சனி, 24 ஆகஸ்ட், 2019

08.கருவூரார்

என்ன கருவூராரைக் காணவில்லையா? சிறையில் அடைக்கப்பட்டவர் எப்படி வெளியே போவார் ? நீங்களெல்லாம் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ? மன்னன் இரணியவர்மன் கர்ஜித்தான். காவலர்கள் தங்கள் தலைக்கு கத்த வந்து விட்டது என்பதை புரிந்து கொண்டு நடுநடுங்கினர். போகர் சித்தரே ! அறியாமல் நடந்த பிழையை மன்னிக்க வேண்டும். தங்கள் மாணவன் தான் கருவூரார் என்பதை அறியாமல் அவரைச் சிறையில் அடைத்து விட்டேன். நான் என்ன செய்வேன் !. எப்படி உங்களை சமாதானம் செய்யப்போகிறேன்! நான் செய்த தவறுக்கு வேண்டுமானால், என் உயிரை எடுத்துக் கொள்ளுங்கள், மன்னன் புலம்பினான்.அவன் புலம்புமளவுக்கும், போகர் சித்தர் கருவூராரைத் தேடி வருமளவுக்கு அப்படி என்ன நடந்து விட்டது ?கருவூரார் சோழநாட்டிலுள்ள போகர் சித்தர் கருவூராரைத் தேடி வருமளவுக்கும் அப்படி என்ன நடந்து விட்டது ? கருவூரார் சோழநாட்டிலுள்ள கருவூரில் (இன்றைய கரூர்) ஒரு அந்தணத்தம்பதியரின் மகனாக அவதரித்தவர். இளமையிலேயே ஞானம் தேடி அலைந்தார். அவருக்கு பழநியில் நவபாஷண முருகன் நிலை செய்த போகரின் தரிசனம் ஒருமுறை கிடைத்தது. அவரிடம், இந்த உலக வாழ்வின் உண்மை நிலையை அறிந்து கொள்ள விரும்புவதாகச் சொன்னார். கருவூரா! மக்கள் சேவையே மகேசன் சேவை. ஒவ்வொரு மனிதனும் இல்லாதவர்களுக்கும் இயலாதவர்களுக்கும் சோவை செய்வதற்காக  படைக்கப்பட்டவளே ! சேவையில் நீ கடவுளைக் காணலாம். பராசக்தியை நீ வழிபடு. வாழ்க்கை பற்றிய அரிய ஞானத்தைப் பெறுவாய், என ஆசிர்வதித்தார். பல காலமாக தொண்டு செய்து வந்தார் கருவூரார். இந்நிலையில், வடநாட்டை ஆண்ட இரணியவர்மன் , ஒருமுறை தில்லையம்பலமாகிய சிதம்பரத்துக்கு வந்தான். சிவகங்கை தீர்த்ததில் நீராடிக் கொண்டிருந்தான். ஒருமுறை அவன் தண்ணீருக்குள் கண்டான். பெரும் பரவசம் அவனைத் தொற்றிக் கொண்டது. தண்ணீரில் இருந்து எழுந்து மீண்டும் மூழ்கி கண்களைத் திறந்து பார்த்தான். அங்கே யாரையும் காணவில்லை. ஆனால், சிவனின் நாட்டியக்காட்சி அவன் நெஞ்சை  விட்டு அகல மறுத்தது.

எப்படியாவது இந்த நடன சிவனை சிலையாக வடிக்க வேண்டும். அதுவும் தங்கத்தில் வடித்தால், அது பூமி உள்ளளவும் நம் பெயர் சொல்லும் என்று எண்ணினான். சிற்பிகள் அனைவரையும் வரவழைத்தான். தங்கத்தை அள்ளி அள்ளிக் கொடுத்து, நான் கண்ட காட்சியைக்ஞா கூறி, நடன சிவன் சிலை வடிக்க வேண்டுமென்றும், அதற்கு 48 நாட்கள் அவகாசம் தருவதாகவும், அதற்குள் சிலை வடிக்காவிட்டால் அவர்களுக்கு கடும் தண்டனை அளிப்பதாகவும் உத்தரவு போட்டுவிட்டான். சிற்பிகளும் வேலையை தொடங்கினர். தங்கத்தை வளைப்பதனால் செம்பு சிறிதளவு சேர்க்க வேண்டும். மன்னனோ, எக்காரணம் கொண்டும் செம்பு சேர்க்கக் கூடாது என்றும், என்ன வித்தை செய்தேனும், தங்கத்தை வளைத்தே சிலை செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை விதித்திருந்தான். சிற்பிகளும் ஏதோ ஒரு தைரியத்தில் வேலையைத் தொடங்கி விட்டனர். 47 நாட்கள் கடந்து விட்டன. யாருக்குமே சிலை சரியாக வரவில்லை. நாளை மன்னன் வருவான் ! அவன் சிலையை எங்கே என்று கேட்டால் என்ன செய்வது ! சிறையில் அடைத்து விடுவானே சிற்பிகள் பயந்தனர். இந்த சம்பவம் போகரின் சித்தத்திற்கு எட்டியது. அவர் திருவூராரை அழைத்து, சிதம்பரத்தில் நடந்து கொண்டிருக்கும் விஷயத்தை விளக்கினார். கருவூரா ! நீ உடனே சிதம்பரம் செல். அந்த சிலைøப் பணியை முடித்துக் கொடு, என்றார். கருவூரார் கண்ணிமைக்கும் நேரத்தில், சிற்பிகள் முன்பு ஒரு துறவியின் வேடத்தில் போய் நின்றார். சிற்பிகளே ! உங்கள் மனக் கலக்கத்தை நான் அறிவேன். நீங்கள் எதற்கும் கலங்க வேண்டாம். இன்னும் இரண்டே நாழிகையில்  (சுமார் முக்கால் மணி நேரம்) சிலையை நான் தயார் செய்து விடுகிறேன். துறவியே ! நீர் யாரோ எவரோ ? சிவனின் அடியார் போல் தோன்றுகிறீர். நாங்கள் தமிழகத்தின் பெரும் சிற்பிகள். எங்களாலேயே 48 நாட்களில் செய்து  முடிக்க முடியாததை உம்மால் எப்படி இரண்டு நாழிகையில் சாதிக்க முடியும் ? நீர் எங்களைக் கேலி செய்கிறீரா ? இல்லை... உமக்கு மாயமந்திரங்கள் தெரியுமா ? மனம் நொந்து போயுள்ள எங்களை புண்படுத்துவது அடியாரான உமக்கு அழகாகுமோ ? என கோபமாகக் கேட்டனர்.

அவர்கள் அப்படி சொன்னதற்காக பண்பட்ட மனம் கொண்ட கருவூரார் கோபிக்கவில்லை. அவர்களின் நிலையில் யார் இருந்தாலும் அப்படித்தான் பேசுவர் என்பது அந்த சித்தாந்திக்கு தெரியாதா என்ன ! அவர் தன் வாதத்தில் உறுதியாக இருந்தார்.என்னதான் நடக்கிறதென பார்ப்போமே என சிற்பிகளும் தலையாட்டினர். கருவூரார் அறைக்கும் சென்றார்.
09.பாம்பாட்டி சித்தர்

மருதமலை காட்டிலுள்ள எல்லா பாம்புகளும் ஒன்று கூடின. பாம்புகளின் தலைவன் கவலையுடன் பேசியது. பாம்புகளே! நம்மைக் கண்டால் படையும் நடுங்கும் என்ற பழமொழியையே பொய்யாக்கி விட்டான் அந்த இளைஞன். நம் தோழர்கள் எத்தனை பேர் இறந்திருப்பார்கள். அவனைக் கடிக்க மறைந்திருந்து தாக்கினாலும், எப்படியோ நாம் இருக்கும் இடத்தை மோப்பம் பிடித்து, நம்மைத் தூக்கி வீசி எறிந்து விடுகிறான். புற்றுகளையெல்லாம் இடித்து தள்ளுகிறான். அதனுள் இருக்கும் குஞ்சுகளை நசுக்கி விடுகிறான். நம்மிலுள்ள விஷப்பைகளை எடுத்து மருந்து தயாரிப்பதாகச் சொல்கிறான். இப்போது, நம் பாம்பினத்திற்கே பெருமை தரும் வகையில் ஒளிவீசும் நவரத்தினங்களை உள்ளடக்கிய ரத்தினப் பாம்பைப் பிடிக்க வருகிறான். அது மட்டும் அவனிடம் சிக்கி விட்டால், அவன் இந்த உலகத்திலேயே பெரிய செல்வந்தனாகி விடுவான். மன்னாதி மன்னரெல்லாம் கூட அவனிடம் சரணடைந்து விடுவார்கள், என்றது. எல்லாப்பாம்புகளும் வருத்தப் பட்டதே ஒழிய, அந்த இளைஞனுக்கு எதிராக கருத்துச் சொல்லக்கூடத் தயங்கின. இவை இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் போதே, காலடி ஓசை கேட்டது. தங்கள் உணர்வலைகளால், வருபவன் அந்த இளைஞனே என்பதை உணர்ந்து கொண்ட பாம்புகள் திசைக்கு ஒன்றாக ஓடின. பாம்புகளின் தலைவனும் உயிருக்கு அஞ்சி எங்கோ சென்று மறைந்து கொண்டது. இப்படி பாம்புகளையே கலங்கடித்த அந்த இளைஞனுக்கென பெயர் ஏதும் இல்லை. பாம்புகளைப் பிடித்து மகுடி ஊதி ஆடச்செய்பவன் என்பதால், பாம்பாட்டி என்றே அவனை மருதமலை பகுதி மக்கள் அழைத்தனர். அந்த இளைஞனே பாம்பாட்டி சித்தர் என்ற பெயரில் பிற்காலத்தில் மக்களால் வணங்கப்பட்டார்.

அவர் திருக்கோகர்ணம் என்னும் புண்ணிய தலத்தில் பிறந்ததாக சொல்லப்படுகிறது. இந்தத்தலம் கர்நாடக மாநிலத்தின் உட்பகுதியில் இருப்பதாகவும், ஒரு சாரார், அவர் அங்கே பிறந்திருக்க வாய்ப்பில்லை என்றும், தமிழகத்தில் புதுக்கோட்டை நகர எல்லையிலுள்ள திருக்கோகர்ணத்தில் பிறந்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர். இவர் பிறந்த ஊர் பற்றிய ஆதாரம் சரியாக இல்லை.இவர் இளைஞராக இருந்த காலத்தில் தான் பாம்புகளைப் பிடித்து அவற்றின் நாக ரத்தினங்களை எடுப்பதையும், விஷத்தைக் கொண்டு மருந்து தயாரிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். இப்போது, நவரத்தின பாம்பு பற்றிக் கேள்விப் பட்டு, அதைப் பிடித்து அதனுள் இருக்கும் ரத்தினங்களை எடுத்து விற்றால், உலகத்தின் முதல் பணக் காரராகி விடலாம் என்ற எண்ணம் கொண்டார்.அவர் தான் இப்போது காட்டிற்குள் வந்து கொண்டிருக்கிறார்.பாம்புகள் மறைந்து ஓடின. அப்போது ஓரிடத்தில் ஒளிவெள்ளம் பாய்ந்தது. ஆஹா....நவரத்தின பாம்பு தான் அவ்விடத்தில் மறைந்திருக்கிறது. அது தன் உடலை முழுமையாக மறைக்க முடியாததால், அதன் உடல் ஒளிவீசுகிறது என பாம்பாட்டி சித்தர் நினைத்துக் கொண்டார். ஆனால், ஒளி வெள்ளம் சற்று மங்கி, அவர் முன்னால் ஒரு மனிதர் நின்றார். அவரிடம், மகானே! தாங்கள் யார்? தங்கள் உடல் பொன் போல் பிரகாசிக்கிறதே. ஒருவேளை நான் தேடி வந்த பாம்பாக இருந்த நீங்கள், என்னிடம் சிக்காமல் இருக்க மனித உருவம் கொண்டீர்களோ! என்றவர், அவரது தேஜஸைப் பார்த்து, தன்னையும் அறியாமல் அவரது பாதங்களில் விழுந்து வணங்கினார். அந்த மகான் பாம்பாட்டி சித்தரை ஆசிர்வதித்தார். இளைஞனே! நீ இந்த சாதாரண பாம்புகளைப் பிடிப்பதற்காகவா இந்த உலகத்தில் பிறந்தாய். உன் பிறப்பின் ரகசியமே வேறு. நீ தேடி வந்த செல்வத்தின் அளவு பெரியது தான்.

செல்வமே உலகத்தை ஆட்டிவைக்கும் கருவி என நீ நினைக்கிறாய். எல்லா மக்களுமே இப்படி நினைப்பதால், நீயும் நினைப்பது இயற்கையே. எனவே, சாதாரண செல்வத்தை தேடி இங்கு வந்திருக்கிறாய், என்றவரை இடைமறித்த பாம்பாட்டி சித்தர், சுவாமி! தாங்கள் யார்? தங்கள் உடலே பொன்போல் மின்னுகிறதே, என்றார்.மகனே! உடலைக்கூட பொன்னாகக் கருதி பார்க்கும் அளவுக்கு, உன் மூளையில் செல்வம் தேடுவதின் தாக்கம் தெரிகிறது. சரி...இந்த உடல் என்றாவது அழியத்தானே போகிறது. அப்போது அது தீயில் கருகியோ, மண்ணில் நைந்தோ உருத்தெரியாமல் போய்விடுமே. அப்போது பொன்னை எங்கே தேடுவாய், என்றார்.அவரது அந்த வார்த்தைகள் இளைஞனின் மனதைத் தொட்டன.சுவாமி! இந்த அரிய உபதேசத்தை செய்த தாங்கள் யார் என்பதை நான் அறிந்து கொள்ளும் தகுதியுடையவனா? என பாம்பாட்டியார் பணிவுடன் கேட்டதும், அவனது மனம் செல்வத்தில் இருந்து விடுபட்டுவிட்டது என்பதை வந்தவர் உணர்ந்து கொண்டார்.மகனே! நான் தான் சட்டைமுனி சித்தர்.
10.தேரையர்

தலையைப் பிளந்து  அறுவைச்சிகிச்சை செய்வது என்பது இன்று அறிவியல் வளர்ந்த நிலையில் கூட கடுமையான சோதனைக்களத்தில் நிற்கும் உணர்வைத் தருகிறது. ஆனால், நம் தேசத்தில் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, மூலிகை வகைகளைக் கொண்டே இந்த சிகிச்சை நடத்தப்பட்டிருக்கிறது. இந்த சிகிச்சையை செய்தவர் அகத்தியர் என்றாலும், அது வெற்றி பெற காரணமானவர் தேரையர். வைத்தியரே குழம்பிப்போய் நின்ற வேளையில், துணிச்சலும் சமயோசிதமும் கலந்து இந்த அறுவை சிகிச்சை வெற்றி பெற காரணமானார். தேரையர் சித்தர் மலையாள தேசத்தில், திருவிதாங்கூர் பகுதியைச் சேர்ந்தவராக இருந்திருக்க வேண்டும். அவரது வரலாற்றின் போக்கைக் கொண்டு இவ்வாறு கணிக்க வேண்டியுள்ளது. அவர் சமாதியானது மலையாள தேசத்திலுள்ள தோரண மலை என கணிக்கப்பட்டுள்ளது. தோரணமலை, குற்றாலம் அருகில் உள்ளது. முற்காலத்தில், குற்றாலத்தைச் சார்ந்த பகுதிகள் மலையாள தேசத்தில் தான் இருந்தன. மேலும், இவர் அகத்தியரின் சீடராக இருந்தார். அகத்தியரும், பொதிகை மலையில் தங்கியிருந்தார். இதையெல்லாம் கணக்கில் கொண்டால், இது உண்மையாக இருக்கலாம் என்றே நம்பலாம். தமிழ் மூதாட்டி அவ்வையார், தேரையரின் திறமையைப் பற்றித் தெரிந்து, அவரை அகத்தியரிடம் அறிமுகப்படுத்தியதாகவும், அவரை அகத்தியர் சீடராக ஏற்றுக்கொண்டதாகவும் ஒரு தகவல் இருக்கிறது. அப்போது தேரையருக்கு என்ன பெயர் இருந்ததோ? ஆனால், அவர் தேரையர் என்ற பெயர் பெற ஒரு நிகழ்ச்சியே காரணமானது. எப்படியிருப்பினும், இவர் அகத்தியரின் சீடராக இருந்தது நிஜமே.ஒருமுறை தேரையர் அகத்தியரிடம், குருவே! மனிதன் ஏன் பிறக்கிறான்? அவன் இந்த உலகத்தை தன்னுடையதாகக் கருதி, இங்கேயே தங்க விரும்புகிறானே? மரணம் கண்டு அவன் அஞ்சுவது எதனால்? முக்திநிலை அடைவது தானே வாழ்வின் நோக்கம். பிறப்பற்ற நிலை பெற, நீங்கள் தான் உபதேசிக்க வேண்டும், என்றார்.

அகத்தியர் சிரித்தார். தேரையர் சற்றும் எதிர்பாராத ஒரு பதிலை அளித்தார். சீடனே! உடம்பை பாதுகாத்துக் கொள். உடம்பை பாதுகாத்தால் உனது ஆயுள் பெருகும். ஆயுள் பெருகப் பெருக உனக்கு முக்தி கிடைத்து விடும், என்றார்.சுவாமி! தங்கள் பதில் விந்தையாக இருக்கிறதே! இந்த உடம்பை விடுத்து, விரைவில் வந்த இடம் போய் சேர்வது தான் முக்தி தத்துவம். தாங்களோ, ஆயுள் அதிகரித்தால் முக்தி கிடைக்கும் என்கிறீர்களே! இதெப்படி சாத்தியம்? என்றார். சீடனே! ஒரு கேள்விக்கு பதில் சொல், என்றார் அகத்தியர்.தேரையர் ஆவலுடன் அவர் முகத்தை நோக்கினார். நீ பல திருமணங்களைப் பார்த்திருப்பாய். மணமக்களை விருந்தினர்கள் என்ன சொல்லி வாழ்த்துகின்றனர்? என்றார். நீடூழி வாழ்க, என்று சொல்வார்கள். ஏன் அப்படி சொல்கிறார்கள்? உன் கூற்றின்படி பார்த்தால், விரைவில் முக்தி அடைக என்றல்லவா வாழ்த்த வேண்டும்! மகனே! ஆயுள் வளர்வது வீணே பொழுது போக்குவதற்காக அல்ல. ஆண்டவனால் நிர்ணயிக்கப்படும் வாழ்நாளை ஆண், பெண் இருபாலரும், பிறர் நன்மை பெறுவதற்காகப் பயன்படுத்த வேண்டும். நம்மைப் போன்ற துறவிகளும் இதையே செய்ய வேண்டும். மேலும், ஞானத்தைப் பெற கடும் ஆன்மிகப்பயிற்சிகள் தேவை. இந்த பயிற்சியைப் பெற உடல் வலுவாக இருக்க வேண்டும். மொத்தத்தில் நோயற்ற உடல் வேண்டும். எனவே, நீ எல்லோருக்கும் நோயற்ற உடல் அமையும் வகையில், சேவை செய். நீ ஞானம் பெற்று, முக்தி பெறுவாய், என்றார். குருவின் இந்த அற்புதமான விளக்கத்தைக் கேட்ட தேரையர், அவரிடம் மிகுந்த நேசம் கொண்டார். அந்நேரத்தில் அகத்தியர், காடுகளில் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டு பலவித ஆராய்ச்சிகளைச் செய்து கொண்டிருந்தார். தேரையர் அவர் கேட்கும் மூலிகை வகைகளைத் தேடிப்பிடித்து கொண்டு வந்து மருந்து தயாரிக்க உதவினார். இந்த சமயத்தில், காசிவர்மன் என்ற அரசனுக்கு கடும் தலைவலி ஏற்பட்டது. நாளாக நாளாக வலி அதிகரித்தது. அவன், அகத்தியரைத் தேடி அவரது குடிலுக்கு வந்தான்.பெருமானே! என்னை தாங்க முடியாத தலைவலி ஆட்டிப்படைக்கிறது.

ராஜாங்க விஷயங்களில் கவனம் செலுத்த முடியவில்லை. தாங்கள் நினைத்தால், இதை நொடியில் குணப்படுத்தி விடுவீர்கள் என்பதை நான் அறிவேன். என்னைக் காப்பாற்ற வேண்டும், என வேண்டி அவரது பாதத்தில் விழுந்தான்.அரசன் மீது அகத்தியர் மிகுந்த கருணை கொண்டார். அவனை பரிசோதித்தார். தலைவலிக்கான காரணம் தெரிந்து விட்டது. அவனிடம் சொல்ல யோசித்தார். மன்னா! நீ அரண்மனைக்குச் செல். நாளை இந்த வியாதியை தீர்த்து விட ஏற்பாடு செய்கிறேன், என்றார்.
11.இடைக்காடர்

நவக்கிரகங்களில் குருவைத் தவிர அனைவரும் பதறிப் போனார்கள். நாம் சரியான இடத்தில் தானே நேற்றிரவு படுத்திருந்தோம், இன்று இடம் மாறியிருக்கிறோம். எப்படி இது நிகழ்ந்தது? நமது மாறுபாட்டான நிலையால், கொடும் பஞ்சம் சம்பவிக்க வேண்டிய ஒரு மாமாங்க காலத்தின் நடுப்பகுதியிலேயே, மழை கொட்டிக் கொண்டிருக்கிறதே! இனி நாம் முந்தைய நிலையை அடைந்தாலும், மழை நிற்குமா? என்று புலம்பிக் கொண்டிருந்தனர்.குரு சிரித்தார்.கிரகங்களே! நீங்கள் பேசுவது நகைப்புக்குரியதாய் இருக்கிறது. நாம் ஒருமுறை இடம் மாறி விட்டால், குறிப்பிட்ட காலம் வரை அதே இடத்தில் தான் சஞ்சரிக்க முடியும் என்ற விதியைக் கூட மறந்து விட்டீர்களா? விதியை மதியால் வெல்லலாம் என்பது இதுதான்! இந்த விளையாட்டுக்கு காரணமானவர் யார் தெரியுமா? இடைக்காடர்... ஆம்... நேற்று வரை ஆடு மேய்த்துக் கொண்டிருந்த அவர், இன்று மாபெரும் சித்தர். சிவனருள் பெற்றவர். அவரது மதி பலம் மட்டுமல்ல... நமக்கெல்லாம் படியளக்கும் சிவபெருமான் மீது அவர் கொண்டிருக்கும் பக்தியும் இதற் கொரு காரணம், என்றதும், ஆ... என வாயைப் பிளந்த கிரகங்கள், ஆடு மேய்த் தவர் சித்தரானது எப்படி? குருதேவா! எங்களுக்கு விளக்கியருள வேண்டும்? என்றனர். குரு இடைக்காடரின் வரலாறை விவரித்தார். இடைக்காடர், காஞ்சிபுரம் அருகிலுள்ள இடையன் மேட்டைச் சேர்ந்தவர் என்று ஒரு சாராரும், சிவகங்கை அருகிலுள்ள இடைக்காட்டூரைச் சேர்ந்தவர் என்று மற்றொரு சாராரும் கூறுகின்றனர். எப்படியிருப்பினும், ஊரின் பெயரே இவருக்கு நிலைத்திருக்கிறது. இவரது தந்தை நந்தக்கோனார், தாய் யசோதா. இந்தப் பெயர் களைக் கொண்டு, இவரைப்பெருமாளின் ஒரு அம்சம் என்று கூறுபவர்களும் உண்டு.

கண்ணன் பசுக்களை மேய்த்தார், இவரே ஆடுகளை மேய்த்தார். கல்வியறிவு அறவே இல்லை. இந்த ஆடுகள் அங்குமிங்கும் பாய்கின்றனவே! தனக்கு வரும் ஆபத்தை உணராமல் குறுக்கும் நெடுக்குமாக ஓடி, முன்னால் செல்ல துடிக்கின்றனவே! இவற்றின் மந்தபுத்தியால், இவை தனக்கும், பிறருக்கும் சிரமத்தைத் தருகின்றனவே! ஓ...ஆண்டவனே! இந்த ஆடுகளின் ஸ்பாவத்தைப் போலவே தானே, உன்னைப் போன்ற மனிதர் களின் ஸ்பாவமும் இருக்கிறது என்பதைப் புரிய வைக்கிறாயோ! மனிதன் கடவுளுக்கு பயப்படவா செய்கிறான்? ஆடுகளைப் போல குறுக்கு வழியில் முன்னேறத்தானே நினைக்கிறான்! இந்த ஆடுகளை நான் நல்வழிப்படுத்தி, அவரவர் வீட்டில் ஒப்படைப்பது போல, மனித ஜீவன்களையும் ஒழுங்குபடுத்தி, உன்னிடம் ஒப்படைக்கத்தான் எனக்கு இந்தப் பிறவியைத் தந்துள்ளாயோ! படிப்பில்லாவிட்டாலும் கூட, இடைக்காடரின் மனதில் ஆழ்ந்த ஞானத்தைத் தரும் இந்தக் கேள்வி எழும்பியதும், இதற்கு விடை தேடி அலைந்தார். ஆடுகளை ஓரிடத்தில் மேயவிட்டு, கோலை ஊன்றி, ஒற்றைக்காலை உயர்த்தி, தவ நிலையில் இருப்பார். சிவபெருமானே! என் கேள்விக்கு விடை வேண்டும், இந்த சமூகத்தை நான் ஒழுங்குபடுத்த வேண்டும். கல்வி எனக்கில்லை, யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள அது அவசியமும் இல்லை. எனக்கு, மனித வாழ்வின் சூட்சுமத்தைப் புரிந்துகொள்ளும் சக்தியைக் கொடு, இந்த சமுதாயத்தை ஒழுங்குபடுத்தும் உபாயத்தைச் சொல்,.... இப்படி அன்றையப் பொழுது முழுவதும் பல மாதங்களாக தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார். ஒருநாள், அவர் முன்னால் அதிபயங்கர மின்னல் போன்ற பிரகாசமான ஒளி வீசியது. அது இடைக்காடரின் உடலில் பாய்ந்தது. இடைக் காடருக்கு ஏதோ தனக்குள் மாற்றம் ஏற்படுவது போன்ற உணர்வு ஏற்பட்டது. அப்போது அசரீரி ஒலித்தது. சேவை... சேவை... சேவை... இதுவே மனிதன் என்னை அடைவதற்கான வழி...பிறருக்கு சேவை செய். அதற்குரிய உபாயத்தைக் காண். மகனே! இதோ, ஞானநூல்கள் அனைத்தையும் கற்ற பெருமைக்குரியவர்களின் வரிசையில் உன்னையும் சேர்க்கிறேன்.

நீ இன்று முதல் பெரிய மகான். சாதாரண இடைக்காடன் அல்ல... இடைக்காட்டு சித்தன்... இடைக்காட்டு சித்தன்... ஒலி நின்றுவிட்டது. சிவனருளால் இடைக்காடர் இப்படி சகல ஞானமும் பெற்றதும், அவரால் நினைத்ததை எல்லாம் செய்ய முடிந்தது. ஒருமுறை அவர் தியானத்தில் இருந்த போது, கொடிய பஞ்சம் வரப்போவதை அறிந்தார். அந்த பஞ்சம் 12 ஆண்டுகள் நீடிக்கும் என்பதைக் கணித்தார்.ஆஹா...நதிகள் வற்றப்போகின்றன. ஊற்று தோண்டினால் கூட தண்ணீர் கிடைக்காது. தண்ணீர் இல்லாவிட்டால் உலகமேது. இந்தப் பஞ்சத்தால் பல உயிர்கள் அழிவது உறுதியாகி விட்டது. நானும் அதில் ஒருவனாகத்தானே இருப்பேன்! ஒருவேளை நான் உயிர் பிழைத்தேன் என்றால், ஏதாவது செய்து இந்த மக்களுக்கு நல்வழி பிறக்கச் செய்யலாம்.
12.திருமூலர்

சீடனே! அவள் அழுது புலம்புவதை என்னால் தாங்க முடியவில்லை. கணவனைத் தனது தெய்வமாகக் கருதி வழிபட்டவள் அந்த மகாராணி. அவன் மீது உயிரையே வைத்திருந்தாள். அநேகமாக துக்கம் தாளாமல் அவளும் இறந்து போவாள் என்று தான் கருதுகிறேன். அதற்குள் அவளை காப்பாற்றியாக வேண்டும். எனவே, நான் அந்த அரசனின் உடலில் புகப்போகிறேன். உயிர்களைக் காக்கவே, இறைவன் சில மாய வித்தைகளை உருவாக்கியிருக்கிறான். சித்தர்களும், முனிவர் களும் அதைக் கற்றுத் தேர்ந்திருக்கிறார்கள். எனக்கும் ஒரு கலை சித்தித்திருக்கிறது. அதில் ஒன்றான பரகாயப் பிரவேசம் எனக்கு தெரியும். அதாவது என் உடலை ஓரிடத்தில் கிடத்திவிட்டு, உயிரை மட்டும் வேறு ஒரு உடலில் செலுத்தி விட்டால் அது உயிர் பெற்று விடும். கூடுவிட்டு கூடு பாயும் வித்தை என்றும் இதைச் சொல்வர், என்றதும், சீடன் ஆச்சரியம் தாளாமல் கேட்டான். இந்த உரையாடல் திருமூலருக்கும் அவரது சீடனான குருராஜனுக்கும் இடையே நிகழ்ந்தது. இந்த உரையாடலுக்கு காரணம் என்ன? இறந்தது யார்? அழுகின்ற அரசி யார்? அதை முதலில் தெரிந்து கொள்வோம். பாண்டியநாட்டில் ராஜேந்திரபுரி என்ற பகுதி இருந்தது. இதை தவேதன் என்பவன் ஆண்டு வந்தான். அவனது பட்டத்தரசி சுந்தரவல்லி. இவளுக்கு வீரசேனன் என்ற மகன் பிறந்தான். சந்திரவதனி என்பவளையும் அவளது பேரழகுக்காக அவன் திருமணம் செய்து கொண்டான். அவளுக்கு மூன்று புதல்வர்கள் பிறந்தார்கள். தவேதன் தனது இறுதிக்காலத்தில் பட்டத்து ராணியின் பிள்ளையான வீரசேனனுக்கு பட்டம் சூட்டி விட்டு ஓய்வெடுக்க ஆரம்பித்தான். வீரசேனனுக்கு குணவதி என்ற மனைவி வாய்த்தாள். இரண்டாம் தாரத்தின் பிள்ளைகளுக்கும் திருமணம் நடந்தது. குணவதி- வீரசேனன் தம்பதியர் அன்பில் சிறந்து விளங்கினர். அரசசபையிலும் கூட இருவரும் இணைந்தே அமர்ந்திருப்பர். கணநேரம் கூட பிரியாத மனைவியை, அவ்வப்போது நகர்வலம் செல்லும் போது மட்டுமே அரண்மனையில் விட்டுச் செல்வான் வீரசேனன்.ஒருநாள் இரவில் மாறுவேடம் தரித்து நகர்வலம் சென்றான்.

திரும்பி வந்ததும் அந்தப்புரத்துக்கு வேகமாகச் சென்றவன் மயங்கினான். வாயில் நுரை தள்ளியது. குணவதி பதறிப்போனாள். அரண்மனை வைத்தியர்கள் விரைந்தனர். அதற்குள் வீரசேனனின் உயிர் பிரிந்து விட்டது. குணவதியின் கதறல் ஒலி அரண்மனையில் மட்டுமல்ல, வானத்தில் பறந்து கொண்டிருந்த திருமூலர் சித்தரின் காதிலும் விழுந்தது. ஐயோ! எவ்வளவு அன்பாக இருந்தனர் இந்த தம்பதிகள்! சின்ன வயதிலேயே மன்னனின் விதி முடிந்து விட்டதே! இவள் இனி உயிர் வாழ மாட்டாள். இதுபோன்ற உயர்ந்த பெண்மணிகள் மடிந்து விடக்கூடாது. என்ன செய்யலாம்? என்ற யோசனையுடன் மிக வேகமாக தான் தங்கியிருந்த சதுரகிரி மலைக்குப் பறந்தார் திருமூலர் குருராஜனிடம் மேற்கண்டபடி பேசினார். குருராஜனும் சம்மதிக் கவே, சீடனே! நான் மன்னனின் உடலில் புகுந்து, அந்நாட்டு ராணியின் மனம் மகிழும் வகையிலும், நாட்டு மக்களை தெய்வீக வழியில் திருப்பும் வகையிலும் சேவையாற்றி திரும்ப சில ஆண்டுகள் ஆகும். அதுவரை என் உடலை இந்த மலைக் குகைக்குள் பத்திரமாகப் பாதுகாத்து வா! இது கெட்டுப் போகாது. ஏனெனில், நான் கல்பசாதனை செய்து என் உடலை வைரம் பாய்ந்த மரம் போல் மாற்றியிருக்கிறேன். மிருகங்களால் இதற்கு ஆபத்து ஏற்படாமல் பார்த்துக்கொள், என சொல்லிவிட்டு ராஜேந்திரபுரிக்கு கணநேரத்தில் சென்று விட்டார். எல்லோரும் அழுது கொண்டிருந்தனர். அப்போது, சற்றும் எதிர்பாராத விதமாக மன்னனின் உடல் அசைந்தது. ஆ... மன்னரின் உடல் அசைகிறது. அவர் இறக்கவில்லை, மயக்கநிலையில் தான் இருந்திருக்கிறார், என்று எல்லோரும் கூவினர். குணவதியோ இந்திரலோகத்தில் வசிப்பது போன்ற உணர்வை அடைந்து, சோக நீரை ஆனந்த நீராக கண்களில் இருந்து வடித்தாள். மன்னனின் உடலில் திருமூலர் புகுந்து விட்டார்.

எழுந்து அமர்ந்ததும், மகாராணி அவரைத் தன் கணவனெனக் கருதி தழுவிக் கொள்ள முயற்சித்தாள். சற்று ஒதுங்கி அமர்ந்த கணவரிடம், அன்பரே! தங்களுக்கு என்னாயிற்று? தாங்கள் இறந்து போய் விட்டதாக கருதியல்லவா இப்படி அரற்றி அழுதோம்! நடந்ததைச் சொல்லுங்கள், என்றார். மன்னர் பேச ஆரம்பித்தார்.குணவதி! நான் நகர்உலா முடித்து, காற்று வாங்கலாம் என எண்ணி நமது நந்தவனத்திற்குள் புகுந்தேன். அப்போது, ஒரு ரோஜா செடியின் மீது பாம்பு ஒன்று ஓடியது. அதன் முள் பாம்பு மீது படவே, சீறி எழுந்த பாம்பு அதில் இருந்த ரோஜாமலரில் கொத்தியது. அதன் விஷம் அந்த மலரில் பாய்ந்திருக்க வேண்டும் எனக்கருதுகிறேன்.
13.சட்டைமுனி

ரங்கநாதா, திருவரங்கப்பெருமானே! காவிரி சூழ் நாயகனே! இந்த பாழும் மனிதர்களின் சந்தேகத்தை தீர்த்து வை. இந்த மனிதகுலம் நலமுடன் வளமுடன் வாழ வேண்டும் என்பதற்காக, அவர்களுக்குப் புரியும் பாஷையிலே, பல குறிப்புகளை எழுதி வைத்தேனே! அப்படிப்பட்ட எனக்கு, இவர்கள் தந்திருக்கும் பரிசைப் பார்! என்னைத் திருடன் என்கிறார்கள். நானா திருடன். கயிலையிலே சிவபெருமானை காணச்செல்லும் சித்தர்களில் நானும் ஒருவன். அங்கே செல்லும் போது, குளிர் தாங்க முடியவில்லை என்பதற்காக கம்பளிச் சட்டை அணிந்தேன். அதையே நிரந்தரமாக எங்கு சென்றாலும் அணிந்து கொள்கிறேன். அதனால் தானே என்னை சட்டை முனி என்றே எல்லாரும் அழைக்கிறார்கள்! இந்த உடையைத் தவிர வேறெந்த ஆடம்பரமும் இல்லாத நானா உன் அணிகலன்களுக்கு ஆசைப்படுவேன்! நீயே இவர்களிடம் உண்மையை நிரூபி, என கதறினாரோ இல்லையோ, அர்த்தஜாம பூஜைக்குப் பின் சாத்தியிருந்த ரங்கநாதர் கோயில் கதவுகள் தானாகவே திறந்தன.சட்டை முனி மீது குற்றம் சாட்டியிருந்தவர்களெல்லாம் பதறிப் போனார்கள். மன்னன் தலை குனிந்தான். சரியாக விசாரிக்காமலும், இந்த சித்தரின் மேன்மை புரியாமலும் சந்தேகப் பட்டு விட்டோமே என மனம் வருந்தினான்.யார் இந்த சட்டை முனி?கடல்சூழ் இலங்கையிலே சிங்கள தாசிப்பெண் ஒருத்திக்குப் பிறந்தவர் சட்டை முனி. இந்தப் பெண்மணியும், அவரது கணவரும் பிழைப்புக்காக தமிழகம் வந்தனர். சட்டைமுனி இளமையிலேயே தியானம், தவம் என அலைந்தார். மகனைச் சீர்திருத்தி, இல்லறத்தில் அடியெடுத்து வைக்கச் செய்ய மிகவும் போராடினர் பெற்றோரான சிங்கள தம்பதியர். மிகவும் கட்டாயப்படுத்தி மகனுக்கு திருமணமும் செய்து வைத்து விட்டனர்.ஆனால், இறைவன் சித்தமோ வேறு மாதிரியாய் இருந்தது. சட்டைமுனிக்கு இல்லறத்தில் அறவே நாட்டமில்லை. துறவறம் பூண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டார். காடு, மலைகளில் திரிந்த அவர் போகர், திருமூலர், அகத்தியர் ஆகிய சித்தர்களைத் தரிசித்து அவர்களுடன் உரையாடி தானும் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமெனவும், தனக்கு உபதேசிக்கும்படியும் வேண்டினார்.

ஒருமுறை உரோமசர் என்ற முனிவரை பொதிகை மலையில் தரிசித்தார். கயிலைக்குச் செல்லாமல் பொதிகைக்கு சிவபெருமானை வரவழைக்கும் அற்புதமான தவத்தில் ஈடுபட்டிருந்தவர் இந்த முனிவர். ஒருமுறை சிவன் இவருக்கு காட்சி கொடுத்து, முனிவரே! கயிலையில் கங்கைக்கு ஈடான பலன் கொடுக்கும் நதி ஒன்று அகத்தியரால் இங்கு பிறக்கும். தாமிரபரணி எனப்படும் அந்த நதி வற்றாத ஜீவநதியாக ஓடும். அந்நதியில் நீ ஒன்பது தாமரை மலர்களை மிதக்க விடு. அவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் சிவலிங்கம் அமைத்து வழிபடு. கயிலைக்கு அடுத்தபடியாக பொதிகையும் என் இருப்பிடங்களில் ஒன்றாக உன் விருப்பப்படியே அமையும், என்று அருள்பாலித்தார். (இந்த தலங்களே தற்போது நவகைலாயங்கள் என்ற பெயரில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ளன).இப்படி சிவதரிசனம் பெற்ற உரோமசரைச் சந்தித்த சட்டை முனி, முனிவரே! இந்த மக்கள் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களாக உள்ளனர். அடுத்தவர்களின் குறைகளைக் காணுகிறார்களே தவிர தங்கள் குறையைக் களைவது பற்றி சிறிதும் சிந்திப்பதில்லை. இந்த மக்களை நேர்வழிப்படுத்த விரும்புகிறேன். அதற்கு தாங்களே வழிசெய்ய வேண்டும், என்றார். அன்பனே! உன் உயர்ந்த நோக்கம் எனக்குப் புரிகிறது. சிவபெருமானே இதற்கு உனக்கு வழிகாட்ட இயலும். அவரது தரிசனம் வேண்டுமானால் நீ கயிலைக்குச் செல். அவரை வழிபடு. கயிலைக்கு நீ இங்கிருந்து நடந்து செல்ல முயற்சிக்காதே. கடுமையான தவமிரு. அஷ்டமாசித்திகளை உன்னுள் வரவழைக்க கடும் பயிற்சி மேற்கொள். அவற்றை நீ அடைந்து விட்டால், உன் உடம்பைப் பஞ்சாக்கி நீ எந்த இடத்திற்கும் செல்ல முடியும், என அருளுரை வணங்கினார்.சட்டைமுனி சதுரகிரி எனப்படும் மலைக்கு வந்தார். அங்கே பல சித்தர்களின் தரிசனம் அவருக்கு கிடைத்தது. அவர்களுக்கு சேவை செய்து, அவர்களின் நம்பிக்கையை  பெற்று அஷ்டமாசித்திகளை அடைந்தார். கடும் தவத்தின் பேரில் கயிலைக்குப் பறந்து சென்றார்.

கயிலைமலையான் இவரது முயற்சியைக் கண்டு, நண்பன் போல இவருடன் பேசினார்.சிவதரிசனம் பெற்ற சட்டைமுனி மீண்டும் தென்னகம் வந்தார். மக்களின் நோய் போக்க தமிழிலேயே மருத்துவக்குறிப்புகளை எழுதினார். அத்துடன் மக்கள் சுபிட்சமாக வாழவும், இறந்தவர்களை எழுப்பும் வழிமுறைகளையும் பகிரங்கமாக எழுதினார்.
14.ராமதேவர்

மெக்கா நகர மக்களே! நான் ஒரு சித்தன். உங்கள் அரபு நாட்டில் காயகல்ப மூலிகைகள் இருப்பதை அறிந்து, அவற்றைப் பற்றி ஆய்வு செய்து, மருந்துகள் தயாரித்து மனித குலத்தின் நோய் தீர்க்கவே இங்கு வந்தேன். என்னைத் தவறாகக் கருதாதீர்கள். எனக்கு மத வேறுபாடெல்லாம் கிடையாது. நான் எல்லா மதங்களையும் நேசிப்பவன், என்றார் ராமதேவர். யார் இவர்? ராமதேவர் நாகப்பட்டினத்தில் மாசி மாதம் பூர நட்சத்திரத்தில் அவதரித்தவர். இளம் வயதிலேயே அஷ்டமாசித்திகள் கைவர  பெற்றவர். சில சித்தர்கள் தங்கள் உடலை கிடத்திவிட்டு, ஆன்மாவை பல்வேறு இடங்களுக்கும் அனுப்பி வைப்பார்கள். ஆங்காங்கு கிடைக்கும் உடல்களில் புகுந்து கொண்டு சேவை செய்வார்கள். ராமதேவர் மிகவும் வித்தியாசமானவர். முயற்சி... முயற்சி... முயற்சி... இதுவே அவரது தாரக மந்திரம். இந்த மந்திரத்திற்கு மாபெரும் பலன் கிடைத்தது. ராமதேவர் தன் உடலுடனேயே பிற தேசங்களை விரைவில் அடையும் சித்தியை பெற்றார். ஒருமுறை இவர் கங்கைக்கு நீராடச் சென்ற போது, சட்டைநாதரின் விக்ரகம் அவருக்கு கிடைத்தது. அதை நாகப்பட்டினம் கொண்டு வந்து ஒரு கோயிலில் பிரதிஷ்டை செய்தார். சில சித்தர்களின் தரிசனமும் இமயமலைக் காடுகளில் அவருக்கு கிடைத்தது.அவர்கள் ராமதேவரிடம், சித்தனே! நீ மெக்கா செல். அங்கே ஏராளமான காயகல்ப மூலிகைகள் இருக்கின்றன. அவற்றை ஆய்வு செய்து, மருந்து தயாரித்து மக்களின் பிணி தீர்க்கும் உன்னதமான பணியைச் செய், என்று வற்புறுத்தினர். அவர்களது கட்டளையை ஏற்ற ராமதேவர் தன் சித்தியால் மெக்கா சென்றடைந்தார். புதியவர் ஒருவர் தங்கள் நாட்டுக்கு வந்ததும், அரபு நாட்டு மக்கள் அவரை ஏற்க மறுத்தனர். அரபு நாட்டவரைத் தவிர மற்றவர்கள் அங்கு தங்க அனுமதி கிடைக்காது என்று கூறி அவரை திரும்பி விடும்படி எச்சரித்தனர். நான் எல்லா மதங்களையும் நேசிப்பவன், என்று அவர் அவர்களிடம் சொல்லவே, மிக நல்லது, அப்படியானால், நீங்கள் எங்கள் மதத்தில் இணைந்து விட வேண்டியது தானே! குர்ஆனையும் நீங்கள் ஓத வேண்டும். அவ்வாறு செய்தால், நீங்கள் இங்கிருக்க அனுமதி தருகிறோம், என்று மக்கள் கூறினர்.

அவ்வளவுதானே! அதை நான் செய்கிறேன், என்றார் ராமதேவர். அவருக்கு யாக்கோபு என்று பெயரிட்டு தங்கள் மதத்தில் சேர்த்துக் கொண்டனர் அரபு மக்கள். ராமதேவ சித்தர் இப்போது யாக்கோபு சித்தர் ஆகிவிட்டார். அரபுநாட்டில் கிடைத்த பலவகை மூலிகைகளை ஆய்வு செய்து அவற்றின் குணம், குணப்படுத்தும் நோய்கள் ஆகியவை குறித்து எழுத ஆரம்பித்தார். சிறிது காலத்திலேயே அரபு மொழியையும் கற்று, அந்நாட்டு மக்களும் பயன்பெறும் வகையில் வைத்திய சிந்தாமணி என்னும் நூலை அரபு மொழியில் எழுதினார். அரபு மக்கள் அவரை போற்றத் துவங்கினர். அவரிடம் பலர் மருத்துவ முறைகளையும் கற்றுக் கொண்டனர். இந்நிலையில், போகர் சித்தர் அவர் முன்பு தோன்றினார். ராமதேவா! நீ வைத்திய முறைகளை முழுமையாக அறிந்து கொண்டு விட்டாய். இனி நீ நாடு திரும்பு. சதுரகிரி மலைக்குச் சென்று இந்த மூலிகைகளை ஆய்வு செய்தது குறித்து எழுது. மேலும், இம்மூலிகைகளை ஆய்வு செய், என்றார். அதன்படி ராமதேவர் சதுரகிரி மலை வந்து சேர்ந்தார். தனது சீடர்களிடம், போகரின் அறிவுரைப்படி நான் பத்தாண்டுகள் ஒரு சமாதிக்குள் இருந்து பாலைவன மூலிகைகள் குறித்து ஆய்வு செய்யப் போகிறேன். நான் வரும் வரை நீங்கள் சமாதி வாசலில் காத்திருங்கள், என்றார்.பத்தாண்டு காலம் சமாதிக்குள் இருக்கும் ஒருவர் எப்படி திரும்புவார்? இது சாத்தியமல்ல என்று நினைத்த சீடர்கள், அவர் சமாதிக்குள் சென்றதும் அங்கிருந்து சென்று விட்டனர். ஒரே ஒரு சீடர் மட்டும் தனது குரு நிச்சயம் திரும்புவார் என நம்பி சமாதி வாசலில் காத்திருந்தார். சமாதிக்குள் சென்ற சித்தர், மூலிகைகளை ஆய்வு செய்தார். சமாதிக்குள் இருந்தே யாரும் அறியாத வண்ணம் பல்வேறு இடங்களுக்குச் சென்றார். ஒருமுறை  சமாதிக்குள் இருந்த காலங்கிநாத சித்தரைத் தரிசித்தார். அவர் தன்னுடைய அனுபவங்களையெல்லாம் ராமதேவருக்கு போதித்தார். ஆக, ராமதேவ சித்தர் மிகப்பெரிய ஞானியாகத் திகழ்ந்தார்.

எதையும் செய்யும் ஆற்றலைப் பெற்ற பிறகு, அவர் சொன்னபடியே சமாதிக்குள் இருந்து பத்தாண்டுகள் கழித்து வெளிப்பட்டார். தன்னுடைய சீடர்களே தன்னை நம்பாமல் சென்றது பற்றி அவர் சிறிதும் வருந்தவில்லை. ஒரே ஒரு சீடன் விசுவாசத்துடன் தங்கியிருந்தது பற்றி சந்தோஷம் கொண்ட அவர், சீடனே! மற்றவர்கள் என்னைத் தூற்றி விட்டு சென்றது பற்றி நான் கவலைப்படவில்லை.
15.சிவவாக்கியர்

பெண்ணே! இந்த மணலையும், கசப்புமிக்க இந்த சுரைக்காயை கசப்பு நீக்கி ருசியாகவும் சமைத்து தர உன்னால் முடியுமா? சிவவாக்கியர், அந்த குறவர் குலப்பெண்ணிடம் கேட்டார். அவள் பதிலேதும் பேசவில்லை. அவர் கொடுத்ததை பயபக்தியுடன் கைநீட்டி வாங்கினாள். அடுப்பு பற்ற வைத்தாள். மணலை அரிசி களைவது போல களைந்தாள். மண் பானையில் போட்டாள். குறிப்பிட்ட நேரத்திலேயே அது சாதமாகி விட்டது. அடுத்து சுரைக்காயை சமைத்தாள். கறி மிக ருசியாக இருந்தது. கசப்புத்தன்மை அறவே இல்லை. பெரியவர்கள் எதையாவது சொன்னால், ஏன் ஏதென்று கேட்காமல் செய்வது அக்காலத்தில் சிறியவர்களின் வழக்கமாக இருந்தது. அதிலும், இவரோ தவசிரேஷ்டர் போல இருக்கிறார். இளவயது வேறு. முகத்தில் தேஜஸ் ஜொலிக்கிறது. இந்த சிவவாக்கிய சித்தர் பிறந்த இடம் பற்றிய தகவல் இல்லை என்றாலும், இவர் தை மாதம் மகம் நட்சத்திரத்தில் அவதரித்தார் என்பது மட்டும் சில நூல்களில் இருந்து தெரிய வருகிறது. பிறக்கும் போதே குழந்தை சிவவாக்கியர் சிவசிவ என்று சொன்னாராம். சிவன் என்ற வாக்கியத்தைச் சொன்னதால் சிவவாக்கியர் என்று இவரது பெற்றோர் பெயர் வைத்து விட்டனர். சிவன் மீது மிகுந்த பற்றுக் கொண்ட இவர், சிவபெருமானை நமசிவாய என்று சொல்லி வழிபடுபவர்களின் உயிர் பிரிந்து விட்டால் கூட மீண்டும் உயிர் பிழைத்து விடுவார் என்ற அடிப்படையில் ஒரு பாடல் பாடியுள்ளார். சிவபித்தரான இவர், சித்தர்களைப் பற்றி அறிந்தார். யாராவது ஒரு சித்தரை தனது குருவாக அடைய வேண்டும் எனக்கருதி காசிக்கு சென்று விட்டார். அங்கே ஒரு சித்தரைப் பற்றிக் கேள்விப்பட்டார். அந்த சித்தர் காசிக்கு வரும் பக்தர்களின் காலணி பழுதாகி விட்டால், அதை சரி செய்து கொடுப்பார். சிலருக்கு, அவர்களது காலின் அளவைப் பார்த்தே காலணி செய்து கொடுத்து விடுவார். அந்தளவுக்கு தொழிலில் திறமைசாலி. காலணி செய்யும் தொழில் செய்தாலும், பிராணாயமம், தியானம், யோகா என அவருக்குத் தெரியாத வித்தைகள் இல்லை. அவர் தியானத்தில் ஆழ்ந்து போனால், அவராக எழுந்தால் தான் உண்டு.

யாராலும் அவ்வளவு எளிதில் அவரை எழுப்ப முடியாது. தியானத்தில் திறமைசாலி என காசி மக்களிடையே அவருக்கு பெயர் இருந்தாலும், அவர் செய்யும் தொழிலால் பெரும்பாலோர் அவருக்கு மரியாதை செய்வதில்லை. ஒரு சிலர் அவரைக் கடவுள் போல நினைத்து ஆசி பெற்றுச் செல்வார்கள். அவரைப் பற்றி கேள்விப்பட்டார் சிவவாக்கியர். அவரிடம் சென்று, குருவே! தங்கள் மாணவன் வந்திருக்கிறேன், தங்களுக்கு பணிவிடை செய்வதில் எனக்கு ஆனந்தம். தங்கள் மூலமாக இறைவனைக் காண விரும்புகிறேன், என்றார். சிவவாக்கியரை சித்தர் ஒரு பலகையில் அமரச்சொன்னார். அவ்வளவுதான்! பலகை பறக்கத் தொடங்கி விட்டது. ஏதோ ஒரு பரவசம் சிவவாக்கியரை ஆட்கொண்டது. உயர உயரப் பறந்தார். வானமண்டலத்தை அடைந்து விட்டது போல் ஒரு உணர்வு. அங்கே தான் தெய்வங்கள் இருக்கும் என்பார்களே! தெய்வங் களைப் பார்க்க வேண்டும் என்று சித்தரிடம் ஒரு வார்த்தை தானே சொன்னோம். அவர் தேவலோகத் திற்கே கூட்டி வந்து விட்டாரே! நட்சத்திர மண்டலங்களின் மத்தியில் மிதந்தார் சிவவாக்கியர். தெய்வங்கள் யாராவது கண்ணில் படுகிறார்களா என ஆராய்ந்தார். சற்று நேரமானது. கடவுளைக் காண்பதற்குள்ளாகவே பலகை வேகமாக கீழ் நோக்கி இறங்கியது. சிவவாக்கியரின் உடல் நடுங்கியது. கீழே விழுந்து விடுவோமோ என்ற அச்சம் வேறு. அந்த உணர்வு திடீரென நின்றது. சிவவாக்கியர் கண் திறந்தார். இப்போது உடலில் பரவசநிலையும் இல்லை. பலகை மேலே பறக்கவுமில்லை. இருந்த இடத்தில் அப்படியே இருந்தார். நான் நிஜமாகவே வானமண்டலத்திற்கு பறந்தேனா சுவாமி? என்றார். இல்லையே! நீ வந்ததில் இருந்தே என் முன்னால் தான் இருக்கிறாய்? என்ற சித்தர், சிவவாக்கியா! நீ கடவுளைக் காண ஆசைப்படுகிறாய். அது எளிதான காரியமல்ல. அதே நேரம், இப்போது பலகையில் பறப்பது போல உணர்ந்தாயே! அந்த உணர்வு நிரந்தரமாக உடலில் தங்கினால் நீ கடவுளை  காணலாம்.

 அதே நேரம் உனக்கு அதற்குரிய பக்குவம் வரவில்லை. நான் ஒரு பரிட்சை வைக்கிறேன். இந்த தேர்வில் தேறினால், நீ கடவுளைப் பார்த்து விடலாம், என்றார்.என்ன தேர்வு? என ஆவலுடன் சிவவாக்கியர் கேட்க, கங்கைக்குச் செல்.செருப்பு தயாரித்து இங்கே நான் சேர்த்து வைத்துள்ள இந்தக் காசை வாங்கிச்செல். என் குருநாதரின் காணிக்கை இது, என அவளிடம் சொல். அவள் வாங்கிக்கொள்வாள், வரும் போது இந்த தோல்பையில் கங்காதீர்த்தம் கொண்டு வா, என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
16.புலிப்பாணி

நான் எம்பெருமான் முருகனுக்கு சிலை செய்ய ஆசைப்படுகிறேன். உலோகங்களால் அவருக்கு பல இடங்களில் சிலைகள் உள்ளன. ஆனால், நான் ஆசைப்படுவது வேறு. இந்த முருகனைத் தரிசித்த மாத்திரத்திலேயே உடலிலுள்ள நோய்கள் அனைத்தும் விலகியோட வேண்டும். மன நோயும் விலக வேண்டும். எனவே, நான் மூலிகைகளைக் கொண்டு அவருக்கு சிலை செய்ய வேண்டும். நீ நோய் தீர்க்கும் மூலிகைகளைப் பறித்து வா, என்றார் குருவான போகர் சித்தர்.குருவின் கட்டளையை ஏற்ற புலிப்பாணி, ஏ புலியே கிளம்பு, என்றார்.புலி மீது சவாரி செய்பவர் யார் எனக் கேட்டால், நீங்கள் ஐயப்பன் என்று பதில் சொல்வீர்கள். அவர் தெய்வம். தர்ம சாஸ்தாவான அவர், புலியின்மீது பயணம் செய்வதில் ஆச்சரியமாக இல்லை. ஆனால், ஒரு சித்தர் புலியின் மீது பயணம் செய்கிறார் என்றால், அவர் எப்பேர்ப்பட்ட சக்தி மிக்கவராக இருக்க வேண்டும். விலங்குகளை வசியப்படுத்தி, தன் கட்டுக்குள் வைத்திருப்பவர் அவர். அந்தளவுக்கு அவருக்கு தவசக்தி அமைந்திருந்தது.புலிப்பாணி சித்தர் சீனாவில் பிறந்ததாக ஒரு தகவல் இருக்கிறது. பழநியில் வசித்த போகர் சித்தர் சீனாவுக்கு வான்வழியே யோக சாதனையைப் பயன்படுத்தி சென்றார். அவரது அருமை பெருமைகளைத் தெரிந்து கொண்ட புலிப்பாணி அவரது சீடரானார். அவரிடம் சகல யோக வித்தைகளையும், சித்து வேலைகளையும் கற்றுக் கொண்டார். பின்னர் இருவரும் பாரதத்துக்கு வந்து சேர்ந்தனர்.போகர் பழநியில் தங்கிய போது புலிப்பாணியும் உடன் தங்கினார். ஒருமுறை போகர் சித்தர் தாகத்துடன் ஒரு காட்டில் தவித்த போது, புலிப்பாணி தன் புலியின்மீது ஏறிச் சென்றார். தண்ணீரை பாணி என்றும் வேற்றுமொழியில் சொல்வதுண்டு. புலியில் ஏறிச்சென்று பாணி கொண்டு வந்ததால் புலிப்பாணி என்று இருமொ ழிகளையும் இணைத்து அவருக்கு பெயர் வந்ததாகவும், அவர் சீனாவில் பிறந்தவர் என்பதால் அவரது நிஜப்பெயர் தெரியவில்லை என்றும் சொல்லப்படுகிறது.புலிப்பாணி புலியில் ஏறி தண்ணீர் கொண்டு வந்ததை நிரூபிக்கும் பாடல் ஒன்றை போகரே எழுதியிருக்கிறார். அந்தப் பாடல் இதுதான்!

ஆழ்ந்தவே காலங்கி கடாட்சத்தாலே அப்பனே வேங்கை தனில்  ஏறிக்கொண்டு தாழ்ந்திடவே ஜலம் திரவ்விப்புனிதவானும் சாங்கமுடன் தாரணியில் சுற்றி வந்தோன் என்ற பாடல் புலிப்பாணியையே குறிப்பதாகச் சொல்கிறார்கள். முருகன் சிலை செய்ய மூலிகைகளைக் கொண்டு வரச்சொல்வதின் நோக்கத்தை புலிப்பாணி புரிந்து கொண்டார். எவ்வளவு அருமையான யோசனை! என் குருநாதருக்கு தான் இந்த மக்கள் மீது எவ்வளவு கரிசனம் இருக்கிறது! ஆனால், குருநாதர் குறிப்பிடும் ஒன்பது வகை மூலிகைகளும் விஷத்தன்மை கொண்டவை ஆயிற்றே! விஷ மூலிகைகள் எப்படி மனிதனைக் குணப்படுத்தும்! மாறாக, அவை ஆளையல்லவா கொன்று விடும், என்ற சந்தேகமும் இருந்தது.தன் சந்தேகத்தை மிகுந்த பணிவுடன் கேட்டார் புலிப்பாணி. மக்கள் மீது புலிப்பாணிக்கு இருக்கும் அபிமானத்தை மனதுக்குள் பாராட்டிய போக சித்தர், புலிப்பாணி! கவலை கொள்ளாதே. நீ கொண்டு வரும் ஒன்பது மூலிகைகளையும் குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் கலந்தால் பவ பாஷாணம் என்னும் மருந்து கிடைக்கும். இந்த மருந்தை நேரடியாகச் சாப்பிட்டால் மரணம் சம்பவிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், நவபாஷாணத்தை சிலையாக வடித்து, அதற்கு அபிஷேகம் செய்யும் பொருட்களைச் சாப்பிட்டால் அது விஷத்தன்மைக்கு பதிலாக மருத்துவத்தன்மை பெறும், மேலும், நவபாஷாணத்தின் வாசம் பட்டாலே போதும், மனிதன் புத்துணர்வு பெறுவான். இதோ! இந்த பழநி மலையின் உச்சியில் நவபாஷாண முருகன் சிலையை, கலியுகம் முடியும் வரையில்  மக்கள் வணங்கும் வகையில் பிரதிஷ்டை செய்வேன். அவன் அருளால் உலகம் செழிக்கும். எக்காலமும் வற்றாத மக்கள் வெள்ளம் இந்தக் கோயிலுக்கு வரும். பழநி முருகனின் ஆணையோடு தான் இந்தச் சிலையைச் செய்கிறேன். எனவே மக்களுக்கு எந்த ஆபத்தும் வராது, என்றார். புலிப்பாணி சித்தர் மகிழ்ச்சியடைந்தார். குருநாதர் சொன்னது போலவே புலியில் ஏறிச்சென்று ஒன்பது வகை மூலிகைகளையும் கொண்டு வந்து கொடுத்தார். பழநிக்குச் செல்பவர்கள், போகரை மட்டுமின்றி புலிப்பாணி சித்தரையும் நிச்சயமாக மனதில் நினைக்க வேண்டும். போகர், இவ்வூர் முருகன் சிலையைச் செய்யக் காரணமாக இருந்தவர் இவரே! போகர் நினைத்தபடி நவபாஷாண சிலை உருவாயிற்று.

ஒருநாள் புலிப்பாணியை அழைத்த போகர், புலிப்பாணி! நான் சீனதேசம் செல்கிறேன். இனி இங்கு எப்போது வருவேன் எனத்தெரியாது. நீயே இந்த முருகன் சிலைக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என சொன்னார்.
17.குதம்பை சித்தர்

அம்மா! உடலைக் கட்டுப்படுத்தி வைக்க வெண்காயம் (பால் காயம்) இருக்கிறது. மிளகு இருக்கிறது, சுக்கு இருக்கிறது. இவற்றைக் கலந்து மருந்தாக்கி உட்கொண்டால், ஒரு பெண்ணின் காயம் (உடல்) நமக்கு எதற்கு தேவைப்படப் போகிறது? பெண் இன்பத்தால் சித்திக்காத மன இன்பம் இந்த மருந்தால் சித்திக்காதோ, என்று கேட்டார் குதம்பைச் சித்தர். குதம்பை என்றால் என்ன? காதிலே அணியும் ஒரு வகை தொங்கட்டான் போன்ற அணிகலன். இவர் தஞ்சாவூர் பக்கம் பிறந்திருக்க வேண்டும். பிறந்த ஊர் சரியாகத் தெரியவில்லை. ஆனால், இவர் யாதவர் வகுப்பைச் சேர்ந்தவர் என்றும்,  பசுக்களை மேய்க்கும் தொழில் செய்து வந்த தம்பதியருக்கு பிறந்தவர் என்பதும் சில நூல்கள் மூலம் தெரிய வருகிறது. இவரது அன்னைக்கு தன் குழந்தை மீது மிகுந்த பாசம். ஆண்குழந்தையாக இருந்தாலும், பெண் குழந்தை போல் அதிக அழகு. அந்த அழகை மிகைப்படுத்த குழந்தையின் காதிலே ஒரு தொங்கட்டான் அணிவித்தாள் அந்த புண்ணியவதி. அது ஆடும் அழகைப் பார்த்து குழந்தையிடம் மனதைப் பறி கொடுப்பாள். அந்த அணிகலனின் பெயரால் குதம்பை என்றே மகனை அழைக்க ஆரம்பித்து விட்டாள். அவரது பெயரே அவருக்கு நிலைத்து விட்டது. கணநேரம் கூட குழந்தையைப் பிரியமாட்டாள். அப்படி ஒரு பேரன்பு! மகனுக்கு 16 வயதானது. அதுவரை அம்மா பிள்ளையாகத்தான் இருந்தார் குதம்பையார். ஒருநாள், ஒரு சித்தரை அவர் சந்தித்தார். குழந்தாய் குதம்பை! நீ சாதிக்கப் பிறந்தவன். உனக்கு உன் தாய் திருமணம் முடிக்க இருக்கிறாள். ஆனால், அது நடக்காது. காரணம், நீ கடந்த பிறவியில் ஒரு காட்டில் இறை தரிசனம் வேண்டி தவமிருந்து வந்தாய். ஆனால், இறைவனைக் காணமுடியாத படி விதி தடுத்து விட்டது. உன் ஆயுளுக்கு குறிக்கப்பட்ட நேரத்தில், நீ எந்த காட்டில் தங்கியிருந்தாயோ, அங்கே ஒருநாள் பெரும் புயலடித்தது. ஒரு மரத்தின் அடியில் தவநிலையில் இருந்தபடியே நீ உயிர் விட்டாய். விட்ட தவத்தை தொடரவே, நீ பிறந்திருக்கிறாய். தவம் என்றால் என்ன தெரியுமா? என்றவர், தவத்தின் மேன்மை, யோக சாதனைகள் பற்றி குதம்பையாருக்கு எடுத்துச் சொன்னார்.

குதம்பையார் மிகுந்த பணிவுடன் அவற்றையெல்லாம் கேட்டு, தன்னை ஆசிர்வதித்து, இப்பிறவியிலும் தவம் தொடர ஆசி வேண்டினார். அந்த சித்தர் அவருக்கு ஆசியளித்து மறைந்தார். அவரையே தன் குருவாக ஏற்ற குதம்பையார், அவர் சென்ற திசையை நோக்கி வணங்கி விட்டு தாயாரிடம் சென்றார். அம்மா அவருக்கு பல இடங்களில் பெண் பார்த்து வைத்திருந்தார். மகனே! அவள் அழகில் ரம்பை, இவள் ஊர்வசி, இவள் அடக்கத்தில் அருந்ததி...இப்படி பல புராணப் பாத்திரங்களை தன் வருங்கால மருமகள்களுக்கு உதாரணமாக காட்டினார். அப்போது தான் இந்தக் கதையின் துவக்கத்தில் வந்த வரிகளை அம்மாவிடம் சொன்னார் குதம்பையார். அம்மாவுக்கு அதிர்ச்சி. என்னடா! சித்தன் போல் பேசுகிறாயே! இல்லறமே துறவறத்தை விட மேலானது. உன்னைப் பெற்றதால் நான் மகிழ்ந்தேன். நீ பெறும் குழந்தைகளாலும் நான் மகிழ வேண்டும். ஒரு தாயின் நியாயமான ஆசை இது. அதை நிறைவேற்றி வை, அம்மாவின் கண்ணீர் குதம்பையாரை வருந்தச் செய்யவில்லை. அவரது எண்ணமெல்லாம், முந்தைய பிறவியின் தொடர்ச்சியாக தவம் செய்வதிலேயே இருந்தது. அன்றிரவு அம்மாவும், அப்பாவும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர். குதம்பையார் கதவைத் திறந்து வெளியே வந்தார். சந்திர ஒளியில் மிக வேகமாக நடந்தார். மனதின் வேகத்தை விட அதிக வேகம் அது! அந்த வேகத்துடன் சென்றவர் காட்டில் போய் தான் நின்றார். பூர்வஜென்மத்தில் அவர் மீது சாய்ந்த மரம் இருந்த பகுதி அது. ஆனால், குதம்பையாருக்கு அது தெரியவில்லை. அங்கு நின்ற அத்தி மரத்தில் ஒரு பெரிய பொந்து இருந்தது. அதற்குள் குதம்பையார் அமர்ந்தார். ஒருவேளை, தாய் தந்தை காட்டுக் குள் தேடி வந்து நம் தவத்தைக் கலைத்து அழைத்துச் சென்று விட்டால் என்னாவது என்ற முன்னெச்சரிக்கையால் இப்படி செய்தார். தவம்... தவம்... தவம்... எத்தனையோ ஆண்டுகள் உணவில்லை, கண்கள் மூடவில்லை. இறைவனின் சிந்தனையுடன் இருந்தார். இறைவா! உன்னை நேரில் கண்டாக வேண்டும், என்னைக் காண வா! அல்லது உன் இருப்பிடத்திற்கு கூட்டிச்செல். ஏ பரந்தாமா! எங்கிருக்கிறாய்! கோபாலா வா வா வா, இது மட்டுமே மனக்கூட்டுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது. அப்போது பரந்தாமன் உருவமற்ற நிலையில் அசரீரியாக ஒலித்தான்.

குதம்பை! நீ இப்போது வைகுண்டம் வர வேண்டாம். உன்னால் இந்த உலகத்துக்கு இன்னும் நன்மைகள் நடக்க வேண்டியிருக்கிறது. நீ இப்போது இருப்பது விந்திய மலைப்பகுதியில்.
கங்கா ஸ்நானம் செய்ய ஒரு வருஷம்!

காஞ்சிப்பெரியவர் 1932ல் ராமேஸ்வரம் வந்தார்.கடலில் ஸ்நானம் செய்த அவர் சிறிதளவு மணலைச் சேகரித்துக் கொண்டார்.அதை அலகாபாத்திலுள்ள பிரயாகை திரிவேணி சங்கமத்தில் சேர்ப்பிக்க வேண்டும் என்பது அவரது எண்ணம்.அது மட்டுமல்ல!தீபாவளி கொண்டாடப்படும் அக்டோபர் மாதத்தில் காசிக்கு சென்று கங்கா ஸ்நானம் செய்யவும் அவர் முடிவெடுத்திருந்தார்.இதற்காக, அவர் வாகனங்கள் எதுவும் ஏற்பாடு செய்யவில்லை.நடந்தே செல்ல திட்டமிட்டார்.அப்போது பெரியவருக்கு வயது 39 தான்.இந்த திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு,தென்காசியைச் சேர்ந்த அனந்த கிருஷ்ண சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது.அவர் முன்னதாகவே காசிக்கு நடந்தே புறப்பட்டார்.எந்தெந்த ஊர்களில் பெரியவர் தங்கிச் செல்ல வேண்டும் என்பதை செல்லும் வழியில் குறித்துக் கொண்டார்.அவ்வாறு அவர் நடந்து செல்ல ஆறு மாதங்கள் பிடித்தன.அவர் திரும்பி வந்து பயணத்திட்டத்தை பெரியவரிடம் அளித்தார்.பெரியவரும் சிஷ்யர்களும் 1933 செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் தஞ்சாவூரிலிருந்து பயணத்தைத் துவக்கினர்.செல்லும் வழியில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் பெரியவர் தங்கினார்.அங்கெல்லாம் ஏராளமான பக்தர்கள் வந்து ஆசி பெற்றனர்.அனந்தசர்மா வேகமாகச் சென்று திரும்பியதால் ஆறுமாதங்கள் தான் பிடித்தன.ஆனால்,மகாபெரியவர் பல ஊர்களில் தங்கியதால்,பிரயாகையை அடைய 1934 ஜூலை 23ம் தேதி ஆகி விட்டது.அங்கு தான் கொண்டு சென்ற ராமேஸ்வரம் மணலை, திரிவேணி சங்கமத்தில் சேர்ப்பித்தார்.அங்கேயே செப்டம்பர் மாதம் வரை தங்கி விட்டார்.செப்டம்பர் இறுதியில் காசி கிளம்பினார்.அவரிடம் பக்தர்கள்,இப்போதே நீங்கள் வெகு தூரம் நடந்து வந்து விட்டீர்கள். இனியும் நடக்க வேண்டாம்.சாலை வசதி நன்றாக இருக்கிறது. வாகனத்தில் வாருங்கள்,என கோரிக்கை வைத்தனர்.மகாபெரியவர் அதை ஏற்கவில்லை.தொடர்ந்து நடந்தே காசியாத்திரையைத் தொடர்ந்தார்.பிரயாகையில் இருந்த பக்தர்கள் பலரும் அவருடன் சென்றனர்.அக்டோபர் 3ம் தேதி காசி எல்லையை அடைந்த சுவாமிகளை காசி மகாராஜா உள்ளிட்டோர் பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர்.வரவேற்பு விழாவில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.அக்டோபர் 7ல் மகாபெரியவர் கங்கையிலுள்ள மணிகர்ணிகை உள்ளிட்ட தீர்த்தக்கட்டங்களில் தீர்த்தமாடினார்.பண்டித மதன்மோகன் மாளவியாவின் அழைப்பை ஏற்று காசி இந்து சர்வகலாசாலையில் (பல்கலைக்கழகம்) உரையாற்றினார்.ஒவ்வொரு இந்துவும் வாழ்வில் ஒரு முறையேனும் காசி யாத்திரை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.நாமும் மகாபெரியவர் ஆசியுடன் அடுத்த தீபாவளிக்குள் ஒருமுறை காசி யாத்திரை சென்று திரும்புவோம்.