் ச ச்ருத்ஸ்னம்
ப்ரஹ்ம ப்ராப்தோ விரஜோபூத் விம்ருத்யு
அன்யோ ப்யேவம் யோவிதத்யாத்மமேவ

ம்ருத்யு ப்ரோக்தாம்-எமதர்மனால் சொல்லப்பட்ட ஏதாம்-இந்த; வித்யாம்-வித்யையையும்; க்ருத்ஸ்னம்-எல்லா; யோக விதிம்-யோக விதிகளையும்; லப்த்வா-ஏற்றுக்கொண்டு; நசிகேத-நசிகேதன்; விரஜ-தூயவனாகி; விம்ருத்யு-மரணமற்றவன் ஆனான்; அத-பிறகு; ப்ரஹ்ம-இறைவனை; ப்ராப்த-அபூத்-அடைந்தான்; அன்ய: அபி-மற்றவர்களும்; ஏவம்-இவ்வாறு; வித்-அறியும்போது அத்யாத்மம் ஏவ-இறை நிலையையே அடைகிறார்கள்.

பொருள் : எமதர்மனால் சொல்லப்பட்ட இந்த வித்யைகளையும், எல்லா யோக விதிகளையும் ஏற்றுக் கொண்டு நசிகேதன் தூயவனாகி மரணமற்றவன் ஆனான் பிறகு இறைவனை அடைந்தான். மற்றவர்களும் இந்த வித்யையை அறிந்து பின்பற்றும் போது இறைநிலையை அடைகிறார்கள்.

உபதேசத்தைக் கேட்டதுடன் நசிகேதன் நின்றுவிடவில்லை. அதனைப் பின்பற்றினான். மனத்தைத் தூய்மைப்படுத்தினான், மரணமற்ற நிலையை அடைந்தான்; இறுதியாக இறைவனை அடையப் பெற்றான். இந்தப் பேறு ஒருவருக்கு மட்டும் உரியதல்ல; பின்பற்றுகின்ற யாரும் இதனை அடையலாம். பின்பற்றிப் பாருங்கள் என்று ஒரு சவால் போல் இந்த மந்திரத்தைக் கூறுவதுடன் உபநிஷதம் நிறைவுபெறுகிறது.

இதி காடக உபநிஷதி த்விதீயாத்யாயே த்ருதீயா வல்லீ

இதி காடோபநிஷத் ஸமாப்தா

இவ்வாறு கட உபநிஷதம் நிறைவு பெறுகிறது.

ஓம் ஸஹ நாவவது ஸஹ நௌ புனக்து
ஸஹ வீர்யம் கரவாஹை
தேஜஸ்வி நாவதீதமஸ்து மா வித்விஷாவஹை
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:
----------------------------------------------------------------------------------------------------------
274 சிவாலயங்கள் : அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில்

மூலவர் : ஆம்ரவனேஸ்வரர்
அம்மன் : பாலாம்பிகை
தல விருட்சம் : மாமரம்
தீர்த்தம் : காவேரி
ஆகமம் பூஜை  : காமிகம்
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : ஆம்ரவனம், திருமாந்துறை
ஊர் : மாந்துறை
மாவட்டம் : திருச்சி
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், அருணகிரியார்,தேவாரப்பதிகம்

நீல மாமணி நித்திலத் தொத்தொடு நிரைமலர் நிரந்துந்தி ஆலி யாவரு காவிரி வடகரை மாந்துறை யமர்வானை மாலு நான்முகன் தேடியும் காண்கிலா மலரடி இணைநாளும் கோலம் ஏத்தி நின்றாடுமின் பாடுமின் கூற்றுவன் நலியானே.-திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 58வது தலம்.

விழா : ஐப்பசியில் அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை தீபம், வைகாசியில் ஆதிசங்கரர் ஜெயந்தி.  
      
சிறப்பு : இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பங்குனி மாதத்தில் மூன்று நாட்கள் சூரியன் தன் ஒளியை சுவாமி மீது பரப்பி பூஜை செய்வது சிறப்பு.  
      
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில், லால்குடி தாலுகா, மாந்துறை- 621 703.திருச்சி மாவட்டம்.போன்:+91-99427 40062, 94866 40260 
     
தகவல் : திருச்சி பகுதியில் உள்ள பஞ்ச சிவாலயங்களில் இத்தலமும் ஒன்று. ஆதிசங்கரர் ஆம்ரவனேஸ்வரரை பூஜை செய்து வணங்கியுள்ளார். இவர் கோஷ்டத்தில் தெற்கு பார்த்தபடி இருக்கிறார். மிருகண்டு மகரிஷியும் சுவாமியை வணங்கியுள்ளார். திருஞானசம்பந்தர் தனது இரண்டாம் திருமுறை பாடலில் சுவாமியை குறித்து பதிகம் பாடியிருக்கிறார். கோஷ்டத்தில் உள்ள துர்க்கை சாந்த கோலத்தில் இருக்கிறாள். இவளது காலுக்கு கீழே மகிஷாசுரனும் இல்லை. பிரகாரத்தில் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் தனிச்சன்னதியில் கிழக்கு பார்த்தபடி இருக்கிறார். இவரை அருணகிரியார் திருப்புகழில் பாடியுள்ளார்.மாமரங்கள் நிறைந்திருந்த தலம் என்பதாலும், மானுக்கு அருள் புரிந்த சிவதலம் என்பதாலும் இத்தலம் "மாந்துறை' என வழங்கப்படுகிறது.
     
பெருமை : தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவின் மகளாக சமுக்யா தேவி பிறந்தாள். பேரழகு கொண்டவளாக இருந்த அவளை சூரியன் மணந்து கொண்டார். அவள் சூரியனுடன் மிகுந்த அன்பு கொண்டு அவருடன் வாழ்ந்து வந்தாள். நாளுக்கு நாள் சூரியனின் உக்கிரம் அதிகரிக்கவே அவளால் வெப்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவள் சூரியனிடம் முறையிட்டும் அவர் உக்கிரத்தை குறைக்கவில்லை. ஒரு காலகட்டத்தில் அவரது வெப்பத்தை தாங்கவே முடியாது என்ற நிலைக்கு வந்த சமுக்யாதேவி, தான் தந்தையிடமே வந்துவிடுவதாக விஸ்வகர்மாவிடம் கேட்டாள். அவரோ மகளுக்கு ஆறுதல் கூறி சாந்தப்படுத்தினார். ஆனாலும் அவளால் கணவனின் உக்கிரத்தை பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. எனவே, கணவனைப் பிரிந்து செல்ல முடிவெடுத்தாள். தான் சென்றுவிட்டால் கணவன் மனம் வருந்துவார் என்று எண்ணிய அவள் தன்னில் இருந்து சற்றும் வித்தியாசம் காணமுடியாதபடி தன் நிழலில் இருந்து ஒரு உருவத்தை உண்டாக்கினாள். அவளை தனக்கு பதிலாக சூரியனின் மனைவியாக இருந்து பணிவிடை செய்யும்படி பணித்தாள். (சமுக்யாதேவியால் நிழல் வடிவமாக உருவாக்கப்பட்டவளே சாயாதேவி). பின் அவள் சூரியனைப்பிரிந்து தன் தந்தையிடமே வந்து சேர்ந்தாள். விஸ்வகர்மா அவளுக்கு பலவாறு எடுத்துச் சொல்லியும் அவள் கணவனிடம் செல்லவில்லை. தந்தையின் அனுமதியில்லாமலேயே அவருடன் தங்கியிருந்ததால் மனம் கலங்கிய சமுக்யாதேவி குதிரை வடிவம் எடுத்து இத்தலம் வந்து தன் கணவனின் உக்கிரம் குறையவும், அவரது உக்கிரத்தை பொறுத்துக் கொண்டு மீண்டும் கணவனுடன் சேரவும் சிவனை வேண்டி தவம் செய்தாள். இதனிடையே சாயாதேவியின் நடத்தையின் வித்தியாசத்தைக் கண்ட சூரியன் அவள் சமுக்யாதேவி அல்ல என அறிந்து கொண்டார். அவர் விஸ்வகர்மா மூலமாக தன் மனைவி பிரிந்து வந்ததை தெரிந்து கொண்டு, அவரிடமே தன் உக்கிரத்தையும் குறைத்தார். பின் அவர் இத்தலம் வந்து சிவனை வழிபட்டு சமுக்யாதேவியுடன் மீண்டும் சேர்ந்தார். இதன் அடிப்படையில் இங்கு நவக்கிரக சன்னதியில் சூரியன் சமுக்யாதேவி மற்றும் சாயாதேவி ஆகிய இருவருடன் இருப்பது போல அமைக்கப்பட்டிருக்கிறது. அருகிலேயே சூரியன் தனியாகவும் இருக்கிறார். பிற கிரகங்கள் அனைத்தும் சூரியனைப் பார்த்தபடியே இருக்கிறது.

சதுர்த்தி பூஜை : மான்களாக பிறந்த அசுர தம்பதியர் மற்றும் மகரிஷிக்கு சிவன் ஒரு அகங்கார சதுர்த்தியன்று (செவ்வாய்க்கிழமை சதுர்த்தி) விமோசனம் தந்ததாக ஐதீகம். இதன் அடிப்படையில் இங்கு சுவாமிக்கு செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி திதியன்று சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இந்நேரத்தில் சுவாமியை வழிபட்டால் குறைவிலாத வாழ்க்கை கிடைக்கும், பாவங்களுக்கு மன்னிப்பு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ஸ்தல வரலாறு : முன்னொரு காலத்தில் இப்பகுதி மாமரங்கள் நிறைந்த வனமாக இருந்தது. இவ்வனத்தில் தவம் செய்த மகரிஷி ஒருவர் சிவ அபச்சாரம் செய்ததால் மானாக பிறக்கும்படி சாபம் பெற்றார். அவர் இவ்வனத்திலேயே, தங்களின் முற்பிறவியில் செய்த பாவத்தால் மான்களாக பிறந்த அசுரகுல தம்பதியர்களுக்கு பிறந்தார். ஒரு நாள் குட்டி மானை விட்டுவிட்டு, தாய் மானும், தந்தை மானும் வெளியே சென்றுவிட்டன. அவை இரைதேட சென்ற இடத்தில் வேடுவ தம்பதி வடிவில் வந்த சிவனும், பார்வதியும் அவற்றை அம்பால் வீழ்த்தி சாபவிமோசனம் தந்தனர். இரவு நெடுநேரம் ஆகியும் தாய் மான் இருப்பிடத்திற்கு திரும்பாததால் கலங்கிய குட்டிமான் கண்ணீருடன் காத்துக் கொண்டிருந்தது. நேரம் ஆக, ஆக மானுக்கு பசியெடுக்கவே அது அலறியது. சிவனும், பார்வதியும் அதனைப் பெற்ற மான் வடிவில் இங்கு வந்தனர். பசியால் வாடியிருந்த குட்டி மானுக்கு பார்வதி தேவி பால் புகட்டினார். தந்தை வடிவில் வந்த சிவன் அதனை ஆற்றுப்படுத்தினார். சிவன், பார்வதியின் தரிசனம் பெற்ற குட்டி மான் தன் சாபத்திற்கு விமோசனம் பெற்று மீண்டும் மகரிஷியாக மாறியது. அவரது வேண்டுதலுக்காக சிவன் இத்தலத்தில் சுயம்புவாக எழுந்தருளினார். பார்வதிதேவியும் இங்கேயே தங்கினாள்.
--------------------------------------------------------------------------
274 சிவாலயங்கள் : அருள் மிகு சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில்

மூலவர் : சத்தியவாகீஸ்வரர்
அம்மன் : சவுந்திரநாயகி
தல விருட்சம் : ஆலமரம்
தீர்த்தம் : காயத்திரி தீர்த்தம்
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : அன்பிலாலந்துறை, கீழன்பில் ஆலந்துறை
ஊர் : அன்பில்
மாவட்டம் : திருச்சி
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்: திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர்,தேவாரப்பதிகம்

பிறவி மாயப் பிணக்கில் அழுந்தினும் உறவெலாம் சிந்தித்து உன்னி உகவாதே அறவன் எம்பிரான் அன்பிலா லந்துறை வணங்கும் நும்வினை மாய்ந்தறும் வண்ணமே. திருநாவுக்கரசர். தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 57வது தலம்.

விழா : மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம்.
      
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில், அன்பில்-621 702. திருச்சி மாவட்டம்.போன்:+91 431 254 4927 
     
தகவல் : லால்குடி சப்தரிஷீஸ் வரர் கோயில், திருமாந்துறை சிவன் கோயில் ஆகியவை உள்ளன. கோயிலின் உள்ளே சப்தமாதர், பிட்சாடனர், விசுவநாதர், விசாலாட்சி, பைரவர், முருகன் சன்னதிகள் உள்ளன. துவாரபாலகர் அருகே பிரம்மா வழிபடும் சிற்பம் உள்ளது.

பிரார்த்தனை : காதில் குறைபாடு உள்ளவர்கள் இத்தலம் சென்று விநாயகப்பெருமானை வழிபாடு செய்வது சிறப்பு. 

பெருமை : இக்கோயிலில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர் செவிசாய்த்த விநாயகர் மட்டுமே. சீர்காழியில் பிறந்து, உமையம்மை யிடம் பால் குடித்து, தேன் சுவை பாடல்கள் பாடிய திருஞானசம்பந்தர் சிவத்தலங்கள் பலவற்றிற்கு வந்தார். சிவனுக்கு இவரைச் சோதிக்க ஆசை. காவிரியில் தண்ணீர் கரை புரண் டோடச் செய்தார். ஞானசம்பந்தரால் கோயில் இருக்கும் இடத்தை அடைய முடியவில்லை. தூரத்தில் நின்ற படியே சுயம்புவாய் அருள்பாலிக் கும் சிவபெருமானைப் பாடினார்.
காற்றில் கலந்து வந்த ஒலி ஓர ளவே கோயிலை எட்டியது. அங் கிருந்த சிவமைந்தர் மூத்த விநாயகர், "இளைய பிள்ளையார்' எனப்பட்ட தன் சகோதரனுக்கு சமமான ஞானசம் பந்தனின் பாட்டைக் கேட்பதற்காக, தன் யானைக்காதை பாட்டு வந்த திசை நோக்கி சாய்த்து கேட்டு ரசித்தார். அப்போது புன்முறுவல் முகத்தில் அரும்பியது. ஒரு காலை மடக்கி இன்னொரு காலை குத்துக்காலிட்டு அமர்ந்து ரசித்த அக்காட்சியை சிற்ப மாக வடித்தார் ஒரு சிற்பி. அச்சிலை இன்றும் எழிலுற இருக்கிறது. கோயி லில் ராஜகோபுரமும் இருக்கிறது.

தல வரலாறு : இக்கோயில் அற நிலையத்துறைக்கு உட்பட்டிருந்தா லும் கூட, பாழ்பட்டுப் போனதால் தல வரலாறு தெளிவாக கிடைக்க வில்லை. மூலவர் சத்யவாகீஸ்வரர். இவர் கிழக்கு நோக்கி சுயம்புவாக எழுந்துள்ளார். பிரம்மன் வழிபட்ட மூர்த்தம் பிரம்மபுரீஸ்வரர் என்ற நாம மும் இவருக்கு உண்டு. அம்பாள் சவுந்தரநாயகி ஊர் பெயர் அன்பில் கோயிலின் பெயர் ஆலந்துறை. இரண்டும் சேர்த்து அன்பிலாந்துறை ஆனது. பிரம்மா, வாகீச முனிவர் பூஜை செய்த தலம்.
--------------------------------------------------------------------------