திங்கள், 8 ஜூலை, 2019

குருடர்களுக்கு கண்ணாடி எவ்வளவு பயனுள்ளதோ அவ்வளவு பயனுள்ளதே முட்டாள்களுக்கு புத்தகங்கள்

கல்வியே சிறந்த நண்பன். கல்விமான்களுக்கு செல்லுமிடமெல்லாம் சிறப்பு. கல்வி அழகையும், இளமையையும் விஞ்சி விடும்.

பிறர் செய்யும் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள், ஏனெனில் நீங்களாகவே பட்டு உணர்ந்து பாடம் கற்கவேண்டுமெனில் இந்த ஆயுள் போதாது.

ஒருவர் மிகவும் நேர்மையாக இருக்கக்கூடாது. நேர் நிமிர்ந்த மரமே முதலில் வெட்டிச் சாய்க்கப்படுகிறது. நேர்மையான மனிதனே அதிக சோதனைகளை எதிர்கொள்கிறான்.

பாம்புகள் கூட விஷமில்லாமல் இருக்கலாம், ஆனால் விஷம் இருப்பதாக பாசாங்கு செய்வது அவசியம்.

ஒவ்வொரு நட்புறவிலும் கொஞ்சம் சுயநலம் உள்ளது. சுயநலமற்ற நட்புறவு இல்லவேயில்லை. இதுதான் கசப்பான உண்மை!

எந்த ஒரு வேலையைத் தொடங்குவதாக இருந்தாலும் முதலில் உங்களிடம் நீங்களே 3 கேள்விகளை கேட்கவேண்டும்: நான் ஏன் இதனைச் செய்யவேண்டும், முடிவுகள் என்னவாகவிருக்கும், நான் இதில் வெற்றி பெறுவேனா? இந்தக்கேள்விகளை ஆழமாகச் சிந்திக்கும்போதுதான் திருப்திகரமான விடைகள் கிடைக்கும். முயற்சி செய்யுங்களேன்.

பயம் உங்களை நெருங்கும்போது அதனை தாக்கி அழியுங்கள்!

உலகின் ஆகப்பெரிய சக்தி இளமையும் பெண்ணின் அழகும்தான்!

ஒரு வேலையத் துவங்கிவிட்டீர்களென்றால் அதன் விளைவுகள் பற்றி அச்சப்படக்கூடாது. கைவிடாதீர்கள்! நேர்மையாக பணியாற்றுபவர்கள் மகிழ்ச்சியானவர்கள்.

மலரின் மணம் காற்றின் திசைவழி மட்டுமே செல்லும், ஒரு நல்ல மனிதனின் நற்தன்மை அனைத்து திசைகளுக்கும் செல்லும்.

விக்கிரகங்களில் கடவுள் இல்லை. உங்கள் உணர்வுகளே உங்கள் கடவுள். ஆன்மாவே கோயில்.

மனிதன் செயலினால் உயர்ந்தவனே தவிர பிறப்பினால் அல்ல.

உங்களை விட தகுதியில் உயர்ந்தவர்களிடமோ, தாழ்ந்தவர்களிடமோ நட்பு பாராட்டாதீர்கள், இந்த நட்பினால் மகிழ்ச்சி ஏற்படாது.

முதல் 5 ஆண்டுகளுக்கு உங்கள் குழந்தைகளை அன்புடன் நடத்துங்கள். அதன் பிறகு கண்டியுங்கள், 16 வயது ஆகிவிட்டதா நண்பராக நடத்துங்கள், வளர்ந்த உங்களுடைய குழந்தைகளே உங்கள் சிறந்த நண்பர்கள்.
தென்னாங்கூர் பாண்டுரங்கன் ஆலயம்
இறைவனை வழிபடுவது என்பதே ஆனந்தம் அதிலும் இசையோடு இறைவனை வழிபடமுடியும் என்றால் பக்தர்களின் சந்தோஷத்திற்கு அளவேது. அப்படிப்பட்ட அற்புத ஆலயம் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசிக்கு அருகில் உள்ள தென்னாங்கூரில் உள்ளது. இயற்கை எழில் நிறைந்துள்ள இந்த கிராமத்திற்கு அழகு சேர்ப்பதே இந்த ஆலயம் தான் என்றால் அது மிகையாகாது.

பாண்டுரங்கனை தரிசிக்க வருபவர்கள் இந்த கிராமத்திற்குள் நுழைந்ததும் தங்களை மறக்கச் செய்கின்ற வகையில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. திசைமாறி கிழக்கு இந்திய பகுதிக்குள் நுழைந்து விட்டோமோ என்கிற பிரமிப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் பூரி ஜகன்னாதா ஆலயத்தின் வடிவமைப்பில் தென்னாங்கூர் பாண்டுரங்கன் ஆலயம் அமைந்திருப்பது தான்.

மேலும் இந்த ஆலயம், கோவில்களுக்கு என உள்ள ஆகமவிதிப்படி தியான மண்டபம், மகாமண்டபம், அர்த்தமண்டபம், ராஜகோபுரம் என அடுத்தடுத்த நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. காண்போரை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ராஜகோபுரத்தின் உயரம் 120 அடி ஆகும். அதற்கு மேல் தங்கக் கலசம் நிர்மாணிக்கப்படுகிறது.

இந்த அழகிய கோபுரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள கருவரையில் பிரம்மாண்டமாக காட்சி தரும் வகையில் பாண்டுரங்கனும், ருக்மனியும் (இந்த ஆலயத்தில் ருக்மணி என்பதற்கு பதிலாக ருக்மாயி என்று அழைக்கப்படுகிறது) அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

கலைநயமிக்க வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள கருவரையில் பாண்டுரங்கனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு, அவர்கள் கொடுக்கும் காணிக்கையான தேங்காய், பழம்ஆகியவற்றை பெற்றுக் கொண்டவுடன் திரைச்சீலை விலக்கப்படும். அப்போது கருவரையில் இருக்கும் பாண்டுரங்கனையும் ருக்மணியையும் காணும் பக்தர்கள் உள்ளத்தில், வைகுந்தத்தில் இறைவனை காண்பது போன்ற பிரமிப்பை எற்படுத்துகின்றது.

ஒவ்வொரு நாளும் பாண்டுரங்கனுக்கு ஒவ்வொரு வகையான அலங்காரம் செய்யப்படுகிறது. இதில் குறிப்பாக பக்தர்களை கவருவது, வியாழக்கிழமை நடக்கும் நிஜபாத தரிசனம், வெள்ளிக்கிழமை நடக்கும் வெள்ளிகலச சேவை அலங்காரம், சனிக்கிழமை நடக்கும் திருப்பதி வெங்கடேசபெருமாள் அலங்காரம். ஞாயிற்றுக்கிழமை நடக்கும் ராஜஸ்தான் தலைப்பாகையுடன்அலங்கரிக்கப்படும் ராஜகோபாலன் அலங்காரம் ஆகியனவாகும்.
பசுவந்தனை சங்கு ஸ்வாமிகள் (பகுதி-2)

விடிந்தது தங்களுடைய வயலுக்கு நீர் பாய்ச்சப்பட்டிருக்கும் என்ற எண்ணத்துடன் வயலுக்கு வந்த அண்ணன் பக்கத்து வயலில் நீர் பாய்ந்து இருந்ததைக் கண்டு அர்ச்சியுற்றார். ஸ்வாமிகள் மீது ஆத்திரம் கொண்டார். ஏண்டா நம் வயலில் தண்ணீர் இறைக்கச் சொன்னால் அடுத்தவன் வயலுக்கு வேலை செய்திருக்கிறாயே. நம் வயலில் பொட்டுத் தண்ணீரைக் காணோம். உனக்கு மூளை பிசகி விட்டதா? என்று கத்தினார். ஸ்வாமிகள் தண்ணீர் இறைப்பதை நிறுத்தாமல் அண்ணா எங்கே பாய்ந்தால் என்ன. அதுவும் நம் வயல் தானே. அந்த வயலிலும் தண்ணீர் இல்லையே என்றார். ஆத்திரமுற்ற அண்ணன் வரப்பில் கிடந்த கழியை எடுத்து ஸ்வாமிகளின் மேல் மாறி மாறி அடித்தார். அப்படியே களைப்புற்றார். சங்கு ஸ்வாமிகள் தன் மேல் விழுந்த அடிகளைப் பொருட்படுத்தாமல் புன்னகைத்தார். அண்ணா இப்படி ஓங்கி ஓங்கி அடித்தாயே உன் கைகள் என்னமாய் வலிக்கும்? நான் கொஞ்சம் தடவி விடவா? என்று பரிவுடன் கேட்டார். அவ்வளவு தான் அடுத்த வினாடி. அனல் மேல் பட்ட புழுபோல் அண்ணன் விழுந்து துடித்தார். இதைக் கண்டு சகிக்க முடியாத ஸ்வாமிகள். கவலை வேண்டாம் அண்ணா உமது வலி இந்தக் கணமே நீங்கும் என்று சொல்ல. அதுவரை சகோதரனை துவள வைத்த வலி சட்டென்று அகன்றது. அதிர்ந்து போனார் அண்ணன்.

முன்பு ஸ்வாமிகளின் தந்தை இப்போது அண்ணன். அடிப்பட்டவருக்கு வலிக்கும் என்பது சரி. அடித்தவருக்கும் வலிக்குமா என்று யோசித்த சகோதரர் ஏதோ ஒரு சக்தி ஸ்வாமிகளிடம் இருப்பதை உணர்ந்தார். இந்தச் சேதி மெள்ள மெள்ள அக்கம் பக்கத்துக்கு ஊர்களுக்குப் பரவியது. பிறகு உள்ளூர்க்காரர்கள் எவரும் ஸ்வாமிகளிடம் எந்த வேலையையும் தருவதில்லை. வேலைக்காரனைப் போல் ஸ்வாமிகளைப் பயன்படுத்தி வந்தவர்கள். அவரைப் பார்த்ததும் மரியாதையுடன் கையெடுத்துக் கும்பிட்டனர். ஸ்வாமிகள் வழக்கம் போல் இஷ்டப்படித் திரிந்தார். கிடைத்ததை உண்டார். அந்க ஊரில் உள்ள பாழடைந்த மண்டபம் ஒன்றில் படுத்து உறங்கினார். பல முறை நிஷ்டையில் ஆழ்ந்து விடும் ஸ்வாமிகள் சமாதி நிலைக்குச் சென்று விடுவார். இந்த நிலையில் அவரைப் பார்ப்பவர்கள் ரொம்ப களைப்புல தூங்கிறார் போல என்றே கருதுவர். ஒரு நாள் தந்தை மற்றும் சகோதரருடன் தரையில் உட்கார்ந்து சாப்பிட்டார் ஸ்வாமிகள். மூவருக்கும் உணவு பரிமாறிக் கொண்டிருந்தார் ஸ்வாமிகளின் தாயார். இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க ஸ்வாமிகள் மட்டும் கண் மூடித் தவத்தில் மூழ்கிக் கிடந்தார். இந்தத் தருணத்தைப் பயன் படுத்தி அவருடைய அண்ணன் நைஸாக ஸ்வாமிகளின் தட்டில் இருந்த உணவை எடுத்துச் சாப்பிட்டார். சிறிது நேரத்தில் கண் விழித்த ஸ்வாமிகள் தட்டைப் பார்ததார். அண்ணனோ ஸ்வாமிகளை ஏளனத்துடன் பார்த்தார்.

அவ்வளவு தான் சட்டென்று ஸ்வாமிகள் தட்டு முழுவதும் உணவுப் பதார்த்தங்கள் நிரம்பி வழிந்தன. அதிர்ந்து போன அண்ணன் குழப்பத்துடன் ஸ்வாமிகளை ஏறிட்டார். அண்ணா வேண்டுமானால் இந்த உணவையும் எடுத்துக் கொள்ளுங்கள். இறை சிந்னையில் இருக்கும் என்னை பசி ஒன்றும் செய்யாது என்றார். ஒரு முறை சிங்கம்பட்டி ஜமீன்தாரான நல்லக்குத்தி பெரியசாமித் தேவர் ராஜா பூர்வ ஜன்ம வினைப்பயனால் மகோதரம் என்னும் கல்லீரல் சம்பந்தப்பட்ட நோயால் பெரிதும் அவதிப்பட்டார். (சங்கு ஸ்வாமிகள் காலத்தில் ஜமீனை ஆண்டு வந்தவர் இவர்) பசுவந்தனையில் இருந்து சுமார் 70 கி.மீ தொலைவில் இருக்கிறது சிங்கம்பட்டி. பசி எடுக்கும் சாப்பிட முடியாது. இரவில் நிம்மதியாகத் தூங்க முடியாது. வாந்தி குமட்டல் என்று நரக வேதனையை அனுபவித்து வந்தார் ஜமீன்தார். இதைக் கண்ட அவருடைய குடும்பமே சோகத்தில் தவித்தது. அரண்மனை வைத்தியர்கள் வெளியூர் வைத்தியர்கள் என்று பலர் முயன்றும் ஜாமீன்தாரின் நோயை குணப்படுத்தவே முடியவில்லை. தெய்வ பக்தியில் சிறந்தவரான ஜமீன்தார். குடும்பத்தினரது வேண்டுகோளின் படி சிதம்பரம் சென்று நடராஜ பெருமானை தரிசித்து முறையிடுவது என முடிவு செய்தார். அதன் படி அமைச்சர் மற்றும் வீரர்கள் சூழ பல்லக்கில் பயணித்தார். நெடு நாள் பயணத்துக்குப் பின் சிதம்பரத்தை அடைந்து நடராஜப் பெருமானின் ஆலயத்தினுள் நுழைந்தனர்.

புனித தீர்த்தமான சிவகங்கை திருக்குளத்தில் நீராடிவிட்டு கனக சபையைக் கண்ணராக் கண்டார்.  மலர்களால் சிவானரைத் தொழுதார். அவரது கண்களில் இருந்து நீர் பெருகியது. பிறவி நோய் தீர்க்கும் பெருந்தகையே அடியவர்களது இன்னல்களைக்களையும் அம்பலவாணா அடியேனைப் படுத்தும் மகோதரத்தை நீக்கி அருள் மாட்டாயா?என்று வேண்டினார். ஆட்சியை மறந்தார் ஆயிரங்கால் மண்டபத்திலேயே தங்கினார். ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்தபடி ஆறு கால பூஜையை  அனுதினமும் தரிசித்தார். பாலும் பழமும் உண்டு விரதம் அனுஷ்டித்தார். ஆலயத்துக்கு வந்த பக்தர்களும் ஜமீன்தார் குணமாக வேண்டி இறைவனிடம் பிரார்த்தித்தனர். இப்படியாக ஒரு மண்டல காலம் அங்கு தங்கி இருந்தார் ஜமீன்தார். 48ம் நாள் விரதம் பூர்த்தியானது. ஆனால் மகோதர நோய் மறையவில்லை. மனம் கலங்கினார் ஜமீன்தார். அன்றிரவு ஆலயக்கதவு மூடப்பட்டது. உடன் வந்தோர் அனைவரும் உறக்கத்தில் ஆழ்ந்தனர். ஆறாத துயரத்தில் தவித்த ஜமீன்தார் நடராஜ பெருமானுக்கு அருகே சென்றார்.

தில்லையம்பலவாசா உன்னையே நம்பி வந்தேனே. உன்னை மட்டுமே நம்பி இருந்தேனே. என்னைக் கைவிடாலமா?ஒரு மண்டல காலம் உன் சந்நிதியில் தவமாகத் தவம் இருந்து உடல் நலம் குணமாகாமல் நான் ஊர் திரும்பினால் ஊரே என்னை மட்டுமின்றி உன்னையும் பழிக்காதா? எனவே விடிவதற்குள் என் நோய் தீர வழி பிறக்க வேண்டும். இல்லையெனில் சிவகங்கை குளத்தில் வீழ்ந்து என்னை நானே மாய்த்து கொள்வேன். இது சத்தியம் என்றார் ஜமீன்தார். பிறகு அயர்ச்சியில் சந்நிதியிலேயே தூங்கிப் போனார். அவர் கனவில் தோன்றிய நடராஜ பெருமான். அன்பனே வருந்தாதே உனக்கு ஏற்பட்ட நோயைத் திர்க்கவல்ல சங்கு ஸ்வாமிகள் பாண்டிய தேசத்திலே பசுவந்தனை எனும் தலத்தில் உள்ளான். எனக்கு மிகவும் வேண்டிய அடியவன். பரமஞானி விடிந்ததும் அவனைத் தேடிப் புறப்படு. நலம் பெறுவாய் என்று அருளினார். இறைவன் அருளியதில் குளிர்ந்து போன ஜமீன்தார். விடிந்ததும் சிவகங்கை தீர்த்தத்தில் நீராடிப் சிவனாரை வணங்கி விட்டு பசுவந்தனை நோக்கிப் புறப்பட்டார். பல நாட்கள் பயணித்து பசுவந்தனை திருத்தலத்தை அடைந்தார்.

பல்லக்கில் ஜமீன்தார் வருவதைக் கண்டு ஆச்சரியத்துடன் பார்த்த ஊர்மக்கள் பல்லக்கைத் தொடர்ந்தனர். அவர்களிடம் இந்த ஊரில் சங்கு ஸ்வாமிகள் என்பவர் எங்கே வசித்து வருகிறார்? என்று பவ்யமாகக் கேட்டார். சங்கு ஸ்வாமிகளா?அப்படி ஒரு ஆசாமி இந்த ஊரிலேயே இல்லை என்றனர் மக்கள். இந்த ஊரில் தான் இருக்கிறார். ஒரு வேளை அந்தத் தவசீலரைப் நீங்கள் தரிசித்தது இல்லையோ? அப்போது கும்பலில் இருந்த ஒருவன். மகாராஜா இந்த ஊரில் சங்கு ஸ்வாமிகள் என்று எவரும் இல்லை. ஆனால் சங்கு என்று ஒரு சோம்பேறி இருக்கிறான். ஊருக்கு ஒதுக்கு புறமா இருக்கிற பாழடைந்த மண்டபத்தில் அந்தச் சோம்பேறி படுத்து கிடைப்பான் என்றான். ஜமீன்தாரின் முகம் பிரகாசம் ஆனது. ஆமாம் அவர் தான் நான் அவரைத்தான் தரிசிக்க வேண்டும். எனக்கு வழி காட்டுங்களேன் என்றார் கெஞ்சலாக ஊர்ஜனங்கள் முன்னே நடக்க பாழடைந்த மண்டபம் நோக்கிப் பல்லக்கு புறப்பட்டது. அங்கே மண்டபத்தின் சிதிலமடைந்த திண்ணையில் கால் மேல் கால் போட்டு ஏதோ சிந்தித்த பாவனையில் இருந்தார் சங்கு ஸ்வாமிகள்.

பல்லக்கில் இருந்து இறங்கிய ஜமீன்தார் ஸ்வாமிகளை நோக்கி மெள்ள நடந்தார். கண்ணில் நீர் மல்க அவரை வணங்கினார். தட்டுகளில் பழங்களும் பலகாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டன. ஜமீன் தாரை ஏறெடுத்துப் பார்த்த சங்கு ஸ்வாமிகள் என்ன அப்பனே அந்த நடராஜ் பெருமான் உன் நோயைத் தீர்க்க முடியவில்லை என்று என்னிடம் அனுப்பி இருக்கிறாரோ? எல்லாமே ஒரு நாடகம் தான். இந்தா இந்தப் பழத்தைச் சாப்பிடு என்று தட்டில் இருந்த பழம் ஒன்றை எடுத்து அவருக்குக் கொடுத்தார். இறை அருளால் கிடைத்த தெய்வப் பிரசாதம் எனக்கருதி அதை உண்டார் ஜமீன்தார். என்னே ஆச்சிரியம். அந்தப் பழத்துண்டுகள் வயிற்றுக்குள் சென்றதும் ஒரவித புத்துணர்வு ஜமீன்தாரை ஆட் கொண்டது. அமிர்தத்தை உண்டவர் போல் மகிழ்ந்தார். ஆடினார் பாடினார் சங்கு ஸ்வாமிகளுக்கு நன்றி தெரிவித்து விழுந்து வணங்கினார். அவரது மகிமையை ஊர் மக்களுக்கும் புரிய வைத்தார். சங்கு ஸ்வாமிகள் சம்பந்தப்பட்ட எந்த ஒரு வைபவத்துக்கும் சிங்கம்பட்டி ஜமீனில் இருந்து உரிய மரியாதை இப்போதும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. பசுவந்தனை மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் பாசனம் மற்றும் குடி நீருக்கு எப்போதுமே தட்டுப்பாடு உண்டு. காரணம் இங்கு ஆறு குளங்கள் எதுவும் கிடையாது. எனவே மழை நீரை சேகரித்து வைத்து அதைத் தட்டுப்பாடான காலங்களில் பயன் படுத்துவது வழக்கம். ஒரு வருடம் மழை பொய்த்துப் போனாலும் அதோகதிதான்.

இது போன்ற தருணத்தில் சங்கு ஸ்வாமிகளே பல ஊருணிகளை (குளம்) ஏற்படுத்தி இருக்கிறார். அதாவது அவர் எங்காவது பயணிக்கும் போது எதிர்ப்படும் எவராவது சாமி ரொம்ப தாகமாக இருக்கு. தண்ணி வேணும் என்று கேட்டு விட்டால் போதும். ஓரிடத்தில் உட்கார்ந்து கைகளால் மணலைத் தோண்டுவார். உடனே அவர்களும் சேர்ந்து தோண்டுவார்கள். சிறிது ஆழ்த்திலேயே தண்ணீர் ஊற்று போல பிய்ச்சிக்கொண்டு வரும். ஸ்வாமிகளின் அருள் திறத்தால் உண்டான பல ஊருணிகள் இன்றும் பசுவந்தனை மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களில் உள்ளன. இவை சங்கு ஸ்வாமிகள் ஊருணி என்றே அழைக்கப்படுகின்றன. எல்லா மஹான்களையும் போலவே தான் சமாதி ஆகப்போகும் காலம் இது தான் என்று துல்லியமாகத் தன் சீடர்களிடம் சொல்லி அதற்கான ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னார் சங்கு ஸ்வாமிகள். அந்த நாளும் வந்தது. அன்று பசுவந்தனை கயிலாயநாதர் ஆலயம் சென்று இறைவனைத் தொழுதார். பிறகு அவர் சொன்ன அதே நேரத்தில் ஜப மாலையுடனும் சின் முத்திரையுடனும் சமாதி ஆனார். ஸ்வாமிகள் அவர் கூறியிருந்தபடி சமாதி அமைத்து. அவரது பூத உடலை நல்லடக்கம் செய்தனர் சீடர்கள். இன்றும் தன் சமாதி கோயிலை நாடி வரும் பக்தர்களது பிரார்த்தனைகளை நிறைவேற்றி நல்லருள் புரிந்து வருகிறார் சங்கு ஸ்வாமிகள். நாமும் அவரின் திருவடி பணிவோம். திருவருள் பெறுவோம்.

தலம்: பசுவந்தனை சிறப்பு: சங்கு ஸ்வாமிகள் சமாதி கோயில்

இருப்பிடம்: கோவில்பட்டியில் இருந்து தெற்கே சுமார் 24 கி.மீ தொலைவில்  இருக்கிறது. பசுவந்தனை மதுரை நெல்லை ரயில் மார்க்கத்தில் கடம்பூர் ரயில் நிலையத்தில் இருந்து கிழக்கே சுமார் 20 கி.மீ தொலைவு. மதுரை நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் கயத்தாறில் இருந்து கிழக்கே சுமார் 21 கி.மீ தொலைவு. தூத்துக்குடி மதுரை நெடுஞ்சாலையில் எப்போதும் வென்றானில் இருந்து மேற்கே சுமார் 11 கி.மீ தொலைவு.

செல்லும் வழி: பகவந்தனைக்கு அருகில் உள்ள நகரம் கோவில்பட்டி தமிழகத்தின் அனைத்து பகுதியில் இருந்தும் கோவில்பட்டியை அடைவது எளிது. கோவில்பட்டி நெல்லை தூத்துக்குடி முதலான ஊர்களில் இருந்து பகவந்தனைக்குப் பேருந்து வசதி உண்டு. என்றாலும் பேருந்து சர்வீஸ் குறைவாகவே உள்ளது.

தொடர்புக்கு: அருள்மிகு கயிலாதநாத ஸ்வாமி திருக்கோயில்.
பகவந்தனை : 625 718, ஒட்டப்பிடாரம் வட்டம். தூத்துக்குடி மாவட்டம். போன்:0461-2282308.


ஞாயிறு, 7 ஜூலை, 2019

பசுவந்தனை சங்கு ஸ்வாமிகள் (பகுதி-1)

மஹான்களது அவதார காலங்கள் மாறுபட்டிருந்தாலும் அவர்களது நோக்கம் ஒன்று தான். அதாவது பக்தியை இயன்று வரை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வது. வறுமை நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் அப்பாவி மக்களுக்கு உதவுவது. இவையே அவர்களின் நோக்கங்கள். பக்தர்களது எளிய வாழ்வுக்கு என்னென்ன தேவையோ அவற்றை என்றென்றும் கிடைக்கும்படி அருள்புரிந்தனர். வைத்தியர்களால் கூடத் தீர்க்க முடியாத விதிப் பயனால் விளைந்த நோய்களை தங்களது அருளாசியினால் பறந்தோட வைத்தார்கள்.

தென் தமிழகத்தில் கோவில் பட்டியில் இருந்து சுமார் 24 கி.மீ.தொலைவில் பசுவந்தனை எனும் கிராமம் உண்டு. இங்கே விவசாயக் குடும்பத்தில் அவதரித்த சங்கு ஸ்வாமிகள் என்பவர் மிகச்சிறந்த சித்த புருஷர். இவர் பிறந்தது. சமாதி ஆனது முதலான விவரங்கள் பல காலமாக அறியப்படாமலே இருந்தது என்றாலும் ஸ்வாமிகளுடன் இருந்து சீடர்களது காலத்தைக் கொண்டு ஓரளவு ஊகித்து அறிந்துள்ளனர். அதாவது சங்கு ஸ்வாமிகள் பிறந்தது 1785 என்றும் ஜீவசமாதியானது 1870 என்றும் அனுமானிக்கப்படுகிறது. சங்கு ஸ்வாமிகளின் தந்தையார் பெயர் சிவஞான தேசிகர். இவருக்கு  இரு மகன்கள். மூத்தவர் தங்கப்பிள்ளை. இளையவர் சங்கு ஸ்வாமிகள் (தங்கப் பிள்ளையின் வாரிசான ஏழாவது தலைமுறையினர் பசுவந்தனையில் இன்றும் உள்ளனர் இவர்களில் மூத்தவரான பிரம்மநாயகம் சங்கு ஸ்வாமிகளின் சமாதி வழிபாடுகளை கவனித்து வருகிறார். அடுத்தவரான ஐ.  மாடசாமி பிள்ளை பசுவந்தனை அருள் மிகு கயிலாயநாதர் ஆலயத்தில் கணக்கராகப் பணிபுரிகிறார்) சங்கு ஸ்வாமிகளுக்குத் திருமணம் ஆகவில்லை.

சங்கு ஸ்வாமிகள் எப்படி இருப்பார் என்பதற்கான தகுந்த புகைப்பட ஆதாரங்கள் இன்று வரை கிடைக்கவில்லை. எனினும் இளம் வயதில் ஸ்வாமிகள் இப்படி தான் இருந்திருப்பார் என்ற யூகத்தின் பேரில் அவருடைய அன்பர்கள் படம் ஒன்றை வரைந்து உருவாக்கியுள்ளனர். அதில் கட்டுமஸ்தான தேகம் சாந்தமும் தெய்வீகமும் தவழும் திருமுகம். கம்பீரமான மீசை. திருநீறும் ருத்திராட்சமும் துலங்கும் திருமேனி என அருள் ததும்பும் வடிவமாகத் திகழ்கிறார் ஸ்வாமிகள். சங்கு ஸ்வாமிகள் அவதரித்த பசுவந்தனையிலேயே இவரது ஜீவசமாதி இருக்கிறது. சமாதியின் மேல் லிங்கப் பிரதிஷ்டை முன்னே நந்திதேவர். தவிர இங்கு விநாயகரும் தரிசனம் தருகிறார். ஜீவசமாதி கதைச் சிற்பங்கள் நிறைந்த விமானத்துடன் திகழ்கிறது. பிராகாரத்தில் சங்கு ஸ்வாமிகளின் சிஷ்யரான நத்தக்காடு சங்கு ஸ்வாமிகள் சமாதி இருக்கிறது. மேலும் கோவிந்தபுரம் சங்கு ஸ்வாமிகள். சிங்கிலிப்பட்டி சங்கு ஸ்வாமிகள். மாவிலிப்பட்டி சங்கு ஸ்வாமிகள் முதலான சிஷ்யர்களும் சங்கு ஸ்வாமிகளுக்கு உண்டு. இவர்களது சமாதிகள் வெவ்வேறு இடங்களில் உள்ளன். தினமும் காலை ஒன்பது மணிக்கு சங்கு ஸ்வாமிகளின் ஜீவசமாதிக்கு வழிபாடு நடைபெறுகிறது. இங்கு வைக்கப்படும் பிரார்த்தனை குறைவின்றி நிறைவேறுவதாகச் சொல்கிறார். இங்கு பூஜைகள் செய்து வரும் பிரம்மநாயகம். ஆண்டுதோறும் ஆவணி மாதம் அசுவினி நட்சத்திர தினத்தன்று சங்கு ஸ்வாமிகளின் குருபூஜை சிறப்புற நடைபெறுகிறது.

சிறுவயதில் இருந்தே இறை சிந்தனை. உயிர்களிடத்தும் பயிர்களிடத்தும் மிகுந்த அன்பு என வாழ்ந்தவர் சங்கு ஸ்வாமிகள். தனக்குக் கெடுதல் செய்தவர்களிடமும் அன்பு பாராட்டியவர். பசுவந்தனை கயிலாயநாதர் ஆலயம் மற்றும் இதனருகே தான் உருவாக்கிய நந்தவனத்திலும் எப்போதும் இருந்து வந்த ஸ்வாமிகளை இவருடைய வீட்டார். மட்டுமின்றி ஊர்மக்களும் புரிந்து கொள்ளவே இல்லை. வீடு உதவாக்கரை என்றது. ஊரோ பித்தர் என்றது. தன்னிலை மறந்த நிலையில் பல மணி நேரம் ஆகாயத்தையே அண்ணாந்து பார்த்தப்படி இருப்பார் ஸ்வாமிகள். மேகக் கூட்டங்களின் முடிவில்லாத பயணத்தையே வெறித்து கவனிப்பார். அப்போது எவரேனும் வந்து ஏதேனும் கேட்டால் எளிதில் சுயநினைவுக்கு வரமாட்டார். சில நேரம் வாய் விட்டுச் சிரிப்பார். சில நேரம் கேவிக்கேவி அழுவார். இரவு வேளைகளில் வயல்காடுகளில் தனியே உலவிக் கொண்டிருப்பார். மழை வெயில் என்று எதைக் குறித்தும் அறியாமல் தன்னுள் ஆழ்ந்திருந்த அவரை எந்த இயற்கையும் பாதித்ததில்லை.

பள்ளிக்குச் சென்று பாடம் படித்தார?தெரியவில்லை. ஆனால் வாழ்வியல் பாடம் மொத்தத்தையும் அறிந்திருந்தார் ஸ்வாமிகள். பசி உணவு என்றெல்லாம் எண்ணியது கிடையாது. ஆனால் பிறது பசியைப் போக்கியுள்ளார். பிறரது சந்தோஷத்துக்காக தன்னை வருத்திக்கொண்டு உழைத்திருக்கிறார்.  சொந்தக்காரர்களது உத்தரவுக்கு இணங்கி இரவு பகல் பாராமல் வயலுக்கு நீர் பாய்ச்சி இருக்கிறார். அறுவடை செய்யப் பட்ட நெற்கதிர்களையும் வாழைக்குலைகளையும் கூலியாள் போல் தலையில் சுமந்தபடி சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்திருக்கிறார். ஆனால் இதற்காக ஊதியமே பெற்றுக்கொள்வில்லை ஸ்வாமிகள். எவர் எந்த வேலையைக் கொடுத்தாலும் புன்னகைத்தபடி அதைச் செய்து முடிப்பார். வீட்டு வேலைகள் எதுவும் செய்யாத சங்கு ஸ்வாமிகள் பிறர் தரும் வேலைகளைச் சிரமேற்கொண்டு செய்து முடிப்பதை அறிந்த அவருடைய தந்தையார் மனம் வெதும்பினார். வீட்டு வேலைகளைச் செய்வதற்கு அவர் தயாராகவே இருக்கிறார். நீங்கள்தான் கொடுப்பதே இல்லை. எவர் சொல்லியோ வேலை செய்பவர் நீங்கள் சொல்லியோ  செய்யாமல் இருப்பார்? என்று சொன்னர்கள் சிலர். அதன்படி ஒரு நாள் சங்கு ஸ்வாமிகளை அழைத்துக்கொண்டு வயலுக்குச் சென்ற அவருடைய தந்தையார் ஏர் பூட்டிக் கொடுத்தார். மதியத்துக்குள் இந்த வயல் முழுவதும் உழுது முடிக்க வேண்டும் கவனமாக வேலை செய் என்று சொல்லிச் சென்றார்.

ஸ்வாமிகள் வயலை உழ ஆரம்பித்தார். மதியம் நெருங்க நெருங்க சூரியனின் வெம்மை உழுது கொண்டிருந்த மாடுகளைச் சுட்டெரித்தது. வெயிலில் மாடுகள் மிகுந்த சிரமப்படுகின்றனவே என்று இரக்கப்பட்டு தான் உடுத்தி இருந்த வேட்டியை அவிழ்த்து. அதை நீரில் நனைத்து ஈரம்சொட்டச் சொட்ட மாடுகளின் மேல் போட்டார். மகனுக்கு இட்ட வேலையை எந்த அளவுக்கு முடித்துள்ளான் என்று அறிய அப்போது அங்கே வந்தார். அவருடைய தந்தை மாடுகளின் மீது மகன் ஈர வேட்டியை நனைத்து போட்டிருப்பதைக் கண்டு ஆத்திரமானார். அடேய் பைத்தியக்காரா மாடுகளின் மேல் ஈரத்துணியைப் போட்டு இப்படி வேலை செய்கிறாயே உடல் தகிக்கிறது. என்று அந்த மாடுகள் உன்னிடம் சொன்னதா? என்று சொல்லி விட்டு ஸ்வாமிகளை ஆவேசத்துடன் அடித்தார். தன்மேல் அடி விழுந்த போதும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் தந்தையே என்னை அடிக்காதீர்கள். உங்களுக்குத்தான் கைகள் வலிக்கும் என்றார் ஸ்வாமிகள். அவ்வளவு தான் அந்த நிமிடமே தன் உடலில் இனம் புரியாத வலி ஏற்படுவதை உணர்ந்தார் தந்தையார். மகனை எந்தக் கையால் அடித்தாரோ அந்தக் கையிலும் தோளிலும் கடும் வலி ஏற்பட்டது. ஐயோ வலி தாங்க முடிய வில்லையே என அலறியபடி வயலிலேயே சாய்ந்து விட்டார். அப்போது தந்தையின் தோளையும் கைகலையும் மெள்ள வருடினார் ஸ்வாமிகள்.

தந்தையே கவலை வேண்டாம் தங்களுக்கு ஏற்பட்ட வலி பறந்து போய் விடும் என்றார். அடுத்த கணமே வலி மாயமானது. மகனிடம் ஏதோ விசேஷ சக்தி குடி கொண்டிருப்பதை அப்போது தான் உணர்ந்தார் தந்தை. அதன் பின் அவனது செயல்களை கேலி செய்வதை அறவே நிறுத்திக் கொண்டார். இதே போல் ஸ்வாமிகளின் அண்ணன் அவரிடம் அவஸ்தைப்பட்டது. தனிக்கதை ஓர் அதிகாலை வேளையில் சங்கு ஸ்வாமிகளிடம். அடேய் நம் வயலுக்குச் சென்று ஏற்றம் இறைத்து நீர் பாய்ச்சு என்றார் அவருடைய மூத்த சகோதரர். நம் வயல் என்று தனியே இருக்கிறதா என்ன? ஊரில் உள்ள வயல்களை அனைத்தும் நம்முடையதுதானே? அண்ணனுக்குக் கோபம் வந்தது. ஏனப்பா நம் வயல் எங்கே இருக்கிறது என்று உனக்குத் தெரியாதா? வயது மட்டும் ஏறிக்கொண்டே போகிறது. வாழ வேண்டிய வழி தெரியவில்லையே. சரி நம் வயலைக் காட்டுகிறேன். வா என்றவர் ஸ்வாமிகளின் கையைப் பிடித்து கொண்டு தெருவில் இறங்கி நடந்தார். அந்த இருட்டு வேளையில் சகோதரரின் உத்தரவுக்கு மறுப்பேதும் இன்றி அவருடன் சென்றார் ஸ்வாமிகள். இதோ இது தான் நமக்கு வயல். பொழுது விடிந்ததும் நான் மீண்டும் வருவேன். நம் வயல் முழுவதும் தண்ணீர் பாய்ந்திருக்க வேண்டும் என்று சொல்லி விட்டு கிளம்பினார். அண்ணன் சகோதருடைய உத்தரவுப்படி ஏற்றத்தின் மூலம் தண்ணீர் இறைத்து வயலில் பாய்ச்சினார். ஸ்வாமிகள். இதைக்கண்ட பக்கத்து வயல்காரன் இது தான் தக்க தருணம் என்று மடையைத் தனது வயல் பக்கம் திருப்பி விட்டான்.


தொடரும். 
நமக்கு தெரிந்ததும் தெரியாததும்...

ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை ...

1. நாம் உடுத்திய பழைய துணிகளை வீட்டின் கதவுகளின் மீது போடக்கொடாது.

2. உடம்பிலிருந்து உதிர்ந்த மயிரையும், வெட்டிய நகத்தையும், வீட்டில் வைக்கக் கூடாது. உடனே வெளியே எரிந்து விட வேண்டும்.

3. ஒரே சமயத்தில் இரண்டு கைகளாலும் தலையைச் சொறியக் கூடாது.

4. திருமணம் போன்ற மங்கள நிகழ்ச்சிக்கு சென்று வந்தவுடன் குளிக்க கூடாது.

5. சாப்பிடும் அன்னத்தை உருண்டையாக உருட்டி சாப்பிடக்கூடாது.

6. ஈரத்துணியை உடுத்திக்கொண்டு உணவு அருந்த கூடாது.

7. வபனம் (ஷேவ் ) செய்து கொள்ளும் முன்பு எதுவும் சாப்பிட கூடாது.

8. தாய் தந்தை உள்ளவர்கள் ஒரு போதும் வெள்ளிக்கிழமையன்று ஷவரம் (ஷேவ் ) செய்து கொள்ள கூடாது.

9. இரண்டு கன்னங்களிலும் கைகளை வைத்து கொண்டு நிற்பதோ, உட்கார்ந்து கொள்வதோ கூடாது .

பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை...

1. மஞ்சள் நூல் கயிற்றில் மட்டுமே திருமாங்கல்யத்தை கோர்த்து அணிந்து கொள்ள வேண்டும்.

2. பெண்கள் கோவிலில் அங்கப்ரதக்ஷிணம் செய்யக் கூடாது. (பெண்களின் மார்பு பகுதி பூமியில் படக்கூடாது).

3. கோவில்களில் பிரஸாதமாக தரப்படும் துளசியை தலையில் வைத்துக் கொள்ளக்கூடாது.

4. பெண்கள் எப்போதும் முந்தானையை தொங்க விட்டு நடக்கக்கூடாது.

5. கோவிலில் தெய்வத்தை வணங்கும் பொழுது போது பின்னங்கால்கள் இரண்டையும் சேர்த்து கொண்டு முன் நெற்றி தரையில் படுமாறு மண்டியிட்டு வணங்க வேண்டும்.

6. தலை குளிக்கும் பொழுது சுமங்கலி பெண்கள் சிறிது மஞ்சளை உரைத்து முகத்தில பூசிக்கொண்டு பிறகு குளிக்க வேண்டும்.

7. கோலமிடும் போது தெற்கே பார்த்து நின்று கொண்டு கோலமிடக் கூடாது.

8. திருமணம் ஆன பெண்கள் ஒரே ஒரு விரலில் மட்டுமே மெட்டி அணிய வேண்டும். ஒரே காலில் இரண்டு மூன்று அணிய கூடாது. அணிவதால் ஆரோக்கியம் மற்றும் கணவனின் வளர்ச்சி (உடல், வருமானம்) பாதிப்பு அடையும் .

9. கர்ப்பமான பெண்கள் உக்கர தேவதைகள் இருக்கும் கோவிலுக்கு போக கூடாது .

10. பெண்கள் கிழக்கு திசையை நோக்கி குங்குமத்தை இரண்டு புருவ மத்தியிலும் உச்சந்தலையிலும் இட்டுக்கொள்ள வேண்டும். திருமணம் ஆகாதவர்கள், உச்சந்தலையில் இட்டுக்கொள்ள கூடாது.

11. அமாவாசை, தவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.

வெள்ளி, 5 ஜூலை, 2019

ஸ்ரீதர வேங்கடேச ஐயாவாள்-பகுதி:1
           (ஸ்ரீதர ஐயாவாள்)

எத்தனையோ மகான்கள் பகட்டையும் படாடோபத்தையும் விரும்பாமல் எளிமையாக வாழ்ந்த ஒழுக்கசீலர்களாக இருந்திருக்கிறார்கள் இவர்களுடைய சரிதத்தைப் புரட்டினால் கண்கள் கசியும் இதயம் இளகும்.தங்களுக்கென வாழாமல் பிறரது நலன்களை முன்னிறுத்தியே இவர்களது வாழ்க்கை அமைந்துள்ளது.இவர்களுடைய  ஜீவன் அடங்கி இருக்கும் சந்நிதியை தரிசிப்பதே பெரும் பாக்கியம்.நம் முன்னோர் செய்த தவப்பயனின் விளைவாகவும் நமக்குள் இருக்கும் ஆன்மிக ஆற்றாலும்தான் அந்த பாக்கியம் நமக்குக் கிடைக்கிறது.

கும்பகோணத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் இருக்கிறது திருவிசலூர் என்கிற கிராமம்.  திருவிசநல்லூர் என்றும் சொல்வது உண்டு.திருஞானசம்பந்தர் தனது தேவாரத்தில் வியலூர் என்று இந்த ஊரைக் குறிப்பிடுகிறார்.இங்குள்ள சிவாலயம் பாடல் பெற்றது தவிர அருளாளர்களின் திருவடிபட்ட திவ்ய பூமி இது.போதேந்திரர்,மருதநல்லூர் சத்குரு ஸ்வாமிகள்,சதாசிவ பிரம்மேந்திரர்(காஞ்சி காமகோடி பீடத்தில் வந்த பரமசிவேந்திரரின் சிஷ்யர்).ராமபத்ர தீட்சிதர்,ராமசுப்பா சாஸ்திரிகள் முதலானோரின் வாழ்க்கையுடன் தொடர்புகொண்ட ஊர் திருவிசநல்லூர்.ஸ்ரீஐயாவாள் என்று அழைக்கப்படும் ஸ்ரீதர வேங்கடேச ஐயாவாள் கன்னடப் பிரதேசத்தில் பிறந்திருந்தாலும் தனது வாழ்நாளின் பிற்பகுதியை இங்குதான் கழித்தார்.

திருவிசநல்லூர் அக்ரகாரத்தில் வசித்து வந்தார் ஐயாவாள்.அருகில் பிரமாண்டமாக ஓடும் காவேரி நதிக்கு அக்கரையில் திருவிடைமருதூர்.அப்போதெல்லாம் இந்தப் பகுதியில் சிவக்ஷேத்திரம் என்றால் அது திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்க ஸ்வாமி கோயிலைத்தான் குறிக்கும்.எனவே தினமும் அர்த்தஜாம பூஜை வேளையில் மகாலிங்க ஸ்வாமியைத் தரிசிக்க திருவிசநல்லூரில் இருந்து பரிசலில் அக்கரைக்குச் சென்று வருவார்.தவிர ஒவ்வொரு பிரதோஷ வேளையின்போதும் தவறாமல் அங்கு இருப்பார் ஐயாவாள்.ஒருநாள் அர்த்தஜாம் தரிசனத்துக்காக ஐயாவாள் மகாலிங்க ஸ்வாமி சந்நிக்கு வந்தபோது அவர் முகத்தில் கூடுதல் பிரகாசம்.தன்னுடன் இருந்த பக்தர்களுக்குப் பல உபதேசங்களை உருக்கமாக வழங்கினார்.அன்றைய தினம்.இறை இன்பம் குறித்த அவரது செயல்பாடுகளைக் கண்டு பக்தர்கள் பிரமித்து நின்றனர்.ஐயாவாள் சிவ நாமத்தை ஜபித்துக்கொண்டே இருந்தார்.கர்ப்ப கிரகத்துக்குள் மகாலிங்க ஸ்வாமி ஜோதி சொரூபமாகக் காட்சி தந்து கொண்டிருந்தார்.அடுத்த சில நிமிடங்களில் தன் சந்நிதி முன் நடக்கப் போகும் சிலிர்ப்பான அந்தக் காட்சியை மகாலிங்கம் மட்டும்தானே உணர முடியும்?ஆம் திட்டமிடுதலும் தீர்மானிப்பவனும் அவன்தானே.

உணர்ச்சிப் பெருக்குடன் நமசிவாய நாமத்தை மனமுருகி நெடுநேரம் உச்சரித்துக் கொண்டிருந்த ஐயாவாள்.திடீரென கருவறையை நோக்கி ஓட ஆரம்பித்தார்.கர்ப்ப கிரகத்துக்குள் இருக்கும் லிங்கத் திருமேனியை ஆலிங்கனம் செய்துகொள்ளும் மனோபாவத்துடன் ஏதோ ஒரு சக்தியுடன் ஓடி வந்த ஐயாவாளை ஆலய அர்ச்சகர் தடுக்க முற்பட்டார் முடியவில்லை.ஈசனின் சந்நிதிக்குள் நுழைந்து.  பொன்னார் மேனியனின் ஆவுடை அருகே வந்ததும் ஐயாவாள் பொசுக்கென மறைந்துவிட்டார்.ஆம் மகாலிங்கத் திருமேனியில் ஐக்கியமாகிவிட்டார் ஐயாவாள்.இந்தக் காட்சியை நேரில் கண்ட அர்ச்சகர்.பக்தர்கள் மற்றும் ஆலய சிப்பந்திகள் உட்பட பலரும் நடந்த சம்பவத்தின் தாக்கம் குறையாமம் மூர்ச்சையாகிக் கிழே விழுந்தனர்.இன்னும் சிலர் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தனர்.

ஸ்தூல உடம்புடன் ஜோதிர்லிங்க சொரூபனுடன் இரண்டறக் கலந்துவிட்டார் ஸ்ரீஐயாவாள்.எனவே அவருக்கு அதிஷ்டானம் என்று கிடையாது.அவர் வாழ்ந்து அனுபவித்து பல நல் உபதேசங்களை பக்தர்களுக்கு வழங்கிய திருவிசநல்லூர் வீட்டையே திருக்கோயிலாக பாவிக்கிறார்கள்.அவரது நினைவுகளை வாழ்க்கைச் சம்பவங்களைச் சொல்லும் இடமாக இன்று காட்சியளிக்கிறது அந்த சந்நிதி.ஸ்ரீ ஸ்ரீதர ஐயாவாள் சேரிடபிள் டிரஸ்ட் என்கிற அமைப்பு தற்போது அவரது கோயிலை நிர்வாகித்து வருகிறது.கிருஷ்ண ப்ரேமியின் முயற்சியால் இது நன்றாக நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது.சித்திரையில் வசந்தோற்சவம் ஆவணியில் கோகுலாஷ்டமி உற்சவம் கார்த்திகையில் கங்காவதாரண மகோற்சவம் மார்கழியில் ராதா கல்யாண மகோற்சவம் என்று பல விழாக்கள் சிறப்பாக நடந்து வருகின்றன.ஸ்ரீதர ஐயாவாளின் வீட்டுக் கிணற்றில் கங்காதேவி நிரந்தர வாசம் செய்கிறாள்.  இதை, ஐயாவாளே தனது ஸ்லோகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.இந்தக் கிணற்றில் ஸ்நானம் செய்தால் கங்கையில் நீராடிப் பலன் உண்டு.

ஒவ்வொரு வருடமும் கார்திக்கை அமாவாசை தினத்தன்று கங்கை இந்தக் கிணற்றில் பொங்கி வருகின்றது.எனவே அன்றைய தினத்தில் புனிதம் வாய்ந்த இந்தக் கிணற்றில் நீராட எங்கெங்கிருந்தெல்லாமோ பக்தர்கள் சாரை சாரையாக வந்து சேர்வார்கள்.இந்துக்கள்தான் என்றில்லை...இஸ்லாமிய பெண்மணிகள் உட்பட அனைத்து மத்தினரும் இந்த மகானின் மகிமையை உணர்ந்து நீராடும் வைபவத்தில் கலந்து கொள்கிறார்கள்.மூலவர் சந்நிதியில் ஐயாவாளின் உற்சவர் விக்கிரகம் கோதண்டராம ஸ்வாமி விக்கிரகம் நவநீதகிருஷ்ணன் மற்றும் நடராஜரின் படங்கள் ஆகியவை இருக்கின்றன.விகட ராமசாமி சாஸ்திரிகள் என்பவரது காலத்தில்தான் ஐயாவாளுக்கு விக்கிரகம் செய்யப்பட்டு முறையாக ஆராதனையும் உற்சவமும் தொடங்கப்பட்டன.கார்த்திகை அமாவாசைக்கு முதல்நாள் இரவு இடைவிடாமல் பஜனை நடைபெறும்.அதிகாலை பஜனை முடிந்ததும் பாகவதர்கள் அனைவரும் காவேரிக்குச் சென்று சங்கல்பம் செய்து ஸ்நானம் செய்வார்கள் கங்காஷ்டக ஸ்லோகம் சொல்வார்கள்.உடன் ஏராளமான பக்தர்களும் சென்று காவேரியில் ஸ்நானம் செய்வார்கள்.பிறகு அங்கிருந்து நாம கோஷத்துடன் புறப்பட்டு வந்து ஸ்ரீமடத்தை அடைவர்.

அங்கு கங்காதேவி வாசம் செய்யும் புனிதக் கிணற்றுக்கு விசேஷ பூஜைகள் செய்து அதில் ஸ்நானம் செய்வார்கள்.இதைத் தொடர்ந்து.பக்தர்களும் புனித நீராடுவார்கள்.இதற்கென்றே நான்கு பக்தர்கள் கிணற்றின் அருகில் இருந்துகொண்டு பக்தர்களது தலையில் கிணற்றுநீரை இரைத்து ஊற்றுவார்கள்.  கிணற்றில் நீராடுவதற்கு முன் காவிரி ஸ்நானம் செய்யவேண்டும்(இந்தக் கிணற்றில் பக்தர்கள் எப்போதும் நீராடலாம்).கார்த்திகை அமாவாசை காலத்தில் வரும் பக்தர்கள் தங்குவதற்கு விரிவான ஏற்பாடுகளை டிரஸ்ட் செய்கிறது.அதுபோல் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் குறைவில்லாமல் நடைபெறுகிறது.நித்திய வழிபாடுகள் அனைத்தும் நன்றாகவே நடந்து வருகின்றன.சுப்ரபாதம்,ராமாயணம்,பாகவதம்,விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்,டோலோற்சவம்,பஜனை,நாம கோஷம் என்று எதற்கும் இங்கே குறையவில்லை.ஏகாதசி,அமாவாசை ஆகியவை விசேஷமாக அனுஷ்டிக்கப்படுகின்றன.

கர்நாடக பிரதேசத்தில்.மைசூர் சமஸ்தானத்தில் ஆஸ்தான வித்வானாக இருந்த லிங்கார்யர் என்பவருக்கு மகனாகப் பிறந்து.தன் கடைசிக் காலத்தை திருவிசநல்லூரில் கழித்து அந்தப் பூமிக்கு புண்ணியம் தேடித்தர வேண்டும் என்பதற்காகவே ஐயாவாள் இங்கு வந்து குடிகொண்டார் போலும்.தகப்பனாருடைய மறைவுக்குப் பிறகு சமஸ்தானத்திலிருந்து அவரைத் தேடி வந்த உயர் பதவியையும் ஏற்காமல் மனைவி லட்சுமி மற்றும் தாயாருடன் யாத்திரையாகப் புறப்பட்டு தமிழகம் வந்தார் ஐயாவாள்.உலகில் பக்தி மார்க்கத்தைப் பரப்ப வேண்டும் என்பது மட்டுமே ஐயாவாளின் சிந்தையில் மேலோங்கி இருந்தது.திருச்சி தஞ்சாவூர் கும்பகோணம் திருபுவனம் திருநாகேஸ்வரம் ஆகிய தலங்களை தரிசித்து கடைசியாக திருவிசநல்லூர் வந்து சேர்ந்தார்.எண்ணற்ற பண்டிதர்கள் நிறைந்த இந்தத் தலமே தான் தங்கவேண்டிய க்ஷேத்திரம் என்பதை உணர்ந்து அக்ரகாரத்தில் குடி அமர்ந்தார்.அந்த ஊரில் இருந்த அந்தணர்கள் ஐயாவாள் மீது பொறாமை கொண்டனர்.ஆனால் ஆண்டவன் அவர் மீது அன்பு கொண்டான்.தஞ்சையை ஆண்ட மன்னன் ஷாஹாஜியின் அன்புக்குப் பாத்திரமானார் ஐயாவாள்.

எண்ணற்ற நுல்களையும் ஸ்லோகங்களையும் எழுதி உள்ளார் ஐயாவாள்.கோவிந்தபுரத்தில் ஸித்தி ஆன போதேந்திரருடன் இணைந்து பல கிராமங்களுக்குப் பயணித்து நாம ஜபத்தின் மேன்மையை மக்களிடையே பரப்பினார்.தீவிரமான சைவர் என்று ஐயாவாளைப் பற்றிச் சொல்லப்பட்டாலும் பேதம் பார்த்து எதையும் அவர் செய்தில்லை.சிவபெருமானையும் கிருஷ்ணனையும் அவர் ஒன்றாகவே பார்த்தார்.திருவிசநல்லுரில் தங்கி நாம சங்கீர்த்தன மகிமை பற்றித் தொடர்ந்து பிரசாரம் செய்து வந்தார் ஸ்ரீதர ஐயாவாள்.இதையறிந்த ஆன்மிக அன்பர்கள் பல்வேறு ஊர்களிலிருந்து திருவிசநல்லுருக்கு வந்து ஐயாவாளின் உபதேசங்களைக் கேட்டுப் பேறு பெற்றனர்.ஐயாவாளின் பெருமையையும் நாம மகிமை குறித்து அவர் செய்த பிரசங்கத்தைப் பற்றியும் தங்களுக்குள் உற்சாகமாக விவாதித்துக் கொண்டனர்.இப்பேர்ப்பட்ட ஒரு மகான் வாழும் காலத்தில் நாம் வாழ்வதே நமக்கெல்லாம் பெருமை என்று கூறி பூரித்துப் போயினர்.

புகழும் பெருமையும் ஒன்று சேர்ந்து ஒரு மனிதரை உயர்த்தும்போது அதே துறையில் கொஞ்சம் பிரகாசித்து வரும் மற்றவர்களின் மனநிலை இந்தக் கலியுகத்தில் நாம் அறியாதததா?ஆம் ஊரெல்லாம் ஸ்ரீதர் ஐயாவாளின் பெருமையை புகழ்ந்து பேசும்போது திருவிசநல்லூர் அக்ரகாரத்தில் வசித்த ஏனைய அந்தணர்கள் உள்ளுக்குள் புழுங்கினார்கள்.எங்கிருந்தோ வந்த ஓர் அந்தணருக்கு இவ்வளவு பேரும் புகழுமா?ஏன் நமக்கெல்லாம் திறமை இல்லையா?பக்தி இல்லையா?என்று எரிச்சல் பொங்கத் தங்களுக்குள் கூடிப் பேசினர்.ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவரை மட்டம் தட்டவேண்டும் என்றும் முடிவெடுத்தார்கள்.அப்போது கோகுலாஷ்டமி உத்ஸவம் வந்தது.திருவிசநல்லூரில் வசித்த அந்தணர்கள் இந்த விழாவை ஒவ்வொரு வருடமும் விமரிசையாகக் கொண்டாடுவர்.அந்த வருடமும் உத்ஸவம் களை கட்டியது.உள்ளூரில் வசிப்பவர் என்ற ஒரே காரணத்தால் ஐயாவாளை ஒதுக்கித் தள்ள முடியாமல் தாங்கள் நடத்திய உத்ஸவத்துக்கு கடனே என்று அழைத்தனர்.ஆனால் பக்திக்கு முக்கியத்துவம் தராமல் பகட்டுக்கு முன்னுரிமை கொடுத்து அந்த உத்ஸவம் நடத்தப்படுவதாக ஐயாவாள் கருதியதால் அவர் உத்ஸவத்துக்குச் செல்லவில்லை.இது உள்ளூர் அந்தணர்களை இன்னும் கோபப்பட வைத்துது.பாரேன் உத்ஸவத்துக்கு வாரமல் நம்மைப் புறக்கணிக்கிறாரே இந்த பிராமணன் என்று ஆத்திரத்தைக் கொட்டித் தீர்த்தனர்.

அன்றிரவு இல்லத்தில் தனியே அமர்ந்து பாகவதம் படித்துக் கொண்டிருந்தார் ஐயாவாள்.அப்போது கோகுலாஷ்டமி உதஸவத்தின் ஒரு பகுதியாக வீதியில் கிருஷ்ண பரமாத்மாவின் வீதியுலா ஆடம்பரமாக ஐயாவாள் வீட்டை நெருங்கிக் கொண்டிருந்தது.அலங்கரிக்கப்பட்ட கிருஷ்ண பகவானின் படத்தை மேளதாளம் முழங்க வீதியில் எடுத்து வந்தனர்.அந்தணர்கள் மேளச் சத்தமும் நாம கோஷ முழக்கமும் வெகு அருகில் கேட்கவே ஆகா கிருஷ்ணன் வந்துவிட்டார்.வீடு தேடி வந்தவருக்கு தீபாராதனை கொடுக்க வேண்டுமே என்று பதற்றத்துடன் எழுந்தார் ஐயாவாள்.தீபாராதனைக்குத் தேவையானவற்றை ஒரு பித்தளைத் தாம்பாளத்தில் எடுத்துக்கொண்டு வெளியே வந்தார்.கிருஷ்ண ஊர்வலம் அவருடைய வீட்டு வாசலில் நின்றது.கிருஷ்ணனின் படத்துக்கு சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்துவிட்டு தீபாராதனைத் தட்டைக் கொடுத்தார்.ஆனால் உள்ளூர் அந்தணர்கள் அதை வாங்க மறுத்துவிட்டனர்.உள்ளத்துக்குள் கனன்று கொண்டிருந்த ஆத்திரத் தீயை அவர் மேல் அள்ளி வீசினர்.கொஞ்சமும் கூட கிருஷ்ண பக்தி இல்லாத உம்மை போன்றவர்களது தீபாராதனையை ஏற்பதற்காக கிருஷ்ணன் இங்கே வீதி வலம் வரவில்லை.உமது தீபாரதனையை கிருஷ்ணனுக்குக் காட்டினால் தெய்வ நிந்தனைதான் எங்களை வந்து சேரும் என்று வெறுப்புடன் முகத்தைத் திருப்பிக்கொண்டனர்.

ஐயாவாளுக்கும் கோபம் எழுந்தது.ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அந்தணர்களே எனது பக்தியை உங்களால் அறிய முடியாது.அதை அந்த கிருஷ்ண பகவான் மட்டுமே அறிவார் என்றார் அமைதியாக.இதைக் கேட்டு அந்தணர்கள் சிரித்தனர்.அதில் ஒருவர் உமது பக்தியை எங்களாலேயே புரிந்துகொள்ள முடியவில்லை.இந்த நிலையில் கிருஷ்ண பகவானுக்கு மட்டும் உமது பக்தியின் திறன் தெரியுமோ?நன்றாக இருக்கிறது.உம்முடைய நகைச்சுவைப் பேச்சு.எதற்கு இந்த வீண் பேச்சு?நீர் உண்மையான பக்தன் என்றால் இதோ இந்தப் படத்தில் இருக்கும் மாயக் கிருஷ்ணனைக் கூப்பிடும்.உமது பக்திக்கு இரங்கி அவன் வருகிறானா என்று பார்ப்போம் என்றார் சவாலாக.

ஐயாவாளுக்கு அவமானமாகவும் தர்மசங்கடமாகவும் ஆனது.ஒட்டுமொத்த பக்தர்களும் தன்னையே கவனிப்பதாகப் பட்டது.இது தனக்கு ஏற்பட்ட சோதனை.கிருஷ்ணனுக்கும் தனக்குமான நட்பை அவர்களுக்கு  எப்படியாவது உணர்த்த வேண்டும் என்று தீர்மானித்தார்.படத்தில் இருக்கும் கிருஷ்ண பகவானைக் கண் குளிரப் பார்த்து ஸ்லோகம் ஒன்றைப் பாடினார்.பின்னர் விருட்டென்று தனது வீட்டுக்குள் சென்று விட்டார்.அவரைப் பரிகாசம் செய்தபடி ஊர்வலத்தை மேற்கொண்டு நகர்த்திச் சென்றனர் அந்தணர்கள்.அடுத்த வீட்டு வாசலில் ஊர்வலம் நின்றது.அந்த வீட்டில் இருந்த ஒரு பாகவதர் தீபாராதனைத் தட்டைக் கொடுத்தார். அதை வாங்கிய அந்தணர் கிருஷ்ணனுக்கு ஆரத்தி காண்பிப்பதற்காக படத்தைப் பார்த்தவர் திடுக்கிட்டார்.அங்கே கிருஷ்ண பகவானது படத்தைக் காணவில்லை.வெறும் சட்டமும் கண்ணாடியும் மட்டுமே இருந்தன.பதறிப்போன அந்தணர்கள் நடந்ததை ஒருவாறு ஊகித்துக்கொண்டு ஐயாவாளின் வீட்டுக்குள் ஓடிவந்தனர்.உள்ளே ஊஞ்சலில் கிருஷ்ணனின் ஓவியம் புன்னகையுடன் காட்சி தந்தது.இதுவரை வீதிவலம் வந்த அதே கிருஷ்ணன் போலவே விளங்கியது.கிருஷ்ணனைத் துதித்து மனம் நிறைய ஆனந்தத்துடன் ஸ்லோகம் பாடிக்கொண்டிருந்தார் ஐயாவாள்.இந்த ஸ்லோகங்களுக்கு டோலோ நவரத்னமாலிகா என்று பெயர்.

ஐயாவாளின் பிரார்த்தனைக்கு இரங்கி வீதியில் உலா வந்து கொண்டிருந்த கிருஷ்ணன் அவரது வீட்டுக்குள்ளே சென்று அவரது பாடலைக் கேட்டுக் மயங்கிக் கிடக்கிறார் என்றால் ஐயாவாளின் பக்தித் திறத்தை என்னவென்பது.திரவிசநல்லூர் அந்தணர்கள் அனைவரும் ஐயாவாளிடம் தங்களது தகாத செயலுக்காக மன்னிப்புக் கேட்டனர்.அன்றிரவு அந்தணர்கள் அனைவரும் ஐயாவாளின் வீட்டிலேயே தங்கி.நாமகீர்த்தனம் செய்துவீட்டு மறுநாள் காலைதான் சென்றனர்.ஒருமுறை ஐயாவாளின் ஆத்மார்த்தமான பக்தியுடன் விளையாடிப் பார்க்க வேண்டும் என்கிற ஆசை சாட்சாத் பரமேஸ்வரனுக்கு வந்துவிட்டது.(ஐயாவாளே பரமேஸ்வரனின் அவதாரம் என்றும் சொல்வார்கள்)திருவிளையாடலுக்கான தினத்தைக் குறித்தும் விட்டார்.

அன்றைய தினம் இரவு வேளையில் திருவடைமருதூர் மகாலிங்கத்தைத் தரிசிக்கப் புறப்பட்டார் ஐயாவாள்.அப்போது காவேரியில் வெள்ளம் அதிகம் ஓடியது.பரிசல் ஓட்டிகள் எவரும் காவிரிக்கரையில் இல்லை.இந்த வெள்ளத்தில் பரிசல் ஓட்ட முடியாது என்பதால் அனைவரும் விட்டிலேயே முடங்கிவிட்டனர்.காவிரியின் இக்கரையிலேயே நின்றுகொண்டு என்ன செய்வது?என்று தவிர்த்துப் போனார் ஐயாவாள்.சிவபெருமானை தரிசிக்காமல் வீட்டுக்குப் போவது அபசாரமாகப்பட்டது அவருக்கு.நேரம் ஓடிக்கொண்டே இருந்தது.காவேரியில் தண்ணீர் அதிகமாகிக் கொண்டிருந்ததே தவிர குறைவதாகத் தெரியவில்லை.சற்றுநேரம் காத்திருந்தவர் இக்கரையில் இருந்தபடியே திருவிடைமருதூர் மகாலிங்க ஸ்வாமி ஆலய ராஜகோபுரத்தைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொண்டார்.சிவபெருமானை நேரில் தரிசிக்க முடியாத ஏக்கத்தில் அவரது கண்களில் இருந்து நீர் கரகரவென வழிந்தது.அப்போது ஈஸ்வரனை தியானித்து.ஆர்த்திஹர ஸ்தோத்திரம் எனும் ஸ்லோகத்தைப் பாடினார்.

இப்படி ஐயாவாள் காவிரிக்கரையில் நின்றபடி ஈஸ்வரனைத் தியானித்திருந்த வேளையில்... திருவிடைமருதூர் மகாலிங்க ஸ்வாமி ஆலயத்தில் அர்ச்சகராக இருந்தவரும் ஐயாவாளுக்குப் பழக்கமானவருமான சிவாசார்யா ஒருவர் அவர் முன் தோன்றினார்.ஐயாவாளுக்குப் பிரமிப்பு விழிகளை இமைக்க மறந்து சிவாசார்யரையே பார்த்துக் கொண்டிருந்தார்.காவிரியில் வெள்ளம் அதிகமாக ஓடுகிறது.அதனால் ஆற்றைக் கடந்து வந்து ஈசனைத் தரிசிக்க முடியவில்லையே என்று தாங்கள் மிகவும் வருந்தியிருப்பீர்கள் என்று அறிவேன்.தங்களது மனம் புண்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அர்த்தஜாம பூஜை முடிந்ததும் விபூதிப் பிரசாதம் எடுத்து வந்தேன்.இந்தாருங்கள் என்று கொடுத்தார் சிவாசார்யர்.

ஆகா சிவ தரிசனம் செய்ய முடியாமல் போய்விடுமோ என்று கவலைப்பட்டேன்.ஆனால் அந்த மகாலிங்கமே அர்ச்சகரை நேரில் அனுப்பி விபூதிப் பிரசாதம் கொடுத்திருக்கிறார்.இனி எனக்குக் கவலை இல்லை.ஈஸ்வரனையே தரிசித்த பாக்கியத்தை அடைந்துவிட்டேன் என்று கண் மூடி பிரசாத்தை இட்டுக்கொண்டு நிமிர்ந்து பார்த்தார்.அர்ச்சகரைக்காணவில்லை.பிரசாதம் கொடுத்துவிட்டு நேரமாகிவிட்டது என்று கிளம்பி போய்விட்டார் போலிருக்கிறது என்று நினைத்த ஐயாவாளுக்கு அப்போதுதான் பிரக்ஞை வந்தது.அதுசரி வெள்ளம் கரை புரண்டு ஓடும் இந்த வேளையில் நம்மால் அக்கரைக்குச் செல்ல முடியவில்லை.அப்படியானால் அர்ச்சகர் மட்டும் எப்படி வந்தார்?வேட்டி துண்டு நனையாமல் இட்ட திருநீறு கலையாமல் இருந்தது எப்படி?வந்தவர் ஒரு வேளை மகாலிங்க ஸ்வாமியாகவே இருக்குமோ?சரி நாளைக்குத் திருவிடைமருதூர் போகும்போது அந்த அர்ச்சகரிடமே கேட்டுவிட்டால் ஆச்சு என்று நினைத்து வீடு திரும்பினார்.மறுநாள் காவேரியில் வெள்ளம் வடிந்திருந்தது.பரிசல் மூலம் அக்கரைக்குச் சென்றவர் மகாலிங்க ஸ்வாமியைக் கண்குளிர தரிசித்தார்.தரிசனம் முடிந்த பின் முந்தைய தினம் விபூதிப்பிரசாதம் கொடுத்த அர்ச்சகர் கண்ணில் பட்டார்.பயபக்தியுடன் அவர் அருகே சென்றார்.

நேற்று திருவிசநல்லூருக்கு வந்து எனக்குப் பிரசாதம் கொடுத்தீர்களே ஏன்? என்று கேட்டார்.

நானா?காவிரியில் நேற்று கரை புரண்டு ஓடிய வெள்ளத்தைத் தாங்கள் பார்க்கவில்லையா?அதைக் கடந்து எவர் வர முடியும்?நான் வர வில்லை ஸ்வாமிகளே.ஐயாவாளுக்குப் பிரமிப்பு.அப்படியெனில் நேற்று திருவிசநல்லூருக்கு வந்து விபூதிப் பிரசாதம் தந்தருளியது சாட்சாத் பரமேஸ்வரன்தானா?தயாபரனே என்னே உனது கருணை.உன்னைத் தரிசிக்க இயலாமல் நான் தவித்து நின்றபோது என் குரலுக்கு செவி சாய்த்து என்னையே தேடி வந்துவிட்டாயே என்று உருகினார்.
திருவிசநல்லூர் ஸ்ரீதர வேங்கடேச ஐயாவாள்-பகுதி:2
                           ஸ்ரீதர ஐயாவாள்

{ஐயாவாள் வீட்டுக் கிணற்றில்,கங்கை பொங்கி வந்த கதையைப் பார்ப்போம்}

ஒருமுறை ஐயாவாள் வீட்டில் சிரார்த்தம் வந்தது.பிராமணர்கள் சாப்பிடுவதற்காக வீட்டில் சமையல் தயார் செய்யச் சொல்லிவிட்டு காவிரியில் குளிக்கக் கிளம்பினார் ஐயாவாள்.வழியில் யாரோ ஓர் ஆசாமி பசியால் துடித்துக் கொண்டிருந்தான்.அவனது நிலையைப் பார்த்ததும் ஐயாவாள் மிகவும் வருந்தினர்.கொஞ்சமும் தாமதிக்காமல் அவனைத் தனது வீட்டுக்கு அழைத்து வந்தார்.பிரமாணர்களுக்கென்று ஆசாரத்துடன் சமைத்து வைக்கப்பட்டிருந்த சிராத்த உணவை அவனுக்குக் கொடுத்தார்.பசியால் தவித்த அந்த ஆசாமியை ஈசனின் வடிவமாக எண்ணி போஜனம் செய்வித்து அனுப்பினார் ஐயாவாள்.பிறகு சாஸ்திரக் கோட்பாடுகள் கருதி வீட்டை மறுபடியும் நீரால் கழுவி சுத்தம் செய்தார்.புதியதாக வேறு ஆசாரமான சமையல் தயாராவதற்கு ஏற்பாடுகள் செய்தார்.இன்னொரு முறை ஸ்நானம் செய்வதற்காகக் காவிரிக்கரைக்குச் சென்றார்.எல்லாம் வீட்டில் தயாரான பின் உணவு உண்பதற்கு ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த அந்தணர்களை வீட்டுக்கு அழைத்தார்.ஐயாவாளின் மேல் வெறுப்பில் இருந்த சில அந்தணர்கள் இன்னும் மனம் மாறாமல் இவரைக் காயப்படுத்துவதற்குத் தகுந்த சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருந்தனர்.

சிராத்தம் நடக்கும் நாளன்று பிராமணர் அல்லாத ஆசாமியை அழைத்து போஜனம் செய்து வைத்திருக்கிறார்.எனவே இவரது வீட்டுக்கு எந்த ஓர் அந்தணரும் சிராத்த உணவு உட்கொள்ளச் செல்ல வேண்டாம் என்று சொல்லிவிட்டனர்.சாஸ்திரப்படி இது தவறில்லை என்று ஐயாவாள் எவ்வளவோ விளக்கியும் எவரும் சமாதானம் அடையவில்லை.இறுதியில் ஐயாவாளை ஜாதிப் பிரஷ்டம் செய்வதாகச் சொல்லி அவரை விலக்கி வைத்துவிட்டனர்.எல்லாம் ஈசனின் செயலே என்று தீர்மானித்து அன்றைய சிராத்தத்தை பிரமாணர்கள் இல்லாமல் ஒருவாறு செய்து முடித்தார் ஐயாவாள்.இதோடு முடியவில்லை அந்த அவஸ்தை.அடுத்த சில நாட்களுக்குள் ஐயாவாள் இல்லத்தில் இன்னொரு சிராத்தம் வந்தது.அதையாவது பிராமணர்களை வைத்து முறையாக நடத்த வேண்டும் என்று முடிவெடுத்தார் ஐயாவாள்.

எனவே ஏற்கனவே வீட்டுக்கு வருவதாக இருந்த பிரமாணர்களை நேரில் சந்தித்து மன்னிப்புக் கேட்டு தகுந்த பிராயச்சித்தம் செய்யத் தயாராக இருந்தார்.அதன்படி பிராமணர்களைச் சந்தித்துக் கேட்டார்.அதற்கு கங்கையில் மூழ்கிவிட்டு வந்தால் உங்களை மீண்டும் எங்களோடு இணைத்துக் கொள்கிறோம்.உங்கள் வீட்டில் நடக்கும் சிராத்தத்தில் சாப்பிட வருகிறோம் என்றனர்.நீங்கள் இப்போது சொன்ன பிராயச்சித்தம் சற்று கடினமாக இருக்கிறது.அத்தனை தூரம் யாத்திரை செல்ல எனது உடல் நலம் ஒத்தழைக்காது தவிர அடுத்தடுத்த நாட்களில் என் முன்னோருக்குச் செய்ய வேண்டிய சிராத்தங்களும் வருகின்றன.எனவே இப்போது நான் பயணிக்க முடியாது.வேண்டுமானால் கங்கையை இந்த இடத்துக்கே வரவழைத்து ஸ்நானம் செய்துவிடுகிறேன்.எனக்கு மீண்டும் ஆதரவளியுங்கள்.ஓகோ கங்கே கங்கே என்று கங்காதேவியை நினைத்து துதித்து உம் வீட்டுக் கிணற்றில் முழுகிவிட்டால் கங்கையில் குளித்த பலன் கிடைத்துவிடும் என்று பார்க்கிறீரா?அப்படியே இனத்தாரோடு சேர்ந்துவிட்டலாம் என்று கணக்குப் போடுகிறீர்களா?என்றெல்லாம் கேலி பேசினர்.

அதற்கு ஐயாவாள் உறுதியாக நான் கங்கையில் ஸ்நானம் செய்கிறேன் என்று அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை.எல்லோரும் பார்க்கும்படி காசியம்பதியில் ஓடும் கங்காநதியை இந்தத் திருவிசநல்லூருக்கு வரவழைத்து பொங்கிப் பிரவகிக்கும் கங்கை நீரில் ஸ்நானம் செய்கிறேன் என்றுதான் சொன்னேன் என்றார்.இதைக் கேட்டு அங்கு திரண்டிருந்த அந்தணர்கள் அனைவரும் எகத்தாளமாகச் சிரித்தனர்.பிறகு அவர்களில் ஒருவர் என்ன ஓய் உமக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது?கங்கையை எப்படி உம்மால் வரவழைக்க முடியும்?என்று பரிகசிக்க அனைவரும் கைகொட்டிச் சிரித்தனர்.ஐயாவாளுக்கு அவமானம் பிடுங்கித் தின்றது.மிகவும் மனம் வருந்தி தன் வீட்டு முற்றத்தின் ஓரத்தில் உள்ள கிணற்றடிக்குச் சென்றார்.கங்காஷ்டகம் எனும் ஸ்தோத்திரத்தை மனம் உருகிப் பாடினார்.ஈசனின் அம்சாவதாரமான ஐயாவாள் உருகி அழைக்க அங்கே கங்கை வந்ததில் வியப்பு என்ன இருக்க முடியும்?ஆம் ஐயாவாளுக்கு அருகில் இருந்த கிணற்றில் கங்கையானவள் பொங்கிப் பெருகி கடகடவென்று வெளியே வழிந்தாள்.பல மாநிலங்களை வாழ வைக்கும் கங்காதேவிக்கு திருவிசநல்லூர் என்கிற சிறு கிராமம் எம்மாத்திரம்?

அக்ரகார வீதி எல்லாம் கங்கை நீர் கொப்பளித்து ஓடியது.இதுவரை ஐயாவாளைப் பரிகசித்து வந்த அந்தணர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.தெருவெங்கும் வெள்ளம்.இனியும் இது தொடர்ந்தால் ஆபத்து என்பதை உணர்ந்த அந்தணர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து ஐயாவாளின் இல்லத்துக்கு ஓடோடி வந்தனர்.ஐயா எங்களை மன்னிக்கவேண்டும்.உங்களைத் தவறாக நினைத்து விட்டோம்.நீர் உண்மையிலேயே மகா புருஷர்தான்.கங்கையை உடனே அவளது பிரதேசத்துக்குத் திருப்பி அனுப்பவிடும் என்று பதறினார்கள்.ஐயாவாளின் முகத்தில் மலர்ச்சி.திருவிசநல்லூர் வாழ் அந்தணர்களே புனிதமான இந்த கங்கையில் நான் ஸ்நானம் செய்துவிட்டேன்.கங்கை இப்போது போய்விட்டால் நீங்கள் எல்லாம் வெகுதூரம் பயணித்துத்தான் ஸ்நானம் செய்ய வேண்டும்.எனவே எல்லோரும் இப்போதே ஸ்நானம் செய்து கொள்ளுங்கள் என்றார்.ஆனால் திருவிசநல்லூர் அந்தணர்களுக்கு ஏற்பட்ட பிரமிப்பு முற்றிலும் அகலாததால் அப்போது ஸ்நானம் செய்யும் எண்ணத்தில் அவர்கள் இல்லை.

ஐயாவாளே உண்மையான சாதுக்களிடம் சகல தீர்த்தங்களும் வாசம் செய்கின்றன.எனவே உம் வடிவில் கங்கையை நாங்கள் தரிசிக்கிறோம்.அந்த பாக்கியமே எங்களுக்குப் போதும்.இந்த கங்கையைத் திருப்பி அனுப்பிவிடுங்கள்.சரி கங்கா ஸ்நானம் வேண்டாம் என்று இப்போது நீங்கள் சொன்னாலும் உலகத்தாரின் நலனுக்காக கங்காதேவியானவள் என்றென்றும் இந்தக் கிணற்றில் வாசம் செய்யட்டும்.இந்தப் பகுதியில் உள்ள மக்கள் சுலபமாக கங்கா ஸ்நானம் செய்யட்டும் என்று கூறிய ஐயாவாள் ஸ்லோகம் ஒன்றைச் சொல்லிப் பிரார்த்திக்க கங்காதேவியானவள் அந்தக் கிணற்றுக்குள் தன்னை அடக்கிக் கொண்டாள்.
இந்தச் சம்பவம் கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தில் நடந்தது.எனவே இப்போதும் கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று அந்தக் கிணற்றில் கங்காதேவி பொங்கி வருகிறது.எனவே இந்தப் புனித நாளில் இங்கு ஸ்நானம் செய்ய ஏராளமானோர் வருகிறார்கள்.மகான் வரவழைத்த கங்கையில் நீராடினால் சகல வளங்களும் வாழ்வில் பெருகும்.

திருநாமம் : ஸ்ரீதர வேங்கடேச ஐயாவாள்

தலம் : திருவிசநல்லூர் என்கிற திருவிசநல்லூர்

சிறப்பு : ஸ்ரீ ஐயாவாள் திருமடம்

எங்கே இருக்கிறது : கும்பகோணத்தில் இருந்து காவிரிக்கரை ஓரமாகச் செல்லும் சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவு;கும்பகோணத்திலிருந்து 2, 2ஏ, 2பி, 38 ஆகிய நகரப் பேருந்துக்கள் உண்டு.தவிர தனியார் பேருந்துகளும் உண்டு.இறங்க வேண்டிய இடம்:திருவிசநல்லூர் மடம்.அங்கிருந்து சுமார் 10 நிமிடம் நடந்தால் ஐயாவாள் மடத்தை அடைந்துவிடலாம்.

தொடர்புக்கு:ஸ்ரீ ஸ்ரீதர ஐயாவாள் சாரிடபிள் டிரஸ்ட்
திருவிசநல்லூர் அஞ்சல்,பின்கோடு 612 105.
வேப்பத்தூர் வழி,கும்பகோணம் ஆர்.எம்.எஸ்
தஞ்சை மாவட்டம்;போன்:0435-246 1616.
ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி  ஸ்வாமிகளின்  உபதேசங்கள்  

ஞானமலர்கள்,, விவேகமும்  வைராக்யமும்,,, ஆத்ம ஞானமும்  அதன் ஸ்தானங்களும்,,,,,

நமது பாரத தேசத்தின் அனாதியான  மதம் வைதீக மதம். இதனை சநாதன மதம் என்பர். மற்ற மதங்கள் எவரேனும் ஒரு மஹானால் தொடங்கப்பட்டிருக்கும். அதனால்
அந்த மதத்திற்கு அவரது பெயரை  வைத்திருப்பார்கள். அந்த மதம்  ஆரம்பித்த நாட்குறிப்பு உண்டு. நம்மதம் ஒன்றே அநாதியானது. வேதத்தை அடிப்படையாகக் கொண்டபடியால் வைதிக மதம் என்றும் என்றும் நிலைத்திருக்கக் கூடிய தானதாலும் தொடங்கியவர்  இல்லாமையாலும் ஸநாதனம்  என்றும் வழங்குவர்,,, இந்து மதம்  என்ற பெயர் கூட  இடத்தைக்  குறிப்பதாக அமைந்துள்ளது,,, இதற்கு ஆதார நூல் வேதம்,,,,,

வேதம் நான்கு,,, நடக்கிற  கலியுகத்தின் முன் யுகமாகிய  துவாபரம் வரை அது ஒரே வேதமாக   இருந்தது. துவாபரத்தின் இறுதியில் மனிதர்களின் அறிவும் ஆற்றலும்
குறையத் தொடங்கியதால்  வேதவியாசர் அதனை நான்காகத்  தொகுத்தார். 

வேதம் ஒலி  வடிவமானது. அதுவும்  அநாதி என்றும் ஒலி வடிவில்  ஆகாயத்தில் நிலைத்திருக்க
கூடியது. ஆகாயத்திற்கும் ஒலிக்கும்  ஒரு நிலைத்த தொடர்பு உண்டு. அலை வடிவில் இருந்த வேத  ஒலியை மஹரிஷிகள் தியானத்தில்  அமர்ந்து கேட்டனர். தியானமும்
தவமும் காரணமாக அவர்களுடைய  காதுகளுக்கு அந்த தெய்வீக வேத  ஒலியைக் கேட்கின்ற திவ்ய  ஸ்ரவண சக்தி கிட்டியது! ஒவ்வொரு  மந்திரத்திற்கும் அப்படி  திவ்ய
ஸ்ரவணம்  செய்த  ரிஷி  உண்டு அதற்குள்ள சந்தம்  உண்டு தேவதை  உண்டு,,,,

தொடரும்,,, ஜய  ஜய  சங்கர  ஹர  ஹர  சங்கர
அத்தி வரதரை ஒவ்வொரு ராசியினரும் எவ்வாறு தரிசிக்க வேண்டும் என ஆன்மிக சொற்பொழிவாளர் ராஜயோகம் கே ராம் கூறிய தகவல்களை கூறியுள்ளார்.

அவர் கூறும் போது, அத்தி வரத பெருமாளை தலையிலிருந்து கால் வரை பார்த்து வணங்குதல் மிகவும் நல்லது. குறிப்பாக ஒவ்வொரு ராசியினரும் பெருமாளை முழுவதுமாக பார்ப்பதோடு, அவர்களின் ராசிக்கேற்ப எப்படி வணங்க வேண்டும் என்பதையும் இங்கு தெரிந்து கொள்வோம்.

மேஷம்
பெருமாளின் நெற்றியைப் பார்த்து வழிபடுவது மிகப்பெரிய தீட்சிதை கிடைக்கக் கூடிய வாய்ப்பு உண்டு.

ரிஷபம்
ரிஷப ராசியைச் சேர்ந்த ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் பெருமாளின் கன்னங்களை பார்த்து சேவிப்பது சிறந்தது.
ஆண்கள் வலது கன்னம், பெண்கள் இடது கன்னம் பார்த்து பிரார்த்தனை வைப்பதோடு, முழு பெருமாளையும் பார்த்து வணங்குவது நல்லது.

மிதுனம்
மிதுன ராசியை சேர்ந்தவர்கள் பெருமாளுடைய இடது தோள் அல்லது வலது தோள் பார்த்து பிரார்த்திக்க வேண்டும்.
ஆண்கள் வலது தோள், பெண்கள் இடது தோள் பார்த்து பிரார்த்தனை வைத்து பெருமாளை முழுவதுமாக கண்டு தரிசிக்க வேண்டும்.

கடகம்
பெருமாளின் கை மேல் நோக்கி காட்டும் கையின் உள்ளங்கையை பார்த்து பிரார்த்தனை செய்ய வேண்டும்
.
சிம்மம்
பெருமாளின் தாடையை பார்த்து பிரார்த்திக்க வேண்டும். சமூதாயத்தில் பிரபலாமாக வாழ வேண்டும் என நினைக்கும் சிம்ம ராசிக்காரர்கள் தாடையை பார்த்து பிரார்த்தனை வைக்க வேண்டும்.

கன்னி
பொதுவாக வயதானாலும், இளமையாக தோன்றக்கூடிய கன்னி ராசிக்காரர்கள் வசீகரமான தோற்றம் உள்ள கன்னி ராசிக்காரர்கள், பெருமாளின் இடுப்பு பகுதியைப் பார்த்து பிரார்த்தனை வைப்பது நல்லது.

திருப்பதி ஏழுமலையானை இப்படி வணங்கினால் பூரண பலன் கிடைக்கும்!

துலாம்
துலாம் ராசியினர் பெருமாளின் முழங்கால் பார்த்து பிரார்த்தனை செய்வது நல்லது. துலாம் ராசியினர் நேர்மையானவர்கள் என்பதால், கலியுகத்தில் அதிக சிக்கலை அனுபவிப்பவர்.
அதனால் அவர்கள் பெருமாளின் முழங்கால் பகுதியை பார்த்து பிரார்த்தித்துக் கொள்ளலாம்.

விருச்சிகம்
பெருமாளின் பாதத்தைப் பார்த்து விருச்சிக ராசியினர் வணங்குவது நல்லது. பாதத்தைப்பார்த்து வழிபட்டால் எந்த வித சனி பகவானின் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.
சனி பகவானின் ஆதிக்கத்தை தட்டிக் கேட்கக் கூடியவர் இந்த அத்தி வரதர்.

தனுசு
தனுசு ராசியினர் பெருமாளின் கை புஜம் பகுதியைப் பார்த்து வழிபாடு செய்வது நல்லது .

மகரம்
பெருமாளின் நெற்றி மற்றும் முழங்கால் பகுதியைப் பார்த்து வணங்க வேண்டும்.

கும்பம்
மகரம் மற்றும் கும்ப ராசியின் அதிபதி சனி என்பதால் இரு ராசியினரும் பெருமாளின் முழு உருவத்தைப் பார்த்து வழிபாடு செய்வதுடன், வேண்டுதல் வைக்கும் போது பெருமாளின் உதட்டு பகுதியையும், பெருமாளின் பாதத்தைப் பார்த்து வைத்தால் வாதம், வம்பு, வழக்குகளிலிருந்து விடுபட முடியும்.

மீனம்
மீன ராசியினர் பெருமாளின் கண்களைப் பார்த்து பிரார்த்தனை செய்தால், அருமையான, பெருமையான வாழ்க்கை வாழ முடியும்.

அத்தி வரதரை இப்படி வணங்குவதன் மூலம் ஜாதகத்தில் நவகிரகங்கள் அமைப்பு எப்படி ஹஜ் இருந்தாலும் அவர்கள் வாழ்க்கையில் சிறப்பான ஏற்றமும், நிம்மதி, மகிழ்ச்சியும் கிடைக்கும்.
கோயில்களில் எத்தனை மண்டபங்கள் உண்டு தெரியுமா?

கோயில் மண்டபம் என்றால் பலருக்கும் அர்த்த மண்டபம், மகா மண்டபம் இவைதான் நினைவுக்கு வரும். ஆனால் பாரம்பரியமும் பழமையும் மிக்க கோயில்களில் எத்தனை மண்டபங்கள் உண்டு தெரியுமா? 

இதோ ...🌹🌿

1. அர்த்த மண்டபம்
2. மகா மண்டபம் 
3. நிருத்த மண்டபம்
4. பதினாறு கால் மண்டபம்
5. நூற்று (அ) ஆயிரங்கால் மண்டபம்
6. ஸ்நபன மண்டபம்
7. கேய மண்டபம்
8. வாத்திய மண்டபம்
9. முக மண்டபம்
10. சோபான மண்டபம்
11. கோபுரத் துவார சாலா மண்டபம்
12. ஆஸ்தான மண்டபம்
13. யாக மண்டபம்
14. புஷ்ப மண்டபம்
15. பூசை மண்டபம்
16. விஜய மண்டபம்
17. சுற்று மண்டபம்
18. உத்யான மண்டபம்
19. வல்லி மண்டபம்
20. சூர்ண மண்டபம்
21. நறுமணக் கலவை மண்டபம்
22. நீராழி மண்டபம்
23. கந்த மண்டபம்
24. ஆபரண மண்டபம்
25. மஞ்சன மண்டபம்
26. அலங்கார மண்டபம்
27. வசந்த மண்டபம்
28. உபசாரமண்டபம்
29. முரசு மண்டபம்
30. தமிழ்வேதப் பயிற்சி மண்டபம்
31. தமிழ் ஆகம மண்டபம்
32. புராண விரிவுரை மண்டபம்
33. தீட்சை மண்டபம்
34. வீணா மண்டபம்
35. கொடியேற்ற மண்டபம்
36. தேர் மண்டபம்

இப்படி பல மண்டபங்களைக் கொண்டது நம் கோயில்கள்.
தஞ்சாவூரில் பிரகதீஸ்வரர்
திருவாரூரில் தியாகராஜர்
திருநெல்வேலியில் நெல்லையப்பர்
திருவையாறில் ஐயாறப்பர்

திருவண்ணாமலையில் அண்ணாமலையார்
திருவாவடுதுறையில் கோமுக்தீஸ்வரர்
திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர்
திருவானைக்காவலில் ஜம்புகேஸ்வரர்

திருக்கருகாவூரில் முல்லைவனநாதர்
திருவாலாங்காட்டில் வடாரண்யேஸ்வரர்
திருமருகலில் ரத்தினகிரீஸ்வரர்
திருவிசநல்லூரில் யோகநந்தீஸ்வரர்

திருப்புகலூரில் வர்த்தமானீஸ்வரர்
திருத்தங்கூரில் வெள்ளிமலைநாதர்
திருக்கழுகுன்றத்தில் வேதகிரீஸ்வரர்
திருநீலக்குடியில் நீலகண்டேஸ்வரர்

திருச்சியில் தாயுமானவர்
திருநள்ளாரில் தர்ப்பாரண்யேஸ்வரர்
திருமணஞ்சேரியில் உத்வாகநாதர்
திருவேள்விக்குடியில் கல்யாண சுந்தரேஸ்வரர்

திருவேற்காட்டில் வேதபுரீஸ்வரர்
திருக்கண்ணபுரத்தில் ராமநாதர்
திருமழபாடியில் வைத்தியநாதர்
திருக்கோவிலூரில் வீரட்டேஸ்வரர்

திருப்புனவாசலில் விருத்தபுரீஸ்வரர்
திருவண்டுதுறையில் வண்டுறைநாதர்
திருமாணிக்குழியில் வாமனபுரீஸ்வரர்
திருவாளப்புத்தூரில் மாணிக்கவண்ணர்

இப்படி ஒரே ஒரு கடவுளுக்கு பல்வேறு பெயர்களில் பல்வேறு இடத்தில் கோவில் அமைத்து தேவாரத்தையும் திருவாசகத்தையும் பாடி, ஆறு கால பூசையில், ஒவ்வொரு பூசையையும் ஒவ்வொரு ஊரில் சிறப்பாக செய்து தமிழையும் கடவுளையும் ஒன்றாகவே வணங்கி இருக்கின்றனர் நம் முன்னோர்கள்.

'த' வரிசையில் ஒரு பாதி ஊர்களை மட்டுமே எழுதியிருக்கிறேன். இதற்கே மூச்சு வாங்குது.

இன்னும் மயிலாப்பூரில் காபாலீஸ்வரர் , சிதம்பரத்தில் நடராஜர், வைத்தீஸ்வரன் கோவிலில், வைத்தியநாதர் என ஆரம்பித்தால் பதிவு நீண்டு கொண்டே இருக்கும்.

தேவாரம் பாடப் பெற்ற தலங்கள் மட்டுமே 274. இதில் சோழநாட்டில் காவிரியின் தென்கரையில் அமைந்த தலங்கள் மட்டுமே 128. வடகரையில் அமைந்த தலங்கள் 63.

ஈழத்தில் உள்ள திருகோணமலையில் அமைந்த திருக்கோணேஸ்வரர் கோவில் மற்றும் திருக்கேதீச்சரத்தில் அமைந்த திருக்கேதீஸ்வரர் கோவிலும் தேவாரம் பாடப் பெற்ற தலங்களே.

தமிழையும் கடவுளையும் ஒன்றாக பார்த்த தலைமுறை இவர்களுடையதாகத் தான் இருக்கும். ஊரின் சிறப்பைக் கொண்டே அந்த ஊர்களுக்கு பெயர் வைத்து, அந்த பெயரைக் கொண்டே அந்த ஊர் கடவுளையும் வணங்கி இருக்கின்றனர்.

எடுத்துக்காட்டு : திரு + ஐந்து +ஆறு = திரு ஐயாறு, இதுவே காலப்போக்கில் திருவையாறாக மாறி இருக்கிறது. காவிரி, குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு எனும் ஐந்து ஆறுகள் அந்த ஊரில் ஓடுவதால் இந்தப் பெயரை வைத்து கடவுளையும் ஐயாறப்பர் என்று அழைத்து இருக்கின்றனர்.

இப்போதெல்லாம் நம்ம பெயருக்கு காரணம் கேட்டாலே நம்மால் சொல்ல முடிவதில்லை. அவர்கள் ஊருக்கு பெயர் வைப்பதில் கூட இவ்வளவு கவனமாக இருந்திருக்கின்றனர். வாழ்க தமிழர்களின் புகழ்.

ஓம் நம சிவாய